விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம்.  இன்று நான் படித்த இரு விருதுச்செய்திகளும் எனக்கு மகிழ்ச்சியை அளித்தன. ஒன்று ஜெயகாந்தன் விருதுக்காக மூத்த எழுத்தாளரான இராஜேந்திரசோழன்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி. மற்றொன்று விஷ்ணுபுரம் விருதுக்காக தமிழில் மிகமுக்கியமான எழுத்தாளரான சுரேஷ்குமார் இந்திரஜித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி. இரண்டு செய்திகளுமே எனக்கு நிறைவைத் தருகின்றன.

சுரேஷ்குமார் இந்திரஜித் நாம் எழுத வந்த காலத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். கணையாழி இதழில் வெளிவந்த அவருடைய ‘அலையும் சிறகுகள்’ எனக்கு மிகவும் பிடித்த கதை. அந்தச்  சின்னஞ்சிறு கதைக்குள் அவர் புகைப்பட ஆல்பம் மாதிரி பல தரப்பட்ட மனிதர்களின் சித்திரங்களைத் தீட்டித் தொகுத்துவைத்திருப்பார். ஒரு கோட்டோவியத்துக்கு ஆறேழு வரிகளே அவருக்குப் போதுமாக இருந்தன. அந்த நேர்த்தி அவருக்கு எப்படியோ வசப்பட்டிருந்தது. நாற்பது ஆண்டுகளாக அந்தக் கலைநேர்த்தியை மேலும் மேலும் மெருகேற்றி வளர்த்துக்கொண்டே இருப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  அலையும் சிறகுகள் சிறுகதையில் தேங்காய் எண்ணெய் பாட்டிலுக்குள் விழுந்து மிதக்கும் எறும்புகளைச் சித்தரிக்கும் ஒரு காட்சியை அவர் எழுதியிருப்பார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என் மனத்தில் அந்தப் படிமம் அப்படியே படிந்திருக்கிறது. அவருடைய மாபெரும் சூதாட்டம், நானும் ஒருவன் தொகுதிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவருடைய கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் நாவலை போன வாரம் தான் படித்துமுடித்தேன். ஒவ்வொரு நாளும் சில காட்சிகளை அசைபோட்டு மகிழ்வேன். இன்று அசைபோட்ட  தருணத்தில் அவருக்கு விருது கிடைத்த செய்தியையும் சேர்த்து நினைத்துக்கொண்டேன்.

சுரேஷ்குமார் இந்திரஜித்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உரியவரை உரிய நேரத்தில் கெளரவித்திருக்கும் உங்களுக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு விஷ்னுபுரம் விருது வழங்கப்படும் செய்தியை வாசித்தேன். சுரேஷ்குமரா இந்திரஜித் அவர்களின் படைப்புக்களை நான் வாசித்ததில்லை. உங்கள் தளத்தில் அவருடைய படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளை கண்டிருக்கிறேன். வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன்.

விஷ்ணுபுரம் விருது பெறும் படைப்பாளிகளை பெரும்பாலும் அவ்விருது வழியாகவே அறியநேர்கிறது. ஆனால் அவர்களைப்பற்றிய விரிவான கட்டுரைகளும் குறிப்புகளும் வருவதனால் அவர்கள் சிறப்பாகவே நம் கவனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அபியின் கவிதைகளை நான் சாதாரணமாக வாசித்திருக்கவே முடியாது. அவருக்கு விருது கிடைத்து, அவர் கவிதைகளைப்பற்றிய கட்டுரைகளும் நிறைய வந்தமையால்தான் அவர் படைப்புலகுக்குள் என்னால் நுழையவே முடிந்தது. சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புலகுக்குள்ளும் என்னால் நுழையமுடியும் என நம்புகிறேன்

எஸ்.மணிவண்ணன்

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்படும் செய்தியை அறிந்தேன். நான் அவருடைய நடனமங்கை என்ற தொகுதியை மட்டுமே வாசித்திருக்கிறேன். அவருடைய படைப்புக்கள் மிகக்குறைவான சொற்களில் எழுதப்படுபவை. என்ன நடக்கிறதென்று மட்டுமே சொல்பவை. அந்தச் சுருக்கமான கதைக்குள் நம்மால் திளைக்க முடிவதில்லை. நாம் ஒரு செய்தியை வாசிப்பதுபோல அவர் படைப்புக்களை வாசிப்போம். ஆனால் அதுகூட ஓர் அழகுதான். அந்தப்படைப்பு நம் மனதில் கொஞ்சநாள் இருக்கும். ஒரு கதையாக அது நம் மனசிலேதான் மாறும். அவருடைய கதைகளிலுள்ள நுட்பங்கள் அதிகமும் அன்றாடவாழ்க்கை சம்பந்தமானவை. நாம் காணும் வாழ்க்கையிலேயே நாம் காணத்தவறும் எத்தனை சூட்சுமமான விஷயங்கள் உள்ளன என்று அவர் காட்டுகிறார். மிகச்சிறந்த தேர்வு. பாராட்டுக்கள்

ராஜ்குமார் ஆர்

***

முந்தைய கட்டுரைசொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave
அடுத்த கட்டுரைஉடல்நான்-கடிதங்கள்