5: திறப்பு
பெயரில்லாத குழந்தை தன்னைத் தானே உணரத் தொடங்கியது. அதன் உள்ளத்தில் நான் என்ற நினைப்பு உருவாகியது. உண்மையில் அதற்குள் நான் என்னும் உணர்வு எப்போதுமே இருந்தது. ஆனால் அப்படி ஒன்று இருப்பதை அதுவே அறிந்தது.
அந்த எண்ணம் வந்ததும் குழந்தைக்கு நெஞ்சு படபடத்தது. ஆகவே அது நெஞ்சில் கையை வைத்தது. “மாம்”என்று சொல்லிக்கொள்ளும்போது நெஞ்சில் கையை வைத்தது. முன்பு அது பசித்தபோதுதான் மாம் என்று சொன்னது. அப்போது வயிற்றில்தான் கையை வைத்தது.
நான் என்பது உருவானதுமே குழந்தை மாறிவிட்டது. தன்னைச் சுற்றியிருந்த பொருட்களை அது அறியும் முறையும் மாறியது.
அதுவரை பொருட்களை அந்தக் குழந்தை அறியும்போது அதெல்லாம் அறிவு என்று ஒன்றாக திரளவில்லை. நான் என்ற ஒன்று உருவானதும் அறிவு திரள ஆரம்பித்தது. நான் என்ற உணர்வைச் சுற்றி அந்த அறிவு திரண்டது.
அதாவது அதற்கு முன்பு அந்தக் குழந்தை ஒரு விஷயத்தை அறிந்தது. அதன்பின் அதைவிட்டுவிட்டு இன்னொன்றை அறிந்தது. அந்த அறிதல்கள் தனித்தனியாக இருந்தன. தனித்தனியாக நினைவில் பதிந்திருந்தன.
அந்த குழந்தை கீழே விழுந்த இலைகளை கண்டிருந்தது. ஆனால் அவை மேலே இருந்த மரத்தில் இருந்து விழுந்தவை என்று அறிந்திருக்கவில்லை. ஒரேபோல இருக்கும் இரண்டு இலைகள் ஒரே மரத்தில் இருந்து உதிர்ந்தவை என்று அதற்கு தெரிந்திருக்கவில்லை.
அந்தக்குழந்தை தன்னை ‘நான்’ என்று உணர்ததும் அது அறிந்தவை எல்லாம் இணைந்தன. அந்த அறிதல்கள் அக்குழந்தையின் அறிதல்களாக மாறின. அக்குழந்தை அறிதலின் மையமாக ஆயிற்று.
அதற்கு முன்புவரை அறியப்படும் பொருட்கள் இருந்தன. ஆனால் அறிபவர் என எவரும் இல்லை. ஆகவே அறிவு என்பதும் இருக்கவில்லை. குழந்தை பொருட்களை அறிபவராக ஆனதுமே அதன் அறிவு என்பது உருவாகியது.அறிபவர்தான் அறிவை உருவாக்கிக்கொள்ள முடியும்.
அறிவு என்பது ஒரு பொருளைப் பற்றி முழுமையாக அறிவது. அந்த அறிதல்களைச் சேமித்துக்கொள்வது. அவ்வாறு அறிந்த அறிதல்களை ஒன்றாக இணைத்துக் கொண்டே இருப்பது. அவ்வாறாக ஒட்டுமொத்தமான அறிவை உருவாக்கிக் கொள்வது.
அறிவு என்பது ஒன்றுதான். ஆயிரம் விஷயங்களை அறிந்தாலும் எல்லாம் சேர்ந்து ஒரே அறிவுதான் உருவாகிறது.
குழந்தை ஒருபொருளின் வடிவம் என்ன என்று தெரிந்து கொண்டது. அந்தப்பொருளின் இயல்பு என்ன என்று தெரிந்துகொண்டது. அதற்கும் இன்னொரு பொருளுக்கும் இடையேயான உறவு என்ன என்று தெரிந்துகொண்டது. இந்த மூன்றும் இணைந்துதான் அதற்கு முழுமையான அறிவு உருவானது.
இலை என்பது தட்டையானது என்று தெரிந்துகொண்டது. தட்டையான இலையை வீசினால் அது மெதுவாகத்தான் விழும் என்று கண்டது. அந்த இலை மரத்தில் இருந்து விழுந்தது என்று புரிந்துகொண்டது
இவ்வாறாக அந்தக் குழந்தையின் அறிவு வளரத் தொடங்கியது. அறியத் தொடங்கியதும் இன்னும் இன்னும் அறியவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதுவரைக்கும் அது பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின் அந்த விளையாட்டு என்பது கல்வியாக மாறியது
குழந்தை அந்தக் கண்ணாடிக் குமிழிக்குள் இருந்த காட்டை ஆராயத் தொடங்கியது. ஒவ்வொரு பொருளையும் அது அறிந்தது. அதை இன்னொரு பொருளுடன் இணைத்துப் பார்த்தது. ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டது
மரங்கள் எல்லாம் பெரிய செடிகள்தான் என்று அது புரிந்துகொண்டது. பூச்சிகள் என்பவை சிறிய பறவைகள் என்று நினைத்தது. வெளிச்சமும் நிழலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை என்று அறிந்தது.
இப்படி ஒவ்வொன்றாக இணைத்து இணைத்து அந்தக்குழந்தை அந்த காட்டை தெரிந்துகொண்டது. அந்தக் காடு ஒட்டுமொத்தமாக ஒன்றுதான் என்று அறிந்தது. அதேசமயம் ஒவ்வொரு மரமும் வேறுவேறு. ஒருமரம் என்பது ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு இலையும் வேறுவேறு. அதேபோல தன் உடல் ஒன்றுதான். ஆனால் அதிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் வேறுவேறு.
இப்படி அந்தக் குழந்தை தனித்தன்மை என்பதையும் பொதுத்தன்மை என்பதையும் புரிந்துகொண்டது. ஒரு பொருளின் தனித்தன்மை என்ன என்று பார்த்தது. பிறகு அதன் பொதுத்தன்மை என்ன என்று பார்த்தது.
எல்லா இலைகளும் பச்சையாக இருந்தன. ஆனால் சில இலைகள் நீளமாக இருந்தன. சில இலைகள் வட்டமாக இருந்தன.பச்சை என்பது பொதுத்தன்மை. வேறுபட்ட வடிவம் என்பது தனித்தன்மை.
இவ்வாறு குழந்தையின் அறிவு விரிந்துகொண்டே சென்றது. கூடவே அது வளர்ந்துகொண்டும் இருந்தது. நன்றாக நடக்க ஆரம்பித்தது. அங்கே கிடைக்கும் காய்களையும் கனிகளையும் கொட்டைகளையும் சாப்பிட்டது.
அங்கே உள்ள எல்லா செடிகளுமே உணவுப்பொருட்களை அளிப்பவை. அவை மனிதர்களால் பூமியில் இருந்து தேர்வு செய்து கொண்டுவந்து வளர்க்கப்பட்டவை. ஆகவே அங்கே உணவுக்கு குறைவில்லை.
அங்கே உள்ள காற்று பதப்படுத்தப்பட்டது. ஆகவே மிகுதியான குளிரும் வெப்பமும் இல்லை. அங்கே நோயை அளிக்கும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இல்லை. ஆகவே குழந்தைக்கு நோய் வரவில்லை. எனவே அக்குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்தது
குழந்தை அங்கே உள்ள இயந்திரங்களை கவனிக்கத் தொடங்கியது. அவை என்ன என்று அதற்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றாக இழுத்தும் அழுத்தியும் சுழற்றியும் பார்த்தது. அந்த இயந்திரங்களில் இருந்த குறியீடுகளை ஒவ்வொன்றாகப் புரிந்துகொண்டு இயக்கிப் பார்த்தது.
இரண்டு விஷயங்கள் குழந்தைக்கு உதவியாக இருந்தன. ஒன்று, மனிதர்கள் பயன்படுத்தும் எல்லா குறியீட்டு அடையாளங்களும் மனிதமூளையின் இயல்பில் இருந்து வருபவை. அவற்றைப் பற்றி தெரியாத ஒருவர்கூட அவற்றை பார்த்ததும் புரிந்துகொள்ள முடியும். பார்த்ததுமே அது எதைக் குறிக்கிறது என்று தானகவே மனதில் தோன்றும்.
உதாரணமாக, > என்ற அடையாளம் இருந்தால் வலப்பக்கமாகச் செல்லவேண்டும். < இருந்தால் இடப்பக்கமாகச் செல்லவேண்டும். v என்ற அடையாளம் கீழே என்று சுட்டிக்காட்டுகிறது.^ என்ற அடையாளம் மேலே என்று சுட்டிக்காட்டுகிறது.
ஏனென்றால், மனித மூளை இடதுவலது என்று பிரிக்கப்பட்டுள்ளது. மனித மூளை கண்களுடனும் கையுடனும் இணைந்துள்ளது. கண்களும் கைகளும் செய்யும் செயல்களுக்கு ஏற்ப மூளை தன்னை அமைத்துக்கொண்டிருக்கிறது.
இரண்டாவது விஷயம். மனிதர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மூளையில் பதிவாகியிருக்கின்றன. பல தலைமுறைகளாகும்போது அவை பிறவியிலேயே வந்து விடுகின்றன. கைப்பழக்கமாகவும் கண்பழக்கமாகவும் வெளிப்படுகின்றன. நாம் கைகளால் செய்யும் பல செயல்கள் அப்படி நமக்குப் பிறவியிலேயே வரும் பழக்கங்கள்தான்
அந்த குழந்தை கருவின் உருவாகியபோது மனிதர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி பத்தாயிரம் தலைமுறைக்குமேல் ஆகியிருந்தன. ஆகவே இயந்திரங்களை இயக்கும் அறிவு மனிதமூளையில் பதிந்திருந்தது. அந்தக் குழந்தை மனிதனின் உடலில் இருந்து வந்தது. ஆகவே அதன் மூளையில் அந்த பழக்கம் பதிவ்காகியிருந்தது. அப்பழக்கம் கைகளில் வெளிப்பட்டது.
அதன் விளைவாக அக்குழந்தை இயந்திரங்களை கொஞ்சம் கொஞ்சமாக கண்டடைந்தது. பல விசைக்குமிழ்களை அது இயக்கியது. பலநாட்கள் அப்படி அது செய்துகொண்டே இருந்தது. ஒருநாள் அது அங்கிருந்த கணிப்பொறியை இயக்கிவிட்டது.
6.பெயர்
அந்த கணிப்பொறியில் குரு என்னும் மென்பொருள் [சாஃப்ட்வேர்] இருந்தது. கணிப்பொறியின் இயந்திரம் வன்பொருள் [ஹார்ட்வேர்] எனப்படுகிறது. அதை இயக்கும் திட்டம்தான் மென்பொருள். அது அந்த இயந்திரத்திலேயே பதிவாகியிருக்கும். அதை செயலி என்பதும் உண்டு. ஏனென்றால் அதுதான் செயலை செய்யவைக்கிறது
அந்த மென்பொருள் மனிதர்களால் பலநூறாண்டுகளாக படிப்படியாக வளர்த்து எடுக்கப்பட்ட ஒன்று. குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக அது உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை எவர் உதவியும் இல்லாமலேயே கற்றுக்கொள்ள அந்த மென்பொருள் உதவியது
ஒரு குழந்தை அந்த கணிப்பொறியின் ஏதேனும் ஒரு பகுதியை திறந்துவிட்டால் உடனே அதுவும் ஓடத்தொடங்கிவிடும். அக்குழந்தையின் கைரேகை, கண்ரேகை ஆகியவற்றை அது படம்பிடிக்கும். அதைக்கொண்டு அந்தக்குழந்தை அங்கே உள்ளது மனிதக்குழந்தைதானா என்று அடையாளம் காணும்.
குரு என்ற மென்பொருள் அதன்பின் அந்தக் குழந்தையின் மரபணுவை எடுத்து சோதிக்கும். அந்தக்குழந்தை சரியான குழந்தையா என்று பார்க்கும். அதன்பின் அதை ஏற்றுக்கொள்ளும். அதற்கு தானாகவே கற்பிக்க ஆரம்பிக்கும்.
அந்தக்குழந்தை செய்யும் தவறுகளைக்கொண்டே அதற்கு எவ்வளவு தெரியும் என்று குரு அறிந்துகொள்ளும். அதற்கு கற்பிக்கவேண்டியவை என்ன என்று அதுவே முடிவுசெய்யும். அந்தக்குழந்தை கற்குந்தோறும் குரு தன் பயிற்சியை கூட்டிக்கொண்டே இருக்கும்
குரு ஒரு குழந்தையை அடையாளம் கண்டுகொண்டால் போதும். அதன்பின் அக்குழந்தை தன் கல்வியை எவ்வளவு வேண்டுமென்றாலும் வளர்க்கலாம். வாழ்க்கை முழுக்க அது கூடவே இருக்கும். எல்லாவற்றையும் கற்றுத்தரும்.
குரு கணிப்பொறியின் திரையில் மனித வடிவில் தோன்றியது. ஒரு வயதான பாட்டியின் தோற்றத்தில் அது இருந்தது. குழந்தையை கொஞ்சம் கண்டிக்க வேண்டும் என்றால் அது தாத்தாவின் தோற்றத்தை அடைந்தது.
குரு முதலில் குழந்தையிடம் சைகைமொழியால் பேசியது. மனிதர்கள் பூமியை விட்டு விண்வெளியில் பயணம் செய்ய ஆரம்பித்ததுமே அந்த சைகைமொழியை உருவாக்கினார்கள். வேற்றுக்கோள்களில் வாழும் உயிர்களைச் சந்தித்தால் பேசுவதற்காக அதை உருவாக்கினார்கள்.
கண்ணசைவுகள் கையசைவுகள், முகபாவனைகள் ஆகியவற்றால் ஆன மொழி அது. மனிதமூளையைப் போன்ற மூளை கொண்ட வேற்றுக்கோள் உயிர்கள் அந்த மொழியை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்
அந்த மொழியை குழந்தை புரிந்துகொண்டது. குரு அதை பயன்படுத்தி குழந்தையிடம் அந்த கணிப்பொறியை இயக்கும் விதத்தை சொல்லிக்கொடுத்தது. குழந்தை கணிப்பொறியை இயக்க ஆரம்பித்தது. பலநூறு தலைமுறைகளாக கணிப்பொறியை பயன்படுத்திய பழக்கம் அதன் மூளையில் இருந்தது. அதுவும் குழந்தைக்கு உதவியது.
குரு குழந்தைக்கு கணிப்பொறியில் சேமிக்கப்பட்டிருந்த மனித அறிவை கொஞ்சம் கொஞ்சமாக அளிக்க ஆரம்பித்தது. குழந்தை கற்கும்தோறும் மேலும் கற்பித்தது.
அறிவின் இயல்பு ஒன்று உண்டு. நமக்கு முதலில் ஒரு சிறு அறிவு கிடைக்கிறது அதைக் கருவியாகப் பயன்படுத்தி மேலும் அறிகிறோம். அறிந்தவற்றை கருவியாக பயன்படுத்திக்கொண்டு மேலும் அறிகிறோம். நாம் அறிபவை கூடிச்செல்லுந்தோறும் நாம் அறியும் வேகமும் கூடி வருகிறது
ஒருவர் ஒரு குழி தோண்டவேண்டும். அங்கே ஒரு குச்சி கிடைக்கிறது. அதைக் கொண்டு தோண்டுகிறார். மண்ணுக்குள் ஒரு சிறிய கரண்டி கிடைக்கிறது. அதன்பின் அந்தக் கரண்டியால் தோண்டுகிறார். ஆழத்திலிருந்து ஒரு மண்வெட்டி கிடைக்கிறது. அதன்பின் மண்வெட்டியால் தோண்டுகிறார். அடியிலிருந்து மண்ணை அள்ளும் ஒரு இயந்திரம் கிடைக்கிறது. அதைக்கொண்டு மேலும் தோண்டுகிறார்.
மனித அறிவும் இப்படித்தான் வளர்கிறது. நமக்கு இதுவரை தெரிந்தது இனிமேல் தெரிந்துகொள்வதற்கு பயன்படுகிறது. மேலும் தெரிந்துகொண்டபின் அதைக்கொண்டு அடுத்ததை தெரிந்துகொள்கிறோம்.
குழந்தை கணிப்பொறியின் செய்திகளை தெரிந்துகொள்ளும் தோறும் அதற்கு கணிப்பொறி என்பது எளிதாக மாறியது. ஒரு கட்டத்தில் அதற்கு கணிப்பொறி மிக நன்றாக பழகிவிட்டது
அந்தக் கணிப்பொறியில் மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்திருந்தார்கள். மனிதர்கள் அதுவரை பேசிய மொழிகள் எல்லாம் அதில் இருந்தன. மனிதர்களின் அதுவரையிலான வரலாறு முழுக்க அங்கே இருந்தது. மனிதர்களின் உணவு, உடை, நகைகள், வீடுகள் உறவுகள் எல்லாமே அங்கே பதிவு செய்யப்பட்டிருந்தன.
குரு குழந்தைக்கு கற்பித்துக்கொண்டே இருந்தது. முதலில் மொழிகளை கற்பித்தது. குழந்தை மிக விரைவாக மொழியை கற்றுக்கொண்டது. ஏனென்றால் மனித மொழி என்பது மனிதனின் மூளையின் நரம்பு அமைப்பை ஒட்டியே உருவாகிய ஒன்று. எழுவாய் பயனிலை போன்றவற்றின் அடிப்படைகள் மனித மூளையில்தான் உள்ளன.
ஆகவேதான் மனிதமொழிகள் எல்லாமே ஒரே அமைப்பு கொண்டவையாக உள்ளன. வார்த்தைகள்தான் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன. இலக்கணம் ஏறத்தாழ ஒன்றுதான். சொற்களுக்கு அர்த்தம் எடுத்துக்கொள்வதும் ஏறத்தாழ ஒரேபோலத்தான். ஒருமொழியில் இருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்ப்பு செய்யமுடிவதும் அதனால்தான்
குழந்தை அங்கிருந்த மனிதர்கள் கடைசியாகப் பேசிய மொழியைக் கற்றுக்கொண்டது. அந்த மொழி பூமியில் புழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதில் எல்லா மொழிகளின் நல்ல சொற்களும் இருந்தன
குழந்தை அந்த மொழியிலிருந்து பழைய மொழிகளை கற்றுக்கொண்டது. ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளை அது கற்றுக்கொண்டது.
குழந்தை அந்த மொழிகளை எல்லாம் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டது. குரு அவளிடம் அவள் விரும்பும் மொழியில் பேசியது. குரு அவளுடைய கண்களின் அசைவைக்கொண்டே அவளுடைய பெரும்பாலான எண்ணங்களை புரிந்துகொண்டது. அவள் எந்த மொழியில் பேச விரும்புகிறாள் என்றுகூட கண்மணிகளின் அசைவிலிருந்து குரு புரிந்துகொண்டது
குழந்தை வாழ்க்கையின் அடிப்படைகளை மொழி வழியாகவே கற்றுக்கொண்டது. ஏனென்றால் பண்பாடு என்பது மொழியில்தான் உள்ளது. அந்த கணிப்பொறியில் ஒவ்வொன்றுக்கும் படங்களும் இருந்தன. அசையும்படங்களும் இருந்தன.
குழந்தை தான் ஒரு மனிதக்குழந்தை என்று அப்போதுதான் புரிந்துகொண்டது. பிரபஞ்சவெளியில் பலகோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சூரியன் என்ற நட்சத்திரத்தைப் பற்றி அறிந்தது. அதன் ஒன்பது கோள்களில் ஒன்றுதான் பூமி என்பது.
பூமியில் பலவகையான செடிகளும் உயிரினங்களும் இருந்தன.அந்த உயிரினங்களில் ஒன்றுதான் மனிதன். பல லட்சம் ஆண்டுகளாக அவன் பரிணாமம் அடைந்து உருவாகி வந்தான். அவன் பூமியையே ஆட்சி செய்தான்.
மனிதனின் கைகளும் கண்களும் ஆற்றல் மிக்கவை. அவன் மூளை பெரியது. கைகளும் கண்களும் மூளையுடன் சரியாக இணைந்துகொண்டன. அவன் மற்றவிலங்குகளை விட ஆற்றல் மிகுந்தவன் ஆனான்.
அவன் மற்றவிலங்குகளை அடிமையாக்கினான். பெரிய சமூகங்களாக மாறினான். அவன் அரசுகளை அமைத்தான். பெரிய நகரங்களை உருவாக்கிக்கொண்டான். பூமியில் உள்ள நீர், உணவு ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டான்
மனிதன் பூமியில் உள்ள ஆற்றல்களை பயன்படுத்திக்கொண்டான். தீயை கண்டுபிடித்தான். நீரின் விசையை கண்டுபிடித்தான். சக்கரத்தை கண்டுபிடித்தான். மின்சாரம் கண்டுபிடித்தான். இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டான்
அவன் விண்வெளியில் பறந்தான். சூரியனின் வட்டத்தை விட்டு வெளியே வேறு கோள்களுக்குச் சென்றன. அங்கேதான் அவன் அந்த சூரியனைக் கண்டுபிடித்தான். அந்தச் சூரியனை மஞ்சள்குள்ளன் என்று அழைத்தான். அந்த சிறிய கோளுக்கு தங்கத்துளி என்று பெயரிட்டான்.
ஏனென்றால் அந்த கோள் கந்தகத்தால் ஆனது. கந்தகம் மஞ்சள்நிறமானது. விண்வெளியில் இருந்து பார்க்கையில் அந்த கோள் தங்கத்துளி போல மின்னியது.
மனிதர்கள்தான் தங்கத்துளி என்ற கோளில் அந்தக் கண்ணாடிக் குமிழுயை அமைத்தவர்கள். உள்ளே அவர்கள் இயந்திரங்களை அமைத்தார்கள். அந்த சிறிய காட்டை அங்கே உருவாக்கியது அவர்கள்தான்.
குழந்தை எண்களையும் காலக்கணக்கையும் தெரிந்துகொண்டது. மனிதர்கள் அங்கே அந்த கண்ணாடிக் குமிழியை விட்டுப்போய் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.
பூமி மிகமிகத் தொலைவில் இருந்தது. அந்த கோளைச் சுற்றி பலகோடி கிலோமீட்டர் தொலைவுக்கு உயிர்கள் வாழும் கோள்களே இல்லை. ஆகவே அவர்களைப் பார்க்கவே வாய்ப்பில்லை.
குழந்தை படங்களில் தன்னைப் போன்ற குழந்தைகளைப் பார்த்தது. அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவதைப் பார்த்தது. பலவகையான விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தது
மனிதர்களின் ஆண், பெண் என இரண்டு வகை உண்டு என்று குழந்தை அறிந்தது. தான் ஒரு பெண் என்று தெரிந்துகொண்டது. மனிதர்களுக்கு பெயர்கள் வேண்டும் என்று அறிந்தது. பெண்களுக்கான பெயர்களை குழந்தை தேடியது. பலபெயர்களை அது யோசித்துப் பார்த்தது.
எல்லா பெயருக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. அல்லது ஏதாவது நோக்கம் இருந்தது. பெயர் வழியாக ஒருவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. எந்த குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. பெயர்கள் வழியாக ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபட்டனர்.
ஆனால் தான் எந்த இடத்தையும் சேர்ந்தவள் அல்ல. எந்த குழுவிலும் இல்லை. எவரிடமிருந்தும் வேறுபட்டு தெரியவேண்டிய தேவையும் இல்லை. அப்படியென்றால் என்ன பெயர் சரியாக இருக்கும்?
குழந்தை யோசித்துப் பார்த்தது. பெயர் என்றால் சம்ஸ்கிருதத்தில் நாமம். ஆங்கிலத்தில் அச்சொல் கொஞ்சம் மாறுபட்டு நேம் என இருந்தது. பிராகிருதத்தில் அது தலைகீழாக மாறி மந என்று ஆகியது.தமிழிலும் நாம் என்றால் தங்களைக் குறிக்கும்.
அந்த வார்த்தை குழந்தைக்கு பிடித்திருந்தது.அது தனக்கு நாமி என்று பெயர் சூட்டிக்கொண்டது. பெயர்கொண்டவள் என்று அதற்குப் பொருள். தானே ஆனவள் என்றும் பொருள் சொல்லலாம்.
அவ்வாறாக அந்தப் பெண்குழந்தை நாமி என்று பெயர்கொண்டாள். நாமி அந்த தன்னந்தனிமையான கோளில் தன்னந்தனியாக இருந்தாள்.
[மேலும்]
நாம் சாம்ஸ்கி
மொழி என்பது மனித மூளையின் அமைப்பை ஒட்டியே உள்ளது. மனிதனின் மூளையின் நரம்பமைப்பே மொழியில் இலக்கணமாக உள்ளத்து. இதை உயிரியல்மொழி என்று சொல்கிறார்கள். மனிதனின் மொழி என்பது அவன் பழகி கற்றுக்கொண்ட ஒன்று அல்ல. அவனுடைய மூளையின் இயல்பால் அவனிடம் உருவாகி வந்தது. ஆகவே உலகம் முழுக்க மனிதமொழியின் அடிப்படை இலக்க்ணம் ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையின் முதன்மையான சிந்தனையாளர் நாம் சாம்ஸ்கி.