ராமர் கோயில்

வணக்கம் ஜெ

அயோத்தி ராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர்த்து பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்டப்படுவது பெருமிதமான ஒன்றுதான். இருப்பினும் மனதின் ஓரத்தில் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. என்னதான் இருந்தாலும் ஒரு மசூதியை வன்முறையாக இடித்துவிட்டு அந்த இடத்தில கட்டப்படுவதுதானே, என்று. இப்படிப்பட்ட வரலாற்றுப் பின்னணியிலா ராமனுடைய கோவில் கட்டப்பட வேண்டும்!

இதற்கு வரும் பதில் கேள்வி, நம்முடைய கோவில்கள் இடிக்கப்படவில்லையா? என்பதுதான். அதை யாரும் மறுக்க முடியாது. அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவே வேண்டும். கோவிலை இடித்துவிட்டு, அதன் இடிபாடுகளைக் கொண்டு மசூதிகளைக் கட்டியது இஸ்லாமியப் படையெடுப்பாளர்களுக்கு பெருமிதமாக இருக்கலாம். ஆனால் நமக்கு அப்படி இருக்க முடியாது. நாம் ஆக்கிரமிப்பாளர்களோ, படையெடுப்பாளர்களோ அல்ல.

மேலும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு ஐநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன; அது இப்போது ‘வரலாறாகி’ விட்டது. ஆனால் இது நிகழ்காலம். அதனாலேயே அவ்வாதத்தை ஓரளவுக்குமேல் பயன்படுத்தவும் முடியாது. இந்த விவகாரம் கூட இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறாகி விடும். அப்போது யாருக்கும் இதுகுறித்த தயக்கமோ, குற்றவுணர்வோ இருக்கப்போவதில்லை. ‘வரலாறாவதில்’ உள்ள பெரிய வசதி அது; வரலாற்று நியாயங்களைப் பேசுவதும் எளிது (அது சரி என்றாலும் கூட).

ஒருவேளை இஸ்லாமியர்களே முன்வந்து மசூதியை இடித்துவிட்டு, அவ்விடத்தை இந்துக்களுக்கு கோவில் கட்ட வழங்கியிருந்தால், அது வேறுமாதிரி. ஓவரா அறம் பேசுவதாக எண்ணிக்கொண்டு இப்படி குழம்பிக் கொண்டிருக்கிறேனா தெரியவில்லை.

விவேக் ராஜ்

***

அன்புள்ள விவேக்,

என்னுடைய தரப்பை தொடர்ச்சியாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். இப்போது விவாதங்களில் நம்பிக்கையை இழந்துவிட்டேன், ஆகவே விவாதிப்பதில்லை. திரும்பச் சொல்வதுடன் சரி.

ராமர்கோயிலுக்கான இயக்கம் தொடங்கிய நாளில் இருந்தே அது மெய்யான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்புவதும், அடிப்படையில் அதிகார அரசியல் உள்ளடக்கம் கொண்டதும், எவ்வகையிலும் மதவழிபாட்டுடன் தொடர்பற்றதுமான ஒரு செயல்பாடு என்ற எண்ணமே கொண்டிருந்தேன். அதை 1992 முதல் தொடர்ந்து எழுத்திலும் பதிவுசெய்திருக்கிறேன். இந்தத் தளத்திலும் நீங்கள் பார்க்கலாம்.

பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடு என்றும், இந்தியப்பெருநிலத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான உளநிலையை உருவாக்குவது என்றும், ஆகவே நீண்டகால அளவில் அழிவை அளிப்பது என்றும்தான் என் நிலைபாடு உள்ளது. ஆகவே என்னால் அவ்வாலயம் அமைப்பதில் எவ்வகையிலும் மகிழமுடியாது, அதை ஏற்கவும் முடியாது. என் பார்வையில் அது ஓர் அரசியல்கட்டிடம், ஆலயம் அல்ல.

ஆனால் கூடவே இதன் மறுபக்கத்தையும் சொல்லிவந்திருக்கிறேன். ஒன்று, அங்கே இருந்தது மக்களின் வழிபாட்டிலிருந்த ஒரு மாபெரும் மசூதி என்றும், ராமர்கோயில் கட்ட அந்த இடத்தை வேண்டுமென்றே கோரி அதை இடித்தார்கள் என்றும், இங்கே முப்பதாண்டுகளாக இடதுசாரிகளும் பிறரும் பரப்பியது பொய். அங்கிருந்தது ஒரு பாபரின் தளபதி ஒருவரால் உருவாக்கப்பட்ட வெற்றிக்கும்மட்டம் மட்டுமே, மசூதி அல்ல, அதை நான் பார்த்திருக்கிறேன்.

இன்று இந்தியாவின் இஸ்லாமியர் மத்தியில் அத்தனைபெரிய கசப்பும் விலக்கமும் உருவாக பாபர் கும்மட்டத்தை இடித்தவர்கள் எத்தனை பங்களிப்பாற்றியிருக்கிறார்களோ அத்தனை பங்களிப்பை அது மாபெரும் மசூதி என்று சொல்லிப் பரப்பியவர்களும் ஆற்றியிருக்கிறார்கள். அதையும் எப்போதுமே சுட்டிவந்திருக்கிறேன்.

ராமர்கோயில் கட்டுவதற்கான போராட்டம் என்பது பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்த அரசியல் இயக்கம். அதற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை, இப்படித்தான் ஒரு ராமர்கோயில் கட்டவேண்டுமென்பதும் இல்லை. அப்படி ஒரு அரசியல் வெற்றிக்காக ஒன்று கட்டப்படுவதில் களியாட்டமிடுவது பக்தியும் அல்ல. ஓர் இந்துவுக்கு ராமன் முக்திக்காகவும் மங்கலத்துக்காகவும் வழிபடப்படும் தெய்வம் மட்டுமே, அரசியல் அடையாளம் அல்ல.

ஆனால் அந்த அரசியலுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்ந்த இடதுசாரி அரசியலும் அதேயளவு காழ்ப்பும் பொய்மையும் கொண்டது. அங்கே ராமர்கோயில் இருந்தது என்பதற்குச் சான்றே இல்லை என்றும், அயோத்தியில் ராமர்கோயில் இருந்ததற்கே கூடச் சான்றுகள் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் இயற்றிய பண்பாட்டு அழிப்புகளை மறுத்தார்கள், அவற்றை நியாயப்படுத்தினார்கள், அப்பட்டமான வரலாற்றையே மறுத்தார்கள். வட இந்தியாவில் முகலாயர்கால ஆலயஅழிவுகள் கண்ணெதிரே கிடப்பவை, மக்களின் அன்றாட உண்மைகள். அப்படி ஒரு பொய்யைச் சொன்னால் மக்களின் எதிர்வினை என்னவாக இருக்குமென்றே டெல்லிமைய இடதுசாரி அறிஞர்கள் உணரவில்லை.

ஒரு கட்டத்தில் ராமனையே அயோக்கியனாகச் சித்தரிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் ராமர்வழிபாடே இல்லை என்று எழுதினர். கும்பகோணம் கோதண்டபாணிகோயிலின் முன்னால் வாழ்பவர் என்ன நினைப்பார்? ராமர்கோயில்களில் பூசைகள் செய்பவர் என்ன புரிந்துகொள்வார்? தமிழகத்தில் சைவமும் வைணவமும் வந்து இரண்டாயிரம் ஆண்டுகளாகின்றன. அவை பெருமதங்களாகி ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகின்றன. வைணவத்தில் ஒரு பகுதியே ராமர் வழிபாடு. அவ்வகையில் தமிழகத்தில் மாபெரும் ராமர்கோயில்கள் உள்ளன. [இதைப்பேசுபவர் பலருக்கு கோதண்டபாணி என்றால் ராமர் என்றே தெரியாது]

ஆகமங்களின்படி ராமன், கிருஷ்ணன் எல்லாம் மையத்தெய்வங்கள் அல்ல, விஷ்ணுவே மையத்தெய்வம். ராமனும் கிருஷ்ணனும் அவதாரங்கள். அவர்கள் மையத்தெய்வங்களாக ஆனது சற்று பிந்தி, மாபெரும் பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே விஷ்ணு ஆலயங்களின் அளவுக்கு ராமர் ஆலயம் இருக்கமுடியாது. இந்தியா எங்கும் அப்படித்தான். ஆனால் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் ஒப்புநோக்க ராமர்கோயில்கள் அதிகம் , ராமன் பெயரே இங்கு மிக அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளது. ராமனைப் பற்றிய மாகாவியம் இங்குள்ளது. அதற்கு முன்னரும் பல இருந்துள்ளன. மிகத்தொன்மையான புறநாநூறு தொட்டு எல்லா பேரிலக்கியங்களிலும் ராமன் பேசுபொருளாக இருக்கிறான்.

ஓர் அரசியலை எதிர்க்க அதை அப்பட்டமாக்க வேண்டுமே ஒழிய பொய்களையும் திரிபுகளையும் வெறுப்பையும் அதற்குமுன் கொண்டு சென்று நிறுத்துவது அல்ல. உண்மையை நம்பியிருக்கவேண்டுமே ஒழிய எதிர்ப்பொய்களை சொல்லியிருக்கக்கூடாது.பொய்கள் அரண்களோ ஆயுதங்களோ அல்ல. அவை மிக எளிதில் நொறுங்குவன.

இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அழிவுச்செயல்பாடுகள் உண்மை. அதை மறுக்கவேண்டியதில்லை,அச்செயல்களை நியாயப்படுத்தவும் வேண்டியதில்லை.  அது வரலாறு. ஆனால் நாம் நேற்றை நோக்கி திரும்பி நின்று வாழமுடியாது. உலகில் எல்லா நாகரீக நாடுகளும் கடந்தகாலத்தின் வன்முறைகளையும் இழிவுகளையும் பதிவுசெய்கின்றன, ஆனால் அவற்றுக்கு கணக்கு தீர்த்துக்கொண்டும் கறுவிக்கொண்டும் இருப்பதில்லை. அவ்வாறு நேற்றை நோக்கி வாழ்வது மனக்கோளாறு.

ராமர்கோயில் அரசியலை எதிர்ப்பது என்பது ராமரையோ இந்துமதத்தையோ எதிர்ப்பதாக மாறுமென்றால் இந்துக்கள் அனைவரும் ராமர்கோயில் அரசியலை ஏற்பவர்களாக ஆகும் நிலையையே உருவாக்கும். நான் இதை எப்போதுமே சொல்லிவந்தேன். உண்மையில் இதை ‘டம்மீஸுக்கு’ சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததே இல்லை. நான் சொல்லி முடித்ததும் ‘அப்படியானால் ராமர்கோயிலை ஆதரிக்கிறாயா?’ என்ற கேள்வியே எழுந்துவரும்.

இருபதாண்டுகளாக நான் சந்தித்துவருவது இந்துத்துவ எதிர்ப்பை இந்துமத எதிர்ப்பாக மாற்றிக்கொள்ளும் அரைவேக்காடுகளின் காழ்ப்பு. மாற்றுமத மேடையில் சென்று நின்று இந்துமதம் அழியவேண்டும் என்று பேசும் ‘முற்போக்காளன்’ பாரதிய ஜனதாவுக்கு ஆள்சேர்ப்பவன் மட்டுமே. விஷ்ணு என்று தலைப்பு இருந்தமையாலேயே விஷ்ணுபுரத்தை இந்துத்துவம் என்று பொங்கிய அரைகுறைகளின்  மனநிலையின் ஒட்டுமொத்தமே பாரதிய ஜனதாவை நோக்கி சாமானிய இந்துக்களை உந்தியது. இன்று காங்கிரஸின் பிரியங்கா காந்தி கூட ராமர்கோயிலை வாழ்த்தும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. திமுகவே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இன்னமும்கூட வெறியர்களுக்கு இது புரியவில்லை.

இடதுசாரிகள் அதீதநிலைபாடு எடுத்தமையால் அகழாய்வு அங்கே ராமர்கோயில் இருந்ததை ஐயமறக் காட்டியதுமே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இடதுசாரிகள் சிறுபான்மையினரின் மதமேடையில் ஏறிநின்று காழ்ப்பைக் கக்கினால் இந்துக்கள் அவர்கள் மூவாயிரம் வருடங்களாக வழிபடும் ராமனை விட்டுவிடப்போவதில்லை. இவர்களின் காழ்ப்புப் பிரச்சாரம் சராசரி இந்துக்களை பாரதியஜனதா நோக்கித் தள்ளியது. இவர்கள் எண்ணியதுபோல இஸ்லாமியர் இவர்களை நோக்கி வரவுமில்லை,  இஸ்லாமியர்கள் கசப்படைந்து அவர்களின் மதக்கட்சிகள் மத அமைப்புகளையே நாடினர்.

என்ன செய்ய்திருக்கவேண்டும்? இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதியதை திரும்ப அப்படியே எழுதுகிறேன். வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ செய்திருக்கக்கூடாது. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். நேற்றைய வரலாற்றை திருத்துவதல்ல நாகரீக சமூகங்களின் பணி, நாளைய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதலே. வரலாற்றிலிருந்து எடுக்கவேண்டியது பண்பாட்டுச்சின்னங்களை மட்டுமே, காழ்ப்புகளையும் பகைமைகளையும் அல்ல. வரலாற்றில் உள்ள காழ்புகளையும் பகைமைகளையும் திருப்பி எடுக்கப்போனால் எந்த நாடும் எந்த நாகரீகமும் அந்த நஞ்சை தாங்கமுடியாது.

தொல்லியல்சின்னங்கள் அனைத்துக்கும் ஒன்றே விதி. அவை அப்படியே பேணப்படவேண்டும். அவை நாம் எப்படி இருந்தோம்,நமக்கு என்னென்ன நடந்தது என்பதற்கான சான்றுகள். நம் எதிர்காலத் தலைமுறை நம்மைவிட அறிவும் தெளிவும் கொண்டது என்று நம்புவோம். நாம் அவர்களுக்கு ஒவ்வொன்றையும் திரித்துக் கொடுக்கவேண்டியதில்லை. உண்மையை கையளித்துச் செல்வோம். வரலாற்றை இன்றைய தேவைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப திருத்த தொடங்கினால் முடிவே இல்லை. அதை ஏற்பதில், கடந்துசெல்வதிலேயே அறிவும் முதிர்ச்சியும் உள்ளது. அதுவே மெய்யான ஆன்மிகம்

இச்சூழலில் இந்துக்களை நோக்கி பேசும் குரல்களே முக்கியமானவை என நான் நினைத்தேன். நித்ய சைதன்ய யதி அதைத் தெளிவாக எழுதியிருக்கிறார். இந்த ஆலய இயக்கம் இந்து மதம் சார்ந்தது அல்ல. கோயில்கட்டுவது அரசியல்கட்சியின் வேலை அல்ல, அரசின் வேலையும் அல்ல. அரசு இந்துக்களுக்குச் செய்யவேண்டியது கோயில் கட்டித்தருவது அல்ல. அரசு இந்தியமக்களின் வரிப்பணத்தைப் பெற்றுக்கொள்வது அவர்களின் வறுமையை ஒழிக்க, வாழ்க்கையை மேலே கொண்டுசெல்ல. வேறெந்த செயலும் திசைதிருப்புதலே.

மதங்களுடனான சகவாழ்வையும், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக அமைப்பையும் அழித்து ஓர் ஆலயத்தை அடைந்து இந்துக்கள் வெல்வது ஏதுமில்லை. மதம் வேறு அரசியல் வேறு, அதை உணராவிட்டால் மதவாதிகளிடம் அரசை அளித்து தேசியத்தின் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை இந்துப் பெரும்பான்மையினரிடம் சொல்ல இங்கே எவருமிருக்கவில்லை. இங்கே இருந்தது இரண்டு உக்கிரமான வெறுப்புத் தரப்புகள். நடுவே நின்று பேசும் எவரும் இருசாராரின் வசைபாடலுக்கும் ஆளானார்கள். இருசாராரும் அவர்களை தங்கள் எதிர்த்தரப்புக்குத் தள்ளினார்கள். அக்குரல்களே அழிந்தன. மெய்யான அழிவு அதுவே.

இன்று சிலரேனும் அதை உணர்ந்திருக்கிறார்கள். மூர்க்கமான நிலைபாடுகள் எதிர்நிலையை நோக்கி பெரும்பான்மை மக்களை தள்ளிவிட்டன என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. முகநூல் காழ்ப்பாளர்களின் கூச்சல் அப்படியே மாறாமல் ஒருபக்கம் ஒலித்தாலும்கூட மாற்றுச்சிந்தனை வரக்கூடும்.

ராமனின் பிரதிநிதிகள் மோடியோ அமித்ஷாவோ யோகியோ அல்ல, வெவ்வேறு இந்துசம்பிரதாயங்களைச் சேர்ந்த ஆசாரியார்களும்,  இந்து மெய்யியல் பேசும் ஞானகுருக்களும் மட்டுமே. அரசியல்வாதிகளை அவ்வண்ணம் எண்ணத் தலைப்படுவோம் என்றால் இந்துமதத்தின் ஆதாரப்பண்பு என தொன்றுமுதல்  இருந்து வந்த ஒன்றை இழக்கிறோம்

இந்த விவகாரம் தொடங்கப்பட்ட நாள் முதலே நான் சொல்லிவருவது ஒன்று உண்டு, ராமர்கோயில் விவகாரம் இங்கே நிற்காது. இது பிற ஊர்களுக்கும் தொடரும். இதேபோல இவர்கள் பிரச்சினை செய்யக்கூடிய பல இடங்கள் உண்டு. இது அரசியல் லாபத்தை உருவாக்குகிறது என்பதனால் இதை முழுமூச்சாக தொடர்வார்கள். விளைவாக அடுத்த ஒருதலைமுறைக்காலம் இந்தியாவை நிரந்தரமான பதற்றநிலையில் வைத்திருப்பார்கள். மதவாதம் வழியாக அரசியலதிகாரத்தையும் மத அதிகாரத்தையும் அடைவார்கள். அரசியலதிகாரத்தை அடைவதனால் பொருளியலில் சமூகவியலில் இவர்கள் அழிவுகளை உருவாக்குவார்கள். ஆனால் மதஅதிகாரத்தை அடைவதனால் நீண்டகால அளவில் ஆன்மிகமான பேரழிவை உருவாக்குவார்கள்

உலகம் முழுக்க எங்கெல்லாம் மதவாதிகளிடம் அரசியலதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் பொருளியலழிவு உடனடியாக நிகழ்ந்திருக்கிறது- உலக அளவில் ஒரு விதிவிலக்குகூட கிடையாது. இந்தியாவும் அந்த திசைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழலில் மதத்தை கடந்து அரசியலைப் பார்க்கவேண்டிய கடமை இங்கே பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களிடம் உள்ளது. இந்துமத எதிர்ப்பாளர்களான சிறுகூட்டத்தின் சீண்டலால் சீற்றமடைந்து மறுதிசை நோக்கிச் சென்று நீண்டகாலப் பார்வையோ, ஒருங்கிணைப்பு நோக்கோ,பொருளியல் திட்டங்களோ இல்லாத இவர்களிடம் அதிகாரத்தை அளித்தால் அழிவை நம் தலைமுறைகளுக்கு கொடுத்துச் செல்கிறோம் என்றே பொருள்.

இனி செய்யவேண்டியது என்ன? ராமன் இங்கே அதிகாரத்தை அடைந்திருக்கும் ஒரு அரசியல்கட்சியின் அடையாளம் அல்ல, அவன் இங்கே மூவாயிரமாண்டுப் பண்பாட்டால் திரட்டப்பட்டிருக்கும் ஒரு தெய்வ உருவம். பக்தர்களுக்கு பரம்பொருள், இலக்கியத்திற்கு மாபெரும் ஆழ்படிமம், பண்பாட்டாய்வாளர்களுக்கு தொன்மையான வரலாற்று உருவகம். அந்த ராமனை இவர்களிடமிருந்து மீட்பதே இனி செய்வதற்குரியது. எழுதியும் பேசியும் அதை இங்குள்ள மக்களிடம் சொல்லவேண்டியதுதான். இன்றையசூழலில் அது எல்லாப்பக்கமும் வசைவாங்கித் தருவது, எளிய அடையாள அரசியலாளர்களின் காழ்ப்புகளுக்கு ஆளாவது, ஆனால் வேறுவழியே இல்லை.

ஜெ

***

சமகாலப் பிரச்சினைகள் – அயோத்தி [2019] 
அரசியல்சரிநிலைகள்-அயோத்தி- 2009
இடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்
இந்துத்துவன் -2008
இந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்-2008
இந்துத்துவ முத்திரை 2012 
இந்துத்துவம் ஒரு கேள்வி 2008
முந்தைய கட்டுரைஞானி-6
அடுத்த கட்டுரைவெண்முரசின் காவியத் தருணங்கள்:–ராஜமாணிக்கம்