ஞானி,எஸ்.ரா -அவதூறு பற்றி…

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

எஸ்.ராமகிருஷ்ணன் இந்தப் பதிவை அவருடைய தளத்தில் எழுதியிருந்ததைக் கண்டேன்[  https://www.sramakrishnan.com/?p=11150]

இதை அவர் தனிப்பட்ட கடிதமாகவும் எழுதியிருந்தார். அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன்.

அன்புள்ள ராமகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் வெளிவந்தபோது நீங்கள் பேசியதும் அதற்கு வந்த எதிர்வினையும் உங்கள் பேச்சின் ஒருவடிவம்  காலச்சுவடில் வந்ததும் உண்மை. நான் அப்போதும் காலச்சுவடுடன் தொடர்பிலேயே இருந்தேன்.அங்கிருந்த பிறநண்பர்கள் என்னிடம் சொன்னதையே நான் எழுதினேன். ஞானியும் பின்னர் பேசியிருக்கிறார்.

இன்று அவற்றை நீங்கள் மறுப்பீர்கள் என்றால் நான் அதை நேரடியாக பார்க்காமையால் வலியுறுத்தமுடியாது. இது தனிப்பட்ட விஷயமல்ல. ஒருகாலகட்டத்தின் இலக்கிய வரலாற்று உண்மை. ஆனால் உங்கள் மனம் வருத்தப்படுகிறது என்றால் நீக்கிவிடுகிறேன்.

உங்களை அவமதிக்கவோ துன்புறுத்தவோ நான் என்றும் நினைத்ததில்லை. உங்களையோ உங்கள் சுற்றத்தையோ எப்போதும் எதுவும் சொன்னதுமில்லை

ஜெ

அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவை ஞானி உயிருடனிருந்தபோதே என்னால் எழுதப்பட்டு பிரசுரமானவை. ஞானியே அதை வாசித்துவிட்டு பேசியிருக்கிறார்.

உண்மையில் ஞானி பற்றிய அந்தத் தொடரில் உள்ளது ஓர் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான உரையாடல், முரண்பாடுகள், பிற ஆசிரியர்களுடனான பிரச்சினைகள் முதலியவை. அவை எவ்வகையிலோ பதிவாகவேண்டும். ஏனென்றால் அடுத்த தலைமுறையினருக்கு அது முக்கியமான பதிவுகள். அத்தொடரை வாசிப்பவர்களுக்கு அவை எந்த அளவுக்கு ஊக்கமூட்டுபவை எனத் தெரியும்.

அந்த விவாதத்தையும் சித்தரிப்பையும் சிறுவம்புகளில் சிதறடிக்க விரும்பவில்லை. ஞானி தனிப்பட்ட முறையில் அனைவரைப் பற்றியும் கடுமையான கருத்துக்கள் சொல்பவர் என அவருடன் பழகிய எவருக்கும் தெரியும்.என்னிடமிருக்கும் அவருடைய கடிதங்களிலேயே அவருடைய பழைய தோழர்கள் பற்றியெல்லாம்  மிகக்கடுமையான கருத்துக்கள் உள்ளன.அத்தகைய எக்கருத்தையும் நான் பதிவுசெய்யாமல் செல்வது அதனால்தான். எளிமையான நகைச்சுவைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்

ஏனென்றால் இங்கே இலக்கியம் — அறிவியக்கச் செயல்பாடு என்றாலே வம்புமட்டுமே என்று கருதும் ஒரு கும்பல் உள்ளது. அவர்கள் பசித்த  வேட்டைநாய்களைப்போல இன்று முகநூலில் அலைகிறார்கள். எவரும் எதையும் தீவிரமாகப் பேசமுடியாத சூழலை உருவாக்குகிறார்கள். அவர்களைக் கடந்துவரும் சிலருக்காகவே இதெல்லாம் எழுதப்படுகின்றன

மேலும் தமிழ்ச்சூழலின் மனநிலையும் பொதுவாக மிகச்சிக்கலானது. மேலே எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய  ‘குடும்பத்தை’ நான் கேலிசெய்தேன் என்று எழுதியிருப்பது எதை என்று தெரிந்தால் அந்த மனநிலை என்ன என்று புரியும்.

மதுரையில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சி விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் அப்பா வந்தார். அவர் பொதுவாக வணக்கம் சொன்னார், அவர் எஸ்.ராவை பார்த்ததும் வணக்கம் சொன்னதாக அங்கிருந்த  எவரோ கேலியாக மாற்றிக்கொண்டார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்ததும் வணக்கம் சொல்வார்கள் என்று எஸ்.ரா பற்றிய ஒரு மெல்லிய கேலிக்கட்டுரையில் எழுதினேன்.

நான் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் பகடிக்கட்டுரை எழுதிய காலம் அது. என்னைப்பற்றியும் எஸ்.ரா பதிலுக்கு ஒன்றை எழுதினார். இன்று அதை ‘குடும்பத்தை அவதூறு செய்வது’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் கருதுகிறார்

இச்சூழலில் எந்த விவாதத்தை எப்படி பதிவுசெய்வது? எந்த ஆளுமையை தடையின்றி சித்தரிப்பது? ஒவ்வொருவரும் புண்பட்டுக்கொண்டே அலைகிறார்கள். ஒவ்வொன்றையும் வம்பாக்க நூறுபேர் பரபரக்கிறார்கள். ஒருவர் பொதுமேடையில் அவர் பேசிய கருத்தை பதிவுசெய்தாலே அவதூறு என்று நினைக்கிறார்.

ஆகவே கூடுமானவரை எச்சரிக்கையுடனேயே எழுதுகிறேன். ஏனென்றால் இக்கட்டுரைகளின் நோக்கம் வம்பு அல்ல. ஞானியின் ஆளுமையையும் அவருடனான என் உரையாடல்களையும் பதிவுசெய்வதே.

புண்படுதல் குறைவான ஒரு சமூகத்தில் நாம் இன்னும் கொஞ்சம் பேசமுடியும்.

ஜெ

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும்

இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்

காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

 

முந்தைய கட்டுரைஞானி-14
அடுத்த கட்டுரைசொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave