இன்று [09-08-2020] காலையில், தூங்கி எழுந்ததுமே மிகமிகச் சோர்வாக உணர்ந்தேன். ஆறுமணிக்கு நான் எழும்போது வழக்கமாக வீட்டில் எல்லாருமே தூங்கிக்கொண்டிருப்பார்கள். நான் கீழே சென்று ஒரு காபி போட்டு குடிப்பேன். மின்னஞ்சல்கள் பார்ப்பதில்லை, அழைப்புகள் இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பேன். நேராக நடை கிளம்பிவிடுவேன்.
ஒவ்வொருநாளும் இச்செயல்களை நானே இனியவை என எண்ணி எண்ணி இனியவை ஆக்கிக்கொள்வேன். காபி இனிது, அதைக்குடிக்கும் பத்துநிமிடம் இனிது, காலைநடை இனிது, அரைவெளிச்சம் பரவிய கணியாகுளம் மலையடிவாரம் இனிது, முகில்சூடிய நீலமலைகள் இனியவை, சுழன்றடிக்கும் ஆடிக்காற்றும் இனியது. இனிமை நெஞ்சில் நிறையும் பொழுது அது.
இன்றுகாலை எழுந்ததுமே உடல் எடைகொண்டது போலிருந்தது. கண்கள் தளர்ந்திருந்தன. காபி குடிக்கும்போது வெளியே காற்று சுழன்றடிக்கும் ஓசை. மனம் ஓய்ந்து கிடந்தது, ஒரு சொல் எஞ்சவில்லை. வாய்க்குள் நாக்கு தளர்ந்து கிடப்பதுபோல. வெறுமே அமர்ந்திருந்தேன். சரி, நடைசென்றால் சரியாகிவிடும் என்று பட்டது.
முந்தைய நாட்களில் காலையில் மழை. நேற்றுமுன்தினம் மழையில் நனைந்து ஊறி வீடு திரும்பினேன். ஆகவே குடையை எடுத்துக்கொண்டேன். ஈரமான பாதையில் நடந்தேன். காணும் ஒவ்வொன்றும் சலிப்பை ஊட்டின. ஒவ்வொரு காலடியையும் தூக்கித் தூக்கி வைக்கவேண்டியிருந்தது. மலைகளை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அர்த்தமில்லாத கருநீலக்குவைகள். வானில் துருக்கறைபோல மேகங்கள். மரங்கள் காற்றால் ஒருபக்கமாக கோதப்பட்டிருந்தன.
காணும் ஒவ்வொன்றும் அர்த்தமில்லாததாக இருந்தது. இனியவை இனியவை என சொல்லிக்கொண்டேன், அச்சொற்கள் எங்கோ என ஒலித்தன. ஏன் இத்தனை அலுப்பு? இரவு தூக்கமில்லையா? உடல்நலக்குறைவா? ஏதேனும் எதிர்மறைச் செய்தியை அறிந்தேனா? ஏதுமில்லை. சலிப்பும் சோர்வும் அடைய ஒரு காரணம்கூட இல்லை. ஆனால் மனதை நகர்த்தவே முடியவில்லை. பெரிய பாறாங்கல்போல கிடந்தது. அதன் எடையை உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணரமுடிந்தது.
எவரையாவது அழைத்தாலென்ன? உற்சாகம் மீளக்கூடும். ஆனால் நான் அழைக்கக்கூடியவர்கள் அனைவருமே இரவுநெடுநேரம் விழித்து காலையில் பிந்தி எழுபவர்கள். எண்ணி எண்ணிப் பார்த்து கேரளத்திலும் தமிழகத்திலுமாக நாலைந்துபேரை அழைத்தேன். எவருமே போனை எடுக்கவில்லை. எடுத்த ஒரே ஒருவர் தூக்கத்தில் முனகி “நல்ல தலைவலி” என்றார். “சரி” என்றேன். ஞாயிறு அவர்களுக்கான நாள்.
திரும்பி வந்துவிட்டேன். வெளியே இயற்கைக்காட்சிகள் நனைந்த கம்பிளித்திரைகளில் வரையப்பட்டவை போல எடையுடன் சூழ்ந்து அழுத்தி மூச்சுத்திணறச் செய்வதாகப் பட்டது. திரும்பிவந்ததும் ஒரு டீ குடிப்பது வழக்கம். அதை தவிர்த்து மேலே வந்து கணிப்பொறியை திறந்து மின்னஞ்சல்களைப் பார்த்தேன். எதற்கும் பதில்போடவில்லை. சலிப்பு அப்படியே நீடித்தது. என்ன செய்தாலும் கலைக்க முடியாதபடி.
வழக்கம்போல கிருஷ்ணனிடம் பேசினேன். ஆனால் உற்சாகம் தோன்றவில்லை. நான் காலையில் அழைத்தவர்கள் திரும்ப அழைத்தனர். எந்த ஃபோனையும் எடுக்கவில்லை. போன் கண்ணெதிரே இருந்தாலும் எடுக்கத் தோன்றவில்லை. அவர்களுக்கு இச்சோர்வைக் கடத்துவதில் பொருளில்லை என்று தோன்றிவிட்டது.
இணையத்தில் பாடல்களைக் கேட்டேன். எனக்குப் பிடித்த பழைய மலையாளப்பாடல்கள். வழக்கமான நஸ்டால்ஜியாகூட வரவில்லை. ஒருசில பாடல்களுக்குமேல் ஓடவில்லை. எழுந்து மொட்டைமாடியில் வெறுமே சுற்றினேன். வாசிக்க சீரியஸான ஒரு நூலை எடுத்தேன். ஒருபத்திகூட ஓடவில்லை. ஒரு காமிக் படித்தேன். அதையும் படிக்க முடியவில்லை.
Gloomy Sunday என்ற புகழ்பெற்ற பாடல் நினைவுக்கு வந்தது. பலநூறு பேரை தற்கொலைக்குத் தள்ளிய பாடல். அதன்பொருட்டே உலகமெங்கும் பல ஆண்டுகள் தடைசெய்யப்பட்டிருந்தது. உண்மையில் அதைப்பற்றிய எண்ணம் ஒரு மெல்லிய ஆர்வத்தை உருவாக்கியது. ஆச்சரியம் என்னவென்றால் அதைக் கேட்டபோது அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது. வெளியே செல்லவே முடியவில்லை. பலவடிவங்களில் ஏழுமுறை கேட்டேன். பின்னர் வெட்டி அறுத்துக்கொண்டு வெளியே வந்தேன்
சென்று படுத்துக்கொண்டேன். கண்களை மூடினால் தூக்கமே இல்லை, உள்ளம் பரபரப்பாக விழித்திருந்தது. அரைமணிநேரம் அசைந்துகொண்டே இருந்தேன். மீண்டும் இணையத்தில் எதையெதையோ பார்த்தேன். என்ன ஆச்சரியமென்றால் creepy ஆன விஷயங்களே கண்ணுக்குப் பட்டன. அல்லது சோர்வூட்டும் செய்திகள். அவற்றை என் கண் வழக்கமாகக் கவனிப்பதே இல்லை.
தன்னந்தனிமையாகத் தங்கியிருந்த ஒரு முதியவர் இறந்தபின் அப்பார்ட்மெண்டை காலிசெய்ய போகிறார்கள். அந்த அறைகளே பிராண்டி தள்ளப்பட்டிருக்கின்றன. மிகமிக அழுக்காக வைக்கப்பட்டிருந்த வீடு அது. கட்டிலுக்கு அடியில் அருவருப்பான ஒரு வினோத மிருகம். உடலெங்கும் திரிதிரியாக கைகள். நண்டுபோல நூறு கைகள்
ஆனால் அது ஒரு முதிய பூனை. கிழவர் பராமரிப்பில்லாமல் வளர்த்தது. கட்டுக்கடங்காமல் வளர்ந்த அதன் முடி அழுக்கோடு சேர்ந்து அப்படி சடையாகிவிட்டிருக்கிறது. அந்தப் படம் திகைப்பும் அருவருப்பும் ஊட்டுவது. ஏன் இத்தனை இருண்ட செய்திகள் பிடித்திருக்கின்றன? என் அகம் இருண்டிருக்கிறது என்றால் ஏன் உலகையே இருட்டாகக் காண்கிறேன்? ஏன் இருட்டாக்க விழைகிறேன்?
உளச்சோர்வின் வசீகரம் அது நம்மை அதை விரும்பவைப்பதில்தான் இருக்கிறது. மேலும் மேலும் அதில் மூழ்க, அதிலேயே இருந்துகொண்டிருக்க நம்முள் இருந்து ஒன்று இழுக்கிறது. எடைமிக்க கல் சேற்றில் அமிழ விரும்புவதுபோல.
அருண்மொழி மேலே வந்தாள். வழக்கமாக என் சோர்வுகளை அவளிடம் காட்டுவதில்லை, அவள் இருக்கும் உற்சாகநிலையை நான் அழித்துவிடக்கூடாது. நேற்று எங்கள் மணநாள். 29 ஆண்டுகளாகின்றன. நேற்றெல்லாம் கேலி கிண்டல், அதன்பின் திரைப்படம். பாடல்கள்.
நேற்று கடலைப்பிரதமன் செய்திருந்தாள். அதன் மிச்சத்தை கொண்டுவந்தாள். நேற்று அப்படிச் சுவையாக இருந்தது, இன்று ஆர்வமே ஊட்டவில்லை. இங்கே பலர் சோர்வுநிலை, சலிப்புநிலை என்று சொல்கிறார்கள். அது இதுதான்போல. இதிலேயே பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்றால் அது ஒரு பெரும் சாபமேதான்.
ஒருவழியாக மதியம் ஆகியது. சாப்பிட்டதுமே படுத்துவிட்டேன், வெளியே மழைபெய்து கொண்டிருந்தது. இரண்டு மணிநேரம் தூங்கினேன். உலுக்கப்பட்டதுபோல எழுந்தபோது ஐந்துமணி. மழையின் ஓசை. ஆனால் அது அமைதியின்மேல் பொழிந்துகொண்டிருந்தது. உள்ளம் நெகிழ்ந்து போயிருந்தது. ஏனென்று தெரியவில்லை. அழவேண்டும் போலிருந்தது. அந்த நிலையிலேயே அரைமணிநேரம். எந்த எண்ணங்களும் இல்லாமல். வெறும் சொற்களாக ஒழுகும் அகம் நான் எனத் திகழ.
எழுந்து மின்னஞ்சல்களைப் பார்த்துவிட்டு கீழே சென்றேன். மழைவிட்டிருந்தது. நடைசெல்லலாமா என்று சைதன்யாவிடம் கேட்டேன். குடையுடன் நானும் அவளும் அஜிதனும் நடக்கச் சென்றோம். வழக்கமாக நடைசெல்லும் இடத்தில் சேறு, ஆகவே சாலைவழியாக கணியாகுளம் சென்று மலையடிவாரச் சாலையில் நடந்தோம்.
மலைமேல் மழை நின்றிருந்தது. இருட்டு பரவியிறங்கி வந்துகொண்டே இருந்தது. குளிர்ந்த காற்றில் மலைகள் நடுக்குறுவதுபோல. நீர்சொட்டும் பசுமை, கழுவப்பட்டது போன்ற கரிய சாலை, நான் அதுவரை பார்க்காத முற்றிலும் அன்னியமான ஏதோ நிலம் எனத் தோன்றியது. ஒவ்வொன்றும் இனிதாக இருந்தன. பொருள் பொதிந்திருந்தன. வெறுமே பார்ப்பதன், அப்படி அங்கே நின்றிருப்பதன் உவகை. அப்போது எதைப்பேசினாலும் அது பறவைகளின் மகிழ்ச்சிக்குரல் போல ஓர் இன்னொலி மட்டுமே.
திரும்பி வரும்போது மழை பெய்யத்தொடங்கியது. குடைநுனிகள் சொட்ட மழைநீருக்குள் நடந்தோம். நான் பழையநினைவுகள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தேன். வாழ்க்கையின் இனியநாட்கள் பற்றி. மனம் இனிமையில் திளைத்துக் கொண்டிருந்தது. இருக்கிறேன், இங்கே இப்படி இதோ இருக்கிறேன் என்பதற்கு நிகராக இப்புவியில் இனிமையான எண்ணம் என ஒன்று உண்டா என்ன? இருந்துகொண்டிருந்தேன், தித்தித்துக்கொண்டிருந்தேன்.
வீடுவந்து சேர்ந்தபோது காலையில் அதைப்போல வீடுவந்துசேர்ந்து ஷூக்களை கழற்றிய நினைவு வந்தது. ஆனால் காலையில் மிகுந்த சோர்வுடன் அதைச் செய்திருந்தேன், அப்போது மனம் நிறைவுற்றிருந்தது.
காலையில் அது என்ன சோர்வு? எப்படி அதை கடந்தேன்? காரணமில்லாமலிருக்காது. அருண்மொழி பழம்பொரி செய்திருந்தாள். ஒன்றைத் தின்றபின் மேலே வந்தேன். வெறுமே எதையோ தட்டச்சிட்டுக்கொண்டிருந்தபோது நான் அன்று பகலுறக்கம் முடியும்போது கண்ட கனவு நினைவுக்கு வந்தது. அதில் சென்று முட்டித்திரும்பியதால்தான் மீண்டேன். என்ன கனவு? அதை திரும்ப நிகழ்த்த முடியவில்லை. மெல்லிய நினைவாகவே மீண்டது. அக்கனவில் நான் இறந்து படுக்கையில் கிடப்பதை சன்னலுக்கு அப்பாலிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
***