அன்புள்ள ஜெயமோகன் சார்,
தன்மீட்சியை இரண்டு முறை வாசித்து விட்டேன். ஒரு விதமான குழப்ப மனநிலையே நிலவுகிறது. என்னை மட்டுமே பிடுங்கித் தின்னும் மனச்சோர்வுகள், எனக்கு மட்டுமே உடைய அனுபவங்கள், கஷ்டங்கள், குழப்பங்கள், என்று நினைத்து நான் சொந்தம் கொண்டாடி வந்த அனைத்தும் என் காலத்தின் சாதாரண பொதுப் பிரச்சினைகள் தான் என்ற உணர்வு ஒரு விதமான சோர்வைத் தருகிறது. நான் ஒரு தனிப்பிறவி என்ற எண்ணம் சில சமயம் நம் பெருமைகளில் இருந்தும் பல சமயம் நம் கஷ்டங்களில் இருந்தும் தான் முளைக்கிறது.
பெருமைகளில் இருந்து எழும் எண்ணங்களை அடக்கும் ஏராளமான நூல்கள் உள்ளன. மாமனிதர்களின் வாழ்க்கை சார்ந்த நூல்கள் பெரும்பாலும் அதை செய்து விடுகின்றது. ஆனால், நம் கஷ்டங்களில் இருந்து எழும் அகங்காரத்துடன் உரையாடும் நூல்கள் குறைவுதான். அவற்றில் பெரும்பாலானவை நம் கஷ்டங்களுக்கு எதிராக நம்மைவிட பெரிய கஷ்டங்களை அனுபவிப்பவர்களை முன்னிறுத்தி, ஒப்பிட்டு நம்மை ஊக்கப்படுத்த முயல்பவை. அல்லது சில புறவயமான பயிற்ச்சிகளை போதிப்பவை.
ஆனால் தன்மீட்சி அத்தகைய யுக்திகளை பயன்படுத்தாமல், இந்த பொதுப் பிரச்சினைகளில் உள்ள மையச்சரடுகளையும், சிக்கல்களையும் கண்டறிந்து அவற்றை நோக்கி பதில்களை அளிக்கிறது. அந்த பதில்களின் வழியே அது வாசகனின் தனிச்சிக்கல்களுடன் உரையாடுகிறது. இந்த உரையாடல்கள் வாசகனுக்கான தனிப்பட்ட பதில்களை அளிக்கும் அதே நேரத்தில் அவனை ஒரு பொதுச் சமூகத்தின் பகுதியாகவும் உணரச்செய்கிறது. இது தான் என் குழப்பத்திற்கும் காரணம். என் பிரச்சினைகளுக்கு பதில் கிடைத்துவிட்டதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை நான் ஒரு சாதரணமான இளைஞன் தான் என்று உணர்ந்து சோர்வடைவதா என்று புரியவில்லை. இந்த கடிதத்தை எழுதும்போதும் அந்த தன்னுணர்வு இருப்பதை உணர்கிறேன்.
ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்துவிட்டது. நான் இப்படியே இருக்க முடியாது. இந்த சோர்வை வெல்லாமல் நான் இந்த சாதாரணத் தன்மையை கடக்க முடியாது. சில வருடங்களுக்கு முன் அமேடியஸ் என்ற திரைப்படம் பார்த்தபோது அது என்னோடு நேரடியாக உரையாடியது, என்னை தொட்டு, இதுதான் நீ என்று சொன்னது. அந்த படம், எனக்குள் இருந்த பல சராசரித்தனங்களை அடையாளம் காட்டி, அவற்றை கடக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்தது. அந்த திசையில் இரண்டு அடிகள் எடுத்துவைத்த சில வருடங்களிலேயே சோர்வுற்று, என்னுள் ஒட்டடை படியத்தொடங்கி விட்டிருப்பதை தன்மீட்சி வாசிக்கையில் உணர்ந்தேன். அந்த திரைப்படம் தந்த உணர்ச்சி மீண்டும் வந்தது.
கொரோனா காலத்தில் எனக்கு கிடைத்த சிறந்த அறிமுகங்களில் ஒன்று தன்மீட்சி. இந்த புத்தகத்தை விலையில்லாமல் அளிக்க முன்வந்த தன்னறம் நூல்வெளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னை போன்றவர்களின் மானசீக குருவாக விளங்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். தன்மீட்சியை இப்போது அப்பாவிடம் கொடுத்திருக்கிறேன். நன்றி சார்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
***
அன்புள்ள விக்னேஷ்
ஒரு நூல் நம்மை முழுமையாக அமைதிப்படுத்திவிடுகிறது என்றால் அல்லது ஒற்றைப்படையான பெருங்கிளர்ச்சியை மட்டுமே உருவாக்குகிறது என்றால் அதில் சிக்கலிருக்கிறது என்றுதான் பொருள். ஏனென்றால் நாம் ஏற்கனவே அறிந்திருப்பவற்றை ஒரு நூல் உறுதிப்படுத்தினால்தான் அந்நூல்மேல் முழு ஏற்பையும் அமைதியையும் நாம் அடைகிறோம். ஒருநூல் உண்மைகளின் ஒருபக்கத்தை மட்டுமே சொல்கிறதென்றால்தான் நமக்கு பெருங்கிளர்ச்சி உருவாகிறது.
ஒர் ஆழமான நூல் நம்முடன் விவாதிக்கிறது. நம்மில் ஒருபகுதியை உடைக்கிறது. சிலபகுதிகளை மறுஅமைப்பு செய்கிறது. அது நம்மை நிலைகுலையச் செய்யும். நாம் மேலே யோசிக்கவும், சிலவற்றை நாமே கண்டடையவும் செய்யும். அதுவே ஆக்கபூர்வமானது. பிரச்சினைகளின் எல்லாப் பக்கங்களையும் சொல்லும் ஒரு கட்டுரை நம்மை அமைதியிழக்கச் செய்யலாம். ஆனால் உண்மையே சரியான வழிகாட்டி
ஜெ