காதலின் மதிப்பு

காதல் ஒரு கடிதம்
காதல் -கடிதம்

ஒரு வாசகி எழுதிய கடிதத்திற்கான பதில் இது. அவர் இஸ்லாமியர், அவரைக் காதலித்த இந்து இளைஞர் கடைசிநிமிடத்தில் மனம் மாறி உறவை மறுத்து ஓர் இந்துப்பெண்ணை மணந்துகொண்டதைப் பற்றியும், தான் அடையும் வெறுமையைப்பற்றியும் எழுதியிருந்தார். இருவருமே என் வாசகர்கள் என்று சொன்னார். நான் எழுதிய கடிதம். ஒருவேளை சொன்னதையே திரும்பச் சொல்கிறேன் என்று தோன்றுகிறது, ஆனால் எப்போதும் இதற்கான பதில் ஒன்றே

அன்புள்ள என்,

உங்கள் கடிதம் கண்டேன். எனக்கு இதற்கு அழுத்தமான தெளிவான பதிலைச் சொல்லத்தெரியவில்லை. ஏனென்றால் உங்க்ள் உணர்ச்சிகளின் தீவிரத்தை நீங்களே உணரமுடியும். மற்றவர்களெல்லாம் வெளியே இருக்கிறார்கள். அவர்கள் தர்க்கபூர்வமாகவே பதில்சொல்வார்கள்.

தர்க்கபூர்வமாக என் பதிலைச் சொல்கிறேன். காதல், அதன் பரவசங்கள் எல்லாம் வாழ்க்கையில் முக்கியமானவை. அந்தந்தப் பருவத்திற்குரிய களியாட்டுகள் அவை. ஆனால் அவை வாழ்க்கையின் ஒரு சிறிய அங்கம் மட்டுமே. எவருடைய முழுவாழ்க்கையும் காதல், ஆண்பெண் உறவு ஆகியவற்றுக்கானது மட்டும் அல்ல. ஏன் குடும்பமே கூட ஒருவரின் வாழ்க்கையில் ஒரு சிறுபகுதி மட்டுமே. அதற்காக மொத்த வாழ்க்கையையும் பணயம் வைக்கலாகாது

முழுவாழ்க்கைக்கும் அர்த்தம் அளிப்பது வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒன்றாகவே இருக்கமுடியும். அது உயர்ந்த இலட்சியங்களும் அறிவார்ந்த தேடல்களும் மட்டுமே.அப்படி ஒன்று ஒருவருக்கு இல்லை என்றால் அவர் வாழ்க்கையின் வெறுமையை மிகச்சில ஆண்டுகளிலேயே உணரத் தொடங்குவார். ஒன்றை அடைவதுவரை தவிப்பும் அடைந்ததுமே கடந்துசெல்லுதலும் வாழ்க்கை முழுக்க நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்க்கை அவ்வாறு பலவற்றை அடைவதற்கானது அல்ல. நாம் நம்மை பலவகையிலும் பண்படுத்தி, மேம்படுத்திக்கொண்டு செல்வதற்குரியது. அதற்கே இலட்சியங்களும் தேடல்களும் உதவுகின்றன.

அப்படி ஒரு இலட்சியமோ தேடலோ இல்லை என உண்மையில் உணர்ந்தால் உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பதே பதிலாகும். இலட்சியங்கள் என்பவை செயல்படுவதற்குரியவை. தேடல் என்பது அறிவுசார்ந்தது. நீங்கள் யார், எதைச்செய்தால் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைந்தீர்கள் என்பதைக்கொண்டு அதை முடிவுசெய்யுங்கள்.இச்சொற்கள் ஒரு ஞானஉபதேசம்போல அயலாக ஒலிப்பதை நான் அறிவேன், ஆனால் இதை முழுக்கமுழுக்க உணர்ந்து உண்மையாகவே சொல்கிறேன். நீங்கள் கொஞ்சம் கழித்து உணரக்கூடும்.

உங்கள் விஷயத்துக்கே வருகிறேன். நீங்கள் மணம்புரிந்துகொண்டால் உங்கள் காதலர் மதம் மாறாமல் வாழ்வது எளிதல்ல. அது வாழ்க்கை முழுக்கவே நீடிக்கும் ஒரு சவால். மொத்த வாழ்க்கையையே அதற்காகச் செலவிடவேண்டும். கண்ணுக்குத்தெரியாத அமைப்புகளுடனெல்லாம் போரிடவேண்டும். ஒருவரை மணந்து ஒரு குடும்பத்தை அமைப்பதற்காக அந்தப் போராட்டம் தேவையா? அது ஒருவகை வீணடிப்பு அல்லவா?

உறுதியுடன், அதையே ஓர் இலட்சியமாகக் கொண்டு ஒருவர் அம்முடிவை எடுப்பாரென்றால் அது வேறு. அதை வரவேற்பேன்.ஆனால் அவர் அதற்குத் தயாராக இல்லை, அஞ்சுகிறார் என்றால் அந்த அச்சம் நியாயம்தானே? திருமணத்துக்குப் பின் அவர் இந்த அச்சத்தை அடையத் தொடங்கினால், எல்லாம் வீண் என எண்ண ஆரம்பித்தால் அது எத்தனை பொருளற்றது.

ஆகவே இது கடந்துபோகட்டும். இதைக் கடப்பது மிகமிக எளிது. எதையாவது செய்து எதையாவது எண்ணி ஒருமாதத்தை கடத்திவிட்டால்போதும். காலம் சென்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு உணர்வும் நினைவும் பழையதாக ஆகும். பழைய உணர்வும் பழைய நினைவும் நஞ்சு அற்றவை. இன்னும் கொஞ்சம் காலமானால் ஒர் அசட்டுத்தித்திப்புகூட அவற்றுக்கு உருவாகிவரும். அந்த நிகழ்வின் மையத்தை நியூக்ளியசை கடந்துசெல்வது மட்டுமே சிக்கல்.இப்போது அது பெருந்துயராக, திசையறியா சுழியாகத் தோன்றும். உண்மையில் அப்படி அல்ல என்று சற்று கடந்த பின்னர் தெரியும். திகிலூட்டும் காலடிகளுடன் நம்மை அணுகிய எத்தனையோ டைனோசர்கள் வெறும் ஓணான்கள்தான் என நமக்கே தெரியவரும்.

பலசமயம் நாம் நம் ஆணவம் புண்படுவதனால்தான் துயரடைகிறோம். நாம் புறக்கணிக்கப்படுவதாக, அவமதிக்கப்படுவதாக நினைக்கிறோம். ஓர் உறவின் விலகலை ‘தோல்வி’ என எடுத்துக்கொள்வது அதனால்தான். ஒருவர் தன் கனவுகள், இலட்சியங்கள், தேடல் பற்றிய தன்னுணர்வுடன் இருந்தால் இன்னொருவர் என்ன நினைக்கிறார் என்பது எவ்வகையிலும் முக்கியமல்ல. எவரையும் மிக எளிதாக வெட்டிவிட்டு மேலே சென்றுகொண்டே இருக்கமுடியும். மலை ஏறுபவர் சுமைகளை வெட்டி கீழே போட்டுவிடுவதைப்போல.

நேரடியாக, அப்பட்டமாகச் சொல்கிறேனே. ஆணின் வாழ்க்கையில் பெண் பெரிதாக ஒன்றும் முக்கியம் அல்ல. அது ஓர் உறவு, அவ்வளவே. அந்த உறவின் அளவைக்கொண்டே அப்பெண்ணின் முக்கியத்துவம் அமைகிறது. பெண்ணின் வாழ்க்கையில் ஆண் கொஞ்சம்கூட முக்கியம் அல்ல. அவன் அவளுக்கு ஓர் வழிகாட்டியாக, ஆசிரியனாக, கொள்கைத்துணைவனாக இருந்தால் அந்த அளவில் மட்டுமே அவ்வுறவுக்கு மதிப்பு, மற்றபடி பெண் வாழ்க்கையில் ஆண் ஓர் அமைப்பு மட்டும்தான். அடையாளம், பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பவன். அந்த அளவிலேயே ஆணை எடுத்துக்கொண்டு, மேலே எண்ணாமலிருப்பதே உகந்தது.

இந்தவகையான உறவுச்சிக்கல்களுக்கு அப்பால் ஆணானாலும் பெண்ணானாலும் ஒருவருடைய வாழ்க்கை அவருடைய உண்மையான இலட்சியங்களாலும் கனவுகளாலும் அவற்றின் உச்சநிலையான ஆன்மிகத்தாலும்தான் மதிப்புறுகிறது. ஆன்மிகம் என்னும்போது மதம், கடவுள் என்னும் பொருளில் சொல்லவில்லை. அடிப்படையான மானுடப்பெருநிலையை தன் வாழ்வில் உணர்தலையே குறிப்பிடுகிறேன்.

மீண்டும், இவ்வரிகள் இப்போது விலகிநின்றுபேசும் வெற்றுத்தத்துவமாகவே ஒலிக்கும் என்பதை உணர்கிறேன். ஆனால் இதுவே உண்மை. ஆகவே இது பலநூறுமுறை பலராலும் சொல்லப்பட்டதாகவே இருக்கும். இதை கொஞ்சம் விலகினால் நீங்களும் உணர்வீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்
அடுத்த கட்டுரைMahabarata for our times