நீலம் மலர்ந்த நாளில்

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெ,

வெண்முரசு நாவல்களை நீங்கள் முடித்தபின்னர்தான் வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன். வாசிக்கவேண்டும் என்ற கனவு நீண்டநாட்களாக இருந்தது. பலமுறை வாசிக்கத் தொடங்கினாலும் ஓரிரு அத்தியாயங்களுக்குமேல் கொண்டுபோக முடியவில்லை.

இப்போது சரியான நேரம். குவாரண்டைன் வாழ்க்கையில் கொஞ்சநாள் பாட்டுகேட்டேன். கொஞ்சநாள் சினிமாவும் சீரியல்களும் பார்த்தேன். சலித்துவிட்டது.

அதன்பின் கொஞ்சநாள் ஒன்றுமே செய்யவில்லை. மொட்டைமாடியில் ஒரு தோட்டம் போட்டேன். அது மனசுக்குப் போதவில்லை. அதன்பிறகுதான் வெண்முரசை படிக்க ஆரம்பித்தேன். தொடக்கத்திலிருந்து வாசிக்கவில்லை. முதற்கனலைப் பிரித்து ஏதோ ஒரு அத்தியாயத்தை வாசித்தேன். பீஷ்மர் நகருக்குள் நுழையும் காட்சி ஒரு பெரிய சிம்பனியின் தொடக்கம்போலிருந்தது. சரசரவென்று வாசித்தேன்.

நீலம் மட்டும் மூன்றுமுறை வாசித்தேன். நீலம் நாவலை வாசித்தபின் அதைப்பற்றி என்னென்ன பேசப்பட்டிருக்கிறது என்பதைத்தேடித்தேடி வாசித்தேன்.நீலம் வெளிவந்த பின்னர் நீங்கள் எழுதிய நீலம் மலர்ந்த நாட்கள் என்னும் கட்டுரைகள் மிகமிக முக்கியமான பதிவுகள் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒரு படைப்பாளி ஒரு பெரும்படைப்பை உருவாக்கும்போது என்னென்ன மனநிலைகள் வழியாக கடந்துசெல்கிறான் என்பதை தமிழில் அதற்கு முன் அவ்வளவு தீவிரமாக எவரும் பதிவுசெய்ததில்லை. அந்தக் கட்டுரைகளே ஒரு இலக்கியப்படைப்பின் தீவிரத்துடன் உள்ளன. இப்போது நீங்கள் கடந்துவந்திருப்பீர்கள். உங்களுக்கே அவையெல்லாம் ஒருவகையான ஆச்சரியத்தைத்தான் அளிக்குமென நினைக்கிறே

கே.ஆர்.ஞானசம்பந்தன்

செப்டம்பர் 24,2014 காலை பதினொரு மணிக்கு நீலம் எழுதிமுடித்தேன். நாவல் எப்போது முடியும் என நேற்று முன்தினமே தெரிந்திருந்தமையால் பெரிய தத்தளிப்பு ஏதும் இல்லை. நாவல்கள் முடியும்போது உருவாகும் தனிமையும் வெறுமையும் சற்றுநேரம் சூழ்ந்திருந்தன. சற்றுநேரம் இசை கேட்டேன். ஒரு நீண்ட நடை சென்றுவந்தேன். நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடமும் அஜிதனிடமும் நீண்டநேரம் பேசினேன்.

’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1

2

நீலத்தை எந்தச் சிக்கலுமில்லாமல் எழுதமுடிந்தது. அமர்ந்தாலே போதும் ஒரு வரி முளைக்கும். அந்த வரியின் சந்தமே மொழியை முன்னெடுத்துச்சென்றது. நான் வாசித்த குமரகுருபரர் பாடல்களும் திருப்புகழும் எனக்குள்ளே ஆழ்நினைவாக இருப்பதை அந்தச் சந்தம் மற்றும் சில சொற்கள் வழியாக அறிந்தேன்.என்னை நானே கண்டுகொண்டேன்.

நீலம் மலர்ந்த நாட்கள் 2

அனைத்தையும் விடமுக்கியமானவை கனவுகள். ஒவ்வொருநாளிலும் நாலைந்துமுறை சிறு தூக்கங்கள் போடுவேன். படப்பிடிப்பு இடத்தில் நாற்காலியில் சாய்ந்தே தூங்கிவிடுவேன். ஓட்டலில் அமர்ந்துகொண்டே தூங்குவேன். காரில் ஏறி ஐந்து நிமிடம் கழித்து இறங்குவதற்குள் ஒரு தூக்கம். இசைகேட்கும்போது சிலநிமிடங்கள் தூங்கியிருப்பேன். இத்தூக்கங்கள் எல்லாமே கனவுகள் நிறைந்தவை.

நீலம் மலர்ந்த நாட்கள் -3


நீலம் மலர்ந்த நாட்கள் தொகுப்பு

முந்தைய கட்டுரைஇ.எம்.எஸ். சாதிபார்த்து திருமணம் செய்துகொண்டாரா?
அடுத்த கட்டுரைஞானி,ஈவேரா- கடிதங்கள்