இரட்டைமுகம்

ராமர் கோயில்

இனிய ஜெயம்

முகநூலில் சுவாரஸ்யமான அடிதடி ஒன்று கண்டேன். காலச்சுவடு கண்ணன் அவர்கள் நீங்கள் ராமஜென்ம பூமி ஆதரவாளராக இருந்த ஆளுமை என்றும், அந்த ஆதரவின்படியே விஜய பாரதம் பதிப்பகத்தின் தோழமை பதிப்பகம் வழியே விஷ்ணுபுரம் முதல் பதிப்பு வெளியானது என்றும், அன்றைய பொது இந்துத்துவ அரசியல் எதிர்பார்ப்பு  அலையில் எழுந்து வந்து, தீவிர இலக்கியத்தில்  இடத்தை உருவாக்கிக் கொண்ட புனைவே விஷ்ணுபுரம் என்றும், அதிலிருந்தே தமிழில் நிலை கொண்டவர் நீங்கள் என்றும் (பதிவின் சாராம்சம் இதுதான்). என அவரது அவதானிப்பை சொல்லி இருந்தார்.

எதிர் தரப்பாக அரவிந்தன் நீலகண்டன் உங்களுடன் பழகிய நிலை, யூகித்து துப்பறிந்த நிலை, உங்கள் புனைவுகள் வழியே தகவல் திரட்டிய நிலைகளில், பிரத்திக்ஷம், அனுமானம், சுருதி எனும் மூன்று அடிப்படைகளில் கண்ணனை மறுத்திருந்தார். நேர்மையற்ற ஜெயமோகன் ராமஜென்ம பூமி விசுவாசியாக இருக்க வாய்ப்பே இல்லை.(பதிவின் சாரம் இதுதான்).

கண்ணன் அவர்களின் பதிவின் படி பார்த்தால் இந்நேரம் நீங்கள் தமிழக பிஜேபி தலைவர் ஆகி இருக்க வேண்டுமே. எங்கே தப்பு செய்தீர்கள்? வெண்முரசு வழியாகவேனும் இனி அப்படி தப்பு நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். :)

அநீ உங்களின் நேர்மை குறித்து ( எப்போதும் போல) சொல்லி இருக்கிறார். சூழல் எது என்றாலும் மாறவே மாறாமல் இருப்பதே நேர்மை என அவர் நினைக்கிறார் என கருதுகிறேன். உதாரணத்துக்கு இரு சம்பவங்கள் வழியே அவரையே உதாரண புருஷராக கொள்வோம்.

சம்பவம் ஒன்று.

நீதி மன்ற ஆணைப்படி, பூரி ஜெகன்நாதர் ஆலயத்தை ‘காக்கும்’ பொருட்டு அதை சுற்றி உள்ள மடங்கள் ( ஈடு அளிக்கப்பட்டுதான்) தகர்க்கப் படுகின்றன. நூற்றாண்டு கண்ட மடங்கள். அந்நிய படையெடுப்பை எதிர்த்து நின்ற மடங்கள். கோவிலுடன் அதன் அன்றாட சடங்குகளுடன் பிணைந்து நின்ற மடங்கள்.

சம்பவம் இரண்டு.

கொள்ளை போன இந்திய செல்வங்களை, தன்னார்வலராக போராடி மீட்கிறார் தமிழ் நிலத்தை சேர்ந்த விஜயகுமார். அது குறித்து அவர் எழுதிய சிலை திருடன் நூலை அநீ ப்ரமோட் செய்கிறார்.

சம்பவம் ஒன்றின் எதிர்வினை.

பண்பாடு காவலர்கள் நாங்கள்  என வாக்களித்த அரசின் கீழ் நிகழும் ஒரு பண்பாட்டு அழிவு பூரியில் நிகழ்ந்தது. அந்த அரசுக்கு கருத்தியல் தளம் வழியே துணை நின்ற அநீ மிக மிக நேர்மையுடன் ‘மௌனமாக’ இருந்தார். வேதாரண்யர் மடமோ, அவருக்கு சோறுபோட்ட விவேகானந்தா கேந்திரமோ, சட்டப்படி, நியாயப்படி, நீதியின் படி, வேதத்தை முதலாகக் கொண்ட சனாதன தர்மத்தின்படி இப்படி அழிந்தாலும் ஆட்சியில் அவர் கருத்து முட்டுகொடுக்கும் அரசு இருத்தால் இதே போன்று மிக மிக நேர்மையான மௌனத்துடன்தான் இருப்பார்.

சம்பவம் இரண்டின் எதிர்வினை.

பாரதப் பிரதமர் மோதி அவர்களே கொள்ளை போன செல்வத்தை நேரடியாக சென்று மீட்டு வந்தார். வந்ததும் இந்திய கலை செல்வங்கள் சார்ந்த வணிக சட்டங்கள் அனைத்தும் திருத்தி அமைக்க பட்டன.

அதன்படி இனி திருடு போன ஒரு இந்தியச் செல்வத்தை மீட்கவோ, இனி திருடப்படப் போகும் இந்தியக் கலைச்செல்வங்களை தடுக்கவோ முடியாது. இந்த தளர்வு சட்டங்கள் குறித்து விஜயகுமார் மட்டும்  ‘நேர்மையற்ற பச்சோந்தியாக’ மாறி புலம்பிக்கொண்டு இருக்கிறார். அநீ மிக மிக நேர்மையுடன் மௌனமாக இருக்கிறார்.

இப்படிப் பல உண்டு எனினும் உதாரணத்துக்கு பண்பாடு சார்ந்த இந்த இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டேன். இனிமேலாவது அநீ அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். நேர்மை என்றால் எப்படி இருக்கும் என்று. :)

 

கடலூர் சீனு

 

காலச்சுவடு கண்ணன் பதிவு

முப்பது வருடங்களிருக்கும். வீட்டு மொட்டைமாடியில் ஒருநார்க்கட்டிலில் அமர்ந்தபடி ஜெயமோகனுடன் பேசிக்கொண்டிருக்குதேன். சரியாகச் சொல்வதென்றால் பேசக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடன் அதிகப் பழக்கம் இல்லாத காலகட்டம் (கடைசிவரை ஒட்டவில்லை என்பது வேறு செய்தி). ராமஜென்மபூமி இயக்கம் பற்றி உணர்ச்சிப்பிழம்பாக பேசிக்கொண்டிருந்தார். என் அசுவாரசியம் முகத்திலேயே வழிந்திருக்க வேண்டும். எனவே என்னைப்போன்ற ‘மேற்கத்தியச் சிந்தனை’மரபினர்மீது கொஞ்ச நேரம் பொழிந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸுடன்தனக்கு வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவது இன்றும் ஒரு உணர்வுபூர்வமான விஷயம்தான் என்றார். அப்படிப்பேசும் ஒரு தமிழ் எழுத்தாளரை அப்போதுதான்முதலில் பார்த்தேன். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர்தான் இப்போதும் இருக்கிறார்.

ராமஜென்மபூமி இயக்கம் உருவாகியிராவிட்டால் ஜெயமோகனின்படைப்புலகின் ஒரு முக்கியக் கூறு உருப்பெற்றிருக்காது. அல்லது இப்படிச் சொல்லலாம். ராம ஜென்ம பூமி இயக்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இந்து எழுச்சி’யின் வழி உருவான மனம்தான் ‘இந்திய ஞான மரபு’ என்பதான படைப்புலகை உருவாக்கியது. எனவேதான் அதற்குத் தமிழில் முன்னோடிகள் யாருமில்லை. ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வேறுயாரும் தமிழ் இலக்கியத்திற்கு வரவில்லை என்பதால் பின்னோடிகளுமில்லை.

கார்கில் யுத்தமும் அதை பாஜக அரசு தேசியவெறியாக வளர்த்தெடுத்த லாவகமும் நடந்திராவிட்டால் ஜெயமோகன் எனும் சமூக அரசியல் கருத்தாளருக்கு அத்தலைமுறையில் விசிறிகள் உருவாகியிருக்கமுடியாது. IPKF இலங்கையில் யாரையும் வன்பாலுறவு செய்யவில்லைஎன்பதையோ இந்தியாவுக்கு எதிரான மதச் சிறுபான்மையினரின் சதிகளைப் பற்றிய பினாத்தல்களையோ செரிக்க தேசிய வெறி இருத்தல் வேண்டும். (இதற்கும் தேசப்பற்றுக்கும் சம்பந்தமில்லை).பெண்ணியம், தலித்தியம், இடதுசாரிக் கருத்தியல் சார்ந்து லர்கவனம்பெற்றுவிடுவதாக ஆக்ரோஷப் பதிவுகளைப் பார்க்கும்போதுஇதை நினைவில் கொள்க.

விஷ்ணுபுரம் நாவலின் அச்சாக்கத்திற்கும் விநியோகத்திற்கும்ஆர்.எஸ்.எஸ். நேரடியாக உதவிசெய்தது. இதுபற்றி இன்னொருசந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளைப் பார்க்கலாம்.

[கண்ணன் சுந்தரம் முகநூலில்]

அரவிந்தன் நீலகண்டன் பதிவு

சுமார் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். சரியாக ஆண்டு 1991. காலச்சுவடு என்கிற காலாண்டு இதழை தமிழ் எழுத்தாளரும் ஜவுளிக்கடை வியாபாரியுமான சுந்தர. ராமசாமி என்பவர் நடத்தி வந்தார். நல்ல வியாபாரி. திறமையான எழுத்தாளர் – எல்லா தமிழ் எழுத்தாளர்களையும் போலவே. யாரிடம் எப்படி பேச வேண்டுமென்பது தெரிந்த ஆசாமி.

’காலச்சுவடு’ சிறப்பிதழில்தான் முதன் முதலாக தமிழ் சிற்றிதழ் சூழலில் அட்டகாசமான perhaps only அயோத்தி ஆதரவு கட்டுரையை படித்தேன். அயோத்தி ஆதரவு கட்டுரையை வெளியிட்ட கையோடு தான் அந்த கட்டுரையை ஏற்கவில்லை என்பதையும் விரிவாக சொல்லியிருந்தார் சுந்தர.ராமசாமி.

ஆனால் அந்த கட்டுரைதான் தமிழ் சிற்றிதழ்களிலேயே முதன் முதலாக வெளிவந்த அயோத்தி கோவில் ஆதரவுக்கான மிக மிக காத்திரமான கட்டுரை. அயோத்தியில் மட்டுமல்ல காசி மதுராவிலும் கோவில்கள் கட்ட வேண்டுமென்கிற வாதத்தை மிக அழகான அறிவுஜீவி நேர்த்தியுடனும் சமூக அறிவியல் தெளிவுடனும் முன்வைத்தது.

தான் ஜி.எஸ்.கிருஷ்ணன் (கட்டுரையாளர்) அவர்களின் கருத்தை ஏற்கவில்லை என்று சொல்லும் போது கூட கிருஷ்ணன் அவர்களின் கூர்மையான பார்வையையும் வெகுவாகப் பாராட்டியிருந்தார் சுந்தர.ராமசாமி.

நேற்று காலச்சுவடு கண்ணன் ஜெயமோகன் அயோத்தி கோவில் கட்டுவதை ஆதரித்து ஆவேசமாக பேச தான் சுவாரசியமின்றி கேட்டுக்கொண்டிருந்ததாக சொல்லியிருந்தார். எனவேதான் அந்த 1991 காலச்சுவடு (இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்னர்) அயோத்தி மட்டுமின்றி காசி மதுரா ஆகிய இடங்களையும் ஹிந்துக்களிடம் கொடுப்பதன் மூலம் உண்மையான மதச்சார்பின்மையை வளர்த்தெடுக்க முடியும் என்கிறபடியான மிகக் காத்திரமான கட்டுரைஐ வெளியிட்ட முதல் தமிழ் ‘சிற்றிதழ்’ என்பதை சொல்லியிருந்தேன்.

கூடவே அந்த காலகட்டத்தில் ஜெயமோகன் எக்காரணம் கொண்டும் அயோத்தி இயக்கத்தை ஆதரித்திருக்க முடியாது என்பதற்கான ஆதாரம் அதே காலச்சுவடில் ஜெயமோகன் எழுதிய சிறுகதையிலேயே உள்ளது.

இக்கதையில் விஷ்ணுபுரத்தில், கொற்றவையில் என ஜெயமோகனின் அனைத்து படைப்புகளிலும் இருக்கும் மனச்சாய்வுகளும் மதிப்பீடுகளும் உள்ளன.ஆரிய இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தைப் பார்த்தல், பிராம்மணீயம் என்கிற மேலாதிக்க மனிதத்தன்மையற்ற அமைப்புக்கு எதிரான கலகக் குரலாக சார்வாகனை முன்வைத்தல் என மிகவும் தொழில் நேர்த்தியுடன் செய்யப்பட்ட ஹிந்து விரோத பிரச்சார சிறுகதை இது.

1990களில் சோவியத் யூனியன் தகர்ந்த போது இந்திய மார்க்ஸியர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்றெடுத்தார்கள் – வர்க்க போராட்ட கோட்பாடுகளை இந்தியாவில் நிலவும் அடையாள அரசியல்களுடன் இணைப்பது. இது ஏதோ மார்க்சியத்தை மண் சார்ந்த அரசியலாக்குவதாக பேசப்பட்டது. கோவை ஞானி போன்றவர்கள் இதை திராவிட கழக வெறியுடன் செய்தவர்கள். ஜெயமோகன் இதையே தன்னுடைய நாவலில் சிறுகதைகளில் செய்கிறார்.

“எத்தனை உற்சாகம் இந்த சூத்திரர்களுக்கு! சூதர்களின் பாடலை மெய்மறந்து கேட்கிறார்கள். தஸ்யூக்களே அந்த சூதர்களிடம் அவர்களுடைய பாடலில் கடோத்கஜன் என்ற பெயர் ஏன் உச்சரிக்கப்படவில்லை என்று கேளுங்கள். ராதேயன் கர்ணனை ஏன் அவர்கள் பாடவில்லை என விசாரியுங்கள். ஆனால் அவர்களைப் பற்றி குறைந்த பட்சம் காடுகளில் தஸ்யுக்கள் பாருகிறார்கள். சூத்திர ஞாபகங்களில் அவர்கள் பெயர் தொடர்கிறது. ஆனால் ஆயுதமேந்தும் உரிமை கூட இல்லாமல் ரணகளம் புகுந்து ஆரிய அம்புகளால் துண்டாடப்பட்ட முரசேந்திகளை, யானைப்பாகர்களை, தேரோட்டிகளை, சூத்திர லட்சங்களை எந்தப் பாடல் பாடும் …”

தஸ்யுக்கள்=சூத்திரர்கள் vs. ஆரியர்கள் என இரட்டையை வெறுப்புத் துல்லியத்துடன் முன்வைக்கும் வரிகள். இப்படிப்பட வரிகளை எழுதும் வெறுப்பு சிற்பியால் ராமஜென்மபூமியை எப்படி ஆதரிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒருவர்

ராமஜென்மபூமியை ஆதரித்தார் என்று சொல்வது பச்சை புளுகன்றி வேறல்ல என்றே தோன்றுகிறது.

(இக்கதையை படித்த போது மிக மோசமான உடல்நிலையால் ஹாஸ்பிடலில் இருந்தேன். இக்கதை மிகவும் சங்கடப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தேடலின் தொடர்ச்சியாக டாக்டர் அம்பேத்கரின் ‘சூத்திரர்கள் யார்?’ நூல் சங்க தொடர்பினால் படிக்க கிடைத்தது. இச்சிறுகதையின் விஷத்தை முறித்த நல் மருந்தாக அந்நூல் அமைந்தது.)

எனக்கு ஜெயமோகனிடம் தொடர்பு கொண்ட நாள் முதல் அவரது ஹிந்துத்துவ எதிர்ப்பை நன்கறிவேன். ஹிந்து ஞான மரபு வேறு இந்துத்துவம் வேறு என்கிற அவரது நிலைப்பாட்டை நான் ஒருநாளும் அவருடன் மிக ஓரளவு நெருக்கமாக இருந்த நாட்களில் கூட பதிவு செய்திருக்கிறேன்.

அவரது நேர்மையை நம்பியவன். அதற்கு என்னையறியாமலே அவர் ஆர். எஸ். எஸ்ஸில் இருந்தார் என்பது காரணமாக இருந்திருக்கலாம். அவர் தலித்துகள் என்றெல்லாம் பேசும் போது நம்பியிருக்கிறேன். உருகி எழுதியிருக்கிறேன். ஆனால் ‘வெள்ளையானை’ நாவலை முழுக்க முழுக்க தரவுகள் அடிப்படையில் எதிர்கொண்ட போது அதில் அலெக்ஸ் குறித்த ஒரு வரியை -அதுவும் உண்மையான வரியை – பிடித்து கொண்டு நாலாந்தர கீழ்த்தர அரசியல் வாதியாக தன்னை தோலுரித்துக் காட்டியபோதுதான் அது அச்சுடைக்கும் இறுதி பீலியானது.

வெள்ளையானையில் காட்டப்பட்ட வெறுப்பினை இங்கே காணலாம். விஷ்ணுபுரத்தில் காணலாம். ’கொற்றவை’ எனும் பெயரில் எழுதப்பட்ட படைப்பில் அருவெருப்பு முழுதாக வெளிப்பட காணலாம். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு பிரகடனமாகக் கொள்ளத்தக்க ஆபாசகுவியலாகவே அதை நான் காண்கிறேன். அதே படைப்பை கோவை ஞானி தன் தனித்தமிழ்+மார்க்சிய வெறிக்கும்பலுடன் இரண்டு இதழ்கள் வெளியிட்ட கொண்டாட்டமே நடத்தினார்.

என்னுடைய பிரச்சனை அவரது அடிப்படை நேர்மையற்றதன்மை. எள்ளளவும் நேர்மைக்கு இடமற்ற உள்ளொன்று வைத்து புறம் கூறும் நேர்மையின்மை. மேலும் ஜெயமோகனிடம் மண்டிக்கிடக்கும் சுயநல வக்கிரம் – இவையே ஜெயமோகனிடமிருந்து என்னை விலகவைத்தவை. ஜெயமோகனின் இந்த குணாதிசயங்களை நான் குறையாகக் கூட கூறவில்லை. இவை எனக்கு ஒவ்வாதவை. அவ்வளவே.

அரவிந்தன் நீலகண்டன் முகநூலில்

அன்புள்ள சீனு

இந்த இருகுறிப்புகளையும் பார்த்தேன். முதல்குறிப்பை எனக்கு அனுப்பிய சில வாசகர்கள் என் விளக்கத்தைக் கோரியிருந்தனர். குறிப்பாக என் வாசகரான நாகூர் பிச்சை. அவர்களுக்கு இரண்டாம் குறிப்பையே பதிலாக அனுப்பினேன்.

முதல்குறிப்பு பற்றி. நான் காலச்சுவடு கண்ணனிடம் நீண்ட உரையாடல் எதையாவது நிகழ்த்திய நினைவில்லை. ஆனால் 1992-லேயே பாபர் கும்மட்டம் இடிப்பு குறித்து என் கடும் கண்டனம் பதிவாகியிருக்கிறது. கூடவே அது மாபெரும் மசூதி என்றும், அங்கே வழிபாடு நடந்தது என்றும், பாபர் எந்த ஆலயத்தையும் இடித்ததே இல்லை என்றும், இஸ்லாமியர் வந்து இந்தியாவை ஒருங்கிணைத்தனர் என்றும், அவர்கள் இந்துக்கள் மேல் வன்முறையையே செலுத்தவில்லை என்றும், இடதுசாரிகள் முன்வைத்த வாதங்களையும் கண்டித்திருந்தேன். அந்தப் பொய்களால் அவர்கள் வெறுப்பை மறுஎல்லையில் நின்று வளர்க்கிறார்கள் என்பது என் எண்ணம்.

தீண்டாமை குறித்து ஒர் இந்து நாணியாகவேண்டும், மதவிசாரணைகள் மற்றும் வன்முறை மதமாற்றம் பற்றி கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் நாணியாகவேண்டும். அதுவே அவர்கள் தங்கள் மதங்களின் இறந்தகாலப் பிழைகளைச் சரிசெய்வதற்கான வழி. அதை சமாதானம் செய்யும் முயற்சிகள், கொம்புசீவிவிடும் முயற்சிகள் அனைத்துமே அழிவை அளிப்பவை. இதுவே என் நிலைபாடு,  கண்ணனிடம் அதைச் சொல்லி புரியவைக்க முயன்று தோற்றேனா என்று நினைவில்லை.

கண்ணன் நானறிந்தவரை இப்போது அவர்பேசும்  ‘முற்போக்கான’ எண்ணங்கள் எதையும் கொண்டவராக இருக்கவில்லை. ‘பிராமணர்களுக்கு மீடியாவிலே மட்டும்தான் இப்ப சான்ஸ் இருக்கு’ என அவர் சொன்னதை நினைவுறுகிறேன். ஒரு பிராமண மீடியாவை உருவாக்க முயன்றவராகவே எனக்கு அவரைத் தெரியும். அதில் பிழையும் இல்லை.

அவர் அதற்கு ஒரு இஸ்லாமியமுகம் தேவை என்றே மனுஷ்யபுத்திரனை தெரிவு செய்தார். அதை டிரஸ்ட் ஆக நிறுவியபோது மனுஷ்யபுத்திரன் அகற்றப்பட்டார். அது வணிகச்சூழ்ச்சி, அதில் மட்டுமே என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். மனுஷ்யபுத்திரனை ஆதரித்தேன். ஆனால் அது எல்லா மீடியாவிலும் நிகழ்வதே என இப்போது தெரிகிறது. தி இந்து, ஆனந்தவிகடன் கல்கி உட்பட எல்லா பிராமண மீடியாக்களும் கொண்டிருக்கும் உத்தி அந்த முகம்.

காலச்சுவடு சென்ற இருபதாண்டுகளாக என்னை அவதூறு செய்தும் பழித்தும் ஐம்பதுக்கும் மேல் கட்டுரைகளை, குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இது அதில் இன்னொன்று. நான் மறுப்பேதும் தெரிவித்ததில்லை. கண்ணனின் பல வணிகச்சூழ்ச்சிகளை அறிந்தும் எதிர்வினையாற்றியதுமில்லை. அவையெல்லாமே இங்கே இயல்பான செயல்பாடுகள்தான்.

இத்தனை தூரம் காலச்சுவடும் பிறரும் முயன்றபின்னரும் நான் ஒரு படைப்பிலக்கியவாதியாக வாசிக்கப்படுகிறேன், மதிக்கப்படுகிறேன் என்றால் அதற்கு ‘இந்துத்துவ அரசியல்சூழல்’ மட்டுமே காரணம் என கண்ணன் நம்புவதில் எனக்கு ஆச்சரியமில்லை- என்றுமே இலக்கியம் என்றால் என்ன என்று அறிந்தவரோ எதையேனும் வாசித்தவரோ அல்ல.

உண்மையில் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் இலக்கியம் பற்றி இதே மதிப்பீடுதான் உள்ளது. அரவிந்தன் நீலகண்டனும் இதையே சொல்வார். இதையே அ.மார்க்சும் சொல்கிறார் என்பதைக் காணலாம். இலக்கியம் என்பது வேறு ஒரு செயல்பாடு, அதில் உணர்வுபூர்வமான அழகியல்பூர்வமான ஓர் அம்சம் உள்ளது, அது வாசகர்களின் பண்பாட்டு நினைவுகளுடனும் தனிமனித ஆழத்துடனும் உரையாடுகிறது என்பதையே இவர்கள் உணர்ந்திருப்பதில்லை. உணரவைக்கவும் எவராலும் இயலாது.

அன்று தமிழகத்தில் பாபர் மசூதி இயக்கம் பற்றிய ஆதரவுக் கட்டுரையாக வெளிவந்தது ஒரே ஒரு கட்டுரை – ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் எழுதியது. வெளியிட்டது காலச்சுவடு. அந்தக் கட்டுரைக்கு ஆதரவான மனநிலை சுந்தர ராமசாமிக்கு இருக்கவில்லை, அதை வைத்து தயங்கிக்கொண்டிருந்தார்.

பின்னர் வெளியிட முடிவெடுத்தபோது அன்று அவர் ஒன்று சொன்னார், காலச்சுவடு ஒரு பத்திரிகையாக நிலைநிற்கவேண்டும் என்றால் அது 300 வாசகர்களை மட்டுமே சிற்றிதழ்ச்சூழலில் இருந்து பெறமுடியும், எஞ்சியவர்கள் கல்கி-விகடனிலிருந்து வரவேண்டும், ஆகவே ஒரு விவாதம் வரட்டும். அக்கட்டுரை அந்த வாசகர்களை கவரும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. ஆனால் அப்படி எவரும் வரவில்லை. அதன்பின்னரே காலச்சுவடின் வண்ணம் மாறியது.

அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களின் மனநிலை இருவகைப்பட்டது. ஒன்று அதிதீவிர அரசியல்வெறி. அது மதவெறிகூட அல்ல, அரசியல்வெறி மட்டுமே. மதம் அவர்களுக்கு பொருட்டே அல்ல. அதுவே திமுக ஆட்களிடமும் இடதுசாரிகளிடமும் அதேபோல வெளிப்படுகிறது. அதில் நியாயதர்மங்கள் ஏதுமில்லை. ஆனால் இது மதத்தை அரசியலாக்குவதனால் இந்த வெறியில் முதன்மையாகப் பாதிக்கப்படுவது மதமாகவே இருக்கும்.

இன்னொன்று, அரசியல் காழ்ப்புகளை தனிநபர் வெறுப்பாக ஆக்கிக்கொண்டு வெறுப்பில் திளைப்பது. அது ஒருவகை எதிர்மறை ஆற்றலை அளிக்கிறது. உள்ளார்ந்த ஆளுமைச்சிக்கல்,அறச்சிக்கலின் விளைவு அது. பலவீனமான மனிதர்களின் வழி.

இவர்களுக்கு எவர்மேலும் மதிப்பில்லை. இவர்களின் அரசியலை எவர் எதிர்த்தாலும் அவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள், துரோகி என வசைபாடப்படுவார்கள். இவர்களின் தலைவர்களே கூட. இன்று அத்வானிக்காக ஒரு குரல் எழுகிறதா? கோவிந்தாச்சாரியா நினைவுகூரப்படுகிறாரா? நிருபன் சக்கரவர்த்தி பேசப்படுகிறாரா? டபிள்யூ ஆர் வரதராஜன் எப்படி மறைந்தார்? எல்லாம் ஒரே மனநிலை, ஒரே வெறுப்பு.இன்றுள்ள அதிகாரமையம் எல்லாவகையிலும் சரியானது, பிற அனைத்தும் கேவலத்திலும் கேவலம், அழித்தொழிக்கப்படவேண்டியவை- அவ்வளவுதான்.

இன்று ஒரு பாரம்பரிய இந்துமத ஆசாரியன் ராமர்கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார் என்று வைத்துக்கொள்வோம், வீரமணி சொல்லத்தயங்கும் வசைகளை இந்த இந்துத்துவர்களிடமிருந்து பெறுவார். நேற்றுமுன்தினம் அப்படி இந்து ஆதீனங்களை கட்சிப்பொறுப்பில் இருக்கும் ஓர் இந்துத்துவர் வசைபாட அதை சக இந்துத்துவர்கள் கொண்டாடும் ஒரு ஸ்க்ரீன்ஷாட் எனக்கு அனுப்பப்பட்டது. வேறென்ன எதிர்பார்த்தீர்கள் என்று மட்டும் ஒருவரி எழுதினேன்.

ஆனால் தேவை என்றால் ஏற்கனவே சொன்ன நியாயமான விமர்சனங்களை விழுங்கிக்கொள்ளவும் இவர்களால் முடியும். காஞ்சி சந்திரசேகரர் தலித் மக்களைப் பற்றிச் சொன்னவற்றை கடுமையாக விமர்சித்த அரவிந்தன் நீலகண்டன் இன்றைக்கு என்ன சொல்கிறார்? இன்றைக்கு அவரைக் கொண்டாடும் ஸ்மார்த்த பிராமணச் சாதிவெறியர்கள் என்ன சொல்கிறார்கள்? நேற்று அவர்கள் அரவிந்தன் நீலகண்டனை கிறிஸ்தவக் கைக்கூலி என்று எழுதினார்களே, அவர்களின் மனம் மாறிவிட்டதா?

பூரி மட்டுமல்ல அதைவிட மோசமாக காசி இடித்துச் சூறையாடப்படுகிறது. ‘நவீனப்படுத்துகிறார்கள்’ பாரம்பரியமான பல சிற்றாலயங்கள் அழிந்துவிட்டன. கோபுரங்களில் ஏஷியன்பெயிண்ட் அடித்து ‘திருப்பணி’ செய்யும் அதே மனநிலை. இந்த தொல்நகரங்கள் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படவேண்டும், கூடவே அவற்றின் தொன்மையும் மரபும் பேணப்படவேண்டும். அங்கே கான்கிரீட் கோபுரங்கள் உருவாகுமென்றால் அது பேரழிவு. ஆனால் எவர் பொருட்படுத்துகிறார்கள்?

இவர்களுக்கு மரபு, ஆன்மிகம் எதுவும் தெரியாது. எல்லாம் இவர்களின் கட்சியரசியலின் பகுதி மட்டுமே. இந்தக்  ‘புல்டோசர் அரசியல்’ இந்து மெய்ஞான மரபுகளுக்கு மட்டுமல்ல வழிபாட்டு முறைகளுக்கேகூட ஆபத்தானது. இந்துமரபு அதன் பன்மைத்தன்மையால், அதன் உள்விரிவால் நிலைகொள்வது. இவர்களின் அரசியலுக்காக அதை ‘சமப்படுத்துவது’ பேரழிவை உருவாக்கும். அதை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். கேட்பவர் கேட்கட்டும்.அதன்பொருட்டு வசை வருமென்றால் அதுவும் பிரசாதம்தான்.

*

இந்த இரு குறிப்புகளும்  உண்மையில் என்னை குழப்புகின்றன. நான் உண்மையில் யார்? குழம்பிப்போன ஒரு கொள்கையாளனா? தாவிக்கொண்டே இருப்பவனா? பிறரால் ஆட்கொள்ளப்படுபவனா? எனக்கே தெளிவாக இப்போது தெரியவில்லை.

ஆனால் எந்த லாபத்தையும் இக்கருத்துக்களால் அடையவில்லை என்று மட்டும் சொல்லமுடியும். வெள்ளையானை எழுத நான் அலெக்ஸிடமிருந்து பணம் பெற்றதாக ஓர் இந்துத்துவ அவதூறு உண்டு, ஆனால் அவருடைய சிகிழ்ச்சைக்கும் தொடர்ந்து குடும்பத்துக்கும் நான், நண்பர்கள் உதவவேண்டியிருந்தது; இன்றும் உதவ வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. எல்லா நிலையிலும் நான் கொடுப்பவனாகே இருந்துள்ளேன். இந்த கொரோனா காலகட்டம்வரை தொடர்ச்சியாக பெரும் கைச்செலவுதான். நல்லவேளையாக சினிமா என் கையை வறளச்செய்ததே இல்லை.

நான் உறுதியான மாறாத நிலைபாடு கொண்டவன் அல்ல, அரசியல் கோட்பாட்டாளனோ செயல்பாட்டாளனோ அல்ல,  அவ்வாறு எவரும் நம்பவேண்டாம். ஒரு தன்னிச்சையான போக்கையே என் சிந்தனைகளுக்கு அளித்திருக்கிறேன். என் உணர்வுகளும் ஆழுள்ளமும் என் மனதை தீர்மானிக்க அனுமதித்திருக்கிறேன். அது குழப்பங்களுடனும் சிக்கல்களுடனும் முரண்பாடுகளுடனும் இருக்குமென்றால் அவ்வாறே இருக்கட்டும் என்பதே என் விளக்கம்.

எழுத்தாளன் என்பவன்  பொதுமக்களில் ஒருவனாக திகழும் அன்றாட உளவியல் கொண்டிருக்கவேண்டும், அதற்கேற்பவே அவன் அரசியல் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். பொதுமக்களை வழிநடத்துபவனாக என்னை நினைத்துக்கொண்டதில்லை. என் கருத்துக்களை ஒற்றைநிலைபாட்டுடன், ஒரே போக்குடன், தொகுத்து முன்வைக்க முயன்றதே இல்லை. ஏதேனும் அரசியல்- தத்துவ நிலைபாட்டில் இரும்புத்தூணாக நின்றிருக்கவும் போவதில்லை. ஒரு பொதுவெளிப்பித்தனாக தோன்றினால் அப்படியே நீடிக்கிறேன்.

ஆகவே திடமான ஓர் அரசியல்வாதிக்காகத் தேடி எவரும் என்னிடம் தேடவேண்டியதில்லை. குழப்பமான நிலையற்ற ஒருவனை என்னிடம் எதிர்பார்த்தால்போதும். நான் முன்வைப்பது எழுத்தாளனின் அரசியல், அது தன்னிச்சையான அகவெளிப்பாட்டைக் கொண்டது என பலமுறை சொல்லியிருக்கிறேன்.

எழுத்தில் எனக்குச் செயல்திட்டங்கள் ஏதுமில்லை. அரசியல் செயல்திட்டங்கள் மட்டுமல்ல, தத்துவார்த்தமாகக்கூட. அடுத்து நான் ஒரு போர்ன் நாவல் எழுதினால்கூட நான் ஆச்சரியப்படமாட்டேன் என்று சொல்லியிருக்கிறேன். நான் தேடுவது என்னுள் இருந்து, என்னை தோற்கடித்தபடி வெளிப்படுவனவற்றை மட்டுமே. அது எதுவாக இருந்தாலும் இங்கே எழுத்துவடிவில் இருக்கிறது. அதில் எவருக்காவது தங்களைப் பார்க்கமுடிந்தால் பாருங்கள்.

இந்த இரு குரல்களுமே இரு பக்கமும் நெருக்க மூச்சுத்திணறுகிறது. இதற்கு அப்பால் வாசகர் என சிலர் இருப்பார்கள், அவர்களிடம் சொல்வது ஒன்றே. நீங்கள் என்னை நம்பவேண்டியதில்லை. உங்களை நம்புங்கள், உங்களை இந்த படைப்புக்களில் கண்டடைய முடிந்தால் நன்று. என்னை அளவிடமுயன்றால் புதுமைப்பித்தன் சொன்னதுபோல, உங்கள் அளவுகோல்களைத்தான் என்மேல் வைத்து அளந்துகொள்கிறீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஞானி-7
அடுத்த கட்டுரைபித்தனின் பத்துநாட்கள்