இ.எம்.எஸ். சாதிபார்த்து திருமணம் செய்துகொண்டாரா?

அன்புள்ள ஜெ

ஒரு சங்கடமான கேள்வி. நீங்கள் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு அவர்களைப் பற்றி மரியாதையுடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இ.எம்.எஸ் பற்றி இங்குள்ள இடதுசாரிகளிடையே என்ன எண்ணம் இருக்கிறது என்று பார்க்கிறேன். அவர்கள் இ.எம்.எஸ் பற்றி பேசுவதில்லை. குறிப்பாக மார்க்சிய கம்யூனிஸ்டுகளே அவரைப்பற்றிப் பேசுவதில்லை.

இ.எம்.எஸ். பார்ப்பனியவாதி என்ற வசை இருக்கிறது. அவர் வேதங்களின் நாடு என்ற நூலை எழுதியிருக்கிறார். அது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதை வீரமணி, பிரபஞ்சன் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவர் இந்தியாவை வேதங்களின் நாடு என்று புகழ்கிறார் என்பது குற்றச்சாட்டு.

அவரைப்பற்றி ஓர் இடதுசாரித் தோழர் பேசும்போது அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது பிராமண- நம்பூதிரி மணமகள்தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தார் என்றும், வரதட்சிணை தந்தாகவேண்டும் என்று கேட்டுவாங்கினார் என்றும் சொன்னார். இந்தச் செய்திகள் எனக்கு உறுத்தலாக இருந்தன. ஆகவே இதைக் கேட்கிறேன்

ஜி.சங்கர்

***

அன்புள்ள சங்கர்,

என்றைக்குமே இந்தமாதிரி திரிபுகள், உடைவுகளுக்கு அரசியலில் ஓர் இடம் உண்டு. இடதுசாரிகளும் காந்தி, எம்.என்.ராய் பற்றியெல்லாம் இதைச் செய்தவர்கள்தான். இன்றைய முகநூல் வாட்ஸப் யுகத்தில் இவை பேருருக்கொள்கின்றன.

இ.எம்.எஸ் கேரளத்தில் பொருளாதார பலமும், மதமுக்கியத்துவமும் கொண்ட எலம்குளம் மனை என்னும் நம்பூதிரிக்குடும்பத்தில் பிறந்தவர். கேரளத்திலேயே செல்வவளம் மிக்க முதன்மையான மூன்று நம்பூதிரிக் குடும்பங்களில் ஒன்று அது.

இ.எம்.எஸ் அவர்களின் அரசியல் வாழ்க்கை தான் பிறந்த நம்பூதிரி சமூகத்தின் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், மூடஆசாரங்களுக்கு எதிராகப் போராடியதனூடாகத் தொடங்கியது. தன் 14 ஆவது வயதில் நம்பூதிரிசமூகத்தில் சீர்திருத்தங்களுக்காக போராடிய யோகக்ஷேமசபை என்னும் அமைப்பின் வள்ளுவநாடு பகுதியின் செயலாளராக ஆனார். அப்போதே எழுதவும் ஆரம்பித்தார்

இ.எம்.எஸ் யோகக்ஷேமசபையின் தலைவர்களும் சீர்திருத்தவாதிகளுமான வி.டி.பட்டதிரிப்பாடு, குறூர் நீலகண்டன் நம்பூதிரிப்பாடு ஆகியோரின் மாணவர். தன் நண்பர்களுடன் இணைந்து இ.எம்.எஸ் நடத்திய பூணூல்துறப்புப் போராட்டம் அன்று பெரிய அலைகளைக் கிளப்பியது. அதன் விளைவாக குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டார்.

1929ல் தன் இருபதாம் வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1931ல் முதல்முறையாக ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார். பின்னர் இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி என்னும் அமைப்பை உருவாக்கி 1935ல் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்தார். இது அவருடைய அரசியல் வரலாறு.

கேரளத்தில் நம்பூதிரிகளின் ஆதிக்கத்தை முற்றாக ஒழித்த நிலச்சீர்த்திருத்தத்துக்காக தொடர்ந்து வாதிட்டவர் இ.எம்.எஸ். 1957ல் ஒருங்கிணைந்த கேரளத்தின் முதல் முதல்வராக பதவியேற்றதுமே நிலச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியவர். தன் சாதியின் அழிவுக்கு அது வழிவகுக்கும் என அவர் அறிந்திருந்தார். ஒரேநாளில் ஏழைகளான சாதி என்று நம்பூதிரிகளைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. அதை நிகழ்த்தியவர் இ.எம்.எஸ். அதைப்பற்றிக் கேட்கப்பட்டபோது ‘இனி கல்வியும் தொழிலும் நம்பூதிரிகளுக்கு கைகொடுக்கட்டும்’ என்று சொன்னார்.

இ.எம்.எஸ் அவர்கள் கொண்டுவந்த நிலச்சீர்திருத்தங்கள்தான் இந்தியாவிலேயே நிலச்சீர்திருத்தங்களுக்கு முன்னோடியானவை. இந்தியாவில் நிலச்சீர்திருத்தங்களை தொடக்கத்திலேயே செய்துகொண்ட மாநிலங்களே பொதுவாக சமூகப்பொருளியல் வளர்ச்சியை அடைந்தன. கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை உதாரணம். [முன்பு ரயத்வாரி முறையை எங்கெல்லாம் பிரிட்டிஷார் நடைமுறைப் படுத்தியிருந்தார்களோ அங்கெல்லாம் நிலச்சீர்திருத்தம் எளிதாக நிகழ்ந்தது என்பதும் ஓர் உண்மை] அவ்வகையில் இந்தியாவின் முன்னோடியான அரசியல்- சமூகச் சீர்திருத்தவாதி இ.எம்.எஸ்.

கேரளப் பண்பாட்டிலும் இலக்கியத்திலும் இருந்த வைதிக- பிராமணியக் கூறுகளுக்கு எதிராக எப்படியும் பத்தாயிரம் பக்கம் இ.எம்.எஸ் எழுதியிருப்பார். இன்றும் கேரளப்பண்பாட்டின் அடித்தளக்கூறுகளைச் சார்ந்து சிந்திப்பவர்கள் அனைவருக்கும் இ.எம்.எஸ் தான் முதல்வழிகாட்டி. இன்றும் அவர் வரைந்த களத்திலேயே விவாதம் நிகழமுடியும். அவரை மறுப்பதானால்கூட அவரே அதற்குப் பீடமாக அமையமுடியும்.

கேரளத்தின் பழங்குடி- அடித்தளத் தொன்மங்களில் இருந்து கேரளத்துக்கான ஓர் அடிப்படையை அவரே உருவாக்கினார். உதாரணமாக, பரசுராமன் மழுவெறிந்து உருவாக்கியது கேரளம் என்னும் தொன்மமே அங்கே வலுவாக இருந்தது. பறைச்சி பெற்ற பன்னிரண்டு குலங்களில் இருந்து உருவானது கேரளசமூகம் என்னும் தொன்மம் கீழாளர்களிடையே இருந்தது. முதல்தொன்மத்தின் இடத்தில் இரண்டாவது தொன்மத்தைக் கொண்டுவந்தவர் இ.எம்.எஸ்.

மலையாள இலக்கியத்தின் பிதாமகர்களாக நம்பூதிரிகளும் அரசர்களும் முன்வைக்கப்பட்ட இடத்தில் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனை நிறுத்தியவர். சம்ஸ்கிருத மலையாளத்திற்கு எதிராக நாட்டுமலையாளத்தை நிறுத்தியவர். அதற்கான பண்பாட்டு இயக்கத்தையே நிகழ்த்தியவர். பிற்காலத்தைய கவிஞர்களில்கூட உள்ளூர், வள்ளத்தோள், ஆசான் என்றிருந்த வரிசையில் ஆசானை முன்னிறுத்தியவர். நாராயணகுருவை கேரளத்தின் சிற்பி என நிலைநாட்டியவர்.

நவீன இலக்கியத்திலேயே அடித்தளமக்களின் வாழ்க்கை எழுதப்படவேண்டும் என்று வாதிட்டு அதற்கென இலக்கிய அலை ஒன்றை உருவாக்கியவர். இந்தியாவெங்குமே தலித் மக்களின் வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவுசெய்வதற்கு முன்னுதாரணமாக அமைந்த  ‘ரண்டிடங்கழி’, ‘தோட்டியின் மகன்’ [தகழி சிவசங்கரப்பிள்ளை] போன்ற படைப்புகள் உருவானது அவர் வழிகாட்டலில் எழுந்த முற்போக்கு இலக்கிய அலையால்தான்.

இ.எம்.எஸ் நீங்கள் இங்கே சாதாரணமாகக் காணும் அரசியல்வாதிகளான ‘அறிஞர்’களைப் போன்றவர் அல்ல. அவர் உண்மையிலேயே பேரறிஞர். அரசியல்கோட்பாடு, பண்பாட்டாய்வு, வரலாறு, இலக்கியம் ஆகியதளங்களில் அவரளவுக்கு படித்த எழுதிய மலையாளிகள் சிலரே. இத்தளங்களில் கிளாஸிக் என்று சொல்லத்தக்க பலநூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு நூலை ஒருவர் எழுதியிருந்தாலே அவர் என்றும் வாழும் பேரறிஞர்தான்.

அவற்றில் சிலநூல்கள் முழுவாழ்நாளைச் செலவிட்டு எழுதப்படவேண்டிய அளவுக்கு தகவல்பெருக்கமும், விரிவும், ஆழமான கண்டறிதல்களும், புதிய வரையறைகளும் கொண்டவை.  ‘இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு’,  ‘இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாறு’ ஆகிய வரலாற்று நூல்கள்,  ‘கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி’, ‘சமூகம் மொழி இலக்கியம்’ என்னும் பண்பாட்டுநூல்கள், ‘கேரள இலக்கிய வரலாறு’, ‘மார்க்ஸியமும் மலையாள இலக்கியமும்’ போன்ற இலக்கியவிமர்சன நூல்கள் அந்தந்த தளங்களில் அடிப்படைகளை அமைத்த முன்னோடிப் படைப்புகளாக கருதப்படுகின்றன.

‘வேதங்களின் நாடு’ இ.எம்.எஸ் இந்திய தத்துவசிந்தனை மரபைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுதி. இதில் அவர் எம்.என்.ராய், தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, கே.தாமோதரன் ஆகியோரின் ஆய்வுமுறையை ஒட்டியே ஆய்வுசெய்கிறார். இந்தியாவின் தத்துவ சிந்தனையின் மூலநூல்களாக, முதிரா நூல்களாக வேதங்களை அவர்கள் பார்க்கிறார்கள். வேதங்களில் இருந்து ஆன்மிக சிந்தனை மட்டுமல்ல உலகியல் சிந்தனையும் உருவாகியது என்கிறார்கள். பின்னாளில் இந்தியாவில் எழுந்த எல்லா சிந்தனைகளும் வேதச்சார்பு வேதஎதிர்ப்பு என்னும் இருமுனைகளில் நிகழ்ந்தது என்று விரித்துரைக்கிறார்கள்.

இ.எம்.எஸ் இச்சித்தரிப்பில் எதைச் சார்ந்திருக்கிறார் என்பது அந்நூலிலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அவர் இந்திய சிந்தனையில் உலகியல்வாதம், வேதமறுப்புச் சிந்தனைகளுக்கு ஆதரவானவர். அவை முற்போக்கானவை என நினைப்பவர். ஆனால் அவை இன்று தேவையானவை என நினைக்கவில்லை. அவற்றின் நீட்சியே மார்க்ஸியம் என்று நம்புகிறார்.

ஆனால் அவர் மார்க்ஸிய ஆய்வாளர். ஆகவே காழ்ப்பின் மொழி அற்றவர். வேதமரபிலேயே கவித்துவமான பகுதிகளை ஏற்பவர், அது சிந்தனையில் ஆற்றிய பங்கென்ன என்று ஆராய்பவர். வேதமரபின் சரிவுகள், சிறுமைகள் ஆகியவற்றை அவரும் சொல்கிறார். ஆனால் அதன்  மிகச்சிறந்த பகுதி எதுவோ அதை எடுத்துக்கொண்டு அதைத்தான் மார்க்ஸியநோக்கில் தத்துவார்த்தமாக மறுக்கிறார். இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்கள் பலர் வேதமரபினர் என்பதை அவர் ஏற்கிறார். அவர்களுக்குரிய மதிப்பை அளித்தபின்பே நிராகரிக்கிறார்.

வீரமணி, பிரபஞ்சன் போன்றவர்களால் எந்த தத்துவத்தையும் வாசிக்கவோ அறியவோ பேசவோ முடியாது. அதற்கான அடிப்படை அறிவுத்திறனே அவர்களிடமில்லை. இங்கே ஒன்றை எதிர்ப்பதென்றால் அதை இழிவுபடுத்தியாகவேண்டும் என அவர்கள் பழகியிருக்கிறார்கள். தாங்கள் எதிர்க்கும் தரப்பில் உயர்வென எதுவுமே இருக்கமுடியாது என வாதிடுவது ஒரு தெருப்பூசல் பாணி. திரிபுகள், வசைகள், சிறுமைப் படுத்தல்கள், எள்ளி நகையாடுதல்கள், குதர்க்கங்கள் அதன் வழிமுறைகள்.

இங்கே ஈ.வே.ரா இவர்களுக்கு கற்றுக்கொடுத்தது அது. ஈ.வே.ரா தமிழ்ச்சிந்தனைக்கு எப்போதைக்குமாக இழைத்த பெருந்தீங்கு இந்த உளநிலை. அதிலிருந்து வெளியே செல்ல இங்கே இரு பாதைகளே இருந்தன. ஒன்று இடதுசாரிப்பாதை, இன்னொன்று நவீன இலக்கியத்தின் பாதை. இடதுசாரிப்பாதை இன்று மூடிவிட்டது, அவர்களும் ஈ.வே.ராவின் அணுகுமுறைக்குச் சென்றுவிட்டனர். நவீன இலக்கியத்திலும் ஒரு சிறுபகுதியே எஞ்சியிருக்கிறது.

ஒன்று பல்லாயிரவர் வெறிகொண்டு செல்லும் நெடுஞ்சாலை. இன்னொன்று மிகுந்த சமநிலையுடன் நடக்கவேண்டிய சிறிய தனிப்பாதை. நீங்கள் எந்தவழியை வேண்டுமென்றாலும் தெரிவுசெய்யலாம்

இ.எம்.எஸ் நம்பூதிரிப் பெண்ணையே மணப்பேன் என்று உறுதியாக இருந்ததும், வரதட்சிணை பெற்றுக்கொண்டதும் அவரே தன் வரலாற்றில் எழுதியவைதான். அதற்கான சமூகப்பின்னணி உண்டு

நம்பூதிரி சமூகத்தில் அன்று ஒரு குடும்பத்தில் மூத்த நம்பூதிரி மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். மற்றவர்கள் நாயர் சமூகத்தில் மணவுறவு கொள்ள வேண்டும். மூத்த நம்பூதிரிக்கு மட்டுமே சொத்துரிமை, மற்றவர்களுக்கு குடும்பச் சொத்தில் எந்த உரிமையும் இல்லை.

நாயர் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, அவர்கள் தங்கள் இல்லங்களிலேயே இருப்பார்கள், பிடிக்காதபோது கணவனை துறக்கவும் அவர்களுக்கு உரிமையுண்டு. நம்பூதிரிகளுக்கு தங்கள் நாயர் மனைவி மீதோ, அவள் சொத்து மீதோ, குழந்தைகள் மீதோ எந்த உரிமையும் இல்லை. ஆகவே நம்பூதிரிகளில் பெரும்பாலானவர்கள் ஒருவகை ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்பவர்கள்.

நம்பூதிரிப் பெண்களில் ஒருசிலருக்கு மட்டுமே நம்பூதிரிக் கணவன் கிடைப்பார். மற்றவர்களுக்கு திருமணமே நடக்காது. திருமணமான பெண்களில்கூட விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது. நம்பூதிரிப் பெண்கள் பொதுவாக வெளியே செல்லவே கூடாது. ஆண்களையே பார்க்கக்கூடாது. அலங்கரித்துக் கொள்ளக் கூடாது, பொது இடங்களில் தோன்றக்கூடாது. வழியில் நடமாடவேண்டும் என்றால் ஒரு குடையால் தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டு, சேடிப்பெண் துணையுடன் மட்டுமே செல்லவேண்டும். தவறிப்போய் எவராவது பார்த்துவிட்டால் சாணிப்பால் குடித்து உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.

பெண்கள் இல்லங்களின் இருளில் பிறந்து சாகவேண்டியதுதான். சிறுமீறல்கூட கடுமையாக தண்டிக்கப்படும். அப்படி விசாரித்து தண்டிக்க சபைகளும் உண்டு. அவை ஸ்மார்த்த விசார சபைகள் எனப்பட்டன. இதை வி.டி.பட்டதிரிப்பாடு ‘மறைக்குடைக்குள் இருக்கும் மகாநரகம்’ என்றார்.

இ.எம்.எஸ் இலங்குளம் மனையில் நான்காவது மைந்தர். நம்பூதிரிச் சட்டப்படி அவர் நம்பூதிரிக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அது மிகப்பெரிய பாவம். ஏற்கனவே அவர் நம்பூதிரி குலத்து விதவைகளுக்கு மறுமணம் செய்துவைத்து சாதிவிலக்கம் செய்யப்பட்டிருந்தார். தீண்டத்தகாதவர்களுடன் அமர்ந்து உணவுண்டார் என்பதனால் இறந்தவராக கருதப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டிருந்தார். அவர் நம்பூதிரிகளின் கணக்கில் தீண்டத்தகாதவர்.

ஆகவே அவர் எந்த குலத்தில் திருமணம் செய்திருந்தாலும் அது பிரச்சினைக்குரியதல்ல, நம்பூதிரிப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஆகவேதான் நம்பூதிரிப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவர் உறுதிகாட்டினார். அன்று நம்பூதிரிகளிலேயே ஒருசாரார் காந்தியத் தாக்கம் கொண்டவராக திகழ்ந்தனர். அத்தகையவரான குடமாளூர் தெக்கேடத்து வாசுதேவன் நம்பூதிரியின் தங்கை ஆர்யா அந்தர்ஜனத்தை இ.எம்.எஸ் மணம்புரிந்துகொண்டார்.

சுவாரசியமான விஷயம் அன்று இ.எம்.எஸ் நம்பூதிரிப்பெண்களை மணமுடித்துக் கொடுக்கவேண்டும் என்பதோடு அவர்களுக்கு கண்டிப்பாக வரதட்சிணை கொடுக்கவேண்டும் என்றும் வற்புறுத்திவந்தார். அது வரதட்சிணை அல்ல, ஸ்த்ரீதனம். இரு சொற்களின் அர்த்தமும் வேறுவேறு. வரதட்சிணை கணவனுக்கான காணிக்கை, ஸ்த்ரீதனம் என்றால் பெண்ணின் செல்வம்.

அன்று நம்பூதிரிப்பெண்ணுக்கு சொத்துரிமையே இல்லை. அவர்கள் நகைகள்கூட போடக்கூடாது. பெண்களை திருமணம் செய்து அனுப்புவதாகச் சொல்லிக்கொண்டு கோடீஸ்வரர் வீட்டுப் பெண்களை ஏழைகளுடன் அனுப்பிவிடலாம் என்பதனாலேயே ஸ்திரீதனம் என்னும் முறையை முன்வைத்தார்கள்.

நம்பூதிரிகளின் பாரம்பரியச் சொத்துக்களை பிரிப்பது எளிதல்ல. நம்பூதிரிச் சொத்துக்கள் மிகச்சிக்கலான உரிமைகள் கொண்டவை. பெரும்பாலும் அவை பிறசாதியினர் கைகளிலும் இருந்தன, அவற்றை விற்கமுடியாது, குத்தகைதான் பெறமுடியும். ஆகவே பெண்ணை மணமுடித்து அனுப்புகையில் பணம் கொடுங்கள் என்று சொல்லப்பட்டது. இ.எம்.எஸ் வெளிப்படையாக ஸ்த்ரீதனம் வாங்கிக்கொண்டு நம்பூதிரிப்பெண்ணை 1937ல் தன் இருபத்தெட்டாவது வயதில் மணம்புரிந்தார். பின்னாளில் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் கம்யூனிஸ்டுக் கட்சிக்கே அளிக்கப்பட்டன.

இ.எம்.எஸ் அவர்களே தன்வரலாறு எழுதியிருக்கிறார். அனைத்துச் செய்திகளையும் இணைத்து அப்புக்குட்டன் வள்ளிக்குந்நு எழுதிய ’அறியப்படாத இ.எம்.எஸ்’ ஒரு முக்கியமான நூல்.

ஜெ

***

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்

இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2

முந்தைய கட்டுரைஞானி-20
அடுத்த கட்டுரைநீலம் மலர்ந்த நாளில்