காலையிலும் மாலையிலும் சந்தடியில்லாமல் நடைசெல்ல ஓர் இடம் அமைந்தது நல்லூழ்தான். காலையில் ஒரு காபிக்குப் பின் நீண்ட தூரம் சென்று மலைகளைப் பார்த்துவருவேன். மாலையில் அப்படி நீண்டதூரம் போவதில்லை. அஜிதனும் சைதன்யாவும் வருவார்கள். பதினைந்து நிமிடம் ஓட்டம், அரைமணிநேரம் வேகநடை. களைத்து திரும்பிவிடுவேன்
நான் ஓடி நீண்டநாட்களாகிறது. முதல்நாள் அரைக்கிலோமீட்டர் ஓடுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. ஆனால் அன்று விடாப்பிடியாக ஓடி முடித்தேன். பின்னர் சற்று எளிதாக ஓடுகிறேன்.
ஓடுவது உடற்பயிற்சிக்காக அல்ல. ஆகவே நீண்டதூரம் ஓடும் எண்ணம் இல்லை. நான் பேசும்போது மட்டும் கொஞ்சம் மூச்சிளைப்பு வருவதை நண்பர்கள் சொன்னார்கள். தேர்ந்த பேச்சாளரான ராஜகோபாலன் நான் நீண்ட சொற்றொடர்களாக எடுத்து சொல்லிமுடிப்பதன் விளைவு அது என்றார். கொஞ்சம் மூக்கடைப்பு உண்டு, அதனாலாக இருக்கலாம் என்று என் ஊகம். யோக ஆசிரியரான சௌந்தர் என் நுரையீரல் போதுமான அளவு விரியவில்லை, ஆகவே பிராணயாமம் செய்யலாம் என்றார்.
பலவாறாக யோசித்தபோது ஓடலாம் என்று ஒர் இணையதளம் சொன்னது 10 நிமிட ஓட்டம் நுரையீரலை விரியவைக்கும். பிராணயாமம் எல்லாம் என்னால் செய்யமுடியாது. ஓரிடத்தில் அமர்ந்து இந்த பயிற்சிகளைச் செய்யும்போது மனம் எங்கெல்லாமோ அலைந்து செல்லும். சொல்பெருகும் உள்ளம் கொண்டவர்களின் சிக்கல் இது. ஓடுவது வேறு, அப்போது நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம், உடல் இயங்கியே ஆகவேண்டும்.
ஓடித்தொடங்கியபின் நன்றாகவே இருக்கிறது. திரும்பும்போது நல்ல களைப்பு. இரவில் நினைப்பே இல்லாத தூக்கம். காலையில் உடல் எடையற்று உற்சாகமாக இருக்கிறது.
ஓடுவதென்பது , அதாவது ஐம்பத்தெட்டு வயதுவரை பெரிதாக ஓடாமலிருந்த ஒருவருக்கு, பலவகையான உடற்சிக்கல்களை அளிப்பது. தொடர்வது கடினம். ஆனால் எனக்கு பெரிய சிக்கலேதும் வரவில்லை. மாறாக உடலை இன்னும் இனிதாக உணரமுடிகிறது. உடற்பயிற்சி பசியை மிகச்செய்கிறது, அதை குறைவாக ஸ்டார்ச் உண்டு, காய்கறிகள் வழியாக கடந்துசெல்வதுதான் அறைகூவலாக இருக்கிறது.
உடற்பயிற்சியில் ஒரு பேரின்பம் உள்ளது. பலரும் அதற்கு அடிமையாகிவிடுவது அதனால்தான். உடற்களைப்பு ஒரு போதைபோல. அதன் இனியமயக்கத்தை அறிந்தவர்களுக்கு வேறெந்த போதையும் பெரிதாகத் தென்படாது.
மாலையில் வானம் முகில்களால் நிறைந்திருக்கிறது. சிலநாள் மெல்லிய மணிவெளிச்சத்தில் செடிகள் மிளிர்கின்றன. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கிறது. பறவையோசைகள் சூழ்ந்திருக்கின்றன. ஒடுவதும் நடப்பதும் வானில் பறப்பதுபோல தோன்றுகிறது.
போரும் அமைதியும் நாவலில் பியர் வாழ்நாளெல்லாம் இன்பம் எங்கே என தேடியலைந்து கடைசியில் போர்க்கைதியாகப் பிடிபட்டு ஒருநாளில் ஐம்பது கிலோமீட்டர் நடக்கவைக்கப்பட்டு ஒரு ரொட்டிமட்டும் உணவாக அளிக்கப்படும்போது இன்பம் என்ன என்று உணர்கிறான். உடலுழைப்பு, கடும்பசி, உணவு, உறக்கம்- அதுவே வாழ்வின் இன்பம். வெற்றி, புகழ், அதிகாரம்,ஞானம், ஆன்மீகம் எதுவும் அல்ல என்று நினைக்கிறான்.
ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலில் தாயுமானவரின் ஒருவரியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ‘எல்லாம் எண்ணும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாய் முடியும்’. சில விஷயங்கள் அடிப்படையானவை, என்னதான் மூளைக்குள் நெடுந்தொலைவுசென்றாலும் அவற்றிலிருந்து விலகிவிடமுடியாது. நான் என் உடலே என்பது அதிலொன்று.