சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-4

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச்சூழலில் அவ்வப்போது கண்ணுக்குப்படும் பெயராக இருந்தாலும் அதிகம் படிக்கப்படாதவர் அவர் என்று நினைக்கிறேன். விருதுச்செய்திகளுக்குப்பின் தேடியபோது அவர் பற்றி பதாகை வெளியிட்டிருக்கும் சிறப்புமலரை பார்த்தேன். அதில் நிறைய கட்டுரைகள் இருந்தன.

நான் அவருடைய படைப்புக்களை இனிமேல்தான் படிக்கவேண்டும். இணையத்தில் கிடைக்கும் படைப்புக்களை வாசித்தேன். பெரும்பாலான கதைகள் கதைச்சுருக்கங்கள் போலவே உள்ளன. கதைகளை விரிவாக எழுதுவது, கதாபாத்திர இயல்புகளை துலங்கவைப்பது ஆகியவற்றில் அவர் அதிக ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய கதைகளை வற்றல்போல என்று சொல்லலாம். உலர்ந்தபழம்போல. நாம் நம் சுவையால் அவற்றை மாற்றிக்கொள்ளவேண்டும். சா.கந்தசாமி இத்தகைய கதைகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில்  அப்டைக் இம்மாதிரியான கதைகளை எழுதியிருக்கிறார்.

சுரேஷ்குமரா இந்திரஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

எஸ்.சிவக்குமார்

***

அன்புள்ள ஜெ

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விருது அளிக்கப்படுவதற்கு வாழ்த்துக்கள். அவரைப்போன்ற ஒருவரை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இன்று இலக்கியவிருதுகள் தேவையாகின்றன. இந்த விருது ஏன் அளிக்கப்படுகிறது என்பதை இனிமேல் உங்கள் தளத்தில் வரும் கட்டுரைகள் தெளிவாக காட்டும் என நினைக்கிறேன்.

ஜான் ஓ ஹாரா ஒரு இண்டர்வியூவில் சொன்னார். ரயில்பெட்டிகள் கப்ளிங் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பதுபோலத்தான் வாழ்க்கை என்று. எதனால் ஒன்று இன்னொன்றுடன் தொடர்புகொண்டிருக்கிறது, ஏன் இழுக்கிறது என்று சொல்லவே முடியாது. நான் அந்த இணைப்பை உருவாக்குவதில்லை, இணைப்பில்லாமல் அவை ஓடுவதிலிருக்கும் மர்மத்தை மட்டுமே சொல்கிறேன் என்று அவர் சொன்னார்.

நான் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கதைகளை வாசிக்கும்போதும் அந்த உணர்ச்சியையே அடைந்தேன். அவை வாழ்க்கையின் அன்றாடச்செயல்பாடுகளில் இருக்கும் ஒரு மர்மத்தையோ தற்செயல் அளிக்கும் வியப்பையோ சொல்கின்றன. கதைகள் மிக மென்மையாக ‘எவ்ளவு ஆச்சரியம் இல்லை?”என்று சொல்லிவிட்டு நின்றுவிடுகின்றன. மென்மையாகவும் உள்ளடங்கியும் எழுதுபவர். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது பாராட்டுக்குரியது.

எம்.ஸ்ரீதர்

***

அன்புள்ள ஜெ,

நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் அலையும் சிறகுகள் என்ற தொகுதியை வாசித்திருந்தேன். அதில் ஒரு பெருநகரத்தனிமை, பெருந்திரளில் உணரநேரிடும் அர்த்தமில்லாமையும் சலிப்பும் பதிவாகியிருந்தன. நானும் மதுரையிலே வளர்ந்தவனாகையால் அப்போது அந்தக்கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன்.

நீண்ட இடைவேளைக்குப்பின் அவருடைய நடனமங்கை, மறைந்து திரியும் கிழவன் ஆகிய தொகுதிகளை வாசித்தேன். முந்தைய கதைகளில் ஓர் அர்த்தமில்லாமையை வெறும் சம்பவவிவரணை வழியாகச் சொல்லமுயன்றார். இப்போது கதைகளின் வடிவில் வாழ்க்கையின் சில கூறுகளைச் சொல்லமுயல்கிறார் என்று படுகிறது. இந்தக்கதைகளில் சிலசமயம் அரிய படிமங்கள் உருவாகிவருகின்றன. அந்தக்கதைகள்தான் மிகவும் முக்கியமானவை என்று தோன்றுகிறது.குறிப்பாக மறைந்து திரியும் கிழவனை உதாரணமாகச் சொல்லலாம்

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பாஸ்கர் எம்.

முந்தைய கட்டுரைவெண்முரசில் கனவுகள் – அருணாச்சலம் மகாராஜன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- வாசிப்பு