சென்னை அருங்காட்சியகத்தைப் பார்க்கச் சென்றது தப்பில்லை; ஆனால் அருகே எவரோ ஒருவர் பெயிண்ட் அடிப்பவர் கையைத்துடைத்த துணிபோல அசப்பில் தென்பட்ட சில கித்தான்களை இழுத்து கள்ளிப்பெட்டிச் சட்டத்திலே கட்டி கீழே ‘ஓவியக் கண்காட்சி’ என்று எழுதி வைத்திருந்ததைக் கண்டு ஒரு மெல்லிய சபலத்துக்கு ஆளாகி அந்த பழைய சிவப்புக் கட்டிடத்திற்குள் நுழைந்து, ஆளே இல்லாமல் ஓவென்று கிடந்த பெரிய கூடத்தில் சுவரில் வரிசையாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய [ஆமாம் பெயிண்ட் அடிப்பவர் இரண்டு கைகளையும் முகத்தையும் துடைத்ததுபோன்ற] கித்தான்களை பார்த்தபடி வாய்திறந்து நின்றதுகூட அவ்வளவு பெரிய தப்பில்லை; முன்னரே பல அனுபவங்கள் இருந்தும்கூட, நீளமாக வளர்த்து இடைவரை தொங்கிய கூந்தலும் நெடுக்காக இழுத்து நீட்டப்பட்ட முகத்தில் இருபுரித்தாடியும் கொண்ட, தடித்த சில்லுக்கண்ணாடியும் மெலிந்த தோல்களில் துணித்தொங்கியில் என மாட்டப்பட்டிருந்த நீளமான கல்கத்தா ஜிப்பாவும் கால்கள் மட்டுமே தெரிந்த ஜீன்ஸும் கோலாப்புரி சப்பலும் அணிந்த, மர்மநபரைக் கண்டதும் அப்படியே திரும்பி எதையோ நினைவுகூர்வது போலவோ, செல்பேசி அழைப்பு கிடைக்கப் பெற்றவன் போலவோ வெளியே ஓடி தப்பிக்காமல் நின்று அவர் வணக்கம் சொன்னதும் பதில் வணக்கம் சொல்லி பலவீனமாக புன்னகை செய்தது மாபெரும் தப்பு.
அவர் என் போன்றவர்களை ‘கையாளக்’ கற்றவர். நான் ஓவியங்களை பார்த்து, ஆழ்ந்த பாவனை ஒன்றை முகத்தில் தேக்கி, தத்துவார்த்த கனத்தால் கால்கள் மெல்ல தரையில் உரசி ஒலிக்க, நடந்தபோது உடன் நடந்தபடி அமைதியாக கூடவே வந்து ஓர் இடத்தில் ஆழமாக நீள்மூச்செறிந்து, ‘ப்ச’ என்றார். நான் அவர் காலை மிதித்துவிட்டேன் என்று நினைத்து திகைத்து சற்று அப்பால் நகர்ந்து ‘ஸாரி’ என்றேன். அவர் என்னை அனுதாபத்துடன் பார்த்தபின் அந்த ஓவியத்தை நிமிர்ந்து பார்த்து மூக்குக் கண்ணாடியை மேலே தூக்கிவிட்டு தாடியை பற்றி கசக்கி நீவியபடி “ஆங்ஸ்ட்” என்றார். ஏன் அதைச் சொன்னார் என்று தெரியவில்லை. நான் “ஆமாம்” என்றேன். “கொஞ்சம் எலாங்கேட்டட், பட் ஓக்கே” என்றார். எதை என்று தெரியாமல் நான் மீண்டும் பார்த்துவிட்டு “எஸ்” என்றேன். “காண்ட்ராஸ்டிங்கினாலே தப்பிச்சது” என்றார். “எஸ்” என்றேன், நமக்கு எதுக்கு வம்பு? பாவப்பட்ட தமிழ் எழுத்தாளன்.
“இவரோட ஆப்டிமைஸிங் பார்த்திருக்கிறீங்களா?” என்றார். நான் அதை சொல்மாறி புரிந்துகொண்டு “கிறிஸ்டியனா மாறிட்டாரா?” என்றேன். அவர் பரிதாபமும் அன்பும் கலந்த புன்னகையுடன் “எக்ஸிஸ்டென்ஷியல் கிரைஸிஸுக்கு எப்பவுமே ப்ளூ டோன் ஒத்துவருது. அஸிம்மட்ரிக்கல் ஃபிகர்ஸை கர்வாசியஸா வைச்சு நெகெட்டிவ் ஸ்பேஸை கொஞ்சம் ஆல்டர் பண்ணினா அது எக்ஸ்பிரஸிவா ஆயிடுது” நான் பீதியடைந்து வாசலைப் பார்க்க அவர் அனுதாபத்துடன் “ஆக்சுவலி, இந்த ஃபிகர்ஸ் எல்லாமே ஸ்டக்சுரலி கியூபிஸ்ட் டென்டென்ஸியோட இருந்தாலும் சர்ரியலிஸ்ட் ஃபீச்சர்ஸ் கொண்டவைன்னுதான் சொல்லணும். ஏன்னா…” என்றார். நான் பெருமூச்சுவிட்டேன். அவர் அதை தொடராமல் “நீங்க எந்தெந்த ஓவியர்களை பாத்திருக்கீங்க?” என்றார்.
நான் இதென்ன என்று தடுமாறி “நெறைய பேர்” என்றேன். “ஓ, நான் அதைச் சொல்லலை. ஓவியங்களோட பிரிண்ட்ஸ் பாக்கிறது நான்சென்ஸ். நான் சொல்றது ஒரிஜினல்…” என்றார். நான் “அதாவது, நான் அமெரிக்கா போனப்ப டாலியோட” என்றேன். “லீவ் ஹிம்… ஹி இஸ் டெட். செத்துப்போயிட்டார்” என்றார் தாடிக்காரர். நான் “ஆமாமா, பட் இப்ப பிக்காஸோ கூட…” என்றேன். “ஸீ ஹி இஸ் ஆல்ஸோ டெட்” நான் குழம்பி ”எஸ்,எஸ்” என்றேன். துரதிருஷ்டவசமாக சாகாத எந்த ஓவியர்களும் நினைவுக்கும் வரவில்லை. ஆதிமூலம் செத்துவிட்டார், டிராட்ஸ்கி மருது ஓவியரா இல்லை படம் வரைபவரா? வெளியே செல்லும் வழி மிகமிக அப்பால், நாலைந்து நாள் நடைக்கு அப்பால் என, தெரிந்தது.
“அதாவது ஒண்ணுமே பாத்ததில்லை?” என்று புன்னகைத்தார். “அதனாலே என்ன? பரவாயில்லை. சொல்லப்போனா பாக்காம இருக்கிறதுதான் நல்லது. உங்களைப் போன்றவர்கள்தான் எனக்கு வேணும்”. திகிலுடன் மீண்டும் வெளியேறும் வழியை பார்த்தேன். என்ன செய்வார்? ஏதாவது நரபலிச் சடங்குகள்? இந்த கேஸ்கள் எதையும் செய்பவை. நான் “அப்ப நான் கிளம்பறேன். எனக்கு ஃப்ரண்டு பைக்கோட…” என்றேன். “இருங்க, என்ன இப்ப?” என்று நட்பான புன்னகையுடன் சொன்னார். “நான் சொல்ல வர்ரது என்னன்னா, இப்ப நியோஃபிகரட்டிவ் ஆர்ட்னா என்ன?”. நான் விழித்துப் பார்த்தேன். “சொல்லுங்க” என்றார். எச்சில் விழுங்கி “தெரியாது” என்றேன். “தெரியாது! நைஸ் ஆன்ஸர்!” என்று புன்னகைத்து தாடியை தடவி “நான் சொல்லவந்தது அண்டோனியோ பெர்னியைப்பத்தி. டெஸோகுபடோஸ் பாத்திருக்க மாட்டீங்க” நான் நெஞ்சடைக்க “இல்லை” என்றேன்
“நினைச்சேன்” என அவர் புன்னகை செய்தார். “ஆக்சுவலா ஸ்பேஷியலிஸம் பத்தித்தான் நாம பேசணும்… லூஸியோ ஃபண்டானா என்ன சொல்றான்னா…” என்று தாடியை கசக்கி “அதை விடுங்க… நான் சொல்ல வந்தது, இந்த ஓவியர் இதிலே என்ன சொல்லவர்ரார்னு… இதை நாம ஏன் லே ஆட்டோமாட்டிஸ்டஸ்னு சொல்லக்கூடாது?” நான் “அப்டி மரியாதைக் குறைவா சொல்லப்போனா…” என இழுக்க அவர் “அங்கதான் நான் வேறமாதிரி சொல்றேன். இது கண்டிப்பா டிரான்ஸ்வான்கார்டியா இல்ல. அப்ப என்ன?” என்றார். நான் “என்ன?” என்றேன். “அது வரைஞ்சவனுக்குத் தெரியும்”. நான் “வரைஞ்சவன் யாரு?” என்று ஓவியத்தை நோக்கி குனிந்தேன். “நாந்தான், பை த வே, என் பேரு சமூஸ்”. நான் “சமூஸா” என்று சொல்லப்போய் நிறுத்திக்கொண்டேன்.
“ஆக்சுவலி எண்பதுகளிலே ராபர்ட் கோம்பாஸ் ஃபிகரேஷன் லிப்ரேவை தொடங்கின அதே ஆண்டிலேதான் நான் கும்பகோணம் பக்கத்திலே ஒரு கிராமத்திலே பிறந்தேன்” என்றார். “நான் படிச்சதெல்லாம் கும்பகோணம் ஆர்ட்ஸ்கூலிலேதான்… எதுக்குச் சொல்றேன்னா… சரி விடுங்க. நான் எளிமையா, டவுன் டு த எர்த்தா சொல்றேன். உங்களை மாதிரி சாமானியர்கள்தான் இன்னிக்கு மாடர்ன் பெயிண்டிங்குக்குள்ள வரணும். நம்ம இந்திய ஓவியத்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு. அது உங்களை மாதிரி பாமரஜனங்களிலே இருந்து வரணும். ஆக்சுவலி ஓவியத்தை பாக்கிறதுக்கு கண்ணு மட்டும் போரும், மண்டை தேவையில்லை, கண்ணை பதிச்சுவைக்கிற ஒரு உருண்டைதான் மண்டை… ஹாஹாஹா!”
“ஆனா இந்த ஓவியத்தைப் பார்த்தா கெஸ்டால்ட் தியரிப்படி இதோட ஸ்பேஸை கொஞ்சம் குறைச்சிருக்கலாம்னு படுது” என்றேன். அவர் திகைத்து “ஆமா, பட்…” என்றார். “அதைத்தான் சொல்ல வர்ரேன், ரோலான் பார்த் என்ன சொல்றார்னாக்க ஆதர் ஈஸ் டெட்னு சொல்றார். அதாவது ஒரு வர்க் ஆஃப் ஆர்ட்டுக்கு ஆதரே கெடையாது. ஆதர் இல்லேன்னா வரையறது யாரு?” அவர் “எஸ், வரையறாங்க” என்று பொதுவாகச் சொன்னார். நான் உற்சாகமாக “அதைத்தான் ழாக் தெரிதா சொல்றார், ஆர்ட்டோட ஆதர் சொசைட்டிதான்னு. ஆன் கிரமட்டாலஜி வாசிச்சிருப்பீங்க” அவர் தடுமாறி “ஆமா” என்றார். “கண்டிப்பா நீங்க இன்னொருவாட்டி வாசிக்கணும்… ஆனா பிரான்ஸிஸ் ஃபனான் சொசைட்டின்னா என்னான்னு கேக்கிறார்… கிளாட் லெவிஸ்ட்ராஸ் சேவேஜ் மைண்டிலே என்ன சொல்றார்னா சொசைட்டின்னா அது ஒரு கலெக்ஷன் ஆஃப் ஐடியாஸ் தான்னு சொல்றார். ஆனா ஐடியாஸ்லாம் டோட்டம் வடிவிலே இருக்கு.”
“எஸ் அஃப்கோர்ஸ்” என்று அவர் தடுமாறி திரும்பி வெளியேறும் வழியை பார்த்தார். “நல்லா கவனியுங்க, உங்களுக்கு இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். எய்ட்டீஸிலேயே எஸென்ஷியலிஸம் காலாவதியாயாச்சு. அதுக்கு எதிரா விட்கென்ஸ்டீனோட அடிகள்லாம் விழுந்தாச்சு. அப்பதான் புதிசா ஃப்ராக்மெண்டலிசம்னு ஒண்ணு வருது. அதோட இம்பாக்ட் என்ன?” அவர் நெஞ்சடைக்க “என்ன?” என்று கேட்டார். “சொல்றேன், முடிஞ்சவரை ஈஸியா சொல்றேன். ஆக்சுவலா போஸ்ட்மாடர்னிஸம் ஃபர் டம்மீஸ்னு ஒரு புக் இருக்கு. நீங்க படிச்சுப்பாக்கலாம். ஹைபர்ரியாலிட்டி பற்றி ஹேபர்மாஸ் என்ன சொல்றார்?”
“என்ன?” என்று அவர் ஈனஸ்வரத்தில் கேட்டார். “நெறையச் சொல்றார். உங்களுக்குப் புரியற மாதிரி எப்டிச் சொல்றதுன்னு தெரியல்லை. போஸ்ட்ஸ்ட்ரக்சுரலிசம் இன் தௌசண்ட் வேர்ட்ஸ்னு ஒரு புக்கு. மதன் சரூப்னு நம்மாளு ஒருத்தர் எழுதியிருக்கார். ரொம்ப ரொம்ப சிம்பிள் புக்கு, எந்த மடையனுக்கும் புரியும், நீங்க படிச்சுப்பாக்கலாம். பட் நான் அதை அட்வகேட் பண்ணமாட்டேன். உங்களை மாதிரி பெயிண்டர்ஸ்லாம் ஒண்ணுமே தெரியாம இப்டி குழந்தைமாதிரி இன்னஸண்டா இருக்கிறப்பதான் ஆர்ட்டே வருது. ஆக்சுவலி ஆர்ட் இஸ் கமிங் ஃப்ரம் இக்னரன்ஸ்னு சொல்லியிருக்காரு” என்றேன். “யாரு?” என்றார். “நான்தான்” என்றேன். “என்பேரு ஜெயமோகன், தமிழ் ரைட்டர்” அவர் குரல் தழுதழுக்க “கிளாட் டு மீட் யூ!” என்றார். கைகுலுக்கியபோது அவருடைய கைகள் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன.
அப்பால் ஜீன்ஸும் கிழிந்த ஜிப்பாவும் அணிந்து செம்பட்டை தலையுடன் ஒரு பெண் வந்து நின்று “மாணிக்” என்றாள். “எக்ஸ்யூஸ்மி…” என்று என்னிடம் புன்னகைத்து “கமிங்” என்று அவளிடம் சொல்லி மீண்டும் என்னிடம் “லெட் அஸ் மீட் எகெயின்… நெறைய பேசுவோம்…பை” என்று விரைந்து ஓடினார். பாவம், நல்ல மனிதர் என்று நினைத்துக்கொண்டேன்.
***