அன்புள்ள ஆசிரியருக்கு,
ராஜ் பகத் பழனிச்சாமி என்ற நாகர்கோவில் நண்பர் செயற்கைக்கோள் படங்கள் வழியாக, இந்திய பெருநிலத்தின் மீதான பிரமிப்பை கூட்டிவருகிறார்.
அவருடைய பெற்றோர் BSNLல் உங்களுடன் பணியாற்றியவர்கள் என அறிந்தேன். அவர் டிவிட்டரில் பகிர்ந்த இந்தப்படம் உங்களை வாசிக்கும் நண்பர்கள் அனைவரையும் ஈர்க்கும் என்று எண்ணுகிறேன்.
https://mobile.twitter.com/rajbhagatt/status/1285578855747481601
நன்றி
சதீஷ் ராமதுரை
***
அன்புள்ள சதீஷ்
இந்த காட்சியை முன்பு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரும் இண்டிகோ விமானத்திலிருந்து பார்த்திருக்கிறேன். எனக்கே குமரிமாவட்டத்தின் நில அமைப்பு மிகச்சரியாக புரிந்தது அதன்பின்புதான். இந்த வான்வரைபடம் நெடுநேரம் திளைக்கச் செய்தது.
மலைகள் எப்படி மொத்தமாகவே குமரிமாவட்டத்தை வளைத்திருக்கின்றன, எப்படி மொத்த மழையையும் இப்பக்கமே பெய்யச் செய்கின்றன என்பதை இந்த வான்வரைபடம் காட்டுகிறது.
பெரும்பாலும் மலைப்பகுதி, மலையடிவாரம், நேராக கடலோரம் என்றுதான் குமரிமாவட்டம் இருந்திருக்கிறது. 1800 களின் குடியேற்ற அலைக்குப்பின்னரே மலைப்பகுதி வாழ்நிலமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவரை வரலாறே கடலோரத்தை நம்பித்தான். முக்கியமான கோயில்கள் எல்லாமே கடலோரமாக அமைந்துள்ளது இதற்குச் சான்று
ஜெ
***