நான் நமது மெட்ரிகுலேசன் பள்ளிகளின் பல்லாயிரக்கணக்கான ( லட்சங்கள் தான் சரியென்று படுகிறது ) வார்ப்புகளில் ஒருவன்.
எங்கள் அனைவருக்கும் கீழ்கண்ட குணமிருக்கும்
1. உடனடியாக பயன் தராத எதுவும் கற்கக் கூடாது
2. நாலு பேர் செய்வது தான் சரி – தனியாய் எதாவது செய்தால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற எண்ணம்
3. பொறியியல் கல்லூரியில் சேர்வதைக்காட்டிலும் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லை
4. கல்லூரியில் சேர்ந்த பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் தான் வருமானத்துக்கு வழி என்ற திடமான நம்பிக்கை
மேற்கூறிய மற்றும் இன்னும் பல காரணங்களால் எளிமையாய் கற்க வேண்டிய தமிழை கல்லாமலே போய்விட்டோம்.
கற்க நினைத்தாலும் பல சொற்கள் எங்களை புத்தகங்களை விட்டு புறந்தள்ளுகின்றன என்பது தான் கொடுமை. உரைநடை தவிர வேறெதுவும் தெரியாததால் ஆனந்த விகடன் தான் எங்களுக்கு ஒரே போக்கிடம்.
இணையத்தில் சுற்றுபவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது – அது தவிர ஒரு பெருங்கூட்டம் படிக்க நினைத்தாலும் எட்டாக் கனியாகவே இலக்கியம் இருக்கிறது.
கம்பராமாயணத்தைப்பற்றியும் குறளைப்பற்றியும் உங்கள் வயதுக்காரர்கள் சரளமாக பேசும் போது பல சமயங்களில் எங்கள் வயதுக்காரர்கள் யாருக்கும் இவ்வளவு அறிதல் இல்லயே என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது, அவ்வப்போது வயிற்றெரிச்சலும் உண்டு, சாபம் கூட தந்ததுண்டு :) .
மரபின் சுவை என்பது என்னவென்றே தெரியாத ஒரு கூட்டம் இலக்கிய வட்டத்துக்குள் வருவது முறையா?
உங்களது யாப்பு கட்டுரையை படித்த உடனே இந்த கடிதம் எழுதும் எண்ணம் தோன்றியது ஏனெனில் கணிதமும் அறிவியலும் கடன் வாங்கியது போக மீதமிருந்த நேரத்தில் எங்கள் தமிழாசிரியர் கற்றுக்கொடுத்ததை சலித்தால் கிடைப்பது தேர்வில் எந்தக்கேள்வி வரும் என்ற அறிவே.
சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.
தாங்கள் ஏன் ஒரு “பழந்தமிழ் இலக்கிய அறிமுகம்” எழுதக்கூடாது? என்னைப்போன்ற பலபேர் பயன் பெறுவோமே?
யாப்பென்றால் என்ன? எந்த நூலிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக அறிதல் எவ்வாறு, இலக்கியம் கற்க அடிப்படையாய் என்ன அறிதல் வேண்டும் என்ற அளவுக்கு அடிமட்டத்திலிருந்து மேலே கற்க ஒரு புத்தகத்தை அல்லது ஒரு வலைதள தொடரையாவது வெளியிட வேண்டுகிறேன். கண்டிப்பாய் அது தவழும் குழந்தை எழுந்து நிற்கக் கிடைத்த பிடிப்பு போல் இன்றியமையாத ஒன்றாயிருக்கும்.
அன்புடன்
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கோமேதகராஜா அவர்களுக்கு
தாங்கள் சொல்லும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே. தமிழ் மக்களின் பெரும்பகுதியினர் தங்கள் மரபின் மீது அக்கறை இல்லாதவர்களாகவும் மரபுசார்ந்த விஷயங்கள் வாழ்க்கைக்கு உதவாதவை என்றும் கற்பிக்கப்பட்டும் வளர்கிறார்கள். பொருளியல் ரீதியாக பயனற்ற எதுவுமே தேவையில்லை என்று அவர்களுக்குக் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் திருவையாறு இசை நிகழ்ச்சிகளைக் கேட்டபடி இருந்தபோது இதைப்பற்றி மீண்டும் மீண்டும் சிந்தித்தபடி இருந்தேன். கர்நாடக இசை பிராமண சாதியினரால் தங்கள் குலத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்பட்டு கற்கப்படுகிறது. பல லட்சம் இளையதலைமுறையினருக்கு கர்நாடக இசையின் அடிப்படைகள் அறிமுகம்செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. வாழையடிவாழையாக இது நடக்கிறது. இதன்மூலம் அது ஓர் அழியா மரபாக நீடிக்கிறது. அது உடனடியாக லாபம் தருமா, மதிப்பு தருமா என்று அவர்கள் யோசிப்பதேயில்லை. நம் சூழலில் உள்ள பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம் இது.
ஆனால் நம்முடைய பிற சாதியினர் அவ்வறு தங்கள் மரபு தங்களுக்குக் கொண்டுவந்து சேர்த்த பண்பாட்டுக்கூறுகளைப் பேணுகிறார்களா? கற்றுக்கொடுக்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. பிறர்
சாதியின் எல்லா எதிர்மறைக்கூறுகளையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆணவம், பிறசாதியினரை இழிவாக நினைப்பது, போலியான சடங்காசாரங்கள்,குழு உணர்வு – எல்லாவற்றையும். ஆனால் அதன் சிறந்த அம்சங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக விட்டுவிடுகிறர்கள். பிராமணக்காழ்ப்பை மட்டும் அரசியலில் இருந்து கற்றுக்கொண்டு மண்டையில் ஏற்றிக்கொள்கிறார்கள் இதுதான் இங்கே சாதி ஒழிப்பு என்றபேரில் நடந்துவருவது.
மரபை வழிபட்டுப் போற்றவேண்டும் என்று சொல்பவன் அல்ல நான். ஆனால் மரபில் உள்ள பலநூறுவிஷயங்கள் நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் தேடிச்சேர்த்த ஞானத்தின் தொகுதிகள். அவற்றை அபப்டியே உதாசீனம்செய்வதென்பது முழுமையான அறியாமை. அவற்றை கற்று நிராகரிப்பதில்கூட ஓர் அறிவார்ந்த நேர்மை உள்ளது.
ஈழவச்சாதிக்கு வைத்தியத்தொழிலும்– அதற்கான சம்ஸ்கிருதக் கல்வியும் பாரம்பரியச் சொத்து. ஈழவர்களுக்குள் உருவாகிவந்த நாரயணகுரு அந்த இரண்டு பாரம்பரியங்களை பேணியபடியே ஆங்கிலமும் கற்கச் சொன்னார். தொழில்களைப் பயில அறைகூவல் விடுத்தார். அவ்வாறு ஆங்கிலமும் தொழில்கல்வியும் கிடைத்து அச்சமூகம் மேலே எழுந்தபோது அவர்களின் குலச்சொத்தான மரபுகள் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தன. வைத்தியத்துக்கான சம்ஸ்கிருதக் கல்வி அடைந்த ஈழவர்கள் மதநூல்களையும் அறநூல்களையும் ஆழமாகக் கற்க முன்வந்தார்கள். ஏராளமான நூல்கள் உருவாயின.
இரண்டு காரணங்களை நான் அவதானிக்கிறேன். ஒன்று எண்பதுகள் வரை வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. அது சார்ந்த ஒரு அச்சநோய் [‘·போபியா] நம்முடைய தந்தையர்களிடம் ஆழமாக வேரோடியிருந்தது. ஆகவே குழந்தைகளை வேலைசார்ந்த கல்வியில் முன்னிறுத்துவதன்றி வேறெதிலும் ஈடுபட அவர்கள் அனுமதிக்கவில்லை. இன்னொன்று வேளாண்மைச் சாதியினரிடம் அவர்களின் தொழில்மனநிலையான நடைமுறைப்புத்தி வேரோடியிருக்கும். அது கலை இலக்கியக் கல்விக்கு எதிரானது.
இக்காரணங்களால் நம் இளையதலைமுறை தொழில்செய்யும் இயந்திரங்களாக வடிவமைக்கப்படுகிறது. ஆனால் கலை இலக்கியம் இல்லாத வாழ்க்கையானது ஒரு கட்டத்தில் ஆழமான மனச்சோர்வை அளிக்கக்கூடியது. மேலோட்டமான கேளிக்கைகள் மேலோட்டமான மனமுடையவர்களை இளைப்பாற்றும். நுண்ணுணர்வும் கூர்ந்த அறிவும் கொண்டவர்களுக்கு அவை போதுமானதாக இருப்பதில்லை. அவர்கள் மனச்சோர்வால் மூழ்கடிக்கப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல், ஏதேனும் ஒரு துறையில் வெகுவாக உள்ளே சென்று கடுமையாக உழைக்கவேண்டிய நிலையில், ஒரு கலையை கற்றுக்கொள்வது எளிதல்ல.
நம் சூழலில் இலக்கியம் கற்றுக்கொடுக்கப்படும் விதமும் சரியானதல்ல. பாடப்புத்தகங்கள் எந்த ஆர்வத்தையுமே உருவாக்குவதில்லை. ஒருவேளை சரியான ஆசிரியர் கிடைத்தால் ஆர்வம் உருவாகலாம். அதற்கான வாய்ப்பு இன்றைய தலைமுறையில் குறைந்தபடியே செல்கிறது. லஞ்சம் கொடுத்துத்தான் ஆசிரியர் வேலைக்குச் சேரமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டமையால் தகுதியானவர்கள் அசிரியராக செல்வதேயில்லை. தனியார் ஆங்கிலப்பள்ளிகள் ஒருவகை தொழிற்சாலைகள்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இலக்கியம் குறித்த ஆர்வத்துடன் வாசிக்க வரும் வாசகர்களுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்ய இன்று பல கோணங்களில் பலர் முயல்கிறார்கள். தமிழில் பள்ளி–கல்லூரிக்கு வெளியே மரபிலக்கியம் குறித்து அதிகமாக எழுதப்படும் காலம் இதுவே. சுஜாதா முதல் பெருமாள்முருகன் வரை பலருடைய அறிமுகங்கள் உதவியானவை. ஆர்வம் இருந்தால் தொடர்ச்சியாக வாசிப்பதனூடாகவே உள்ளே சென்றுவிட முடியும்.
இவ்வாறு முயற்சிப்பதில் உள்ள இடர்களைப்பற்றி என்னிடம் பலர் எழுதிக் கேட்பதுண்டு. பல சிக்கல்கள். உதாரணமாக உங்கள் கேள்வியில் யாப்பு பற்றிய ஐயம் இருக்கிறது. இது நம் சூழலில் உருவாக்கபப்டிருக்கும் ஒரு தவறான புரிதல்
மரபிலக்கியத்தைப் பயில இலக்கணம் கற்கவேண்டிய தேவையே இல்லை. இலக்கிய ரசனைக்கும் இலக்கணத்துக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ரசனை கொண்ட ஒருவருக்கு இலக்கணம் கசப்பையே விளைவிக்கும். ரசனையே இல்லாத நடைமுறைவாதிகள் தமிழிலக்கியம் பயிலும்போது அவர்களுக்கு தங்கள் திறமையைக் காட்ட உதவக்கூடியதாக இருப்பது இலக்கணமே. ஆகவே அதில் புலமைவிளையாட்டை நிகழ்த்தி நம்மை மிரட்டுகிறார்கள்.
மரபிலக்கியம் கற்கத்தொடங்கும்போது ஒருபோதும் இலக்கணத்தைப் பயில ஆரம்பிக்கக் கூடாது. யாப்பு குறித்தோ சொல்லிலக்கணம் குறித்தோ ஏதுமறியாமல் மரபிலக்கியத்தை முழுமையாகவே ரசிக்கலாம். உண்மையில் திணை, துறை போன்றவற்றைப்பற்றி எதையுமே தெரிந்துகொள்ளாமல் சங்கப்பாடல்களை வாசித்தால் மேலும் சிறப்பாக வாசிக்க முடியும்.
மரபிலக்கியத்தை ரசிக்க பழைய வரலாறு அல்லது பழைய செய்திகள் எதையுமே தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அவை வாசிக்க வாசிக்க தானாகவே தெரியவரக்கூடியவை. சொற்களை அசை பிரிப்பது, அடிப்படையான சில பழஞ்சொற்களை தெரிந்திருப்பது ஆகியவையே தேவை. அவையும் நல்ல உரைகளில் அளிக்கப்பட்டிருக்கும்.
முக்கியமான தேவை ஒன்றுதான். இலக்கியங்களை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து, கற்பனைமூலம் விரிவுபடுத்தி ரசிப்பதற்கான மனப்பழக்கம். அதை உருவாக்கிக் கொண்டால் சிறப்பாக வாசிக்க முடியும். அது வாழ்நாள் முழுக்க தொடர்ந்துவரக்கூடிய ஒரு இன்பமாக இருக்கும்.
நான் நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். பழ்ந்தமிழ் இலக்கிய அறிமுகம் ஒன்றை எழுதும்படி பலர் கோரியிருக்கிறார்கள். எழுதலாமென்ற எண்ணம் ஏற்படுகிறது