தன்னம்பிக்கை நூல்கள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு ,

தன்மீட்சி நூல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தேன்.நூல் கிடைக்கப்பெற்றவுடனேயே வாசிக்க தொடங்கிவிட்டேன்.அதில்   இடம் பெற்றிருந்த சில கட்டுரைகளை இணையத்தில் முன்னரே வாசித்திருந்தேன். இருப்பினும் , அக்கடிதங்களை ஒரு தொகுக்கப்பட்ட நூலாக வாசிக்கும்போது அது தரக்கூடிய செயலூக்கமும் , எழுச்சியும் அளவில்லாதவை .

தங்களுடைய எழுத்துகளை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வருகிறேன் .தற்போது மதுரையில் வசித்து வருகிறேன்.வாசிக்கும் பழக்கம் எனக்கு சிறுவயது முதலே இருந்தது.ஆரம்பத்தில் , வணிக சுயமுன்னேற்ற நூல்களில் இருந்தே வாசிப்பை தொடங்கினேன் .பின்னர் வரலாற்று ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாசித்தேன்.பதின்வயதுகளில் அவை ஊக்கமும் , தன்னம்பிக்கையும் தந்தன.இயல்பாகவே கனவுகள் ,லட்சியம் ஆகியவற்றின் மீது ஒரு பிடிப்பு இருந்தது.

கல்லூரியின் தொடக்க நாட்களில் தான், காந்தியின் சத்தியசோதனையை வாசித்தேன்.அது எனக்கு மேலும் ஒரு தன்னம்பிக்கையை அளித்தது .

கல்லூரி முடித்த பிறகு ,போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யலாம் என்று முடிவு செய்தேன் .ஆனால், கல்லூரி முடித்தபிறகு தான் இயல்பாகவே நட்பு வட்டம் , தொடர்புகள் அதிகரிக்கிறது.பல விவாதங்கள் , உரையாடல்களில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது .

அத்தகைய இளமைக்கால விவாதங்களின் இறுதியில் சோர்வையே உணர்ந்தேன் . இத்தனை நாள் எனக்குள் நானே உருவாக்கி கொண்ட ஏதோ ஒன்று உடைந்து நொறுங்குவதை உணர்ந்தேன்.என் வாசிப்பின் போதாமைகளை உணரத் தொடங்கினேன்.கனவு ,இலட்சியங்கள் நம்மை நாமே கற்பனை செய்து ஏமாற்றி கொள்ளக் கூடிய ஒன்றா என்று எண்ண தொடங்கினேன். மேலும் எப்படி முன்னே செல்வது என்ற திசையும் தெரியவில்லை.போட்டித் தேர்வுக்கான படிப்பிலும் ஆர்வமின்றியே இருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான்  , புனைவிலக்கியத்தை வாசிக்க தொடங்கினேன்.வாசிக்க தொடங்கிய பின்னர், மற்ற செயல்களிலோ அன்றாடத்திலோ மனம் செலுத்த முடியவில்லை . (பின்னர் தான் உணர்ந்துகொண்டேன் என் செயலின்மைக்கு ,இலக்கியத்தை ஒரு காரணமாக உருவகித்து கொண்டேன் என்று  )  தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் ,இரண்டு மாதங்கள் வேலைக்கு சென்றேன் , பின்னர் அது நிறைவை தராததால் நின்றுவிட்டேன் .செயலின்மையின் இனிய மதுவை என்னை அறியாமல் நான் சுவைத்து கொண்டிருந்த நாட்கள் அவை.

அப்போது தான் , யூ டியூபில் ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற உரையை கேட்டேன். அந்த உரை நீண்டநாள் ,உறக்கமின்றி சிந்திக்க வைத்த உரை . அதன் வழியாக ‘இன்றைய காந்தி’ என்ற நூலை வந்தடைந்தேன் .அவ்வாறு தான், ஜெ .அவர்களின் படைப்புலகத்தில் வாசகனாக நுழைந்தேன்.

இன்றைய காந்தி நூல் எனக்கு புதிய காந்தியை , ஒரு நவீன காந்தியை எனக்கு அடையாளம் காட்டியது என்றே சொல்வேன்.அந்நூல் கனவுகளுக்கு, தன்னலமில்லா செயல்களுக்கு வரலாற்று- கால வெளியில் என்ன இடம் என்பதை எனக்கு தெளிவாக காட்டியது . பெருஞ்செயல்கள் வரலாற்றின் வெளியில் எப்படி விதையாக உருமாறி , காடாக விளைந்து மாறா பசுமையை மானுடத்திற்கு தரும் என்ற சித்திரத்தை நான் கண்டடைந்தேன். (அதைப்  பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் )

அந்த வாசிப்பின் நீட்சியாக, பின்னர் ‘தன்னறம்’ என்ற கட்டுரையை (புனைவாகவும் வாசிக்கலாம்) வந்தடைந்தேன்.மிகப்பெரிய திறப்பை அக்கட்டுரை அளித்தது .

“எந்த துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது .அடுத்தது கற்பனை .அதற்கடுத்ததே தர்க்கமும் அதை வலுப்படுத்தும் கல்வியும் எல்லாம் …..அது மிகச்  சிறந்த ஒரு வழிமுறை .ஆனால் மனதுக்குள் அதற்கு அந்தக் குழந்தை இருந்துகொண்டே இருக்க வேண்டும். நவீன கல்விமுறை கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை அழிக்கிறது .அதை மீறி அந்த குழந்தையை தக்க வைத்திருப்பவர்களே மேதைகள் ”  என்ற வரிகளை மீள மீள வாசித்து கொண்டே இருந்தேன் .

அறிதலென்பது தர்க்கம் , கற்பனை , உள்ளுணர்வு என்ற மூன்றின் வழியாக நிகழ்வது. நம்முடைய உள்ளுணர்வை, தர்க்கத்தினால் எதிர்கொள்ளும் போது சில இடறல்கள் உண்டாகிறது .அதுவே சில வேளைகளில் குழப்பங்களையும் ,செயலின்மையையும்  தோற்றுவிக்கிறது என்று எண்ணுகிறேன். அதிலிருந்து நம்மை மீட்டெடுத்துக்கொள்ள , ஒரு குழந்தைத்தன்மையை நமக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதாயுள்ளது .அதற்கு வாசிப்பும் , இலக்கியமும்  எனக்கு துணை செய்தது .

அதே நேரத்தில், உள்ளுணர்வு சார்ந்து இயங்கும்போது இயல்பாக ,உலகியல் மீது உருவாகும் விலக்கத்தை , உணரவைத்தது ‘நான்கு வேடங்கள்’ என்ற கடிதம். யோசித்து பார்க்கும்போது , இரண்டு வகையான அலைக்கழிப்புகள் எனக்குள் நிகழ்ந்து கொண்டே இருந்ததை  பார்க்க முடிகிறது .

1.தர்க்கத்தின் பொருட்டு ,எதார்த்தத்தின் பொருட்டு கனவுகளையும்,லட்சியங்களையும் சிறுமையென எண்ணுவது .

2.கனவுகளின் பாதையில் , உள்ளுணர்வோடு பயணிக்கிறோம் என்பதாலேயே அன்றாட செயல்களிலிருந்து விலக்கம் கொள்வது .

இதிலிருந்து மீண்டு , தன்னறத்தை கண்டு கொள்ள ,செயலுக்கு திரும்ப, தங்களுடைய இந்த கட்டுரைகள் மற்றும் வாசக கடிதங்கள் பெரிதும் உதவியிருக்கிறது. இந்நூலின் பல வரிகளை கணிணியின் முன்  கண்ணீரோடு வாசித்த நாட்களை மீண்டும் நினைத்துப்பார்க்கிறேன் .

” வாழ்க்கையின் சாரமென்ன என்ற  கேள்விக்கு -தர்க்கப் பூர்வமான ஒரு பதில் இருக்க முடியும் என்று நம்புவதே மனிதனின் மாயை” என்ற வரிகள் ஒரு கூரிய வாளென எதையோ எனக்குள் வெட்டிச்  சென்றது .

இன்று மீண்டும்  தன்மீட்சி தொகுப்பை வாசிக்கும்போது மீண்டும் பின்னோக்கி பார்க்கிறேன் .என் தத்தளிப்புகள் ,அசட்டுத்தனங்களை எண்ணி புன்னகைக்கிறேன்.ஆனால் இப்பயணத்தின் வழியாகவே,அறிதலின் இன்பத்தையும் ,கற்றலின் உவகையயும் உணர்ந்தேன் என்று சொல்லலாம் .

‘தன்மீட்சி’ வாசிப்பில்,எந்த ஒரு வாசகரும் , இது என்னுடைய கேள்வி ,இதைத்தானா நான் தேடிக்கொண்டிருந்தேன் ? என்று நினைக்கக்கூடிய ஒரு தருணம் நிகழும் .அதுவே இந்நூலின் சிறப்பு என்று நினைக்கிறேன் .

இந்நூலின் அட்டைப்படத்தை பார்த்து , எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் – என்ன சுய முன்னேற்ற நூலா ? என்று .

ஆரம்பத்தில் ,வணிக சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன்.பெரும்பாலும் அவை

1.போர்க்கள ஆவேச மொழியில் நம்முடன் பேசுகின்றன.

2.புறச்சவால்களை பேசக்கூடியவை, .அகத்தடைகளை அவை பேசியதில்லை .அப்படியே பேசினாலும் , அதற்கு ஒரு செயற்கையான தீர்வை முன்மொழியக்கூடியதாகவே இருக்கும் .

3.நம்முடைய செயல்களை ,முயற்சிகளை பிரபஞ்சப் பேரிருப்பின் முன் வைத்து அவை உரையாடுவதில்லை. .

தன்மீட்சியை ஒரு வணிக சுய முன்னேற்ற நூலோடு என்னால் ஒப்பிட முடியாது .அது ஒரு உரையாடல் நூல் என்றே நினைக்கிறேன். மனித அகம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் , கேட்டுக்கொள்ள கூடிய கேள்விகளை -எத்தயக்கமும் இன்றி எதிர்கொள்ள கூடியது அதன் அக நாடகங்களை வெளிப்படையாய் ,எந்த ஈவு இரக்கம் இன்றியும் அணுகி பார்ப்பதனாலேயே, ஒளிவின்றி உரையாடுவதனாலேயே   அது ஒரு விடுதலை உணர்வை அளிக்கிறது .

இப்போது  குடிமைப் பணி தேர்வுக்காக தயாராகி வருகிறேன். எந்த சோர்வும் இப்போது பெரும்பாலும் இல்லை. மனம் குவிந்து பயில முடிகிறது , ஏனென்றால் வெற்றி, சாதனைகள் என்பவற்றின் வரையறைகள்  எனக்குள் மாறிவிட்டது என்று தோன்றுகிறது  .இலக்கியம் என்னை மீட்டு கொள்ள,என்னை நானே கண்டடைய பல சாத்தியங்களை உருவாக்கி தருகிறது.தினமும் வாசிப்பு ,குடும்பத்தோடு அதை பகிர்ந்து கொள்வது. நட்பு வட்டத்திற்குள், இலக்கியக்கூடுகைளில் பங்காற்றுவதென இனிதாய் மாறியுள்ளது வாழ்க்கை.

இந்நூலின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு அளித்த வாசகர்களுக்கும் ,தொடர் இலக்கியச் செயல்பாடுகளுக்கு இடையிலும் வாசக கடிதங்களுக்கு பதில் எழுதிவரும் ஆசான் (ஜெ ) அவர்களுக்கும் ,நூல் வடிவமைப்பு செய்து வெளியிட்ட தன்னறம் நூல்வெளிக்கும் நன்றியும் ,அன்பும் .

அன்புடன்

முத்துராஜா 

எம்.எஸ்.உதயமூர்த்தி

அன்புள்ள முத்துராஜா

தன்மீட்சி நூலை இப்போது நானே புரட்டிப்பார்த்தேன். அது ஒவ்வொரு வாசகரிடமும் செலுத்தும் செல்வாக்கை நானே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது ஏன் என்று அறிய நானே விரும்பினேன்

வழக்கமான ‘தன்னம்பிக்கை நூல்கள்’ உலகியல்செயல்களை திறம்படச் செய்வதைப் பற்றிச் சொல்கின்றன. அவை தேவையானவையே என நான் நினைக்கிறேன். வரலாறு முழுக்க ஏதோ வடிவில் அவை இருந்துகொண்டுதான் இருந்தன.

நானும் ஒரு காலகட்டத்தில் தன்னம்பிக்கை நூல்களை ‘அறிவுஜீவிக்குரிய’ ஏளனத்துடன் கண்டவன்தான். எனக்கு அவை தேவையும்படவில்லை. ஆனால் பின்னர் அந்நூல்களால் வாழ்க்கையின் இடர்மிக்க காலங்களைக் கடந்த சிலரை நான் காணநேர்ந்தது. வைரமுத்துவின் வரிகளால் வாழ்க்கையின் அலைகளை கடந்த சிலரை ஒருமுறை தஞ்சையில் சந்தித்தேன்.

பலசமயம் வெளியே இருந்து வரும் எளிமையான ஒரு வரி நமக்குள் இருக்கும் அழுத்தமான எண்ணம் ஒன்றை நாமே கண்டுகொள்ள வைக்கும். நம் உள்ளம் அலைகுழம்பியிருக்கும்போது அவ்வண்ணம் ஒரு வரி நமக்கு தேவைப்படும். மிக எளிமையான விஷயங்களைக்கூட நம்மால் வகுத்துக் கொள்ளமுடியாத சூழல்கள் உண்டு. ஒரு நூல் அதை புறவயமாகப் பேசுகிறது, அதன்வழியாக வகுத்துவிடுகிறது. அது நம் அகத்தையும் வகுத்துவிடுவதைக் காண்கிறோம்

அது மொழியின் அடிப்படை இயல்பு. மொழி எந்நிலையிலும் புறவயமான ஒர் அமைப்புதான். ஆனால் அதன் ஒரு நுனி அகத்தில் நுழையமுடியும், அருவமானதும் பொருளற்றதும் நிலையற்றதுமான விஷயங்களை தொடமுடியும். இந்த இரட்டைத்தன்மை மொழியை ஒரு பாதையாக ஆக்குகிறது.

இப்படிச் சொல்கிறேன். அருவமானவையும், பொருளற்றவையும், நிலையற்றவையுமான அகநிகழ்வுகளை பருவடிவமான, பொருள்கொண்ட, நிலைத்த, புறநிகழ்வுகளாக ஆக்கும் செயல்பாட்டையே மொழி என்கிறோம்.

ஆகவே மொழியில் ஒன்றை வெளிப்படுத்தினாலே அதற்கு புறவயத்தன்மை வந்துவிடுகிறது. திட்டவட்டமானதாக ஆகிவிடுகிறது. ஒரு அகக்கொந்தளிப்பை எழுதினாலே அது தெளிவடைந்துவிடுகிறது. என்னவென்று தெரியாத ஓர் உணர்வை ஒருவரிடம் சொல்லமுடிந்தாலே அது வரையறைசெய்யப்பட்டுவிடுகிறது

இந்த இயல்பை நம்பியே உளமருத்துவம் இங்கே செயல்படுகிறது. உளமருத்துவம் என்பது நம்மை பேசவைப்பதுதான். நாம் பேசப்பேச நாமே நம்மை வகுத்துக்கொள்வோம், தெளிவடைவோம். நாம் பேசுவதற்குரிய ஒரு சூழலை உளவியலாளர் உருவாக்குகிறார். அதற்கான ஒரு நிலையான சட்டகமும் அவரிடம் இருக்கிறது. அதையே அவர் கேள்விகளாக முன்வைக்கிறார், அதன்வழியாகப் பேசவைக்கிறார்.

அதேபோல புறத்தே ஒரு விஷயத்தை சீராக ஒழுங்காகச் செய்தால் அகம் சீரடைவதும் ஓர் ஆச்சரியம்தான். மனம் புறவுலகை அறியமால் நடித்துக்கொண்டிருக்கிறது என்பதே காரணம். குழம்பிப்போன சிந்தனைகள் கொண்ட ஒருவர் ஒரு கூடையை முடையத் தொடங்கினால் சிந்தனைகள் ஒழுங்கமைவதைக் காண்பார்.

புத்தகம் இந்த இருநிலைகளிலும் ஒருவரை ஆற்றுப்படுத்துகிறது. அது வாசிப்பவரின் அக ஓட்டங்களுக்கு மொழியை அளிக்கிறது. அவர் தன் அகத்தை மொழியாக்கிக்கொள்ளுந்தோறும் தன்னை கண்டடைந்து வகுத்துக்கொள்கிறார். புத்தகம் என்பது அத்தியாயங்கள் துணைத்தலைப்புக்கள் கருத்துக்களின் அடுக்கு என ஒரு சீரான வடிவம் கொண்டது. அவ்வடிவம் வாசகரின் அகத்தை வடிவமைக்கிறது

அதோடு நம்சூழலில் ஒருசில சூழல்காரணங்களும் உள்ளன. இந்த நாடு பல்லாயிரமாண்டுக்காலம் நிலப்பிரபுத்துவ சமூகப்- பண்பாட்டுச் சூழலில் திகழ்ந்தது. பல குடிகளும் குலங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமலேயே வாழ்ந்தவை. பல கிராமங்கள் வெளியுலகை அறியாமலேயே நீண்டகாலம் திகழ்ந்தவை.அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் வெளியுலகைச் சந்திப்பது பெரும் அறைகூவல். அவர் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு, தன் வழிகளைக் கண்டடைந்து, தனக்கான வாசல்களை தட்டியோ உடைத்தோ திறந்துதான் முன்னேறமுடியும்.

இங்குள்ள சாதிப்படிநிலைகள் மேலும் சிறிய அறைகள உருவாக்குகின்றன.சாதி வட்டாரம் ஆகியவற்றுடன் இணைந்தது பேச்சுமொழி. பெரும்பாலானவர்களால் வட்டாரமொழியில், சாதிக்குரிய மொழியிலேயே பேசமுடியும். பேச்சினாலேயே அவர்கள் சிறுவட்டத்துள் அடைபடுகிறார்கள். அதோடு இணைந்தது தோற்றம்.  நம் மக்கள் வெவ்வேறு தோற்றங்கள் கொண்டவர்கள். கரியவர்கள் உண்டு, குள்ளமானவர்கள் உண்டு. அதுவும் அவர்களுக்கான தடைகள். இந்த தடைகளை அவர்கள் தாண்டியாகவேண்டும்

இவை ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் என்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றை கடக்க அவர்களுக்கு சில ஊக்கச் சொற்களும் சில முன்னுதாரணக் கதைகளும் தேவைப்படலாம். தன் பிரச்சினை தனக்குரியது மட்டுமல்ல, அது உலகமெங்கும் உள்ளது என அறிவதேகூட பெரிய விடுதலை. வெல்லமுடியும் என்ற சொல்லே பெரிய ஊக்கவிசையாக இருக்கலாம்.

ஆகவே தன்னம்பிக்கைநூல்கள் தமிழ்ச்சூழலில் மிகப்பெரிய சமூகப்பங்களிப்பை ஆற்றுகின்றன. அவற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏளனம் செய்வது பிழையானது. அவை இன்னும்கூட வரவேண்டும், தொலைக்காட்சிகளில்கூட தன்னம்பிக்கை உரைகள் வரவேண்டும் என நினைக்கிறேன். தன்னம்பிக்கைக்கான யூடியூப் சேனலைக்கூட எவராவது ஆரம்பிக்கலாம் என்பது என் ஆலோசனை.

தமிழ்ச்சூழலில் மூன்றுவகை நூல்கள் மிகுதியாக விற்கின்றன. சமையல்நூல்கள், சடங்குசார்ந்த ஆன்மிகநூல்கள், தன்னம்பிக்கை நூல்கள். தமிழ்நாட்டில் நடக்கும் சமூகமாற்றம் சார்ந்தவை இந்நூல்கள்.

இங்கே ஏராளமான அடித்தளச் சாதிகள் கடும் உடலுழைப்பை நம்பி வாழ்ந்தவை. மேய்ச்சல்நிலத்து நாடோடிச்சாதிகள்கூட இங்கே உண்டு. அவர்களெல்லாம் இன்று நடுத்தரவாழ்க்கைக்கு வந்துவிட்டனர். அவர்களிடம் பாரம்பரியமான சமையல்முறைகள் இல்லை. சுடுவது அவிப்பதுபோன்ற எளிய சமையல்முறைகள்தான். ஆனால் வீட்டுக்கு விருந்தினர் வந்துகொண்டிருக்கிறார்கள். சமூக உறவாடல் தவிர்க்கமுடியாதது. ஆகவே விதவிதமான சமையல்முறைகள் தேவை. சமையல்நூல்கள் அந்தத்தேவையை நிறைவேற்றுகின்றன.

இங்கே ஒரு பக்கம் திராவிட இயக்கம் என்னதான் கூச்சலிட்டாலும் பெருந்திரளாக மக்கள் இந்துமதத்தின் மையப்பண்பாடு நோக்கியே செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுதெய்வ வழிபாட்டாளர்கள். பெருந்தெய்வக் கோயில்களுடன் திருவிழா, மண்டகப்படி என்ற அளவில் மட்டுமே இணைக்கப்பட்டவர்கள். இன்றைக்கு அவர்களுக்கு வீட்டில் பூஜையறை உள்ளது. சடங்குகள் தேவையாகின்றன. பல்வேறுவகையான பண்டிகைகளும் நோன்புகளும் தேவையாகின்றன. கணபதிஹோமம் செய்வதே வழக்கத்திற்கு வந்துவிட்டது.அவற்றை எளிமையாக விளக்கும் நூல்களின் பெருக்கம் இதனால் உருவாவதே. இவற்றில் சோதிடநூல்கள், தலப்பெருமைவிளக்கும் நூல்கள், கோலநூல்கள், பூசைவிளக்கநூல்கள் என பல வகை உண்டு.

தன்னம்பிக்கைநூல்களும் இவ்வகையிலேயே இங்கே தேவையாகின்றன. அவை வெவ்வேறு சிற்றறைகளில் இருந்து பொதுவெளிக்கு வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவை, ஊக்கமளிப்பவை. இன்று ஒரு வணிகச்சூழலுக்கு, பணிச்சூழலுக்கு வரும் கிராமத்து அடித்தள இளைஞனுக்கு அடிப்படை புழக்கநாகரீகங்களே தெரியாமலிருக்கலாம். எப்படி பேசவேண்டும், எப்படி தன்னை முன்வைக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லித்தரவேண்டியிருக்கிறது. ஒரு பொதுச்சூழலில் வரும் சிக்கல்களில் பெரும்பகுதி சற்று தைரியமாக எதிர்கொண்டலே தீர்ந்துவிடக்கூடியவை என்று அவனுக்கு தெரியாமலிருக்கலாம்

பிஎஸ்என்எல் போன்ற தொழிற்சூழலின் தொழிற்சங்கப்பணியில் பெரும்பகுதி இதையெல்லாம் சொல்லிக்கொடுப்பதகாவே இருந்தது. அலுவலகத்தில் உரத்தகுரலில் பேசக்கூடாது, சட்டையின் மேல்பட்டனை போடவேண்டும், தேவையில்லாமல் பிற ஊழியர்களின் தோளிலோ கையிலோ தொட்டுப்பேசக்கூடாது, நமதல்லாத பொருட்களை எடுத்து ஆராயக்கூடாது என்றெல்லாம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொடுப்போம்.

பல கிராமத்து இளைஞர்கள் குனிந்து மண்பார்த்தே பேசுவார்கள். கண்களைப் பார்க்கவே பல ஆண்டுகளாகும். மறுஎல்லையில் எதற்கெடுத்தாலும் உச்சகட்ட உணர்ச்சியுடன் கூச்சலிட்டு பூசலிடுபவர்களும் உண்டு. அதற்கெல்லாம் சாதியப்பின்னணி, வட்டாரப்பின்னணி உண்டு. அதையெல்லாம் பொறுமையாகப் பழக்கி எடுக்கவேண்டும். ஏன், கழிப்பறையில் நீர்விடவேண்டும் என்பதையே நானெல்லாம் பலநூறுமுறை சொல்லிக்கொடுத்திருக்கிறேன். மேலதிகாரி எஜமான் அல்ல, பணியில் நமக்கு மூத்தவர் என அனேகமாக எல்லா பேச்சிலும் சொல்லவேண்டும்.

தன்னம்பிக்கைநூல்கள் அவ்வகையில் ஆற்றும்பணி மிகமுக்கியமானது. ஒரு சமகால அறிவியக்கம் அது என்றுகூடச் சொல்வேன். அதன் தொடக்ககட்ட ஆளுமைகளான எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இன்று, பெண்களுக்கான தன்னம்பிக்கைநூல்கள் நிறைய வரவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன். சிவசங்கரி , அனுராதா ரமணன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் பொதுவெளியில் அவர்கள் இன்று சந்திக்கும் சவால்கள் சிக்கலானவை. எப்படி தங்களை முன்வைப்பது என்பது என்பது அவர்களின் பெரிய குழப்பம்.

பொதுச்சூழலில் சம்பிரதாயமாக, அமைதியாக இருந்தால் கட்டுப்பெட்டியாகத் தெரியும். சரளமாகப் பழகினால் ஆண்களின் தொந்தரவு தாளமுடியாமலாகும். எங்கே எப்படி வெளிப்படுத்துவது என்பதெல்லாம் குழப்பமானவை. அதற்கு அரைவேக்காட்டுப் பெண்ணியவாதிகளின் உசுப்பல்களும் சிலும்பல்களும் பயன்படாது. அனுபவமும் நிதானமும் கொண்டவர்களின் சொற்கள்தேவை. தமிழகத்தின் வெவ்வேறு பண்பாட்டுச்சூழல்களை அறிந்தவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்

ஆனால் தன்னம்பிக்கைநூல்கள் ஓர் எல்லைக்குமேல் பொருள்படுவதில்லை. சிந்திப்பவனின் சிக்கல்கள் இன்னும் ஆழமானவை. தன்னம்பிக்கைநூல்கள் பொதுவான தீர்வுகளை மட்டுமே சொல்பவை, அவை சிந்திப்பவனை நிறைவுசெய்வதில்லை. அவன் மேலும் குறிப்பான சிக்கல்கள் கொண்டவன், அவற்றை மேலும் விரிவாக்கிக் கொள்பவன்.

சிந்திப்பவனுக்கு எழுத்தாளர்களின் சொற்களே உதவமுடியும். ஆனால் இங்கே நவீனத்துவகால எழுத்தாளர்கள் எதையும் திட்டவட்டமாகச் சொல்லாமலிருப்பது, எல்லாவற்றையும் சிக்கலாக்கிக்கொள்வது இரண்டுமே சிந்தனையின் இயல்புகள் என அசட்டுத்தனமான நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் கேள்விக்கும் ’அப்டி சொல்லிரமுடியாது’ என்றோ ‘அது கொஞ்சம் சிக்கலானது’ என்றோதான் பதில் சொல்வார்கள்.

இலக்கியப்படைப்பு எதையும் அறுதியாகச் சொல்லும்பொருட்டு எழுதப்படுவது அல்ல. இலக்கியப்படைப்பு எதையும் எளிதாக்குவதும் அல்ல. இதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பொருத்திக்கொள்வதனால் உருவாகும் சிக்கல் இது. இலக்கியவாதி முடிந்தவரை தெளிவாக, அறுதியாகவே பேசவேண்டும். முடிந்தவரை எளிதாகவே வகுத்துக்கொள்ளவேண்டும். அதற்கும் அப்பால் தெளிவற்று சிக்கலாகி விரியும் சில உண்டு, அவற்றை கண்டடையவே அவன் இலக்கியப்படைப்பை எழுதவேண்டும்

அதாவது தெரிந்ததைச் சொல்வதற்காக எழுதக்கூடாது, தெரியாததை கண்டடையவே எழுதவேண்டும். இலக்கியப்படைப்பின் சிக்கலும் தெளிவின்மையும் அந்தப்பேசுபொருளின் ஆழத்தால் விரிவால் உருவாகின்றவை. எழுத்தாளன் அவற்றை உருவாக்கக்கூடாது.

புதுமைப்பித்தனோ ஜெயகாந்தனோ சுந்தர ராமசாமியோ தெளிவாகப் பேசவோ, அறுதியாக வகுத்துரைக்கவோ தயங்கியவர்கள் அல்ல. அவர்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் அந்த தெளிவையும் உறுதியையும் காணலாம். உலகமெங்கும் முதன்மைப் படைப்பாளிகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

எழுத்தாளனின் கருவி அவனுடைய கற்பனை. அவன் களம் அவனுடைய வாழ்க்கை. தான் கண்டடைந்ததை, அதில் தெளிந்தவற்றை சொல்ல எழுத்தாளன் தயங்கவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஆனால் அந்த தெளிவை நான் அடைய எனக்கு நாற்பத்தைந்து வயது தாண்டவேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா முதல் நித்ய சைதன்ய யதி வரை ஆசிரியர்களைக் கடந்துவரவேண்டியிருந்தது.

பொன்னிறப்பாதை, தன்மீட்சி ஆகியநூல்கள் திட்டமிட்டு உருவானவை அல்ல. அவை நான் வாசகர்களிடம் நடத்திய உரையாடலின் விளைவுகள். அந்த உரையாடல்தன்மையால்தான் அவை வாசகனுக்கு அணுக்கமாகின்றன.அவற்றிலுள்ள திடமான குரல் சொந்த அனுபவத்திலிருந்து எழுந்தது.ஆகவே நம்பகமானது.

அது தன்னம்பிக்கைநூல்களின் பொதுமைப்படுத்தல் எளிமைப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கிறது. நவீன இலக்கியவாதிகளின் தேவையற்ற குழப்பம், சிக்கல் ஆகியவையும் அதில் இல்லை. ஆகவேதான் அது அத்தனை ஆழமாக தொடர்புகொள்கிறது என நினைக்கிறேன்

தன்வரலாறுகளே சிறந்த தன்னம்பிக்கை நூல்கள். அவற்றில் முதன்மையானது சத்தியசோதனைதான். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் இரண்டுமே ஊக்கமளிக்கும் நூல்கள். தி.செ.சௌ.ராஜனின் ‘நினைவலைகள்’ நாமக்கல் கவிஞரின் ‘என்கதை’ கோவை அய்யாமுத்துவின்  ‘தன்வரலாறு’ ஆகியவற்றையும் குறிப்பிடுவேன்.

நான் தனிப்பட்ட முறையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகள் என கருதுபவை சுந்தர ராமசாமி எழுதிய ‘கனவுகளும் காரியங்களும்’ ‘கலைவெற்றிகள் சாத்தியமா?’ போன்ற கட்டுரைகள். அவருடைய காற்றில்கலந்த பேரோசை அவ்வகையில் முக்கியமான நூல்.

ஜெ