சுந்தர ராமசாமி,விஷ்ணுபுரம்- கடிதம்

சுந்தர ராமசாமி 

வணக்கம் ஜெயமோகன்,

ஜி.குப்புசாமி எழுதுவது.

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி சுந்தர ராமசாமி கொண்டிருந்த அபிப்பிராயங்களாக ஞானி தொடரில் எழுதிவருவதைக் கண்டேன். இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்று உண்டு.

1999ம் வருடம் சு.ரா. திருவண்ணாமலையில் த.மு.எ.ச. ஏற்பாடு செய்திருந்த ‘முற்றம்’ நிகழ்வுக்கு வந்திருந்தார். உரை முடிந்ததும் நண்பர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். ஒருவர் தமிழில் வெளிவந்த முக்கியமான ஐந்து நாவல்கள் என்று எவற்றை சொல்வீர்கள் என்று கேட்டார்.

சுரா ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், விஷ்ணுபுரம் என்று சொல்லத் தொடங்கியவுடனே தோழர் ஒருவர் குறுக்கிட்டு விஷ்ணுபுரத்தை எப்படி நீங்கள் முக்கியமான நாவல் என்று சொல்கிறீர்கள் என்றார். சுரா அப்போது மிகவும் சோர்வடைந்திருந்தார். ஆனாலும் பொறுமையாக அத்தோழரிடம் அந்நாவலை அவர் ஏன் முக்கியமான நாவலாகக் கருதுகிறார் என்பதை விளக்கத் தொடங்கினார். தோழர் மிகவும் கொதிப்போடு இருந்தார். சுரா சொல்வதை பொறுமையாக உள்வாங்கிக் கொள்ளும் உத்தேசம் இல்லாமல் தொடர்ந்து அந்நாவலை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தார். சுராவுக்கு அவரோடு விவாதிப்பதில் அர்த்தம் இல்லை என்று புரிந்து  கிளம்பலாமா என்பதுபோல எங்களைப் பார்த்தார். எனவே அவரை தோழரிடமிருந்து வலுக்கட்டாயமாக  பிரித்து ஓட்டல் அறைக்குக் கூட்டிச்சென்றோம்.

ஓட்டலில் சிற்றுண்டி முடித்த பின்னரும் அவருக்கு களைப்பு நீங்கவில்லை. அடுத்த நாள் பார்க்கலாம் என்றார். மறுநாள் அவரை நான் சந்திக்கவில்லை. பவா செல்லதுரையிடம் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி விரிவாக பேசியதாக அறிந்தேன்.

எனவே விஷ்ணுபுரம் நாவலை சுரா முக்கியமான நாவல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். அதற்கு நேரடி சாட்சி நான்.

அன்புடன்

ஜி.குப்புசாமி

அன்புள்ள ஜி.கே

சுரா இப்படி ஒரு கருத்துகொண்டிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. காடு கொற்றவை ஆகியவையே அவருக்கு உகந்தவையாக இருந்தன என்று சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன். பேசியதில்லை

இக்குறிப்புகள் எல்லாமே என் உளப்பதிவுகளே. ஆகவேதான் இவற்றில் நான் என்ற கோணம் வருகிறது. அதுவே நினைவுக்குறிப்புகளில் சாத்தியம்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைதன்மீட்சி, எம்.எஸ்.உதயமூர்த்தி
அடுத்த கட்டுரைகடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்