விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

2020க்கான விஷ்ணுபுரம் விருதுக்கு சுரேஷ்குமார இந்திரஜித் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார். என் தனிப்பட்ட மகிழ்ச்சியும் நல் வாழ்த்துகளும் .

என் விருப்பப் படைப்பாளிகளில், நண்பர்களில் அவர் ஒருவர். அவருடைய அலையும் சிறகுகள், மறைந்து திரியும் கிழவன் பருவத்திலிருந்து சமீபத்தில் உயிர்மை இணைய இதழில் எழுதிய 50 குறுங்கதைகள் வரை தொடர்ந்த வாசிப்பில் இருக்கும் எனக்கு வெவ்வேறு புதிர்களுக்களுக்கும் அபத்தங்களுக்கும் இடையில் அவர் வாழ்வையும் மனிதர்களையும் கலைத்துப் போடும் விதம் பிடித்திருக்கிறது.

ஒன்று வெளிவந்து, ஒன்று அச்சில் இருக்க, தனது மூன்றாவது நாவலை எழுதி முடித்திருக்கும் சுரேஷ் குமார இந்திரஜித்துக்கான, ‘பதாகை’ சிறப்பிதழில் நரோபா செய்திருந்த நேர்காணலும், ‘உலகளந்தானை அளந்த கரப்பான்’ – தலைப்பு சரியாக நினைவில்லை – என்று சுனீல் கிருஷ்ணன் எழுதியிருந்த கட்டுரையும் முக்கியமாகவும் சரியாகவும் அவரை முன் வைப்பவை.

சுரேஷ் குமார இந்திரஜித்தின் கடற்கரையில் அலையும் சிறகுகளுடன் மறைந்து திரிகிறது மற்றும் ஒரு வண்ணத்துப் பூச்சி.

வண்ணதாசன்

***

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் விஷ்னுபுரம் விருது பெறுவதற்கு வாழ்த்துக்கள். அவருடைய படைப்புக்களைப் பற்றி விரிவான ஆய்வுக்கட்டுரைகளும் குறிப்புகளும் வரவேண்டும். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு முன் அவர் வைக்கப்படவேண்டும்.

இன்றைய வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட வாழ்க்கைமேல் சலிப்பு உள்ளது. ஆகவே அவன் புனைவில் அன்றாடத்துக்கு அப்பால் செல்ல ஆசைப்படுகிறான். ஆனால் அன்றாடத்துக்கு அப்பால் சென்று அறிவியல் புனைகதைகள் சரித்திர மாயக்கதைகள் போன்றவற்றை வாசிக்குமளவுக்கு அவனுக்குப் பொறுமையோ பின்னணி வாசிப்போ இருப்பதில்லை. சுரேஷ்குமார இந்திரஜித் வாசகர்கள் அப்படிப்பட்டவர்கள். இன்றைய அன்றாட வாழ்க்கையை அவர் எழுதுகிறார். அதற்குள் ஒரு மாயம் நிகழும்படிச் செய்கிறார்.

அந்த மாயம் சிலகதைகளில் இயல்பாக உள்ளது. விரித்தகூந்தல் போன்றகதைகள். மாயப்பெண் போன்றகதைகளில் அது ஒருவகையான ஐரோப்பியத்தன்மையுடன் உள்ளது. சொல்லப்படும் சூழலில் பொருந்துவதில்லை. இயல்பாக மாயம்நிகழும் கதைகள் முக்கியமானவை.

எம்.ராஜேஷ்

***

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் அவருடைய படைப்புக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். தமிழ் சிற்றிதழ்சார்ந்த இலக்கிய எழுத்தின் ஒரு மாதிரி என அவரை நினைக்கிறேன். அவருடைய முன்னோடி என்று எனக்கு நகுலனைத்தான் சொல்லத்தோன்றுகிறது. அவருடைய கதைகளை படிக்கையில் மிகச்சிறந்த முன்வடிவமான கதை நகுலன் எழுதிய ஒரு ராத்தல் இறைச்சி போன்ற கதைகள்தான். அவை சீரோ நெரேஷனை முன்னதாகவே முயற்சிசெய்தவை. வாசகனுக்கு நிகழ்ச்சியை மட்டுமே சொல்லிச் செல்பவை. ரொமாண்டிஸிஸம் இல்லாதவையும்கூட. நகுலனின் மொழியும் குறைவான வார்த்தையில் தன்னிலையிலேயே செல்வது

மகாதேவன்

***

முந்தைய கட்டுரைஞானி,ஈவேரா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-21