உடையாள்-4

7.கட்டற்றவள்

நாமி அந்த கண்ணாடிக் குமிழிக்குள் இருந்த காட்டிலேயே வளர்ந்தாள். குரு அவளுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தது. அவள் அங்கே இருந்த உடைகளை கண்டுபிடித்து அணிந்துகொண்டாள்.  .

அந்தக் கணிப்பொறியில் ஏராளமான செய்திகள் இருந்தன. அவை மனிதர்களால் தொகுக்கப் பட்டவை. மனிதன் குரங்குநிலையில் இருந்து பரிணாமம் அடைந்ததுமே தன் அறிவை ஒன்றாகத் திரட்ட ஆரம்பித்தான். அதுதான் மனிதனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்தியது. அவனை பூமியை முழுமையாக வெல்ல வைத்தது.

ஒரு மனிதன் தான் கற்றதை அனைவருக்கும் தெரிவித்தான். அனைவரும் அறிந்த ஞானம் ஒன்றாக திரண்டு இருந்தது. அறிவெல்லாம்  அனைவருக்கும் சொந்தமானதாக வெளியே இருந்தது. புதிதாக பிறந்த குழந்தை அந்த ஒட்டுமொத்த ஞானத்தையும் கற்கமுடிந்தது. அதுதான் கல்வி என்பது.

கல்விதான் மனிதனின் தனி அடையாளம். ஒரு குழந்தைக்கு அதுவரை மனிதர்கள் அறிந்த அனைத்தையுமே கற்க வாய்ப்பு கிடைக்கிறது. அதிலிருந்து அது மேலே சிந்திக்கிறது. அதன் சிந்தனைகளும் அந்த ஒட்டுமொத்தத்தில் சேர்கின்றன.

மனித சிந்தனைகளை ஒன்றாகத் திரட்டுவதற்கே மொழிகள் உருவாயின. மொழிகளை எழுதிவைக்கத் தொடங்கியபோது நூல்கள் உருவாயின. அச்சிடும் வழக்கம் வந்தபோது நூல்கள் பெருகின. நூல்களில் மனிதன் அறிந்தவை எல்லாம் பதிவாகி இருந்தன.

நூலகங்களில் பலகோடி மனிதர்கள் பற்பல தலைமுறைக்காலம் வாழ்ந்து அறிந்த அறிவு முழுக்க திரட்டி வைக்கப்பட்டிருந்தது.அதை அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொண்டார்கள்.பலமொழிகளில் இருந்த நூல்களை மனிதர்கள் ஒன்றோடொன்று மொழிபெயர்த்தார்கள்.

அதன்பின் கணிப்பொறி வந்தது. கணிப்பொறியில் உலகிலுள்ள எல்லா நூல்களையும் ஓரிடத்தில் சேர்த்தனர். இணையம் வந்தபோது மனித அறிவெல்லாம் மேலும் மேலும் இணைந்தது. அதன்பின் மனித அறிவென்பது ஒன்றே என்று ஆகியது

மனிதஅறிவு அனைத்தையும் கணிப்பொறிகளில் சேமிக்க முடிந்தது. தேவை என்றால் சரியாக எடுக்கவும் முடிந்தது. அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் மனிதகுலத்தின் எல்லா அறிவையும் தன் கணிப்பொறியில் வைத்திருந்தான். நெடுங்காலம் முன்பு மனிதர்கள் கொண்டுவந்த அறிவுதான் அங்கே  கணிப்பொறியில் சேமிக்கப்பட்டிருந்தது.

அந்த கணிப்பொறியில் எல்லா செய்திகளும் இருந்தன. பூமியிலிருந்த எல்லா தாவரங்களைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருந்தது. எல்லா பூச்சிகளைப் பற்றியும் பறவைகளைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருந்தது. எல்லா விலங்குகளைப் பற்றியும் எல்லா பொருட்களைப் பற்றியும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த கணிபொறி ஒரு மாபெரும் கலைக்களஞ்சியம். அதில் ஆயிரம்கோடி தகவல்களுக்குமேல் இருந்தது. ஆகவே பூமியிலிருந்த மனிதர்களுக்கு இருந்த எல்லா அறிவும் நாமிக்குக் கிடைத்தது. குரு என்ற அந்த மென்பொருள் அத்தனை அறிவையும் தேவையானபடி அளிக்கக்கூடியதாக இருந்தது.

நாமி குருவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். முதலில் ஓசையிட்டு பேசினாள். “நான் இங்கே இருக்கிறேன்” என்று அவள் குருவிடம் சொன்னாள்.

“ஆமாம், நீ இங்கே இருக்கிறாய்” என்று குரு சொன்னது.

“நான் மட்டுமே இங்கே இருக்கிறேன்” என்று நாமி சொன்னாள்.

“ஆமாம், நீ மட்டுமே இங்கே இருக்கிறாய்” என்று குரு சொன்னது.

“இந்த இடம் என்னுடையது” என்று நாமி சொன்னாள்

“ஆமாம், இந்த இடம் உன்னுடையது” என்று குரு சொன்னது.

“ஆனால் நான் இங்கே நின்றுவிடமாட்டேன்” என்று நாமி  சொன்னாள்

“ஆமாம், நீ இங்கே நின்றுவிடக்கூடாது” என்று குரு சொன்னது.

“நான் கட்டுப்படமாட்டேன். நான் சுதந்திரமாக இருப்பேன்” என்று நாமி சொன்னாள்.

“ஆமாம், நீ கட்டுப்படக்கூடாது. நீ சுதந்திரமானவள்” என்று குரு சொன்னது.

நாமி குருவிடம் தன் எண்ணங்களை சொன்னாள். தன் உணர்ச்சிகளையும் சொன்னாள்.பேசப்பேச அவளுக்குள் சிந்தனை வளர்ந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் சிந்தனை ஓடியது. ஆகவே அவள் பேசாத நேரமே இல்லை.

குரு கணிப்பொறியில் இருந்த உணரிக் கருவிகளை பயன்படுத்தி அவளை பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பேச்சை அது கேட்டது. அவளுடைய உதடுகளை லேசர் கதிரால் படித்தது. அவள் வெறுமே உதட்டை அசைத்தாலே அது படிக்க ஆரம்பித்தது. ஆகவே அவள் ஓசையிட்டு பேசுவது குறைந்தது.

அதன்பின் அவள் வாயால் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. அவள்  உதடுகள் மட்டும் அசைந்தன. அவள் தனக்குள் பேசிக்கொண்டே இருந்தாள். “நான் இந்த கல்லை எடுப்பேன்” என்று அவள் மனதுக்குல் சொன்னாள். “நான் இந்த கல்லை வீசுவேன்” என்று மேலும் சொன்னாள். “இந்தக் கல் சிறியது” என்றாள். “இந்தக் கல் அந்தக்கல்லைவிட பெரியது” என்று சொன்னாள்.

அவள் தான் செய்வதை முதலில் சொன்னாள். அதன்பின்செய்ய நினைப்ப்தை  சொல்ல ஆரம்பித்தாள். பிறகு முன்பே செய்தவற்றைச் சொன்னாள். பிறகு செய்தவை, செய்பவை, செய்ய நினைப்பவை ஆகிய மூன்றையும் கலந்து சொல்லிக்கொண்டாள். கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிலுமே அவள் மனம் செயல்பட்டது.

அதன்பின் அவள் சொல்லிக்கொள்வதும் நின்றது. வாய் மட்டும் சற்று அசைந்தது. சொற்கள் அவளுக்க்ள் ஓடிக்கொண்டே இருந்தன. அவள் விழித்திருக்கும் நேரம்ல்லாம் அவளுக்குள் பேச்சு ஒன்று ஓடியது.

அந்தப்பேச்சை ஒருநாள் அவளே கவனித்தாள். அது என்ன என்று அவள் யோசித்தாள். குருவிடம் அதைப்பற்றிக் கேட்டாள்.

“குரு, நான் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன். ஏன்?” என்று அவள் கேட்டாள்.

“அந்தப் பேச்சு உன் மூளைக்குள் ஓடுகிறது. மூளையின் ஒரு செயல்பாடு” என்று குரு சொன்னது.

“அதன் பெயர் என்ன?” என்று நாமி கேட்டாள்.

‘அதன் பெயர்தான் மனம் என்பது. உனக்கு இப்போது மனம் உருவாகிவிட்டது” என்று குரு சொன்னது.

“என் மனதுக்கு என்ன பெயர்?” என்று அவள் கேட்டாள்.

”சித்தம் என்று மனதுக்கு பெயர்” என்று குரு சொன்னது.

நாமி சித்தம் என்று சொல்லிக்கொண்டாள். பிறகு “நான் வேறு சித்தம் வேறா?”என்று கேட்டாள்

“இல்லை. நீதான் சித்தம். ஆனால் உனக்குள் அது தனியாக ஓடும். நீ இங்கே விளையாடும்போது சித்தம் வேறெங்கோ இருக்க முடியும்”

“எப்படி?” என்று நாமி வியப்புடன் கேட்டாள்

“ஏனென்றால் சித்தம் கட்டற்றது” என்று குரு சொன்னது. “உன் உடல் இந்த மலைகளைப் போல. உன் சித்தம் அதன்மேல் ஓடும் காற்றும் ஒளியும் போல”

நாமி வியப்புடன் வெளியே தெரிந்த மலைகளைப் பார்த்தாள்.தன்  நெஞ்சில் கைவைத்து  “நானும் என் சித்தமும்” என்று நாமி சொன்னாள்.

“ஆமாம், நீயும் உன் சித்தமும் இருக்கிறீர்கள்” என்று குரு சொன்னது.

“என் பெயர் நாமி. என் சித்தத்தின் பெயர் சித்தை” என்று நாமி சொன்னாள்.

அவ்வாறு நாமி தனக்கு “சித்தை” என்று மேலும் ஒரு பெயர் சூட்டிக்கொண்டாள்.

8.வெளி

நாமி ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டே இருந்தாள். அவள் அறிவு விரிவடைந்தபடியே வந்தது. அங்கிருந்த எல்லாச் செடிகளையும் எல்லா மரங்களையும் அவள் அறிந்துகொண்டாள். எல்லா பூச்சிகளும் பறவைகளும் அவளுக்குத் தெரியவந்தன.ஒரு கட்டத்தில் அவளுக்கு அந்த சிறிய காடு போதாமலாகியது.

அந்த கண்ணாடிக்குமிழி மனிதர்களால் செய்யப்பட்டது என்று அவள் அறிந்தாள். அது வரை அது அப்படி உருவாக்கப்பட்டது என்றே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த கண்ணாடிச்சுவரும் இயற்கைதான் என்றுதான் நினைத்தாள். அங்கே போனால் முட்டிக்கொண்டு நிற்கவேண்டும் என்றுமட்டும் அறிந்திருந்தாள்

கண்ணாடிச் சுவருக்கு அப்பால் அந்த கோள் மிகப்பெரிதாக விரிந்து கிடந்தது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் இருந்தன. மஞ்சள்நிறமான புழுதிமண் நிறைந்திருந்தது.

நாமி அவ்வப்போது வந்து அந்தக் கண்ணாடிக்குமிழியின் சுவர் அருகே வந்து முகத்தை ஒட்டிவைத்து நின்றாள். நெடுநேரம் வெளியே பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

உள்ளே இருந்த காட்டுக்கு நேர் மாறாக இருந்தது வெளியே இருந்த நிலம். அங்கே உயிரசைவே இல்லை. பாறைகளின் அடுக்குகளாலான மலைகள் மட்டும் தொலைதூரம் வரை தெரிந்தன.

அந்த மலைப்பாறைகள் பொன்மஞ்சள் நிறமானவை. அடுக்கடுக்கடுக்காக வெடித்து வெடித்து நின்றிருந்தன. அவற்றுக்கு நடுவே மஞ்சள்நிறமான புழுதி நிறைந்திருந்தது.

அங்கே காற்று வீசுவது தெரிந்தது. காற்றில் புழுதி புகைபோல அலையலையாக பறந்தது.நெளிந்து நெளிந்து படிந்தது.கூர்ந்து பார்த்தபோது அந்த புழுதியின் அலைகள் நகர்ந்துசெல்வது தெரிந்தது.

நாமி நாள்தோறும் பகல் முழுக்க வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காலையில் தெற்கே மஞ்சள்குள்ளன் என்ற சூரியன் உதித்தது. அது மிகப்பெரியதாக இருந்தது. மலைகளுக்குப் பின்னால் ஒரு மலைபோல எழுந்தது. தங்கத்தாலான மாபெரும் கோப்பையை கவிழ்த்து வைத்ததுபோல அது தோன்றியது.

அது மிகப்பெரிதாக இருந்தாலும் வெப்பம் குறைவு. வெளிச்சமும் மென்மையானது. அதிகாலையில் சூரியன் கருஞ்சிவப்பாக இருந்தது. மலைப்பாறைகள் எல்லாம் கனல்கட்டிகள்போல சுடர்விட்டன. சூரியன் மேலேறும்போது சிவப்புநிறம் கொஞ்சம் வெளிறியது. தீயின் செம்மஞ்சள் நிறம் வந்தது. மலைப்பாறைகளெல்லாம் பொன்போல ஆயின.

உச்சிவேளையில் வெளியே எல்லாமே மஞ்சள் நிறமாக தெரிந்தன. சூரியன் வடக்கே சென்று மறையும்போது மீண்டும் சிவப்புநிறம் அடர்ந்து வந்தது. சிவப்பு நிறமெல்லாம் கருஞ்சிவப்பாக ஆகியது. சூரியன் மலைகளுக்கு அப்பால் மறைந்தது.

இரவில் மலைகள் நிழல்களாக மாறின. தலைக்குமேல் நட்சத்திரங்கள், கோள்கள், விண்கற்கள் ஆகியவை நிறைந்த வானம் பரவியிருந்ததை நாமி கண்டாள்.

மஞ்சள்குள்ளன் சூரியனுக்கு நிலவுகள் இல்லை. ஆனால் வானத்தில் ஆயிரகணக்கான விண்கற்கள் இருந்தன. அந்த விண்கற்களில் பல நட்சத்திரங்களைவிட பெரியவை. அவற்றில் சில விண்கற்கள் சிவப்பு நிறமான பந்து போலிருந்தன. சில விண்கற்கள் மஞ்சளாக ஆரஞ்சுப்பழம் அளவில் இருந்தன. சில விண்கற்கள் நெல்லிக்காய் அளவில் வெண்ணிறமாக சுடர்விட்டன.

நூற்றுக்கணக்கான விண்கற்கள் மின்மினிகள்போல பறந்தன. பல விண்கற்களுக்கு நீளமான வால் இருந்தது. ஒரு துளி சிவப்பு மையை கையால் தொட்டு நீட்டி அழித்ததுபோல அந்த வால் தோன்றியது.

பெரும்பாலான விண்கற்கள் அந்தக் கோள் சுழல்வதுபோல வடக்கிலிருந்து தெற்காகச் சென்றன. ஆகவே அவை மிகமெல்ல மிதந்து சென்றன. சில சிறிய விண்கற்கள் எதிர்த்திசையில் சென்றன. அவை இருண்ட வானத்தில் வேகமாகச் சென்றன.அவற்றின் ஒளி தீயால் கோடு இழுத்ததுபோல தோன்றி மறைந்தது.

இரவுமுழுக்க வானில் விண்கற்கள் சென்றுகொண்டே இருந்தன. அவற்றின் ஒட்டுமொத்த வெளிச்சம் நிலவொளி போல கீழே பரவியிருந்தது. சிவந்த ஒளி அது. கீழிருந்த மலைப்பாறைகள் அந்த ஒளியில் மென்மையாக மின்னிக்கொண்டிருந்தன. தரையில் பரவியிருந்த புழுதியின் அலைகளும் பளபளத்தன.

நாமி சிலநாள் இரவு முழுக்க அங்கேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தக்குமிழிக்குள் இருந்த காட்டில் வாழ்ந்த பறவைகளும் பூச்சிகளும் பூமியில் இருந்து வந்தவை. பூமிக்குரிய சூரியனுக்காக அவை பழகியிருந்தன. ஆனால் அங்கே வந்து ஒன்றரை லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவை அங்கே இருந்த சூரியனுக்காக தகவமைவு கொண்டிருந்தன.

அதிகாலையில் தெற்கே சூரியனின் வெளிச்சம் தெரிவதற்கு முன்பாக கரிச்சான் எனப்படும் சிறிய குருவி ஓசையிட்டது. அதன்பின் காகங்கள் கலைந்து ஓசையிடத் தொடங்கின. சூரியனின் விளிம்பிலிருந்து வெளிச்சம் மட்டும் தெரிந்ததுமே சேவல்கோழி கொக்கரக்கோ என்று கூவியது. சூரியன் தோன்றியதும் வாலன்குருவி செங்குத்தாக வானில் எழுந்து டிரீட் ட்ரீட் என்று கூவிவிட்டு கீழே இறங்கியது.

சூரியன் தோன்றியதும் கண்ணாடிக்குமிழிக்குள் இருந்த காட்டில் உறங்கிக்கொண்டிருந்த எல்லா பறவைகளும் விழித்தெழுந்தன. அவற்றின் ஓசை உரக்க எழுந்தது. பகலில் வாழும் உயிர்கள் அனைத்தும் விழித்தெழுந்தன. சூரியன் தோன்றுவதற்கு முன்னரே இருளில் வாழும் உயிரினங்கள் மறைவிடங்களில் அடங்கிவிட்டன.

நாமி பிறந்தது முதல் குமிழிக்குள் நிகழ்வதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனால்  அது அப்படி ஓர் அற்புதமான நிகழ்வு என்பதை அவள் வெளியுலகைப் பார்த்தபிறகுதான் உணர்ந்தாள். வெளியுலகிலிருந்த வெறுமையுடன் ஒப்பிடும்போதுதான் அவளால் அதை அறியமுடிந்தது.

நாமி கண்ணாடிச்சுவருக்கு உள்ளேயும் வெளியேயும் மாறிமாறிப் பார்த்தாள். உள்ளே எல்லாம் மாறிக்கொண்டே இருந்தன. வெயிலின் நீளம் மாறியது. அதற்கு ஏற்ப நிழல்கள் மாறின. காலையில் மலர்களில் தேன் குடித்த பூச்சிகளும் பறவைகளும் வெயில் ஏறியதும் இலைகளுக்குள் பதுங்கி அமர்ந்தன. உச்சிவெயிலில் எல்லா பறவைகளும் ஓய்வெடுத்தன. மாலையானபோது மீண்டும் பறவைகளும் பூச்சிகளும் வெளியே வந்தன.

அவையெல்லாம் நன்றாகத் திட்டமிட்டு நடைபெறுவது போலிருந்தது. ஆனால் கூர்ந்து பார்த்தபோது ஒவ்வொருமுறையும் சிறிய வேறுபாடுகள் தெரிந்துகொண்டே இருந்தன. பார்க்கப்பார்க்க அந்நிகழ்வு முற்றிலும் புதியதாகவும் தோன்றியது.

அப்படியே பார்வையை திருப்பி குமிழிக்கு வெளியே பார்த்தாள். அங்கே ஒன்றுமே நிகழாமலிருப்பது அவளுக்குத் திகைப்பை அளித்தது. மலைகள் அப்படியே இருந்தன. மண் அப்படியே இருந்தது. ஒவ்வொன்றும் அப்படியே இருந்தன.

நாமி காலம் என்பதைப் பற்றி படித்திருந்தாள். அவளுக்கு காலம் என்றால் என்ன என்று அப்போது புரிந்தது. உயிர்களில் நிகழ்வதுதான் காலம். அந்தக் குமிழிக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது காலம்தான். அதை மணிகளாகவும் நிமிடங்களாகவும் நொடிகளாகவும் பகுத்துக்கொள்ள முடியும்.

அந்த குமிழியின் உயிர்களில் எல்லாம் காலம் நிகழ்ந்தது. பூச்சிகளிலும் பறவைகளிலும் காலம் நிகழ்ந்தது. பூச்சிகள் முட்டையிட்டபின் சிறகுகள் உதிர்ந்து இறந்தன. முட்டைகளிலிருந்து புழுக்கள் வெளிவந்தன. அவை கூட்டுப்புழுவாகின. அவற்றிலிருந்து புதிய பூச்சிகள் வந்தன.

பறவைகள் சிறகடித்து பறந்து களித்தன. முட்டையிட்டு வாழ்ந்து முதிர்வடைந்தன. சிறகுகள் உதிர்ந்து செத்து விழுந்தன. அவற்றை பாக்டீரியாக்களும் பூச்சிகளும் உண்டன. அவற்றின் முட்டைகளில் இருந்து புதிய பறவைகள் வந்தன.

மரங்களில் புதிய தளிர்கள் எழுந்து இலைகள் ஆக மாறின. மரங்களில் இருந்து பழுத்த இலைகள் உதிர்ந்துகொண்டே இருந்தன. முதிர்ந்த மரங்கள் பட்டுப்போயின. விதைகள் முளைத்து புதிய மரங்கள் வளர்ந்தன. காலம் அவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

காலம் அந்த உயிர்களில் நிகழ்ந்துகொண்டே இருந்தது. பட்டுப்போன செடி எங்கே இருக்கிறது? அது கடந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தில் அது இல்லை.முளைக்கும் விதைக்குள் என்ன இருக்கிறது? எதிர்காலத்தில் வளரப்போகும் செடி இருக்கிறது.

ஒரு தளிர் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலம் நோக்கி வளர்கிறது. சருகு நிகழ்காலத்தில் இருந்து இறந்தகாலம் நோக்கிச் செல்கிறது. நாமி அந்த மூன்று காலத்தையும் தெளிவாக உணர்ந்தாள்.

தரையில் ஒரு கோடு போட்டுவிட்டு அவள் முன்னால் வந்தாள். திரும்பிப் பார்த்து அந்தக் கோடு இறந்தகாலத்தில் உள்ளது என்று நினைத்தாள். முன்னால் ஒரு கோடு போடவேண்டும் என்று திட்டமிட்டாள். அந்த கோடு எதிர்காலத்தில் உள்ளது.

அவள் எப்போதும் நிகழ்காலத்தில் இருந்தாள். ஆனால் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அவளால் உருவாக்க முடிந்தது. அவள் இறந்தகாலத்தில் இருந்து எதிர்காலம் நோக்கிச் சென்று கொண்டே இருந்தாள்.

நாமி வெளியே இருந்த உலகைப் பார்த்தாள். அங்கே காலம் இல்லையா என்று வியப்படைந்தாள். அங்கே அசைவுகள் உள்ளன என்பதைக் கண்டாள். அவள் மணலில் மென்மையான அலைகள் அடிப்பதைப் பார்த்தாள்.

அவள் மணலின் அலைகளை எண்ண ஆரம்பித்தாள். எண்ணிக்கை ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கணத்தில் அவள் இன்னொரு அறிதலை அடைந்தாள். அவள் அப்படி கணக்கிட ஆரம்பித்ததுமே வெளியேயும் நிகழ்காலம் என்ற ஒன்று உருவானது. நிகழ்காலம் வந்ததுமே இறந்தகாலமும் எதிர்காலமும் வந்தன.

அழிந்த அலைகள் இறந்தகாலத்தில் இருந்தன. வரப்போகும் அலைகள் எதிர்காலத்தில் இருந்தன. கண்ணெதிரே உள்ளவை நிகழ்காலத்தில் இருந்தன.

அவள் வெளியேயும் காலம் நிகழ்வதை உணர்ந்தாள். அப்படியென்றால் எவராவது பார்க்கும்போதுதான் காலம் நிகழ்கிறது.யாரும் பார்க்காதபோது காலம் இல்லையா என்ன? அவள் அங்கே இல்லாமலானால் என்ன ஆகும்? அப்போது காலம் இருக்காதா?

அவள் இல்லாவிட்டாலும் குமிழிக்கு உள்ளே செடிகளும் மரங்களும் உயிர்களும் இருக்கும். அவற்றில் காலம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அதேபோல குமிழிக்கு வெளியேயும் பாறைகள் இருக்கும். அவை உடைந்து விழுந்துகொண்டே இருக்கும். மண்ணில் அலைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அப்படியென்றால்அவற்றிலும் காலம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் அந்தக்காலம் எவராலும் அறியப்படாத காலம். எவரும் அதை அளவிடவில்லை. ஆகவே அதில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பிரிவினை இல்லை.

அப்படியென்றால் காலம் என்பது இரண்டுவகை. அளவிடப்பட்ட காலம், அளவிடப்படாத காலம். அளவிடப்படாத காலத்தை அளவிடப்படும் காலமாக ஆக்குவது யார்? அதை அளவிடும் அவள்தான்.

நாமி தன்னை காலத்தை உருவாக்குபவள் என்று நினைத்துக்கொண்டாள். கணிப்பொறியின் பெயர்களில் அவள் தேடினாள். அதில் காலிகை என்ற பெயர் இருந்தது. காலிகை என்றால் காலத்தை உருவாக்குபவள் என்று பொருள்

அவள் தனக்கு காலிகை என்றும் பெயர் சூட்டிக்கொண்டாள். இரண்டு கைகளையும் விரித்து சிரித்தபடி “நான் காலிகை!”என்று சொல்லிக்கொண்டாள்.

“காலிகை! காலிகை” என்று சொல்லிக்கொண்டே அவள் வெளியே திகழ்ந்த அந்த நிலத்தை பார்த்தாள். அந்த நிலம் கண்ணாடிக்கு அப்பால் இருந்தது. ஆனால் அங்கேயும் அவள்தான் காலத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தாள். அவளுக்கு அந்த நினைப்பு மகிழ்ச்சியை அளித்தது

அவள் அந்த மென்மையான மணலில் நடப்பதுபோல நினைத்துக்கொண்டாள். மலைகளில் ஏறுவதாகவும் பாறைகள் மேல் நிற்பதாகவும் எண்ணிக்கொண்டாள்.

வெளியே சென்று நிற்பதை கற்பனை செய்ததுமே நாமி கிளர்ச்சி அடைந்தாள். அவள் உடனே வெளியே செல்லவேண்டும் என்றும் விரும்பினாள். வெளியே சென்றே ஆகவேண்டும் என்ற தவிப்பை அடைந்தாள்.

அதுவரை அவள் வெளியே செல்லமுடியும் என நினைக்கவில்லை. ஆகவே வெளியே செல்லவேண்டும் என எண்ணவில்லை. எனவே அதற்கான வழியை தேடவில்லை.

வெளியே செல்லும் வழியைத் தேடியதுமே வெளியே செல்லமுடியும் என்பதும் அவளுக்கு தெரிந்தது. அங்கே வந்தவர்கள் எப்படி வந்திருப்பார்கள்? எப்படி வெளியே சென்றிருப்பார்கள்?

நாமி கணிப்பொறியை ஆராய்ந்தாள். தேடித்தேடி அவள் வெளியே செல்லும் வழியைக் கண்டுபிடித்தாள். அங்கிருந்து வெளியே செல்ல ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அது உலோகமூடியால் மூடப்பட்டிருந்தது. அந்த கதவின் பூட்டு கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்பட்டது

வெளியே உள்ள காற்றில் ஆக்ஸிஜன் மிகக்குறைவு. அங்கே கூடுதலாக இருந்தது நைட்ரஜன். ஆகவே உரிய ஆக்ஸிஜனை கூடவே எடுத்துக்கொண்டு போகவேண்டும். எடையில்லாத ஆக்ஸிஜன் உருளைகள் அங்கே இருந்தன. அவற்றை அவள் தேடி எடுத்தாள்

வெளியே கதிரியக்கமும் உண்டு. மனித உடலில் உள்ள செல்களை சிதைக்கும் கதிரியக்கம் கொண்டவை அவை.ஆகவே உரிய கதிரியக்கத் தடுப்பு உடைகளுடன்மட்டுமே செல்லவேண்டும்.

நாமி கதிரியக்கத் தடுப்பு உடைகளை அணிந்துகொண்டாள். அவற்றை அணிந்துகொண்டபோது அவள் கூடுக்குள் இருக்கும் கூட்டுப்புழு போல இருந்தாள்.

பூச்சிகளின் முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவந்து கூடுகட்டி உள்ளே இருப்பதை அவள் கண்டிருந்தாள். கூட்டை உடைத்து அவை வெளிவரும்போது சிறகுகள் இருக்கும். பட்டாம்பூச்சியாக அவை பறக்கும்.

அந்த உடைகள் மிகமிக எடையில்லாதவையாக இருந்தன. ஆனால் மிகவும் உறுதியானவை. உயர்திணிவுகொண்ட கார்பன் இழைகளால் செய்யப்பட்டவை அவை

நாமி அந்த சுரங்கப்பாதையின் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அதற்குள் மென்மையான ஒளி விரிந்திருந்தது. அவள் அதன் வழியாக நடந்து சென்று இரண்டாவது கதவை திறந்தாள்.

நாமி வெளியே சென்று வெட்டவெளியில் நின்றாள். கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளியே வந்து வண்ணத்துப்பூச்சியாக மாறியது போல அவள் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டாள்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஆடல்
அடுத்த கட்டுரைஇந்தியா திரும்பலாமா?