இரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்

இரட்டைமுகம்

அன்புள்ள ஜெ,

இரட்டைமுகம் பற்றி எழுதியிருந்தீர்கள். இவர்கள் வசைபாடும்போது உங்களை இரட்டைநிலைகொண்டவர், மோசடிக்காரர் என்று சொல்கிறார்கள். சரி, நீங்கள் இவர்களைப்போல ஒற்றைநிலைபாடு கொண்டவர் என்று இருந்தால் என்ன செய்வார்கள்? எதிர்ப்பாளர்கள் இன்னும் வசைபாடுவார்கள். நீங்கள் ஏற்றுக்கொண்ட தரப்பினர் நீங்கள் இன்னும் இன்னும் தீவிரமான நிலைபாடு எடுக்கவேண்டும் என்று சொல்லி மேலும் வசைபாடுவார்கள்

அரசியல்வாதிகள் தங்கள கொள்கைக்காகப் போராடுபவர்கள் என நினைத்துக்கொள்பவர்கள். அவர்களில் சிலர் நேர்மையாகவே அந்த தரப்பை நம்புபவர்கள். ஆனால் ஒட்டுமொத்தமான அயோக்கியத்தனம் ஒன்றின் உறுப்பினராக இருப்பதனால் அவர்கள் அனைவருமே அயோக்கியர்கள்தான். அதிகார அரசியல் எதுவாக இருந்தாலும் அதிலுள்ளது அடிப்படையான ஓர் அயோக்கியத்தனம்தான்.

ஆனால் ஒட்டுமொத்த இலக்கியமே எல்லாவகையான அதிகார அரசியலுக்கும் வெளியேதான் இருக்கமுடியும். அதன் இயல்பு விமர்சனமாகவே இருக்கமுடியும். இன்றைக்கு பாரதிய ஜனதாக்காரர்களின் அதிகார ஆணவம் கேவலமான வசைகளாக வெளிப்படுகிறது. அக்கட்சியை எதிர்க்கும் திமுகவினரும் கம்யூனிஸ்டுகளும் அதே வசைகளைத்தான் கொட்டுகிறார்கள். நாளை இவர்கள் பதவிக்கு வந்தால் இதே அதிகார ஆணவம்தான் வெளிப்படும்.

இவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்தாலும் அதிகார அரசியலின் ஒரே சாக்கடைக்குட்டையில் திளைப்பவர்களே. இன்றைய அதிகாரத்தை எதிர்ப்பவர் தன்னை புரட்சியாளர் என்று நினைத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் நாளைய அதிகாரத்துக்காக போரிடுபவர் அவ்வளவுதான். இந்தக் கும்பலுக்கு மிகமிகத் தொந்தரவு தருபவன் எழுத்தாளன். ஆகவே இடதும் வலதும் ஒரேசமயம் இலக்கியவாதிகளை வசைபாடுகிறார்கள். ஏறத்தாழ ஒரே மாதிரியான வார்த்தைகளில்தான் அந்த வசைகள் இருக்கின்றன

எழுத்தாளர்கள் தங்கள் தரப்பை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வசைபாடுவோம். தங்கள் தரப்பிலேயே தாங்கள் வகுத்துக்கொடுத்த பாதையில் அடிபதறாமல் பின்னால் வரவேண்டும். கடைக்கோடி தொண்டனைப்போல பேசவேண்டும்.ஒரு வார்த்தை முரண்படக்கூடாது. சந்தேகமே வரக்கூடாது. எங்கே கண்டிக்கவேண்டும், எங்கே ஆதரிக்கவேண்டும் என நாங்கள் முடிவுசெய்வோம். அந்தந்த உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தவேண்டும். அதைப்பயன்படுத்தி நாங்கள் அதிகாரத்தை அடைவோம். எழுத்தாளர்கள் நாங்கள் வீசியெறிவதை பொறுக்கிக்கொண்டு இருக்கவேண்டும், எறியாவிட்டாலும் பொத்திக்கொண்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அயோக்கியர்கள்—இதுதானே இந்த அற்பர்கள் சொல்வது?

இவர்களின் அரசியல்நிலைபாடுகளைத்தான் இவர்கள் அத்தனை மீடியாக்களிலும் அமர்ந்து வாந்தியும் பேதியுமாக கழித்துக்கொண்டிருக்கிறார்களே. அதுதான் அத்தனைபேருக்கும் செவிபுளிக்க வயிறுபுளிக்க தெரிந்திருக்கிறதே. அதற்கு அப்பால் போய் எதையாவது சொல்வார்கள் என்றுதான் நாம் இலக்கியவாதிகளை வாசிக்க வருகிறோம்.

நிலைபாடுகளை அறிவதற்காக நாம் இலக்கியம் படிக்கவில்லை.அதற்காக இத்தனை பக்கங்கள் படிக்கவேண்டுமா என்ன? டிவியை பத்துநிமிடம் திறந்து வைத்தாலே போதுமே? அதெல்லாம் நாள்தோறும் கோஷங்களாக அடிவயிற்றை எக்கி நாய்போடும் ஊளைபோல தெருவெல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வாசகர்களாகிய நாங்கள் எழுத்தாளர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களின் ஆழ்மனப்பயணத்தை, அதன்விளைவான மொழியையும் எண்ணங்களையும்தான். அது கலைப்படைப்பாக வெளிப்படும்போது அதில் ஈடுபட்டு நாமே உணரும் அறிவுதான் அவர்கள் நமக்கு அளிப்பது. இந்த அரசியல்பிராணிகள் நினைப்பது இவர்கள் கக்கும் வாந்தியை நக்கும் இவர்களின் தொண்டன் போன்ற ஒருவன்தான் இலக்கியவாசகன் என்று.

இலக்கியவாசகன் இலக்கியப்படைப்பில் கற்பனையில் வாழ்பவன். அங்கே அவன் தன் கருத்துக்களை தானே உருவாக்கிக்கொள்கிறான். அக்கருத்துக்களை உருவாக்குவதற்கான ஒரு வாழ்க்கைக்களம்தான் இலக்கியப்படைப்பு. இலக்கிய ஆசிரியனிடம் அவன் மானசீகமாக விவாதத்தில் இருக்கிறான். ஆகவே வலதுசாரியும் இடதுசாரியும் எவரானாலும் ஓர் எழுத்தாளனுக்கு வாசகனாக இருக்கமுடியும்.

இலக்கிய எழுத்தாளன் இந்த கேவலமான அரசியல்பிறவிகளை பின்தொடரும் மொண்ணைகளில் ஒருவன் அல்ல. அவனுக்கு வாசிக்கவும் சிந்திக்கவும் உணரவும் தெரியும். எது அவனுக்கு உகந்தது எது ஒவ்வாதது என்று உணரத்தெரியும். அதைத்தான் இந்த அரசியல்மோசடிக்கும்பல் பயப்படுகிறது. எழுத்தாளர்களை வசைபாடுவது வழியாக இவர்கள் வசைபாடுவது இலக்கியவாசகனைத்தான்.

இலக்கியவாசகனுக்கு அரசியல் இருக்கலாம். அது இடதோ வலதோ ஆக இருக்கலாம். ஆனால் ஏதாவது அரசியல்கட்சியின் அரசியல் அமைப்பின் தொண்டனாக சீட்டு எடுத்துக்கொண்டவன் இலக்கியவாசகனே அல்ல. ஓர் இலக்கியவாசகன் அவனை ஒரு ஆளாக நினைத்தே பேசமுடியாது. பரிதாபத்துடன் ஒதுங்கிப்போகவே முடியும். ஆகவே இலக்கியவாசகனை எந்த அமைப்பும் தொண்டனாக ஆக்கமுடியாது.

என்றைக்குமே எனக்கு கடுமையான அருவருப்புதான் இந்த மனிதர்கள்மேல். ஆனால் இதைப் படித்தபோது குமட்டல் உச்சத்தைஅடைந்தது. பகல் முழுக்க ஒவ்வாமை இருந்துகொண்டே இருந்தது. வெளிவர நீண்டநேரம் ஆகியது

ஆனால் இதெல்லாம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். எழுத்தாளர்களை எரித்த நடுக்கால மதவிசாரணைக்காலமும், ஸ்டாலினின் விசாரணைக்காலமும் மக்கார்த்தியிசமும் இப்படித்தான் இருந்திருக்கும். எல்லா முன்னோடிகளும் இதைக் கடந்தே வந்திருக்கிறார்கள்.

இந்த கீழ்மக்களைக் கடந்து இலக்கியத்தின் உள்ளார்ந்த ஸ்பிரிச்சுவாலிட்டி நிலைநிற்கும். அதற்கு பெருந்திரளாக ஆதரவாளர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் நுண்ணுணர்வும் அறிவும்கொண்ட ஒரு கூட்டம் என்றைக்கும் இருக்கும். எழுத்தாளர்கள் அவர்களை நம்பி எழுதவேண்டியதுதான்.

அன்புள்ள ஜெ, வேறெந்த காலகட்டத்தை விடவும் இன்றைக்கு இலக்கியவாசகன் தன் ஈகோவை வளர்த்து முன்வைக்கவேண்டியிருக்கிறது. அதை கோட்டைபோல ஆக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு பக்கமும் பெருகியிருக்கும் mass histeria பற்றி பேசியே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது. இரண்டு தரப்பில் ஒன்றில் சேர்ந்து நாமும் அசட்டுக்கிறுக்கனாக ஆனாலொழிய வாழவே முடியாத நிலை வந்துவிட்டது.

குறைந்தது இந்த அரசியலின் கிறுக்குகளில் ஒன்றாக இருப்பது கேவலம் என்ற உணர்வையாவது நாம் அடையவேண்டும். அவ்வாறு உழலும் கிறுக்கனை அருவருத்து பேச்சுக்களில் இருந்து ஒதுக்கவாவது தொடங்கவேண்டும்.

அருண்குமார்

***

அன்புள்ள ஜெ,

இரட்டைமுகம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் இதைப்பற்றி நண்பர்களுடன் பேசியதுண்டு. நம் அரசியல்விவாதங்கள், இலக்கியவிவாதங்களைப் பார்த்தால் 99 சதவீதம் பேச்சும் ‘முரண்பாடுகளைக் கண்டடைதல்’ என்ற அளவிலேயே இருக்கும். ‘இவரேதான் அப்ப இப்டிச் சொன்னார்’ இதுதான் இவர்களின் மொத்த அறிவுச்செயல்பாடும்.

இதற்காகவே படிப்பார்கள், இதற்காகவே எதை வாசித்தாலும் பழையவற்றைத் தேடுவார்கள், இதற்காக பழையவற்றிலும் புதியவற்றிலும் உதிரிவரிகளை ஒட்டுமொத்ததிலிருந்து வெட்டி எடுத்து பொருத்திக்காட்டுவார்கள். இப்படிச் செய்தால் தான் ஒரு அறிவுஜீவி என நினைத்துக்கொள்வார்கள். ஹெஹெஹெ என்று ஒரு அசட்டுச்சிரிப்பு. அரசியல்கட்சிக்காரர்கள் என்றால் கேவலமாக வசைபாடுவார்கள்.

இனிமேல் எந்த பிராணி இந்த முரண்பாடு கண்டுபிடிக்கும் வேலையைச் செய்தாலும் நேரில் என்றால் பச்சைக்கெட்டவார்த்தைதான் சொல்லவேண்டும் என்று பேசிக்கொண்டோம். ஒருசூழலின் அறிவார்ந்த விவாதங்களையே சீரழிக்கும் அற்ப ஆத்மாக்கள். எப்போதும் இவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைக்குத்தான் இவர்களால் இதை பொதுவெளியில் பதிவுசெய்து அறிவார்ந்த விவாதங்களில் மண்ணை அள்ளி போடமுடிகிறது. இந்த கேனையன்களுக்கு எந்த தத்துவமும் புரியாது, எந்த அழகியலையும் உணரமுடியாது, எந்த விவாதத்திலும் அர்த்தபூர்வமாக ஈடுபடமுடியாது

நானும் இதையெல்லாம் கொஞ்சம் கவனித்தவன்தான். எனக்கே பிரச்சினையாக உள்ள சிலவிஷயங்கள் பேசப்படும்போது கொஞ்சம் உள்ளே போய் கவனிக்கலாம் என்றால் வந்து செவிகளில் குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள். நேற்று ஒருவர் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வந்து ஞானி கட்டுரை பற்றி இதைப்போல ஏதோ சொன்னார். ‘அப்ப இப்டி சொல்லியிருக்கார், இப்ப இப்டிச் சொல்றார்’. அவர் சொன்ன முரண்பாடு அவருக்கு எதுவுமே புரியவில்லை என்பதனால் வந்தது

’சரி, ஆனா பேசுபொருள்ங்கிறது இலக்கியத்தோட வடிவத்தை பிரக்ஞைபூர்வமா எடிட் பண்ணணுமா வேண்டாமான்னு. அதை பத்தி உங்க கருத்து ஏதாவது இருக்கா?’ என்றேன். ‘காலச்சுவடிலே அந்த கதை வந்தப்ப…’ என்று மறுபடி ஆரம்பித்தார். “எந்திரிச்சுபோடா நாயே. செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்னேன். திகைத்துவிட்டார். ‘எந்திரிச்சு போடா, இனிமே என்கிட்ட பேசினே பல்லு உதிந்திரும் நாயே’ என்று சொன்னேன் [உங்களுக்கு தெரிந்தவர். இதற்குள் பிராது வந்திருக்கும்]

ஏக்கமாக இருக்கிறது. ஞானி கட்டுரையை வாசித்தால் எவ்வளவு அடிப்படையான விஷயங்களைப்பற்றிய பேச்சுக்கள் நடந்திருக்கிறது. ஒரே அத்தியாயத்தில் இந்தியாவின் அரசியல், மதம், இலக்கியம் பற்றி எவ்வளவு கேள்விகள் வந்திருக்கின்றன. இந்தத்தலைமுறையில் மட்டும் ஏன் இப்படி? இடதுசாரி வலதுசாரி அரசியல் அயோக்கியர்கள் திரும்பத்திரும்ப ஒரே நாலுவரியை வெறுப்புடன் கக்கிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அற்பர்கள் சில்லறைத்தனமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எதையுமே யோசிக்கவிடமாட்டேன் என்கிறார்கள். இவர்களே கிளப்பும் கிறுக்குத்தனங்களுக்கு கொடிபிடிப்பது தவிர எதையுமே செய்யக்கூடாது என்கிறார்கள்

எங்கள் தலைமுறைபோல சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கே கலையை உருவாக்குவது?

ஆர்.எம்.பிரபு

***

முந்தைய கட்டுரைவெண்முரசின் காவிய முறைமை- ஸ்ரீனிவாஸ்
அடுத்த கட்டுரைஇரண்டு கவிப்பிரகடனங்கள்