திருமந்திரம் கற்பது

வணக்கம்  அய்யா

2017 மேமாதம் முதல் உங்கள் வலை தளத்தின் வாசகன் நான்.

வாழ்வில் வெறுத்து போயிருந்த காலம் அது. தங்களது பகவத் கீதை பற்றிய எல்லா பதிவுகளையும் படித்த பிறகுதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து அதன் பிறகு அந்த காலத்தை கடந்து வந்தேன்..

எனக்கு பல மானசீக குருக்கள் உள்ளனர். எல்லாரும் எதாவது ஒரு விதத்தில் என்னை அடுத்த நிலைக்கு முன்னேற்றியவர்கள்.. அந்த வகையில் நீங்களும் என்னை தூக்கி மேலே விட்டவர்களில் ஒருவர்.

இப்போதும் ஒரு  வழி காட்டுதல் தேவை. நான் திருமந்திரம் படிக்க ஆசைப்படுகிறேன்.. எந்த மூலமும்  உரையும் சிறப்பாக இருக்கும் என்பதை சொல்ல முடியுமா?

வெறும் வார்த்தை வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் உள்ளார்ந்த பொருளுடன் கூடிய விளக்க உரையை யார் எழுதியது கிடைக்கும்?

நன்றி

சீனிவாசன்

 

அன்புள்ள சீனிவாசன்

திருமந்திரத்தை  ‘வாசிப்பது’ என்ற சொல்லாட்சியே பிழையானது. அது பயிலப்படவேண்டிய நூல். அத்தகைய நூல்களை ‘சூத்ர’நூல்கள் என்று சொல்வதுண்டு. சூத்ரம் என்றால் நேர்ப்பொருள் சரடு அல்லது நூலிழை. அதன் குறிப்புப் பொருள் ‘வகுக்கப்பட்டது’ என்பது.

சூத்ரநூல்கள் என்பவை ஒரு சிந்தனையை முன்வைப்பவையோ, விவாதிப்பவையோ அல்ல. ஒரு சிந்தனைமரபினூடாக உருத்திரண்டு வந்த மெய்ஞானத்தை சுருக்கமான சொற்களால் வரையறை செய்து வைத்திருப்பவை.

அவற்றை மட்டும் படித்து, அச்சொற்களை மட்டும் கொண்டு, எவராலும் மெய்யை உணர்ந்துகொள்ள முடியாது. அது அறிவியல் தேற்றங்களை மட்டுமே படித்து அறிவியலை அறியமுயல்வதுபோல. அவற்றிலிருந்து கற்றும் தியானித்தும் வளர்ந்துசென்று அச்சிந்தனைமரபை முழுமையாக அறியவேண்டும். அதற்கு துணைநூல்கள், தர்க்கமுறைகள், சொற்கோள்முறைகள் உண்டு. பயில்வதற்கான நெறிமுறைகளும் உண்டு.

அவ்வாறு கற்க உரிய ஆசிரியர் தேவை. முறையான ஆசிரியரிடமிருந்து கற்றாலொழிய திருமந்திரம் திறக்காது. திருமந்திரம் எளிமையான சொல்லமைப்பு கொண்டது, படித்ததுமே புரிவதுபோல் இருக்கும்.ஆனால் அது நேர்ப்பொருள்கொண்டது அல்ல, மறைபொருட்களால் ஆனது. அதில் எச்சொல் எதைச் சுட்டுகிறது, அதன் பொருளிசைவுகள் என்னென்ன என்று அறிவதற்கு முறையான கல்விதான் வேண்டும்.

அவ்வாறு கற்பிக்கும் ஆசிரியர் என்பவர் திருமந்திரத்தை மட்டுமல்ல, உங்களையும் அறிந்தவராக இருக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாம் உரியது அல்ல. எவை எப்போது மாணவருக்கு உகந்தவை என ஆசிரியர் முடிவுசெய்யவேண்டும். மந்திரஉபதேசம் இல்லாமல், இசையும் வாழ்நெறிகள் இல்லாமல், நோன்புகள் இல்லாமல், வெறுமே ஒரு நூலாக திருமந்திரத்தை பயில்வதனால் அறியாமையை ஈட்டி, ஆணவமாகத் திரட்டிக்கொள்ளலாமே ஒழிய வேறுபயனில்லை.

திருமந்திரத்தின் முதலாம் நூறின் பாடல்களையே பெரும்பாலும் ஆசிரியர்கள் இல்லறத்தாருக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். அவற்றிலும் சிலபாடல்களை மட்டும் சொல்லிக்கொடுப்பதும் உண்டு. முதிர்வுக்கு உகக்க மேலும் பாடல்களை சொல்லித்தருவார்கள். அதாவது அவை அறிவு சார்ந்த மொழிவெளிப்பாடுகள் அல்ல, உள்ளுணர்வு சார்ந்த மொழிவெளிப்பாடுகள். ஆகவேதான் அவை மந்திரம் எனப்படுகின்றன. மந்திரம் என்றால் ரகசியமானது, மௌனமானது, உள்ளே ஒலிப்பது என்று பொருள்.

திருமந்திரத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் தன்கல்வி மட்டும் கொண்டவராக, தானே விளக்கங்களைச் சொல்பவராக இருக்கக் கூடாது. அப்படி பலநூறுபேர் இன்று அலைகிறார்கள். பெரும்பாலானவர்கள் மொழியறிவுகூட இல்லாதவர்கள். வெறும் சொற்பொழிவாளர்கள், எளிய அரசியல் பேச்சாளர்கள் பலர்.அவர்களை அணுகினால் அறிவுக்கு பதில் அறியாமையே பெருகும்.

திருமந்திரம் சுத்த சைவசித்தாந்தத்தின்,அதாவது சைவமெய்யியலில் தூயஅறிவு சார்ந்த ஒருபிரிவின், முதல்நூல். கூடவே இந்திய வாமமார்க்க தாந்த்ரீக சைவமரபின் பெருநூல்களில் ஒன்று. அந்த ஞானத்தை மரபை தொடர்ச்சியாக கற்று பேணி கைமாற்றிவரும் ஒர் குருமரபின் கண்ணியாக அமைந்த ஆசிரியரிடமே பாடம்கேட்கவேண்டும். குறைந்தது மூன்று தலைமுறைகளாக ஆசிரியர்- மாணவர் மரபாக அவர் கற்றுவந்திருக்கவேண்டும்

அல்லது ஆறுமதங்களையும் கற்கும் கொள்கைகொண்ட தூயஅத்வைத மரபின் ஆசிரியரிடமிருந்து திருமந்திரத்தைக் கற்கலாம். அவரும் குருமரபு கொண்டவராகவே இருக்கவேண்டும்.

இதை ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் திருமந்திரம் பற்றி நான் வாசிக்க, கேட்க நேர்பவை எல்லாமே அபத்தக் களஞ்சியமாகவே உள்ளன. பெரும்பாலும் எளிய திராவிட அரசியலை, அல்லது தமிழியக்க அரசியலை, அல்லது திமுக அரசியலை திருமந்திரம் மீது போட்டு அதற்கேற்ப அனைத்தையும் திரித்துச் செய்யப்படும் உரைவீச்சுக்கள். இவர்கள் உருவாக்கும் அறியாமைச் சுவரைக் கடந்து திருமந்திரத்தை அணுகுவது இன்று எளிதல்ல.

அறியாமையை ஈட்டிக்கொண்டால், அது நாம் ஈட்டிக்கொண்டது என்பதனாலேயே அதை கடைசிவரைக்கும் காத்து நிற்போம். அதை நாம் கைவிடவே மாட்டோம். அதை உடைத்துக்கொண்டு அறிவு நமக்குள் நுழைவது மிகமிகக் கடினம்.

திருமந்திரத்தை நீங்கள் எதற்காகக் கற்கவிரும்புகிறீர்கள் என்று கேட்பேன். அதை ஓர் அறிவுச்செயல்பாடாகக் கருதினீர்கள் என்றால் அதை நீங்கள் ’வாசிக்கலாம்’. அதற்கு நீங்கள் தமிழக இலக்கியவரலாற்றையும், தமிழகத்தின் மெய்யியல் வரலாற்றையும், இந்திய மெய்யியல் வரலாற்றையும் புறவயமான ஆய்வுகளின் அடிப்படையில் பயிலவேண்டும்.

தமிழகத்தில் சைவசித்தாந்தம் உருவான முறை, அதற்கும் அத்வைத மரபுக்குமான உறவும் விலக்கமும், சைவ ஆகமங்களுக்கும் சைவ மெய்நூல்களுக்குமான உறவு , இந்திய தாந்த்ரீக மரபின் வரலாறு, அதற்கும் மருத்துவம் ரசவாதம் முதலிய அறிவுத்துறைகளுக்குமான உறவு என அறிவதற்கு நிறைய உண்டு.

ஆனால் வருந்தத்தக்கது என்னவென்றால், அந்தத் தளத்தில் சுட்டிக்காட்ட ஒருநூல், ஒரே ஒருநூல்கூட, தமிழில் இல்லை. அந்தப்பக்கமாகவே போய்விடாதீர்கள் என எச்சரிக்கவே பலநூல்கள் உள்ளன. ஒரு மெய்நூல் பற்றிய ஆய்வை வாசித்து மனம் முழுக்க இனவெறுப்பை, மொழிவெறுப்பை, அரசியல்காழ்ப்பை, தாழ்வுணர்ச்சிகளை நிறைத்துக்கொள்வது போன்ற அறிவின்மை வேறு உண்டா?

திருமந்திரம் இரண்டு அடித்தளங்கள்மேல் அமைந்துள்ளது. ஒன்று காஷ்மீரில் தொடங்கி இந்தியாமுழுக்க விரிந்த சைவப்பெருமரபு. இரண்டு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தொடங்கி வளர்ந்து சைவத்துடனும் சாக்தத்துடனும் உறவாடியும் முரண்பட்டும் வளர்ந்த தாந்த்ரீக மரபு. அவற்றை கற்காமல் திருமந்திரத்தை அறிவது இயலாது

திருமந்திரத்தின் மொழி சம்ஸ்கிருதமும் தமிழும் இணையாகக் கலந்தது.அதிலுள்ள சம்ஸ்கிருதச் சொற்கள் நேர்ப்பொருள் கொண்டவை அல்ல. மருத்துவம், சோதிடம் ஆகிய அறிவுத்தளங்களின் கலைச்சொற்களாகவோ தாந்த்ரீகக் கலைச்சொற்களாகவோ அவை இருக்கும். அவற்றை அறிந்தே பொருள்கொள்ளவேண்டும்.

ஆனால் இங்கே திருமந்திரத்துக்குப் பொருள்உரைப்பவர்களுக்கு மேலே சொன்ன அறிவுத்தளங்களிலும் சரி, மொழிப்புலத்திலும் சரி, அறிமுகமே இல்லை. எப்போதெல்லாம் நான் திருமந்திரப் பாடலுக்கு அவற்றில் பொருளைப் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் சலிப்புடன் எரிச்சலுடன் திரும்புவதே வழக்கம்.

இன்றுள்ள உரைநூல்களை எடுத்து ஒன்றோடொன்று ஒப்பிட்டால் முரண்பாடுகளை மட்டுமே பார்ப்பீர்கள். அவற்றிலும் திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறை பொருள்கொள்ள இன்றைய நவீனச்சூழலில் முடியுமா என்றே ஐயமாக இருக்கிறது. எந்த அறிவுத்தளத்தில் இருந்து அவை உருவாயினவோ, எந்த மெய்யறிவை அவை கூறினவோ அந்த தளம் இன்று முற்றாகவே மறைந்துவிட்டது.

என் ஆசிரிய மரபில் நான் குறைவான திருமந்திரப் பாடல்களுக்கு பொருள்கேட்டுள்ளேன். ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்றெனலாமே? 

என்ற பாடலுக்கு இணையத்தில் உள்ள உரைகளை ஒரு சுற்று பார்த்துவாருங்கள்.

ஓர் உரை இப்படி உள்ளது.நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவனவாகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப்பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?.

அதாவது இந்த உடல் என்பது அழியும்தன்மை கொண்ட ரத்தம் தோல் ஆகியவற்றாலான ஓர் அழுக்குத் தொகுதி மட்டுமே.ஏறத்தாழ இதே பொருளையே சற்று வேறுபாடுகளுடன் பிற உரைகளில் காண்கிறோம். இந்த பொருளை தெரிந்துகொண்டு நீங்கள் அடைவது என்ன?  இந்த சாதாரணமான பொருளை அறிய நீங்கள் திருமந்திரம் படிக்கவேண்டுமா என்ன?

இந்த பொருட்கோடலில் உள்ள குறைபாடு என்ன?

ஒன்று, இந்தச் செய்யுளில் உள்ள சொற்கள் நின்றிருக்கும் பொருட்சூழலை அறியாமல், அதாவது மருத்துவம் பற்றி அறியாமல், தாந்த்ரீகம் பற்றி அறியாமல், தமிழ்ப்பண்டிதர்கள் வெறுமே சொல்லகராதியால் பொருள் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு, சம்ஸ்கிருதச் சொற்களை தமிழ் எழுத்துக்களில் எழுதும்போது உருவாகும் மாறுபாடும் அவர்களை குழப்பியிருக்கிறது

எனக்கு கற்பிக்கப்பட்ட பொருள் இது. இப்பாடலில் நாம் கவனிக்கவேண்டியது இதன் வைப்புமுறை. மானுட உடல் தோன்றிய முறையாக நம் மரபு சொல்லிவரும் ஒன்று  அந்த வைப்புமுறையில் உள்ளது. அது ஒரேசமயம் ஒரு மருத்துவக்கொள்கையும் தத்துவதரிசனமும் ஆகும்.

இரதம் என்றால் ரதம். ரதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வருவது. மனோரதம், மனோரதியம் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லையா அச்சொல்தான்.விழைவு, தன்மகிழ்வு என இருபொருள்.காமம் என்றும் பொருளுண்டு. அதுவே முதலில் எழுவது. பிறக்கவேண்டும் என்ற விழைவு, வளரவேண்டும் என்ற விழைவு. ஆணுடலிலும் பெண்ணுடலிலும் நுண்வடிவாக இருக்கும் உயிர் பிறக்கவேண்டும் விழைவதுதான் காமம் என திரண்டுவருகிறது. கருவறைக்குள் உயித்துளியாக எழுவது அதுதான்.

[அச்சொல்லை ரதம் – தேர் என பொருத்தமே இல்லாமல் பொருள்கொண்டுதான் நிலையாமல் ஓடுவதாகிய உடல் என்று விளக்குகிறார்கள். இலக்கணப்படிக்கூட அப்படி பொருள் கொள்வது பொருந்தாது என்றாலும் அவர்களுக்கு வேறேதும் தெரியவில்லை]

அதன்பின் அந்த விழைவு குருதியாகிறது. அதை உதிரம் எனச் சுட்டுகிறது திருமந்திரம். அடுத்து தசைவடிவம் உருவாகிறது, அது இறைச்சி எனச் சுட்டப்படுகிறது. அடுத்து தோல். அதன்பின் உருவாவது மூளை. மேதா என்ற சம்ஸ்கிருதச் சொல் அறிவைச் சுட்டுவது மட்டுமல்ல. சரியாகச் சொன்னால் அறிவுத்தன்னிலையை, அறிவாணவத்தைச் சுட்டுகிறது. ஆங்கிலத்தில் subjectivity யைச் சுட்டுகிறது. கருவாகி வந்த விழைவு உடல்வழியாக ’நான் இருக்கிறேன்’ என்னும் இருத்தலுணர்வாக ஆகிறது.

அதன்பின் எலும்பு உருவாகிறது. அஸ்தி என்றால் சம்ஸ்கிருதத்தில் எலும்பு. அதை அத்தி என்கிறது திருமந்திரம். ஆனால் அஸ்தி என்றால் எலும்பு மட்டும் அல்ல. இருத்தலுக்கும் அஸ்திதான் சொல். ஆங்கிலத்தில் being.

அடுத்த சொல் மிக முக்கியமானது, வழும்பு. அதன்பொருள் அழுக்கு. மலம். உடலில் அழுக்கு உருவாகிவிடுகிறது. வழும்பும் அதன்பின் எலும்பில் மஜ்ஜையும் உருவாகிறது என்கிறது திருமந்திரம். மஜ்ஜை என்ற சம்ஸ்கிருதச் சொல்லை மச்சை என்கிறது. அழுக்குடன் மஜ்ஜை.

மஜ்ஜை என்றால் உள்ளுறைவது,சாராம்சமானது என்றும் பொருள் உண்டு. எலும்பினுள் மஜ்ஜை என்று வரிக்கு நேர்ப்பொருள் கொள்ளலாம்.இருத்தலுக்குள்  உள்ள அழுக்கு என்று குறிப்பொருளாக நிற்கிறது.

அதன்பின் தன்னை மறுபடி பிறப்பிக்கும் சுக்லம்- அதாவது விந்து. இங்கே கவனிக்கவேண்டிய ஒன்றுண்டு, பழைய வைத்திய மரபுகளில் விந்து எலும்பு மஜ்ஜையில் இருந்து வருவது என்னும் நம்பிக்கை உண்டு. உள்ளுறை அழுக்கிலிருந்து எழுவதுதான் பிறப்பிக்கும் விந்து, மனிதனிலிருந்து முளைத்து எழுவது அதுதான் என்கிறது திருமந்திரம். இவையனைத்தும் இணைந்த உடல் என்கிறது.

எங்கிருந்தோ எழும் ஒரு விழைவு குருதியாகி, ஊனுடலாகி ,தோலாகி, அறிவுத்தன்னிலையாகி, சாராம்சமான இருப்புணர்வாகி, உள்ளுறையும் அழுக்காகி, அதிலிருந்து எழும் விந்துவாகி, ஒட்டுமொத்தமாக உடலாகிறது.உடல் என்பது இவற்றின் தொகுதியே. வீணான தொகுப்பு என்கிறது திருமந்திரம்.

இங்கே உடலுக்கு ஒட்டுமொத்தமாகத் திருமந்திரம் சுட்டும் சொல் உபாதி. அதன் நேர்ப்பொருள் காரியம், விளைவு. இதுவும் முக்கியமான சொல். காரணமே காரியமாகிறது. முன்னர் இருக்கும் ஒன்றின் விளைவே உடல். முன்னர் இருப்பவை ஏற்கனவே சொன்ன இரதம் முதலியவை மட்டுமல்ல அவற்றுக்கும் முன்னாலிருப்பவையும்கூடத்தான்.

இதை உருவம் என்று சொல்லலாமே ஒழிய ஒன்று என்று சொல்லமுடியுமா என்னும் இறுதிவரி தத்துவக்கேள்வியாகிறது. உடலாகி நின்றிருப்பது ஒரு தொடர்நிகழ்வு. ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட பலநிகழ்வுகளின் தொகுப்பு. அவற்றுக்கிடையே ஒரு தொகுப்பாக உடல்வடிவம் உள்ளது. அதை ஒன்று எனச் சொல்வது நம் முன் அது பருவடிவமாக நிலைகொள்வதுதான்.

நம் முன் ஒருவர் நின்றிருக்கிறார். அவருள் உள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது, அவருடைய ஆழத்தில் ஆணவம் விழித்திருக்கிறது, அதற்கப்பால் ஆழ்மனம் உள்ளது, உடலில் ரத்தமும் மூச்சும் ஓடுகின்றன, இதயமும் இரைப்பையும் செயல்படுகின்றன. அவரை நாம் ஒருவர் என்றோ ஒன்று என்றோ சொல்லலாமா? அதிலிருந்து மேலே செல்வது திருமந்திரத்தின் அந்த தத்துவக் கேள்வி.

ஆனால் அதற்கு வருவதற்கு முன் அந்த முதல் மூன்றுவரிகளில் திருமந்திரம் முன்வைப்பது இங்கே மருத்துவம்-மெய்யியல் ஆகியவற்றில் இருந்த ஒரு கொள்கையை. உயிர் உடலாகி உருவாகும் ஒரு படிநிலையை. அதைப் புரிந்துகொள்ளாமல் இந்தப்பாடலை ‘வாசித்தால்’ என்ன கிடைக்கும்? அப்படி வாசித்து என்ன பொருள்?

நான் திருமந்திர உரையாற்றும் ஒருவர் ஒரு பாடலுக்கு அபத்தமான பொருள் அளிப்பதைப் பார்த்தேன். அவர் எல்லாச் சொற்களையும் முடிந்தவரை தமிழ்ச்சொல்லாக எடுத்துக்கொண்டார், அப்படி எடுக்கமுடியாத சொற்களை விட்டுவிட்டார். கேட்டதற்கு ‘திருமந்திரம் சம்ஸ்கிருதத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம தமிழர்மெய்யியலை உண்டுபண்ணணுமானா தமிழிலேதான் அர்த்தம் கொள்ளணும்’ என்றார். அறியாமையின் உச்சம் திருமூலருக்கே திருமந்திரம் கற்பிக்கச் செய்கிறது.

உங்களுக்கு தமிழர்மெய்யியலை உருவாக்கி அரசியல் செய்யவேண்டும்  என்றால் அதைச் செய்யலாம். மெய்யறிதல் முக்கியம் என்றால், வீடுபேறு இலக்கு என்றால் ,குருவிடமிருந்து முறையாகப் பயின்றே ஆகவேண்டும்.

ஏன் சம்ஸ்கிருதம்? திருமூலரின் காலகட்டத்தில் அந்த மெய்யியல் இந்தியா முழுக்க பரவிய ஒன்றாகவே இருந்தது. மருத்துவம் சோதிடம் எல்லாமே சம்ஸ்கிருதத்திலேயே இருந்தன. ஏனென்றால் அதுவே தொடர்புமொழி. இந்தியாவின் எல்லா நிலப்பரப்பில் இருந்தும் அந்த மெய்யியலுக்கு பங்களிப்பு உண்டு.

ஆகவே, திருமந்திரத்தை மெய்யறிவின் பொருட்டு, வீடுபேறின்பொருடு பயிலவேண்டும் என்றால் அதற்கு முறையான ஆசிரியர்தான் வேண்டும். இக்காரணத்தால்தான் இருபதாம்நூற்றாண்டு வரை திருமந்திரத்திற்கு உரை எழுதப்படவில்லை. நமக்கு கிடைக்கும் எல்லா உரைகளும் அச்சில் அந்நூல் வந்தபோது பதிப்பாளர்களால் எழுதவைக்கப்பட்டவை, அவர்கள் தமிழாசிரியர்களே ஒழிய ஆன்மிக ஆசிரியர்கள் அல்ல.

அப்படி ஓர் ஆசிரியரை தேடியிருங்கள். அமையலாம். ஒவ்வொரு மெய்ஞானத்தையும் அன்றாட கட்சியரசியலுக்கு இரையாக்கிக்கொண்டே இருக்கும் காழ்ப்பும் வெறியும் ஓங்கிய சமகாலத் தமிழ்ச்சூழலில் திருமூலரின் மெய்ஞானம் முழுமையாக அழிந்து, அதைக் கற்பிக்கும் ஆசிரியரே இல்லாமலாகிவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அது தமிழின் ஊழ் எனில் அதுவும் அவன் ஆடலே.

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-11
அடுத்த கட்டுரைகிராதம் – On the job Training for Arjuna