உடையாள்- 2

3.நிழல்

பெயரில்லாத கோளில் பெயரில்லாத குழந்தை இருப்பது யாருக்குமே தெரியாது. அந்தக்குழந்தைக்குக் கூட அது இருப்பது தெரியாது. ஏனென்றால் அது மிகவும் சிறிய குழந்தை.

அது பசித்தபோது சென்று இயந்திரங்களில் இருந்து பாலை உறிஞ்சிக் குடித்தது. தூக்கம் வந்தபோது ஒரே இடத்தில் படுத்துத் தூங்கியது. வலித்தபோது சிணுங்கி அழுதது. மகிழ்ச்சியாக இருந்தபோது கைகளை வீசிச் சிரித்தது.

அந்தக்குழந்தை கைகளையும் கால்களையும் ஊன்றி தவழ்ந்தபடி அங்கெல்லாம் அலைந்தது. அங்கே கிடந்த ஒவ்வொன்றையும் எடுத்து வாயில் வைத்துப் பார்த்தது. கசப்பாக இருந்ததை துப்பியது. இனிப்பாக இருந்ததை சாப்பிட்டது. கடினமாகவும் கூர்மையாகவும் இருந்த பொருட்கள் அதைக் குத்தின. மென்மையான பொருட்கள் அதற்கு சுகமாக இருந்தன. குத்தும் பொருட்களை அது தவிர்த்தது. மென்மையான பொருட்களை அது விரும்பியது

இப்படி அந்த கண்ணாடிக் குமிழிக்குள் இருந்த காட்டை அந்தக்குழந்தை புரிந்துகொண்டது. அதை பிடித்தது பிடிக்காதது என்று இரண்டாகப் பிரித்துவிட்டது.

அதற்கு எவரும் பேச்சு சொல்லி கொடுக்கவில்லை. ஆனால் அது மனிதக்குழந்தை. மனிதக்குழந்தையின் மூளையிலேயே மொழி பதிந்திருக்கிறது. மொழிக்கும் நாக்குக்கும் நேரடியான தொடர்பு உண்டு.

ஆகவே குழந்தை ஒவ்வொரு உணர்ச்சிக்கும் சில ஒலிகளை உருவாக்கியது. அந்த ஒலிகளைக் கொண்டு அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது. பிடித்திருந்தது என்றால்  “மா” என்று சொல்லியது. பிடிக்கவில்லை என்றால்  “ஊ” என்று சொல்லியது.

மிகவும் பிடித்திருந்தால் “மா! மா! மா!’ என்று சொல்லி கையை வீசி துள்ளிக்குதித்து சிரித்தது. பிடிக்கவில்லை என்றால் விரலால் சுட்டிக்காட்டி “ஊ” என்று உதட்டைக் குவித்தது.

அந்த இரு ஒலிகளில் இருந்து மேலும் சொற்களை குழந்தை உருவாக்கிக் கொண்டது. உணவு அதற்குப் பிடித்திருந்தது. ஆகவே  உணவை அந்தக் குழந்தை ‘மாம்” என்றது. வலியை  “ஊய்” என்றது.

குழந்தைக்குப் பசித்தபோது அது தன் வயிற்றைத் தொட்டு “ஊய்! ஊய்!” என்றது. உணவு உண்டபோது மகிழ்ச்சி அடைந்தது. வயிற்றை தடவி “மம்மு” என்றது.

பசியின் வழியாக அது தன்னை உணர்ந்தது. தன் வயிறே தான் என்று நினைத்தது. ஆகவே வயிற்றைத் தொட்டு “மாம்” என்று சொல்லிக்கொண்டது. அடிக்கடி தன் வயிற்றை தொட்டு “மாம்! மாம்!” என்று சொல்லி மகிழ்ந்தது.

அந்தக் குழந்தை ஒருமுறை தவழ்ந்து செல்லும்போது தன் நிழலைப் பார்த்தது. நிழல் தனக்குப் பின்னால் வருவதை அப்போதுதான் அது கவனித்தது. அதற்கு முன்பு நிழலைப் பார்த்திருந்தாலும் அது நிழலை கவனிக்கவில்லை. நிழலில் இருந்து விலகிச் செல்வதற்காக அது விரைவாக தவழ்ந்தது. ஆனால் நிழல் கூடவே வருவதைக் கண்டது.

குழந்தை பயந்து அலறியது. “ஊ! ஊ!” என்று நிழலைச் சுட்டிக்காட்டி அழுதது. மீண்டும் வேகத்துடன் நிழலில் இருந்து விலகி சென்றது. எவ்வளவு சென்றாலும் நிழல் கூடவே வந்ததைக் கண்டது. நிழலில் இருந்து தப்பமுடியாது என்று அது புரிந்து கொண்டது. நிழலை கவனிக்க ஆரம்பித்தது.

அப்போதுதான் எல்லா பொருட்களுக்கும் நிழல்கள் இருந்தன என்பதை குழந்தை உணர்ந்தது. ஒவ்வொரு பொருளுக்கும் அதே வடிவில் நிழல் அருகே கிடந்தது. சில நிழல்கள் இன்னொரு பொருள் மேல் கிடந்தன. சில நிழல்கள் எழுந்து நின்றன. அசையும் பொருட்களின் நிழல்கள் அசைந்தன. அசையாத பொருட்களின் நிழல்கள் அசையாமலிருந்தன

அதுவரை அந்த உலகை ஒன்றாகவே அது நினைத்து வந்தது. அதன்பின் தன்னைச் சுற்றி இரண்டு உலகங்கள் இருப்பதை குழந்தை அறிந்தது. உண்மையான பொருட்களின் உலகம் ஒன்று. நிழல்களின் உலகம் இன்னொன்று. உண்மையான பொருட்களுக்கு நிறங்கள் இருந்தன. நிழல்களுக்கு நிறங்கள் இல்லை. அவை கருமையாக இருந்தன.

குழந்தை ஒவ்வொரு பொருளாக அணுகி ஆராய்ந்தது. முதலில் அந்தப் பொருளை தொட்டுப் பார்த்தது. அதன்பிறகு நிழலை தொட்டுப் பார்த்தது. பொருளை கையில் எடுத்துப் பார்த்தது. அதன்பின் நிழலை கையில் எடுத்துப் பார்க்க முயன்றது.

பொருட்களை தொடமுடியும், ஆனால் நிழல்களை தொடமுடியாது என்று குழந்தை அறிந்தது. பொருட்களை கையில் எடுக்கமுடியும், ஆனால் நிழல்களை கையில் எடுக்கமுடியாது. எல்லா நிழல்களும் அதற்குரிய பொருட்களுடன் இணைந்திருந்தன. சிலநிழல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன

குழந்தையின் உள்ளம் கொந்தளிப்பு அடைந்தது. அதற்கு திகைப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி வந்தன. அதனால் தாங்கவே முடியவில்லை. குழந்தை கையை தரையில் அடித்து ‘ஆ!ஆ!’ என்று கூவிக்கொண்டே இருந்தது.

அதன்பிறகு குழந்தை ஒரு விஷயத்தைக் கண்டுகொண்டது. தன் கையால் நிழல்களைப் பிடிக்க முடியாது, ஆனால் தன் கையின் நிழலைக் கொண்டு நிழல்களை பிடிக்கலாம்.

குழந்தை எந்த நிழலைத் பிடிக்க வேண்டுமோ அந்தப் பொருளை பிடித்தது. அதன் கையின் நிழல் அந்தப் பொருளின் நிழலைத் தொட்டது.நிழலை நிழலால் பிடிக்க முடியும் என்று குழந்தை அறிந்தது.

ஒரு பொருளை அசைத்தால் அதன் நிழலை அசைக்க முடியும் என குழந்தை புரிந்துகொண்டது. குழந்தை வெவ்வேறு பொருட்களை அசைத்து அசைத்து நிழல்களுடன் விளையாடியது. நிழல்களை ஒன்றாக இணைத்தும் பிரித்தும் மகிழ்ந்தது. நிழலை வெவ்வேறு வகையாக ஆட்டினால் நடனம் ஆட வைக்கமுடியும் என்று கண்டுபிடித்தது

ஒரு பொருளை தூக்கி எறிந்தால் அதன் நிழலையும் தூக்கி எறிய முடியும் என்று தெரிந்துகொண்டதது. பொருள் பறந்து செல்லும்போது நிழலும் கூடவே பறந்தது. ஆனால் நிழல் மிகப்பெரிதாக வளைந்து பறந்தது. வெவ்வேறு பொருட்களின் மேல் விழுந்து மடங்கியும் நெளிந்தும் சென்றது.

தன்னுடைய நிழல் தன் அடிமை என்று குழந்தை கண்டுபிடித்தது. குழந்தை போகுமிடமெல்லாம் நிழல் வந்தே ஆகவேண்டும். நிழலால் தப்பவே முடியாது. குழந்தை தன் கையை அசைத்தால் நிழலும் அசைத்தே ஆகவேண்டும்.

ஆனால் நிழலால் குழந்தையை ஒன்றுமே செய்ய முடியாது. நிழலை மிதித்தாலும் ஒன்றும் ஆவதில்லை. நிழலில் முட்டிக்கொண்டாலும் வலிப்பதில்லை. நிழல் கீழே விழுந்தாலும் ஓசை வருவதில்லை. நிழல் நிழலுடன் முட்டிக்கொண்டாலும் ஓசை வருவதில்லை.

அங்கிருந்த அத்தனை நிழல்களும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதை குழந்தை உணர்ந்தது. எந்த நிழலும் குழந்தையிடம் இருந்து தப்பி ஓடவில்லை. குழந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

குழந்தை நிழல்களுடன் விளையாடிக் கொண்டே இருந்தது. தன்னுடைய நிழலை குழந்தை ‘மாம்’ என்று சொன்னது.  “மம” என்று சொல்லிக்கொண்டே அதை கையால் தட்டியது. நிழலை தட்டியபின் “மம! மம!” என்று சொல்லி தன் வயிற்றைத் தட்டிக்கொண்டது. நிழலும் தன் வயிற்றைத் தட்டிக்கொள்வதைக் கண்டு சிரித்தது.

ஆனால் நிழல்கள் மாறிக்கொண்டே இருந்தன. நிழல்கள் சுருங்கிச் சுருங்கி வருவதை குழந்தை கண்டது. நிழல்கள் சுருங்குவதை குழந்தையால் நிறுத்த முடியவில்லை. சுருங்கும் நிழலை அது கைகளால் பிடித்தது. ஆனாலும் மிகமெல்ல நிழல்கள் சுருங்கின.

நிழல்கள் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை குழந்தை உணர்ந்தது. ஆனால் அவற்றுடன் விளையாட முடியும் என்பதை குழந்தை கண்டுகொண்டது. மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டு அது நிழல்களுடன் ஆடிக்கொண்டே இருந்தது.

ஆனால் நிழல்கள் சுருங்கிச் சுருங்கி வந்தன. குழந்தையின் நிழல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது. தன் நிழல் எங்கே என்று குழந்தை பார்த்தது. அது ஒளிந்து விட்டிருந்தது. எல்லா நிழல்களும் மறைந்துவிட்டன.

தன் நிழல் இல்லாமலானதும் குழந்தைக்கு வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அந்த குமிழிக்குள் குழந்தைக்கு நிழல் ஒன்றுதான் துணையாக இருந்தது

குழந்தை தன் நிழலை தேடி அலைந்தது.  நிழலே இல்லை. குழந்தை துயரத்துடன் சுருண்டு படுத்துவிட்டது. அதற்கு கண்ணீர் வந்தது. விசும்பி அழுதுகொண்டே இருந்தது. பசித்தபோதும் அது சாப்பிடவில்லை.

சற்றுநேரம் கழித்து குழந்தை தன் உடலில் இருந்து நிழல் முளைத்து வருவதைக் கண்டது. எழுந்து அமர்ந்து அதை வியப்புடன் பார்த்தது. நிழல் குழந்தையின் அருகே இருந்து வளர்ந்து வளர்ந்து நீண்டது. எல்லா பொருட்களில் இருந்தும் அவற்றின் நிழல்கள் வெளிவந்தன

குழந்தை மகிழ்ச்சியுடன் நிழலை கையால் அடித்தது. நிழல்மேல் ஏறி அமர்ந்து கூச்சலிட்டது. மீண்டும் எல்லா நிழல்களையும் தொட்டுத் தொட்டு பார்த்தது. நிழலகளை நெளித்தும் வளைத்தும் விளையாடியது.

நிழல்கள் வளர்ந்தபடியே இருந்தன. குழந்தையின் நிழல் பல மடங்கு பெரிதாகியது. தலைக்குமேல் எழுந்து வளைந்து நின்றது. குழந்தை தன் நிழல் அவ்வளவு பெரியதாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது. கைகளை விரித்து ஆட்டியது. மிகப்பெரிய நிழல்கள் ஆடுவதைக் கண்டு கூச்சலிட்டது.

ஆனால் நிழல்கள் மங்கலடைந்தன. கொஞ்சம் கொஞ்சமாக நிழல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தன. நிழல்கள் இணைந்து இருட்டாக ஆகிவிட்டன. குழந்தை அந்த இருட்டுக்குள் இருந்தது.

குழந்தை நிழலுக்குள் சென்றுவிட்டது. நிழலுக்குள் இருந்தாலும் குழந்தை பயப்படவில்லை. ஏனென்றால் குழந்தைக்கு நிழலை நல்ல பழக்கம் இருந்தது.  நிழல் ஒன்றுமே செய்யாது என்று குழந்தைக்கு தெரிந்திருந்தது. நிழல் நல்லது என்று அது நினைத்தது

குழந்தை நிழலுக்குள்ளேயே தூங்கிவிட்டது. காலையில் அது கண்விழித்தபோது அதனருகே நீளமாக நிழல் கிடந்தது. குழந்தை மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டபடி எழுந்து நிழலுடன் விளையாடத் தொடங்கியது. குழந்தை  நிழலை சுட்டிக்காட்டி  “மாம்!” என்று சொல்லியது.

ஆனால் இதெல்லாம் குழந்தைக்குப் பழகியிருந்ததே ஒழிய குழந்தை இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை.

4.பிம்பம்

எவருக்குமே தெரியாத அந்தக் கோளில் அந்த கண்ணாடிக் குமிழிக்குள் குழந்தை வாழ்ந்தது. தன் நிழலுடன் விளையாடி மகிழ்ச்சியாக இருந்தது அக்குழந்தை. ஒருநாள் அது பளபளப்பான ஓர் உலோகப்பரப்பின் அருகே சென்றது. அந்தப்பரப்பில் அதன் உருவம் தெரிந்தது. குழந்தை திடுக்கிட்டு “ஆ!” என்று அலறியபடி பின்னால் வந்தது. தூரத்தில் அமர்ந்து எச்சரிக்கையுடன் அந்த உருவத்தை பார்த்தது.

அது குழந்தையின் பிரதிபலிப்புதான். அந்த உருவத்தை குழந்தை நெடுநேரம் கவனித்தது. அது என்ன என்று யோசித்தது. யோசித்தபடி கையை அசைத்தபோது அந்த பிரதிபலிப்பும் கையை அசைத்தது. குழந்தைக்கு உடனே அது தன்னுடைய நிழல்தான் என்று தெரிந்துவிட்டது

அந்த நிழல் வேறுவகையானது என்று குழந்தை புரிந்துகொண்டது. அதை  “மே” என்று சொல்லியது. ஒவ்வொரு நாளும் தவழ்ந்து அந்த பிம்பத்தின் அருகே வந்து அமர்ந்து கைகளை அசைத்து அதைப் பார்த்துச் சிரித்தது. அந்த பிம்பமும் குழந்தையைப் பார்த்துச் சிரித்தது. குழந்தை செய்வதையெல்லாம் அந்த பிம்பமும் செய்தது. குழந்தையும் அந்தப் பிம்பமும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக அங்கே இருந்தார்கள்.

குழந்தை அந்த பிம்பத்தை ஆராய்ச்சி செய்தது. அந்த பிம்பத்தை பிடிக்கப்போனால் அது தன்னை பிடிக்க வருகிறது என்பதை கண்டறிந்தது. அதைநோக்கி எதையாவது வீசினால் அதுவும் அதேபொருளை வீசியது. அதைவிட்டு விலகிப் பின்னால் போனால் அதுவும் பின்னால் போயிற்று. அந்த கண்ணாடி போன்ற பரப்பிலிருந்து விலகினால் அந்த பிம்பமும் மறைந்தது.

அந்தக் குழந்தை கண்ணாடிப்பரப்பில் தெரிந்த பிம்பத்தை அங்கிருக்கும் பொருட்களில் ஒன்றாக நினைத்தது. அது அங்கிருந்த நிழல்களில் ஒன்று என்றும் நினைத்தது.

ஒருநாள் குழந்தை இன்னொரு புதிய இடத்துக்குச் சென்றது. அங்கிருந்த இன்னொரு பளபளப்பான பரப்பில் அது தன் பிம்பத்தை பார்த்தது. முதல் பரப்பில் இருந்த அந்தக் குழந்தை இங்கேயும் வந்துவிட்டதா என்று நினைத்தது

ஆகவே முதல் கண்ணாடிப்பரப்பிற்குச் சென்று அங்கே பார்த்தது. அந்த குழந்தை அங்கேதான் இருந்தது. அப்படியென்றால் இது வேறு குழந்தை என அது நினைத்தது. இரண்டாவது பிம்பத்தை  “மேமே” என்று அது சொன்னது.

அதைப்போன்ற வேறு பிம்பங்கள் அங்கே உண்டா என்று குழந்தை தேடிச் சென்றது. அந்தக் கண்ணாடிக்குமிழிக்குள் அப்படி நிறைய இடங்கள் இருந்தன. குழந்தை ஒவ்வொரு கண்ணாடிபோன்ற பரப்பிலும் ஒரு பிம்பத்தைப் பார்த்தது. அந்த குழந்தைகளை எல்லாம் அது மேமே என்று சொல்லியது

அந்த இடம் முழுக்க நிறைய குழந்தைகள் இருப்பதை குழந்தை புரிந்துகொண்டது. அத்தனை மேமேக்கள் இருப்பது குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு இடமாக சென்று அந்த ஒவ்வொரு மேமேயுடனும் விளையாடியது.

பிம்பமாகத் தெரிந்த எல்லா குழந்தைகளும் ஒன்றுபோலவே இருந்தன. எல்லா மேமேக்களுமே அந்தக்குழந்தை செய்வதுபோலவே செய்தன. ஆனால் சிவப்பான பரப்பில் தெரிந்த குழந்தை சிவப்பாக இருந்தது. நீலமான பரப்பில் தெரிந்த குழந்தை நீலமாக இருந்தது. பச்சை, மஞ்சள், ஊதா என எல்லா நிறங்களிலும் அங்கே குழந்தைகள் இருந்தன.

குழந்தை எதையாவது பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க ஆரம்பித்தது. அதன்பின் வெவ்வேறு இடங்களில் தொற்றி ஏறத் தொடங்கியது. உயரமான இடத்தில் இருந்து பார்த்தபோது நிறைய காட்சிகள் தெரிவதை கண்டது. அக்காட்சிகள் அதை மகிழ்ச்சியடையச் செய்தன.

மேலேற மேலேற குழந்தை பார்க்கும் உலகம் பெரியதாகியது. ஆகவே அது மேலும் ஏற விரும்பியது. கைக்குச்சிக்கிய இடங்களை எல்லாம் பிடித்துக்கொண்டு அது மேலே சென்றது. ஒவ்வொரு இடத்திலும் நின்று சுற்றிலும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தது. “ஆ! ஆ! ஆ!” என்று கூச்சலிட்டது.

குழந்தை ஒருநாள் மிக உயரமான இடத்தை அடைந்தது. அங்கிருந்து அது பார்த்தபோது கீழே பல இடங்களில் அதன் பிம்பம் தெரிந்தது. ஒரேசமயம் அத்தனை குழந்தைகளை பார்த்து அது திகைத்தது.

தன் கையை அசைத்ததும் அத்தனை பிம்பங்களும் கையை அசைப்பதைக் கண்டது. தன் கையை அசைத்து அசைத்துப் பார்த்தது. உடலை ஆட்டியது. எல்லா பிம்பங்களும் அதைப்போலவே ஆடின

சட்டென்று குழந்தைக்கு அந்த பிம்பங்களெல்லாம் நான்தான் என்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணம் வந்ததும் அது திடுக்கிட்டது. “ஆ!” என்று கூச்சலிட்டது. அதன் உடல் நடுங்கியது

குழந்தை முதல்முறையாக தன்னை உணர்ந்தது. அங்கே தெரிவதெல்லாம் தன்னுடைய பிம்பங்கள்தான். அதன் நெஞ்சு படபவென்று அடித்துக்கொண்டது. அது தன் நெஞ்சில் கைவைத்து “மீ!” என்று சொன்னது. “மீ! மீ! மீ!” என்று சொல்லிக்கொண்டே இருந்தது

அவ்வாறு அந்தக் குழந்தை தன்னை உணர்ந்துகொண்டது. நான் என்னும் எண்ணம் அதற்கு ஏற்பட்டது

[மேலும்]  

பிகு

மூளையும் மொழியும்

விதைக்குள் பருப்பு இருப்பதுபோல மனிதமூளை இரண்டு பகுதிகளாக உள்ளது.இடது பக்க மூளையில் மொழிக்கான நரம்புகள் உள்ளன. அவற்றில் பேச்சுக்கான நரம்புகள் உள்ள பகுதி புரோக்கா பகுதி [broca’s area] என்று. புரிந்துகொள்வதற்கான பகுதி வெர்னிக் பகுதி [Wernicke’s area] என்று அழைக்கப்படுகிறது.  பால் புரோக்கா [Paul Broca] கார்ல் வெர்னிக் [Carl Wernicke] ஆகிய இருவரும் மூளைநரம்பியல் ஆய்வாளர்கள். அவர்களின் நினைவாக அப்பகுதிகளுக்குப் பெயரிடபட்டுள்ளது.

முந்தைய கட்டுரைமொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்
அடுத்த கட்டுரைஓரே பாதை