பச்சை- கடிதங்கள்

பச்சை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

ஒரு மலையடிவார குக்கிராமத்தில் குழந்தைகளை போல வளர்த்த மரஞ்செடிகொடிகள் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவள் என்ற வகையில் மனதிற்கு மிகவும் அணுக்கமானதொன்றாகிவிட்டது உங்களின் ‘பச்சை’ பதிவு. 10 கிலோ மீட்டர் தொலைவில் கேரள கிராமங்களிருக்கும்  பொள்ளாச்சியில், பாலக்காட்டுச்சாலையிலிருந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவளென்பதால் பசுமையை காணாத நாட்களே இல்லை.  விதி வசமாக படித்ததும், பட்டம் பெற்றதும் பணிபுரிவதும் தாவரவியல் துறையிலென்பதால் என் வாழ்வே பச்சைபிடித்துத்தான் இருக்கின்றது. இந்த பக்கமெல்லாம் காலில் குத்திய முள்ளை அகற்றுகையிலோ அல்லது காயத்துக்கு மருந்திடுகையிலோ  வேதனை தெரியாமலிருக்க ‘’பச்சையை பார்த்துக்கோ’’ என்பார்கள். அப்படி துயரிலும் மகிழ்விலும் என்னுடனிருந்த பச்சையே என்னை ஆற்றுப்படுத்தியிருக்கிறது, மீட்டெடுத்திருக்கிறது.

பச்சை இல்லாத நிலத்தைப்பார்த்தேன். ஏனென்றே தெரியவில்லை, அழுதுகொண்டே இருந்தேன்

அலையடிக்கும் பசுமையில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவனுக்கு  முதன்முதலாக காணும் பச்சை பெருகாத மண் அளிக்கும்  வெறுமையையும், உளச்சோர்வையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

வாழையும் தென்னையும் பருத்தியுமாக பசுமை பெருகி நிறைந்திருக்கும் வயல்களும், தோப்புக்களும் நிறைந்த கிராமங்கள் சூழ்ந்த, வருடத்திற்கு 8 மாதங்கள் மழைப்பொழிவு இருந்த (20 வருடங்களுக்கு முன்பு) பொள்ளாச்சியை சேர்ந்த எனக்கு, பாலைநாடான அபுதாபியில் பணியிலிருக்கும் ஒருவருடன் திருமணமாகி போனதும் அங்கிருந்த 6 வருடங்களும் கொடுங்கனவிற்கு நிகரானது. ராசியும் நட்சத்திரமும், கிரகங்களும் கோள்களுமாக, மணப்பொருத்தம் பார்க்கும் ஜாதகக்கட்டங்களில் வாழிடத்திற்கான ஒரு கட்டமும் இருக்கலாம் என்னும் ஆதங்கம் எனக்கு எப்போதும் இருக்கின்றது. எனக்கிழைக்கபட்ட அநீதிகளில் ஆகப்பெரியது பாலையில் என் வாழ்வை துவங்கும்படியானதுதான்.

அபுதாபி செல்லும் வரையிலும் கண்ணுக்கெட்டியவரை விரிந்து பரந்திருக்கும் கடும், கொடும் பாலை நிலமொன்றை நான் கற்பனையிலும் நினைத்திருந்ததில்லை. எப்போதேனும் நீண்ட பயணங்கள் செல்லும்போது மட்டும் வரிசையாக பேரீச்சைமரங்களை பார்க்கமுடியும். மழையைபோல கடுமையான வெயில் பொழிந்துகொண்டிருக்குமென்பதால் தொட்டிகளிலோ வீட்டின் முன்போ செடிகளை வளர்ப்பதென்பதும் சாத்தியமில்லை

பெரும் உளச்சோர்வும் வெறுமையும் பொருளின்மையுமாய் இருந்த காலமது. அடிக்கடி வீசும் மணற்புயலில், குளிர்சாதனப்பெட்டியின் துளைகள் வழியே வீடு முழுவதும் வந்து நிறையும் மணலை அப்புறப்படுத்துவதும் சாதாரணமாக செய்யும் வீட்டு வேலைகளிலொன்றாகி விட்டிருந்ததில், சில மாதங்களிலேயே  பாலையின் மணல் என் உடல் முழுவதுமே நிறைந்து விட்டதுபோலவும், நானே வறண்ட பாலையாகி விட்டதுபோலெல்லாம் எனக்கு தோன்றி அகச்சிதைவுடனிருந்த நாட்களவை. அரண்மனைக்கு அருகிலிருந்த குடியிருப்பில் நாங்கள் வசித்ததால் வெள்ளிக்கிழமை மாலைகளில்  நம்பர் பிளேட் இல்லாத பெரும் ஆடம்பரக்காரில் வரும் மன்னர் சாலையில் நிற்பவர்களுக்கு மூங்கில் கூடையில் நிறைந்திருக்கும் 100 திராம் நோட்டுக்களை அள்ளி அள்ளி கொடுப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு  வளமையென்பது பச்சை மட்டுமேயென்பதால் எந்த வகையிலும் என்னால் மகிழ்ச்சியை அங்கு கண்டுபிடிக்கவே முடியவில்லை. உண்மையிலேயே பித்தியைபோலவே தானிருந்தேன்

ஈராக் போர்முனைப்பதிவில் ஷாகுல் ஹமீது பாலை நிலமொன்றில் பித்துபிடித்த லக்ஷ்மணன் என்பவர் பக்கட்டில் மணலை நிரப்பி அள்ளி அள்ளி தன்மீது நீரைப்போல ஊற்றி குளித்துக்கொண்டிருந்ததை விவரித்திருப்பார், அதை வாசித்ததும் திடுக்கிட்டது. நல்லவேளையாக நான் இந்தியா திரும்பிவிட்டிருந்தேன்.

காய்கறி வாங்கச்செல்லும் ஒரு கடையின் ஓரமாக ஒரு துண்டு நிலத்தில் வளர்ந்திருக்கும் நாலைந்து சிற்றகத்தி மரங்களின் அண்மை  அந்நாட்களில் பெரும் ஆசுவாசமளிக்கும். கருவுற்றிருந்த நாட்களில் அவற்றின் சிற்றிலைகளை  உருவிக்கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்தேன்.

அருகிலிருக்கும் பாலைவனச்சோலையான  அலெய்னில் (AL Ain) மட்டுமே விவசாயம் நடைபெறுமென்பதால் வேறு எவ்வகையிலும் பச்சையே பார்க்கக்கிடைக்காது. அரிதாக பேரிச்சைகளுடன் ஆலிவ் மரங்களும் கண்ணில் தட்டுப்படுவதுண்டு. ஒரு முறை ஷார்ஜா செல்லும் வழியில் ஓரிடத்தில் வேம்பு ஒன்று நின்றதை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணீர் விட்டழுதேன். மிக வேண்டியவர்களை, மிக கஷ்டமான காலத்தில் எதிர்பாராமல் சந்தித்தது போலிருந்தது.

Emirates nature மற்றும் WWF ஆகியவை இணைந்து பாலையில் Ghaf tree என அவர்களால் அழைக்கப்படும் கடும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடைய  Prosopis cineraria  எனப்படும் வன்னி மரங்களை  பாலையெங்கும் ஆயிரக்கணக்கில் நட்டுவைக்கும் திட்டமொன்றை அப்போதைய மன்னர் செயல்படுத்த துவங்கியிருந்தார், பயணங்களில் தென்படும் அக்காட்சிகள் பெரும் நம்பிக்கையூட்டுபவையாக இருந்தன. இப்போது அவையெல்லாம் வளர்ந்து வனமாகிவிட்டிருக்கிறது. சகிப்புத்தனமையின் அடையாளமாக கருதப்படும் இம்மரமே 2008ற்கு பிறகு அங்கே தேசியமரமாகி விட்டிருக்கின்றது

பாலையென்றாலும் பேரிச்சையின் வளர்ச்சியில் அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு மணற்புயலுக்கு பிறகும், ராட்சஷ லாரிகளில் மறு சுழற்சி செய்யபட்ட கடல்நீரை கொண்டுவந்து எல்லா பேரீச்சை மரங்கள் மீதும் வேகமாக பீய்ச்சியடித்து சுத்தம் செய்வது, மகரந்த சேர்க்கை முடிந்ததும் கனி உருவாகும் வரையிலும் அத்தனை ஆயிரம் மரங்களின் ஒவ்வொரு பூங்கொத்திற்கும் மணல் வந்து அடைந்து கொள்ளாமலிருக்க மெல்லிய காகித உறையால் மூடி பாதுகாப்பது என்று மரங்களை பாதுகாக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் ஆச்சர்யமாக இருக்கும். மாநில மரமான பனைகளை வெட்டி, பனந்தடிகள் செங்கல் சூலைகளுக்கு வண்டியில் எடுத்துச்செல்லப்படுவதை வெகுசாதாரணமாக பார்த்திருந்தவளான  எனக்கு இக்காரியங்களெல்லாம் பெரும் மகிழ்வளித்தன.

’கேரி ஃபோர்’ போன்ற மாபெரும் வணிகவளாகங்களுக்கு செல்கையில்  அங்கு மலையென குவிக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்கள் வைத்திருக்கும் பகுதியில் அதிக நேரம் இருப்பேன். பச்சையை அப்படிப்பார்த்தால்தான் உண்டு

இப்போது இந்த குக்கிராமத்தின் சிறுவீட்டில் எங்கெங்கிலுமாக பசுஞ்செடிகொடிகளும் மரங்களுமாக நிறைந்திருந்தும்  பசுமை போதாமல், இன்னும் இன்னுமென ஜன்னல் திட்டுக்களிலும் சமையலறை மேடையிலும் வாசல் திண்ணையிலும்  குளிமுறியிலும் கூட சின்னச்சின்ன செடிகளாக வைத்து வளர்த்து கொண்டிருப்பதெல்லாமே அந்த ஆறு வருட பசுமையற்ற பாலை வாழ்விற்கான் பிழையீடுதான்.

கல்லூரியிலும் ஆசிரியர்களுக்கான அறையில் என் மேசையில் ஒரு சிறு மரக்கிண்ணத்தில் பசிய இலைகளுடன் சிறு செடியொன்றிருக்கும். அருகிலிருக்கும் கிராமத்தில், நானும், என் மகன்களும் பிறந்த, நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்துடன் நட்பிலிருக்கும் குடும்பமருத்துவரின் மருத்துவமனை இருக்கின்றது. தோழமையின் பொருட்டு எங்களுக்கென எப்போதும் 202 எண் அறையே தரப்படும், அவ்வறையிலும்  அகலமாக பச்சை இலைகளை விரித்தபடி ஒற்றை சிவப்பு மலருடன் இருக்கும்  செயற்கை பூச்செடியொன்றை கொண்டு வைத்திருக்கிறேன்.

//பசுமை உள்ளுறையும் அந்த முதல்விலங்கை என்ன செய்கிறது? உணவு உண்டு என நம்பிக்கையளிக்கிறதா? பதற்றங்கள் அமைந்து ஆறுதல்கொள்ளவைக்கிறதா?//

என்னை பொருத்தவரையிலும் சூழ்ந்திருக்கும் பசுமை என் கொந்தளிப்புக்களை அமைதிப்படுத்தி, அகத்துயரை பெருக்கிக்கொண்டு அதிலேயே ஆழ்ந்து அழிந்து போய்விடாமல் பலவற்றிலுமிருந்து  என்னை மீட்டெடுத்திருக்கிறது. மலரென்றும், காயென்றும், கனியென்றும், உணவென்றும், நிழலென்றும், கனிவென்றும், மகவென்றும் அன்னையென்றும், தந்தெயென்றும் தோழியென்றும், துணையென்றும், இறையென்றுமாக பலவடிவிலிருந்து கருணைபொழிந்துகொண்டே இருக்கும்   இப்பசுமையே  என்னை இன்னும் உயிருடன் வைத்திருக்கின்றது.

நீளநீளமான இளம்பச்சை இலைகளுடன் குடைபோல் கவிழ்ந்திருக்கும் ராம் சீதா மரத்தடியில்தான் ’பச்சை’ பதிவை வாசித்து இக்கடிதத்தையும் எழுதுகின்றேன். ஆம்  கருணையின் நிறம் பச்சைமட்டும் தான்.

மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டிருக்கும் இப்பதிவிற்கான நன்றிகளுடன்,

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

பச்சை என் நினைவுகளை கிளறச் செய்தது. என் இளமைப்பருவமெல்லாம் வத்தலக்குண்டு பக்கம். கோடைக்கானல் அடிவாரத்தின் பச்சையில் பிறந்து வளர்ந்தவள். இன்றைக்கு என் தொட்டியில் வளரும் பச்சை மட்டும்தான் துணையாக ஒரு அப்பாட்மெண்ட் மாடியில் இருக்கிறேன். அதிலும் இப்போது ஜன்னல்வழியாக பார்க்கும் வானம் மட்டும்தான் வெளியுலகம். இப்படி ஒரு சூழலில் பச்சை கட்டுரையை வாசிக்கும்போது மனம் மலர்ந்துவிட்டது. உங்கள் வழிநடை பகுதி மிக அழகானது. வாழ்த்துக்கள்

எஸ்.விஜயலட்சுமி

***

முந்தைய கட்டுரைசிவம், புழுக்கச்சோறு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம் உரையாடல்- வாசகரின் இடம் பற்றி…