தன்னம்பிக்கை- டேல் கார்னகி முதல்

தன்னம்பிக்கை நூல்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

தன்னம்பிக்கை நூல்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன். தன்னம்பிக்கைநூல்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுகின்றன என்பது உண்மைதான். அவற்றை எழுதியவர்களுக்கு நிறைய ராயல்டியை அளித்து அவர்களை முன்னேற்றுகின்றன. தன்னம்பிக்கை நூல்களை எழுதிய டேல்கார்னகி எப்படிச் செத்துப்போனார் தெரியுமா? தற்கொலை செய்துகொண்டார்

ஜி.சிவராம்  

எம்.எஸ்.உதயமூர்த்தி

அன்புள்ள சிவராம்

உங்களுக்கு அவசியமாக தன்னம்பிக்கை நூல் தேவைப்படுகிறது — நீங்கள் தன்மீட்சி கண்டிப்பாக வாசிக்கவேண்டும்.

முதலில், எல்லா தன்னம்பிக்கை நூல்களும் ஆசிரியரோ வெளியீட்டாளரோ லாபம் சம்பாதிப்பதற்காக வெளியிடப்படவேண்டும் என்பதில்லை. அவ்வகையில் வரும் என் நூல்கள் பொன்னிறப்பாதை, தன்மீட்சி ஆகியவை என் தளத்தில் வாசகர்களுடனான உரையாடலாக வெளியிடப்பட்டவை. அதன்பின் நூலாக்கம் செய்யப்பட்டன. வாழ்விலும் இலட்சியவாதத்திலும் நம்பிக்கையூட்டும் கதைகளின் தொகுதியான  ‘அறம்’ அவ்வாறே என் தளத்தில் வெளியிடப்பட்டு நூல்வடிவாகியது.

இந்நூல்கள் எவற்றிலிருந்தும் ஒரு பைசாகூட உரிமைத்தொகையாக நான் பெற்றுக்கொண்டதில்லை. அறம் அரைலட்சம் பிரதியை நெருங்கவிருக்கிறது. அதன் விலை என்பது பெரும்பாலும் அடக்கவிலை மட்டுமே. அதிலுள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள், வணங்கான் போன்ற கதைகள் இலவசப்பிரதிகளாகவே பெரும்பாலும் வினியோகம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகின்றன.

தன்மீட்சி வெளியீட்டாளர்களாகிய குக்கூ ஒரு தொண்டுநிறுவனம் அந்நூல் வெளியீட்டில் வரும் லாபத்தையும் வாசகர்களுக்கு திரும்ப வழங்கும்பொருட்டு தன்மீட்சியை இலவசப்பிரதியாக அளிக்கிறார்கள். சில விஷயங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கமில்லாமலும் இவ்வுலகில் நடக்கமுடியும், நம்புங்கள். அந்த நம்பிக்கை இன்று உங்களுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது.

இங்கே தன்னம்பிக்கை நூல்களின் முன்னோடியான எம்.எஸ்.உதயமூர்த்தி அமெரிக்காவில் நல்ல வேலையை விட்டுவிட்டுத்தான் வந்தார். இங்கே என்னதான் புத்தகம் விற்றாலும் அமெரிக்காவில் வேலைபார்க்கும் சம்பளத்துக்குச் சமானமான தொகை கையில் வராது என்று தெரியாவிட்டால் நீங்கள் பள்ளிமாணவராக இருக்கவேண்டும். நூல்கள் விற்றதொகையுடன் கையிலிருந்த தொகையையும் இணைத்து அவர் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி அதற்காகவே செலவிட்டார். எதையும் சம்பாதிக்கவில்லை

Norman Vincent Peale

டேல் கார்னகி, நார்மன் வின்சென்ட் பீல் போன்றவர்களைப் பற்றி இளக்காரமாகப் பேசுவது ஓர் அறிவுஜீவி மோஸ்தர்—ஆனால் தொண்ணூறுகளிலேயே அது காலாவதியாகிவிட்டது. தன்னம்பிக்கை நூல்கள் என்னும் நிகழ்வை விரிவாகப் பகுப்பாய்வுசெய்யும் நூல்கள் ஏராளமாக வந்துவிட்டன. இன்றைக்கு அந்த இளக்காரத்தை பேசுபவர் அறிவுஜீவி அல்ல, அறிவோரஜீவி.

அந்த அறிவுஜீவி இளக்காரத்துக்கு வலதுசாரி, இடதுசாரி வகைபேதங்கள் உண்டு. வலதுசாரியினரின் நம்பிக்கை என்பது அப்படி தன்னம்பிக்கையை ஊட்டிவிடமுடியாது, அது ஒருவனின் இயல்பு சார்ந்தது என்பது. அவ்வியல்பு பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றால் வருவது.  ‘நிலக்கரித் தொழிலாளியை விருந்தறை நடனம் ஆடவைக்க முயல்கிறார் டேல் கார்னகி’ என்று அக்காலத்தில் விமர்சனம் செய்யப்பட்டது

இடதுசாரி விமர்சனம் இதுதான், ஒருவனின் பொருளியல் முன்னேற்றம் என்பதும் சமூகமுன்னேற்றம் என்பதும் சமூகப்பொருளியல் காரணங்களுடன் இணைந்தது மட்டுமே. தனிமனிதன் தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள முடியும் என்பது பொய்யான நம்பிக்கை. சமூகமாற்றத்துக்காக போராடவேண்டாம் என்று அவனிடம் சொல்வதுதான் அது.

இவ்விரண்டிலும் சற்றே உண்மை உண்டு, ஆனால் பெரும்பாலும் இவை மிகைப்படுத்தப்பட்டவை, ஒற்றைப்படையாக்கப்பட்டவை, ஆகவே மாயைகள். வாழ்வில் வெற்றிபெற்ற பெரும்பாலானவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு மேலெழுந்தவர்களே. இடதுசாரிகள் அத்தனைபேரும் தனிமனிதனாக தங்களை முன்னேற்றிக்கொள்ள முயல்பவர்களே.

வலதுசாரிகள் நம்மைச் சூழ்ந்திருப்பது மாறவே மாறாத கருங்கல்பாறை என நம்பவைக்க முயல்கிறார்கள். செயல்களை ஒரு மாறாச்சடங்காக செய்யவேண்டும் என்பார்கள். வாழ்க்கை நம்மை மீறிய ஒரு சுழற்சி மட்டுமே என்று சித்தரிக்கிறார்கள். விளைவாக சலிப்பூட்டும் ஒரு வாழ்க்கையை பரிந்துரைக்கிறார்கள்.

இந்தப் ‘புரட்சியாளர்கள்’ எதிர்ப்பு என்றபேரில் தொடர்ச்சியாக இன்றைய சமூகப்பொருளியல் சூழலைப் பற்றிய ஒவ்வாமைகளையே பரப்புகிறார்கள். எப்போதும் ஒரு போர்முனையில் நின்றிருப்பதாக உணரச் செய்கிறார்கள். அது மெல்லமெல்ல சோர்வையே உருவாக்கும். எதிர்மறைச் சிந்தனைகள் பெருகும். அதில் ஒருவர் நிரந்தரமாக வாழ்வது போல தோல்வி வேறில்லை.

எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர் எதையுமே செய்யமுடியாது, அவ்வெண்ணங்களை பரப்ப மட்டுமே முடியும். இங்குள்ள இடதுசாரிகள் பெரும்பாலும் அவ்வகைப்பட்டவர்கள். எதிர்ப்புகூட நம்பிக்கையில் இருந்தும் கனவிலிருந்துமே எழவேண்டும்.

Dale Carnegie

எந்தச் சமூகமும் தனக்கான ‘பொதுநடத்தை ஒழுங்குகள்’ கொண்டிருக்கும். தொன்மையான பழங்குடிச் சமூகங்களில்கூட அப்படி ஆசாரநெறிகள் இருக்கும். மனிதர்கள் ஒருவரோடொருவர் நட்புகொள்ள,சேர்ந்து பணியாற்ற தேவையான விதிகள் அவை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள். அவற்றில் தனிமனித மனம் சார்ந்த நுட்பங்கள் உண்டு, சமூகப்பண்பாட்டுக் கூறுகளும் உண்டு. அவற்றை அறியாமல் எங்கு எவரும் புழங்க முடியாது.

பெரும்பாலானவை நம் குடும்பத்தில் இருந்தும், நாம் புழங்கும் சமூகத்தில் இருந்தும் இயல்பாக நமக்கு வருகின்றன. ஒருவரை சந்தித்ததும் முகமன் கூறுவதிலிருந்து நாகரீகப்பழக்கங்கள் வரை அப்படி நூற்றுக்கணக்கான ஆசாரங்கள் நம்மிடம் உண்டு.

நாம் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது நமக்கு மேலும் ஆசாரங்களும் வழக்கங்களும் தெரியவேண்டியிருக்கிறது. மேலும் கூர்மையாக மனிதர்களைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. செய்வன, கூடாதன என்னும் தெளிவு தேவைப்படுகிறது.

இந்தியச் சூழலில் எண்பதுகளுக்குப் பின் ஒவ்வொரு இளைஞனும் அவனுக்கு தெரிந்த சூழலில் இருந்து அவனுக்குப் புதிய பொதுச்சூழலுக்குள் சென்றாகவேண்டியிருந்தது. அவன் அடையும் குழப்பத்தையும் தாழ்வுணர்ச்சியையும் வெல்லவேண்டியிருந்தது.சிறு பிழைகளால் அனைத்தையும் இழப்பதற்கு வாய்ப்பிருந்தது, அவன் அதை கடந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இருந்தது.

அதற்கு முன்பெல்லாம் முன்னோடிகள், மூத்தவர்கள் உதவினார்கள். ஆனால் எழுபதுகளிலெல்லாம் அப்படி பொதுச்சூழலுக்குள் வருபவர்கள் குறைவாக இருந்தனர். ஆனால் எண்பதுகளுக்குப்பின் பெரும் எண்ணிக்கையில் அப்படி புதியவர்கள் உள்ளே வரும்போது கடுமையான போட்டி உருவாகியது. போட்டிச்சூழலில் இணையானவர்கள் இன்னொருவருக்கு உதவுவதில்லை. மூத்தவர்கள் உதவினால் அது பாகுபாடு காட்டுவதாகும்.

ஆகவே புதியவர் தானாகவே கற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்ற நிலை வந்தது. இளைஞர்கள் தத்தளித்தனர். அதற்குத்தான் தன்னம்பிக்கை நூல்கள் உதவுகின்றன. எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களின் பங்களிப்பு இங்குதான். ஓரளவு விளக்கிவிட்டேன் எனறு நினைக்கிறேன்

டேல் கார்னகி, நார்மன் வின்செண்ட் பீல் போன்றவர்கள் நவீன அமெரிக்கா என்னும் பெருங்கட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றியவர்கள். அமெரிக்கா பழைமையான, சம்பிரதாயமான ஒரு சமூக அமைப்பு அல்ல. அது அங்கே தொடர்ந்து குடியேறிக்கொண்டே இருந்தவர்களால் ஆனது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்பாடு. ஒவ்வொரு ஆசாரம். ஒவ்வொரு உணர்வுநிலை.

உதாரணமாக, வயது மூத்தவரை பெயர் சொல்லி அழைக்க இந்தியர்களால் முடியாது. ஆனால் அமெரிக்கச்சூழலில் பெயர்சொல்லி அழைப்பதே நெருக்கத்தைக் காட்டுவது. இதேபோல பலநூறு ஆசாரவட்டாரங்கள் ஒரே வெளியில் சந்திப்பதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அந்த மாபெரும் கலாச்சாரக் குழப்பத்தை மிகச்சிறப்பாக எதிர்கொண்டவர்கள் டேல் கார்னகியில் தொடங்கும் தன்னம்பிக்கை உரையாளர்கள்.

அவர்கள் அனைவருக்குமான பொதுவெளி ஒன்றை பேசிப்பேசி அனைவருக்கும் கற்பித்து உருவாக்கினார்கள். பொதுநடத்தை, பொதுநாகரீகம், பொதுவான நம்பிக்கை ஆகியவை உருவாகி வந்தன. அதுவே நவீன அமெரிக்காவை உருவாக்கியது. இந்த மாபெரும் கட்டமைப்பில் நீ உன்னை பொருத்திக்கொண்டால் உனக்கான வாய்ப்புகள் உண்டு, நீ வெல்லமுடியும் என்று அவரைப் போன்றவர்களின் நூல்களும் உரைகளும் ஒவ்வொரு இளைஞனிடமும் கூறின.

என் அமெரிக்க நண்பர்கள் பலர் அமெரிக்கா சென்றதுமே அடைந்த மாபெரும் நம்பிக்கையிழப்பை, சோர்வை, தனிமையை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். முற்றிலும் புதிய பேருலகம். இவர்கள் சம்பந்தமே இல்லாத வேறுநாட்டின் சிறிய ஊர்களில், எளிய குடும்பச்சூழல்களில் இருந்து வந்தவர்கள். பொதுநாகரீகம் தெரியாது, மொழித்திறன் குறைவு.

அவர்களுக்கு ஊக்கமூட்டியவை நவீன தன்னம்பிக்கை நூல்களே. அவை அவர்களுக்கு முதலில் நம்பிக்கை ஊட்டின. வெல்லும் வழிகளைச் சுட்டிக்காட்டின. ஆகவே அவ்வாசிரியர்களை அவர்கள் நிராகரிப்பதே இல்லை.

நிராகரிப்பவர்கள் யாரென்று பார்த்தால் உலகியல்சூழலில் தோற்று, இலக்கியவாதி என்ற போர்வைக்குள் ஒடுங்கிக்கொண்டிருக்கும் எளிய ஆத்மாக்கள்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியவாதிகளும் இல்லை. வேறெந்த அடையாளமும் இல்லை என்பதனால் இலக்கியவாதிகளாகத் தோற்றமளிக்கிறார்கள்.

டேல் கார்னகி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அக்காலகட்டத்தில் பிரபல ஊடகங்களில் பேசப்பட்டது. நானும் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்- அது எவ்வகையிலும் அவருடைய சொற்களின் ஆற்றலைக் குறைப்பதில்லை, அவருடைய பங்களிப்பை மறுப்பதுமில்லை. ஆனால் இன்று தெளிவான செய்திகள் கிடைக்கின்றன.

டேல் கார்னகிக்கு Hodgkin’s lymphoma என்னும் ரத்தப்புற்றுநோய் இருந்தது. அதற்கு அன்று முறையான சிகிழ்ச்சைகள் இல்லை. அது அளிக்கும் வலியும் உளக்கொந்தளிப்பும் சோர்வும் அவருக்கு இருந்தன. தனிமையில் இருந்தபோது அவர் உயிர்பிரிந்தது. அதற்கு அவர் எடுத்துக்கொண்ட வலிநீக்கு மருந்துகளால் அவர் உயிர்பிரிந்திருக்கலாம். மதுவுடன் வலிநீக்கு மருந்து தவறாக வேதிவினை புரிந்தது என்பதே இன்றுள்ள ஊகம்.

அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று ஓர் ஊகம் அன்று பரப்பப்பட்டது. அதற்குச் சான்று ஏதுமில்லை. ஆனால் தற்கொலை செய்துகொண்டிருந்தால்கூட அது துணிச்சலான முடிவுதான். ஒருவர் தன் நோயை கடைசிவரை தாங்கிக்கொள்ள வேண்டும் என்று தெய்வ ஆணை ஒன்றும் இல்லை. அவர் எதையும் அஞ்சியோ தயங்கியோ சோர்வுற்றோ சலிப்புற்றோ தற்கொலை செய்யவில்லை. தன் பணி முடிந்தது, கிளம்பலாம் என ஒருவர் நினைத்தால் அது உயரிய நினைவே.

Ralph Waldo Emerson

இன்று அமெரிக்கச் சூழல் இங்கே வந்துவிட்டது. இன்று இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பெருநகரங்களில் வாழ்கிறார்கள். ஒன்றைக் கவனிக்கிறேன், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் பணியாற்றிய அனுபவக் கல்வி இல்லாத பெருநகர் இளைஞர்களுக்கு அடிப்படையான பொதுநாகரீகம், பழக்கமுறை தெரிவதில்லை. அவர்கள் பொது இடங்களில் மிகையாக, அபத்தமாக புழங்குகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவற்றை சினிமாக்களில் இருந்து கற்றுக்கொண்டு நடிக்கிறார்கள்.

இன்று இந்தியாவில் டேல் கார்னகி வகை எழுத்து பல்லாயிரக்கணக்கில் தேவையாகிறது. பல தளங்களில். பல நிலைகளில். இந்தியச்சூழலில் நின்று இந்திய யதார்த்ததைப் பேசும் நூல்கள்.

இந்நூல்கள் அனைத்துக்கும் அடிப்படையானவை எமெர்சனின் நூல்கள். ரால்ஃப் வால்டோ எமர்சன் என் ஞானகுருவாக நிலைகொள்வது அவருடைய நம்பிக்கையூட்டும் கட்டுரைகளால்தான். வாழ்க்கையின் அருவமான சாராம்சத்தில் இருந்து ஆற்றலைப்பெற்று தூலமான அன்றாடத்திற்கு கொண்டுவருவதற்கான வழிகள் கொண்டவை எமர்சனின் கட்டுரைகள், உரைகள்.

நான் என் இளமையில் எமர்சனை சரிவரப் படிப்பதற்காக அவரை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அதில் ஒருபகுதி இயற்கையை அறிதல் என்றபேரில் நூலாக வெளிவந்துள்ளது. உங்களுக்கு இன்று உடனடியாகத் தேவை எமர்சனின் SELF-RELIANCE என்னும் கட்டுரை

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-17
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ‘அமைதி அறக்கட்டளை’ பால் பாஸ்கர்