1990ல் என்னுடைய ரப்பர் நாவல் வெளிவந்தது. அதற்காக கோவையில் விஜயா வேலாயுதம் ஏற்பாடு செய்த விமர்சனக்கூட்டத்தில் ஞானி கலந்துகொண்டார். அது அவருக்குப் பிடித்த நாவல். சுந்தர ராமசாமிக்கும் பிடித்திருந்தது. ‘நாவல்கலை என்பது மிகப்பெரிய கப்பல் கட்டுவதுபோன்றது, அது உங்களுக்கு கைவருகிறது’ என்று சுந்தர ராமசாமி எனக்கு எழுதினார். அக்கடிதத்தை நான் அன்று மகிழ்ச்சியுடன் நகல்செய்து பல நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன்.
ஞானி ‘அதில் இயற்கையுடன் மனிதனின் போர் இயற்கையுடன் ஒத்திசையும் மானுடவாழ்க்கை என்ற இரண்டு சரடுகள் உள்ளன. இரண்டும் சிறப்பாக பின்னியிருக்கின்றன’ என்றார்.
ஆனால் நான் அந்நாவலால் நிறைவுறவில்லை. அதை ஞானியிடம் சொன்னேன். “நீங்க தேடுறது எதை?” என்றார். “அதிலே கண்டன்காணி இருக்கிறது ஒரு உச்சநிலையிலே. அதை வெளியே இருந்து பார்க்கிறேன். அதை உள்ளே போய் பாக்கணும்” என்றேன். “அதுக்கு நீங்க வரலாறு தத்துவம் மெய்யியல் எல்லாத்தையும் அணைச்சுகிட்டு சிந்திக்கணும். சிந்திச்சதை கலைச்சுக்கவும் வேணும்” என்று ஞானி சொன்னார்.
“ஆமா, இந்த நாவலை தமிழிலே இன்னொரு நல்ல எழுத்தாளர் எழுதிரமுடியும். கண்டன்காணியை மட்டும்தான் தமிழ் நவீன இலக்கியம் இதுவரை உருவாக்கலை. நான் எழுதவந்தது அவரைப்பற்றி மட்டும்தான்” என்று நான் சொன்னேன். “அவரை அறியறதுக்காகத்தான் மத்த வரலாற்றையும் மனுசங்களையும் நான் எழுதறேன்”.
ஞானி சொன்னார். “அதுக்கு நீங்க யதார்த்தவாதத்தை உடைச்சு முன்னாலே போயாகணும். இந்த யதார்த்தத்திலே அதுக்கு இடமில்லை. படுகையோட மொழியிலே எழுதுங்க” நான் “இல்லை, திசைகளின் நடுவிலேயோட மொழியிலேயா?” என்றேன். அன்றே விஷ்ணுபுரம் என் கனவில் இருந்தது.
என்னுடைய பெரிய நாவல்களான விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை ஆகிய மூன்றைப் பற்றியும் கோவை ஞானி அவர்களிடம் நான் விரிவாக உரையாடியிருக்கிறேன். பொதுவாக என் நாவல்களின் கருக்களை பொதுவில் விவாதிப்பதில்லை. ஆற்றுரிடம் விஷ்ணுபுரம் பற்றி பேசியிருக்கிறேன். பின்தொடரும் நிழலின் குரலின் மார்க்சியப் பின்புலம் மற்றும் தகவல்களை குறித்து எம்.கங்காதரனிடமும் வேறு சில மார்க்சிய தலைவர்களிடமும் உரையாடியிருக்கிறேன்.
சுந்தர ராமசாமியிடம் எந்த படைப்பைப் பற்றியும் உரையாடியதில்லை. அதற்குரிய ஏற்பு மனநிலையில் அவர் இருந்ததில்லை. அன்றெல்லாம் கூடுமானவரைக்கும் எதுவும் எழுதாமலிருப்பதே எழுத்தாளனுக்கு நன்று என்ற மனநிலை அவருக்கு இருந்ததோ என்று ஐயுறுகிறேன். இதை நான் அவரிடம் கேலியாக கூறியிருக்கிறேன். அது அக்காலத்தில் சிற்றிதழ்ச்சூழலின் மனநிலை. அவரே சொன்னதுபோல ‘சற்று விச்ராந்தியாக’ இருக்கும் நிலை. அவர் நிறைய எழுத ஆரம்பித்ததும் பெரிதாக எழுத ஆரம்பித்ததும் உண்மையில் விஷ்ணுபுரம் வந்து அது உருவாக்கிய பாதிப்பை நேரில் பார்த்தபிறகுதான்.
நான் நாவலின் வடிவம் பற்றிய ஆழ்ந்த தேடலொன்றை மேற்கொண்டேன். பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘நாவல் சித்தியும் சாதனையும்’ அத்தேடலில் நான் சென்றடைந்த முதல் நூல். அதன்பின் ஹென்றி ஜேம்ஸின் The Art of the Novel. டி.எச்.லாரன்ஸ், இ.எம்.ஃபாஸ்டர் ஆகியோரின் நாவல் வடிவம் பற்றிய எழுத்துக்கள். அதன் பின் என் எண்ணங்களைத் தொகுத்து எழுதியது நாவல் கோட்பாடு என்னும் நூல். என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம் அதை வெளியிட்டார். அதன்பின்னரே நாவல் வடிவம் பற்றிய தெளிவை அடைந்தேன். தமிழ்நாவலில் ஒரு பெருங்காலடி வைக்கவேண்டும் என்னும் கனவு எழுந்தது
கோவைக்குச் சென்றபோது ஞானியிடம் விஷ்ணுபுரம் பற்றிய என் கனவை குறிப்பிட்டேன் உண்மையில் அதற்கு முன்பு இரண்டுமுறை விஷ்ணுபுரத்தின் முன் வடிவங்களை எழுதிப்பார்த்திருக்கிறேன். என்னுடைய தொடக்க காலத்தில் விஜயபாரதம் இதழுக்காக விஷ்ணுபுரத்தின் ஒரு வடிவை எழுதினேன். 1985 தொடக்கங்களில். அப்போது அதை எழுதுவதற்கான பயிற்சியோ முதிர்ச்சியோ எனக்கு இருக்கவில்லை. ஆகவே அது மிக அசட்டுத்தனமான ஒரு உணர்ச்சிப் பதிவாக மட்டுமே இருந்தது. நூறு பக்கங்களுக்குள் அமைந்த ஒரு குறுநாவல் அது.
மீண்டும் 1988-ல் இன்னொரு வடிவை ஒரு முன்னூறு பக்கத்துக்கு எழுதிப்பார்த்தேன். ஆனால் அதிலிருந்த கனவு வெறும் கொந்தளிப்பாகவே இருந்தது. யுகம் என்கிற வார்த்தையிலிருந்த கனவை அச்சொற்களால் கொண்டு வர முடியவில்லை. ஆகவே அது ஒரு வெறும் கனவு , எழுத இயலாதது என்று எண்ணி விட்டுவிட்டேன் 1990-களில் நான் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.அப்போது அந்நாவலை மீண்டும் எழுத வேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டது. நான் கோவைக்கு அடிக்கடி வந்துபோய்க்கொண்டிருந்த காலங்கள் அவை
கோவையில் ஞானி அவர்களை காளீஸ்வரா நகரில் இருந்த அவரது இல்லத்தில் சென்று பார்ப்பேன். பொதுவாக அன்றைய மார்க்சிய இலக்கியச் சூழலில் ஞானியின் மேல் நான்கு புறத்திலிருந்தும் கொட்டப்பட்ட வசைகள் பற்றி பேசிச் சிரித்துக்கொண்டிருந்தபோது, எந்த திட்டமிடலும் இல்லாமல் விஷ்ணுபுரம் பற்றி கூறினேன். அப்போது எனக்கே அதை நாவலாக எழுதுவேன் என்ற எண்ணம் இருக்கவில்லை. எவரேனும் அதை எழுதமுடியும் என்றுகூட எனக்குத் தோன்றியிருக்கவில்லை.
ஒருவகையான நிலைகொள்ளாமையும் கொந்தளிப்புடனும் கருவை நான் கூறி முடித்ததும் ஞானி உணர்வு மிகுதியில் அவர் அமர்ந்திருந்த இரும்பு நாற்காலியிலிருந்து எழுந்து அருகே வந்து தன் வெம்மையான, மென்மையான கைகளால் என் கைகளைப்பற்றிக் கொண்டு “பெரிய கனவு! பெரிய கனவு!” என்றார். “அது தான் என்னை பயமுறுத்துகிறது, ரொம்ப பெரிசு” என்றேன். “பெரிய கனவுகள் தான் பெரிய செயல்களை செய்யவைக்கும். இன்னும் பெரிய கனவுகளை நோக்கித்தான் செல்லவேண்டும். இளமையில் பெரிய கனவுகளுடன் இருப்பது ஒரு பெரிய நல்வாய்ப்பு. உங்களுக்கு அந்த கனவு காணும் மனம் வாய்த்திருக்கிறது. நீங்கள் எழுதுவீர்கள். எழுதமுடியும் உங்களால்” என்றார்.
நான் “இதை எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னேன். “எழுதமுடியும் என்று நம்புங்கள். நீங்கள் எழுதுவதாகவே கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனை இருந்துகொண்டே இருக்கட்டும். அந்த கற்பனை இருக்கும்போது நீங்கள் ஆயிரக்கணக்கான வாசல்களைத் தட்டிக்கொண்டே இருப்பீர்கள். எப்போதோ ஒருமுறை ஒரு வாசல் திறக்கும். அதன் வழியாக உள்ளே சென்றுவிடலாம்” என்று ஞானி கூறினார்.
அது மிக முக்கியமான ஒரு ஆலோசனையாக இருந்தது. தட்டிக்கொண்டே இருப்பது என்பது படைப்புச்செயல்பாடின் மிகமுக்கியமான விதி. ஓயாமல் தட்டிக்கொண்டிருப்பது. எந்த வாசல் எப்போது திறக்கும் என்பது பல்லாயிரக்கணக்கான சாத்தியக்கூறுகளின் முரணியக்கத்தால் ஆனது. அதை நாம் கணிக்கமுடியாது, ஆனால் தட்டுந்தோறும் திறக்கும் வாய்ப்புகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.
அதன் பிறகு இருபது தடவைக்குமேல் விஷ்ணுபுரத்தின் வெவ்வேறு தொடக்கங்களை எழுதிப்பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் காலையில் எழுந்து இன்று முதல் விஷ்ணுபுரம் எழுதுவேன் என்று சொல்லி ,ஒரு தொடக்கத்தை எழுதுவேன். கைப்பிரதியில் பத்து அல்லது பதினைந்து பக்கங்கள் போகும்போதே அது தொடக்கம் அல்ல, அங்கிருந்து நாவல் முன்னகராது என்று தெரிந்துவிடும். அப்போது விட்டுவிடுவேன். இது தொடர் முயற்சியாக நடந்து கொண்டிருந்தது.
அந்நாட்களில் அருண்மொழியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அவளிடம் இதனுடைய கதைக்கருவை சொன்னேன். அவள் அடைந்த அந்த உத்வேகத்தையும் பரபரப்பையும் கண்டேன். “இதை எழுதிவிடு, எப்டியாவது எழுதிவிடு” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.அவள் மனதில் நான் சொன்னதிலிருந்து ஒரு விஷ்ணுபுரம் உருவாகி வந்துவிட்டிருந்தது. அந்த விஷ்ணுபுரத்தை பற்றி ஐயங்களை கேட்பாள், அங்கே உலவிக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு அப்போது இருபத்தொரு வயது. மனம் பதினெட்டு வயதுப் பெண்ணுடையது. மிக எளிதாக பெரிய கற்பனைகளில் உலவ அவளால் முடிந்தது.யதார்த்தத்திலிருந்து முழுமையாக துண்டித்துக்கொண்டு கனவுகளுக்குள் திகழ முடிந்தது. கிட்டத்தட்ட விஷ்ணுபுரத்தில் என்னைவிட முன்னால் சென்றுவிட்டிருந்தாள் .ஒருமுறை விஷ்ணுபுரத்தில் இருந்த யானைகளை பற்றி அவள் என்னிடம் பேசும்போது விஷ்ணுபுரத்தில் யானைகள் இருக்கும் செய்தியே எனக்குத்தெரியாது.
நானும் அருண்மொழியுமாக கோவை ஞானி அவர்களை பார்க்க வந்தோம் வாழ்த்து பெறுவதற்காக என்று சொல்லவேண்டும். வாழ்த்து பெற்றுக் கிளம்பும்போது “இப்பதான் ரொம்ப உற்சாகமான மனநிலையில் இருக்கிறிங்க. விஷ்ணுபுரத்தை எழுதுங்க” என்று ஞானி சொன்னார். “நான் ஒரு பக்கா பிற்போக்கு நாவல்தான் எழுதப்போறேன் சார்” என்று அவரிடம் கேலியாக சொன்னேன்.
“எந்த கிரியேட்டிவான படைப்பும் பிற்போக்காக இருக்காது என்பது எண்ணுடைய எண்ணம். ஏனெனில் மனிதனுடைய கிரியேட்டிவிட்டியால் பின்னால் செல்லமுடியாது.முன்னகர வேண்டும், இன்னும் சிறப்பானதை நோக்கி போக வேண்டும் என்று தான் அது நினைக்கிறது. பிற்போக்கான படைப்பு கிரியேட்டிவிட்டி இல்லாதது. கிரியேட்டிவிட்டி என்பதே முற்போக்கு, முற்போக்கு என்பதே கிரியேட்டிவிட்டிதான்” என்று ஞானி சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் “என்னுடைய விசை என்னை முன்னால் கொண்டு போகிறதா பின்னால் கொண்டு போகிறதா என்று பார்ப்போம்” என்று சொன்னேன். அருண்மொழியிடம் ஞானி ‘பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா எழுதவைக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்றார். அருண்மொழி திரும்பி வரும்போது “பாத்தியா அவரே சொல்லிவிட்டார் .நீ எழுதறே. எப்படியாவது எழுதிரு” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்
அங்கிருந்து வந்து மீண்டும் சில முயற்சிகளுக்குப்பின்னால் ஒரு நாள் காலையில் எழுந்தபோது ‘என் கால்களுக்கு கீழே நான் உணர்ந்ததெல்லாம் மணல்தான்’ என்ற வரி என்னிலிருந்து மீறிவருவது போல் வந்தது. அதை எழுதி, அப்படியே விசைகொண்டு, நிறுத்தாமல் அந்த அத்தியாயத்தை எழுதி முடித்தேன் விஷ்ணுபுரம் நாவலில் முதல் தோற்றுவாயாக அமையும் பகுதி அது. அதன்பிறகு நாவலில் பல பகுதிகள் தனித்தனியாகவே எழுதினேன். சொல்லப்போனால மூன்றாம் பகுதியில் வரும் லக்ஷ்மி மழையில் காத்திருப்பதுதான் அடுத்த அத்தியாயமாக எழுதப்பட்டது.
மொத்த நாவலும் கண்ணுக்குத்தெரிந்துவிட்டது,ஓர் ஊர் கண்ணுக்குத் தெரிவதைப்போல. அதில் எந்த பகுதியை வேண்டுமானாலும் நான் எழுந்தலாம். ஆனால் அது ஓர் ஒத்திசைவுக்குள் அமைந்து ஒரு படைப்பாக வரும் என்பது தெரிந்திருந்தது. முதற்பகுதியை எழுதி முடித்தேன். பிற பகுதிகளையும் எழுதி அதை சரியான வடிவுக்கு கொண்டு வருவதற்கு மேலும் பல ஆண்டுகளாயிற்று.1996 வாக்கில்தான் நாவல் முழுமையான வடிவை அடைந்தது
அக்காலகட்டத்தில் நான் தொடர்ந்து ஞானியை சந்தித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் விஷ்ணுபுரம் பற்றி அவர் கேட்பார். எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் கதையைப்பற்றியோ அதன் உள்ளடக்கத்தைப்பற்றியோ கேட்காமல் கூர்மையான ஓரிரு கேள்விகளை மட்டும் எழுப்புவார். பௌத்த- வேதாந்த விவாதம் நிகழும் கதைப்பகுதியை அவரிடம் கூறியபோது “அதில் யார் வெல்கிறார்கள்?” என்றார். “பௌத்தம்” என்று நான் சொன்னேன். “யோகாச்சார பௌத்தம் வேதாந்தத்தை வென்ற தருணம் தான் விஷ்ணுபுரத்தில் வருகிறது”ஞானி வழக்கம்போல நிலத்தைப்பார்த்தபடி புன்னகைத்து தலையை அசைத்தார்.
பிறகு ஒருமுறை “அந்த விஷ்ணு எவரால் உருவாக்கப்பட்ட சிலை? பிரளயத்திற்கு பிறகு எவர் எஞ்சியிருக்கிறார்கள்?” என்றார். “அது பழங்குடிகளால் உருவாக்கப்பட்டது. பழங்குடிகள் மட்டுமே கடைசியில் எஞ்சியிருக்கிறார்கள். எந்தப் பிரளயத்திலும் நாணல் அழியாது” என்று நான் சொன்னேன். ஞானி என் கையை பற்றிக்கொண்டு “நான் சொன்னேனே கிரியேட்டிவிட்டி முற்போக்கானது” என்றார் .
ஒருவகையில் விஷ்ணுபுரம் நாவலை படிப்பதற்குள்ளாகவே ஏறத்தாழச் சரியாக புரிந்த்கொண்டவர்களில் ஒருவர் அவர். நாவல் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டிருந்ததனால் அதற்கு முடிவான ஒரு வடிவம் அமைவதற்கு மேலும் மேலும் தாமதமாகியது. நடுவில் ஏறத்தாழ ஓராண்டுகாலம் எதுவும் எழுதாமலும் இருந்தேன். அது நான் திருப்பத்தூரில் பணியாற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் தர்மபுரிக்கு வந்து சென்று கொண்டிருந்த காலம். அருண்மொழி திருப்பத்தூரில் பணியாற்றிக்கொண்டிருந்தாள்.
என்றும் என் பாதுகாவலராக இருந்த தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆதரவால் தர்மபுரிக்கு அருண்மொழி மாறிவந்தாள்.மீண்டும் எழுதும் ஓய்வான மனநிலை அமைந்தது. 1996-நாவலை முடித்தபிறகு ஞானிக்கு அதை நகலெடுத்து அனுப்பிவைத்தேன். ஐந்து ஆறு நாட்களுக்குள் அதை வாசித்து விட்டு எனக்கு எழுதியிருந்தார். எனக்கு விஷ்ணுபுரம் குறித்து வந்த முதல் கடிதம் அது. விஷ்ணுபுரம் தன்னளவில் ஒரு முற்போக்கான படைப்பு என்றும், அது முற்போக்கு என்பதற்காக மரபை நிராகரித்துவிட்டு முன்நகரவில்லை மொத்த மரபையும் இழுத்துக்கொண்டு அதனுள்ளே உறையும் முற்போக்கான அம்சங்களை நோக்கி செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மாபெரும் சிலைதான் நம் மரபெனில் அதை புரட்டிப்போடும் ஒரு பெருவெள்ளத்துக்கான கனவுதான் அந்நாவல். உருவாக்கிய அனைத்தையும் தானே அழித்துவிட்டு தனது முதல் வடிவுக்கு திரும்பும் தெய்வம் என்பதுதான் அதனுடைய மையக்கருத்து. அதில் அங்குள்ள ஒவ்வொன்றையும் இன்னொன்றின் மேல் படியாது விலக்கி அழிக்க விழையும் சித்தனும் அவருடைய மாணவனான மகாகாஸ்யபனும்தான் ஞானிக்கு மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள்.
குறிப்பாக இளம் காஸ்யபனின் குணச்சித்திரம் மீது அவருக்கு பெரும் மோகம் இருந்தது. பல கடிதங்களில் அந்த கதாபாத்திரத்தை அவர் எழுதியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உள்ளிருந்து எழும் பெருங்கனவு, மொத்த விஷ்ணுபுரத்தையே புரட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற அதன் விசை, அதுதான் மனித குலத்தை என்றும் முன்னால் கொண்டுசென்றது. மாற்றங்களை உருவாக்கியது. எல்லா புரட்சிகளும் அப்படித்தான் ஒரு உள்ளத்தில் துளிவிதையாக கருக்கொள்கின்றன.
மகாகாஸ்யபர் நிகழ்த்துவது தத்துவவாதியின் இலட்சியக் கனவின் விளைவான அழிவு. புரட்சி என்பது உண்மையில் அதுதான். ‘உழுவதன் வன்முறை’ என்றார் ஞானி. அதில் ஒரு மாபெரும் புரளல் இருக்கிறது என்று எனக்கு எழுதினார். விஷ்ணுபுரத்தில் சிறுவனாகிய காசியபன் தன் ஆசிரியனாகிய சித்தனிடம் கேட்கிறான். “குருநாதரே பலம் என்றால் என்ன?” அதற்கு அவர் அளவும் திணிவுமே பலம் என்கிறார். வேகம் அதைவிட பெரிய பலம். வெற்றிடம் அதைவிட வலிமையானது என்று சொல்லி “நீ எடையாகவும் வேகமாகவும் மாறு , இந்த கற்கோட்டைகளை சருகுக்குவியலாகப் பறக்கவை” என்று வாழ்த்துகிறார்
ஞானி அதைப்பற்றி எனக்கு எழுதியிருந்தார். “அது எங்கோ ஒரு கற்பனை நகரத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது அல்ல. இன்றும் ஞானத்தின் படியில் கால்வைக்கும் ஒரு சிறுவனின் உள்ளத்தில் எழும் ஆவலும் அறைகூவலும்தான் அது. அவனை அது அதிரவைக்கிறது. என் சிறுவயதில் மாற்றம், புரட்சி போன்ற சொற்களே என்மேல் அப்படியே ஓர் ஆவேசத்துடன் பாய்ந்து செல்லும். இரும்புப் பாலத்தின்மேலே ரயில் போவதுபோல என்று ஒருமுறை நினைத்திருக்கிறேன்”
அந்த தீவிரமான உரையாடலுக்கு பிறகு இளம் காசியபன் தன் சிறுகாலால் எம்பி ஆலயத்திற்குள் குதித்து “குருநாதரே, நான் இந்த படியை கால் தொடாமலே குதித்து வந்துவிட்டேன்!” என்று சொல்லி மகிழ்கிறான். குழந்தைத்தன்மையும் அதற்கப்பால் அமைந்த மேதமையும் கலந்தது அந்தக்கதாபாத்திரம். அந்த இடத்தைப்பற்றி ஞானி சொன்னார். “அந்த குழந்தைத்தன்மை மட்டுமே அத்தனை பெரிய கனவை அடையமுடியும். ஏனெனில் குழந்தைத் தன்மைக்கு சுமைகள் இல்லை .தொடமாலே தாவி வந்துவிட்டேன் என்ற வரி அவ்வகையில் முக்கியமானது”
காஸ்யபனின் நீண்ட காத்திருப்பு தலைமுறைகள் தலைமுறைகளாக நீள்கிறது. ஓர் உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு கைமாறப்பட்டு அக்கனவு நிலைகொள்கிறது. காசியபர் தலைமுறை தலைமுறையாகப் பிறந்துவரும் உடல்களில் சாவில்லாமல் வாழ்கிறார்.ஞானியின் வார்த்தைகளில் “புரட்சிக்கான அந்த தணியாத விழைவும், அது இறுதியில் கண்ணெதிரே நிகழும்போது வெறும் சாட்சியாக பார்த்து நிற்கும் அவரது முடிவும் ஒரு தரிசனம்தான்”
ஞானி எனக்கு எழுதிய கடிதத்தில் மொத்த தமிழிலக்கியத்திலும் எழுதப்பட்ட புரட்சியைப்பற்றிய அல்லது மனித குலத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் கனவைப்பற்றிய மிகப்பெரிய சித்தரிப்பு விஷ்ணுபுரத்தில் வரும் காஸ்யபனின் கதாபாத்திரம்தான் என்றார்.
“ஓர் உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு ஒரு துளி சிந்தாமல் அந்த கனவை கடத்திவிட முடியும் என்று விஷ்ணுபுரம் சொல்லும் அந்த மாயக்கற்பனை போல ஒரு புரட்சியாளனுக்கு ஊக்கமளிப்பது வேறில்லை. மீண்டும் மீண்டும் வரலாற்றால் தோற்கடிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு தனிமையிலிருக்கும் ஒருவனுக்கு அது மிகமிக உத்வேகமளிக்கக்கூடியது” என்றார் ஞானி பிறிதொரு முறை “அப்டி ஒரு விஷயம் நடக்கணும்னு சும்மா கற்பனைசெய்றதை மட்டும்தான் ஆறுதலா எடுக்கமுடியும் இப்ப”
விஷ்ணுபுரம் வெளிவந்த அதற்கு உருவான எதிர்ப்புகளும் வசைகளும் ஞானியை சோர்வடைய செய்தன. ஏனெனில் அதைப்போன்ற வசைகளை அவர் அடைந்துகொண்டிருந்த காலம் அது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு நாவலின்மீது அசட்டு இயந்திரத்தனமான வாசிப்பே தமிழிலிருந்து எழுந்து வரும் என்பதை என்னைவிட நன்றாக அவர் அறிந்திருந்தார் .ஆனாலும் தன் பொருட்டு எந்த கவலையும் அடையாதவர் விஷ்ணுபுரத்தின்பொருட்டு அந்த கவலையை அடைந்தார்.
கோவையில் அந்நாவல் வெளிவந்த பிறகு ஒரு பூங்காவில் அமர்ந்து பேசினோம் எம்.கோபாலகிருஷ்ணன் போன்றோர் அதில் கலந்துகொண்டது நினைவிருக்கிறது. அப்போது ஞானி அங்கு இருந்தார். ஞானியின் நண்பரான அறிவன் அந்நாவலின் உள்ளடக்கத்தைப் பற்றி சிறப்பாக பேசினார். அதிலிருக்கும் மரபு மீதான மறுப்பும் உள்ளடங்கிய கேலியும் அதை எப்படி ஒரு நவீன படைப்பாக்குகிறது என்று அவர் பேசிய நினைவுள்ளது. எல்லா அதிகாரபீடங்களும் அந்நாவலில் பகடிக்குள்ளாக்கப்படுகின்றன, தலைகீழாக்கப்படுகின்றன.அது பாண்டியனின் அரச அதிகாரமானாலும், சூரியதத்தரின் வைதிக அதிகாரமானாலும், அதன்பிறகு பௌத்தம் உருவாக்கிய சந்திர கீர்த்தியின் புதிய அதிகாரமானாலும். அறிவன் அதைப்பற்றி தன் கட்டுரையில் கூறினார்.
திரும்பிச்செல்லும்போது ஞானி என்னிடம் “அறிவன் ஒருவர்தான் அதைப் பற்றி படித்து உள்ளடக்கம் சார்ந்து தன் கருத்தைச் சொல்கிறார். பெரும்பாலானவர்கள் விஷ்ணுபுரம் என்ற தலைப்பு குறித்து மட்டும் தான் தெரிந்துவைத்திருக்கிறார்கள். இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்திலேதான் பாதிப்பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலோட்டமாக நாவலின் உள்ளடக்கம் பற்றி கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார்கள். படித்துப் பேசுபவர்கள் அனேகமாக எவருமே இல்லை”என்றார்
கோவையில் பரவலாக அறியப்பட்ட ஒரு முற்போக்குச் சோட்டா எழுத்தாளர் “விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதி” என்று ஞானியிடம் சொன்னார். ஞானி “எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஐயா அதன் அட்டையைப்பாருங்கள், அது காவி நிறத்தில் இருக்கிறது, அதில் தாமரை இருக்கிறது” என்றார். வேடிக்கையில்லை, அன்று ஒரு பிரபல விமர்சகரே அப்படி அட்டையை மட்டும் கட்டுடைத்து நாவலைப்பற்றி நீண்ட கட்டுரை எழுதியிருந்தார்
ஞானி சிரித்தபடி, “ஒரு புத்தகத்திலே அட்டைக்கு மேலேயும் சில விஷயங்கள் இருக்க வாய்ப்பிருக்கு தோழர்” என்றார். “ஆமாங்கய்யா, அது என்னமோ உண்மைதான்” என்று அந்த முற்போக்கு எழுத்தாளர் சொன்னார். ஞானி அருகில் நின்ற என் நண்பரிடம் “சில ஆட்களின் ரசனை அப்படி. பெண்களை பார்த்தால் ஒரே ஒரு உறுப்பை மட்டும் தான் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் முடிவெடுத்துவிடுவார்கள்” என்றார். “ஆமாங்கய்யா”என்றார் முற்போக்கு எழுத்தாளர்.
ஞானி பின்னர் எனக்கு எழுதினார். ‘இவர்கள் எடுக்கும் இந்த நிலைபாடுகளைப்பற்றி ஆச்சரியமாக இருக்கிறது. முழுமையாகப் படிக்கவில்லை, புரிந்துகொள்ளவுமில்லை. ஆனால் ஒரு இறுதிநிலைபாடு எடுத்து ஆவேசமாகப் பரப்புகிறார்கள். நாவலை உண்மையிலேயே படிப்பவனின் பார்வையில் அசடுகளாக தென்படுவோம் என்றுகூட இவர்களுக்குத் தோன்றவில்லை. இயந்திரவாத அணுகுமுறை என்பது ஒரு ஆவேசமான மதநம்பிக்கை போல. அது அசட்டுத்தனம், ஆனால் அறிவுமாதிரி தோற்றம் அளிக்கிறது. ஆகவே தன்னம்பிக்கையை அளித்து அறிவை அணுகவிடாமல் செய்துவிடுகிறது”
[மேலும்]