சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு அளிக்கப்படும் முதல்விருது இது என்ற செய்தி மேலும் முக்கியமானது. ஆ.மாதவன் உட்பட விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட பலருக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட முதல்விருதாக அது இருந்திருக்கிறது. அது ஓர் உயர்ந்த அம்சம்தான். வேறெந்த விருதையும் வாங்காமல் விஷ்ணுபுரம் விருது பெறுவது. வழக்கம்போல விமர்சனநூல், ஆவணப்படம் எல்லாம் எடுக்கப்படும் என நினைக்கிறேன். கே.பி.வினோதின் ஆவணப்படங்களுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே இடமுண்டு

ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவருடைய படைப்புக்களை இந்த விருது அறிவிப்பிற்குப் பிறகுதான் தேடிப்படிக்கிறேன். அவரை இந்த விருது எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவருடைய எல்லா கதைகளுமே சுருக்கமான சாதாரணமான வாழ்க்கைக்குறிப்புகளாக உள்ளன. அவற்றை எப்படி அர்த்தமாக்கிக்கொள்வது என்பதற்கு பதாகை இதழில் வெளிவந்த கட்டுரைகள் உதவின

 

ஜெயக்குமார்

 

அன்புள்ள சார்,

வணக்கம்.

இந்த வருட விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு அளிக்கப்படவிருப்பதன் அறிவிப்பு பெரும் உவகை அளித்தது. வருடம் துவங்கியது முதல் ஏற்பட்ட தனிமை அலைக்கழிப்புகள் நீங்கி வருட இறுதியில் விருது விழா  எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரடியாக இணைந்த சிறப்பானதொரு கொண்டாட்டமாக நிகழவேண்டும் என்பதுதான் பெரும் விருப்பமாக இருக்கிறது

காளிப்பிரசாத்

 

அன்புள்ள காளி

பார்ப்போம். நோயைத் தந்த சீனாவே மருந்தையும் தர வாய்ப்பிருக்கிறது. அடிக்கிற கைதான் அணைக்கும்

 

ஜெ

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 1991 வாக்கில் நான் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிச் சொன்னார். அந்த நினைவு இருந்தது. பின்னர் ஒரு உரையில் நீங்கள் அவரைப்பற்றிச் சொல்வதைக் கேட்டேன். ஆனால் நான் இணையத்தில் வேறொரு இந்திரஜித் எழுதுவதை அவர் எழுதுவது என்று நினைத்துவிட்டேன். ஆகவே ஆர்வம் காட்டவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் நீங்கள் எழுதிய குறிப்பின் வழியாக பதாகை சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழில் சில கட்டுரைகளை வாசித்தேன். அதன்பிறகே சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை வாசித்தேன்.

மினிமலிஸக் கலையில் தமிழின் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம். மினிமலிசம் கலையில் உருவானதே ஒரு குறிப்பான வரலாற்றுப் பின்னணியில்தான். அதாவது மினிமலிசம் ஒரு கித்தானில் வரையப்பட்டுள்ளது என்றால் அந்தக் கித்தானை வேறு கலைகளின் மிகப்பெரிய பரப்பு என்று சொல்லலாம். உதாரணமாக பாரதியின் ஒரு படம் நாலைந்து கோடுகளால் வரையப்பட்டுள்ளது. அதை நாம் ரசிக்கவேண்டும் என்றால் ஏராளமாக பாரதியின் படங்கள் கண்ணுக்குப் பட்டிருக்கவேண்டும். மேற்கே மினிமலிசம் வந்தது ஏராளமான கலைப்படைப்புகள் நிறைந்த சூழலில்தான்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் எழுத்துக்கள் 1980 வரை வந்து குவிந்த ஏராளமான யதார்த்தவாதக் கதைகளின் தொடர்ச்சியாக வருகின்றன. அவற்றை ஞாபகப்படுத்துகின்றன. ஆகவே குறைவாகச் சொல்லி ஞாபகத்தை கிளறிவிட்டு மேலே செல்கின்றன. பல கதைகள் அதேபோன்ற வேறு கதைகளை நினைவில் எழுப்புகின்றன. உதாரணமாக மறைந்து திரியும் கிழவன் கதை இருபதுவருடங்கள் நாவலை ஞாபகப்படுத்தியது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அதே கதையை நாம் புலிநகக்கொன்றை நாவலிலும் காண்கிறோம். அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு சினிமா,முகாமுகம் என ஞாபகம், அதிலும் இதே கதை வருகிறது.

மினிமலிசத்தின் இந்த இயல்பு அவர்கதைகளிலும் இருக்கிறது. ஞாபக அடுக்குகளுக்குள் புகுந்து கதைசொல்லும் உத்தி அது

ஜே. ராகவேந்தர்

முந்தைய கட்டுரைதன்மீட்சி- அலைவுகள்,கண்டடைதல்கள்
அடுத்த கட்டுரைஞானி-19