தன்மீட்சி- கடிதம்

தன்மீட்சி வாங்க

இந்த நோய் சூழ் காலத்தில்  எதிர்கால பயத்துடன் இருந்த பொழுது மிகச்சரியின நேரத்தில் என் கைகளுக்கு வந்தடைத்தது தன்மீட்சி. 200 நபர்களுக்கு தன்மீட்சியை சென்று சேர்க்க வேண்டும் எனும் குக்கூ காட்டுப்பள்ளியின் அறிவிப்பை அந்த நள்ளிரவில் கண்டதும் உடனே பதிவு செய்து காத்திருந்தேன். ஒருவாரத்தில் எனக்கு தன்மீட்சி கிடைத்தது. மிகவும் தளர்ந்து இருந்த இந்தக்காலத்தில் தன்மீட்சி யதார்த்த உண்மையில் தளர்ச்சியிலிருந்தும், சோர்விலிருந்தும் மீட்க உதவியது. இங்கு ஓரளவிற்கு தன்மீட்சியின் மையக்கருத்தை சுருக்கிதர முயல்கிறேன்.

சொற்களுக்கு மந்திர சக்தி இருப்பது உண்மைதான் போலும். தன்மீட்சி என ஒரு வார்த்தையே ஒரு மீட்சியை கொடுக்கும் இயங்கு விசை போன்றது. இப்புத்தகம் வாசகர்களின் கேள்வி வழியே பதிலாகப் பகிர்ந்தவை. அந்தப் பதில்களின் சொற்தள் அனைத்தும் மனவலுவைத் திரட்டி தனித்தெழ வைத்திருக்கிறது. எளிய பதில்களும் உரையாடலும் தான் ஆனால் அது மிகத் தீர்க்கமாக ஒரு பயணப்பட ஒரு வழியை அமைத்துத்தர வல்ல வரிகள் கொண்டவை. காலை விடியல் என்பது நாம் காணும் காட்சியோ அல்லது வரியையோ கொண்டு அன்றைய நாள் முழுவதும் உருக்கொள்ளும் மனநிலையை அமைப்பது. ஒரு சொல் என்பது மலர்தல் போன்று. அந்த மலர்தல் தரும் நுகர்ச்சியை வாழ்வில் துய்ப்பதற்கு தன்னறம் மிக அவசியம். அனைவருக்குமான அந்த மலர்ச்சொல்  என்பது தான் தன்னறம். ஸ்வதர்மம் எனும் கீதைச் சொல்லின் தமிழாக்கம் தன்னறம். எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும் போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். இதுவே கீதையின் மையச்செய்தி. எந்த துறையில் நமக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே நமக்கான தன்னறம்.

ஒரு நாளை நாம் எப்படி பகுத்து பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம். நேரம் பற்றி பல லட்ச பக்கங்கள் எழுதி தீராமல் இருக்கிறது. வாழ்க்கை என்பது மிக மிக அரிதானது. ஔவை மொழியில் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது, கூன், குருடு, செவிடு பேடு நீங்கி பிறந்தகாலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்பதை நினைத்தாலே போதும். இப்படிப்பட்ட அரிதான வாழ்வில் நமக்கு ஒருநாளை, ஒரு கணத்தைக்கூட வீணடிக்க உரிமையில்லை. என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன்…. சற்றே மனச்சோர்வு வந்தாலும் நேரமில்லை இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவில்லை என்றே சொல்லிக்கொள்வேன். வீணடிக்க நேரமில்லை என்ற பிரக்ஞை மிக மிக முக்கியமானது. அதுவே என்னை உருவாக்கியது என்று ஒரு வாசகருக்கு பதிலளிக்கிறார். இது சோர்வுக்காலத்தில் மனதிலிருத்தி தியானிக்க வேண்டிய சொற்கள். நேரமில்லை இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி செயலின்மையிலிருந்து செயலுக்கு திரும்ப வேண்டும். அக்கனத்தில் ஒரு வாசிப்பு, ஒரு வரி எழுத்து, இயற்கையை ரசித்தல், ஒரு சிறு கிறுக்கல் கூட செயலே. அந்தச் செயலே முக்கியம். அச்செயலில் இருந்து மேல் நோக்கி செல்வதே அப்போதைய தேவை.

வெறுப்பும் சோர்வும் நாம் நம் வாழ்வில் அனைத்து கட்டங்களிலிருந்தும் கடந்து சென்றாக வேண்டிய இருள்பூதம். நம்மை சுற்றியிருக்கும் சமூகத்தில் உலகத்தில் நீங்கள் செய்யக்கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும் இந்தச் சோர்வை வென்றுவிடலாம். அது என்ன என்பதை கண்டடையவேண்டும் அதுவே தன்னறம். அதைச் செய்யும்பொழுதே விடுதலை அடைவோம். அவ்வாறு படைப்பூக்கத்தை கண்டுகொண்டது வழியாக இத்தகைய வெறுமை சோர்விலிருந்து மீண்டதாக பதிலளிக்கிறார்.

சோம்பலின் இரு வெளிப்பாடுகள் அதி உற்சாகம், தன்னிரக்கம் சோம்பலில் இருந்து தப்பிக்க அதி விரைவாக போடும் திட்டம் அதே விரைவில் காணாமலாகிவிடும். தன்னிரக்கம் என்பது இனிய துக்கம் எனலாம். நம்முடைய அனைத்து பலவீனங்கள், பிழைகள், செயலின்மை அனைத்தும் இங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ள முடியும். அதை அனுபவிக்க அனுபவிக்க இனிமை பெருகும், தன்னிரக்கம் பெருகும்.

நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

இத்தகைய செயலின்மை, சோர்வு, சோம்பல், தன்னிரக்கம், அதி உற்சாகம், வெறுப்பு, நேரங்கடத்தல் எனும் அனைத்துவித இயலாமைகளிலிருந்தும் தன்னறம் மூலம் வெளிவருவதுதான் தன்மீட்சி.

நாம் வாழ்வது சரியான வாழ்க்கையா என்று மதிப்பிடுவது மிக எளிது. ஒரு வருடத்தை நினைவில் ஓட்டி அதில் எத்தனை நாட்கள் நிறைவளிக்கும்படி செலவிட்டிருக்கிறோம் என்று பார்ப்பதுதான். எது நமக்கு உண்மையான நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது, அதை நோக்கி நாம் சென்றிருக்கிறோமா என்று அவதானித்தால் போதும். அந்த ஒரு வருடத்தின் விரிவே மொத்த வாழ்க்கையும். ஆகவே செயல்புரிக. இந்த நோய் சூழ்காலத்தில் நாம் அனைவரும் சென்றடையும் இலக்கு செயல். அதுவே நம்மை மீட்கும். ஆகவே செயல் புரிக.

ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மை கொள்க!

இப்புத்தகத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் ஜிபு குறியீடுகள். டெப்பிஜி அல்ஸ்டெஸ்ட்ட் என்பவரால் உருவாக்கப்பட்டு இந்த குறியீடுகள் வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் மற்றும் நம்பிக்கையின் செய்தி. அன்பு, ஊக்கம், அமைதி, சுயசமர்ப்பணம் ஆகியவற்றை தன்னகத்தில் கொண்டிருக்கின்றன என்கிறார் இக்குறியீடுகளை உருவாக்கியவர். அதற்கேற்ப ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் ஏற்ப குறியீடுகளும் நம் மனதை கவர்பவை. சித்திரக் குறியீடுகளான இவை வாசிக்கும் அனைவரின் மனதையும் தியான நிலைக்கு கொண்டு செல்கிறது. அதற்காகவே மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். இச்சித்திரங்கள் வழியே தியானத்தை மேற்கொள்ளும் அனுபவம் அளப்பரியது.

இப்புத்தகத்தை உருவாக்கி கையளித்த அனைவருக்கும் நன்றி

அன்புடன்

ரா. பாலசுந்தர்

தன்மீட்சியின் நெறிகள்

முந்தைய கட்டுரைபள்ளியில் தமிழ்
அடுத்த கட்டுரைஞானி-4