சோர்வு, மீள்தல்

இருண்ட ஞாயிற்றுக்கிழமை

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தை திறந்து இருண்ட ஞாயிற்றுக்கிழமை கட்டுரையை படித்து விட்டு இதை எழுதுகிறேன். இதை எழுதாமல் என்னால் இன்று துயில முடியும் என்று தோன்றவில்லை.

இயல்பாகவே உங்கள் எழுத்துக்கள் வசீகரித்து உள்ளே இழுப்பவை, நீங்கள் எதிர்மறையாக இதுவரை எழுதியது இல்லை என்பதால் அதன் வலிமையை நான் உணர்ந்தது இல்லை.என்னவென்று விளக்கமுடியாத ஒரு உணர்வு அந்த கட்டுரையின் தொடக்கம் முதலே இருந்து வந்தது. அதனால் நீங்கள் அளித்திருந்த அந்த பாடல் இணைப்புகளை நான் பார்க்கவே இல்லை. அவை என்னை அந்த உணர்வு நிலைக்கு இழுத்துவிடும் என்று அஞ்சினேன்.

ஆனால் அந்த கடைசி பத்தியில் வரும் கனவு சட்டென்று என்னை இழுத்துக்கொண்டது, அந்த வரியை நான் மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது ஒரு கனவாக என்னுள்ளும் நிகழ்ந்தது, உண்மையில் நான் நடுங்கித்தான் போனேன். அது நிகழும் போது ஜன்னலுக்கு வெளியே இருந்து உங்களை பார்க்கும் உங்களை நான் பார்த்தேனா இல்லை என்னை பார்க்கும் என்னை நான் பார்த்தேனா என்று உணரமுடியவில்லை. அந்த அதிர்வு எழுதும் போதும் என் கைகளிலேயே இருக்கிறது. ஆசிரியரிடம் இதை சொல்லாதீர்கள் என்று கூறும் உரிமை மாணவர்களுக்கு இல்லை. நூறு நேர்நிலை கட்டுரைகளை விழுங்கிவிடக்கூடியது இந்த ஒரு கட்டுரை. நான் என்ன செய்வது?

அன்புடன்,

ஆல்வின் அமல்ராஜ்

***

அன்புள்ள ஆல்வின்,

அந்தக்கட்டுரையேகூட நேர்நிலையானதுதான். மூளைக்களைப்பும் அதன்விளைவான சோர்வும் அனைவருக்கும் உரியவையே. நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு அது மூளையில் நிகழும் மெல்லிய ரசாயனச் சிக்கல் மட்டுமே. எவருக்கானாலும் அது உருவாகும். அது வராமல் தவிர்ப்பது நம் கையில் இல்லை.

அந்தச் சோர்வு உருவாக பலகாரணங்கள். முதன்மைக்காரணம், பிறப்பியல்பு. கலையார்வம், அறிவுத்தளச் செயல்பாடு கொண்டவர்களுக்கு மூளைச் செயல்பாட்டினாலேயே அந்தச் சோர்வு உருவாகலாம். பொதுவாக கற்பனை கொண்டவர்கள் இதை தவிர்க்கமுடியாது. ஓர் அலையென வந்துசெல்லும்.

ஒரே திசையில் ஓய்வில்லாது கடும் உழைப்பைச் செலுத்தினால் திடீரென்று அவ்வண்ணம் ஒரு சோர்வு இடைவெளி உருவாகிறது. இங்கே உழைப்பு என்பது கலை போன்ற செயல்பாடுகள் அல்ல, அவை வெறும் உழைப்பு அல்ல, அவற்றில் களியாட்டமும் உள்ளது. நான் சொல்வது நம்மை செலுத்திக்கொண்டு நாம் செய்யும் ‘வேலை’யை.

ரத்த அழுத்தப்பிரச்சினைகள், சர்க்கரை நோயால் இத்தகைய சோர்வு உருவாகும் என்கிறார்கள். சிலவகை மருந்துகளால் இச்சோர்வு உருவாகின்றது என்கிறார்கள். அதைப்பற்றி எனக்குத் தெரியாது.

பெரும்பாலானவர்கள் அது உருவானதுமே இரண்டுவகை மனநிலைகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஒன்று சுயவதை, இன்னொன்று வதை.

சுயவதைதான் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அந்தச் சோர்வுமனநிலையை எண்ணி எண்ணிப் பெருக்கிப் பெருக்கி உச்சம்கொண்டு சென்று அதில் திளைப்பது. தன்னிரக்கம், வெறுமை, அனைத்தின்மீதும் கசப்பு என்னும் மூன்று கூறுகள் அதற்கு உண்டு

கண்ணீரும் பெருமூச்சும் மிக ஆழமான உணர்வுகள், நாம் அதில் ஆழ்ந்திருக்கிறோம் என  நாமே எண்ணிக்கொள்வோம். அதற்குரிய கவிதைகளும், உதிரிவரிகளும் ஏராளமாகக் கிடைக்கும். அதற்கான பாடல்களும் உண்டு- பெரும்பாலான கஸல் பாடல்கள் அந்த மனநிலைக்கு மிகமிக உகந்தவை. முகநூல்குறிப்புகளில் உதிரிவரிகளாக அதை வெளிப்படுத்தலாம்

வதைமனநிலையும் அதன் விளைவே. அது அரசியல், சமூகவியல் நிலைபாடுகளாகவும் விமர்சனங்களாகவும் இன்று உருமாற்றம் செய்யப்படுகிறது. தன்னை ஒரு நிலையில் நிறுத்திக்கொண்டு, எதிரிகளை உருவகம் செய்து, வசையையும் ஏளனத்தையும் காழ்ப்பையும் கொட்டினால் ஒருவகையில் அந்தச் சோர்வுநிலை எதிர்மறை நிறைவை அடைகிறது.

ஆனால் இவை இரண்டுமே சோர்வை வளர்ப்பவை. முதல்வகையில் சோர்வை நாம் அறிந்தே பெருக்கிக் கொள்கிறோம். இரண்டாம் வகையே இன்னும் அபாயகரமானது. அதில் நாம் ஊக்கத்துடன் களப்போர் செய்வதாக நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நாம் நம் சோர்வைத்தான் பெருக்கிக் கொள்கிறோம். முதல்வகையில் ஒரு கட்டத்தில் சோர்வுநிலை சலிப்புற்று நாம் மீளவாய்ப்புண்டு. இரண்டாம்நிலையில் நம்முடையது உளச்சோர்வென்றே தெரியாமல் பல ஆண்டுகளைச் செலவிட்டிருப்போம்

சரி, என்னதான் செய்வது? அக்கட்டுரையில் அதைத்தான் எழுதியிருக்கிறேன். அறியும்தன்மைகொண்ட ஒருவன் செய்வதற்கொன்றே உள்ளது. அந்த சோர்வை கூர்ந்து கவனிப்பது. அதை நாம் அகன்றுநின்று கவனிக்க ஆரம்பித்தாலே அது சுருங்க ஆரம்பிக்கும்.

பெரும்பாலான அகவுணர்வுகளின் இயல்பு அது, அவை நாமறியா நிலையிலேயே நம்மிடம் வளரமுடியும். அச்சம், தயக்கம், கசப்பு, அவநம்பிக்கை, எல்லாமே நாம் திரும்பிநின்று கூர்ந்து கவனித்தால் திகைப்படைகின்றன. அவை முழுக்கமுழுக்க சிலவகை தேய்வழக்குச் சொற்கள் வழியாகச் செயல்படுகின்றன என்பதையும், சிறு உணர்வுகளையும் எளிய எண்ணங்களையும் அவை பெருக்கிக் கொள்கின்றன என்பதையும் நாம் காணத் தொடங்குவோம். அவற்றை நிகழ்த்திக்கொள்ள நாம் என்னென்ன மனநாடகங்களை  போட்டுக்கொள்கிறோம் என்று அறியத்தொடங்குவோம். அக்கணமே அவற்றின் தீவிரம்குறையத் தொடங்கும். நம் மனதை நாமே அகன்றுநின்று தர்க்கபூர்வமாகக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பது மிக முக்கியமான மீளும் வழி

இரண்டாவதாகச் செய்யத்தக்கது, உடல் களைத்துச் சலிக்குமளவுக்குப் பயிற்சிகள். நீண்டநடைகள், ஓட்டங்கள், கடும் உழைப்பைக் கோரும் வேலைகள். நுரையீரல் முக்கியமானது என கண்டறிந்துள்ளேன். மூளைக்கு ஆக்ஸிஜன் நிறையச் சென்றாலே நம்பமுடியாத அளவுக்குப் பெரிய மாறுதல் உருவாகிறது. உடல் களைப்புற்றுச் சோர்ந்து ஓய்வுக்காக விழும்போது மனம்கொண்ட சோர்வுநிலை அகல்வதைக் காணலாம்.உண்மையில் மூளைரசாயனங்களிலேயே பிரமிக்கத்தக்க மாறுதல்கள் உருவாகின்றன.அதன் பின் ஒரு இயற்கையான நல்ல தூக்கம் நம்மை விடுதலைசெய்கிறது.

அதற்கப்பாலுள்ள ஒன்றுண்டு, வாழ்க்கை அரியதும் தற்காலிகமானதுமாகும், சோர்வுக்கு அளிக்க நமக்கு பொழுதேயில்லை என்னும் தன்னுணர்வு. அதுதான் என்னை ஊக்கும் தத்துவம். அக்கட்டுரையும் அதிலேயே முடிகிறதென்பதைக் காணலாம்.

நான் செய்வன இவை மூன்றும், நான் பயன்கண்ட வழிகள். பிற எவரைவிடவும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மூளைச்சோர்வும், ரசாயனமாறுதல்களின் சிக்கல்களும் மிகுதி. நான் அதில் நுழைந்து அதைக் கையாளக் கற்றுக்கொண்டவன். அதையே கூறுகிறேன்

ஒரு சோர்வை ஒருநாள் பகலுக்குள் கடக்கமுடியும் என்றால் அதுவே இயல்வதான மிகவெற்றிகரமான செயல்முறை.

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-10
அடுத்த கட்டுரைநீர்க்கோலம் – A Journey of Un-becoming