அன்புள்ள ஜெ
நூறு சிறுகதைகள் பற்றி கடிதங்கள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கதைகள் எழுதியதை நிறுத்தி ஒருமாதகாலம் ஆகப்போகிறது. இத்தனைபேர் இத்தனை கோணங்களில் இந்தக்கதைகளை வாசிக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.
நான் நூறுகதைகள் வந்தபோது அவ்வப்போது படித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் முடித்தபிறகு மீண்டுமொருமுறை படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஆகவே ஆரம்பத்திலிருந்தே படித்துக்கொண்டு வருகிறேன்.
சிலகதைகள் நடைமுறையிலும் சிலகதைகள் கனவிலும் நிகழ்கின்றன.நடைமுறையில் நிகழும் கதைகளைவிட கனவில் நிகழும் கதைகள்தான் மனசில் நீடிக்கின்றன. அப்படி என் மனசில் நீடிக்கும் கதைகளில் அனலுக்குமேல் முக்கியமான ஒரு கதை முதலில் படித்தபோது அந்தக்கதையை சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது புரிகிறது, ஆனால் அப்படி விளக்கிக்கொள்ள கூடாது என நினைக்கிறேன்
ஆனந்த்குமார்
அன்புள்ள ஜெ
அனலுக்குமேல் ஓர் அழகான கதை. அந்த மையப்படிமத்தைப் புரிந்துகொள்ளாமல் அக்கதைக்குள் செல்லமுடியாது. அனல் இருப்பது கீழே. அனைவரும் அதற்குமேலேதான் கொஞ்சம் குளிர்ந்த பச்சையில் வசிக்கிறார்கள். ஓர் ஆவணப்படத்தில் கார்ல் சகன் ‘பூமி ஒரு கனல்துண்டு’ என்று சொல்கிறார். அந்தக்கனல் ஒரு துளைவழியாக பீரிடும் ஒரு இடத்தில் அந்தக்கதை நடக்கிறது. மொத்த காமமும் மொத்த ருசியும் உண்மையில் ஒரு மைமிங் மட்டும்தான், நடிப்புதான்
டி.எஸ்.கிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ
நூறுகதைகளில் சிலகதைகளைக் கடந்துவரவே முடியவில்லை. அதிலொன்று நிழல்காகம். பேச்சில்கூட ஒரு நல்ல உதாரண கதையாக அதைச்சொல்லமுடிகிறது. வாழ்க்கையைப்பற்றிய அருமையான ஒரு ஆன்மிகக்கதையாக அதை ஆக்கமுடிகிறது. இன்றைக்கு கொரோனா பற்றிப்பேசியபோதுகூட அந்தக்கதையை நான் சொன்னேன். நடிப்பதுதான் கடந்துசெல்வது. வைரஸின் நடிப்புவடிவம்தான் வாக்ஸின்
செல்வராஜ் எம்
***
அன்புள்ள ஜெ
நலம்தானே?
நிழல்காகம் கதையை நான் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. நமக்கு வாழ்க்கை ஒன்றுதான். ஆனால் எத்தனைமுறை அதை Myming செய்கிறோம். சின்னக்குழந்தைகள் பெரியவர்களின் வாழ்க்கையை போலிசெய்து விளையாடுகின்றன. எல்லா விளையாட்டுக்களும் போர்களின் Myming தான். எல்லா சினிமாக்களும் நாடகங்களும் இலக்கியங்களும் வாழ்க்கையின் Myming மட்டும்தான். சாமிகும்பிடுவது, திருவிழா, ஈமச்சடங்குகள் உட்பட எல்லா சடங்குகளும் Myming தான். நினைக்க நினைக்க நம்முடைய மொத்த வாழ்க்கையே அதுதான் என்ற எண்ணம் வந்துவிட்டது
ஆர்.பிரகாஷ்