ஞானி-11

ஞானி நான் அவரை சந்திக்கும் 89-ல் மார்க்சியத்தின் போதாமைகள் என்ன என்பதை குறித்த உசாவல்களையே முதன்மைச் சிந்தனையாக கொண்டிருந்தார். அப்போதாமைகளை உலகம் முழுக்க இருந்த மார்க்சியச் சிந்தனையாளர்கள் உணரத்தொடங்கிய காலம் அது. ஞானி கம்யூனிச இயக்கத்திலும் அரசிலும் பிரிக்கமுடியாதபடி இருந்த அதிகார அடுக்குகள், அதன் வன்முறை குறித்து மார்க்சியத்தில் நுழைவதற்கு முன்பே அறிந்திருந்தார். மார்க்சிய ஆர்வம் வரும்போது அவர் படித்த நூல்களில் ஒன்று ஆர்தர் கோஸ்லரின் [Arthur Koestler ] ஸ்டாலினிய எதிர்ப்பு நூல்கள். குறிப்பாக Darkness at Noon, The God That Failedபோன்றவை.

ஸ்டாலின் காலத்தில் 1935ல் நடந்த புக்காரினின் விசாரணை ,ஸ்டாலின் காலத்திற்கு பிறகு குருஷ்சேவின் வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தே அவர் மார்க்சியத்தில் இருந்தார். தொழிலாளர்வர்க்கச் சர்வாதிகாரம் இன்றியமையாததென்றும், அதில் ஓர் எல்லை வரை வன்முறை இருக்கும் என்றும், வன்முறை தனக்கேயான ஒரு இயங்கு முறை கொண்டது அதில் அகிம்சை அல்லது ஜனநாயகத்தை எதிர்பார்க்க கூடாதென்றும், பல தருணங்களில் வல்லவன் வெல்வான என்பதை ஒட்டியே அந்த சர்வாதிகார வன்முறை செயல்படும் என்றும் அவர் நம்பினார்.

ஆகவே தொடக்க காலத்தில் பல மார்க்சியர்களைப்போல ஸ்டானிலினிஸம் மார்க்ஸியத்தை வலுப்படுத்தக்கூடியது என்றும், அது கம்யூனிசம் எனும் கட்டமைப்புக்குள் இருக்கும் உறுதியாக எஃகாலான எலும்புக்கூடு என்றும் ஞானியும் நம்பியிருந்தார் அவர் மார்க்சியத்தின் போதாமைகள் என்று உணரத்தொடங்கியது ஸ்டாலினிஸத்தின் மீதான விமர்ச்னங்களால் அல்ல,தன் வரலாற்று அவதானிப்புகள் வழியாகவே.அவர் விரிவாக எழுதியவற்றிலிருந்தும் பேசியவற்றிலிருந்தும் மூன்று போதாமைகளை அவர் உணர்ந்தார் என்று கூறலாம். நூல்களில் விரிவாக எழுதியதுபோல உரையாடல்களில் மேலும் எளிமையாகவும் சுருக்கமாகவும் வரையறுத்தும் இவற்றை  அவர் சொல்லியிருக்கிறார்.

மார்க்சியத்தின் மையப்படுத்தும் தன்மை முதல்போதாமை. அது தேசியங்களின் இருப்பை புரிந்துகொள்ளாதது இரண்டாவது போதாமை. அதன் மெய்யியலின்மை மூன்றாவது போதாமை.

மார்க்சியம் மையப்படுத்தப்படும் தன்மை கொண்டது என்பது அதன் அத்தனை சிக்கல்களுக்கும் அடிப்படை. அது அதிகாரத்தை மையப்படுத்துவது மட்டுமல்ல, பண்பாட்டையும் பொருளியலையும் மையப்படுத்துகிறது. அதிகாரமையப்படுத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கை வலியுறுத்துவதற்கும் ஒரு திசைநோக்கிய பயணத்தை உருவாக்குவதற்கும் தேவை என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் பண்பாட்டை மையப்படுத்துவதும் பொருளியலை மையப்படுத்துவதும் இயற்கையின் செயல்பாட்டுக்கு எதிரானது.

பண்பாடு தன் ஒவ்வொரு தனிக்கூறுகளையும்  தொடர்ந்து வளரவைத்துக்கொண்டு முன் செல்வதாகவே அமையும். ஆகவே பன்மைத்தன்மை அதனுடைய இயல்பாக இருக்க முடியும். பன்மைத்தன்மைக்கு எதிராக செய்யப்படும் எந்த முயற்சியும் பண்பாட்டு வளர்ச்சிக்கு எதிரானது. பண்பாட்டை உறுதியான ஒரு இயந்திரமாக மாற்றக்கூடியது.

பொருளியலும் அவ்வாறே. பொருளியலின் ஒவ்வொரு கூறும் தன் தனி அடையாளத்தையும் தனித்த நோக்கத்தையும் தக்கவைத்தபடி, பிறவற்றுக்கு இடையேயான முரணியக்கம் வழியாகச் செயல்படும்போதே பொருளியல் ஆக்கபூர்வமாக இருக்கிறது. பொருளியல் மையப்படுத்தப்பட்டு முழுவிசையும் சிலரின் கட்டுபாட்டுக்கு செல்லும்போது அவர்கள் பொருளியல்மேல் அதிகாரம் கொண்டவர்களாகிறார்கள். அந்த அதிகாரம் பொருளியலை காலப்போக்கில் அழிக்கும்.

ஞானி சோவியத் ரஷ்யாவிலும் நடந்த பண்பாட்டு அழிப்பு, பொருளியல் அழிவுகளை குறித்து தொடர்ந்து கவலை கொண்டார் .உண்மையில் எண்பதுகளில் இதுகுறித்து தகவல்கள் வெளிவர வெளிவர மார்க்சியர்கள் இன்னும் மூர்க்கமடைந்து அந்த வெளிவரும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை, ஏகாதிபத்தியச்சதி சார்ந்தவை என்று சொல்லத்தலைப்பட்டார்கள். அந்த செய்திகளை பேசியவர்கள் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் விலைபோய்விட்டவர்கள், துரோகிகள் என்று முத்திரை குத்தினார்கள்.

இன்று வாசிக்கும் இளைஞர்களுக்கு விந்தையாக இருக்கும் 92-சோவியத் ரஷ்யா உடைந்தது, ஆனால் 89-ல்கூட சோவியத் ரஷ்யாவின் கட்டமைப்பில் ஏதேனும் ஒரு சிறு பலவீனம் உள்ளதென்று சொல்லும் அனைவருமே இடதுசாரிகளால் துரோகிகள், ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் என்று முத்திரைகுத்தப்பட்டார்கள். அந்த மிகையுணர்ச்சிக்குப் பின்னால் இருந்தது ஒரு பாதுகாப்பின்மையுணர்வுதான் என்று இன்று புரிந்துகொள்ள முடிகிறது. அன்று அது ஒரு கட்சிசார்பு வெறியாகவே கருதப்பட்டது. ஞானி அதனால் சூழ்ந்துகொண்டு தாக்கப்பட்டார். தொடர்ந்து வசைபாடப்பட்டார். எஸ்.என்.நாகராஜன் ஞானிக்காக குறிவைக்கப்பட்டார்.

ஒரு சிந்தனையை அதன் மிகக்குறைந்த தரத்திற்கு கொண்டு வந்து தாக்குவது என்பது தமிழ் சூழலில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது. உலகஅளவிலும் மார்க்சியர்களின் ஒருசாராரின் இயல்பு அது. ஆகவே ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோரின் எதிர்விமர்சனம் என்பது அவர்களின் சாதி சார்ந்த பார்வை என்றே அன்று கூறப்பட்டது. ஞானி தாக்குதல்களை ஒருபுன்னகையுடன் எடுத்து கடந்து செல்லக்கூடியவர். பெரும்பாலும் அவற்றால் அவர் புண்படுவதில்லை. அவருக்கு மிக நெருக்கமானவர்கள் எங்கேனும் ஏதேனும் கூறிவிட்டால் ஓரிரு நாட்கள் அவர் மனவருத்தத்தில் இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் தன்மை அவரிடம் இல்லை.

ஞானி 90-களில் என்னிடம் அடுத்த பத்தாண்டுகளில் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடையக்கூடும் என்றார். அது எனக்கு அதிர்ச்சியடையச்செய்யும் ஒரு செய்தியாக இருந்தது. ‘எப்படி அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். கிளாஸ்நோஸ்த்,பெரிஸ்த்ராய்க்கா ஆகியவை அன்று பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருந்தன, அவற்றை ரஷ்யச்சார்பு கம்யூனிஸ்டுகள் கம்யூனிசம் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு செயல்பாடு என்று விளக்கினார்கள்.

ஞானி ‘அப்படி அல்ல, உறுதியான வன்முறையின் மூலம்தான் சோவியத்ரஷ்யாவின் கட்டுக்கோப்பு நிலைநிறுத்தப்படுகிறது. அந்த கட்டுகோப்பு விலகுகிறது எனில் அது அழிவைத்தான் கொண்டு வரும்” என்றார். நான்  “ஓர் ஆக்கபூர்வமான உரையாடலுக்கான தொடக்கம் அது என்கிறார்களே” என்றேன்.

கோர்ப்பசேவ்

‘இல்லை. சோவியத் அமைப்பிலுள்ள அடிப்படையான சிக்கலையே அது காட்டுகிறது. அந்நாட்டை ஒருங்கிணைத்து நிறுத்துவதற்கான ராணுவத்தின் செலவென்பது அதை ஒருங்கிணைத்து நிறுத்துவதனால் வரக்கூடிய லாபத்தை விட அதிகமானது. ஆகவே அந்த அமைப்பு தொடர்ந்து நஷ்டமாகி வீழ்ச்சியைச் சந்திக்கும். அது ஒரு புள்ளியை அடைந்தபிறகுதான் அந்த ஒட்டுமொத்த அமைப்பை நிர்வகிக்கும் செலவை குறைத்தாகவேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்படுகிறது. அந்த செலவைக் குறைக்கும்பொருட்டுதான் அதை ஒரு ஜனநாயக கூட்டமைப்பாக மாற்றிக்கொள்ள முடியுமா என்று ரஷ்யா பார்க்கிறது. அதாவது ஒருங்கிணைந்ததனால் வரக்கூடிய பொருளியல் லாபங்களை ரஷ்யா அடையவேண்டும், ஆனால் அதற்கு இன்று அது செயல்படக்கூடிய செலவை செய்யக்கூடாது”

‘ஆனால் அது இயல்வதல்ல. ஏனெனில் ரஷ்யாவின் குடைக்கீழ் இருக்கும் தேசியங்கள் நடுவே அப்படி உண்மையான ஒர் ஒத்திசைவு கிடையாது.. இந்த மைய ராணுவக்கட்டுப்பாடு பலவீனமாகும்தோறும் அக்கூறுகளுக்கிடையே மோதலும் கசப்பும் வெடித்து அவை தனித்தேசியங்களாக சிதறிப்போய்விடும். ஏனெனில் அவற்றை ஒருங்கிணைந்த ரஷ்யதேசம் ஆக்கியது சக்கரவர்த்தி பீட்டரின் படைகளும்  அவற்றை நிலைநிறுத்தியது ஜாரின் கொடுங்கோன்மையே ஒழிய, நல்லெண்ணமோ பொருளியல் இணக்கமோ பண்பாட்டு ஒருமையோ அல்ல” என்று ஞானி சொன்னார். இது சார்ந்து தொடர்ந்து அவரிடம் உரையாடி இருக்கிறேன்,கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

இப்போது நினைக்கும்போது ஞானி ஆழமான ஒரு யதார்த்தபோதத்துடன் இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது. ஒரு கோவைக் குறுந்தொழிலதிபருக்குரிய நடைமுறை ஞானத்துடன். அன்றெல்லாம் எனக்கு கோர்ப்பசேவ் ஒரு மீட்பர். ஞானி சொன்னார். “நான் சின்னப்பையனா இருந்தபோதே எனக்கு குருசேவ் மேலே நம்பிக்கை வரல்லை. ஸ்டாலின்கீழே அத்தனை வருசம் இருந்தவர் அவர். அந்தப்பாதையிலே வந்தவர். தந்திரபூர்வமா அவர் ஸ்டாலினுக்கு எதிரான நிலைபாடு எடுத்து ஸ்டாலின் கால கொடுமைகளை வெளியே கொண்டுவந்தார். ஆனால் அதனாலெயே அவர் வேறமாதிரி ஆள் கிடையாது. அவர் வேறமாதிரி ஸ்டாலின், அவ்ளவுதான்”

“பிரஷ்னேவ் காலத்திலே மேலேறிவந்தவர் கோர்ப்பசேவ், அந்தப்பாதை அவரை டிசைன் பண்ணியிருக்கும். ஒரு சர்வாதிகாரிங்கிறவன் தனியாள் இல்லை. அவன் தன்னை மாதிரி ஆயிரம் பேரை உண்டுபண்ணி அவங்களை இணைச்சுத்தான் ஆட்சியைச் செய்ய முடியும். அப்டி ஒரு மிஷின் அங்கே இயங்கிட்டு இருக்கு. அது வழியா வந்தவர் கோர்ப்பசேவ். அவரும் இன்னொரு பிரஷ்னேவ்தான். அவர் சுதந்திரம் ஜனநாயகம்லாம் உத்தேசிக்கலை. இப்ப நடந்திட்டிருக்கிறது மிலிட்டரி காலனிசத்திலே இருந்து எகனாமிக் காலனிசத்துக்கான ஒரு மாற்றம். ஆனா அதை இப்டி சட்டுபுட்டுன்னு பண்ண முடியாது. பண்ண நினைக்கிறாங்க, அது ரஷ்யாவை உடைக்கிறதிலேதான் கொண்டுபோய் விடும்”

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பிறகு ஞானி மார்க்சியத்தின் இந்த சரிவு பற்றி மேலும் அதிகமாக கவலைப்பட்டார். அதிலிருந்து அவர் சென்றடைந்ததே மார்க்சிய மெய்யியலில் உள்ள போதாமைகுறித்த உணர்வு. வரலாற்று ரீதியாக உலகம் முழுக்க செயல்பட்ட விசைகளை கருத்தில் கொண்டே இந்த வினாவை அவர் சென்றடைந்தார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஏறத்தாழ எழுபத்திஐந்து ஆண்டுகாலம் அங்கே மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இருந்த கிறிஸ்தவ மதத்தின் மறுஎழுச்சியும் கூட. போலந்திலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைந்ததுமே ஒருகணம் கூட தளராத விசையுடன் மதம் மீண்டு வருவதை ஞானி கண்டார்.

“ரஷ்யாவிலே இருந்தது ஆர்தடாக்ஸ் கத்தோலிக்க மதம். உலகம் முழுக்க கத்தோலிக்க மதத்தை புரட்டஸ்டண்ட் மதம் நீக்கம் செய்ய முடிஞ்சிருக்கு. ஆனால் மார்க்ஸியம் ஏன் நீக்கம் செய்ய முடியலை? ஏன்னா எந்தக் கேள்விக்கு கத்தோலிக்கம் பதிலாக அமைகிறதோ அந்தக்கேள்விக்கான இன்னொரு பதில்தான் புரட்டஸ்டண்ட் மதம். மார்க்சியம் அந்தக் கேள்வியையே செவியிலே வாங்கிக்கலை”

ஞானி ஒரு சம்பவம் சொன்னார் 1970களில் நடந்தது. ஒரு தோழரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்தை ஆசுவாசப்படுத்த சகதோழர்கள் சொன்னார்கள். மூத்ததோழர் ஆறுதல் சொன்னார். “உங்க குடும்பத்திலே ஒரு உற்பத்தி அலகு இல்லாம ஆயிடிச்சு. பரவாயில்லை, ஒரு நுகர்வோர் அலகும் இல்லாம ஆயிடுச்சி”. சிரிப்பை அடக்கி ஞானி தொடர்ந்தார். “நல்லவேளை அந்த மகனை இழந்த தோழர் கவுண்டர். குழம்பிப்போய் வாயைப்பிளந்து உக்காந்திட்டிருந்தார். வேற யாராவது இருந்தா அப்பவே அடிவிழுந்திருக்கும். கவுண்டர்கள்னா புரிஞ்சுகிட ஒருமணிநேரம் டைம் தேவைப்படும். அதுக்குள்ள ஆளைக்கூட்டிட்டு கிளம்பிட்டோம்”

எங்கே இருக்கிறது மதம், எங்கிருந்து முளைக்கிறது? இது சார்ந்த கேள்விகளை அவர் தொடர்ந்து எனக்கு கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தார். அவரை நான் சந்தித்த போதெல்லாம் இவ்வியப்பை பல்வேறு கோணங்களில் அவர் தெரிவித்துக்கொண்டே இருந்தார். ஏனெனில் உண்மையிலேயே மதமற்ற ஒரு சமுதாயம் ரஷ்யாவிலும் சீனாவிலும் அமைக்கப்பட்டுவிட்டது என்று நம்பி வளர்ந்த ஒரு தலைமுறையை சேர்ந்தவர் அவர்.

1987ல் நோபல் பரிசு அளிக்கப்பட்ட ஜோசப் பிராட்ஸ்கியின் கவிதை ஒன்றில் இடிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தில் ஒரு தெருநாய் ஆலயச்சுவர் இருந்த இடத்தில் சென்று கால்தூக்கி ஒன்றுக்கடிக்கும் சித்திரம் வரும். அதை ஞானி குறிப்பிட்டு எனக்கு எழுதி, ‘நாய்களின் கால்களில் மட்டுமே தேவாலயங்கள் எஞ்சியிருக்கிறதென்று நினைத்தேன் ரஷ்யாவின் ஒவ்வொரு குடிமகனுடைய கனவிலும் அது எஞ்சியிருக்கிறது என்று இப்போது தெரிகிறது’ என்றார்.

எழுபத்தைந்து ஆண்டுகளாக, மூன்று தலைமுறைக்காலம் மதமற்றவர்களாக தன் குடிமக்களை வளர்த்து எடுத்தபிறகும் கூட மதம் எங்கிருந்து திரும்பி வருகிறது, அதுவும் எந்த குறைவும் இல்லாமல்? அது மீண்டும் தன்னை எப்படி நிறுவிக்கொள்கிறது? ஒப்பு நோக்க ஸ்வீடனிலும் நார்வேயிலும் ஃபரான்ஸிலும் மதம் அடைந்த பின்னடைவைக்கூட ரஷ்யாவில் மதம் ஏன் அடையவில்லை. அப்படி என்றால் கம்யூனிச அமைப்பில் எங்கு சிக்கல் இருக்கிறது?இதுதான் ஞானியின் கேள்வி.

இதற்கு விடையாக அவர் கண்டடைந்தது மனிதனுக்கு மெய்யியல் தேவைப்படுகிறது , மார்க்ஸியம் முன்வைக்கும் இயந்திரவாத மெய்யியல் அவனுக்குப் போதாது என்பதே. ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சி அளித்த மாற்றுத்தத்துவ, மாற்று வாழ்க்கைமுறை மதத்தின் மெய்யியல் அடிப்படையை  ஈடுகட்டும் அளவுக்கு வலிமையானதாக இல்லை. அது எளிமையான ஒர் உலகியல் வாழ்க்கையை அவர்களுக்கு அளிக்கமுடிந்தது. வாழ்க்கை, பிறப்பு, சாவு ஆகியவற்றின் அடிப்படை வினாக்களுக்கு விடையாக அமையும் ஆற்றல் கொண்டதல்ல அது.

ஒட்டுமொத்த இயற்கைக்கும், பிரபஞ்சவெளிக்கும், அதில் மனிதனுடைய இருப்புக்கும் விளக்கமாக மனிதனுக்கு நிறைவளிக்கும் ஒரு விடையை அளிப்பது மதம். அது பழங்குடி வாழ்க்கையில் உருவான மெய்யியல் அறிதல்களை தான் கைப்பற்றிக்கொண்டு, தத்துவார்த்தமாகவும் சடங்குகளாகவும் குறியீடுகளாகவும் விரித்துக்கொண்டது. மனிதனை ஆட்டுவிக்கும் அந்தரங்கமான துயரங்கள், பொருளின்மையுணர்வு ஆகியவற்றுக்கான மாற்றாக அமையும் தகுதி கொண்டது அதுதான்

ஆகவேதான் ஒரு கம்யூனிஸ்டு அமைப்பில் முழுக்க முழுக்க கம்யூனிஸ்டால் வளர்க்கப்படும் ஓர் இளைஞன் ரகசியமாக தன்னுடைய மதம் சார்ந்த கனவுகளை தக்க வைத்துக்கொள்கிறான். அவனுடைய மேல்மனம் முழுக்க முழுக்க கம்யூனிசம் சார்ந்து பழக்கப்பட்டும்கூட அவனுடைய ஆழ்மனம் மதம் வேண்டும் என்று எண்ணுகிறது. மதம் அங்கே வாழ்கிறது. கம்யூனிசம் மேல்மனத்தில் நீக்கப்பட்டதுமே மதம் ஆழ்மனத்திலிருந்து பொங்கி வந்து தன்னை நிறுவிக்கொள்கிறது.

மதம் உருவாக்கி நிறுத்தும் சமூகக்கட்டமைப்பை மாற்றவேண்டும் என்றால் மதத்தை அகற்றவேண்டும். மதத்தை அகற்றவேண்டுமென்றால் மதத்தின் மெய்யியலை மனிதர்கள் கடந்துவரவேண்டும். அதற்கு மாற்றாக ஒன்றை மக்களுக்கு அளிக்கவேண்டும். அது எது? ஞானியின் வினா இதுதான், மார்க்சிய மெய்யியல் என்று ஒன்றை அவர் பேசத்தொடங்கியது இச்சூழலிலேயே

இக்காலகட்டத்தில் ஞானி சொன்ன ஒரு சொற்றொடர் என்னை  நெடுங்காலம் சிந்திக்கவைத்திருக்கிறது. ‘மதத்தை நாத்திகத்தால் எதிர்க்கமுடியாது’. முதலில் கேட்கும்போது அர்த்தமில்லாத ஒருவரி என்றே பட்டது. பெரியாரியர்களின் மொத்தச் செயல்பாட்டையுமே தூக்கிவீசும் வரி அது. ஆனால் உண்மை அதுதான். ஆத்திகத்தை நாத்திகத்தால் எதிர்கொள்ளலாம், ஆனால் மதம் என்பது ஆத்திகம் மட்டும் அல்ல. நாத்திகத்துக்கும் இடமுள்ள மதங்கள் உண்டு.

மதத்தின் சாரம் இருப்பது மெய்யியலில். அதை நாத்திகத்தால் எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் நாத்திகம் என்பது மறுப்புவாதம், நேர்நிலைப்பார்வை அதற்கு இல்லை. அது தன் நேர்நிலை அடிப்படையாகக் கொண்டிருப்பது நவீன அறிவியலை, அதாவது நிரூபணவாத அறிவியலை மட்டும். அதில் மெய்யியல் இல்லை.

உண்மையில் தமிழகம் உட்பட எங்கும் நிகழ்ந்துகொண்டிருப்பது இதுவே. மதத்தை எதிர்க்கும் நாத்திகம் அதிலுள்ள நம்பிக்கை என்னும் அம்சத்தை மட்டுமே எதிர்க்கிறது. நம்பிக்கை மேலோட்டமானது, ஆழத்தில் இருப்பது மெய்யியல். அது பழங்குடிவாழ்வில் வேர் உள்ளது, பலநூறாண்டுக்கால வளர்ச்சி கொண்டது, ஆழ்மனம் சார்ந்து நிலைகொள்வது, அன்றாடச்சடங்குகளாக புழங்குவது. முக்கால் நூற்றாண்டுக்காலம் நாத்திகமே மையப்பேசுபொருளாக இருந்தாலும் தமிழகத்தில் நாத்திகம் மதத்தை எதிர்கொள்ளவே இல்லை என்பது இதனால்தான்.

மதத்தை இன்னொரு மெய்யியலால், இன்னும் வீச்சுள்ள இன்னும் பயனுள்ள மெய்யியலால், மட்டுமே எதிர்கொள்ள முடியும் என ஞானி நினைத்தார். அரசாங்கம் மக்களுக்கு அந்த மெய்யியலை அளிக்கமுடியாது. கட்சி பயிற்றுவிக்க முடியாது. கல்விக்கூடங்கள் கற்பிக்கமுடியாது. ஒரு சூழலில் உள்ள தத்துவமும் கலைகளும் இலக்கியமுமே அதைக் கற்பிக்கமுடியும்.

ஞானியின் இந்த தேடலும், குழப்பங்களும் நிகழ்ந்த சூழலில் அவருடன் நான் உரையாடலில் இருந்தேன். அவருடைய எல்லா தத்துவச் சிக்கல்களையும் பகிர்ந்துகொண்டேன். விஷ்ணுபுரம் உருவான விவாதப் பின்னணியும் இதுதான்.விஷ்ணுபுரத்தின் அடிப்படை வினாக்களும் மரபிலிருந்து எதைக் கொள்வது, மரபின் மெய்யான வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது, மரபை நிலைவிசையாக அன்றி எழுவிசையாக எப்படி எடுத்துக்கொள்வது என்பதே.நம் மெய்யியல்களின் தொன்மையான வேர்கள் என்ன, அவை எப்படி வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளன என்று விஷ்ணுபுரம் ஆராய்கிறது

1992 முதல் நான் நித்யசைதன்ய யதியின் மாணவனானேன். தொடர்ச்சியாக ஊட்டிசென்று நித்யாவைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். செல்லும் வழியிலோ திரும்பும்போதோ ஞானியையும் சந்திப்பேன். அவர் நித்யசைதன்ய யதி என்னிடம் பேசியவை என்னென்ன என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அவ்வுரையாடல்கள் மீதான என் கருத்துக்களை கேட்பார். தன்னுடைய மதிப்பீடுகளை பலசமயம் நான் ஊருக்குச் சென்றபின் கடிதங்களிலோ தொலைபேசி உரையாடலிலோ முன்வைப்பார்.

நான் நாராயணகுருவின் இயக்கத்தைப் பற்றி ஞானியிடம் விரிவாகப் பேசியிருக்கிறேன். ஐம்பது பக்க அளவிலான கடிதங்கள் கூட எழுதியிருக்கிறேன். ஞானி அதுவரை ஒரு சமூகசீர்திருத்தவாதி என்றே நாராயணகுருவை அறிந்திருந்தார். அவருடைய மூன்றாவது தலைமுறை மாணவராகிய நித்ய சைதன்ய யதி உருவாக்கும் செல்வாக்கு அவருக்கு வியப்பூட்டுவதாக இருந்தது.

“ஆயிரதைந்நூறு ஆண்டு தொன்மையான ஒரு தத்துவப்பார்வை நாராயணகுருவை எப்படி சமகாலச் சமூக சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய ஒரு சீர்திருத்தவாதியாக ஆக்கியது என்பது முக்கியமான கேள்விதான்” என்று ஞானி எனக்கு எழுதினார். “அவர் சமூகப்புரட்சியை உருவாக்கினார், ஆனால் அடிப்படையில் மெய்யியலாளராகவும் திகழ்ந்தார். அவர் ஏற்கனவே இருந்த ஒழுக்கங்களை மீறியபோது மேலும் சிறந்த ஒழுக்கங்களை முன்வைத்தார்”

“அவருக்கு அந்தச் சமூகம் அளித்த ஏற்புதான் நாம் கவனிக்கவேண்டியது. அது அந்த மெய்யியல் உருவாக்கிய ஏற்பு. அந்த மெய்யியல் அன்னியமானது அல்ல. அது அம்மக்களிடையே வேரூன்றியிருந்தது. அவர் அதை தொட்டு வளர்த்தெடுத்தார் என நினைக்கிறேன்” என்று ஞானி சொன்னார். “ஆமாம், நாராயணகுரு சொன்னது சங்கரரின் அத்வைதம். ஆனால் அடிப்படையான உருவகங்களில் இருந்து அனைத்தையும் அவர் மறுவிளக்கம் அளித்து நவீனப்படுத்தவும் செய்தார்” என்றேன்.

“கேரளத்தில் நாராயணகுரு உருவாக்கிய அடித்தளம் இருந்ததனால்தான் அங்கே கம்யூனிஸ சிந்தனை வேரூன்ற முடிந்தது. வங்காளத்தில் ராஜாராம் மோகன்ராயும் விவேகானந்தரும் உருவாக்கிய அடித்தளமே மார்க்ஸியத்தின் வேர்களாகியது. அப்படி இங்கே வள்ளலாரின் இயக்கம் பங்களிப்பாற்றியிருக்க முடியும். தெய்வத்திற்குச் சமானமான இடத்தில் சோறு நிறுத்தப்பட்டதும் ,பசிப்பிணி போக்குதலே முதல்வழிபாடாக கூறப்பட்டதும் ,மார்க்ஸியத்தின் அடிப்படையாக அமையும் தகுதிகொண்ட மெய்யியல் தரிசனங்கள்தான்” என்றார் ஞானி

“வள்ளலாரின் மெய்யியலில் இருந்து மார்க்ஸியம் விரிந்திருக்கவேண்டும். வள்ளலாரை மார்க்சியம் உள்ளிழுத்திருக்கவேண்டும். அது நிகழ்ந்திருந்தால் இந்த நிலத்தில் மார்க்ஸியம் இந்த அளவுக்கு அன்னியமாகியிருக்காது” என்று ஞானி சொன்னார்.

“மெய்யியலும் மதமும் திருடனின் டூல்பாக்ஸ் மாதிரி. சாவி, ஸ்க்ரூடிரைவர்,ஸ்பானர் எல்லாமே அங்கே இருக்கும். எப்டியாவது கதவைத் திறந்திரமுடியும்”. ஒரு மெய்யியல் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் தொன்மையில் உருவாகி தேவைக்கேற்ப தன்னை உருமாற்றி உருமாற்றி வந்ததாகவே இருக்கும். ஆகவே அது பலவகையில் நெளியக்கூடியது, இரும்பாலான தூண் அல்ல.அது தன் தேவைக்கேற்ப எல்லாவற்றையும் உள்ளிழுத்து தனக்காக மாற்றிக்கொண்டதாகவே இருக்கும். “மையத்தை தவறவிடாத தொகுப்புத்தன்மை’ என்பதே வாழும் மெய்யியலின் அடையாளமாக இருக்கும்

ஆகவே பழையமெய்யியல்களை தவிர்த்தும் எதிர்த்தும் மார்க்சிய மெய்யியல் நிலைகொள்ளமுடியாது. எல்லா மெய்யியல்களின் சாரத்தையும் மானுடவிடுதலையை இலக்காக்கி மறுவிளக்கம் கொடுத்து உள்ளிழுத்துக்கொண்டே அது தன்னை விரித்துக்கொள்ளவேண்டும். “மானுடனின் அகவிடுதலையும் புறவிடுதலையுமே மார்க்சியத்தின் மையம். அதை கைவிடாமல் அது எல்லா மெய்யியல்களின் சாரத்தையும் தன்னுள் இழுத்துக்கொள்ளமுடியும்”

பின்னாளில் அவர் எழுதிய மதம், மாற்றுமெய்யியல் குறித்த கட்டுரைகள் எல்லாம் உருவான காலகட்டம் அது. நானும் அதே கேள்விகளுடன் பிங்கலன் சங்கர்ஷணன் பாவகன் அஜிதன் என பலவாறாகப் பிரிந்து என் மெய்யியல் தேடல்களுடன் விஷ்ணுபுரத்தில் அலைந்துகொண்டிருந்தேன். அந்த வெளியில் நானும் ஞானியும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டிருந்தோம்,

[மேலும்]

முந்தைய கட்டுரைதன்மீட்சி எனும் இயக்கம்
அடுத்த கட்டுரைதிருமந்திரம் கற்பது