நோய்:கடிதங்கள்

 

நோய்:ஒருகடிதம் கட்டுரை அருமையானது. நம்முடைய சமூகத்திலே நாமெல்லாம் பொதுவாகவே ஒரு விட்டேத்தியான மனநிலைக்கு தயாராக வளர்கக்ப்படுகிறோம். வாழ்க்கையை நேசிப்பதும் அனுபவிப்பதும் தப்போ என்று நமக்கெல்லாம் ஒரு குற்ற உணர்வு. கொஞ்சம் சிரித்தாலே நம்முடைய பாட்டிமார்கள் ரொம்ப சிரிக்காதே அப்புறம் அழுவற மாதிரி ஆயிடும்னு சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். மகிழ்ச்சியாக இருந்தால் ஏதோ இயற்கைக்கு மாறான விஷயம் என்று நாம் எண்ணுகிறோம். வாழ்க்கையில் உள்ள இன்பங்களை துறப்பது என்பதுதான் துறவு. அதன்மூலம் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட இன்பங்களைஅ டைவதுதான் நோக்கம். வாழ்க்கையை விரக்தி அடைவது அல்ல. அந்த உண்மைந் அமக்கெல்லாம் தெரிவது இல்லை. வாழ்க்கையை விரும்ப ஆரம்பிக்கிறவர்களுக்கு வாழ்க்கை இனிமையாகவே இருக்கிறது. அரதி, நோய் ஒரு கடிதம் என்ற இரு கடுரைகளிலும் அதையே அழகாகச் சொல்லியிருந்தீர்கள். இதை ஜெயகாந்தன் ஒரு கதையிலே நன்றாக சொல்லியிஉப்பார்., சிறுவயதில் வாசித்தது. ஒன்றாகப்படித்த இரு வயோதிகர்கள் சந்தித்துக்கொள்வார்கள். ஒருவர் ஒழுக்கத்தை மீறி வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருப்பார். இன்னொருவர் வாழ்க்கையை நடித்துக்கொண்டிருப்பார். ஜெயகாந்தன் முதல் கிழவரைத்தன் ஆதரிப்பார்

குலசேகர்
நோய்:ஒருகடிதம்மிகச்சிறந்த ஒரு படைப்பு. வாழ்க்கையை விரும்புவதும் வாழ விரும்புவதுமே நோய்க்கு முக்கியமான மருந்தாகும். வாழ்க்கை அதை விரும்புபவர்களுக்கு எப்போதும் இனிமையானதாகவே இருக்கிறது. அது அளிக்கும் இன்பங்கள் முடிவே இல்லாதவை. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாரதி பாடியது அதைத்தான். பல வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். எனக்கே சொல்லிக்கொண்டதுபோல இருந்தது

சிவகுமார்

அன்புள்ள ஜெயமோகன்,
 
வணக்கம்.
 
இன்றைக்கு பதியப்பட்ட நோய் கடிதம் அருமை..

உங்களை அனைவரும் தங்களில் ஒருவனாக நினைக்க ஆரம்பித்து உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்கின்றனர். எத்தனை நல்ல விஷயம்??

உங்களது மனதிலிருந்து எழும் எழுத்துக்களுக்கு கிடைத்த மரியாதையாய் இதைக்கொள்ளலாம்..

தொடர்ந்து இதேபோல அனைவரும் அணுக முடிந்த நண்பனாய் இருங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன் ஜெயமோகன்.

அன்புடன்,

ஜெயக்குமார்

அன்பு ஜெ சார். நலமா. இருதய வலி கொஞ்சம் படுத்தியதால், சில நாட்களாக உங்களைப் படிப்பதோடு போதும் எதிர்வினை வேண்டாம் என்றிருந்தேன். ‘அரதி’ என்னை மறுபடியும் எழுப்பி உட்கார வைத்து விட்டது. அறிவியல்பூர்வமாகவும், தத்துவார்த்தமாகவும் அருமையான எழுத்து. உருவ வழிபாட்டின் மற்றொரு பயன்பாட்டை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல், வாழ்வின் ரசனை அனுபவத்துக்கு முடிவே இல்லாத வகையில்தான் படைப்பு நடந்திருக்கிறது. காடு என்ன – ஒரு, செடி, ஒரு மலர், ஒரு இதழை, ஒரு இலையை ரசித்து முடிக்கவே வாழ்நாள் போதுமா? ஒரு குழந்தையின், ஒரு கிழவியின் பொக்கைவாய் சிரிப்பு ஒரு பொழுதெல்லாம் ரசித்து முடியுமா? ஒரு கன்றின் முதுகுச்சிலிர்ப்பு, ஒரு கோழியின் இறகுச்சிவப்பு, ஒரு தோழியின் கள்ளச்சிரிப்பு, ஒரு மாலைப்பூசை ஆரத்தியின் தங்கச்சொலிப்பு – சொல்லி முடிவதேது. போய்விட்டால் நஷ்டமொன்றுமில்லை என்றேஇருப்பேன். ஆனால், அதற்கான காரணம் ஒன்று, மறுபிறவியில் நம்பிக்கையும், அப்பிறப்பில், இன்னும் நல்ல உடல், மன வளத்தோடு இந்தப் பேரின்பங்களை இன்னும் கொஞ்சம் ஆழ அனுபவிக்கலாம் என்ற நம்பிக்கையும்.
ஒரு அருமையான, பயன் மிக்க கட்டுரைக்காக மீண்டும் வாழ்த்துக்களுடன், ரகு
அன்பு தகு ஜெ,
‘நோய்’ ஒரு கடிதத்துக்கு உங்கள் பொறுப்பான விடை படித்து நானும் பயன் தலைப்பட்டேன் (அவ் வழி ஏற்கெனவே பட்டுள்ளதால் பற்றவும் முடிகிறது). அந்த இளம் நண்பருக்கு நீங்கள் பொறுப்பேற்று அளித்துள்ள விளக்கம் மனித, சமுக அக்கறை உள்ளவர்களுக்கே கூடும் ஒரு நல்ல கருமம். ‘கர்மா’ பற்றிய கவனமே இதற்குச் சான்று. வீணை இசைக்கலைஞன் ஒப்பச்சிறந்த உணர்-திட எடுத்துக்காட்டு. உங்கள் நூலகத்திலும் வாசிக்கப்படா நூல்கள் மிக உள்ளனவா? ஹா ஹா ஹா! அன்ன குற்ற உணர்ச்சியையும் என்னில் இருந்து துடைத்துவிட்டீர்கள். எய்ததோர் அம்பு எல்லாத் திக்கிலும் பாய்வது கலைஞனுக்கே வாய்க்கும். ற்றுப்படுத்தியமைக்கு நன்றி.
அன்புடன்
ராஜசுந்தரராஜன்
 

 

 

அரதி

ஹோமியோபதி:ஒருகடிதம்

முந்தைய கட்டுரைஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்
அடுத்த கட்டுரைஆர்.வெங்கடராமன் அஞ்சலி