அன்புடன் ஆசிரியருக்கு
விஷ்ணுபுரம் விருது ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்படும் படைப்பாளியின் தனித்துவமான பங்களிப்பினை கவனப்படுத்தி இருக்கிறது. கௌரவப்படுத்துதல் என்பதைத் தாண்டி படைப்பாளி ஒட்டுமொத்தமாக தமிழ் அறிவுச்சூழலிலும் புனைவுச்சூழலிலும் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை எடுத்துக்காட்டுவதாகவே ஒவ்வொரு விருது நிகழ்வும் அமைந்திருக்கிறது.
ராஜ் கௌதமன் போன்றொரு எழுத்தாளரை வேறெவ்வகையிலான விருதினாலும் தமிழ்ச்சூழலுடன் பரிச்சயம் கொள்ளும்படி செய்துவிட முடியாது. பண்பாட்டுப்புலத்தில் அவரது பங்களிப்பு மிக நுண்மையானது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் இடமும் இலக்கிய உலகில் அத்தகைய ஒன்றே. மேம்போக்கான வாசிப்புக்கு சாதாரணமாகத் தெரியக்கூடிய அவரது சிறுகதைகள் வாசகனின் கவனத்தை அதிகம் கோருகின்றன. கவனமற்று வாசிக்கும்போது படைப்பினுள் ஊடாடியிருக்கும் பகடியோ மாயமோ கைக்கு சிக்காமல் நழுவி விடுகிறது.
ஊரடங்கு காலம் தொடங்கிய பிறகு நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து நாங்கள் எழுதிய கதைகளையும் முன்னோடிகளின் கதைகளையும் வார இறுதிகளில் விவாதித்து வருகிறோம். இவ்விவாதங்களில் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பெயர் அடிக்கடி சொல்லப்படுகிறது. மாயமும் பூடகமும் கதைக்குள் பயின்று வரும்போது ஏதோவொரு வகையில் அது சுரேஷ்குமார இந்திரஜித்தை நினைவூட்டி விடுகிறது. ஒரு முன்னோடியின் இடம் எவ்வாறு நிறுவப்படுகிறது என்பதை இந்த குறிப்பிடல்களும் நினைவூட்டல்களும் எடுத்துக் காண்பிப்பதாக உள்ளன.
குறுங்கதைகள் நாவல் என ஊரடங்கு காலத்திலும் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. முன்னோடிக்கு என் வணக்கங்கள்.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள ஜெ
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் சிறுகதைகளை நான் தொடர்ச்சியாக படித்துக்கொண்டுவருகிறேன். அவற்றை மௌனி கதைகளுடன் ஒப்பிட முடியாது. மௌனி அகவயமாக ஒரு எழுச்சியை உணர்கிறார், மொழியை அதனருகே கொண்டுசெல்ல முயல்கிறார். மொழியில் ஒரு சிடுக்கை உருவாக்குகிறார். இதேபோல எதையாவது ஒன்றைச் சொல்ல முற்படும் முயற்சியே சுரேஷ்குமார இந்திரஜித்திடம் இல்லை. இக்கதைகள் எல்லாம் ஒரு வாழ்க்கையின் துண்டை தொட்டு காட்டிவிட்டு நிற்பவையாக உள்ளன. ஆகவே ஆசிரியர் எந்த வகையான மொழிச்சிக்கலையும் சந்திக்கவில்லை. எந்த உளவியல் சிக்கலையும் உணரவுமில்லை.
இந்தக்கதைகள் ஒரு வாழ்க்கைத்தருணத்தை சுருக்கமாகச் சொல்லி காமிராவை அப்படியே ஸ்டேண்ட் போட்டுவிடுகின்றன. இப்படி வாழ்க்கையின் ஒரு பகுதியை வலுக்கட்டாயமாக கொஞ்சநேரம் பார்க்கவைத்தால் நாம் அதை விரிவாக்க ஆரம்பிப்போம். அது நம் கற்பனையில் வளரும். கார் எங்காவது அரைமணிநேரம் நின்றால் நாம் ஒரு காட்சியைப் பார்ப்போம். அதை அப்படி கொஞ்சநேரம் பார்த்தாலே ஒரு வாழ்க்கைச்சித்திரம் நமக்குள் வந்துவிடும். அதைப்போல என்று சொல்லலாம்
இப்படி விரியும்கதைகளில் எந்தெந்தக் கதைகளில் ஒரு வலுவான படிமம் உள்ளதோ அது நம் நினைவில் தங்கும் கதையாக உள்ளது. உதாரணம் இடப்பக்க மூக்குத்தி. சுரேஷ்குமார இந்திரஜித் அப்படி புனைவல்லாத ஒரு புனைவை எழுதும் படைப்பாளி என்று சொல்லலாம்
ஜெயராமன்
அன்பிற்குரிய ஜெ
சுரேஷ்குமார இந்திரஜித் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வாழ்த்துக்கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன்.கடிதங்களையும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாசிப்பில் இவருடைய கதைகளைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் everyday mysteries ன் கதைகள் என்று சொல்வேன். வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் சின்னச்சின்ன மர்மங்கள், புதிர்களைப்பற்றியவையாக கதைகள் அமைந்துள்ளன
அர்விந்த்
அன்புள்ள ஜெ
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கான விஷ்னுபுரம் விருதுக்கு என் பாராட்டுக்கள். இவருக்கு விருதுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்
இந்த விருதின் நியமங்களில் ஒன்றாக சிற்றிதழ்சார்ந்த இலக்கியவாதிக்கே அளிக்கப்படவேண்டும் என்று நீங்கள் வகுத்துக்கொண்டிருப்பது தெரிகிறது. இப்படி ஒருவரை அடையாளப்படுத்தி விரிவாக விவாதித்து முன்வைத்தபிறகு அவருக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றால்தான் குற்றம் சொல்லமுடியும். மற்றபடி பேசப்படாத ஒருவருக்கு எப்படி விருதுகள் வரவில்லை என்று குறைபப்டுவது அழகல்ல என்பதே என் எண்ணம்.
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு முக்கியமான விருதுகள் வந்தமையட்டும் என வாழ்த்துகிறேன்
லக்ஷ்மணன்