மணிபல்லவம் கதையை வாசித்து பலநாட்களாகின்றன. நேற்று ஒரு கனவு. நான் மாயவரம் மனோரா அருகே கடலோரமகா நிற்கிறேன். நிலவில் கடலில் மணிபல்லவம் எழுந்து தெரிவதைக் காண்கிறேன். சுற்றி நின்றவர்களிடம் கூவி கையை ஆட்டி அதை சுட்டிக்காட்டுகிறேன். எவருக்குமே தெரியவில்லை
அந்தக்கதை எத்தனை ஆழமாக மனதில் பதிந்திருக்கிறது என்ற திகைப்பு ஏற்பட்டது. அந்தக்கனவு நம் மனதில் ஏற்கனவே இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் அது வருகிறது. அந்த இடம் நம்மால் சென்று தொடமுடியக்கூடியதுதான்
ராஜேஷ் மகாதேவன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
நமது ஆழ்மனம் ஒரு மாபெரும் கடல். அதன் ஆழத்தில் தன் உணர்வு தோன்றியது முதல், ஏன் அதற்கு முன்பிருந்த ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இக்கணம் வரை உணரப்பட்ட மற்றும் உணரப்படாத அனைத்தும் புதைந்து கிடக்கிறது. தகுந்த குருவின் வழிகாட்டுதலின்றி அதன் ஆழத்தில் இறங்கி முத்தெடுத்து மேலே வருவது மிகவும் கடினம். அதன்றி தன்னந்தனியே தன் உணர்வு எனும் ஆழிப்பேரலையில் சிக்கி ஏதேனும் ஓரு கணத்தில் தனதான சொல்லைப் பெற்றாலும் அதை தனது இயல்பு நிலையிலும் அனுபவிப்பது எளிதல்ல. அந்த தன் உணர்வற்ற நிலையை தேடி அலையும் பித்து நிலை கூட சிலருக்கே சாத்தியம். முற்றிலும் தன்னை தானறியாத ஒன்றுக்கு முழுதாக ஒப்புக்கொடுப்பதே கடைத்தேறுவதற்கான வழி.
நெல்சன்
அன்புள்ள ஜெ
முதலாமன் கதையை ஒரு குழந்தைக்கதையாக என் பிள்ளைகளிடம் சொன்னேன். இரண்டுபேருமே சின்னப்பிள்ளைகள். ஆச்சரியமாக அந்த முதலாமனை பறவைகொண்டுபோனதை அவர்கள் ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டதாகத் தோன்றியது. அவர்கள் அந்த முதலாமனாகத்தான் தன்னை நினைத்துக்கொண்டார்கள் என நினைத்தேன். நீங்கள் முதலாமனாக ஆகவேண்டுமா அல்லது மற்றவர்கள்போல தப்பிவிடவேண்டுமா என்று கேட்டேன்.
இரண்டுபேருமே முதலாமனாகத்தான் ஆகவேண்டும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்தப்பறவையை ஜெயிக்கவேண்டும், அல்லது அதை சொல்லிப்புரியவைக்கவேண்டும். ஆனால் முதலாமனாக இல்லாமல் கோழையாக இருக்க குழந்தைகளுக்கு பிரியமில்லை. அதுதான் மனிதகுலத்தை வாழவைக்கும் உணர்ச்சி என்று எண்ணிக்கொண்டேன்
முகுந்தராஜ்
***
அன்புள்ள ஜெ,
கதைகள் கடல்போல நிலத்தைச் சூழ்ந்திருக்கின்றன. அவை தெய்வங்கள் வகுத்த எல்லையை தாண்டுவதில்லை. ஆகவேதான் நிலம் வாழ்கிறது. நிலத்திலிருந்து எல்லாமே கடலுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. கடலில் இருந்து மழைமட்டுமே வருகிறது.ஆனால் எப்போதாவது பேரலை எழுந்து வந்துவிடுகிறது. எல்லா எல்லைகளையும் கடல் மீறிவிடுகிறது.
இதை மீள மீள யோசித்தேன். கதைகளை இதை விட எப்படி விளக்க முடியும். இந்த ஒரு பத்தியை மட்டும் என் 10 வயது மகனிடம் சொன்னேன், அவன் அதை பற்றி ஆழ்ந்து யோசித்து “ஆமாம்பா” என்று சொல்லி அவன் படித்த கதைகளை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
நன்றி ஜெ இந்த அனுபவத்திற்கு.
ஜெய்சங்கர்
***