ம.நவீன் எழுதிய இந்தக்கட்டுரை அதில் என்னைப்பற்றிய குறிப்பு இருந்தமையால் பல நண்பர்களால் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. [கடிதம்: இலக்கிய அறம்- ம.நவீன்]
எனக்கு இக்கட்டுரையில் பிடித்திருந்தது, அவர் சென்ற பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக எதிர்த்துவரும் மலேசிய எழுத்தாளர் சங்கச் செயலர் ராஜேந்திரன் அவர்களைப்பற்றிச் சொல்லியிருக்கும் வரிகள்.
அந்த மனநிலையை பேணிக்கொள்வது, எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் புரியவைத்துக்கொண்டே இருப்பது, மிகமிகச் சவாலான ஒன்று. சமீபத்தைய அனுபவம், தமிழ் ஹிந்து நாளிதழ் வைரமுத்து பற்றிய போற்றிப்பாடடி கட்டுரைகளை வெளியிட்டபோது நான் எதிர்வினையாற்றியது சார்ந்தது. அணுக்கமான ஒரு வாசகி, நெடுநாள் நண்பர், ‘யூ டூ!” என்று நொந்து வாட்ஸப் செய்திருந்தார். இந்த அளவுக்குத்தான் இவருடைய புரிதலா என்று ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கிவிட்டேன். அதைப்போல ஒரு முப்பது கடிதங்கள் வந்தன.
நாம் ஒன்றை எதிர்க்கிறோம் என்றால் அது எதற்காக என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும். அது நாம் கொண்டுள்ள ஒரு நம்பிக்கை, ஒரு நிலைபாடு சார்ந்ததாகவே இருக்கவேண்டும். தனிமனிதர்கள் அல்ல, கொள்கைகளும் செயல்பாடுகளும் நிலைக்கோள்களுமே நம் மறுப்புக்குரியவை. நமக்கு எதிரிகள் இல்லை, எதிர்த்தரப்பு மட்டுமே உள்ளது.
இதை நமக்குநாமே வகுத்துக்கொள்வது, நாமே நம்பிச் செயலாற்றுவது எளிதல்ல. நாமே திரும்பத்திரும்ப நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அதையும் மீறி அவ்வப்போது நம்முள் இருந்து சினம் வெளிப்பட்டுவிடும், நாமே அதை எண்ணி அஞ்சவும் நாணவும் செய்வோம். பெரும்பாலும் போலித்தனங்களைக் காணும்போது, நம்மால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்று தோன்றும்போது. ஆனாலும் நம் நிலைபாடு நாம் கொள்கைகளுக்காக மட்டுமே பேசவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும்.
நடைமுறையில் சிலவற்றை நான் கடைப்பிடிப்பதுண்டு. நான் எதை எதிர்க்கிறேன் என்பதை பிற அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விலக்கியே சொல்வது, அதனுடன் பிறவிஷயங்களை கலக்காமல் இருப்பது. என் எதிர்ப்பை முன்வைக்கும் முன் சம்பந்தப்பட்ட மனிதரில் அல்லது பிரச்சினையில் எதையெல்லாம் ஏற்கிறேன் என்பதை முன்கூட்டியே விரிவாக முன்வைப்பது என் வழக்கம். என் பலகட்டுரைகளில் முதல்பகுதி ஏற்புகளாக இருப்பது இதனால்தான். என் கட்டுரைகளை வாசிக்கும் எளியவாசகர்கள் பலருக்கு “இந்தாள் என்ன இரண்டுபக்கமும் பேசுறான்” என்று தோன்றும். நான் எழுதவந்த காலம் முதலே இக்குற்றச்சாட்டு இருந்துகொண்டிருக்கிறது. முப்பதாண்டுகளாகச் சலிக்காமல் பதில்சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
வைரமுத்து விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். என் எதிர்ப்பு அவர் நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதத்தக்க இலக்கியத்தகுதி கொண்டவர் அல்ல என்பதனால் மட்டுமே. அதற்கான அழகியல் சார்ந்த விமர்சனக்காரணங்களை அவருடைய நாவல்கள், கதைகளை முன்வைத்து பதிவுசெய்திருக்கிறேன், எல்லா எதிர்ப்புடனும் அந்தக் கட்டுரைகளின் இணைப்பும் இருக்கும்
அப்படி அவர் முதன்மைப் படைப்பாளியாக முன்னிறுத்தப்பட்டால் நவீனத்தமிழிலக்கியம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும், இளம் வாசகர்கள் அந்த பிழையான எண்ணத்திலிருந்து அவர்களே விலகி நவீன இலக்கியம் நோக்கி வர மிகமிக பிந்தும், வரமுடியாமலேயேகூட ஆகும். என்ன காரணத்தால் சுந்தர ராமசாமியின் தலைமுறையில் அகிலனை எதிர்த்தோமோ அதே காரணத்தால்தான் இந்த எதிர்ப்பும்.
இது ஓர் உலகளாவிய இலக்கிய அழகியல் சார்ந்த அளவீடு. எதனால் மு.கருணாநிதி இலக்கியவாதி இல்லை என்றேனோ அதே நிலைபாட்டில்தான் இதையும் சொல்கிறேன். மு.கருணாநிதிக்கு அளித்த அதே அளவுகோலால்தான் வாஜ்பாயும் அப்துல் கலாமும் நரசிம்மராவும் இலக்கியம் படைக்கவில்லை என்கிறோம். நோபல் பரிசே பெற்றிருந்தாலும் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இலக்கியத்தில் இடமில்லை என்கிறோம்.
வைரமுத்து அவ்வண்ணம் தமிழுக்கு வெளியே அறிமுகப்படுத்தப்பட்டால் அது நவீனத்தமிழிலக்கியத்தைப் பற்றிய தேசிய அளவிலான பிழையான புரிதலை உருவாக்கும். இன்றுகூட அகிலன் ஞானபீடம் பெற்றதன் பாதிப்பில் இருந்து நவீனத்தமிழிலக்கியம் வெளிவரவில்லை. நாம் எந்த இந்திய இலக்கிய அரங்கிலும் எந்த மதிப்பும் பெறாதவர்கள். சிவராம காரந்துடனும் தகழியுடனும் ஒப்பிட்டு அகிலனை மதிப்பிட்டு ஒட்டுமொத்த நவீனத்தமிழிலக்கியமும் அந்த தரநிலையில் இருப்பதாக இந்திய இலக்கியவிமர்சகர் கருதுகிறர்கள். அந்த மதிப்பீட்டுக்கு எதிராக க.நா.சுவும் வெங்கட் சாமிநாதனும் வாழ்நாள் முழுக்கப் போராடவேண்டியிருந்தது.வெல்ல முடியவுமில்லை.
வைரமுத்துவை நவீன இலக்கியத்தின் முதன்மைமுகங்களில் ஒன்றாகக் காட்டுவது என்பது நவீன இலக்கியத்தை பரவலான வாசகர்கள் நடுவே கொண்டுசெல்லும் பொருட்டு நாம் செய்துவரும் முயற்சிகள் அனைத்துக்கும் எதிரான செயல்பாடு. எந்தப் பயன்கருதலும் இல்லாமல், வாழ்க்கையை முழுக்கவே செலவிட்டு, ஒரு முடிவுறாப் போராக நாம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் இலக்கியச் செயல்பாட்டை அழிப்பது அது. ஆகவே அதை எதிர்க்க, அதன் உள்ளீடின்மையை உள்நோக்கங்களை வெளிப்படுத்த நாம் கடமைப்பட்டவர்கள்.
அதை நவீன இலக்கியத்தை முன்னிறுத்துகிறவர்கள் என்னும் பாவனைகொண்ட ஒரு நாளிதழ் செய்யும்போது அச்செயலின் பாதிப்பு மிகுதி. ஆகவே நாம் அதைக் கடுமையாக எதிர்க்கவேண்டியிருக்கிறது. அதையே ஓர் அரசியலிதழ் செய்யும் என்றால் நமக்கு ஒன்றுமில்லை. அவருக்கு சாகித்ய அக்காதமியோ ஞானபீடமோ வழங்கப்படுமென்றால் அதை எதிர்க்கவேண்டும். ஆதித்தனார் விருதோ கலைஞர் விருதோ வழங்கப்பட்டால் பொருட்படுத்த ஒன்றுமில்லை.
இது நம் இலக்கியச் செயல்பாடு. நாம் ஆழமாக உணர்ந்து நம்புவனவற்றைச் சொல்கிறோம். இப்பண்பாட்டில் இது ஒரு தரப்பு. ஆனால் காலப்பெருக்கில் நாம் தோற்று, பொருளிழந்து, மறக்கப்படலாம். நம் தரப்பு ஒருவேளை தவறென்றும் ஆகலாம. அதை நாம் இன்று எண்ணவே முடியாது. நாம் ஆற்றவேண்டியதை ஆற்றி கடந்துசெல்லவேண்டியதுதான். இதேபோல நம்மை எதிர்க்கவும் அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.
இந்த இலக்கியச் செயல்பாட்டை நாம் திரும்பத்திரும்ப விளக்கவேண்டியிருக்கிறது. இது தனிப்பட்ட காழ்ப்பு அல்ல, இது ஒட்டுமொத்த மறுப்பு அல்ல என நிறுவிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.
இதில் என்ன சிக்கல் என்றால் நாம் எதிர்க்கும்போது எளிய வாசகர்கள் அந்த ஆளுமையையே ஒட்டுமொத்தமாக நாம் வெறுக்கவேண்டும், ஒதுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதாவது நாம் அவர்களை ‘அடித்துநொறுக்கவேண்டும்’ ‘காலிபண்ணவேண்டும்’ என்று. இருதரப்பும் அப்படி நினைக்கிறார்கள். ஒருகும்பல் ஏற்கனவே வைரமுத்துவை வெறுப்பது, அவர்கள் நம்முடன் வந்து சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்தமாக அவரை நான் எதிர்க்கவேண்டும் என்பார்கள். எதிர்தரப்பினர் அவரது ஆதரவாளர்கள், அவர்கள் நாம் அவரை பாராட்டிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு நம்மிடம் ‘முரண்பாடு’ இருப்பதாகக் கண்டுபிடித்துச் சொல்வார்கள்.
‘அப்ப அப்டிச் சொன்னார், இப்ப இப்டிச் சொல்றார். நம்பமுடியாதவர். விலைபோய்விட்டார்’ [என்ன விலை!] இது இரு சாராருமே சொல்வது. இந்த இரு தரப்பினரையுமே ஒதுக்கித்தான் முன் செல்லவேண்டும். நாம் இருதரப்பையும் சொல்வது என்பது வாசகனுக்காக. அவன் அந்த எதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட நிலைபாட்டிலிருந்து கொள்கைரீதியாக எழுவது மட்டுமே என்று புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக.
இங்கே கருத்தியல் தளத்தில் செயல்படுபவர்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம், நீங்கள் என்ன சொன்னாலும் உட்கார்ந்து தேடி பழைய எதையாவது கண்டடைந்து, அதை சந்தர்ப்பங்களில் இருந்து வெட்டி, திரிபுசெய்து, ‘முரண்பாடுகளை’ கண்டடைந்து கெக்கலிக்கும் ஒரு கூட்டம் உண்டு. இவர்களின் மொத்தக் கருத்துச் செயல்பாடும் இதுதான்.
இவர்கள் மிகமிக எளிய அன்றாடச்சூழலில் பதுங்கிவாழும் எலிகள். எந்த இடத்திலும் தன் கருத்துடன் நிற்கும் அறிவாற்றலும் நேர்மையும் அற்றவர்கள். இவர்கள் தங்களைப்போல பிறரையும் இழுத்துவிட எப்போதுமே முயன்றுகொண்டிருப்பவர்கள். எளிய பிழைப்புவாதிகள், ஆகவே உலகில் அத்தனைபேருமே பிழைப்புவாதிகள் என நம்ப முயல்பவர்கள். ‘எவன் சார் யோக்கியன்!”என்ற வரியையே தத்துவ நிலைபாடாகக் கொண்டவர்கள். இந்த பூச்சிகளை பொருட்படுத்தாமலேயே இங்கே விவாதங்களை நிகழ்த்தவேண்டும்.
இருபதாண்டுகளாக, வைரமுத்துவின் ஆரம்பகால எழுத்துக்கள் முதலே, அழகியல்ரீதியாக என் விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. அவருடைய நாவல்களும் கதைகளும் வந்தபோதும் சரி, அவருக்குச் சாகித்ய அக்காதமி அளிக்கப்பட்டபோதும் சரி, அவர் ஜெயகாந்தனிடம் பொய்யான சான்றிதழ் பெற்றபோதும் சரி, அவர் ஞானபீட முயற்சிகள் செய்யும்போதும் சரி, நான் மட்டுமே தமிழில் தொடர்ச்சியாக விமர்சனமும் எதிர்ப்பும் தெரிவித்துவருகிறேன். நாளையும் என் குரலே ஒலிக்கும், பெரும்பாலும் என் குரல் மட்டுமே ஒலிக்கும்
ஆனால் அவர் ஆண்டாள் பற்றி கூறிய கருத்துக்காக வசைபாடப்பட்டபோது அவர் வசைபாடப்படுவதைத்தான் கண்டித்தேன். அது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல், நம் மொழியின் கவிஞனுக்கு எதிரான வசை. அதை ஏற்கமுடியாது. என் விமர்சனநிலைபாடு இனிமேலும் அப்படித்தான்.
என் எதிர்ப்பு வைரமுத்து மீதான எந்தக் கசப்பினாலும் அல்ல. சொல்லப்போனால் அவர்மேல் மதிப்பே இருந்தது — மீடூ விவகாரம் அதில் ஒரு கரும்புள்ளி. அதன்பொருட்டு அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தேன். ஏனென்றால் தொடர்ச்சியாக மீடூ விவகாரத்தை ஆதரித்து வந்தவன் நான். ஆனால் அவரை எதிர்த்துவந்தவன் என்பதனால் உடனே அதை இன்னொரு ஆயுதம் என்று எடுத்துச் சுழற்ற நான் தயாராக இல்லை.
ஒருவரை நாம் எதிர்க்கும்போது வேறுபல காரணங்களுக்காக அவரை எதிர்ப்பவர்கள் வந்து நம்முடன் சேர்ந்துகொள்வதை தடுப்பதைப் பற்றி நவீன் எழுதியிருக்கிறார். அவர்களுக்கு நாம் ஆயுதமாக ஆகிவிடலாகாது. இது ஓர் அடிப்படை விதி என நான் எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். நம்முடன் வந்து சேரும் இக்கும்பல் நம்மை நம் கொள்கைகளிலிருந்து கீழிறக்கி சண்டைக்காரனாக்குகிறது. அவர்களுடைய அடியாட்களாக ஆக்குகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அவர்களை முதலில் கழற்றிவிட்டுவிட்டே முன்னகரவேண்டும்
வைரமுத்துவை நான் கண்டித்ததுமே இந்துத்துவக் குழுவினரும், மேலோட்டமான பெண்ணியக் குழுவினரும், ஒரு சில சாதிக்குழுவினரும், சில திரையுலகக் காழ்ப்பாளர்களும் வந்து எனக்கு ஆதரவு தெரிவித்துச் சூழ்ந்துகொண்டார்கள். ஏராளமான கடிதங்கள் வசைபாடி வந்தன, இணையத்திலும் வைரமுத்து மீது வசைகள் எழுந்தன. இந்துத்துவர்களுக்கு அவர் ஆண்டாள் பற்றிச் சொன்னதில் கோபம்– அவர்களின் தலைவர்கள் அவரை ஞானபீடத்திற்குப் பரிந்துரை செய்ததுபற்றி விமர்சனமே இல்லை.நான் அந்த ஆதரவுகளைப் பொருட்படுத்தவே இல்லை.
நான் எழுதியது வைரமுத்து மீதான வசைகளில் ஒன்று அல்ல, இங்கே ஒருநூற்றாண்டாக இருந்துவரும் நவீன இலக்கிய மதிப்பீடு அது. அதை நான் தெளிவுபடுத்தியாகவேண்டும், அதற்குமுன் இந்த ‘ஆதரவாளர்களை’ அதட்டித் துரத்தியாகவேண்டும். என் எதிர்ப்பு எதன்பொருட்டு என்பதை பிரித்து வகுத்து முன்வைத்தாகவேண்டும்.அதற்காகவே வைரமுத்து மீதான மதிப்பை,ஏற்பை பதிவுசெய்து எங்கே நான் எதிர்க்கிறேன் என விரித்து மீண்டும் எழுதினேன். வைரமுத்து மீதான கண்டனங்கள் 5-7-2020
அதை நான் செய்தபோது திடீரென்று என் வாசகர்கள் நண்பர்களிலேயே ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சி. ‘நீங்களுமா!” என்று கடிதங்கள். நான் 2020ல் எழுதிய அக்கட்டுரையில் உள்ள அதே கருத்தை அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2018ல் ஆண்டாள் விவகாரத்திலும் மிகத்திட்டவட்டமாக எழுதியிருக்கிறேன். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் கருத்து மறுக்கத்தக்கது, ஆனால் அவரை பழிப்பதை ஏற்கமுடியாது என்றே நான் எழுதினேன்.
தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும் நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் அதை கருத்துத் தளத்தில் கடுமையாக மறுக்கலாம், வசைபாடுவது கீழ்மை. தெய்வத்தமிழ் என தமிழை இறைவடிவாகக் கொண்டாடிய மரபில் வந்த எவரும் கவிஞனுக்கு எதிராகக் கீழ்மையைக் கொட்டமாட்டார்கள். [வைரமுத்து- 14-1-2018]
என்ன ஆச்சரியம் என்றால் முன்னர் வந்த அக்கட்டுரையை வாசித்து அதற்கு எதிர்வினையாற்றியவர்களே இந்தக்கட்டுரைக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக ‘அதிர்ச்சியடைந்து’ கடிதம் எழுதினார்கள். சிலர் ‘பல்டி அடிக்கிறீர்கள்’ என்றார்கள்.இது அறிந்தோ அறியாமலோ இவர்கள் செய்யும் ஒரு சூழ்ச்சி, நம்மை மறுக்கவேண்டுமென்றால் எங்கு வேண்டுமென்றாலும் போய் பழைய கட்டுரைகளை தேடி எடுத்து அவற்றில் முரண்பாடுகளை கண்டடைவார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான நிலைபாட்டை எடுக்கவேண்டும் என்றால் பழையவற்றை மறந்துவிடுவார்கள்
தி.மு.க பற்றிய என் விமர்சனத்தைச் சொல்வதற்கு முன் அது தமிழியக்க அறிவுத்தளம் கொண்ட கட்சி என்று சொல்லாமல் ஒரு போதும் மேலே சொல்லமாட்டேன். மு.கருணாநிதி குறித்து தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிடும் போற்றிப்பாடடி வகை நூல் அபத்தமானது என விமர்சிக்கும்போது அவருடைய ஆளுமையில் எனக்கு உகந்ததைச் சொல்லிவிட்டே மேலே பேசுவேன்.
ஏனென்றால் நான் சொல்லவருவது தி.மு.க அல்லது மு.கருணாநிதி குறித்த காழ்ப்பினால் எழும் கருத்து அல்ல. ஒர் அறிவுச்சூழலில் போற்றிப்பாடடி வகை மதிப்பீடுகள் பொய்யை நிலைநிறுத்துகின்றன, அறிவுச்சூழலில் அவற்றுக்கு இடமில்லை என்பதனால்தான். அந்த வேறுபாட்டை நிறுவவே விரும்புவேன். மு.கருணாநிதிமேல் காழ்ப்புகொண்டவர்கள் வந்து என்னை ஆதரிக்கும்போது அவர்களைத்தான் முதலில் வெட்டிவிடுவேன்.
நம் சூழலில் வம்பில் திளைக்கும் ஒரு கும்பல்தான் நாம் உருவாக்கும் ஒவ்வொரு விவாதத்தையும் முதலில் வந்து கவ்விக்கொள்கிறது. அதை வழக்கமான வம்பாக ஆக்குகிறது, அதற்காக மொத்த விவாதத்தையும் சிறுமைசெய்கிறது, திரிக்கிறது, கீழ்த்தரமான களியாட்டமாக ஆக்குகிறது. எதிர்ப்பவர்களானாலும் ஆதரிப்பவர்களானாலும் அவர்களிடமிருந்து நம் விவாதத்தை வேறுபடுத்திக்கொள்வதே நாம் செய்யவேண்டியது. அதற்கு நாம் முன்வைக்கும் கருத்துநிலைபாட்டை திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. நாம் அதற்குச் சலிக்கலாகாது
அத்துடன் இன்னொன்று, நம்பிக்கையூட்டுவது இது, இந்த வம்புகள் அதிகம்போனால் ஒருமாதம் நீடிப்பவை. அதன்பின் நாம் கூறிய கருத்துநிலைபாடே நினைவில் நீடிக்கும். அதுவே பின்னர் பேசப்படும். இணையம் இருப்பதனால் நம் நிலைபாட்டை நாம் மீண்டும் மீண்டும் எடுத்து வைத்துக்கொண்டே இருக்கலாம்.
வம்பிலிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கான வழிகள் இவை, இனி எழுதவருபவர்களுக்காக
அ. தனிப்பட்ட நடத்தைகள் போன்றவற்றை விவாதங்களுக்குள் கொண்டுவரவே கூடாது
ஆ.நாம் எதிர்ப்பவரில் நாம் ஏற்கும் விஷயங்கள் அனைத்தையும் சொன்ன பின்னரே எதிர்ப்புள்ள பகுதியைப்பற்றிப் பேசவேண்டும்
இ.திரிப்புகளுக்கும் வம்பாளர்களுக்கும் பதில் சொல்லலாம், ஆனால் விரிவாகப் பதில் சொல்லி விவாதத்தின் மறுதரப்பாக திரிப்பாளர்களையும் வம்பாளர்களையும் நிறுத்திவிடக்கூடாது. ஆகவே அவர்களுக்கு நம்மால் பெயர்சுட்டி மறுக்கப்படும் கௌரவத்தை கொடுக்கவே கூடாது. ஒருவர் நம்மால் பெயர்சுட்டி மறுக்கப்படவேண்டும் என்றால் அவர் நம் கருத்தியல்விவாதத்தின் ஒரு தரப்பாக அமையும் தகுதியை தன் கருத்துக்களால் ஈட்டியிருக்கவேண்டும்
ஈ. எந்த விவாதத்தையும் இறுதியில் நம் தரப்பை ஒருமுறை தொகுத்துச் சுருக்கி அளித்துவிட்டு ஒதுங்கிவிடவேண்டும்
உ.வம்புகள் அடங்கியபின் நம் தரப்பை இன்னொருமுறை முன்வைத்துவிடவேண்டும்
முன்பு ஒருமுறை ஒரு வம்பு குறித்து ஜெயகாந்தனிடம் பேசநேர்ந்தது, நான் பேசவில்லை, நண்பர் அன்பு அந்த ஐயத்தைக் கேட்டார் கேட்டார். ஜெயகாந்தன் சொன்னார். “நமக்கு இங்கு எவருடன் என்ன பகை?”
மீசையை கோதியபடி நிதானமான குரலில் அவர் சொன்ன அந்த வரி என்னை இன்றும் தொடர்கிறது. உண்மையிலேயே இங்கே எவர் நமக்கு எதிரிகள்? சிறுமை தாள முடியாமல் சிலரை பொருட்படுத்தலாகாது என முடிவுசெய்து முற்றொதுக்கியிருக்கிறேன். எதிரி என எவரையும் இன்றுவரை எண்ணியதில்லை.இனிமேலும் அப்படித்தான், நான் காலத்தின் மைந்தன், இங்கே எனக்கு எதிரி என எவருமில்லை.