ஞானி-20

ஞானியின் கருத்துக்களில் தமிழ்த்தேசியமே எனக்கு ஒவ்வாததாக இருந்தது, தமிழர் மெய்யியல் என்னும் சொல் அரசியலை மெய்யியலில் இணைத்து அதை உலகியலில் தளைப்பதாகப் பட்டது, ஆனால் தமிழர்சமயம் என்னும் சொல் என்னை ஊக்கியது. அது ஏன் என்னை ஊக்கியது என்று நானே யோசித்துக் கொள்வதுண்டு. அதை பொதுவாக எளிய அரசியல்களில் உழல்பவர்களிடம் சொல்லிப் புரியவைக்க முடியாது.

1995-ல் நித்யா குருகுலத்தில் ஓர் உரையில்தான் நான் குரு ஆத்மானந்தரைப் பற்றி விரிவாக தெரிந்துகொண்டேன். முன்பு சுந்தர ராமசாமி தன் உரையாடலில் ஆத்மானந்தரைப் பற்றி சொல்லியிருந்தார். ஆனால் அவர் ஆத்மானந்தர் என்பவர் க.நா.சு சந்திக்கவந்த ஒரு அத்வைதப் பேச்சாளர், சுவாரசியமான மனிதர் என்றவகையிலேயே சொன்னார். 1998முதல் பத்மநாபபுரத்தில் நான் குடியிருந்த பகுதியின் அருகிலேயே குரு ஆத்மானந்தர் தன் குருவை சந்தித்த ஆலமரம் இருந்தது.

ஆத்மானந்தர்

1998-ல்  நான் நித்யா குருகுலத்திற்கு வந்த ஒரு துறவி வழியாக ஆத்மானந்தரை மேலும் அறிந்தேன். என்னை துணுக்குறச்செய்த ஒரு செய்தி அவருடைய வரலாற்றில் இருந்தது. தூயஅத்வைதியான குரு ஆத்மானந்தர் சில ஆண்டுகள் ராதாமாதவ ஃபாவபக்தியில் இருந்தார். ராதையாக புடவை கட்டிக்கொண்டு பூவைத்துக்கொண்டு ஒரு பரவச நிலையில் வாழ்ந்தார். பின்னர் மீண்டும் அத்வைதியாக ஆனார். ராதாமாதவ ஃபாவத்தில் அவர் எழுதிய ராதாமாதவம் என்னும் இசைப்பாடல்கள் புகழ்பெற்றவை. முன்னும் பின்னும் அவர் இலக்கியம் எதையும் படைக்கவில்லை.

என்னிடம் பேசிய துறவி “அத்வைதம் அறிவை நம்புவது, ஆகவே நிமிர்வு கொண்டது. அது சென்றடையுமிடங்கள் பல உண்டு. தவறவிடுவது குழைவையும் கனிவையும். அது பக்தியால்தான் கைவசப்படும்” என்றார். ஏறத்தாழ இக்காலகட்டத்தில் நான் ஞானியிடம் என் அத்வைத ஈடுபாடு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நான் எதையாவது இழக்கிறேனா? இழப்பு என்று எனக்குப்பட்டது என்னுடைய தாய்வழிச்சமூகப் பின்னணியில் நான் அடைந்த சாக்தத்தை. அதை என் தேடலில் இணைத்துக் கொள்ளவேண்டுமா?

“உங்ககிட்ட இருக்கிறது தொல்தமிழ் மெய்யியல். அதோட அடிப்படைக் குறியீடுகள் எல்லாம் தாய்ங்கிற குறியீடு சார்ந்தவை. அதை விட்டுட்டு நீங்க அருவமா அத்வைத கருத்துகளுக்குள்ளே போனா இழக்கிறது உங்க அம்மாவழியிலே கைமாறிவந்த நுண்ணுணர்வைத்தான்” என்றார் ஞானி. இக்காலகட்டத்தில் அந்த அலைக்கழிதலுடன் ‘அன்னை’ போன்ற சில கதைகளையும் எழுதியிருந்தேன். கொற்றவை நாவலை எழுதும் எண்ணம் அப்படித்தான் உருவாகியது.

மெய்த்தேடல் என்பது ஒரு அரசியல் தரப்பு போல கருங்கல்பாதை என எண்ணுபவர்களால் புரிந்துகொள்ள முடியாதது, விஷ்ணுபுரத்திலிருந்து கொற்றவைக்கான பாதை. ஒன்றையே வேறுவேறு பாதைகளில் அணுகுவது, வேறுவேறு கருவிகளால் கையாள்வது என அதைச் சொல்லலாம். கொற்றவை என்னுள் இருந்த அன்னைவழிச் சமூகத்தின் படிமங்கள் அனைத்தையும் வெளியே எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு பாதை, ஒரு நீண்ட பயணம். கன்யாகுமரி அன்னையில் வந்து முடிவது.

1999-ல் நான் ஞானியிடம் சிலப்பதிகாரத்தை ஒட்டி ஒரு நாவலை எழுதும் எண்ணத்தை சொன்னேன். முதலில் அதை ஒரு நாடகமாக எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். அது நாடகம் என்ற வகையில் சரியாக அமையவில்லை என்று ஞானி கூறினார். பின்னர் நாவலாக அக்கருத்தை அவரிடம் சொன்னேன். இம்முறை இன்னும் விரிந்த களத்தில், தமிழ்மொழி தோன்றியது முதல் அனைத்துத் தெய்வங்களும் தமிழ்மண்ணில் தோன்றியதிலிருந்து தொடங்கி சமகாலம் வரைக்கும் வரும் ஒரு நாவலை எழுத எண்ணினேன்.

இவ்வரலாற்றினூடாக பத்தினி என்னும் கருதுகோள் எவ்வாறு உருவாகி நிலைகொண்டது, கன்னியிலிருந்து பத்தினியின் வழிபாடு எவ்வாறு உருமாறியது என எழுதவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால் மிகத்தெளிவற்ற குழப்பமான கொந்தளிப்பான எண்ணங்கள் அவை.

ஞானி மிகுந்த உளக்கிளர்ச்சி அடைந்து உடனடியாக கொற்றவையை நான் எழுத வேண்டும் என்று சொன்னார். தொடர்ச்சியாக கடிதங்களூடாக கொற்றவையை நான் எழுதியாக வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். இரண்டு மூன்று முறை எழுதி அதை கைவிட்டேன். ஒருமுறை எழுதிய வடிவத்தை அவருக்கு அனுப்பினேன். அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த வகையான யதார்த்தச் சித்தரிப்பில் இது நிற்காது என்று எனக்கு ஓரிரு மாதங்களுக்குப் பிறகு கடிதம் எழுதினார்.

பின்னர் 2003-ல் ஒருநாள் இளையராஜாவின் ‘கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்’ என்னும் பாட்டைக்கேட்டு விந்தையானதோர் ஓர் உணர்வுக்கிளர்ச்சிக்கு ஆளாகி அதன் முதல் அத்தியாயத்தை எழுதினேன். இன்றுவரை அந்தப்பாடல் என்னை என்ன செய்தது என்று என்னால் சொல்லமுடியாது. இளையராஜாவை ஒரு குருவாக நான் நினைப்பது அப்பாடல் வழியாக நிகழ்ந்த ஒரு தொடர்புறுத்தலால்தான்.

இம்முறை முழுநாவலை எழுதிய பிறகு அதை ஞானிக்கு அனுப்பினேன். ஞானி பெரும் பரவசத்துடன் என்னை அழைத்தார். தமிழில் எழுதப்பட்ட ஒரு பெரும் காவியம், கண்டிப்பாக சிலப்பதிகாரத்திற்கு நிகரானது, சிலப்பதிகாரத்தை விடவும் தரிசனத்தால் முன்னகர்ந்தது, ஏனெனில் இன்னும் விரிவான உலகளாவிய பண்பாட்டின் காலத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று எனக்கு அவர் எழுதினார்.

சிலப்பதிகாரத்தில் உள்ள சம்ஸ்கிருத வார்த்தைகள்கூட களையப்பட்டு, தூய தமிழில் எழுதப்பட்டிருந்தது கொற்றவை. அது தமிழர் மெய்யியல் என்பதற்கான அனைத்து அடிப்படைகளையும் தெளிவாக வகுத்தது. தமிழர் மெய்யியலின் அடிப்படையாக அமையக்கூடிய தொன்மங்கள், நம்பிக்கைகள், உணர்வுநிலைகள் ஆகியவை அதில் வரையறுக்கப்பட்டிருந்தன. அதன்பின் அந்த அடிப்படைகள் விரிவு செய்யப்பட்டு அனைத்து தெய்வங்களையும் உள்ளிழுத்து தமிழ்ப்பண்பாடின் கூறாக மாற்றும் முயற்சி அதிலிருந்தது. அதாவது அது விலக்கும் பார்வையை முன்வைக்கவில்ல்லை, உள்ளிழுக்கும் பார்வையை முன்வைத்தது. ஞானியின் வழிமுறை அது.

ஞானி கொற்றவைக்கு ஒரு சிறப்பிதழை வெளியிட்டார். எனக்குத் தெரிந்து தமிழில் ஞானி எனக்கு அளித்த அங்கீகாரத்தை வேறெந்த புனைவு எழுத்தாளருக்கும் அளித்ததில்லை. என்னுடைய அனைத்து படைப்புகளைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். கொற்றவை பற்றி அவர் எழுதியது தான் அவருடைய விமர்சன உலகிலேயே அவர் அளித்த  உச்சகட்டமான அங்கீகாரம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நேயம் சிறப்பிதழ் தமிழ் மெய்யியலின் ஆதார நூலாக கொற்றவையை நிலை நிறுத்துகிறது. அனைத்து பண்பாடுகளையும் உள்ளிழுக்கும் தன்மை கொண்டதாக கொற்றவை நிலைகொள்கிறது. கொற்றவை தமிழ். நேயம் சிறப்பிதழுக்கு பிறகு மீண்டும் ஞானியிடம் கடிதப்போக்குவரத்தில் இருந்தேன். அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருந்தேன். அவருடைய உடல்நிலை நலியத்தொடங்கியது. பெரும்பாலும் சந்தித்து ஓரளவு பேசி உடனே கிளம்புவதாக எங்கள் சந்திப்பு இருந்தது. அல்லது நிகழ்ச்சிகளில் அவரை வண்டி அனுப்பி அழைத்து வரச்செய்து தனியாக அமர்ந்து சற்று நேரம் பேசுவேன்.

இறுதி நாட்களில் பெரும்பாலும் கைகளை பற்றிக்கொண்டு எளிமையான அன்பு வார்த்தைகளை உரைத்து ஒரு உணர்வு நிலையில் இருப்பது மட்டும் தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் முந்தைய கொள்கைப்பூசல்கள், கோட்பாட்டு விவாதங்கள் அனைத்திற்கும் அப்பால் மேலும் ஒரு நெருக்கம் அவரிடம் கைகூடியிருந்தது. ஞானி என்னிடம் அவருக்கு தமிழ்த்தேசிய அரசியல்மீதான ஈடுபாடு குறைந்து வந்ததை பற்றி சொன்னார்.  “தமிழ்த்தேசியம் என்பது ஒரு மெய்யியலாக, உணர்வுநிலையாக மட்டுமே இப்போது நிலைநிற்க முடியும். அது நேரடி அரசியலாகும்போது அது ஃபாசிச அரசியல் நோக்கித்தான் செல்கிறது, தேவையென்றால் இந்துத்துவ ஒற்றை அரசியலுடன் சமரசம் செய்யவும் தயாராக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

“அதை ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் தொடங்கி வைத்துவிட்டீர்கள். தொடங்கி வைத்தவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து பின்நிற்க, தொடங்கி வைக்கப்பட்டது முன்னால் சென்று பலிகொள்வதுதான் எல்லா சிந்தனைகளிலும் எப்போதும் நிகழ்கிறது, தமிழகத்தின் சிதானந்தமூர்த்தியாக நீங்கள் ஒருவேளை நாளை அறியப்படலாம்” என்று நான் சொன்னபோது ஞானி மிகுந்த வருத்தமடைந்தார், பின்னர் ஒரு சிறு கடிதத்தில் நான் மிக கடுமையாக குறிப்பிட்டுவிட்டேன் என்று எனக்கு சொன்னார். நான் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தேன்.

முதற்கனல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

ஞானி என்னுடைய பிற்காலச் செயல்பாடுகள் அனைத்திலும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். விஷ்ணுபுரம் விழாக்கள் அனைத்திற்குமே அவர் வந்திருக்கிறார் .உடல் நலிந்திருந்தபோது மட்டும் நாங்கள் சென்று பார்த்துவிட்டு வந்தோம்.

கொற்றவையில் இருந்து நான் சென்றடைந்த ஆழ்ந்த தேடல் என்பது வெண்முரசு. விஷ்ணுபுரம் கொற்றவை ஆகிய நாவல்களில் இருந்த எல்லாமே வெண்முரசிலும் உண்டு, அதற்கப்பால் செல்லும் தேடல்களும். அறிவார்ந்த தத்துவநோக்கும் பக்தியின் பித்தும் அதில் இருந்தன. அதை எழுதும்போதெல்லாம் ஞானியிடம் எனக்கு ஆழ்ந்த உரையாடல்கள் ஏதுமில்லாமலாகிவிட்டிருந்தது.

ஆனால் வெண்முரசு எழுதத்தொடங்கும்போது அதைப்பற்றிய் ஒரு சிறு குறிப்பை அவருக்கு அனுப்பியிருந்தேன். நேரில் பார்க்கும்போது “அதை எழுதுவதற்கான காரணம் என்ன?” என்றார். “கம்பன் ராமாயணத்தை எழுதியதற்கான அதேகாரணம்தான்” என்று நான் வேடிக்கையாக சொன்னேன். “அருமையான தன்னடக்கம்” என்றார். நான் அவரிடம் கூறினேன், “அது வடவர் காவியமா ஆதிக்கநூலா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. அதிலிருக்கும் மானுடநாடகமே என்னை ஈர்க்கிறது. அதனூடாக நான் சென்றடையும் தரிசனம், மெய்மை ஒன்றுள்ளதா என்று மட்டும்தான் நான் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இலியட்டுக்கும் அதற்கும் எந்த வேறுபாடுமில்லை.”

“காவியம் என்னும் பெருவடிவத்தின் உச்சம் அது, தொன்மங்களின் பெருங்களஞ்சியம். அதுதான் அதை என்னை எழுத வைக்கிறது. ஆனால் தூய தமிழில் அதை எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். “தூய தமிழிலா? அது எப்படி மகாபாரதத்தை எழுத அப்படி எழுத முடியும்?” என்று கேட்டார். “கொற்றவையின் மொழி அல்லது அதைவிட மேம்பட்ட இன்னொரு மொழி” என்று சொன்னேன். “எனக்கு அனுப்பி வையுங்க எவரையாவது வைச்சு படிச்சுப் பார்க்கிறேன்” என்று சொன்னார். நான் நண்பர் சிவக்குமார் வாசித்து ஒலிப்பதிவு செய்த முதற்கனலை அவருக்கு அனுப்பினேன். பின்னர் நண்பர் நரேனை அனுப்பி சில கருவிகளைக் கொண்டு அதைக் ஒலிவடிவில் கேட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தேன்.

ஞானி பிரயாகையின் தொடக்கம் வரை படித்திருப்பதாகவும் தற்போது உளம்ஒட்டவில்லை என்றும் ஒருவருடத்திற்கு முன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். எதையும் படிக்காமல் ஆவதாகவும், பெரும்பாலும் சொற்களே இல்லாமல் உளம்சோர்ந்து நாற்கணக்கில் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார். முதுமை அவரை ஆட்கொண்டதை என்னால் உணரமுடிந்தது. நானும் அரங்கசாமியும் நண்பர்களும் கடைசியாகச் சந்தித்தபோது கொற்றவையின் தமிழ் வெண்முரசில் மேம்பட்டிருப்பதாகவும், நிறைய அருமையான சொல்லாட்சிகளும் சொற்களும் அதிலிருப்பதாகவும் ஞானி எனக்கு சொன்னார்.

“பெரிய மனிதர்கள் அதில் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. தமிழர்களுக்கு தெருக்கூத்து ஒரு பெரிய சொத்து. வில்லிபாரதமும் நல்லாப்பிள்ளை பாரதமும் இல்லாமல் ஒரு தமிழ்மெய்யியல் இருக்கமுடியாது. ஆகவே மகாபாரதமும் தமிழர்களுக்குரியதுதான். அதை தமிழ்ப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அம்சமாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கான முயற்சியாகவே வெண்முரசை நான் பார்க்கிறேன்” என்று ஞானி சொன்னார்.

வெண்முரசு பற்றி ஞானி ஏதோ ஒரு நண்பர் கூடுகையில் ஓரிரு சொற்கள் சொல்லப்போக பலர் கொதித்துக் கிளம்பிவிட்டதாகச் சிரித்தபடியே சொன்னார். இது இன்று ஒரு பொதுப்போக்காக மார்க்ஸியத்திற்குள் உள்ளது. கட்சிசாரா மார்க்ஸிய அமைப்புகளில் மட்டுமல்ல கட்சிமார்க்ஸிய அமைப்புகளிலும்கூட. இந்து, இந்திய மரபு சார்ந்த எந்த விஷயத்திற்கும் எதிராக உச்சகட்ட காழ்ப்பு எழுந்து வருகிறது. அதைப் பேசுபவர்கள் உடனே சங்கி முத்திரையைப் பெறுகிறார்கள்.

இன்று இந்துத்துவ அரசியல் மேலெழுந்து அனைத்தையும் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மார்க்ஸியர் கடுமையான எதிர்நிலை எடுக்கிறார்கள், ஆகவே இந்துத்துவ எதிர்ப்பை இந்து எதிர்ப்பாக அறியாமலேயே சமைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு தேசியப் பொதுப்போக்கு. அதோடு கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத நம்பிக்கை கொண்டவர்களில் ஒருசாரார் பொதுவெளியில் இன்று தங்களை இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர் என்று காட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் இந்து, இந்திய அடையாளங்கள் அனைத்தின்மீதும் கடும் காழ்ப்பு கொண்டவர்கள்.

ஆகவே ஞானி அவருடைய மெய்யியல் தேடலுக்காக இன்னும் சிலகாலம் வசைபாடப்படுவார் என்றுதான் படுகிறது. பொதுச்சூழலின் திட்டமிட்ட காழ்ப்புகளைக் கடந்து புனைவெழுத்தாளர்களை நோக்கி வாசகர்கள் எப்போதும் வருவார்கள், அரசியல் சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் அவ்வாறு கடந்து நாடி வருபவர்கள் மிகக்குறைவு. ஞானி இன்னும் சிலகாலம் கழித்து, இச்சூழல் மேலும் தெளிவடைந்தபின்னரே, திறந்த உள்ளத்துடன் வாசிக்கப்படுவார்.

[மேலும்]

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
தமிழ்நேயம் அறக்கட்டளை
ஆத்மானந்தா
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-8
அடுத்த கட்டுரைஇ.எம்.எஸ். சாதிபார்த்து திருமணம் செய்துகொண்டாரா?