ஓரினச்சேர்க்கை-கடிதங்கள்

மிக விரிவான மறுமொழிக்கு நன்றி.
தேர்வு இருந்ததால் அஞ்சல் பார்க்க தாமதமாகி விட்டது.

***மூன்றாம்பாலினத்தை பொறுத்தவரை அது சம்பந்தப்பட்டவரின் பிழை அல்ல என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. ஒருபால்புணர்ச்சிக்கு அந்தச் சலுகை இல்லை. அது அந்தத் தனிநபரின் கோணலானரசனை என்ற எண்ணம் இருந்தது, இருக்கிறது. அது இயற்கைக்கு மாறானது என்று நம்பப்படுகிறது.***

இது முற்றிலும் உண்மை. இன்னும் ஓரினசேர்க்கையை இயற்கை என்று நம்ப மறுக்கிறார்கள். ஓரினசேர்க்கை சட்டமாக அங்கீகரிக்கப் பட்டால், ஏதோ சாலை நெடுகிலும் முத்தம் கொடுத்து அசிங்கப் படுத்தி விடுவார்கள் என்பது போல் நினைக்கப் படுகிறது. மூடி மூடி வைத்திருந்தால் தான் ஆபத்துகள் அதிகம்.

இன்னொன்று, குடும்ப வரம்புறுகு சிதைந்து விடும் என்ற தவறான நம்பிக்கை (மற்றொரு மூட நம்பிக்கை!) இருக்கிறது. இது மிகவும் அபத்தம். மொத்த மக்கள்தொகையில் மிஞ்சிப்போனால் ஒரு சதவிகிதம்(அதிகபட்சமாக) தான் ஓரினசேர்க்கையாளர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதனால் குடும்ப வரம்புறுகிற்கு எந்தச் சிதைவும் ஏற்பட்டு விடாது என்றே கருதுகிறேன்.

தமிழ் எழுத்துலகிலும் எனக்குத் தெரிந்து இந்தப் பிரச்சினையை(பிரச்சனை/பிரச்சினை?) யாரும் விவாதித்ததாகத் தெரியவில்லை. உயிர்மையில் ஓரினசேர்க்கை-தளத்தில் ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். வெளிநாட்டுப் பெண் ஒருத்தி கிராமத்தில் தங்கியிருப்பாள். எல்லாரும் அவளைப் பார்த்து பிரமித்து இருப்பார்கள். கடைசியில் அவள் தன் partner (துணை ?) என மற்றொரு பெண்ணை(வெளிநாடு) அழைத்து வருவாள். கிராமத்தில் உள்ளவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவார்கள். இது சிறுகதையின் திருப்பமாகக் கையாளப் பட்டிருக்கும். தமிழ் எழுத்தில், வேறு விவாதங்கள் நடந்திருக்கலாம்; என் வாசிப்புலகம் மிகக் குறுகிய வட்டம் என்றே கருதுகிறேன்.

தமிழ் சினிமாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். உலகம் பேரன் காலத்தில் இருக்கும் பொழுது தான், தமிழ் திரையுலகம் தாத்தா சினிமாவை எடுக்கும்.

நம் சமூகத்தில் ஏதேனும் வகையில் தனித்தன்மை உள்ள மனிதர்கள் தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரு உபசமூகமாக ஆகி தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள். அதையே உங்களுக்கும் சொல்வேன். அதை ஒரு இழிநிலையாக, தண்டனையாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக, தவிர்க்கமுடியாத ஒரு வழியாக நினைத்தால் போதுமானது

இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஓர் இழிநிலையாகவே கருத முடிகிறது. யாருக்கும் தெரியாமல் ஓர் உபசமூகமாக வாழ்வது, ஏதோ பரத்தை போன்ற வாழ்வே எனக் கருதுகிறேன். பரத்தை என்பது இந்தக் காலத்தில் தான் இழிவு; சங்கக் காலத்தில் பரத்தை ஒரு சமூக அம்சம்; இது காலத்தின் மாற்றம் என்று தாங்கள் கூறலாம். இருந்தாலும் ஒரு மறைவு-வாழ்வுக்கு என் மனம் இடம் தரவில்லை.

வேறு யாரிடமும் இதைப் பற்றி பேச முடியாக் காரணத்தால், தங்களிடம் பகிர்வது மனதை இளகச் செய்கிறது. தங்களிடம் தொடர்ந்து உரையாட விருப்பம்,

நன்றி,
விஜய்.

பி.கு. முற்றிலும், வேறு தளத்தில். ஆங்கிலத்தில் a-an போல, தமிழில் ஒரு-ஓர் இருக்கின்றது. ஆனால் நான் படித்தப் புத்தகங்கள், வலைப்பூக்கள் (தங்களது உட்பட), பெரும்பாலான இடங்களில் ‘ஒரு’ தான் பயன்படுத்தப் படுகிறது. இதை வேண்டுமென்றே செய்த தவறு என்று சொல்ல மாட்டேன். மாறாக ‘ஓர்’ பயன்பாடு அழிந்துக் கொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன். உரையாடிய நண்பர்களிடம் யாரிடமும் (நான் உட்பட), பேச்சு வழக்கில் ‘ஓர்’ உபயோகப்பட்டுக் கேட்டதில்லை. இது ஒரு தவறாகவே கருதப் படுவதில்லை. இந்த வலைப்பூவில் (http://urapvr.tumblr.com/post/4023427252/tamil-article) உலாவினப் பின்பு தான், ஒரு-ஓர் பயன்பாடு எனக்குத் தெரிய வந்தது. இந்த மாற்றத்தைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?

***

அன்புள்ள விஜய்

நான் சொல்வது ஒரு நிரந்தர வழியல்ல. ஒரு தற்காலிக தீர்வு. இன்னொரு வழியையும் சொல்லியிருக்கிறேன். அது சமூகத்தை எதிர்த்துப்போராடுவது. ஆனால் அது இலட்சியவாதிகளுக்கே சாத்தியம். அந்த வேகமும் தியாகமும் இல்லை என்றால்தான் இந்த வழியை சொல்லியிருந்தேன்

ஒரு, ஓர் என்ற இலக்கணம் உரைநடைக்காக உருவாக்கப்பட்டதல்ல. செய்யுளுக்காக உருவாக்கப்பட்டது. நம்முடைய இலக்கணங்கள் முழுக்க செய்யுளுக்குரியவை. ஆகவே ஒலி ஒருமையை அவை முக்கியமாக கருதுகின்றன

இன்றுள்ள உரைநடையை நவீன எழுத்தாளர்கள் நூறாண்டுகளாக எழுதி எழுதி உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாகி வந்த உரைநடைக்கு அதற்குரிய விதிகள் உள்ளன. அவற்றை எழுத்தாளர்களின் நுண்ணுணர்வே தீர்மானிக்கிறது. கொண்டும் கொடுத்தும் சமூகத்துடன் அவர்கள் கொண்டுள்ள உரையாடல் தீர்மானிக்கிறது.

அந்த நுண்ணுணர்வின்படி ஓர் என்பது ஓங்கிய ஓசை உள்ளதாக அவர்களுக்கு படுகிறது. ‘தேவை ஓர் இடம்’ என்றால் அது அறைகூவல் போல ஓங்கி ஒலிக்கிறது. ’ தேவை ஒரு இடம்’ என்றால் அது சாதாரணத்தன்மையுடன் ஒலிக்கிறது.

இலக்கணம் எந்த வாழும் மொழியிலும் மொழியை தீர்மானிப்பதாக அமையாது. அது ஒரு குறைந்தபட்ச பொதுப்புரிதல் மட்டுமே. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்று சொன்ன ஞானியின் மரபுள்ளது தமிழ்

பொதுவாக இந்தவகையான இலக்கண விவாதங்களில் ஈடுபடுபவர்களுக்கு இயற்றமிழ் வாசிப்பே இருப்பதில்லை. எதையும் வாசிக்காமல், எதையும் உணராமல், மொழியறிஞராக காட்டிக்கொள்வதற்கான குறுக்கு வழி இது

ஜெ

***

வணக்கம் ஜெ.

ஓரினச் சேர்க்கை பற்றிய திரு விஜய் அவர்களின் கடிதத்திற்கான உங்கள் பதிலைச் சற்றுக் கவலையுடனேயே வாசித்துக் கொண்டிருந்தேன். மதம் தாண்டி ஒழுக்கம் என்று நீண்ட போது அந்தக் கவலையின் அளவு சற்று அதிகரித்தது. ஆனால் திரு விஜய் அவர்களின் மனதுக்கு இதமாக நீங்கள் கடைசியாகச் சொன்ன விடயம் படித்ததும், தோளில் கை வைத்து அழுத்தி “க்ரேட் ஜெ.” என்று சொல்லத் தோன்றியது. அதைச் சொல்லி விடலாமென்றுதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். சொல்லியாயிற்று.

திரு விஜய் அவர்களுக்கு, ஜெ. எடுத்துச் சொன்னது போன்று, உங்களைச் சமூகம் புரிந்து கொள்வதற்குப் பல காலங்கள் ஆகலாம். நீங்கள் சமூகத்தை, அதன் பார்வையைப் புரிந்து கொண்டு மௌனமாகப் புன்னகைத்துக் கடப்பதே வழி. அதற்கு சமூகத்தின் பார்வை வழி நோக்கி எழுதிய ஜெ. அவர்களின் இந்தக் கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும். எக்காரணம் கொண்டும் உங்களுக்குக் குற்ற உணர்ச்சி வராது பார்த்துக் கொள்ளுங்கள். தவறு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

சமூகத்தின் கண்கள் எப்படி இருந்தாலும், குடும்பத்தில் பெற்றோர், நெருங்கியவர்கள் ஒதுக்காதிருந்தால் போதுமென்று தோன்றும். ஜெ. சொல்லியிருப்பது போல், திருநங்கையினருக்கும் இதே அல்லல்தான். ஆனால் குடும்பமும் சமூகத்தின் அங்கம்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், அதையும் எளிதாகக் கடந்து விடலாம். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

Hats off ஜெ.

ப்ரியா

***

நன்றி பிரியா

நான் எந்த விஷயத்தையும் ஒரு விரிந்த தளத்தில் வைத்து பொதுவாக பார்க்கமுடியுமா என்று முயல்பவன். அதனடிப்படையில் தனிப்பட்ட தீர்வுகளை முயல்பவன்

இங்கும் அதையே செய்திருக்கிறேன்.

ஜெ.

***

ஜெ,

தங்கள் நிலபிரபுத்துவ அறம், நவீன அறம் பற்றிய சிந்தனைகளை ஆழமாக பார்த்ததில்லை. ஓஷோவில் இருந்து நவீன குருமார்கள் இதை பற்றி கூறியதாக தெரியவில்லை.
http://www.ndtv.com/article/india/rapes-of-women-show-clash-of-old-and-new-india-94534
இங்கு படித்தது அச்சம் கொள்ள செய்தது.

மேலும், இன்றைய தொலைக்காட்சிகளில் நகர்புறம் கிராமங்கள் மீது போர் தொடுத்து விட்டதாக தோன்றுகிறது. ‘நிஜம்’ போன்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு கிராம பழக்க வழக்கங்கள் பற்றி விபரீத ஒலியுடன் ஏதோ காட்டுமிரண்டிகளை போல் சிதரிப்பது வழக்கமாகிவிட்டது. கிராம மக்களும் நகர் வாழ் மக்களை ஆழமில்லாத நம்ப தகாதவர்களாக, கலாசாரத்தை சீர்குலைப்பவர்கலாக பார்க்க முடிகிறது.

நல்ல வேலை சில காலமாக கிராமிய படங்கள் மூலம் திரை உலகில் கிராமங்களின் முழு முகங்களும் காட்டப்படுகின்றன. இது போன்று கிராமங்களின் முகத்தை நகர் வாழ் மக்களிடம் பரிச்சயம் செய்யும் ஊடகங்கள் வட நாட்டில் இல்லாலது ஒரு வேளை, இந்த செய்தியில் வரும் வன்முறைகளுக்கு காரணம் ஆக இருக்கலாம்.
போக போக கிராமிய விழுமியங்களும் நகர்ப்புற விழுமியங்களும் மோதி கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது.

பி கு. தங்கள் ஓரிண சேர்க்கை யாளர்கள் பற்றிய கட்டுரை – மிகவும் புரிததலுடன் இருந்தது. அவர்களை போன்றே ஒதுக்க பட்ட எல்லா சமூகத்தினரும் ஆனந்தமாய் வாழ்வது சமூகவெளியில் மாற்றம் வருவதை விட, அவர்களுக்குள் ஒரு மன அமைதி பிறப்பதான் மூலமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

கோகுல்

***

முந்தைய கட்டுரைபாலகுமாரன் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅதர்வம்-கடிதம்