தன்னிறைவு

இந்த வீடடங்குக் காலகட்டத்தில் பலவற்றிலிருந்து உயிர்தப்பி வாழவேண்டியிருக்கிறது. வரிசைப்படிச் சொல்லப்போனால், கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான கைமருந்துகள் பற்றிய ஆலோசனைகள். [இம்பிடுபோல நல்லெண்ணையை எடுத்து நல்லா சூடுபண்ணி அதிலே கொஞ்சம் சுக்கைபோட்டு கூடவே…] அல்லது வாட்ஸப் செய்திகள் [கொரோனோவை வெல்ல கபசுரக் குடிநீருடன் கொஞ்சம் கரகரப்பிரியா]

இரண்டாவது, தன்னம்பிக்கைச் செய்திகள். நாளைவிடியும் என்பதுபோன்ற அறிவியல் உண்மைகள், எழுந்தவன் நின்றான் என்பது போன்ற கவிதைவரிகள், சூரியனுக்குக் குறுக்கே காக்காய் பறக்கும் புகைப்படங்கள், ரோஜாமலர்களில் வண்டு அமர்ந்திருக்கும் படங்கள்.

மூன்றாவது அரசியல் செய்திகள். கொரோனாவை கொண்டுவந்த எடப்பாடியே பதவிவிலகு.கொரோனோவுக்கு எதிராக தாம்பாளத்தை தட்டுவோம். கொரோனாப் புள்ளிவிவரக் கணக்குகள். ‘வளைவு தளர்கிறது!’ பார்த்தால் மனம்தான் தளர்கிறது.

கடைசியாக பக்கத்து வீட்டுக்காரர் ‘என்னசார் கொரோனா நம்ம ஏரியாவிலே வந்திரும்போல இருக்கு!”. மாஸ்க் என்பது தாயத்து என பலர் நினைக்கிறார்கள். முகத்தில் தொட்டிலாக பலர் கட்டியிருக்கிறார்கள். பேச்சிப்பாறை கால்வாயில் மாஸ்குடன் ஒருவர் நீராடுவதைக் கண்டேன்.

ஆனால் உச்சகட்ட அபாயம் அருண்மொழியின் சமையல். வீடடங்கு நாட்களில் ஸ்டெஃபி என்கிற பெண்மணி [நல்ல முளகுமூடு காட்டாத்துறை உச்சரிப்பு ஜெயன்!] வெளியிடும் யூடியூப் சானல்களை பார்த்துவிட்டு விதவிதமாகச் சமையல். பழைய சமையல் நூல்களைப் பார்த்துச் சமைத்தால் பத்துக்கு ஒன்றுதான் சரியாக அமையும். அக்காலத்தில் என் அத்தை ஒருத்தி ஆறுமிளகாயை நூறுமிளகாய் என்று வாசிக்க நேர்ந்திருக்கிறது.

ஆனால் யூடியூப் தெள்ளத்தெளிவாக கண்முன் காட்டுகிறது. ஆகவே நூறுசதவீதம் சரியாக வந்துவிடுகிறது. மேலும் நம்மூரில் வறுத்து அரைத்து வழித்து பொடித்து மசித்து கலக்கி குழைத்து தாளித்து எடுக்கும் சமையலுக்குப் பழகியவர்களுக்கு இந்தச்  சமையலெல்லாம் விளையாட்டுப்பிள்ளை வேலை. விளைவாக, தினமும் விதவிதமான சமையல். எல்லாமே நெஞ்சை அள்ளும் மணமும், நாவை கிறங்க வைக்கும் சுவையும் கொண்டவை. கூடவே அஜிதனும் உள்ளே புகுந்து மெக்ஸிகன் சிக்கன், பர்மீஸ் நூடில்ஸ் என்று நாளும் ஒருசமையல்.

விளைவாக திடீரென்று உலகமே மெதுவானதாக ஆகிவிட்டது. எதுவுமே பொருட்படுத்தும்படியும் தோன்றவில்லை. இணையத்தில் வெளியாகும் பெண்களின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்தேன், போனால் போகிறது, போஸ்ட்மாடர்ன் கதைகளுக்கு இதெல்லாம் மேல் என்ற கருணை நிலையைத்தான் அடைந்தேன். என்ன ஏது என்று பார்த்தபோது தெரிந்தது என் எடை ஆறுகிலோ கூடியிருந்தது. வெண்முரசு வேறு முடிந்துவிட்டது. நூறுகதைகளும் முடிந்துவிட்டன. செய்வதற்கொன்றும் இல்லை. எடையைக் குறைத்து வைப்போம் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

வழக்கம்போல ஸ்டார்ச் தவிர்ப்பு முதல் விரதம். மதியம் மட்டும் ஒரு கோப்பைச் சோறு, அதற்குள்ளேயே சாம்பார் ரசம் மோர் எல்லாமே. சீனி கிடையாது, பதிலுக்கு வெல்லம். காலையில் முட்டைவெண்கரு. இரவு வேகவைத்த காய்கறி, ஆப்பிள் சிடர் வினிகர் தொட்டுக்கொண்டு. ஆரம்பநாட்களில் நான் ஒரு மரத்தடியில் படுத்து அரைக்கண்மூடி அசைபோட்டு வால்சுழற்றிக்கொண்டிருப்பதாக கனவெல்லாம் வந்திருக்கிறது. காலையிலும் மாலையிலும் நடை. மாலையில் கூடவே கொஞ்சம் ஓட்டமும் உண்டு. எடை குறைந்து வருகிறது. பழைய சட்டைகளை எல்லாம் போடமுடிகிறது. ஸூம் மீட்டிங்கில் பார்ப்பவர்கள் ‘என்னசார் புதுச்சட்டையா?” என்று கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை என்றால் முட்டைக்கரு சாப்பிட்டால் பத்துமணிக்கு மீண்டும் பசிக்கும். மதியச்சோறுக்குப்பின் நான்குமணிக்கு பசிக்கும். ஆகவே இளந்தீனி தேவை. அதற்கு வீட்டுமுற்றத்தில் நிற்கும் கொய்யாமரம் துணை. நாட்டுக்கொய்யா. நிறைய காய்த்துகிடக்கிறது. மேலேயே குச்சியெல்லாம் வைத்திருக்கிறேன். ஒவ்வொருநாளும் மூன்றுவேளை கொய்யா பறித்துச் சாப்பிடுகிறேன். கொய்யா நன்றாக பசிதாங்கும். கொட்டைகளோடு சாப்பிட்டால் எடைகூட கொஞ்சம் கூடியதுமாதிரி இருக்கும். மூச்சில் தழைமணம் இருக்கும்.

அதற்கு போட்டியாளர்கள் மிகுதி. மாலையானால் வௌவால்கள். பகலில் அணில்கள். கொஞ்சம் சிவப்படித்தாலே அவை கொத்தியும் கரம்பியும் தின்றுவிடும். எங்களுக்குள் ஒரு போட்டி, அவை வாய்வைத்துவிட்டால் பிறகு நான் தொடக்கூடாது. ஆகவே நான் கொஞ்சம் காய்வெட்டாக இருக்கும்போதே பறித்துவிடுவேன். அவர்கள் நன்றாகக் கனிந்தபின்னரே உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். போட்டியில் அவர்களும் காய்களை கரம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நான் உள்ளே இருக்கும்போது “சீக்கிரம் தேடி தின்னுடா, அந்த வெளங்காப்போறவன் குச்சியோட வரப்போறான்” என்று அணில்கள் பேசுவது கேட்கும். பல விலங்குகள் பழமரங்களிலேயே குடியேறி வேறு விலங்குகள் மேலே வராமலிருக்க மேலிருந்து மலம் கழித்து வைக்கும் என்று தெரியும். நாகரீக மனிதர்கள், குறிப்பாக எழுத்தாளர்கள், செய்தால் நன்றாக இருக்காது.

மிக அரிதாக இலைகள் நடுவே நன்றாகக் கனிந்த பெரிய பழம் கிடைக்கும். வௌவால்கள் அவ்வளவு உள்ளே செல்லமுடியாது. அணில்கள் எப்படியோ தவறவிட்டுவிடும். அதைப்பறித்து தின்றால் உலகம் கைவசமான நிலை. ஆனால் நான் இப்போது சாப்பிடும் உணவில் அளவில் நேர்ப்பாதி இந்த ஒரு மரத்திலிருந்துதான். ஆச்சரியம்தான், ஒரே மரத்தை நம்பி இவ்வளவு வாழமுடிகிறது. இன்னும் ஒரு மரம் இருந்திருந்தால் கீழேயே போகவேண்டியதில்லை, இங்கேயே உணவுத்தன்னிறைவு அடைந்து தாக்குப்பிடிக்கும் பொருளியலை உருவாக்கியிருக்கலாம்.

முந்தைய கட்டுரைஞானி-3
அடுத்த கட்டுரைவெண்முரசின் தரிசனம்- மதுசூதனன் சம்பத்