எண்பதுகளின் தொடக்கம் முதலே எனக்கு விடுதலைப்புலிகளுடன் ஒரு தொடர்பு இருந்தது. அன்று இந்து அமைப்புகளில் ஒருசாரார் அவர்கள்மேல் அணுக்கத்துடன் இருந்தனர். எனக்கும் விடுதலைப்புலிகள் மேல் ஆழமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. விடுதலைப்புலிகளை ஆதரித்து மலையாளத்தில் நீண்ட ஒரு கட்டுரை எழுதி அதன் விளைவாக வேலை நீக்கம் செய்யப்பட்டு இந்திய உளவுத்துறையில் இருந்த ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரான கவிஞர் வழியாகவும் நூறுநாற்காலிகளின் கதாநாயகன் வழியாகவும் கெஞ்சி மன்றாடி மீண்டும் வேலையை திரும்பப் பெற்றேன். நா.அமுதசாகரன் என்ற பெயரில் அ.யேசுராஜா காலச்சுவடில் எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அதன் விளைவாக காவலர்களால் விசாரிக்கப்பட்டேன். இந்திய அமைதிப்படை ஈழநிலத்தில் நுழைந்ததற்கு எதிராக தாய் வார இதழில் எழுதிய கதையின்பொருட்டு இன்னொரு விசாரணை.
ஆனால் பின்னர் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த சகோதரப்படுகொலை பற்றிய செய்திகள் என்னைத் தளர்த்தத் தொடங்கின. புலிகளின் வன்முறையாட்டம் பற்றிய செய்திகள் அப்போராட்டத்தின் இறுதி என்ன என்பதை காட்டின. 1990-ல் ஜெயகாந்தன் பத்மநாபா கொலையில் ஆற்றிய உரை என் சிந்தனையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஞானிக்கும் அந்தக்கொலை புலிகள் மீதான விலக்கத்தை உருவாக்கியது. ஆனால் பின்னர் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் வழியாக அவர் மீண்டும் புலிகள்மீதான ஆதரவு நிலையை எடுத்தார்.
ஞானியிடம் புலிகளின் வன்முறை பற்றி தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தேன். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டியும் அந்த விவாதம் விரிந்தது. சோவியத் ரஷ்யாவின் பிழைகளை ஏறத்தாழ அப்படியே ஈழ விஷயத்திலும் நாங்கள் கண்டோம். சோவியத் ரஷ்யாவின் வரலாறு என்பது அதிகாரப்போட்டியினால் ஓர் உயரிய லட்சியம் தோற்கடிக்கப்பட்டதன் கதை. ஓர் உயரிய லட்சியத்தின் பொருட்டுகூட அதிகாரவெறியையும் தன்முனைப்பையும் மறந்து நடைமுறையில் ஒருங்குதிரள முடியாதவர்கள், வெறிகொண்டு ஒருவரை ஒருவர் அழிக்ககூடியவர்கள், முற்றதிகாரம் கிடைத்தபிறகு என்னவாக இருப்பார்கள் என்பதுதான் வினா.
ஒரு பெரும் லட்சியத்திற்காக செய்யப்படும் அழிவுகளும் பிழைகளும் பின்னர் அந்த லட்சியம் சரியானது அல்ல என்று ஆகுமெனில் என்னவாகிறது? அந்த தவறுகளுக்கு எவர் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? இந்தக்கேள்வி என்னை அலைக்கழித்தது போலவே ஞானியையும் அலைக்கழித்த ஒன்று. நெடுநாட்களாக வெவ்வேறு கோணங்களில் அவர் தனக்குத்தானே உசாவிக்கொண்டது. ஞானியின் ஈழ நண்பர்கள் வழியாக இந்த வினா அவரை வந்தடைந்துகொண்டே இருந்தது. குறைந்தது பத்து தடவையாவது ஞானி என்னிடம் குரல்நடுங்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் சொல்லியிருக்கிறார் “ஒரு சின்ன தவறு நடந்து போச்சு, சோவியத் பரிசோதனை தவறுதான் ஒத்துக்கறோம், அப்டீன்னு மார்க்சியர்கள் சொல்றாங்க. அப்படின்னா அதுக்காக செத்தவங்களுக்கு என்ன பதில்?”
ஞானி மார்க்சிய ஈடுபாடு கொள்ள தொடங்கிய காலம் முதலே இருந்துவந்த கேள்விதான் அது. சொல்லப் போனால் மரபுமீறிய மார்க்சியர் ஆவதற்கும், மார்க்சியம் பற்றிய அறக்கேள்விகளை எழுப்பிக் கொள்வதற்கும், காரணமாக அமைந்ததே குருஷ்சேவ் வெளிப்படுத்திய ஸ்டாலின் கால களையெடுப்புகள்தான். இந்த அகஅல்லல் நானறிந்த மார்க்ஸியர்களில் ஞானிக்கு மட்டுமே இருந்தது, வேறு ஒருவரிடம்கூட நான் பார்த்ததில்லை. அவர்களுக்கு கொல்லப்பட்டவர்கள் ‘களைகள்’ அவ்வளவுதான். இறந்த எளியமக்கள் ‘தவிர்க்கமுடியாத அழிவுகள்’ வெறும் எண்கள். எவருக்கும் எந்த அறச்சிக்கலும் இருக்கவில்லை. எந்த மனசாட்சிப் பிரச்சினையும் இருக்கவில்லை.
அது ஒரு கட்சிகட்டும் மனநிலை. நம் கட்சியில் எது செய்தாலும் அது சரியானது, ஏனென்றால் நாம் வெல்லவேண்டும். எதிரிக்கட்சி என்ன செய்தாலும் அது கொடூரமானது, ஏனென்றால் அது அழிக்கப்படவேண்டும். அரசியலின் மிகப்பெரிய சிக்கலே அதிகாரம் சார்ந்த இந்த குவிமையமும் அதைச்சார்ந்து எளிய உள்ளங்கள் கூடிச்செறிந்து விடுவதும்தான். அரசியலாளர்கள் சிந்தனைத்துறையில் ஊடுருவும் போது அங்கும் அவர்கள் இந்த குவிமையப் பார்வையைக் கொண்டுவந்து விடுகிறார்கள்.
அடிப்படையில் ஆளுமையில்லாத எளிய மனிதர்கள் அவர்கள், ஆகவே அதிகாரம் சார்ந்த திரள்அடையாளத்தை தங்களுடையதாக கொள்கிறார்கள். தங்கள் சொந்தக் காழ்ப்புகளைக்கூட அந்த திரளடையாளத்துடன் இணைத்துக் கொண்டுவிடுகிறார்கள். இன்று ஒரு சாதாரண மார்க்ஸிஸ்ட் எழுதிய ஒரு கட்டுரை நன்றாக இல்லை என்று சொல்லிவிடுங்கள், ஆறுமாதம் கழித்து உங்களை சங்கி என்றோ ஃபாஸிஸ்ட் என்றோ சொல்வார். மார்க்ஸிய அமைப்புகளுக்குள் செயல்படுபவர்களையே அவர்கள் ஒரு சிறு பூசலில் சங்கி என்றும் ஃபாஸிஸ்ட் என்றும் வசைபாடுவதை சாதாரணமாகக் காணலாம். சங்கி கும்பலில் ஆள்சேர்ப்பதையே பல மார்க்சியர்கள் முழுநேர வேலையாகச் செய்துவருகிறார்கள்.
ஞானியை தமிழகத்தின் மொத்த மார்க்ஸியர்களின் திரளில் இருந்து பிரித்து பிறிதொருவராக, ஒரு பேராளுமையாக நான் பார்ப்பது அவரில் இருந்து ஓயாது எரிந்த இந்த அறக்கேள்வியால்தான். அத்தகைய கேள்விகள் இல்லாதவராக இருந்திருந்தால் அவரால் எங்கேனும் ஓர் அமைப்பில் பொருந்தி ஒரு ‘பிதாமகராக’ அமர்ந்திருக்க முடியும். அவர் கடைசிக்காலத்தில் அடைந்த தனிமையை தவிர்த்துக்கொண்டிருக்கக் கூடும். அவரால் தன் ஆதாரக்கேள்வியை கைவிடமுடியவில்லை, ஏனென்றால் அதுதான் அவருடைய ஆகம். அவர் குறைந்தது என்னை கைவிட்டிருந்தால்கூட பலரை தக்கவைத்திருக்கமுடியும். ஆனால் அதே கேள்விகளை கையாண்டவன் என்றவகையில் அவரால் என்னை ஒருபோதும் நிராகரிக்க முடியவில்லை.
1995 வாக்கில் நான் ஈழப் போராட்டத்தை பற்றி ஒரு நாவல் எழுதவிரும்புவதாக அவரிடம் சொன்னேன். அது மாத்தையா கொல்லப்பட்டு அது அதிகமாகப் பேசப்பட்ட காலம். அவர் கொல்லப்பட்ட செய்தியே மிகமிகப் பிந்திதான் இங்கே உறுதியாயிற்று. அந்தக்கொலை கிட்டத்தட்ட டிராட்ஸ்கியின் கொலைக்குச் சமானமானது. ருஷ்யப்போராட்டத்தில் டிராட்ஸ்கி என்ன பங்கு வகித்தாரோ அதே பங்கை ஈழப்போரில் வகித்தவர் மாத்தையா. டிராட்ஸ்கி ரயிலிலேயே பயணம் செய்து செம்படையை உருவாக்கியதுபோல சிறுகச்சிறுக விடுதலைப்புலி அமைப்பை கட்டி எழுப்பியவரே அவர்தான். அவர் கொல்லப்பட்டதுடன் அவரால் உள்ளே கொண்டுவரப்பட்டவர்களும் முற்றாக களையெடுக்கப்பட்டனர்.
அந்த அறச்சிக்கலையே நான் எழுத நினைத்தேன். மாத்தையாவை அவர் இல்லத்தில் இருந்து அடித்து இழுத்துக் கொண்டுசென்ற சிறுவனான போராளிக்கு என்ன தெரியும்? அவன் வரலாற்றில் ஆற்றும் செயலுக்கு அவன் பொறுப்பேற்கமுடியுமா என்ன? ஆனால் ஞானி “அதை இப்போது எழுதக்கூடாது. உடனடி அரசியலை எழுதினால் அந்த நாவல் பேசும் விஷயத்திலிருந்து அதனுடைய நடைமுறைச்சிக்கல்கள், செய்திமுரண்பாடுகள் சார்ந்து பேச்சு திசைதிரும்பும். நீங்களே கூட அவ்வாறு வழிமாறி போய்விட வாய்ப்புண்டு. பேசவந்த அறச்சிக்கலை முன்வைக்கமுடியாமல் ஆகும். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி பற்றி எழுதலாம்” என்று சொன்னார்.
ஞானிதான் ஐசக் டொயிட்ஷரின் டிராட்ஸ்கி குறித்த நூல் உட்பட பலநூல்களை எனக்கு அளித்தார். அன்று மீண்டும் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி தனக்கு அளித்த ஏமாற்றம், பலநாட்கள் உணர்ந்த கைவிடப்பட்ட நிலை, எதிர்கால மார்க்சியத்தை வரையறுத்துக்கொள்வதற்கான குழப்பங்கள் ஆகியவற்றை ஞானி விரிவாகச் சொன்னார். “நீங்க எழுதினா அந்த நாவலுக்கு எதிராக இருக்கக்கூடிய தரப்பு ஒண்ணுதான். நீங்க என்ன எழுதினாலும் எத்தனை ஆதாரங்கள் எடுத்து வைச்சாலும் ஏத்துக்காத ஒரு கூட்டம் உண்டு. அவங்களுக்கு மேற்கோள்காட்ட நிறைய புக்ஸ் இருக்கு. இங்கேயே , நம்ம வீட்டிலேயே, இருக்கு” என்றார் ஞானி.
“ஸ்டாலின்மீதோ சோவிய்த் ரஷ்யா மீதோ எந்த பிழையும் இல்லை எல்லாமே அதோட எதிரிகளாலே கட்டமைக்கப்பட்ட பொய்னு வாதாடுற ஒரு மூர்க்கமான குழு இங்கே இருந்துட்டேதான் இருக்கும். இப்ப சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி என்பது கண்முன்னாடி இருக்கிறதனாலே இதைப்பற்றி அடக்கி வாசிக்கிறாங்க. ஆனால் பத்தாண்டுகளுக்குள் ஸ்டாலின் திரும்பி வருவார். ஸ்டாலின் நீங்கள் நினைப்பது மாதிரி கெடையாதுன்னும், அவர் உண்மையில் ஒரு புனிதர்னும் சொல்லக்கூடிய அறிவார்ந்த தரப்புகூட வரலாம். ஏன்னா அந்தமாதிரி வரலாற்றிலே எல்லா கொடுங்கோலர்களும் புனிதர்களா மீண்டு வந்திருக்காங்க. ஜெங்கிஸ்கானும் தைமூரும் வந்திருக்காங்க. அது மனுஷனோட அடிப்படை இயல்பு. அவன் என்னிக்குமே ஆற்றலை வழிபடுறவன். ஆற்றலோட வன்முறையும் இணைஞ்சிருக்கு. சாதாரண மக்கள் கோழைகள், அவங்க வன்முறையை வழிபடுவாங்க” என்றார் ஞானி
ஞானி சொன்னார் “அவர்கள் ஆதாரங்களை தோண்டித் தோண்டி எடுப்பாங்க. வாதங்களை திரட்டுவாங்க. அவர்களுடைய அனைத்து தர்க்க திறமைகளையும் கொண்டு அதை நிறுவ முயற்சி பண்ணிட்டே இருப்பாங்க. அவங்க கிட்ட நாம விவாதிக்கவே முடியாது. ஒருநாளைக்கு நான் எத்தனை ஸ்டாலின் ஆதரவாளர்களை பாக்கிறேன்னு நினைக்கிறீங்க? அதிலே ஆச்சரியமே இல்லை, சி.பி.ஐ காரனைக் கொன்றதை நியாயப்படுத்திய சி.பி.எம் காரன் ஏன் அதைச் சொல்லமாட்டான்? நீங்க பேசவேண்டியது வரலாற்றை ஒரு அடிப்படை அறத்துடன் அணுக நினைக்கிற அடுத்த தலைமுறையிடம்தான். வன்முறையின் அரசியல் என்ன, அரசியலில் வன்முறையின் இடமென்ன என்பதைப்பற்றி மட்டும்தான் அந்த நாவல் பேசணும்”
“நாம ஆதாரங்களை நம்பறோம். அதைத்தான் தேடிப்போறோம். ஆனா அதைவிட முக்கியமான ஒண்ணு நம்மகிட்ட இருக்கு. அதை அகச்சான்றுன்னு நான் சொல்வேன். அதைவிட சூட்சுமமா ஒண்ணு ஒருக்கு. நாம நம்மை அங்க வைச்சு லெனினாவும் டிராட்ஸ்கியாகவும் ஸ்டாலினாகவும் நின்னு அறியக்கூடிய ஒரு வழி அது. நமக்குள்ள இருக்கிற இருட்டை வைச்சு அங்க இருந்த இருட்டை நாம அடையாளம் கண்டுகொள்றோம். அதிகாரத்துக்காக நாமளும் எல்லாத்தையும் செய்யக்கூடியவங்கதான், செய்யலை அவ்ளவுதான். மனுஷனோட அதிகாரவெறி, பயம் எல்லாமே நமக்கு தெளிவா தெரியும். இது கோர்ட்டிலே ஆதாரத்தோட நிரூபிக்கிற விஷயம் இல்லை. நமக்கு உண்மை என்னன்னு நுட்பமா தெரியற அளவுக்கு நாம ஆதாரங்களை தெரிஞ்சுகிட்டாப் போதும். அந்த அளவுக்கு ஆதாரங்களை திரட்டினா போதும். எல்லாமே பொய்னு சொல்ற ஸ்டாலினிஸ்டை திருப்திப்படுத்துற அளவு ஆதாரங்களை யாராலயும் குடுத்திரமுடியாது”
அது அன்று எனக்கு மிகமுக்கியமான ஒரு வழிகாட்டிக் குறிப்பாக இருந்தது. நான் ஸ்டாலினிய ருஷ்யாவின் அதிகார ஒடுக்குமுறை, களையெடுப்புகள் பற்றிய மிகத்தெளிவான, பொதுவெளிச் சான்றுகளை மட்டுமே கருத்தில்கொண்டேன். புறவயமான ஆதாரங்களை விட இகோர் குஷேங்கோவின் ‘The Fall of a Titan’ என்ற நாவலும், குஷெங்கோவின் தனிப்பட்ட வாழ்க்கையும் எனக்கு அங்கிருந்த நிலைமையை காட்டுவனவாக அமைந்தன. புனைவில் ‘ஐயம்திரிபற’ ஒன்றை நிலைநாட்டுவதற்கான சான்றுகள் தேவையில்லை, ஆசிரியரின் அகச்சான்று நிறைவுற, அப்படைப்பை உருவாக்க தேவையான அளவுக்கு சான்றுகள் போதும் என்று உணர்ந்தேன்.
அந்நாவலை நான் முழுக்க முழுக்க குமரி மாவட்டத்தில் நான் அறிந்த சில ஆளுமைகளுடன் நிறூத்திவிடத்தான் நினைத்தேன். அவ்வாறுதான் அது தொடங்கியது. அது எழுப்பிக்கொண்ட வினாக்களூடாக மேலே சென்று ஒரு மெட்டஃபிக்ஷன் என்ற வடிவை அடைந்தது. மெட்டஃபிக்ஷன் என்ற வடிவம் விஷ்ணுபுரத்திலும் இருந்தது. மேலை எழுத்துகளுக்கு அது ஒரு புதுமையாகவும் பாய்ச்சலாகவும் இருந்திருக்கலாம், நம்முடைய புராணங்கள் போன்றவற்றில் இயல்பாக இருக்கும்வடிவம்தான் அது. பிரதிக்குள்ளேயே உருவாக்கப்படும் பிரதித்தன்மை, பிரதியை உருவாக்குவதும் கலைப்பதும அதற்குள்ளேயே நிகழ்வது. அது ஒரு மையக்கருத்தை பலகோணங்களில் அணுகுவதற்கும், ஏற்பும் மறுப்புமாக சொல்வதற்கும் மிக உகந்தது.
அந்நாவலை தேவையான தரவுகள் சேகரித்து மிகுந்த விசையுடன் எழுதி முடித்தேன். தமிழில் அது வெளிவந்தபோது எண்ணியது போல பரவலான எதிர்ப்போ விமர்சனமோ அதற்கு வரவில்லை. மாறாக ஒரு ஆழ்ந்த அமைதிதான். ஆங்காங்கே ஒன்றிரண்டு பொத்தாம் பொதுவான விமர்சனங்களே வந்தன. அந்நாவல் மார்க்சியத் தரப்பால் புறக்கணிக்கப்பட்டது, அதை படிக்கவேண்டாம் என்னும் அறிவுறுத்தலே மார்க்சிய தரப்புகளில் இருந்தது. ஆகவே பெரும்பாலும் கவனிக்கப்படாமலே அந்த நாவல் இருந்தது. அச்சில் வெளிவந்த மதிப்புரைகளே மிகக்குறைவு. ஆனால் ஒரு ஐந்தாண்டுகளுக்குப்பின் தெரியவந்தது அந்த நாவலைப்பற்றிய விவாதங்கள் நடந்திருப்பதும் ,மிக ஆழ்மான செல்வாக்கை அந்நாவல் மார்க்சியத் தரப்பில் அளித்திருக்கிறது என்பதும்
அந்நாவல் அந்தச் செல்வாக்கை உருவாக்குவதற்கான காரணம் சோவியத் ரஷ்யா மட்டும் அல்ல. அது பேசிய அந்தப் பிரச்சினைகள் அன்று மார்க்சிய அமைப்புகள் அனைத்திலுமே இருந்துகொண்டிருந்தவைதான். அதன்பின் பல ஆண்டுகள் கழித்து டபிள்யூ.ஆர்.வரதராஜனின் சாவு உட்பட பல தருணங்களில் அந்நாவல் பேசிய அதே பிரச்சினைகளும் உணர்வுநிலைகளும் அப்படியே மீண்டும் நிகழ்ந்ததை நாம் காணலாம். எளிமைக்கே உதாரணமாக சுட்டப்பட்ட நிருபன் சக்கரவர்த்தி முதல் மார்க்ஸிய அறிஞரான சோமநாத் சட்டர்ஜி வரை பின்தொடரும் நிழலின் குரலின் கே.கே.எம்மின் கதையே திரும்பத்திரும்ப நிகழ்ந்தது. முதியவர்களை வசைபாடி, அவர்களின் நெடுங்கால சாதனைகளைக்கூட மறந்து, ஒதுக்குவது என்பது என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் இயல்புகளில் ஒன்று. கே.கே.எம்முடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் இருக்க வாய்ப்புகிடையாது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலர் மதங்களில் சென்று சரணடைவது கண்கூடாக நடந்துகொண்டிருந்தது. புரட்சியின் முகமாக அறியப்பட்ட கே.ஆர்.கௌரியம்மா அவதூறு செய்யப்பட்டு கண்ணீருடன் குருவாயூரப்பனை சரணடைந்த காட்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. அந்நாவல் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான் என்.எஃப்.பி.டி.இ என்னும் இடதுசாரித் தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிய பிதாமகராகிய ஓ.பி.குப்தா அவதூறுசெய்யப்பட்டு அகற்றப்பட்டார். அவர் தொழிற்சங்க ஊழியர்களுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதம் கே.கே.எம். நீக்கப்படும் காட்சியை எழுதும்போது என் மேஜைமேல் இருந்தது. பின்தொடரும் நிழலின் குரல் எதையும் கற்பனையாக உருவாக்கவில்லை. அந்நாவலில் வரும் தொழிற்சங்க, கட்சிச் சூழல் என்பது நூற்றுக்கு நூறு நடைமுறை சார்ந்தது, இன்றும் அந்நாவலின் ஆற்றலாக இருப்பது அந்த யதார்த்தம்தான்.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி, அதன் விளைவாக உருவான மனச்சோர்வு, அதிலிருந்து மீண்டும் தன்னை திரட்டிக்கொள்ள சோவியத் ரஷ்யாவை சாராமல் ஒரு மார்க்சியத்தை உருவாக்கிக்கொள்ள இங்குள்ள மார்க்சியர்கள் எடுக்கும் அறிவார்ந்த முயற்சி ஆகியவை அந்நாவலில் உள்ளது. சோவியத் ரஷ்யாவைப்ற்றி அந்நாவலில் உள்ள ஒவ்வொன்றும் தெளிவாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அபூர்வமான நுட்பமான உண்மைகளை எல்லாம் தேடிச்சென்று பதிவு செய்யவேண்டியதில்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்ட, பனியுருகல் காலகட்டத்தில் சோவியத் ருஷ்யாவிலேயே வெளிப்படையாக பேசபட்ட, செய்திகளை மட்டுமே அந்நாவலில் கூறியிருந்தேன். ஞானி சொன்னதுபோல, அந்த தகவல்கள் சரியா தவறா என்ற விவாதம் எழலாகாது; அந்த உளவியல் பின்புலம் சார்ந்து மட்டுமே நாவல் விவாதிக்கப்படவேண்டும் என்பது என்னுடைய எண்ணம்
ஞானி பின்தொடரும் நிழலின் குரல் பற்றிய சாதகமான பார்வையை முன்வைத்து விவாதித்தது அன்றைய இயந்திரவியல் அணுகுமுறை கொண்டவர்களை கொதிக்கச் செய்தது. 1992ல் சோவியத் ருஷ்யா வீழ்ச்சி அடைந்ததும் இடதுசாரிக்குழுக்களில் ஒரு விந்தையான திரிபு நடந்தது. அன்றுவரை புரட்சி பேசிக்கொண்டிருந்த முற்போக்காளர்களில் ஒருசாரார் சென்று பாட்டாளி மக்கள் கட்சி போன்ற இடைநிலைச்சாதிக் கட்சிகளில் சேர்ந்துகொண்டார்கள். சர்வதேசியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று தமிழினவாதம் பேச ஆரம்பித்தனர். மார்க்சியர்களாக எஞ்சியவர்கள் இதற்குரிய மனமில்லாமல் மார்க்ஸியத்தை மதநம்பிக்கை போல கொண்டவர்கள், இயந்திரவாதமே அவர்களின் பார்வை
ஞானி பின்தொடரும் நிழலின் குரலை ஆதரித்தமைக்காக நிறைய வசைபாடப்பட்டார். அவர் அந்நாவல் மார்க்ஸிய எதிர்ப்பு நாவல் அல்ல, மார்க்ஸியவாதிகள் பேசிய ,பேசவேண்டிய அனைத்துத் தரப்புகளையும் அந்நாவல் சீராக, கோவையாக எடுத்து முன்வைக்கிறது என்றார். ஆயுதப்புரட்சி என்ற முதிராத கற்பனாவாதத்தில் இருந்து கருத்தியல் செயல்பாட்டினூடாக புரட்சி என்னும் மேலும்பெரிய கனவை அந்நாவல் ஆணித்தரமாகச் சொல்கிறது. மார்க்ஸியம் அழிவற்றது, அது தன் அறவியலை மறுஅமைப்பு செய்துகொண்டால் வெல்லமுடியாதது என்றே அந்நாவல் பேசுகிறது என்று சொன்னார். மார்க்ஸிய அமைப்புகளின், மார்க்ஸிய அதிகாரத்தின் சிக்கலைப் பற்றிப் பேசும் அந்நாவல் மார்க்ஸிய தத்துவம், மார்க்ஸிய மெய்யியலில் எந்த குறையையும் சுட்டிக்காட்டவில்லை என்றார்
அவ்வண்ணம் அதை எதிர்க்கவேண்டும் என்றால்கூட அதில் உள்ள விமர்சனங்களை எடுத்துக்கொண்டு, அதில் ஒவ்வாத விஷயங்களை விவாதிக்கலாம், மார்க்சியர் அந்நாவலுடன் ஒரு விவாதத்தை மேற்கொள்ளவேண்டும் என்று ஞானி சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அவ்வண்ணம் ஒரு சிக்கலான விவாதத்தை மேற்கொள்வதெல்லாம் இயந்திரவாத மார்க்ஸியர்களின் இயல்பல்ல, அவர்கள் வெறுப்பின் அடிப்படையிலேயே விவாதிக்கமுடியும்.
அப்போது தன்னிடம் பேசவந்த ஒரு மார்க்ஸியரிடம் ஞானி சொன்னார். “நீங்க இடுப்பிலே ஸ்டாலினை வைச்சுக்கிட்டு எதையுமே பேசமுடியாது தோழர்”. அவர் “ஸ்டாலின் இல்லேன்னா லெனினே இல்லை. அப்பவே புரட்சி அழிஞ்சிருக்கும்”என்றார். “ஆமா, லெனின்கிட்டயும் டிராட்ஸ்கி கிட்டேயுமெல்லாம் கொஞ்சம் ஸ்டாலின் உண்டு. ஆனால் ஸ்டாலினிலேதான் ஸ்டாலினிஸம் வெண்ணை மாதிரி திரண்டு வந்திச்சு. நாம அதை அடையாளம் கண்டாச்சே, ஏன் அதை எடுத்து வீசிட்டு ஒரு மார்க்ஸியத்தைப் பத்தி யோசிக்கக் கூடாது?” அதை ஞானி என்னிடம் சொல்லிவிட்டுச் சொன்னார் “ஸ்டாலின் இல்லாத மார்க்ஸியம்னா அது பல்லும் நகமும் இல்லாத புலி மாதிரின்னு அவர் சொன்னார். அவங்க மார்க்சியத்தை விரும்புறாங்களா வன்முறையை விரும்புறாங்களான்னு அவங்களாலெயே சொல்லிடமுடியாது”
அந்நாவல் வெளிவந்தபோது விடியல் சிவா அதை ‘பின்தொடரும் நாயின் குரல்’ என விமர்சித்தார் என்று அறிந்தேன். அவர் இத்தனைக்கும் இடதுசாரி அமைப்புகளில் இருந்து பலவகையிலும் ஏமாற்றம் அடைந்து வெளியேறியவர். அதில் சொல்லப்பட்ட எதையும் அவரால் மறைக்கமுடியாது. அந்நாவலை வெளியிட்ட தமிழினி வசந்தகுமாரின் நண்பரும்கூட. “அந்தாளை எங்க பாத்தாலும் அடிப்பேன்”என்று அவர் சூளுரைத்ததாக அறிந்தேன்.நான் அவ்வாண்டு கோவையில் ஒரு புத்தகக் கண்காட்சியில் அவரைக் கண்டேன். “எங்க பாத்தாலும் அடிப்பேன்னு சொன்னீங்களாமே”என்று கேட்டேன். அவர் தர்மசங்கடத்துடன் புன்னகைத்தார். “நாவலை நீங்க வாசிச்சீங்களா?”என்றேன். “அந்தக்குப்பையை நான் எதுக்கு வாசிக்கணும்?”என்றார். “சரி விடுங்க… ஒரு டீயைப்போடுவோம்”என்றார் வசந்தகுமார். விஷயம் இனிதே முடிந்தது.
அன்றும் இன்றும் இயந்திரவாத அணுகுமுறை கொண்ட, இலக்கிய பிரதிகளை வாசிக்கும் மனநிலையோ அகப்பயிற்சியோ அற்ற கும்பலுக்கு அது ஒரு மார்க்ஸிய எதிர்ப்பு நாவல் என்று ஒரு சித்திரம் தோன்றும். அடிப்படையில் மார்க்சியத்தை அந்நாவல் நிராகரிக்கவில்லை. மார்க்சியத்தின் வற்றாத படைப்பூக்கத்தை அந்த நாவல் கூறிக்கொண்டேதான் இருக்கிறது. அது ஒரு கொள்கை,உறுதியான கருத்தியல் உருவாக்கும் வன்முறை குறித்து மட்டுமே பேசுகிறது. அது தீவிரமான நம்பிக்கையை உருவாக்குவதனாலெயே வன்முறையையும் உருவாக்குகிறது. அந்த வன்முறையானது தனக்கான வளர்ச்சிப்போக்கு கொண்டு அந்த அடிப்படைக் கருத்துக்கே எதிராகச் செல்வது எப்படி என்று அந்நாவல் விளக்குகிறது. ஒரு மகத்தான கனவு உயிர்ப்பலிகொள்ள தொடங்குமெனில் அவ்வுயிர்ப்பலியின் பழியை அக்கனவு ஏற்றுக்கொள்கிறது, அக்கனவு தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறது என்று அது பேசுகிறது.
எழுபதுகளில் உலகெங்கும் நிகழ்ந்த தோல்வியடைந்த புரட்சிகளின் நினைவுச்சுமையும், புரட்சி வென்ற கம்போடியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த பெரும் ஒடுக்குமுறைகளின் பழிச்சுமையும்தான் மார்சியத்தை அரசியல்களத்தில் வீழ்த்தியது என்ற வரலாற்றுப்புரிதல் சற்றேனும் உள்ளவர்களுக்கு அந்நாவல் எதைப்பேசுகிறது என்று தெரியும். அதிலிருந்து ஒரு புதிய வரலாற்றுப் பார்வையாகவும், கூரிய அறவியலாகவும், ஒட்டுமொத்த மெய்யியலாகவும் மார்க்சியம் மீண்டெழுவது குறித்த வலுவான சித்திரமும் அந்நாவலிலேயே உள்ளது. மார்க்சியத்தை ஓர் எளிமையான பள்ளிப்பாடமாக மாற்ற முயலும் இயந்திரவாதிகளுக்குரியதல்ல அந்நாவல், அவர்களை நோக்கி அந்நாவல் பேசவில்லை. இன்னும் நெடுங்காலம் வருந்தலைமுறைகளிடம் கருத்தியலின் வன்முறை குறித்து அந்நாவல் பேசும்.
மார்க்சியக் கருத்தியல் என்று அல்ல, எக்கருத்தியலும் ஒற்றைப்படையாகும்போது, மூர்க்கமடையும்போது, வன்முறை நோக்கி செல்லும்போது, அழிவுச்சக்தியே என்று அந்நாவல் கூறுகிறது. ஒன்று உணரவேண்டும், இன்று ஒற்றைப்படை மூர்க்கத்துடன் எந்தக் கருத்தியலை எவர் பேசினாலும் அவர் சோவியத் ருஷ்யாவிலும் உலகமெங்கும் கருத்தியல்சார்ந்து பேரழிவுகளை, படுகொலைகளை நிகழ்த்தியவர்களுக்கு இணையானவரே, இவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவ்வளவுதான்
[மேலும்]