என் வாசகர்கள்

யாருக்காக?

அன்புள்ள ஜெ

‘யாருக்காக’ கட்டுரையை வாசித்தேன். அதை வாசித்த அன்று இணையத்தில் ஒருவர் உங்கள் கதைகள் பற்றி எழுதியதை வாசிக்க நேர்ந்தது. அதில் உங்கள் வாசகர்களைப் பற்றிய இளக்காரமான குறிப்பு இருந்தது. அந்தக்கட்டுரையே மிகமிகச் சாதாரணமான வாரப்பத்திரிகை வாசிப்பு கொண்டது. அதை எழுதியவருக்கு இலக்கியவாசிப்பில் அறிமுகமே இல்லை என்பது தெளிவு. ஆனால் அவ்வளவு தோரணை. அவருடைய அந்த தன்னம்பிக்கை மிக்க குரல் எனக்கு குமட்டலை உருவாக்கியது.

அவருக்கு கொஞ்சம் புரட்டிப்பார்க்கும் வழக்கமிருந்தால்கூட அவரால் நினைத்தே பார்க்கமுடியாத தரத்தில் உங்கள் வாசகர்களின் கடிதங்களும் கட்டுரைகளும் இருப்பதைக் காணமுடியும். அக்கடிதங்களை எழுதியவர்கள் பலர் இன்று முக்கியமான எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள். இன்று எந்த இணையதளத்திலானாலும் அவர்களின் இடம்தான் அதிகம். ஒரு கட்டுரை, விமர்சனநூலில் தரமாக எழுத்து வேண்டுமென்றால் அவர்கள்தான் எழுதவேண்டியிருக்கிறது. உங்கள்மேல் கசப்புகொண்ட காலச்சுவடு போன்ற இதழ்களுக்கேகூட இதுதான் நிலைமை.

அப்படியிருக்க உங்கள் வாசகர்களை மட்டம்தட்டுவதைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். செய்பவர்கள் எவர் என்று பார்த்தால் சென்ஸிபிளான வாசகன் வாசிக்கும் தரத்தில் பத்துபக்கம் கூட எழுதாதவர்கள். இந்த அசடுகளுக்கு இம்மாதிரித் தன்னம்பிக்கை எப்படி வருகிறது? இணையத்தில் எழுதும் இந்தவகையான அமெச்சூர்கள் மட்டுமல்ல சில எழுத்தாளர்களும் கொண்டிருக்கும் தன்னம்பிக்கையை பார்க்க உண்மையில் பயமாகவே இருக்கிறது.

ஒரு வலைத்தளத்தில் ஒருவர் பேசும்போது அந்தப்பேச்சுக்குப் பின் ஜெயமோகன் தமிழில் காணாமல் போய்விடுவார் என்கிறார். மேலோட்டமான கல்கி-கணையாழி எழுத்தாளர்கள் உங்கள் படைப்புக்களை தோலுரிப்போம் என்று கொக்கரிக்கிறார்கள். எழுத்துப்பிழை விமர்சனம் செய்து இலக்கியம்பேசிவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். இலக்கியமென்றால் என்ன விலை என்று கேட்கும் மொக்கையான அரசியல் எழுத்தாளர்களின் தன்னம்பிக்கை மனநோய் அளவுக்கு சென்றிருக்கிறது.

இவர்களுடன் ஒப்பிட்டால் நாலைந்து கேலிகிண்டல்களை, மீம்களைப் போட்டால் உங்கள் எழுத்தை ’கடந்து’விடலாம் என நினைப்பவர்களின் கூட்டம் மேல். அவர்களுக்கு ஒரு அப்பாவித்தனம் உள்ளது. அவர்கள் நாளை சிலசமயம் வாசிக்க வாய்ப்பு உண்டு. .

இந்த ஒவ்வாமையை அவ்வப்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. நீங்கள் இவர்களை எப்படி கடந்துவருகிறீர்கள்? உங்களுக்கு உண்மையில் ஒவ்வாமை இருந்ததே இல்லையா?

வி.சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

அப்படி ஒவ்வாமை அடைந்த காலம் இருந்தது, தொண்ணூறுகள் வரை. அன்று நான் இளைஞன். நான் முட்டிமோதி படித்துக்கொண்டிருந்தேன். அறிஞர்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தேன்.அதற்காக சலிக்காமல் அலைந்தேன், பக்கம்பக்கமாக கடிதங்கள் எழுதினேன், ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை மொழியாக்கம் செய்து புரிந்துகொண்டேன். ஆனால் எல்லாவற்றையும் புரட்டிப்பார்ப்பவர்கள், எதைப்பற்றியும் எந்த அடிப்படைப்புரிதலும் இல்லாதவர்கள் அபாரமான தன்னம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ‘தட்டிவைக்க’ அப்போது நான் முயன்றதுண்டு.

ஆனால் அதன்பின்னர்தான் அந்த தன்னம்பிக்கையை உடைக்கவே முடியாது என்று புரிந்துகொண்டேன். ஒருவரின் வாசிப்பும் புரிதலும் குறைவாக இருக்கையில் இலக்கியம் தத்துவம் ஆகியவற்றில் சில திட்டவட்டமான கருத்துக்கள் உருவாகிவிடுகின்றன. ஒற்றைவரிகளில் சொல்லத்தக்க நாலைந்து நிலைபாடுகள் அவை.அவை ஆரம்பத்திலேயே உருவாகி வாழ்க்கை முழுக்க நீடிக்கும். அவற்றை அவர்கள் முழுமூச்சாக நம்புவார்கள். ஆகவே அவற்றை எவராலும் மாற்றமுடியாது.

அந்த அடிப்படையான உறுதிப்பாடுதான் அந்நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது. சிந்திப்பவனுக்கு ஒரு தேடலும், ஐயங்களும் இருக்கும். இவர்களிடம் அது நிகழ்வதே இல்லை. ஆகவே உலகிலுள்ள அனைத்தையும் மறுக்க, விமர்சிக்க, கேலிசெய்ய துணிவார்கள். அது ஆணவம் அல்ல, அறியாமையின் மூர்க்கம். ஆணவம் அறிவிலிருந்து வருவது, அறியாமையின் மூர்க்கம் அதைவிட பலமடங்கு ஆற்றல்மிக்கது. அதனுடன் பேசவே முடியாது.

விஷ்ணுபுரம் எழுதியபின் வந்த எதிர்வினைகளிலிருந்து அதைக் கண்டுகொண்டேன். அப்படைப்பின் உருவமும் ஆழமும் அதன் வீச்சும் கண்கூடானவை என்றும், ஆகவே அந்த அடிப்படையான மதிப்பிலிருந்தே அதன்மீதான விவாதங்கள் எழும் என்றும் நான் நினைத்தேன். ஆனால் அது அப்படி எந்த மதிப்பையும் அறிவிலிகளிடம் உருவாக்கவில்லை. அவர்களை அது சீண்டவே செய்தது. அதன் அட்டையை வைத்தே பேசித்தள்ளினார்கள். எந்த பதிலும் விளக்கமும் அவர்களிடம் சென்று சேரவில்லை.

அது ஒரு பெருந்திறப்பு. நான் வாசகனின் நுண்ணுணர்வை நம்பவேண்டியதுதான் என முடிவுசெய்தேன். அவர்கள் இந்த அபத்தமான ஒற்றைவரியாளர்களை புரிந்துகொள்வார்கள் , அவர்களின் சொற்களை பொருட்படுத்த மாட்டார்கள் என நினைத்தேன். அவர்களை முழுமையாக புறக்கணித்தேன். என் நம்பிக்கை உறுதியாகியது

இன்று என் உலகில் இவர்கள் இல்லை, மிஞ்சிப்போனால் ஒரு எளிமையான நையாண்டிக்கு அப்பால்  இவர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என்று உறுதிபூண்டிருக்கிறேன். அப்படி ஒருவர் ஒருமுறை எழுதிவிட்டார் என்றால் அவர் மீதான எல்லா மதிப்பையும் முழுமையாக ரத்துசெய்துவிடுவேன். பிறகு அவர் என்னை அணுகவே விடமாட்டேன்.

என் வாசகர்களின் வாசிப்பின் தரம் இன்னொரு நல்ல வாசகனுக்குப் புரியும். கொஞ்சம் தெளிவுள்ளவர்களுக்குத் தெரியும், என் வாசகர்களின் வட்டத்துக்கு வெளியே ஒரு நல்ல கடிதம், வாசகஎதிர்வினை கண்ணுக்குப்படுவது  என்பது அரிதினும் அரிது என்று. இங்கே பொதுவாக வெளிவருபவை மிகப்பெரும்பாலும் ஏகத்தாளமான, அல்லது மிதப்பான, அல்லது பூசல்தன்மையான, அல்லது செயற்கையான பொறுக்கித்தனத்துடன் எழுதப்படும் கட்டுரைகளும் குறிப்புகளும்தான். அவை உள்ளீடற்றவை, நுண்ணுணர்வின்மையின் வெளிப்பாடுகள்.சீரான மொழியில், உண்மையான வாசிப்புடன் எழுதப்படுபவை மிகக்குறைவு.

உண்மையில் இவ்வட்டத்துக்கு வெளியே இருப்பவர்களில் தீவிரமான சிலர் தவிர எஞ்சியவர்கள் வாசிப்பதே குறைவு. முகநூல் பக்கங்களை வாசிப்பதுடன் சரி. சற்று பக்க அளவில் கூடுதலாக எழுதிய எவரும் இங்கேதான் தங்கள் வாசகர்களை கண்டடையவேண்டும்.சமூகவலைத்தள வம்புகளில் சிக்காதவர்கள், ஒரு நிகழ்ச்சியில் மட்டும் வந்து சந்திப்பவர்கள், ஆனால் ஆழமாக தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பவர்கள், அதாவது மெய்யான வாசகர்கள், இங்குதான் உள்ளனர்.

அவர்கள் இலக்கியம் சார்பான எந்த விஷயத்துக்கும் ஆதரவளிப்பவர்கள். எழுத்தாளர்களுக்கு ஒரு நிதிச்சிக்கல் என்றால்கூட அவர்களிடமே சென்று கேட்கமுடியும்- நான் அல்ல, மற்ற எழுத்தாளர்களும். எந்த இணைய இதழுக்கும் உண்மையில் வாசகர்களில் பாதிக்குமேல் என் வாசகவட்டத்தவரே. அவற்றில் எழுதுபவர்களும் அவர்களே.

எழுத்தாளர் இந்த வாசகர்வட்டத்தின் கவனத்துக்குள் வந்தால் மட்டுமே தன் வாழ்நாளில்பெற்ற சிறந்த எதிர்வினையைப் பெறுவார்—இதை அவ்வாறு பெற்ற எந்த எழுத்தாளரும் மறுக்கமாட்டார். மூத்த எழுத்தாளர் எவராயினும் அவரைப் பற்றி சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்ட பொருட்படுத்தப்படவேண்டிய எதிர்வினைகள் என் வாசகர்வட்டத்திலிருந்தே வந்திருக்கும். இதை என்னிடம் சொல்லிய பலர் உண்டு

பல எழுத்தாளர்கள் புதிய ஊர்களுக்குச் செல்லும்போது அங்கே அவரை வந்து சந்தித்து அவர்களின் நூல்களை ஆழமாகப் படித்துவிட்டுப் பேசும் வாசகர்கள் என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்கள். அவ்வப்போது நானே வாசகர்களை அழைத்து அவ்வெழுத்தாளர் இலக்கியம் அறியாத சூழலில் விடப்படக்கூடாது, சென்று பாருங்கள் என்று சொல்வதுண்டு.

ஒருமாதகாலம் இலக்கியச்சூழலில் ஒருவர் உலவினால் என் வாசகர்களின் வட்டத்திலிருந்து மட்டும்தான் மிகச்சிறந்த இலக்கியப் பதிவுகள் வந்திருப்பதைக் காண்பார். உலக இலக்கியம் பற்றி, தமிழிலக்கியம் பற்றி ஆழமான அழகியல்நோக்கு கொண்ட ஆய்வுகள் வேறெவராலும் இன்று எழுதப்படுவதில்லை. இந்தச்சிறு சுற்றுக்கு வெளியே அன்றாட அரசியல் சாந்த ‘ஆய்வுகள்’ மற்றும் கதைச்சுருக்க இலக்கியப்பேச்சுக்கள் மட்டுமே அவருக்கு காணக்கிடைக்கும்.

இதற்குக் காரணம் என் வாசகர் என்பவர் என்னுடன் ஓர் உரையாடலில் இருப்பவர் என்பதே. அவர் என் படைப்புகளை மட்டும் வாசிக்கும் ரசிகர் அல்ல. நான் அவருக்கு இலக்கியத்தை தொடர்ச்சியாக அறிமுகம் செய்கிறேன். இந்த தளத்தில் பேசப்பட்டுள்ள படைப்பாளிகளின் ஒரு பட்டியலை எடுங்கள், தமிழில் வேறெங்கேனும் இத்தனை பிரம்மாண்டமான இலக்கிய விவாதம் இதற்குமுன் நிகழ்ந்துள்ளதா என்று பாருங்கள்

என் வாசகர் என்னுடன் இலக்கியக் கருதுகோள்களை, இலக்கிய வரலாற்றை விவாதிக்கிறார். உலக இலக்கியத்தின் படைப்புகளை பற்றி அவர் எனக்கு எழுதுகிறார். சமகாலத் தமிழிலக்கியத்தில் அவர் வாசித்தவற்றைப் பற்றி கூறுகிறார். பின்னர் தன் வலைத்தளங்களில் எழுதுகிறார். உண்மையில் இன்று எந்தப் படைப்பாளியானாலும் ஒரு நல்ல மதிப்புரை வரவேண்டுமென்றால் என் வாசகர் எழுதினால்தான் உண்டு. அந்த மதிப்புரையைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு கடிதம் எழுதியபின், பொதுவாக என் வாசகர்கள் பற்றி நையாண்டியாக எழுதியவர்கள் உண்டு.

என் வாசகர்கள் உலக இலக்கியம் பற்றி, தமிழ் நவீன இலக்கியம் பற்றி எழுதிய பலநூறு கட்டுரைகள் என் தளத்தில் வெளியாகவோ சுட்டி அளிக்கவோ செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழில் உலக இலக்கியம் பற்றி, தமிழிலக்கியம் பற்றி  எழுதப்பட்ட மொத்தக் கட்டுரைகளில் நேர் பாதிக்கும் மேல் இவையே. தரம் அளவுகோலாகக் கொள்ளப்படுமென்றால் இவ்வட்டத்திற்கு வெளியே ஒரு ஐம்பது கட்டுரைகள்கூட தேறாது என்பதே உண்மை.

என் வாசகர் என்று நான் பெருமையாகச் சொல்கிறேன். பொதுவாக நண்பர் என்றே சொல்வது வழக்கம். அவர் என்னை சூழ்ந்து உருவாகியிருக்கும் ஒரு நண்பர்வட்டத்தைச் சேர்ந்தவர். அரசியல், சினிமா தவிர எதைப்பேசவும் ஆளில்லாத தமிழ்ச்சூழலில் இலக்கியம் பேசுவதற்கான ஒரு வட்டத்தைக் கண்டுகொண்டவர்.  இது ஓர் எழுத்தாளரின் ரசிகர்வட்டம் அல்ல, ஒர் இலக்கியவட்டம். இன்று தமிழில் இலக்கியம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படும் ஒரே நட்புச்சூழல்.

ஆண்டுமுழுக்க இலக்கிய நிகழ்ச்சிகள் எழுத்தாளர் சந்திப்புகள் என நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரே அமைப்பும் இதுவே. இந்த வட்டத்து நண்பர்களால் வேறுவேறு ஊர்களில் தொடர்ச்சியாக சந்திப்புளை நடத்தும் அமைப்புக்கள் மட்டும் பத்துக்கும் மேல். இவற்றில் எவற்றிலும் நானோ என் படைப்புகளோ முன்னிலைப்படுத்தப்படவில்லை. எங்கும் முதன்மையான இலக்கியப் படைப்பாளிகளே பேசப்படுகிறார்கள். மீண்டும் சொல்கிறேன், தமிழில் வேறெங்கும் இத்தனை ஆழமான இலக்கியச் சந்திப்புகள் நிகழவில்லை. இந்த கொரோனா காலகட்டத்திலும்கூட.

ஆனால் அவர்கள் வெறுந்திரள் அல்ல. பொதுவாக இலக்கிய அழகியலைச் சார்ந்து வாசிக்கும் தரப்பு. ஆகவே அவர்களுக்கு தனிப்பட்ட அழகியல் அளவுகோல்கள் உள்ளன. அவை ஒட்டுமொத்தமாகவும் ஓர் அளவுகோல் ஆகின்றன. அதில் தேறாதவர்கள் உண்டு. இங்கே எவரையும் எதிர்மறையாக எவரும் எழுதுவதில்லை. நேரிலும் சொல்வதில்லை. ஆனால் அமைதியாகவே அந்த மதிப்பீடும் அதன்விளைவான விலக்கமும் தெரியும். அதில் பலர் தேறமுடியாது. அவர்கள் சீண்டப்படுவார்கள், கசப்படைவார்கள். அதற்கு ஒன்றும்செய்ய முடியாது. எப்போதுமே இலக்கியத்தின் அழகியல் தரப்பு அப்படித்தான் இருக்கும்.

இவ்வாசகர்களுக்கு எதிராக இரண்டுவகையில் எதிர்வினைகள் வருகின்றன. அந்த வாசகர்களின் தரமே பலரை மருட்டுகிறது, அவர்களின் பார்வையில் தரமான ஒன்றை தங்களால் எழுதிவிடமுடியாது என்று அவர்கள் அந்தரங்கமாக உணர்கிறார்கள். ஆகவே அவர்களை நிராகரிக்க முயல்கிறார்கள். வசைபாடுகிறார்கள். அதற்கேற்ப நம் வாசகர்களில் சிலர் சில தனிச்சந்திப்புகளில் எழுத்தாளர்களை கேள்விகேட்டு மருளவும் செய்ததுண்டு. ‘எழுத்து எழுத்தா வாசிச்சுட்டு வந்து பேசுறாங்கப்பா’ என்று என்னிடமே வேடிக்கையாகச் சொன்ன எழுத்தாளர்கள் உண்டு

இன்னொரு வகையான எதிர்வினை, உண்மையிலேயே இந்த வாசகர்களின் வாசிப்புத்தரம் பற்றி அறியாதவர்களால் முன்வைக்கப்படுவது. அவர்களுடைய தரம் மிகக்கீழே இருப்பதனால், தங்களின் அறியாமையால் அவர்கள் அரணிடப்பட்டிருப்பதனால்,வெவ்வேறு அரசியல்தரப்புகளால் அணிதிரட்டப்பட்டு எளிமையான ஒற்றைவரிகளால் இயக்கப்படுவதனால், அவர்களால் கடைசிவரை இவ்வாசகர்கள் பேசிக்கொண்டிருக்கும் தளத்தை வந்தடையவே முடியாது.

ஆனால் இதற்கு ஒன்றும் செய்யவே முடியாது. இங்கே அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் எவரும் சந்திக்கநேரும் இரண்டு எதிர்வினைகள் இவை. புறக்கணித்து முன்செல்லும் அறிவாணவத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டியதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைநுரைச்சிரிப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : சா.கந்தசாமி