கங்காபுரம் வாங்க
“அது ஒரு முக்கியமான புத்தகம்” என்ற ஜெயமோகனின் வார்த்தைகளில்தான் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் எனக்கு அறிமுகம். “ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புரை முடிந்து, பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கிய கார்பயணத்தில், சாலையில் சீறிக்கொண்டிருந்த வாகனங்களை கவனித்தபடி, கங்காபுரத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நாலாம் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட்டுவிட்ட தகவலை வெண்ணிலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலில் கங்காபுரத்தை எழுதிவைத்தேன்.
ஒரு கவிஞராக, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் வெளியீட்டிற்க்காக மு.ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்தவர் என்று மட்டுமே வெண்ணிலா அதற்குமுன் எனக்கு அறிமுகம்.கங்காபுரத்தை படிக்க ஆரம்பித்த பிறகு, அவர் குறித்தான பிம்பமும், பிரமிப்பும் கூடுதலாக ஆகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.
அமெரிக்க வாழ்வின், ஒரு நீள்வார இறுதியில் , நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்து மவுண்ட் வாஷிங்க்ட்டன் சிகரத்தில் ஏறி இறங்கிய பின்னர், சமதளத்தில் கார் ஓட்ட ஒருவகை ஒவ்வாமை இருந்தது. நண்பரிடம் கைமாற்றிவிட்டு விலகினேன். வெண்முரசின் கடைசி நாவலான “முதலாவிண்” முடிந்த மறுநாள் வேறு வகை புத்தகங்களை எடுக்க தோணாமல் கங்காபுரத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதுபோன்ற
ஒவ்வாமையிலிருந்து மீளும் பொருட்டுதான்.
கதைக்களம் 10ம் நூற்றாண்டு. 1010ல் நடந்த சம்பவங்களின் தொகுப்பை மிகச்சரியாக ஒரு பங்கு காலம் கழித்து 2020ல் வாசிக்கையில் அறியா சிலிர்ப்புணர்வு மேலிடுகிறது. வெண்முரசின் வாசிப்பனுபவம் மிக இலகுவாக பத்தாம் நூற்றாண்டுக்குள் நுழைய வைத்தது.
ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக பின்னப்பட்ட சிடுக்குகளை, வாழ்நாள் முழுவதும் “பேரொளிக்குள் மங்கிய அகல் விளக்காய்” மனம் குமைந்து தத்தளிக்கும் ராஜேந்திர சோழனை, அரசனின் படைநகர்வுகளை, சித்தரிக்கிறது.
வரலாற்றுநாவல்களின் கொடை என்ன, அவை பழையவிஷயங்களைச் சொல்பவைதானே என்ற எண்ணம் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு பொதுவாக இருக்கும். இன்றையவரலாறு நேற்றைய வரலாற்றின் நீட்சிதான், இன்றைய வரலாறே நம்மைச் சூழ்ந்து நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்னும்போது நேற்றைய வரலாறுதான் நம் வாழ்க்கையை இன்று வடிவமைக்கிறது என்றே சொல்லலாம். ஆகவே ஒரு வரலாற்றுநாவலென்பது நாம் வாழும் இன்றைய வாழ்க்கைப்பிரச்சினையை அறிந்துகொள்வதற்கான ஒரு களம்தான்
இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதாரம், மதமும், அரசியலும், பண்பாடும் சோழர்காலத்தில் வேர்கொண்டவை என்பதை இந்நாவல் காட்டுகிறது. ஆகவே எல்லாச் சிக்கல்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தில் முக்கியமானது அந்த தொடர்ச்சியை அவ்வப்போது அடையாளம் கண்டு வியப்புடன் புதிய புரிதல்களை அடைவதுதான்.
‘மட்டக்களப்பில் புலிகளுக்கும், ராணுவத்திற்க்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரு தரப்பிலும் தலா இருபதுபேர்…..’ என்று தொடரும் இலங்கை வானொலியின் செய்தி சுருக்கத்தை போலவே ‘சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாட முற்பட்டவர் தாக்கப்படும்…’ சம்பவங்களையும் ஒரே புரிதலோடு கடந்துவந்திருந்த எனக்கு, சோழர்கால கோவில்களின் அமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து ஒரு விரிவான பார்வை இந்நாவல் மூலம் கிடைத்ததை ஒப்புக்கொண்டாகவேண்டும். நான்கு வயதில் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய சோழர்கால வரலாறுகளை, நாற்பது வயதில் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கமும், நாற்பதிலாவது தெரிந்துகொண்டோமே என்ற சந்தோஷமும் ஒன்றாய் ஏற்படுகிறது.
கற்பனைக்கு சாத்தியமுள்ள சிறு கதாபாத்திரங்களில் அ.வெண்ணிலா விரிவான முறையில் தன் புனைவுத்திறனை வெளிப்படுத்துகிறார். ராஜராஜனின் அணுக்கியாக பின்னாட்களில் அருகணையும் வீரமாதேவி, சிறுமியாக இருக்கையில் ஆண் வேடமிட்டு பாகூர் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கையில் ஏற்படும் சிக்கலால் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல், தைரியத்தோடு அரசனை சந்தித்து நியாயம் கேட்கும் பகுதிகளில் , அங்கதமும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. வசந்த மண்டபம் ஒன்றில் நடக்கும் அந்த விசாரணை நூற்றாண்டை தாண்டி தற்கால சம்பவம் ஒன்றோடு இணைத்து புன்முறுவலோடு கடக்க செய்தது.
வரலாற்றுநாவல் என்பதன் இலக்கணமே இன்று மாறிவிட்டது. இன்றைய பார்வையில் வரலாற்றுநாவல் என்பது ‘அரசர்களின் கதை’ அல்ல. அரசர்கள்தான் நமக்கு தகவல்கள் வழியாகத் தெரிந்தவர்கள். அவர்களை முன்வைத்து எழுதப்படும் மக்கள் வரலாறும் பொருளியல்வரலாறுமே இன்றைய வரலாற்றுநாவல்களில் பேசப்படும் வரலாறாக இருக்கமுடியும். ‘ஒரு கவுளி வெற்றிலைக்கு ஒரு படி நெய்’ என்பதில் முப்பதாண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதன் மூலம் பொருளாதார படிநிலைகள் சீராகப் பேணப்படுவதும், அதை கட்டுப்படுத்த ராஜராஜ சோழன் முன்னெடுத்த கொள்கை முடிவுளுலம், அவற்றைப் பெரும் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரச்செய்யும் ராஜேந்திரனின் நிர்வாகம் என அன்றைய பொருளியல் கட்டமைப்பும் அதை உறுதியாக நிலைநிறுத்தும் ஆட்சியாளர்களின் நிர்வாகமும் இந்நாவலில் பின்புலமாக விரிகின்றன.
ஆலய பணியாளர்களின் வகை வியக்க வைக்கிறது. ” நீர்தெளியான்” என்பவர்களின் வேலை உற்சவ காலத்தில் தேரோடும் வீதிகளில் புழுதியடங்க தண்ணீர்தெளிப்பது. இவர்களுக்கான மாதாந்திர ஊதியம் உள்பட அவர்கள் குடும்பத்திற்க்கு தினமும் சென்று சேரவேண்டிய சட்டிச் சோறு வரை தெளிவாக வரையறை செய்யப்பட்டு திணைக்கள நாயகம், வரிப் பொத்தகம், வரிப் பொத்தக நாயகம், முகவெட்டி, கீழ்வெட்டி, பட்டோலை உள்ளிட்ட அதிகாரிகளால் கண்காணிக்கபடுகிறது.
வழக்கமான ‘சரித்திர சாகச நாவல்’ அல்ல இது. சாண்டில்யன் வகையான நாவல்கள் எல்லாமே ஆண்களின் கதைகள். பெண்கள் அவற்றில் ‘வீரனின் காதலிகள்’தான். இது ஒரு பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட சரித்திரநாவல் – தமிழில் பெண்எழுத்தாளர்கள் வேறு எவரெல்லாம் சரித்திரநாவல் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் என் நினைவுக்கு எவரும் தோன்றவில்லை.பெண் எழுதியதென்பதனாலேயே முற்றிலும் புதிய ஒரு வரலாற்றுப்பார்வையை இந்நாவலில் காணமுடிகிறது. பெண்கதாபாத்திரங்கள் தனித்தன்மையுடனும் ஆளுமையுடனும் வெளிப்படுகிறார்கள். உதாரணமாக, ராஜேந்திரனின் பட்டாபிஷேகத்தில், பாதியில் வெளியேறும் ராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவி. தனக்கான நேரடி வாரிசு வேண்டி அரசரோடு இரண்ய கர்ப்பம் புகுகிறார். அவருடைய அதிகார வேட்கை ஒரு பேரரசனுக்குரியது
நுணுக்கமான சித்திரங்களால் அழகாக ஆகியிருக்கிறது இந்நாவலின் கதைப்பரப்பு. எந்த நாவலும் மைக்ரோ நெரேஷனால்தான் இலக்கியமாகிறது. ராஜேந்திர சோழனின் படைநகர்வை ஒட்டிய சுவாரஸ்ய நிகழ்வுகளை உதாரணமகாச் சொல்லலாம். வீரர்கள் குளிப்பதற்க்காக மழையை எதிர்பார்த்து காத்திருப்பது; ஓர் ஊரை சேர்ந்த படை வீரர்களுக்கு அசலூரை சேர்ந்த தளபதியை நியமிப்பது; படைத்தளபதியைத் தேர்ந்தெடுப்பதற்க்கு முன்பாக வீரர்களுக்கு திருவமுது இட பெண்டாட்டிகளை தேர்வுசெய்வது; உப்பு,நெய்யில் வருத்த குறுமிளகு,கேப்பை களி,உளுந்தமாவு,எள்,கருப்பட்டி கலந்த மாவு உருண்டைகளை வீரர்களுக்கு தயார் செய்வது; படைநகர்வில் பனங்கள்,தென்னங்கள்ளுக்கு ஈடாக புளித்த கரும்பு சாறு அளித்தல்; அதைப் பிழிய இயந்திரத்தையும் கையோடு எடுத்து செல்லுதல்;கூத்துக் கலைஞர்களை உடன் அழைத்து செல்லுதல்;தூது செய்தி எப்பொழுது தூது செல்பவரிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற அரச நடைமுறை என சொல்லிக்கொண்டே போகலாம்.
ராஜேந்திர சோழனின் பட்டாபிஷேகப் பகுதிகளை நான் படித்த நாள் ஜூலை 19, ஆடி திருவாதிரை. அன்றுதான் அரசனின் பிறந்தநாள். எதேச்சையாய் அமைந்த விஷயம் அது, ஒருவகையான பரவசத்தை அளித்தது.அன்றைய நாளில் மதுராந்தகனை பற்றி பலவாறு சிந்திக்க வைத்தபடி இருந்தது. தஞ்சைக்கு மாற்றாக ஒரு நகரத்தை நிர்மாணிக்க மதுராந்தகன் முடிவு செய்து அதற்கான முன்னெடுப்புகளில் இறங்குகையில் காஞ்சிபுரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல்வேறு கட்ட பரிசீலனைகளுக்குப்பின் சோழபுரம் தேர்வாகிறது. வளமும், வலுவும் குறைந்த நிலப்பகுதி. வங்கத்தையும், கோசலநாட்டையும் வென்றெடுத்த செல்வம் நகர்நிர்மாணத்திற்க்கு செலவிடப்படுகிறது. கோவில் திருப்பணி, நகர் நிர்மாணம், சோழ கங்கம்(தற்போது பொன்னேரி) ஏரி வெட்டுதல் என்று மூன்று பணிகளும் ஒருசேர நடக்கின்றன.
கங்காபுர உருவாக்கத்தில், குல மூப்புபடி எல்லைகளை அமைப்பதற்க்கு பெண் யானையை நடக்கவிட்டு எல்லைகள் வகுத்தல் மிக முக்கிய சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு பெருஞ்செயலை மிகமெல்ல ஒரு பெரிய திரைச்சீலையை விரிப்பதுபோல காட்டுகிறார் வெண்ணிலா. பெருஞ்செயல் அறுதியில் ஒரு துயரத்தையே விட்டுவைக்கிறது. ராஜேந்திர சோழனின் மன ஓட்டத்தை துல்லியமாக விவரிக்கும் இடங்கள், ஒட்டுமொத்த துயரத்தையும் ஒரு புள்ளியில் குவிக்கும் வரிகள்
“தனக்கு பின் பல விழுதுகள் வளர்ந்து தன்னை தாங்கி பிடிக்க வேண்டும் என்று இந்த மரம் நினைக்கிறதே தவிர, தன்னைப்போல், வேர் பிடித்துத் தனித்துச் சுயமாக நின்று வளரும் வேறொரு மரத்தை உருவாக்க இம்மரம் நினைப்பதில்லை.விழுதுகள் கூட என்னுடைய விழுதுகள் என்ற பெருமிதம் இம்மரத்திற்க்கு வேண்டும்”.
“உரிமையுள்ள இடத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது மரணவலி.வீரனை, அவனுடைய ஆயுதத்தால்,எதிரியின் முன்னால் உடன் இருப்பவன் கொல்வதற்குச் சமம்”.
“எனக்கு புகழ் விருப்பமல்ல, ஆனால், நான் விடும் மூச்சுக் காற்றுகூட என்னுடைய மூச்சுக் காற்றாக இல்லை”.
ஒருபக்கம் ராஜேந்திரசோழன் போன்ற வரலாற்றுக் கதைநாயகர்களின் மனதுக்குள் செல்கிறோம், மறுபக்கம் நாவலில் விரியும் நிலப்பகுதியில் சிறுவன் போல வேடிக்கைபார்த்தபடி நடக்கிறோம். நாவல் முழுவதும் விரவியிருக்கும் தகவல்கள் அந்த மெய்யான வாழ்க்கையனுபவத்தை அளிக்கின்றன.
மாணிக்க,மரகத,வயிரக்கற்களோடு முத்துக்களும் சேர்த்து செய்யப்ப்ட்ட “கண்டநாண்” என்னும் ஆபரணத்தின் விளக்கம். முத்தில் நான்கு வகைகளை (தைய்த்த முத்து, ஒப்பு முத்து, குறு முத்து, பயிட்ட முத்து). அது ஒரு பொருளைப்பற்றிய சித்திரம் மட்டும் அல்ல. அதில் இங்கிருந்த ஒரு பண்பாடே சொல்லப்பட்டுள்ளது
குறை வாழ்வு வாழ்ந்த ஆதித்ய கரிகாலனுக்கு வடக்கு பார்த்தபடியும் இயற்க்கை மரணம் என்பதால் தெற்க்கு பக்கம் பார்த்தபடி அமையும் ராஜராஜ சோழனின் பள்ளிபடைகளைப் பற்றிய செய்திகளும் ஓர் ஊரில் இருந்தபடி மற்றொரு ஊரின் நடவடிக்கைகளை அகக் கண்ணால் உணரும் மதிமுகம் என்னும் கலைபற்றிய செய்திகளும் கடவுள் சிலைகளின் நோக்கை கொண்டு திசைகளைத் தீர்மானித்தல் போன்ற நுட்பங்களும் சேர்ந்து நம் பண்பாட்டின் பலமுகங்களை ஒரு வைரப்பட்டையைத் திருப்பித்திருப்பிக் காட்டுவதுபோல காட்டுகின்றன
ஒரு பண்பாடு இறுதியாகத் திரட்டி எடுத்த சுவைகளால்தான் அந்தப் பண்பாட்டை மதிப்பிடமுடியும். தஞ்சாவூரின் சுவைகள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை. சிற்பம் சங்கீதம் சாப்பாடு எல்லாமே. இதில் சிற்பக்கலை பற்றிய நுட்பங்களை காண்கையில் சோழர் காலகட்டத்தின் நறுமணத்தை உணரமுடிகிறது. “நீளும் சிற்ப்பியின் கைகளில் எந்த அளவான உளியை தரவேண்டுமென்பது உதவியாளனுக்கு தெரிந்திருக்க வேண்டும்”, “மூடியிருக்கும் இதழ் அளவிற்குள்ளேயே இமையும் விழியும் அமைய வேண்டும். மூடிய இதழுக்குள்,திறந்த விழி.இதுதான் சிற்பத்தில் நுட்பம்.” போன்ற வரிகள் நினைவில் நிற்கின்றன.
நாவலின் பெரும்பாலான பகுதிகள் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுக்கின்றன. ஒரே ஓர் இடம், மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய ” மத்த விலாசப் பிரகசனம்” என்ற நாடகம் நடைபெறும் இடம், வாசிப்பு வேகத்தை கட்டுப்படுத்துவதாகவும், சுவாரஸ்யம் குறைந்ததாகவும் எனக்கு தோன்றியது.
இந்தப் பண்பாட்டுக்கொடைக்கு அப்பால் எந்த இலக்கியப்படைப்பையும் நிலைநிறுத்துவது ஆசிரியரின் சுயம் வெளிப்படும் புனைவுத்தருணங்கள்தான். நாவலில் சிறந்த புனைவுத் தருணங்களாக மூன்று இடங்களை குறிப்பிடலாம்.
1 : தன் செயலை தானே வெறுத்து, தன் சுயத்தின் மேல் சீற்றம் கொள்ளும் பட்டத்தரசி லோகமாதேவி திரிபுவனமாதேவியின் மகனான ராஜேந்திர சோழனை கொண்டாடுவதும், பின்னர் வெறுப்பதும்; அதன் பொருட்டு அலைகழிவதும்; ராஜராஜ சோழனின் இறப்புக்குபின் கோபமும் பாசமும் அழுகையும்ஆற்றாமையும் ஒன்றாய் கலந்த உணர்வு நிலையில், சிதம்பரம் நடராஜர் ஆலைய மார்கழி திருவாதிரை விழாவில், அரசசூழ்கை மூலம் தேர் கவிழ்க்கப்பட்ட சம்பவத்தை விவரிப்பதும்; தன்னால் ராஜராஜன் எவ்வாறெல்லாம் அலைகழிக்கப்பட்டார் என்பதை ராஜேந்திர சோழனிடம் விளக்குவதுமான தருணம்.
2 : படைவீரர்களை கொண்டு வெட்டப்படும் சோழகங்கம் ஏரி.பணியை ஆரம்பிக்க ‘ஏரி வாரியமும்’ படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தும், தானே களமிறங்கி வெட்ட ஆரம்பிக்க, ஊற்று நீர் மதுராந்தகனின் முகத்தில் தெறிக்கும் தருணம். சந்தோஷத்தை மறையச்செய்யும் அசம்பாவித சம்பவமாக தெய்வசிலை வடிக்கும் ஆதித்யனின் மரணம். “வென்றெடுத்த பொன்னையும், பெண்ணையும் கொண்டுவரும் அரசர்களுக்கு இடையில், ஏரியில் கலப்பதற்க்கான கங்கை நீரை தங்க குடங்களில் அடைத்துவந்திருப்பது சரியா? பாவம் போக்கும் கங்கை தனக்கு பழி சேர்க்கும் கங்கையாக மாறிவிட்டதே” என்று ராஜராஜ சோழன் விக்கித்து நிற்க்கும் தருணம்.
3 : செய்துகொண்டிருக்கும் தெய்வசிலையை, தனது காதலியோடும், கட்டப்பட்டுகொண்டிருக்கும் சோழபுரக்கோவிலின் அதிட்டானம் முதல் விமானம் வரை இணைக்கும் சிற்பி ஆதித்யனின் ஒப்பீட்டு வர்ணனைகள்.
நாவலில் மிக முக்கிய கதாபாத்திரம் ராஜேந்திர சோழனின் தோழியாக, இல்லாளாக, படைநகர்வு தலைமை கொள்பவராக,பட்டத்தரசிக்குறிய அனைத்து மரியாதைகளையும் பெற்றபடி ஆனால் ‘ஒரு போதும் அரண்மனைக்குள் காலடி எடுத்துவைக்கமாட்டேன்’ என்ற தன்முனைப்போடு, தில்லையிலும், கச்சிப்பேட்டிலும் (காஞ்சிபுரம்), கங்கைகொண்ட சோழபுரத்திலும் தான் இருக்கும் இடத்திற்கு ராஜேந்திரனை வரச்செய்யும் “வீரமாதேவி”. வாழ்வின் முற்பகுதியில் தந்தையால் பின் தள்ளப்பட்ட ராஜேந்திரன், பிற்பாதியில் தன்னை முந்தி செல்ல வீரமாதேவியை அனுமதித்தபடி இருக்கிறான்.
பூர்வதேசத்தின், ஆதி நகரத்து அரசன், இந்திர ரதனுடன் ராஜேந்திரனின் நிலையில் சமமாக அமர்ந்து, போரை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்துவது முதல், ‘குளிர் சுனைக்குள் இறங்குவது’ போல் ராஜேந்திரனுடன் உடன் கட்டை ஏறும் செய்தி சோழ தேசமெங்கும் தீயாய் பரவி, ராஜேந்திரனின் இறப்பையும் தாண்டிய விசயமாக பேசப்படுகிறது. இறப்பிலும் இரண்டாம் இடத்திற்க்கு தள்ளப்படுகிறான் ராஜேந்திர சோழன்.
“காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் பின்பக்கம் நடக்கையில் அங்கே காலமே இல்லை என்ற எண்ணம் எழுந்தது. சோழனோ,பல்லவனோ எதிரே வந்திருந்தால் வியப்பு கொள்ளமுடியாது.” 2018ல் வெண்முரசு இமைக்கணம் நாவல் முடிந்த சென்று வந்த பயணத்தை பற்றி ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தார். இந்நாவலின் பல இடங்கள் அந்த வரிகளை நினைவுகொள்ள வைத்தன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நூற்றாண்டுகளை கடந்து இன்றளவு மார்கழி திருவாதிரை நாளில் நடைபெறும் “ஆருத்ரா தரிசனம்”. மூலவரும்,உற்சவருமாய் வீற்றிருக்கும் நடராஜர் முதல், சண்டிகேஸ்வரர் வரை,பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலா இந்நாவலின் தொடக்கத்தில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
எங்கள் கிராமத்து சிவன் கோவிலுக்கு (மாயவரம் அருகே, தலைச்செங்கோடு.கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்) நூற்றாண்டுகளுக்கு முன் மூத்தோர் கோவிலுக்கு விளக்கெரிக்க நிவந்தமாக பெற்ற “சாவா, மூவா” கால்நடைகளுக்காக இன்றளவும் மாதந்தோரும் குடும்ப வாரிசு ஒருவர் நேரில் வந்து எண்ணைய் கொடுத்து செல்வதுண்டு,வைகாசி விசாக உற்சவங்களில் குடி மூப்பு வரிசையும் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்நிலத்தில் காலம் பெரிதாக மாறவே இல்லை. அவ்வுணர்வை இந்நாவல் அளித்தபடியே இருக்கிறது.
வரலாற்றுநாவல் ஏன் எழுதப்படுகிறது என்பதற்கான ஒரு விடை வரலாறு நம்முள் செய்திகளகாவே வந்து சேர்கின்றது, அதை நாம் கற்பனையில் யதார்த்தமாக விரித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது, அதற்கு நாவல்கள் உதவுகின்றன என்பதுதான். செய்திகளுக்கு மையமோ உள்விரிவோ இல்லை. யதார்த்தம் அப்படி அல்ல. இந்நாவல் முழுக்க விரவிக்கிடக்கும யதார்த்தவாதச் சித்தரிப்புகளை இதன் வலிமை எனச் சொல்லலாம்.
நாவல் துவங்கும் மார்கழி மாதத்து திருவாதிரை நாளில், ராஜேந்திர சோழனின் அரசகுரு தில்லை நடராஜர் ஆலயத்திற்க்குள் நுழைந்து , புலரிக்கு முன் தயாராய் இருக்கும் திருவாதிரைக் களியை புறக்கணித்து, ராஜேந்திர சோழனுக்கு பட்டம் சூட்டாமல் காலம் தாழ்த்தும் ராஜராஜனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தில்லை கோவிலின் அர்த்த ஜாம பூஜையை நிறுத்த சொல்வதில் ஆரம்பித்து, ராஜேந்திரனின் இறப்பு வரை மூன்று தலைமுறை நிகழ்வுகளின் ஒட்டுமொத்த சித்திரமும் மிகைக்குறிப்புகள் அதீத கற்பனை வர்ணனைகள் இல்லாமல், இயல்பு மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது.அரசவை அலங்காரங்களை கடந்து அகத்தளங்களில் வெளிப்படும் யதார்த்த நிகழ்வுகளின் மூலமும்,ராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவின் மூலமும்,மகள் குந்தவை மூலமும், ராஜேந்திர சோழனின் அணுக்கி வீரமாதேவியின் பார்வையிலும் விரிந்துசெல்கின்றன.
அனைத்துக்கும் அப்பால் ஒரு வரலாற்றுநாவல் ஒரு வரலாற்றுப்பார்வையை முன்வைக்கவே எழுதப்படுகிறது. வரலாற்றுத்தன்மை [historicity அல்லது historicism]யை அது உருவாக்குகிறது. அது நம்மை ஒரு சமூகமாக நாம் தொகுத்துக்கொள்வதற்கு இன்றியமையாதது. ’இளவரசு பட்டத்திற்க்காக ஐம்பது வயது வரை காத்திருந்தான் ராஜேந்திரன்’ என்று கிடைத்த ஒற்றை வரித் தகவல் ‘தஞ்சையை தாண்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் எதற்காக தலைநகரமும் மற்றும் ஓர் ஆலயமும்?’ என்ற கேள்வியாய் மாறி,அதற்கான தேடுதலில் பின்தொடர்ந்த ராஜேந்திரனின் வாழ்க்கையும், அரசனின் அகப்போராட்டத்தின் விளைவே “கங்காபுரம்” .
வரலாற்று நாவலுக்குரிய பிரம்மாண்டங்கள், மிகைக்கற்பனைகள், சோழர்களின் திறன்சொல்லும் பெரும்படையெடுப்புகள் ஆகியவை பற்றிய விவரணைகளையோ சோழதேசத்தை முப்போகம் விளையச்செய்த பெருமைகளையோ விரிவாக விளக்கி உள்ளே செல்லாமல் அவற்றை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது நாவல். மாறாக ஆயிரம் ஆண்டுக்கு முன்பான வாழ்க்கையை, மக்களை, அரசியலை,ஆண்டவனை முன்வைக்கிறது.
தஞ்சைக்காரர்களுக்குத் தெரியும், தேர் வீதியுலா செல்கையில் அதன் ஓட்டத்தை மட்டுப்படுத்தி சரியான திசையில் கொண்டுசெல்லது மிக முக்கியம். தேரை இடதுபுறம் திருப்புகையில் வலதுபுற பின் கால்களில் உலுக்கு மரத்தையும் இடது புற முன் கால்களில் முட்டுகட்டைகளும் போடப்படவேண்டும். தில்லை,திருவாரூர், தஞ்சாவூர், சோழபுரம் என்று நான்கு சோழதேசத்து பகுதிகளை, தேரோடும் வீதிகளாக்கி, கங்காபுரம் என்னும் பெருந்தேரை ,”நெறிமுறை, தார்மீகம், உளவியல், ஆன்மீகம்’ என்னும் நான்கு விழுமியங்களை உலுக்கு மரமாகவும், முட்டுகட்டைகளாகவும் லாவகமாய் பயன்படுத்தி, சோழபுரத்தில் திறம்பட நிலைகொள்ள வைத்திருக்கிறார் வெண்ணிலா.
– யோகேஸ்வரன் ராமநாதன்.