இருள்- கடிதங்கள்

பித்தனின் பத்துநாட்கள்

இருண்ட ஞாயிற்றுக்கிழமை

அன்புள்ள ஜெ

அன்பு ஜெ அவர்களுக்கு, வணக்கம்.

சற்று முன்தான் இருண்ட ஞாயிறு படித்தேன். சமீபத்திய உங்களின் அனுபவப்பதிவுகள்  அனைத்தும் இப்படித்தான் சமநிலையற்று இருப்பதைக் காண்கிறோம். வெண்முரசு நிறைவுற்றதிலிருந்தே உங்களின் மனம் பாய்மரம் கிழிந்த படகைப்போல் அலைவதை உணரமுடிகிறது. இதற்கு ஒரே தீர்வு அல்லது மடைமாற்றம், உடனடியாக எதாவது நீண்ட தொடரை நீங்கள் எழுத முற்படுவதுதான்.

கொரோனா ஊரடங்கு அதிகாரப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுவரை இந்த மனநிலை தொடர்வது எந்தவகையிலும் உகந்ததல்ல.

சங்கச் சித்திரங்கள் எழுதியதைப்போல, ஏதாவது இலகுவான – கொஞ்சம் வெகுஜன நடையில் ஒரு தொடரை தொடங்குங்கள். குறைந்தது ஆறு மாத அளவிற்கு இருந்தால் நல்லது. எங்களுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளாக வெண்முரசு தொடரை இரவு காத்திருந்து படித்த பழக்கம் இன்னும் விடுபடவில்லை. எனவே, உங்களுக்காக பாதி – எங்களுக்காக பாதி என்கிற ஒப்பந்தப்படி(?)  ஒரு தொடரை தொடங்க வேண்டுமென வேண்டுகிறேன்.

அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்

திருவண்ணாமலை

அன்புள்ள ராஜேந்திரன்,

உண்மைதான். இப்போது நிறைய வாசிக்கிறேன். வாசிப்பு நடந்துகொண்டிருந்தாலும் உள்ளம் அதில் முழுமையாக அமையவில்லை. எழுதவேண்டும். இன்றைய மனநிலைக்கு மிக எளிமையாக, உற்சாகமாக ஏதாவது எழுதவேண்டும். குழந்தைக்கதை ஏதாவது எழுதினாலென்ன என்று ஓர் எண்ணம்

ஜெ

அன்புள்ள ஜெ

பித்தனின் பத்துநாட்கள் படித்து முடித்த உடன் எழுதுகிறேன் இக்கடிதத்தை. முந்தைய கடிதத்தில் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிப்பதாக கூறியிருந்தேன். நாவலை முடித்து இரண்டு நாட்களாகிவிட்டது. ஏராளமான கேள்விகள் அலையடித்து கொண்டள்ளன மனதில். எல்லாவற்றையும் கண்டு உணர்ந்த பின்னர் உங்களுக்கு எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் இந்த பதிவு என் உணர்ச்சிகளை சொல்லுமாறு தூண்டிவிட்டு விட்டது. ஒரு நாவல் படித்த பின் நமக்கு ஏற்படும் உணர்ச்சி நிலைகள் மிக அந்தரங்கமானவை. அவற்றை அவ்வளவு எளிதில் யாரிடமும் சொல்லி விட முடியாது. இப்போது எழுதுவதில் கூட பாதி தான் வெளிவரும். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. முடுந்தவரை எழுதுகிறேன்.

ரசனை என்பதே எந்நிலையிலும் அந்தரங்கமானதே. அதனை நாம் இன்னொருவருடன் பகிர்வதே ஒரு பரஸ்பர புரிதலின் மூலம் தான். அந்த புரிதல் நம் சொற்களை விட உள்ளூறும் உள்ளுணர்வின் மூலம் கண்டுகொள்ள படுகிறது என்றே நினைக்குறேன்.

இவற்றை என் நண்பர்களில் சிலர் புரிந்து கொள்வார்கள் என்று எழுதியிருந்தீர்கள். இந்த நாவலை படித்த பதினான்கி நாட்களில் அழுதும் சிரித்தும் சினங்கொண்டும் உடல் நடுங்கியும் தளர்ந்தும் காமம் பெருகியும் என பல்வேறு உளநிலைகளை அனுபவித்தேன். ஓர் வாழ்க்கையை வாழ்ந்தேன், நிகர் வாழ்க்கையை. நடக்க இயலாதவனாயினும் நான்கைந்து முறைக்கு மேல் அந்நள்ளிரவில், எழுந்து வீட்டை விட்டு ஓடி விடலாமென்றே தோன்றியது. இன்னும் சில நேரங்களில் நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எனக்கே கேட்டு கோண்டிருந்தேன். சற்ற் சமாதானப்படுத்தி கொண்டு தான் தூங்க செல்ல முடிந்தது. இறுதி நாளுக்கு முன் நாள் வாசித்து முடி வைத்த பின்னர் இனந்தெரியாத கோபம் பொங்கி எழுந்து கைகளை வேகமாக பாயின் மேல் குத்தி கொண்டிருந்தேன். அருகே தூங்கி கொண்டிருந்த சற்று திரும்பினார் தூக்கத்தில். விழித்தால் தேவையில்லாத கேள்விகளை சந்திக்க நேரும். நம்மால் பதில் சொல்லி புரிய  வைக்க முடியாது. எனவே எல்லாவற்றையும் அடக்கி மூட்டை கட்டுவிட்டு படுத்து கொண்டேன்.

இவற்றை பிற்பாடு நினைத்து கொள்ளும் போது ஒரு சாதாரண வாசகனான நமக்கே இப்படியென்றால் இதை படைக்கும் படைப்பாளி எத்தனை உணர்வெழுச்சியோடு இருப்பார் என்று. என்ன படைப்பொன்றை படைக்கும் படைப்பாளியோ அதை வாசிக்கும் வாசகனின் பித்து நிலைகள் அவர்களுக்கானவை மட்டுமே. வெளியே அவை பைத்தியக்காரத்தனங்கள். ஒரு படைப்பாளி  அடையும் உச்ச உணர்வேழுச்சியை  தானும் ஓர் படைப்பாளியாய் ஆகாதவரை வாசகன் அதே உக்கிரத்துடன் அனுபவிக்க இயலாது என்றே நினைக்கிறேன். ஆயினும் எல்லா நல்ல வாசகனுமே படைப்பை தன் கற்பனையில் மீண்டும் உருவாக்குவதால் சிறிதளவேனும் அவ்வுணர்வெழுச்சியை அடைந்திருப்பான். அவனுக்கு நீங்கள் சொல்வது விளங்கும். கடல் நீரின் துளியை அறிந்தவன் கடலை நம்ப முடியும். அவன் தேடி அறிய வேண்டியது கடலை தான்.

சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,

சில உணர்வுநிலைகள் ஊர்திகள் போல. அவற்றில் ஏறியே அவற்றுக்குரிய இடங்களுக்குச் செல்லமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைஞானி-14