அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
‘தன்னம்பிக்கை நூல்கள்’ கடிதக்கட்டுரையின் முகப்பாக எம்.எஸ்.உதயமூர்த்தியின் புகைப்படத்தை உங்கள் வலைதளத்தில் கண்டவுடனேயே எனக்கு அவ்வளவு நிறைவும் மகிழ்வும் மனதுக்குள் தோன்றியது. ஆனாலும், ஒரு சிறு அச்சம் இருந்துகொண்டே இருந்தது, ஏதேனும் எதிர்மறையான விமரிசனமாக இருக்குமோ என. அவரின்மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிரான கருத்தாக இருந்துவிடக்கூடாது என்ற சிறுவேண்டுதலுடன்தான் அந்த இணைப்பைச் சொடுக்கினேன். வாசிக்கத் தொடங்கி மெல்ல உள்ளே செல்லச்செல்ல என் அச்சங்கள் பொய்த்தது. தன்மீட்சி புத்தகம் சென்றுசேர்ந்த முத்துராஜாவின் தன்னனுபவக்கடிதமும், அதற்கு நீங்கள் அளித்திருந்த நீண்டபதிலும் அன்றைய நாளுக்கான ஆசியாகவே என்னை வந்தடைந்தன.
தற்காலத்திய படைப்புச்சூழலில் (மூர்க்கமான பின்நவீனத்துவப் பார்வையில்) இவ்வகையான ‘தன்னம்பிக்கை நூல்கள்’ குறித்தான ஒரு கேலித்தொனி இயல்பாகவே உரையாடலில் வெளிப்படுவதை ஒவ்வொரு நிலையிலும் உணரமுடிகிறது. அதை முற்றாகப் புறந்தள்ளவதை மேட்டிமைக்கான அடையாளமாக சமகாலப் புதியவர்கள் வார்த்துக்கொள்வதை வெகு சாதாரணமாகப் பார்க்கலாம். ஆனால், உங்கள் பதிலிலிருந்த ஒரு ஆழம் (கிட்டத்தட்ட அது ஒரு ஏற்பின் புன்னகை) என்னை உண்மையிலேயே வியப்பிலாழ்த்தியது. “அது எப்படி இந்த மனிதரால் மட்டும் நம் எல்லா கேள்விகளுக்குமான பதில்நுனியைத் தந்துவிட முடிகிறது?” என்று எண்ணம் உருவாவது தற்போதெல்லாம் எனக்குள் மீளமீள நிகழ்கிறது. உள்ளுணர்வாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றினை சொல்லுணர்வில் வெளிப்படுத்தும் ஒரு படைப்பாளரின் எழுத்துக்கரம் வழியாக நமதுள்ளம் அடைவதென்ன?
ஒவ்வொரு சொல்லும் உங்களை நோக்கி இன்னும் நெருக்கமாகத்தான் எங்களை அழைத்துவருகிறது. ‘இது எனக்கான சொல்! இது எனக்கான சொல்!’ என மனம் உரிமைகொண்டாடும் ஒற்றைச்சொல்லையாவது தினமும் உங்கள் வலைதளம் வழங்கிவிடுகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த தேர்க்கால்கள் சாலையுருள்கையில், வீதிமனிதனின் கண்களடைகிற சொல்லிலா அகநிலையது. எம்.எஸ் உதயமூர்த்தி என் வாழ்வில் மறக்கமுடியாத ஆசான்களில் ஒருவர். அவரோடு நேரிலுரையாடி அகம்நிறைத்த நாட்களை நான் இக்கணம் நினைத்துக் கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைகள் எனக்கு அவரின் இருப்புக்காலத்தை ஞாபகப்படுத்திவிட்டது.
ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முறையாக என் அம்மா என்னிடம் ஒரு புத்தகத்தைக் காட்டினார். அந்தப் புத்தகத்தைக் காட்டி, “ராஜ்ஜு… இந்தப் புத்தகத்த படிச்சுதான் மாமா குடிக்கிறதில்ல. வேற எந்த கெட்டப்பழக்கமும் அவருக்கு இல்லாததுக்கு காரணம் இதான்” என்று சொன்னார். எங்கள் எல்லோரையும் வளர்த்தெடுத்து ஆளாக்கியது எங்கள் மாமாதான். ஆனால் அச்சமயத்தில் அப்பாவுடைய குடிப்பழக்கம் மிகவும் அளவுகடந்திருந்தது. அப்படியான சூழ்நிலையில் எல்லாம் அம்மா அந்தவொரு குறிப்பிட்ட புத்தகத்தைச்சுட்டி, மாமா குடிக்காமலிருப்பதற்குக் காரணம் அப்புத்தகம்தான் எனச் சொல்வதுண்டு. அந்தச் சிறுவயதில் அது என்னுள் மிக ஆழமாக மனதில் வேரூன்றியது, அல்லது என் அம்மா அதை என்னில் வேரூன்றச் செய்தார். அந்தப்புத்தகம் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ புத்தகம்!
அதன்பின் காலங்கள் மெல்ல நகர்ந்தோட, நான் ஆறாம்வகுப்பு படிக்கையில் ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அந்தப்படத்தின் கதாநாயகன் பெயரும் ‘உதயமூர்த்தி’ என்பதாகவே இருந்தது. அப்படத்தில் வருகிற மரம்நடும் தாத்தா, நாயகனின் அப்பாவுடைய நடவடிக்கைகள் கடைசிக்காட்சியில் நாயகன் விருது பெறுவது என பெரும்பான்மையான காட்சிகள் என் வாழ்வோடு நெருங்கிய தொடர்பிருப்பதாக என் மனதுக்குப்பட்டது. ஒரு கனவுபோல அப்படம் எனக்குள் நெருக்கமானது.
எட்டாம்வகுப்பு முழுஆண்டு விடுமுறையில், முதன்முறையாக ‘எண்ணங்கள்’ புத்தகத்தை நான் வாசித்தேன். அப்புத்தகம் எனக்குள் மிகப்பெரிய நம்பிக்கையாக மாறியது. தாழ்வுணர்ச்சியிலிருந்து மீட்டெடுக்கும் ஏதோவொரு சக்தி அப்புத்தகத்தின் சொற்களுக்குள் வாசிப்பின்வழி ரசவாதமடைகிறது என நான் நம்பினேன். காரணம், அந்தக் காலகட்டத்தில் என் குடும்பச்சூழல் மிக நெருக்கடியானதாக இருந்தது. குடும்பத்துக்கு உள்ளிருந்து நம்பிக்கையைப் பெறுவதற்கான முகாந்திரங்களை நான் அப்போது கண்டடையவில்லை. ஆகவே, ‘எண்ணங்கள்’ புத்தகத்தின் வரிகளை நானென் இருதயத்துக்குள் இறக்கி நம்பிக்கை அடைந்துகொண்டேன்.
ஒருவருட காலம் கழித்து, அப்புத்தகத்தில் இருந்த உதயமூர்த்தியின் முகவரிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். திரும்பத் திரும்ப படிக்கும் புத்தகமென்பதால் அது என்னை கடிதமெழுத உந்தித்தள்ளியது. பத்திருபது நாட்கள் கழித்து, ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற பெயரில் சிறிய முரசு ஒன்று ஒலிக்கும் சின்னத்தோடு ஒரு இலச்சினை அச்சான கடிதஉறை என் வீட்டு முகவரிக்கு வந்தது. நண்பர்களிடமிருந்து வழக்கமாக கடித அட்டையாகவோ அல்லது இன்லேன்ட் லெட்டராகவோதான் அக்காலத்தில் தபால்கள் வருவது வழக்கம். ஆனால், முதன்முறையாக இலச்சினையுடன் கூடிய ஒரு கடித உறைக்குள் ‘லெட்டர் பேடில்’ எனது பெயரிட்டு எழுதிய ஒரு கடிதம் எனக்கு வந்துசேர்ந்தது. எம்.எஸ். உதயமூர்த்தி எனக்கு எழுதிய பதில்கடிதம் அது! அக்கடிதமும், அவர் அதில் எழுதியிருந்த வார்த்தைகளும், கீழே இட்டிருந்த அவருடைய கையொப்பமும் எக்காலத்திலும் மறக்க இயலாதவை.
கடிதத்தின் முடிவில் ‘சகபயணி’ என்றெழுதி கையொப்பமிட்டிருந்தார். அந்த வயதில் எனக்கு அது பெரும் தரிசன வார்த்தைகளாகவே இருந்தது.அக்கடித்ததை எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்பது எனக்கே நினைவிலில்லை. நண்பர்களிடமும், என்னுடைய பிசிக்ஸ் மாஸ்டரிடமும், நான் பார்த்த எல்லோரிடத்திலும் அக்கடிதத்தை கொண்டுசென்று காட்டிக்கொண்டிருந்தேன். அதன்பின் பதினொன்றாவது படித்துவந்த சமயம். வாலிபத்தில் நுழைந்திருந்த காலச்சூழலில், மனதுக்குள் ஏராளமான கேள்விகள் தோன்றத் துவங்கியது. கடவுள்சார்ந்து, வாழ்வுசார்ந்து, இருப்புசார்ந்து, இதுவரையிலான அறிதல்களில் உருவாகும் முரண்சார்ந்து… இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மனதுக்குள் படையெடுத்தது.
படிப்பிலும் பெரிதாக நாட்டமில்லாமல் கவிதை, கட்டுரை என்று வேறொன்றில் விருப்பம்வைத்து சுற்றியலைந்த காலகட்டமது. அப்படியான சூழலில் ஒருநாள் சென்னையில் ஒரு நிகழ்வினில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். ஆனால், எதிர்பாரதவிதமாக அந்நிகழ்ச்சி ரத்தாகிவிட்டது. உடனே முடிவெடுத்து, உதயமூர்த்தி அவர்களைச் சந்திக்கப் போனேன். ’17A, சவுத் அவென்யூ, திருவான்மியூர், சென்னை’ என்ற முகவரி கடிதங்களெழுதியே மனனம் ஆகியிருந்தது. அவரது அலுவலகத்துக்குச் சென்று காத்திருந்தேன். காலை 10.30 மணிவாக்கில் உதயமூர்த்தி வந்தார். என்னை அறைக்குள் அழைத்தார். பெரும் பரவசத்துடன் அவர் வீட்டுக்குள்சென்று அவரிடம் பேச ஆரம்பித்தேன். அன்றைய நாளும், அங்குநிகழ்ந்த உரையாடலும் ஈரமுலராமல் இன்றளவும் நெஞ்சிலுள்ளது.
பேசிக்கொண்டிருக்கையில் அவர், “பெரியாளாகி நீங்க என்னவாகப் போறீங்க? உங்க கனவு என்ன?” என்றவாறு சில கேள்விகள் கேட்டார். நான் அந்த வயதிற்கேயுரிய ஆர்வக்கோளாறுடன் “நான் இராணுவத்துல சேரலாம்னு இருக்கேன். நாட்டுக்கு ஏதாச்சும் பண்ணனும்” என்றேன். அவர் மிகப் பொறுமையாக, “துப்பாக்கியால நன்மை நடக்குமா? அது சமாதானத்த உருவாக்குமா?” என ஏதேதோ ஆழமான கேள்விகளைத் திரும்பவும் கேட்டார். திக்கித்திக்கி நான் அவரிடம் ஏதேதோ சொன்னேன்.
ஆனால், அந்தச் சந்திப்பு என்னை வேறொரு ஆளாக மாற்றியது. எல்லாவற்றையும் இன்னொரு கண்ணோட்டத்தில் காண்பதற்கான பெருந்திறவு அன்று அவரவீட்டில் நிகழ்ந்த உரையாடலால் உண்டானது. பேசிமுடித்தபின் அவர் சில புத்தகங்களும், ‘எண்ணங்கள்’ ஆடியோ கேசட்டும் என் கையில் கொடுத்தனுப்பினார். அவைகளைப் பெற்றுக்கொண்டு நான் ஊர்வந்து சேர்ந்தேன். வீட்டுக்குவந்து அந்த ஆடியோ கேசட்டை மீண்டும் மீண்டும் ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அன்று நான் கேட்ட அந்தக்குரல்…. இப்போது குக்கூ பதிவேற்றியிருக்கிற இதே குரல்தான்.
எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் ‘மக்கள் சக்தி இயக்கம்’ பரவலாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம் அது, 1990களின்வாக்கில். பெருந்துறையில் அவருடைய இயக்கம் பொதுத்தேர்தலில் நின்றது. எனது அப்புச்சி, மாமா எல்லோரும் தேர்தலுக்காகப் உடனிருந்து பணியாற்றினார்கள். அப்புச்சி நடத்திவந்த கடைக்கு, அந்தச்சமயத்தில் உதயமூர்த்தி வந்திருந்து இரண்டு மூன்று மணிநேரம் அவர்கூடவே இருந்தார். அப்புச்சியின் கடையைப் பார்த்து, “இவ்ளோ மெயின் ஏரியாவுல இருந்தும், ஒரு பீடி சிகரெட் விக்காத பெட்டிக்கடை தமிழ்நாட்டுல இதுவாத்தான் இருக்கும். நான் இப்பத்தான் இப்படியொரு கடைய பாக்குறேன்” எனச்சொல்லி மகிழ்ச்சியாகச் சிலமணி நேரங்கள் உரையாடிவிட்டுச் சென்றார்.
ஈரோடு மற்றும் சென்னிமலைப் பகுதிகளில் ‘மக்கள் சக்தி இயக்கத்தினர்’ மிகுந்த தீவிரமாக நிறைய களப்பணிகளை முன்னெடுத்தனர். அத்திக்கடவு – அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்குப் பரவலாக களப்பணிகளில் செயலாற்றியது ‘மக்கள் சக்தி இயக்கம்’ தான். ஈரோட்டில் சிறிய அளவில் துவங்கப்பட்டு, இன்று பெரும் நிறுவனங்களாக மாறிநிற்கிற ‘சக்தி மசாலா’ சாந்தி துரைசாமி மற்றும் ‘கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ நவனீத கிருஷ்ணன் உள்ளிட்ட ஆளுமைகள் நிறையப்பேர், ஆனந்தவிகடன் இதழில் ‘சிந்தனை தொழில் செல்வம்’ என்ற தலைப்பில் உதயமூர்த்தி எழுதிய தொடரைப் படித்து மனவூக்கம் பெற்றெழுந்தவர்கள். தங்கள் தொழிலில் மானசீகமான ஒரு பங்குதாரர் என்றே அவர்கள் உதயமூர்த்தியை கருதிக்கொண்டதாக, ஏதோவொரு நிகழ்ச்சியில் சொல்லி அவர்கள் நன்றிபகிர்ந்தது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
இந்தப் பேச்சை நான் கணக்கற்றமுறை கேட்டிருக்கிறேன். கேட்டதோடு மட்டுமில்லாமல் நண்பர்களுக்கும் இதன் ஆடியோ கேசட்டை வாங்கி அனுப்பியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் இந்தக் குரலொலிப்பைக் கேட்டுகேட்டு நானும் நண்பர்களும் மீண்டிருக்கிறோம். ‘தன்னம்பிக்கை பயிலரங்கம்’ என்றாலே அது, MLM வகைமாதிரியான பேச்சுத்தூண்டலாக மாறிப்போயிருக்கும் இச்சூழ்நிலையில், அத்தகைய எதிர்மறைத்தன்மையோ ஆட்சேர்ப்புமுறைகளோ எதுவுமின்றி, வாழ்வுசார்ந்த அறத்தோடு, அறத்தின் மையத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு மேலும் நம்பிக்கையடைந்து கனவுநோக்கி செல்வதற்கான அகப்பிடிப்பைத் தருவதாகவே இவ்வுரை உள்ளது. வாழ்வறத்தை அணுகுவதற்கான தைரியத்தை விதைத்து, நம் நம்பிக்கையினை ஊன்றி கனவினை அடைய பயணிக்கச் செய்வதாகவே உதயமூர்த்தியின் சொற்கள் என்றுமிருக்கிறது.
சினிமா ஆசையோடு சென்னையில் சுற்றியலைந்துவந்த காலகட்டத்தில், ஒருமுறை அவரைப் பார்க்க அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் முகம்நிறைந்த வாஞ்சையோடு, “தங்குறதுக்கு சிரமமா இருந்தா, இங்ககூட தங்கிக்கங்க… இங்க பக்கத்துல ஹோட்டல் இருக்கு… அங்க நீங்க சாப்டுக்கங்க… இங்கயிருந்தே நீங்க முயற்சி பண்ணுங்க” என்று அவர் ஆதரவுவார்த்தைகள் சொன்னார். ஒருவன் அவன் கனவினை அடைவதற்கான தடைகளைத் தன்னால் முடிந்தளவு நீக்கித்தருவதிலேயே அவருடைய மொத்த கவனமும் கனிவும் இருக்கும்.
சமகாலத்தில் பரவலாக விற்பனையாகிற மற்றும் நிறைய மக்களிடம் போய்ச்சேர்கிற ‘இரகசியம் (Secret)’ மற்றும் செந்தமிழனின் ‘வேட்டல்’ உள்ளிட்ட புத்தகங்களுக்கான முதற்துவக்கமும் மூலப்புத்தகமும் உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ தான்!
உதயமூர்த்தி உருவாக்கிய சாட்சிமனிதர்களை என் வாழ்வில் நான் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன், உள்ளாட்சி நல்லாட்சி நந்தகுமார் உள்ளிட்ட பல மனிதர்கள் உதயமூர்த்தியின் வார்த்தைகளால் வளர்ந்தெழுந்தவர்களாகவும், அவருடைய தாக்கத்தினால் வாழ்வுத்தடத்தை மாற்றிக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எத்தனையோ மனித முகங்கள் ஒன்றடுத்தொன்றென எனக்குள் ஞாபகம் வந்துபோகிறது.
வாழ்வுச்சுழலின் எல்லா கட்டங்களையும் தாண்டி, குக்கூ நிலத்திற்கு வந்தடைந்து, அங்கு காட்டுப்பள்ளிக்கான பணிகளைத் துவங்கியிருந்த நேரமது. இங்குள்ள ‘தீர்த்தகிரி வலசை ஏரி’ என்னும் ஏரிக்கரைக்குப் பக்கத்தில் ஒரு உணவகம் இருந்துவந்தது. அந்த உணவகத்திற்குள் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பழஞ்சித்தர்கள் புகைப்படங்களை மாட்டி அதற்கு தீபமிட்டிருந்தார்கள். ஒருநாள், நானும் நண்பர்கள் நான்கைந்து பேரும் அந்த உணவகத்திற்கு சென்றிருந்தோம். உண்டுமுடித்து தொகை நீட்டுகையில், அந்த உணவக உரிமையாளர், “இல்லைங்க… சாப்பாட்டுக்கு காசு வேணாம்” என்றார். “ஏங்கய்யா?” என்ற நாங்கள் திரும்பிக் கேட்டபொழுது அவர், “இன்னைக்கு எங்க மானசீகமான குருவுக்கு நினைவுநாள்! வருசாவருசம் இந்த நாள் இங்க சாப்டுற யாருகிட்டயும் காசு வாங்கமாட்டோம்” என்றார். ஏதோ ஆன்மீக சாமியாராக இருப்பார் போல என நினைத்து அவரிடம் “அந்த குரு பேருங்க?” என்றபோது, “எம்.எஸ்.உதயமூர்த்தி” எனச்சொன்னார்.
இக்கணம்வரை… எங்கோயிருக்கிற யாரோ ஒருவருக்கு, வாழ்வின்மீது நம்பிக்கையையும் கரிசனத்தையும் வழிதொடரச் செய்வதாகவே உதயமூர்த்தியின் சொல்லிருப்பு இருந்துவருகிறது.
(அய்யா எம்.எஸ்.உதயமூர்த்தியின் 40நிமிட தன்னம்பிக்கை உரையின் குரல்பதிவை இக்கடிதத்தோடு இணைத்துள்ளேன்)
***
தன்னம்பிக்கை நூல்களை எழுதுகிற, அதுகுறித்துப் பேசுகிற மூத்தமனிதர்களை வெறும் MLM (Multi-Level Marketing) ஆட்களைப்போன்ற தொனியில் எதிர்கொள்கிற இந்த அசட்டைக்காலத்தில், உங்களுடைய இந்த ‘பார்வைக்கோணம்’ எனக்கு மிகமுக்கியமாகப்படுகிறது. முன்னவர்களின் பேருழைப்பை மீள்கொணர்ந்துச் சொல்ல ஒரு ஆசிரியக்குரல் இங்கு அவசியமாகிறது. அத்தகைய குரல்களில் உங்களுடையது முதன்மையானது என நான் கருதுகிறேன். அவர்களின் சொல்லில் இலக்கிய ஆழம் இல்லாமலிருக்கும், ஆனால் இருதயத்தின் ஆழத்தைத்தொட அச்சொல்லுக்குத் தெரிந்திருக்கிறது. மொழியின் வீச்சுக்கு ஏற்ப கூர்மைகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் ஒரு கைப்பிடியின் வழவழப்பு அதிலிருக்கிறது. அது தரிசனத்தைக் காட்டாமல் போகலாம், ஆனால் ஒரு தருணத்தை திறந்துபார்க்கக் கற்றுத்தருகிறது.
அண்மையில், நீங்கள் தொடர்ச்சியாக எழுதிவரும் ‘ஞானி’ கட்டுரைவரிசையை வாசித்துவருகிறோம். உங்களுக்கும் அவருக்குமான உறவு எத்தகையதொரு உரையாடல் உறவாக காலந்தொட்டு வளர்ந்து வந்திருக்கிறது. ஏனோ தெரியவில்லை, இளையவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடைய மூத்தோர்கள், அப்பண்பினாலேயே ஒருபடி தனித்துயர்ந்து தெரிகிறார்கள். ஞானி அத்தகைய மூத்தாசான்! எங்களைப் பொறுத்தவரையில் அந்த தொடர்கட்டுரைகள் அனைத்துமே ‘தன்மீட்சிக்கு’ நிகரான தன்னுணர்வுத் தருணங்களை வாசிப்புமனதுக்குள் உண்டாக்குகிறது. ஒரு புத்தகத்திற்கான மையத்தரிசனமாக அக்கட்டுரைகள் விரைவில் அச்சேறட்டும்! ஒவ்வொரு கட்டுரையை வாசித்து முடித்தபின்னும், அதில் மனமீர்த்த பத்திகள் மற்றும் கருத்தாழம் குறித்து ஒவ்வொரு இரவிலும் நண்பர்கள் உரையாடிக் கொள்கிறோம். இரு ஆசிரியர்கள் பேசிக்கொள்வதை மெளனமாகக் கேட்பதில் எப்போதும் ஒரு ஆவல் இருக்கத்தான் செய்கிறது.
எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற மூத்தாசன்களின் நல்லிருப்பும் நல்லூழும் உங்களுடன் எப்பொழுதும் உறுதுணையாக உடனிருக்கட்டும்! ‘சொற்களின் இசைவுமூலம் படிமங்களின் இசைவு உருவாகிறது. படிமங்களின் மாறும்தன்மை காரணமாக முடிவற்ற சாத்தியங்கள் பிறக்கின்றன” என்ற நித்ய சைதன்ய யதியின் வரிகளை நெஞ்சுள் சொல்லிக்கொண்டு, முடிவிலிச்சாத்தியங்களை படைப்புவெளியில் உருவாக்கும் உங்கள் மனதின் உறங்காக்குழந்தை நீளாயுள் பெறுக!
இப்படிக்கு,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி