ஞானி-14

விஷ்ணுபுரம் வெளிவந்து சில மாதங்களுக்குள் காலச்சுவடு சார்பில் நெல்லையில் ஒரு கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. அது ஒருவகையில் விஷ்ணுபுரத்தை விழத்தட்டுவதற்கான ஒரு முயற்சி. விஷ்ணுபுரத்துடன் வேறு இரண்டு நூல்களையும் சேர்த்து மூன்று நூல்களுக்கான அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. அதன் நோக்கம் தெரிந்து அன்று பத்மநாபபுரத்தில் குடியிருந்த நான் அந்த விழாவுக்கு செல்லவில்லை. அவ்விழாவுக்கு வந்திருந்த ஞானி தொலைபேசியில் என்னிடம்  “ஏன் வரவில்லை?” என்று கேட்டார்  “உடம்பு சரியில்லை” என்று நான் கூறிவிட்டேன்.

அக்கூட்டத்தில் தேவதேவன் ஒருவரைத்தவிர பேசிய அனைவருமே விஷ்ணுபுரம் ஒரு நாவலே அல்ல, எவ்வகையிலும் பொருட்படுத்தப்படவேண்டிய நூல் அல்ல என்று பேசினர். அப்படிப் பேசிய வேதசகாயகுமார் சிலகாலம் கழித்து அப்படி பேசும்படி தான் கொண்டு செல்லப்பட்டேன் என்றும், அது காலச்சுவடின் விருப்பம் என்றும் சொன்னார். சுந்தர ராமசாமியின் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு பேசப்பட்டவை அவை என்றும் சொன்னார். நான் இந்நிகழ்வை முன்னரே எழுதியிருக்கிறேன்.

விஷ்ணுபுரம் வெளிவந்து, அது தமிழில் எப்போதுமில்லாத அளவுக்கு பேசப்பட்ட காலம் அது. பொதுவாக அன்றெல்லாம் தமிழில் ஒரு நாவல் வெளிவந்து ஓராண்டுக்கு பிறகுதான் மதிப்புரை வரத்தொடங்கும். ஆனால் விஷ்ணுபுரத்தை பொறுத்தவரை ஏற்கனவே நூற்றைம்பது பிரதிகள் முன்விலைத்திட்டத்தில் அளிக்கப்பட்டிருந்ததனால் உடனே கருத்துக்கள் எழுந்து வந்தன. இந்திரா பார்த்தசாரதி எழுதிய இரண்டு பக்க விரிவான மதிப்புரை இந்தியா டுடே தமிழ் இதழில் வெளிவந்தது. இந்து ஆங்கில நாளிதழில் அசோகமித்திரன் எழுதிய விரிவான பாராட்டுக்குறிப்பை எழுதியிருந்தார். அதில் நூறாண்டுகள் தமிழில் நிகழ்ந்த மிகப்பெரிய இலக்கியமுயற்சி என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து முக்கியமான விமர்சகர்கள் ஆசிரியரின் குறிப்புகள் வெளிவ்ந்திருந்தன.

எதிர்மறைக்கருத்துக்களும் தொடர்ந்து வெளிவந்தன, அவையே எண்ணிக்கையில் மிகுதி. ஆனால் இலக்கிய சூழலை அறிந்தவர்களுக்கு தெரிந்திருந்தது, அப்பாராட்டுக்குறிப்புகளை எழுதுபவர்கள்தான் முக்கியமானவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் நாவலை வாசித்து எழுதப்பட்ட ஆழமான குறிப்புகள் என்று. எதிர்மறைக் கருத்துகளை எழுதிக்கொண்டிருந்தவர்கள் மிக மேலோட்டமானாவ்ர்கள், பெரும்பாலானவை வாசிக்காமல் எழுதப்பட்ட காழ்ப்புக் குறிப்புகள், அல்லது அரசியல் சார்ந்த இயந்திரவாத அணுகுமுறை கொண்டவை. ஆகவே எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் காலப்போக்கில் இந்நாவல் தன்னை நிறுவிக்கொள்ளும் என்பது அப்போதே தெரிந்துவிட்டிருந்தது.

எனக்கு அது மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் அளித்தது. நான் அவ்வப்ப்போது சுந்தர ராமசாமியை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துக்கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமிக்கும் எனக்கும் விஷ்ணுபுரத்தை முன்வைத்து உருவான சிக்கல்பற்றி முன்னரே விரிவாக எழுதியிருக்கிறேன். [சுரா நினைவின் நதியில்]அவருக்கு அந்நாவலின் அழகியல் ஏற்புக்குரியதாக இருக்கவில்லை. நாவல் வெளிவந்தபின் எழுந்த எதிர்வினைகள் அவரை மேலும் என்னிடமிருந்த விலகவைத்தன.  அவருடன் நான் நடக்கச் செல்லும்போது பெரும்பாலும் எதையுமே பேசாமலானார்.அவருடைய ஒவ்வாமையை உணர்ந்து நான் செல்வதை மிகவும் குறைத்துக்கொண்டிருந்தேன்

எற்கனவே தர்மபுரியில் இருந்தபோது அவருடனான என்னுடைய முரண்பாடுகள் அவருடைய மகன் சார்ந்து உருவாகி, பிறகு சி.மோகன் முயற்சியால் அது சமரசமாகியிருந்தது. அவரைச் சுற்றி ஒரு புதிய குழு உருவாகி வந்திருந்தது. லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்கள் விலகிச்சென்றுவிட்டிருந்தார்கள். வேறுபலருக்கும் விலக்கம் உருவாகியிருந்தது. என்னுடைய இடமும் அங்கு இல்லையென உணரத்தொடங்கியிருந்தேன்.

சி,மோகன்

சி.மோகன் அந்நாவல் ஒரு கிளாஸிக் என்று சொல்லிக்கொண்டிருந்தவர். அந்நாவல் வெளிவருவதற்கும் சி.மோகன் காரணமாக இருந்தார்.அவருடைய முயற்சி இல்லையேல் அகரம் அந்நாவலை வெளியிட்டிருக்காது. அன்று அத்தனை பெரிய நாவலை ஒரு பதிப்பகம் வெளியிடுவது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் அன்று இன்று போல குறைவான பிரதிகளை அச்சிட முடியாது .ஓரளவேனும் லாபம் வரவேண்டுமென்றால் ஆயிரம் பிரதிகள் அச்சிடவேண்டும். விற்காவிட்டால் அந்த காகிதக்குவியலை பேணும் செலவே பதிப்பகத்தை வீழ்த்திவிடும். சி.மோகன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் அகரம் கதிர் விஷ்ணுபுரத்தை வெளியிட்டார்.

நெல்லைக் கூட்டத்தில் மிகக் கடுமையான எதிர்வினை ஆற்றியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.சி.மோகன் அந்நாவலை பாராட்டி பேசிக்கொண்டிருந்தது ராமகிருஷ்ணனை குமுற வைத்திருக்கலாம். இன்றைய மொழியில் சொல்லப்போனால் மேடையில் ‘கிழிகிழி என்று கிழித்து தொங்கவிட்டார்’. ஏற்கனவே அந்நாவல் வெளிவந்த ஒருசிலநாட்களுக்குள் உருவாகியிருந்த எதிர்விமர்சனம் என்ன என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்திருந்தார்.அது இந்துத்துவ நாவல் என்பதுதான் அது. ஆகவே அதே நிலைபாடை எடுத்து,அதற்கு நாவலின் உள்ளிருந்து சில ஆதாரங்களை எடுத்துக்காட்டிப் பேசுவதென்பது மிக எளிதாக வரவேற்கப்படும் என்று அறிந்திருந்தார். அவர் என்றுமே இந்துத்துவ எதிர்ப்பாளராக இருந்ததில்லை, அந்த தருணத்தில் ஓர் நிலைபாடு, ஒரு கருவி அந்த எதிர்ப்பு.பொதுவாக எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும்.

அந்த விமர்சனம் ராமகிருஷ்ணனின் அன்றைய வழக்கமான பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருந்தது. வேதாளம் கேட்க, விக்ரமாதித்தன் பதில் சொல்வது போன்ற ஓர் உரையாடல். ஆனால் நாவலைப் படித்தவர்களுக்கு ராமகிருஷ்ணனின் உரை அதிர்ச்சியை அளிக்கும் ஒன்றாக இருந்திருக்கும். ஏனெனில் ராமகிருஷ்ணன் கூறியவற்றும் நாவலுக்கும் எந்த தொடர்புமில்லை. நாவலின் தொடக்கத்தில் வசந்தன் எனும் பாணன் வந்து ‘புண்ணிய பூமியான பாரதவர்ஷத்தின்யின் தெற்கே’ என்று கதைசொல்ல ஆரம்பிக்கிறான். வினாயகர் துதியும் கலைமகள் துதியும் அவனால் சொல்லப்படுகின்றன

ஒரு நவீன இலக்கியப்படைப்பு கலைமகள் துதியிலிருந்து தொடங்குமா? புண்ணிய பூமியான பாரத பூமி என்று சொல்கிறார் ஆசிரியர், சமணர்களை கழுவேற்றி கறைபடிந்த பூமியை புண்ணிய பூமி என்று சொல்வது எப்படி? இது ஒர் இந்துத்துவ குரல் அல்லவா?- என்று ராமகிருஷ்ணன் பேசினார். அந்நாவல் தன்னை ஒரு காவியமாக கற்பனை செய்துகொள்வது, மெட்டாஃபிக்‌ஷன் என்ற வகையை சார்ந்தது. அந்த நாவலுக்குள் வரும் ஒரு கதாபாத்திரத்தின் குரல்தான் நாவலின் முதலில் ஒலிக்கிறது. அந்த நாவலுக்குள் வரும் பத்மபுராணம் என்ற நாவல்தான் விஷ்ணுபுரம் என்று அமைந்திருக்கிறது என்பது அந்த நாவலின் வடிவம். இது அந்நாவலை படித்த எவருக்கும் புரிவது. ஆனால் ராமகிருஷ்ணனுக்கு அது பிடிகிடைக்கவில்லை.

அவருடைய எல்லா விமர்சனங்களும் இப்படித்தான் அமைந்திருந்தன. அந்நாவலின் முடிவு என்னவாக இருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. அது இந்துத்துவத்தின் வெற்றியை கூறுவதாக இருக்கும் என்று அவரே ஊகித்துக்கொண்டார். மலை மேல் விஷ்ணுகோயில் இருக்கிறது என்று இதில் எழுதியிருக்கிறார், தமிழகத்தில் எங்குமே மலைமேல் விஷ்ணு கோயில்கள் இல்லை. யானைக்கு மதம் பிடிக்கிறது என்று எழுதியிருக்கிறது, யானைக்கு வெறி பிடிக்க அது என்ன நாயா? இதெல்லாம்தான் ராமகிருஷ்ணனுடைய கூற்றுகளாக இருந்தன.

அவையனைத்துமே பிழையானவை. யானைக்கு மதம் பிடிப்பதைப்பற்றிச் சொல்லாத ஒரு தமிழ்க்காவியம்கூட இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான விஷ்ணு ஆலயங்கள் மலைமேல்தான் உள்ளன, ஆனால் விஷ்ணுபுரத்தின் ஆலயம் மலைமேல் இல்லை, பள்ளத்தாக்கில் உள்ளது. இதை ஞானி அங்கேயே சொன்னதாக அறிந்தேன். என்னிடமும் அதைப்பற்றிச் சொன்னார். அக்கூட்டத்தில் வந்த எதிர்மறைக் கருத்துக்கள் மட்டும் காலச்சுவடில் வெளியியாயின. தேவதேவன் முன்வைத்த பாராட்டும் கட்டுரை வெளியிடப்படவில்லை. அது சதங்கை இதழில் சற்று பிந்தி வெளியாகியது

ஞானி இத்தருணத்தில் சுந்தர ராமசாமியுடன் எனக்கிருந்த விலக்கத்தை அனுதாபத்துடன்தான் பார்த்தார். இன்று யோசிக்கும்போது அவருடைய பெருந்தன்மை வியக்க வைக்கிறது எதன்பொருட்டும் நீங்கள் சுந்தர ராமசாமியிடமிருந்து விலகிவிடக்கூடாது என்று அவர் பலமுறை எனக்கு எழுதினார். “இனி ஒருவேளை உங்களுக்கு அவர் தேவைப்படாமல் இருக்கலாம். அவருக்கு நீங்கள் தேவை. அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளுங்கள். அவரை சுற்றி அவர் வேறு ஒரு குழுவை அமைத்துக்கொண்டால் கூட விடாமல் அவரை சென்று பார்த்துக் கொண்டிருங்கள். அவர் அவரைச் சுற்றி புதிதாக உருவாகும் கூட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்பவராக இருக்க மாட்டார். அவர்கள் அவருக்கு சலிப்பையே ஊட்டுவார்கள்”

“ஏனெனில் உள்ளூர அவருக்குத்தெரியும், அவர்கள் எந்த வகையிலும் பொருட்படுத்தக்கூடியவர்கள் அல்ல என்று. காலத்தில் அவருடைய குரலை ஒலிக்கப்போகிறவர், அவருடைய பெயரை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறவர் நீங்கள் மட்டும்தான் .நீங்கள் அவர் செய்திருக்கும் எதிர்கால முதலீடு. அவருடைய அழகியல் மரபின் நீட்சி நீங்கள். பிறர் அவருடைய அழகியலை ஏற்பவர்கள் அல்ல, குறிப்பாக மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள். அவகளின் உலகம் வேறு, அவர்கள் அவரை நிராகரித்து வேறு திசைக்கே செல்வார்கள். அதை சுந்தர ராமசாமியும் அறிவார். ஆகவே அவர் உங்களைத்தான் பொருட்டாக நினைப்பார்” என்றார்.

ஆறேழு கடிதங்களில் இவற்றை அவர் விரிவாக எழுதியிருந்தார். ஆனால் ஒருமுறை கூட என்னால் சுந்தர ராமசாமியை அதன் பின் நெருங்க முடியவில்லை ஒவ்வொரு முறையும் அவர் மேலும் இறுக்கமாகிக்கொண்டிருப்பதை தான் உணந்தேன் ஆனாலும் தொடர்ச்சியாக அவருடன் உறவை நீட்டித்திருந்தேன்.

விஷ்ணுபுரம் பற்றிய சுந்தர ராமசாமியின் எண்ணங்கள் என்ன என்று எனக்கு இப்போதும் அறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. அவர் அதை வாசிக்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் அதனுள் நுழையமுடியவில்லை என்றார். அதன் தத்துவவிவாதங்களும் சிக்கலான கட்டமைப்பும் பிடிக்கவில்லை என்றார்.ஆனால் பின்னர்  ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ எழுதிய காலங்களில் அவருட பேசியபோது அவருள் அந்நாவல் உருவாக்கிய அகப்பதிவுகளை காணநேர்ந்தது. அவர் மகளின் நோய் பற்றிய பேச்சின்போது விஷ்ணுபுரத்தின் சங்கர்ஷணனின் மனக்கொந்தளிப்பை அவர் நினைவுகூர்ந்தார். தன் பெரிய நாவலில் விஷ்ணுபுரம்போல அக்கால தத்துவ விவாதங்கள் இடம்பெறவேண்டும் என்று விரும்பினார்

ஆனால் அவர் எழுதிய ’குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ அவ்வாறு அமையவில்லை. அவர் நினைத்தபடி இயல்பான உணர்ச்சிகரம் அதில் கூடவில்லை. தத்துவவிவாதங்கள் மேலோட்டமான உரையாடலாக இருந்தன. நான் அதை அவரிடம் சொன்னேன். ஆனால் அதை கேட்டு ஞானி வருத்தமடைந்தார். “நீங்க அதை புகழ்ந்து மட்டும் தான் சொல்லியிருக்கணும்.பாராட்டி ஒரு கட்டுரை கூட எழுதியிருக்கலாம், எந்த தவறும் கிடையாது. நீங்க இப்ப அபடிச் சொன்னது மிகப்பெரிய தவறு. அவருக்கு எதிரான வன்முறை அது. நீங்க சொன்னது உண்மையாக இருந்தாலும்கூட” என்று ஞானி சொன்னார். கடைசி வரைக்கும் அவர் அதற்காக என்னை மன்னிக்கவில்லை

அருண்மொழி அந்நாவலைப்படித்து அது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னாள். ‘நீ சுந்தர ராமசாமிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுது” என்று நான் அவளை ஊக்கினேன். அவள் அதன் அமைப்பையும் உணர்வுகளையும் புகழ்ந்து ஒரு நீண்ட கடிதத்தை சுந்தர ராமசாமிக்கு எழுதினாள். அவளுக்கு அவர் எழுதின கடிதத்தில் அவளுடைய கடிதம் எந்த அளவுக்கு தன்னை மகிழ்வித்தது என்று குறிப்பிட்டார். உண்மையில் ஞானி சொன்னது போல அதை பாராட்டி கூறியிருக்கலாம் என்ற உணர்வு இன்று எனக்கு இருக்கிறது.

மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு சாகித்ய அகாடமி நெல்லையில் நடத்திய விழாவுக்கு நானும் சுந்தர ராமசாமியும் காரில் சென்றோம். அப்போது எங்களுக்குள்ளான உறவு மிகவும் பலவீனமடைந்துவிட்டிருந்தது. சுந்தர ராமசாமி குழந்தைகள் ஆண்கள் பெண்கள் தமிழில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறதென்றும், ஆகவே அடுத்த பகுதியை எழுதப்போவதாகவும், அந்த அடுத்த பகுதியை எழுதிய ஒருசில அத்தியாயங்களை தன் கையில் கொண்டு வந்திருப்பதாகவும், நெல்லையில் அதை வாசிக்கப்போவதாகவும் கூறினர்.

நெல்லையில் அவர் அதை படித்தார், மிக சாதாரணமான ஒரு பள்ளிச் சித்தரிப்பு அது. சேஷன் என்ற சிறுவன் கூரிய பென்சிலால் மற்ற மாணவர்களை குத்துவதை பற்றிய குறிப்பு. சுதந்திர போராட்டக் கருத்துக்களையும் தமிழ் உணர்வு கருத்துக்களையும் மாணவர்கள் எவ்வளவு எளிமையாக உள்வாங்கிக்கொண்டு குழுக்களாக மாறி செயல்படுகிறார்கள் என்று ஒரு சித்திரம் அதில் சொல்லப்பட்டிருந்தது.

நான் அவரிடம் அது சிறப்பாக வந்திருக்கிறது என்றும், அவர் அதை முழுக்க எழுதி முடிக்கலாம் என்றும் சொன்னேன். ஆனால் அப்போதும் அது பயனளிக்கவில்லை. சுந்தர ராமசாமிக்கு நான் சொல்வது உண்மையல்ல என்று தெரிந்துவிட்டிருந்தது. ஞானியிடம் நான் அதைப்பற்றி கூறினேன்.  “ஆமாம் அதுவும் கஷ்டம் தான் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது அவருக்கு தெரிந்துவிடும்” என்று ஞானி கூறினார். பிறகு சிரித்தபடி “இப்ப தெரியுது, முழுசா அப்டியே இன்னொரு உடலுக்குள்ள நம்மைக் குடுத்திரமுடியாது.ஒருத்தருக்குள்ளே இருந்து எது வெளியேபோயி நீடிக்கணும்னு கடைசியா முடிவுசெய்றது இயற்கைதான்” என்றார்.

ஞானிக்கும் எனக்கும் இடையே இருந்த ஆசிரிய- மாணவ உறவில் அதைப்போன்ற உரசல்கள் இருந்தனவா? ஞானி சுந்தர ராமசாமி போல அழுத்தமான அகவயமான உணர்வுகள் உடையவரல்ல. சுந்தர ராமசாமிபோல நிதானமானவரும் அல்ல. அவருடைய விழியின்மை, சர்க்கரைநோய், தனிமை, மேலும் தனிப்பட்ட பிரச்சினைகள் அவரை அவ்வப்போது உச்ச உணர்வுகளுக்குக் கொண்டுசெல்லும்.மனம்கசந்து பேசுவார், மிகையுணர்ச்சி வெளிப்படும். ஆனால் எளிதில் அதைக் கடந்துவந்துவிடுவார். அவரிடம் நாம் கூர்ந்து உணரவேண்டிய ரகசியமான உணர்வுநிலைகள் ஏதுமில்லை.

அதோடு சுந்தர ராமசாமியுடனான உறவுச்சிக்கல்களுக்குப் பின் நான் ஆசிரியர்களுடனான உறவில் எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அதில் ஓர் இக்கட்டான இடமுண்டு என உணர்ந்திருந்தேன். நாம் ஆசிரியர்களின் தொடர்ச்சி, ஆனால் மீறிச்செல்லவும் கூடும். மீறல் என்பது ஆசிரியர்களை நிராகரிப்பதல்ல, அப்படி நமக்குத் தோன்றலாகாது, கண்டிப்பாக அவர்களுக்கு தோன்றலாகாது. தோன்றாமலிருக்கவேண்டியது நமது கடமை. ஆசிரியர்களின் சில பலவீனங்களை நாம் உணர்ந்தாகவும் வேண்டும். அவர்கள் தங்கள் மாணவர்களினூடாக தாங்கள் நிலைகொள்ளவேண்டுமென விரும்புகிறார்கள், ஆகவே கருத்துநிலை மறுப்பு என்பது தங்களை மறுப்பதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

ஞானிக்கு நான் நித்யசைதன்ய யதியுடன் அணுக்கமாக இருப்பது பற்றிய ஒவ்வாமைகள் இருந்தனவா? அவர் என்னிடம் அவற்றை வெளிப்படுத்தியதே இல்லை. நையாண்டியாக சிலசொற்களைச் சொன்னார் என்பது நினைவில் இருக்கிறது. “அவர் காலிலே விழுறாங்களா?”என்று கேட்டார். “ஆமா” என்று நான் சொன்னேன். “நானும் அவர் காலிலே விழுந்து கும்பிடுவேன்”. ஞானி “எப்டி மனுஷன் காலிலே மனுஷன் விழமுடியும்?”என்று கேட்டார். “வள்ளலாரை சந்திச்சா காலைத் தொட்டு கும்பிடுவீங்களா, இல்லை நீங்களும் மனுஷன் அவரும் மனுஷன்னு சமத்துவம் பேசுவீங்களா?”என்றேன். ஞானி “எல்லா கேள்விக்கு பதிலை யோசிச்சபின்னாடித்தான் என்னை பாக்கவே வரீங்கபோல”என்றார்.

“நீங்க என்னோட நேரடி மாணவர் இல்லை” என்று ஒருமுறை சொன்னார். “சரி, நேரடி மாணவரா யார் இருக்காங்க?”என்று நான் கேட்டேன். “மாணவர்னா நீங்க பேசினது எல்லாத்தையும் நினைவில் வைச்சிருக்கணும். உங்க புத்தகங்களை படிச்சிருக்கணும். குறைஞ்சது நீங்க சொன்னதென்னன்னு தெளிவா சொல்லத்தெரிஞ்சிருக்கணும். அதாவது நீங்க சொன்னதைவிட தெளிவா சொல்லத்தெரிஞ்சிருக்கணும்.  எல்லாத்துக்கும் மேலாக உங்க மாணவர்னு எந்த மேடையிலும் வெளிப்படையாச் சொல்லவும் வேணும்”

ஞானி புண்பட்டார். அன்று பெரும்பாலானவர்கள் அவருடைய மாணவர் என்று பொதுவெளியில் சொல்லமாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்.  “அவர் என்னோட ஆசிரியர்தான், ஆனா…”என்பார்கள். ”அவரோட எனக்கு நெறைய கருத்துவேறுபாடுகள் இருக்கு” என்று சொல்லாமல் அவரைக் குறிப்பிடவே மாட்டார்கள். ஏனென்றால் அன்று ஓங்கி ஒலித்திருந்த ‘இடதுசாரி’ ‘தலித்’ குரல்கள் ஞானியை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தன. அவற்றை அவர்கள் அஞ்சினார்கள். அங்கேயும் ஒரு ‘அட்டெண்டென்ஸ்’ போடவேண்டும் என விரும்பினார்கள். நான் என்னை ஞானியின் மாணவன் என்று சொல்லிக்கொண்டதே அதன்பொருட்டுத்தான்.

ஞானி என்னிடம் “நீங்க மார்க்சிய மெய்யியலுக்கான என்னோட தேடலை ஏத்துக்கிடறீங்களா?”என்றார். “இல்லை, மார்க்ஸியத்தோட வரலாற்று ஆய்வுமுறையை மட்டும்தான் என்னாலே ஏத்துக்கிடமுடியும்.நான் என்னை அத்வைதின்னு சொல்லத்தான் விரும்புவேன்.மார்க்சியத்தோட அடிப்படை தரிசனம் முழுமையானது இல்லை, அதுக்கு மனிதனையும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் ஒரே பார்வையிலே பார்க்கிற முழுமை இல்லை. என்னதான் சொன்னாலும் அது உலகியல்சார்ந்தது, அது பொருளியல்வாழ்க்கைக்கு மட்டுமே பொருந்துறது.முழுமைவாழ்க்கைன்னு ஒண்ணு இருக்குன்னு நான் நினைக்கிறேன் ” என்றேன்.

“சரி,தமிழர் மெய்யியல்னு ஒண்ணை ஏத்துக்கிடறீங்களா?” என்றார். “இல்லை, தமிழர்னு ஒண்ணை பிரிக்கிறப்பவே அதிலே பிரிச்சுப்பாக்கிற கோணம் வந்தாச்சு.அந்த பிரிவினை அப்டியே மேலே போகும். வட்டாரம் சார்ந்து சாதி சார்ந்து பிரிச்சுகிட்டே போகலாம். அது பண்பாட்டு ஆய்வுக்கு உதவுமே ஒழிய அகவிடுதலைக்கு உதவாது. மெய்யியல்னா அது மானுடர்களுக்கு உரியதா இருக்கணும், அத்தனை உயிர்களையும் அணைச்சுகிடறதா இருக்கணும்” என்று நான் சொன்னேன்

“அப்ப நீங்க எப்பிடி என்னோட மாணவரா ஆகமுடியும்?” என்று ஞானி கேட்டார். “சரி அப்ப நான் யாரோட மாணவன்?”என்றேன். “இலக்கியத்திலே சுந்தர ராமசாமிக்கும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கும் மெய்யியலிலே நித்யசைதன்ய யதிக்கும்” என்றார் ஞானி. நான் “அப்டீன்னா வரலாற்றுப்பார்வையிலே உங்க மாணவன்னு ஏன் சொல்லிக்கக் கூடாது?” என்றேன். சிரித்துவிட்டார். “உண்மைதான், நாம யாருக்கு எதைக்குடுக்கிறோம்னு சொல்லவே முடியாது” என்றார். “நாம யோசிக்கிறது எங்க எப்டி போய்ச் சேருது, எது முளைக்குதுன்னு கணிக்கவே முடியாது. காத்திலே விதைக்கிறோம்… அவ்ளவுதான்”

“யோசிச்சுப் பாருங்க சார், நான் சுந்தர ராமசாமியோட வரலாற்றுப்பார்வையும் உங்களோட அழகியல்பார்வையும் கொண்டிருந்தேன்னா எப்டி பரிதாபமா இருக்கும்” என்றேன். அன்று நெடுநேரம் அதைப்பற்றிச் சிரித்துக்கொண்டிருந்தோம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇருள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி,எஸ்.ரா -அவதூறு பற்றி…