ஞானி-19

ஞானியை ஆசிரியர் என்கிறேன், என்ன கற்றுத்தந்தார் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். என் ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் என்ன கற்றேன்? அவர்களின் ஆளுமையை நான் அடையவில்லை என்றே இந்த அகவையில் உணர்கிறேன். ஆற்றூர், சுந்தர ராமசாமி, ஞானி ஆகிய மூவரைக் காட்டிலும் நான் சிறிய மனிதனே. நிதானத்தில், பொறுப்பில், கனிவில், இயல்பான எளிமையில், பிறருக்குப் பொறுப்பேற்கும் தன்மையில் அவர்கள் மிகப்பெரியவர்கள். அவ்வரிசையில் நான் வைக்கும் பல முகங்கள் நினைவில் எழுகின்றன. நான் அவர்கள் எவரைவிடவும் சிறியவனே. நித்யா இந்த ஒப்பீட்டுக்கு அப்பால் வேறெங்கோ இருப்பவர்.

என் பிறப்பியல்பு காரணமாக இருக்கலாம், அதற்கு என் அப்பாவைத்தான் குற்றம்சொல்லவேண்டும். முன்கோபமே இயல்பாகக் கொண்டவர் என் அப்பா. அம்மாவையும் காரணமாகச் சொல்லலாம், அம்மா கொந்தளிப்பானவர். என் காலகட்டம் காரணமாக இருக்கலாம், என் ஆசிரியர்களின்  காலகட்டம் இலட்சியவாத யுகம். அன்று மனிதர்களிடம் இயல்பாக வந்தமைந்த பண்புகளை நாம் மூச்சிரைக்க ஓடி ஓடிச் சென்றடைய வேண்டியிருக்கிறது. வழியில் ஆயிரம் சிதறல்கள்.

அதற்கப்பால் கற்றுக்கொண்டவை என்ன? அறிவு என்றால் அவை நூல்களிலேயே உள்ளன. அவர்கள் சிந்திக்கும் வகையை கற்றுத்தந்தனர். அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்களோ அப்படியே சிந்திக்கக் கற்றுக்கொண்டேன். ஆரம்பகாலத்தில் நகல்தான் செய்தேன். அவர்களின் சொற்களையும் சொலவடைகளையும்கூட அப்படியே பயன்படுத்தினேன். பிறகு அவர்களுடன் பூசலிட்டு மறுத்துரையாடி என் மொழியை கற்றுக்கொண்டேன். சுந்தர ராமசாமியுடனும் ஞானியுடனும் நிகழ்ந்த பூசல்கள் பூனையின் வாலுடன் பூனைக்குட்டி சண்டையிடுவது போலத்தான். அரிதாக அதில் வலியும் உண்டு. ஆற்றூரிடம் பூசலே நிகழவில்லை. நித்யாவிடம் பூசலே இல்லை, கடிவாங்கிக்கொள்ளுதல் தவிர.

நடராஜ குரு

சுந்தர ராமசாமி, ஞானி இருவரிடமும் நம்மை சீண்டி பேசவைக்கும் ஓர் அம்சம் உண்டு. அவர்களைச் சந்தித்த எவரும் அறிந்திருப்பார்கள், ‘நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது மிகையுற்சாகம் அடைந்து தெரியாதவற்றை எல்லாம் சரசரமாகப் பேசித்தள்ளுபவர்களும் சரி, அதீத பணிவை அடைந்து ‘நான் என்னத்தை பேசுறது?’ என்று பம்மிவிடுபவர்களும் சரி, அவர்களை அடைய முடியாது. நேர்மையுடன் தங்கள் தரப்பைச் சொல்பவர்கள், விவாதிப்பவர்கள் மட்டுமே அவர்களுடன் அணுகமுடியும்.

சுந்தர ராமசாமி, ஞானி ஆகியோருடன் இலக்கியம், அரசியல் சார்ந்த உரையாடல்களில் நான் ஈடுபட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியுடன் பெரும்பாலும் நவீனத்துவ அழகியலின் எல்லைகளைக் கடப்பது குறித்த உரையாடல்கள். இலக்கியத்தின் பேசுபொருள், வடிவம் ஆகியவற்றுக்கு நவீனத்துவம் வகுத்த வரையறைகளை மீறுவது சார்ந்தது அது. ஞானியுடன் நிகழ்த்திய உரையாடல் அரசியல்கொள்கைகள், கருத்தியல்கள் ஆகியவற்றின் நடைமுறைச் சாத்தியங்கள், அவற்றின் நம்பிக்கைகளும் ஏமாற்றங்களும் சார்ந்தது.

நான் நித்யசைதன்ய யதியைச் சந்தித்து உரையாடத் தொடங்கியபின் என் ஆர்வத்தில் முதலாவதாக மெய்யியல்- தத்துவமே இருந்தது. மெய்யியல்- தத்துவத்திற்கும் மதமென்னும் அமைப்புக்குமான உறவும் முரணும் என்னை அலைக்கழித்திருக்கிறது. ஆசாரங்கள் அனுஷ்டானங்களுக்கும் ஊழ்கத்திற்குமான உறவும் முரண்பாடும் அவ்வாறே. அன்றைய தமிழ் நவீனசிந்தனைவெளி மெய்யியல், தத்துவம் ஆகியவற்றுக்கு இடமே அற்றது. அவற்றை சுந்தர ராமசாமியுடன் விவாதிக்க முடியவில்லை. அவர் என்னிடமிருந்து விலகிச் சென்றுவிட்டிருந்தார். ஞானியுடன் ஓர் எல்லைவரை விவாதிக்க முடிந்தது- அவர் தமிழர்மெய்யியல் என்று ஆழ்ந்துசெல்லும் வரை.

ஞானி விவாதிக்கும் முறை நினைவிலெழுகிறது. ஒரு புன்னகையுடன் “இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்பார். ஒரு வம்புக்கேள்வியோ அது என அந்தப்புன்னகை எண்ணச் செய்யும். விழியின்மை காரணமாக நிலத்தை நோக்கி புன்னகைப்பது போலிருக்கும். அக்கேள்வி ஒரு மனிதர் கேட்பதாக அல்லாமல் ஒரு அருவமான ஒலியாகத் தோன்றும். சட்டென்று அப்படி கேட்கும்போது நாம் யோசித்துக்கொண்டே இருப்பவையாயினும் நம்மால் வரையறைசெய்து பேசமுடியாமலாகும்.

மேலும் அன்றைய நவீன இலக்கியச் சூழலில் எதையுமே திட்டவட்டமாகப் பேசலாகாது, அதுவே படைப்பிலக்கியவாதிக்கு அழகு என்ற எண்ணம் இருந்தது; இன்றும் உள்ளது. ஒற்றைச் சொல்லில் அது கேனத்தனம். வரையறைகள் செய்யாமல் எவரும் ஒருநாள் கூட வாழமுடியாது, வரையறைகளைப் பேசமாட்டேன் என்றுதான் அந்நிலைப்பாட்டின் மெய்யான அர்த்தம். வரையறைகளும் மறுவரையறைகளும்தான் சிந்தனை என்பது. மலையில் ஆப்புகள் அறைந்து தொற்றி மேலேறுவதுபோல, ஒவ்வொரு வரையறையும் ஒரு படிநிலை. வரையறைகளை மாற்றாமலிருப்பதும் வரையறைகளுக்கு அப்பால் சில உண்டு என்பதை ஏற்காமலிருப்பதும்தான் தேக்கநிலை.

வரையறை செய்யக்கூடுவன அனைத்தையும் வரையறை செய்து, வரையறை செய்ய முடியாதனவற்றை நேருக்குநேர் எதிர்கொள்வதே கலையின் சவால். ஆரம்பகட்டத்திலேயே வரையறைகளை தவிர்ப்பவர்கள் ஒருபோதும் அந்த வரையறைக்கு அப்பாற்பட்டவற்றைச் சென்று சேர்வதில்லை, மெய்யான அறைகூவலைச் சந்திப்பதுமில்லை. தமிழ் நவீன எழுத்தாளர்களில் பலர் அத்தகையவர்கள், அவர்கள் தங்களுக்கு உகந்த சில முன்னுதாரணங்களையும் கண்டடைவார்கள்.

ஞானி வரையறை செய்ய கட்டாயப்படுத்துவார். “சொல்லுங்க, கவிதைன்னா என்னான்னு நீங்க நினைக்கிறீங்க?” என்பார். எதைச்சொன்னாலும் அவ்வரையறையை பேசிப்பேசிக் கரையச் செய்வார். விவாதத்தை ஒரு திசையின்மையில் கொண்டுசென்று நிறுத்துவார். “மேலே பேசுவோம்” என்று சொல்லி கைகளைப் பற்றிக்கொண்டு “அடிக்கடி வாங்க” என்பார். அதுதான் அவருடைய வகுப்பு. சட்டையைப் போட்டுவிடுபவர் அல்ல அவர், நம் சட்டைகளை கழற்றிவிடுபவர். குரூரமாக நம் உள்ளாடைகளையும் சிலசமயம் கழற்றிவிடுவார் என்பதுதான் பிரச்சினை.

அவரே பேசும்போது கேலி எப்போதுமிருக்கும், ஆனால் அவர் பொதுவாக எவரையும் எதிர்மறையாக கடுமையாக தாக்குவதில்லை. தாக்குவாரென்றால் அவருடைய உடல்-மனநிலை சரியாக இல்லை என்றே பொருள். பார்வையுடன் வாழ்ந்து பார்வையை எப்போதைக்குமாக இழந்தவரின் உள்ளத்தின் ஏக்கமும் கொதிப்பும் நம்மால் எளிதில் உணரத்தக்கவை அல்ல. என்னிடம் “நான் உங்க எழுத்தை விரும்புறதுக்கு முதல் காரணம் அதை என்னாலே பாக்கமுடியுதுங்கிறதுதான்… துல்லியமா கண்முன்னாடி பாக்கமுடியற உலகம். மொழிங்கிறது ஒரு வெளிச்சம்னு அப்பதான் தெரியும்”. அதை அவர் எழுதியிருக்கிறார்.

ஞானியைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் குறித்துகூட அவர்களின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு அதன்பின் விமர்சனத்தை முன்வைப்பது அவருடைய வழக்கம். ஒரு சிந்தனையாளர் மேல் நான் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் ஞானியின் அடுத்த கடிதத்தில் அவர்களின் பங்களிப்பைப் பற்றி ஒரு குறிப்பு இல்லாமலிருக்காது. அ.மார்க்ஸ் ஞானியை கடுமையாக தனிநபர் விமர்சனம் செய்தமைக்குப் பதிலாக நான் எழுதிய குறிப்புக்கு ஞானி பதிலெழுதினார், அதிலும் ‘அ.மார்க்சை அப்டிச் சொல்லிரமுடியாது’ என்றே எழுதியிருந்தார்.

தன் எதிரிக்கு ஒன்றுமே தெரியாது என்று எவரேனும் விவாதிக்க ஆரம்பித்தால் ஞானி “அப்டியா?” என்று அமைதியாகிவிடுவார். “செவியில்லாதவன் கிட்ட பேசிட்டிருக்கேன்னு இவன் சொல்றான்னா இவனுக்கு பேச்சு இல்லைன்னுதானே அர்த்தம்?”. அவரிடமே அவருக்கு அடிப்படைகள் தெரியாது என ஆவேசமாகச் சொல்லும் சிலர் இருந்தனர். ஞானி “அப்டீங்களா?” என்று கேட்டுவிட்டு பேசாமலிருப்பார். “நமக்கு  ஒருத்தர்ட்ட அடிப்படை மரியாதை இல்லைன்னா விவாதிக்கவே கூடாது. முழுமறுப்புங்கிறது கருத்தை மறுக்கிறதில்லை, விவாதத்தை மறுக்கிறதுதான்”

ஞானியுடன் என்னுடைய கடைசிகட்ட விவாதங்கள் அத்வைதம் சார்ந்தவை. எனக்கு அத்வைதம் வெறும் அறிதல் அல்ல, அனுபவம். அதை அதற்குமேல் சொல்லமாட்டேன். ஒருமுறை ஞானி என்னிடம் “அதை அனுபவமா உணர்ந்திருக்கீங்களா?” என்றார். “ஆமா” என்றேன். “அப்ப சரி” என்றார். அதன்பின் ஒன்றும் சொன்னதில்லை. அத்வைதத்தின் தத்துவப்பங்களிப்பு என்ன, சமூகப்பங்களிப்பு என்ன என்ற விவாதங்கள் எனக்கும் ஞானிக்கும் நடுவே சென்றதுண்டு. ஆனால் அப்படி எந்தப் பங்களிப்பும் இல்லையென்றாலும் அது சற்றும் குறைவுபடுவதில்லை. இவ்வுலகில் எதற்கும் பயன்படாதென்றாலும் வைரம் வைரமே.

அத்வைதத்திலிருந்தே நான் பௌத்த மெய்ப்பொருளை பயின்றேன். ஆகவே அத்வைதப் பார்வையிலான பௌத்தமே விஷ்ணுபுரம் நாவலில் உள்ளது. ஆனால் கொற்றவையில் உள்ள சாக்த பார்வை என்னுடைய குடிவழியிலிருந்து வந்தது, ஒருவேளை என் அம்மாவால் அளிக்கப்பட்டது. இவற்றை நான் தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ள ஞானி உதவினார். அகவயமாக அறிய, மேலே செல்ல ஞானியின் உதவி என ஏதுமில்லை. அங்கே நித்யா அன்றி வழிகாட்டியே இல்லை. நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி என்னும் வரிசைதான் அது. புறவயமாக வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஆத்மசாதகனுக்கு இல்லை. ஆனால் நான் எழுத்தாளன். மொழியும் இலக்கிய வடிவமும் புறவயமானவை, உலகியல் சார்ந்தவை, அன்றாடத்தில் வேரூன்றியவை. ஆகவே புறவயமாக வகுத்துக் கொண்டாக வேண்டும். அதற்கே ஞானி உதவினார்.

எஸ்.என் நாகராஜனின் கீழைமார்க்சிய கோட்பாடு ஞானியின் உள்ளே நிறைந்திருந்த வள்ளுவர் வள்ளலார் வரையிலான மெய்யியலை தக்கவைத்துக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. அதற்குள் அவர் தன்னை ஒரு மார்க்சியராக நிறுத்திக்கொண்டே வள்ளுவரையும் வள்ளலாரையும் ஏற்றுக்கொள்ள முடியும். ஞானி பின்னாளில் தமிழ்த்தேசியத்திற்குச் சென்றதற்கும் எஸ்.என்.நாகராஜன் முன்வைத்த கீழைமார்க்சிய அடிப்படைகள்தான் வழிவகுத்தன.

ஞானி ஐரோப்பிய- இந்திய கம்யூனிசம் என்பதை மையப்படுத்தலாகப் பார்த்தார். தமிழ்த்தேசியப் பொதுவுடைமை என்பதே அடிப்படை அலகு என நினைக்கலானார். வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலான பண்பாட்டு பின்புலத்தில் வைத்து ஒரு தமிழ்மார்க்ஸியத்தை உருவாக்குவது பற்றிய கனவை வளர்த்தெடுத்தார். தமிழ்த்தேசியக் கனவுகளிலிருந்து விடுபட்டபின்னரும் ஒரு தமிழ்மார்க்சியத்துக்கான கனவு அவரிடம் எஞ்சியிருந்தது. சொல்லப்போனால் அதுதான் அவருடைய கடைசி இலக்காக, அவர் விட்டுச்சென்ற சொல்லாக இருந்தது.

ஏறத்தாழ இக்காலகட்டத்தில் அவருடன் உரையாடும்போது இந்தியா முழுக்க அத்வைத அமைப்புகள் எப்படி தீண்டாமை ஒழிப்புக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும், நவீன ஜனநாயக பண்புகளுக்குமான பெரும்போராட்டத்தை நிகழ்த்தின என்பதற்கான சான்றாவணங்களை நான் அனுப்பியிருக்கிறேன். சென்னையிலேயே தீண்டாமை ஒழிப்புக்காக முன்நின்று போராடிய பல அமைப்புகள் அத்வைத சபைகள்தான். அய்யன்காளி என்னும் ஆளுமையே ஒரு அத்வைத அமைப்பிலிருந்து உருவாகி வந்ததுதான். விவேகானந்தரும் நாராயணகுருவும் அத்வைதிகளே. அத்வைத தரிசனத்தின் சற்று மாறுபட்ட வடிவங்களாகவே வள்ளுவரின் தரிசனத்தையும் வள்ளலாரின் தரிசனத்தையும் பார்க்க முடியும் என எழுதினேன்.

அய்யன் காளி

ஞானி அத்வைதத்தை பற்றிய ஒரு சாதகமான பார்வையை அடைந்தது அதன் பின்னர்தான். சங்கர மடம் போன்ற சம்பிரதாயமான சடங்கு அமைப்பிலிருந்து விலகி, ஒரு தூய அறிவுக்கொள்கையாக அத்வைதத்தை பார்க்க முடியும் என்று அவர் எண்ணலானார். ஒருவகையில் அத்வைதத்தை நோக்கிய அந்த ஈர்ப்பு என்னிடமிருந்து அவரில் நிகழ்ந்தது. எனக்கு அது நித்ய சைதன்ய யதியிலிருந்து நிகழ்ந்தது. ஞானியிலிருந்தே நான் நித்யவை நோக்கிச் சென்றேன். 1992 வாக்கில் நான் நித்யாவை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர் அவருடைய மாணவராகி தொடர்ச்சியாக அங்கு செல்ல ஆரம்பித்தேன். கோவை செல்லும்போது அவ்வப்போது இறங்கி ஞானியை சந்தித்துவிட்டு செல்வேன். ஒவ்வொருமுறையும் அங்கு நிகழ்ந்த உரையாடல்களை ஞானி என்னிடம், கேட்டு அறிவார்.

ஒருமுறை என்னிடம் பேசும்போது, “அத்வைதம் என்பது ஒரு தூய அறிதல் முறையாகவும் தரிசனமாகவும் நிலைகொள்ள முடியும் என்று எண்ணிப் பார்த்ததே இல்லை. ஏனெனில் தமிழகத்து மண்ணில் எங்கும் அப்படி அத்வைதம் முன்னிறுத்தப்பட்டதில்லை. எனக்கு சுவாமி சித்பவானந்தரின் மடங்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. சித்பவானந்தர் எனக்கு ஒரு காலத்தில் நெருக்கமானவரும்கூட. ஆனால் அவர் சடங்குவாதத்துக்கு சென்றுவிட்டாரென்றும், இந்து மைய ஒழுங்குக்குள் தனக்கொரு இடத்திற்காக போராடிக் கொண்டிருந்தார் என்றும் மட்டுமே எனக்கு புரிதல் இருந்தது, அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்ததே இல்லை” என்றார் ஞானி.

நான் நித்ய சைதன்ய யதியின் குருகுலச்சூழல், அங்கு வரும் வெளிநாட்டவர் வெவ்வேறு உலக சிந்தனைகளின் அத்வைதத்தின் குடைநிழலில் அமர்ந்து விவாதித்துக் கொள்வது ஆகியவற்றைக் குறித்து அவரிடம் கூறக்கூற ஞானி சித்பவானந்தரை நோக்கிச் சென்றார். இன்னொரு முறை சந்திக்கும்போது “சித்பவானந்தர் திருவாசகத்திற்கு இவ்வளவு பெரிய உரை எழுதியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது” என்றார். “உண்மையாகவா?” என்று நான் கேட்டேன். “ஆம் அவர் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்வைதிக்கு எவ்வாறு திருவாசகமும் திருமூலரும் திருமந்திரமும் அணுக்கமாக இருக்கமுடியும் என்று வியப்பாக இருக்கிறது” என்றார்.

நான் “அத்வைதம் என்பது அதன் அடிப்படையான ஒருமைத் தரிசனத்தை மட்டுமே பற்றிக்கொள்வது. அதைக்கொண்டு உலகில் அனைத்துச் சிந்தனைகளையும் ஒருங்கிணைக்க முடியும். அத்வைதத்திற்கு கிறிஸ்தவமும் பௌத்தமும் கூட அந்நியமாக இருக்க வேண்டியதில்லை” என்று அவரிடம் கூறினேன்.  சித்பவானந்தர் தமிழர் மெய்யியலை வடிவமைத்ததில் முக்கியமான முன்னோடி என்றும், அவருடைய பங்களிப்பு தமிழ்ச்சூழலில் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஞானி கருதலானார். சித்பவானந்தரைப் பற்றி ஒரு நல்ல நூல் எழுதும் எண்ணம் கடைசிக்காலத்தில் அவருக்கு இருந்தது.

சித்பவானந்தர்

சித்பவானந்தர் பற்றி பேசும்போதுதான் முதன் முதலாக தன்னுடைய மெய்யியல்- ஊழ்க அனுபவங்கள் சிலவற்றை ஞானி குறிப்பிட்டார். பின்னர் அதை விரிவாக எழுதியிருக்கிறார். ஞானி ஆரம்ப காலத்தில் தீவிரமான சில தியான- யோகப் பயிற்சிகளை செய்யும்போது தன்னளவில் ஒரு பேருணர்வை அல்லது ஒருமையுணர்வை அடைந்ததாக கூறினார். பின்னர் அந்த ஒருமையுணர்வை அறிவார்ந்த பகுப்பாய்வுக்கு உட்படுத்திக்கொண்டு, அது ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் இயற்கையுடனும் பிரபஞ்ச பேரமைப்புடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒர் உன்னத நிலையே ஒழிய, தெய்வீக அருளோ அதீத அனுபவமோ ஒன்றும் அல்ல என்று வகுத்துக் கொண்டார்.

அந்நிலையை ஒரு மனமயக்கம் என்று நெடுநாட்களாக விளக்கிக் கொண்டிருந்தவர் தன் வாழ்நாளின் இறுதிக்கட்டதில் அது ஒரு பெருநிலையே என்றார். அது கடவுளுடன் தொடர்புடையது அல்ல, இங்கிருக்கும் அனைத்தும் நானே என்பது இங்கிருக்கும் அனைத்துடன் இணைந்திருக்கிறேன் என்றும் இங்கிருக்கும் அனைத்தின் ஒரு பகுதியே நான் என்றும் உணரும் ஒரு நுண்நிலை மட்டுமே. அந்த உணர்வை ஒருவேளை தன்னியல்பாகவே விலங்குகள் பறவைகள் கூட அடையக்கூடும். சிற்றுயிர்களுக்குக்கூட அவ்வுணர்வு இருக்க வாய்ப்பிருக்கிறது. அத்தகைய பேருணர்வை ஒரு விவசாயி அடையக்கூடும். கதிர்கொண்டு நிற்கும் வயலைப்பார்த்த கணமே அவ்வயலை தான் என்று உணர்ந்ததை ஒரு விவசாயி தன்னிடம் கூறியதை ஞானி நினைவு கூர்ந்தார்.

மார்க்சியம் அத்தகைய பேருணர்வுகள் அனைத்தையும் மனமயக்கம் என்று சொல்லி விலக்கும் என்றால் அவை மதத்தின் ஆயுதங்களாகவே ஆகும். ஏனென்றால் அவை உண்மையானவை, இங்குள்ள அனைத்து அன்றாட உணர்வுகளையும் சிறிதாக்கி கீழே தள்ளும் அளவுக்கு ஆழமும் அழுத்தமும் கொண்டவை. அவற்றை மார்க்சியம் எதிர்க்கவோ வெல்லவோ இயலாது. எவ்வளவு விளக்கி, எவ்வளவு மறுத்தாலும் அவை அங்கே அவ்வண்ணமே நிலைகொள்ளும். இமயமலைகள் அங்கில்லை என்று கற்பனை செய்துகொள்வது போலத்தான் அவற்றை மறுப்பது. அவை என்ன, சிந்தனையில் அவற்றின் இடம் என்ன, அவற்றை எவ்வாறு மார்க்சியத்துக்குள் வைத்துக்கொள்வது என்பதுதான் மெய்யியலின் கேள்வி என்றார் ஞானி

அந்தப்பேருணர்வு ஏன் மார்க்ஸியத்துக்குத் தேவைப்படுகிறது? அதை ஞானியின் சொற்களில் சொல்ல முயல்கிறேன். மார்க்ஸியம் நிலப்பிரபுத்துவ காலத்து பெரும் அடக்குமுறையிலிருந்து எழுந்துவந்த ஓர் எதிர்ப்பரசியல். அன்று எளியமக்களின்மேல் பெருமதங்களும் பேரரசுகளும் மலைகளைப்போல தூக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை புரட்டிப் போட்டுவிட்டு மானுடம் எழுந்தமர முயன்றதன் தத்துவ அலையையே நாம் மார்க்ஸியம் என்கிறோம். ஆகவே எதிர்ப்பே அதன் அடிப்படை.

அதோடு அன்றைய சாமானிய மனிதன் உயிர்வாழ்வதைக்கூட உரிமையாகக் கொள்ள முடியாதவனாக இருந்தான். நிலம் நீர் எதுவுமே அவனுக்கு உரிமையானவை அல்ல. ஆகவே ‘எல்லாமே எனக்கு வேண்டும்’ என்ற எண்ணமே அவனிடம் எழுந்தாகவேண்டிய உணர்வாக இருந்தது. மார்க்சியம் அவனிடம் உலகை உரிமை கொள்ளும்படி அறைகூவியது. அடைவதற்கு அனைத்தும் உள்ளது என்று சொன்னது.

விளைவாக மானுடமையப் பார்வையும் இயற்கையை வெல்லும் பார்வையும் மார்க்ஸியத்தில் உள்ளடங்கியிருந்தன. அன்றைய மார்க்சிய எழுத்துக்கள் அனைத்துமே மனிதன் X இயற்கை என்னும் எதிரீட்டை முன்வைப்பவையாக இருந்தன. இயற்கையை வென்று மாற்றியமைத்து தன் செல்வமாக ஆக்கும் மனிதனையே அவை இலட்சியமாக கொண்டன. ஆகவே அன்றைய மார்க்ஸியம் இயற்கைச்சீரழிவை இயல்பாக உருவாக்கியது. நுகர்வியத்துக்குச் சமானமான அழிவை மார்க்ஸிய அரசுகளும் உருவாக்கின.

அதன் விளைவாக உருவான சூழியல் நெருக்கடியை இன்று நாம் சந்திக்கிறோம். இன்று நாம் எப்படி நுகர்வியத்தை எதிர்க்கிறோமோ அதற்குச் சமானமாக மார்க்சியத்தின் மனிதமையப்பார்வையை, உலகை உரிமைகொள்ளும் பார்வையை எதிர்க்கவேண்டும். மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான் என்ற உணர்வை இன்றைய மனிதனிடம், உழைப்பாளியிடம் உருவாக்கவேண்டும். பசுமையரசியல் புரட்சியரசியலுடன் இணையவேண்டும்.

அவ்வாறு இணையவேண்டும் என்றால் இயற்கையுடனான மார்க்சியவாதியின் பார்வை மாறவேண்டும். எதிர்ப்புக்குப் பதில் அங்கே கனிவு குடியேறவேண்டும். நான் என்னும் தன்னிலைக்குப் பதிலாக இவையெல்லாம் நான் என்னும் பெரிய தன்னிலை உருவாகவேண்டும். இயற்கையை, பிரபஞ்சத்தை தானாக உணரும் நிலை அது. அந்த தரிசனநிலை அத்வைதம், பௌத்தம், தாவோ, ஜென் அனைத்திலும் உள்ளது. அவற்றை மார்க்சியம் உள்ளிழுக்கவேண்டும். மார்க்சியத்தின் தத்துவம் மேலும் விரிந்து உயிர்க்குலத்தின் மீதான கனிவாக ஆகவேண்டும்.

அப்பெருநிலை தாயுமானவரிடமும் வள்ளலாரிடமும் வெளிப்படுவது, உளங்கனிந்த ஒரு விவசாயி அகத்தே அறிவது. அந்நிலைக்குச் செல்லவே மெய்யியல் தேவையாகிறது. அது ஒரு கனிவு. ‘காய் துவர்க்கிறதும் புளிக்கிறதும் முதிராம இருக்கிறப்ப அது தன்னை காத்துக்கிடறதுக்காகத்தான். முதிர்ந்தபிறகு இனிக்கிறது உலகம் முழுக்க விதையா பரவுறதுக்காக. மார்க்ஸியம் கனிஞ்சாகணும். எல்லா உயிர்க்கும் கருணைன்னு வள்ளலார் சொன்னநிலை மார்க்ஸியத்துக்கு அன்னியமா இருக்கக்கூடாது” ஞானி அதைச் சொன்னபோது அவருடைய சிவந்தமுகம் மேலும் சிவந்து ஒளிகொண்டிருந்ததை இன்றென உணர்கிறேன்.

ஞானி உடன்பட்டுப்பேசிய அத்வைதம் என்பது அந்தப் பேருணர்வை மட்டும்தான். அத்வைதம் பின்னாளில் உருவாக்கிக் கொண்ட அமைப்புகளை அல்ல, அதன் தர்க்கமுறையைக்கூட அல்ல.  சங்கரர் உருவாக்கியது அப்பேருணர்வை பௌத்தர்களுக்கு எதிரான ஒரு தர்க்கக் கருவியைக் கொண்டு புறவயமாக நிறுவுவதற்கான முயற்சிதான். அம்முயற்சியையே இன்று அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்களது நூல்களை அதற்கான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டியதும் இல்லை. ஆனால் அப்பேருணர்வை குறிப்பிடவேண்டும் என்றால் அத்வைதம் என்ற வார்த்தையை பயன்படுத்திக்கூறலாம் என்று அவர் சொன்னார்.

அந்தபெருநிலையை ஒரு மார்க்சியன் எப்படி அடையமுடியும், மார்க்சியம் எப்படி அதை தக்கவைத்துக்கொள்ள முடியும், எவ்வண்ணம் புறவயமாக விளக்கிக்கொள்ள முடியும் என்பதே நம்முன் உள்ள சவால். அது இந்தியப் பண்பாட்டில் வகித்த இடத்தை, இந்திய சிந்தனையில் அதன் விசையை, அதன் வரலாற்றுப் பரிணாமத்தை எளிய புறக்கணிப்புகள் இல்லாமல் எப்படி புரிந்துகொள்ள முடியும் என்பதையே மார்க்ஸியன் யோசிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா அடைந்துள்ள மெய்யியலில் மார்க்சியம் ஓர் ஊருடுவலை நிகழ்ந்த முடியும்.

இந்த அளவிலே அவர் அத்வைதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய நூல்களில் வெவ்வேறு வகையில் இதை விளக்கியிருக்கிறார். எவ்வகையிலும் மார்க்சியத்திலிருந்து அத்வைதத்தை நோக்கி செல்லவோ, அத்வைதத்திற்கு ஒரு மறுவடிவை உருவாக்கவோ, அத்வைதத்தை மீட்டெடுக்கவோ அவர் முயலவில்லை. அது மட்டுமல்ல அவ்வாறு செய்யக்கூடாது என்பதை மிகத்தெளிவாக திரும்பத் திரும்பக் கூறியும் இருக்கிறார்.

மார்க்சியம் எனும் தரிசனம் படைப்பூக்கம் கொண்டது, உலகத்தில் அனைத்தையும் விளக்கும் ஆற்றல் கொண்ட மையப்பார்வை அது, அந்த பார்வையில் அத்வைத அனுபவத்தை எவ்வாறு விளக்குவது என்பதுதான் ஞானியின் அறைகூவல், அத்வைதத்தினூடாக சித்பவானந்தருக்கு சென்று அங்கிருந்து தமிழருக்கான மெய்யியல் என்ன என்ற கேள்விக்கு வந்தார். தமிழ்த்தேசியத்துக்குள் சென்றபோது மெய்யியல் என்பதைக் கடந்து தமிழருக்கு மட்டுமான ஒருமெய்யியல் என்று உண்டா என்று உசாவலானார்.

தமிழர் மெய்யுணர்வு என்று ஒன்று தனியாக உண்டா என்று ஞானியிடம் நான் 1998-ல் ஒரு கடிதத்தில் வினவினேன்.  “மெய்யுணர்வு என்பது மானுடப் பொதுவானது,  அனைவருக்கும் உரியது. ஒருவகையில் அனைத்து உயிர்களுக்கும் உரியது. ஆனால் அதை எந்தப் பண்பாட்டு கருவிகளைக்கொண்டு விளக்கிக்கொள்கிறோம் என்பதில்தான் தமிழோ சமஸ்கிருதமோ வருகிறது. மொழியாகவும் பண்பாட்டுக் குறியீடுகளாகவும். அது எத்தனை நுண்ணுணர்வாக இருந்தாலும் மனிதர்கள் மொழி, பண்பாடு வழியாகவே அதை அறியமுடியும்” என்பது ஞானியின் விளக்கம்.

தமிழர்கள் அப்பேருணர்வை அறிந்திருக்கிறார்கள், அது தமிழ்மொழிக்குள் மீள மீளப் பதிவாகியிருக்கிறது. தமிழர்கள் தங்களுக்குள் இருந்த இயற்கையைக் கொண்டும், தங்கள் வாழ்க்கை முறையைக்கொண்டும், அதிலிருந்து வந்த தொன்மங்களையும் படிமங்களையும் கொண்டும் அப்பேருணர்வை விளக்கியிருக்கிறார்கள். அதுவே தமிழர் மெய்யியல் என்றார் ஞானி

அந்த மெய்யியலின் தொடர்ச்சியாகத்தான் மார்க்சிய மெய்யியல் சென்று இணைய முடியும். அதாவது மார்க்சிய மெய்யியல் தமிழர் மெய்யியலுடன் இணைந்து ஒரு  ‘தமிழ்மார்க்சிய மெய்யியலை’ கண்டடையவேண்டும். அதுதான் இங்கு மக்களிடம் செல்வாக்கு கொண்டதாக ஆகும். பல்லாண்டு நீடிப்பதாகவும் ஆகும். மார்க்சியத்தை நாம் இங்கு நிறுவுவது என்பது ஒரு புரட்சியை நோக்கி செல்வதற்கான குறுகிய பாதைக்காக அல்ல. புரட்சிக்குப் பின்பும், எதிர்காலத்திலும், முடிவில்லாக் காலத்திலும் இங்கே மார்க்சியம் நிலைகொள்ள வேண்டும் எனில் அது இங்குள்ள பண்பாட்டின் ஒரு பகுதியாக உருகிச் செறிந்திருக்க வேண்டும்.

இங்குள்ள பண்பாட்டை விமர்சிக்கும் ஒரு கருவியாக மார்க்ஸியம் இருக்குமென்றால் அவ்விமர்சனம் முடிந்ததுமே அது காலாவதியாகிவிடும். இங்குள்ள பண்பாட்டின் ஒரு பகுதியாகி, இங்குள்ள பண்பாட்டில் மிக விசையுடன் வளரும் ஒரு படைப்பூக்கம் கொண்ட கூறாக ஆகுமென்றால் மட்டுமே அது என்றென்றைக்குமாக நீடித்திருக்கும். 5000 வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் அன்றிருக்கும் அதிநவீன சமுதாயத்தில் கூட மார்க்சியம் ஒரு வடிவில் நீடிக்கும் என்றால் மட்டும் தான் இங்கு மார்க்சியம் வந்ததற்கு பொருள் உண்டு என்று ஞானி சொன்னார்.

தமிழர் மெய்யியல், தமிழர்ச் சமயம் என்பது அடிப்படையில் சில கூறுகளாலானது. சில சடங்குகள் மற்றும் குறியீடுகளை நாம் பண்டைய குகை ஓவியங்களில் இருந்தே காணமுடியும். அச்சடங்குகள் வெள்ளையர்களால ஷாமனிஸம் என்று குறிப்பிடப்படுகிறது. டோட்டம் எனப்படும் குலக்குழு அடையாளங்கள் படிமங்களாகி பின்னர் தெய்வமாக ஆகின. அவற்றுக்கு ஒரு தொடர்ச்சியான பரிணாமம் இருக்கிறது. பரிணாமத்தில் பின்னகர முடியாது. ஆனால் பரிணாமத்தை அறிந்திருந்தால் எது நம்முடையது என்னும் தெளிவு நமக்கிருக்கும் என்றார் ஞானி

ஆனால் அன்றிருந்த தமிழிய அறிஞர்கள் ஒட்டுமொத்தமாக பண்பாட்டைப் பார்க்கக் கூடியவர்களாகவோ விளக்கக் கூடியவர்களாகவோ இருக்கவில்லை. அவர்களுடைய ஆய்வுக் கருவிகளும் மிகப் பலவீனமானவை. ஞானி இவற்றை தொட்டுத் தொட்டுத் தான் சென்று கொண்டிருந்தார். அவர் எழுத எண்ணிய ஒட்டு மொத்தமான பெரியநூலை எழுதவேயில்லை.

இக்காலகட்டத்திலேயே ஞானி இந்தியாவில் இந்துத்துவத்தின் எழுச்சியை முன்னுணர்ந்துவிட்டிருந்தார் என்பது இன்று சிந்திக்கையில் ஆச்சரியம் அளிப்பது. இதைப்போலவே முன்னுணர்ந்து சொன்ன இன்னொருவர் ஐராவதம் மகாதேவன். இந்தியாவின் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அரசியல் சார்ந்த அடையாளங்களாக ஆக்கி, அவற்றைக் கொண்டு ஒற்றை அரசியலாதிக்கம் ஒன்றை உருவாக்குவார்கள், அதில் வெற்றியும் பெறுவார்கள், அதற்கான கூறுகள் தென்படுகின்றன என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அவர் முன்னுணர்ந்து சொன்ன சித்திரம் மிகமிக இருண்டது. முதலில் இந்தியாவின் பண்பாட்டின் மிகச்சிறந்த கூறுகள் மட்டுமே முன்வைக்கப்படும், அதனடிப்படையில் மக்கள் தொகுக்கப்பட்டு அதிகாரம் சமைக்கப்படும். அதன்பின் அந்த சிறந்த பண்பாட்டுக்கூறுகளின் பெயரால் இந்தியாவின் நிலப்பிரபுத்துவப் பண்பாட்டின் இருண்ட பக்கங்கள் மேலெழுந்துவரும். அவற்றைப் பயன்படுத்தும் சர்வதேச பொருளியல் சுரண்டல் சக்திகளும் அவற்றுடன் இணைந்து போகும் இந்தியச் சுரண்டலமைப்புகளும் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியா பண்பாட்டுரீதியாக மூர்க்கமான ஒற்றைப்படைத் தன்மையை அடையும். பொருளியல் ரீதியாக வீழ்ச்சி அடையும். நெடுங்காலமாகும் அதிலிருந்து மேலெழுவதற்கு என்றார் ஞானி.

அவ்வாறு எழும் இந்துத்துவ அலையை எதிர்க்கும் ஆற்றல் இன்றுள்ள மார்க்ஸிய- பெரியாரிய சக்திகளுக்கு இல்லை என்று ஞானி சொன்னார். ஏனென்றால் அவற்றின் அணுகுமுறை இயந்திரவாத அடிப்படை கொண்டது, மெய்யியல் மறுப்பு கொண்டது. அவர்கள் கனவை முன்வைக்க மாட்டார்கள், எதிர்ப்பையும் வெறுப்பையுமே முன்வைப்பார்கள். ஆகவே பூசல் மொழியிலேயே பேசுவார்கள். அதை சாதாரண மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் என்றுமே எதிர்நிலையில் நெடுங்காலம் நிலைகொள்ள மாட்டார்கள். பொய்யாகவே இருந்தாலும் கனவையும் இலட்சியங்களையும் நாடுவார்கள். இன்றைய மார்க்சியர்கள் கனவை இழந்துவிட்டவர்கள்.

மார்க்சியர்கள் மூர்க்கமான மெய்யியல் எதிர்ப்பை மட்டும் பூசலின் மொழியில் முன்வைத்துக் கொண்டிருக்கையில் மெய்யியலின் குறியீடுகளை தங்களுக்குரியவையாக ஆக்கிக்கொண்டு இந்துத்துவம் வென்றுசெல்லும். திருவள்ளுவரும், வள்ளலாரும், நாராயணகுருவும், விவேகானந்தரும் அவர்களுடன் நின்றால் மக்கள் அங்குதான் செல்வார்கள். ஏனென்றால் மக்கள் தங்கள் மெய்யியலை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவர்களின் பண்பாட்டின் அடிப்படையே அதுதான்.

உருவாகிவரும் இந்துத்துவ ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான வழிகள் இரண்டு. ஒன்று, மெய்யியலை மார்க்ஸியர் கையிலெடுப்பது, அத்தனை ஞானியருக்கும் அத்வைதம் முதலான அனைத்து மெய்யியல் அனுபவங்களுக்கும் இடமுள்ள நவீன இந்திய மார்க்ஸியம் ஒன்றை உருவாக்குவது. அதாவது இன்னும் சிறந்த மெய்யியல் ஒன்றை முன்வைப்பது. இன்னொன்று, இந்துத்துவம் உருவாக்கும் மூர்க்கமான ஒற்றைமைய தேசிய உருவகத்துக்கு எதிராக தமிழியம் போன்ற பண்பாட்டுத் தேசியங்களை முன்வைப்பது, அவற்றை போராட்ட வடிவங்களாக ஆக்குவது

“இன்று இதை நாம் சொல்லும்போது இயந்திரவாதிகள் மதமீட்பு என்றும் மார்க்சியத்திரிபு என்றும் குதிப்பார்கள். ஆனால் வேறுவழியே இல்லை, இங்குதான் வந்துசேர்வார்கள். எப்படி காந்தியையும் பெரியாரையும் ஏற்குமிடத்திற்கு வருகிறார்களோ அதைப்போல. மூவாயிரமாண்டுகளாக இந்தப் பண்பாட்டில் விளைந்த சிந்தனைகளையும் மெய்யியல்களையும் இந்துத்துவ அரசியலின் கருவிகளாக விட்டுக்கொடுக்கமுடியாது என்பதை கொஞ்சம் பிந்தி அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று ஞானி சொன்னார்.

ஒருவகையில் ஞானி ஒரு தீர்க்க்கதரிசி. எல்லாச் சிந்தனையாளர்களும் அப்படித்தான். அவர் இனிவரப்போகும் ஒரு காலகட்டத்திற்கான தீர்வை இருபதாண்டுகளுக்கு முன்னரே ஊகித்துச் சொல்லிக்கொண்டிருந்தவர். குருடர்கள் நடுவே ஒளிமிக்க பார்வையுடன் அமர்ந்திருந்த துயரமான தனித்த மனிதர்.

[மேலும்]

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7
அடுத்த கட்டுரைநித்ய சைதன்ய யதியை அறிய…