அபிப்பிராய சிந்தாமணி- கடிதங்கள்

அபிப்பிராயசிந்தாமணி வாங்க மின்னூல்

அபிப்பிராயசிந்தாமணி வாங்க

அன்புள்ள சார்,

அபிப்பிராய சிந்தாமணியின் கட்டுரைகளை உங்கள் தளத்தில் இருந்தே படித்துவிட்டேன், பின்னர் அது புத்தகமாக கிண்டிலில் வந்ததும் உடனடியாக வாங்கி என் கிண்டில் நூலகத்தில் சேர்த்தேன். நான் பணிபுரிவது ஒரு பன்னாட்டு BPO, கொலை வெறி கொண்டு பணிபுரியும் இங்கு புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. அனால் அலைபேசிக்கு அனுமதி உண்டு.

இங்கு இலக்கு என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் அது மற்றவர்களை முந்திக்கொண்டு ஓடுவதுதான். இலக்கை அடைந்திருந்தாலும் கடைசியாக வருபவர் பின்னக்கு தள்ளப்பட்டு கட்டம்கட்டப்படுவர், பின்னால் பார்த்துக்கொண்டே வெறிபிடித்து ஓடுவது தான் இங்கு பணி வாழ்க்கை. உடலின் அனைத்து துவாரங்களிலும் ஆவிபறக்க வேலை செய்துவிட்டு கிடைக்கும் சிறிய இடைவேளைகளில் தேநீர் பெரிதாக எந்த ஆறுதலும் தந்துவிட முடியாது.

ஒரு கையில் தேநீருடன் இன்னொரு கையில் அபிப்ராயச்சிகமணியை வாசிப்பது என் தற்போதைய பழக்கம். முகத்தசைகள் இலகுவாக மாறுவதை மிக நன்றாக உணரமுடியும். அழுத்தும் அனைத்தும் சட்டென்று விலகிவிடுவதை தினமும் அறிந்திருக்கிறேன்.அதில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் பலமுறை வாசித்துஇருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொருமுறையும் புன்னகை எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

இந்த கட்டுரைகளில் நீங்கள் அதிகமாக  ‘தேய்வழக்குகளை’ திட்டமிட்டுப் பயன்படுத்திஇருக்கீறீர்கள், அதுதான் அந்த உடனடி சிரிப்பை விரவழைப்பதை உணரமுடிகிறது. வேறு எதிலும் நீங்கள் அவற்றை பயன்படுத்துவது இல்லை.

உங்கள் குறுநாவல்களில் டார்த்தீனியம், பின்னர் நிழல்வெளி கதைகளை படித்துவிட்டு நீங்கள் ஒரு மர்மமான நபர் என்று நினைத்து இருக்கிறேன்,அறம் படித்துவிட்டு உங்களை உணர்ச்சிகரமானவராக உருவகித்து கொண்டிருக்கிறேன். காடு, இரவு போன்றவை படித்துவிட்டு காதலின் ரசனை உள்ளவர் என்றும்,பின்தொடரும் நிழலின் குரல், வெள்ளையானை  படித்துவிட்டு மனசாட்சி உள்ளவர் என்றும், உலோகம் படித்துவிட்டு சீரியசான ஆள் என்றும், கொற்றவை படித்து விட்டு கவித்துவமானவர் என்றும் ஏழாம் உலகம் படித்துவிட்டு யாரோ ஒருவர் என்றும் நினைத்திருக்கிறேன் (போதும் என்னால் எல்லாவற்றையும் வர்ணிக்கமுடியவில்லை, கொஞ்சமாகவா எழுதியிருக்கிறீர்கள்.)

சொல்லவந்ததை விட்டுவிட்டேன், உங்கள் எல்லா கதைகளிலும் இந்த அனைத்து முகங்களும் வெளிப்படுகின்றன, எதாவது ஒரு காதாபாத்திரமாக. அபிப்ராயச்சிகமணியின் அங்கதம் உங்கள் எல்லா நாவல்களிலும் இருப்பதுதான். வெண்முரசில் அவை பெரும்பாலும் குடிகார சூதர்களாக அவதாரம் எடுத்து இருக்கின்றன. உங்களால் எதையும் நகைச்சுவையாக மாற்ற முடிகிறது, நீங்கள் வழிபடுபவற்றை கூட.  “இன்றைய காந்தி” எழுதிய கைகள் தான் “காந்தி அல்லது வெற்றிகரமாக சுடப்படுவது எப்படி” கட்டுரையும் எழுதியது.

மிகவும் மேன்மையான அல்லது கீழானவற்றில் கூட அதன் உள்ளோடும் அங்கதத்தை எப்படி கண்டுகொள்கிறீர்கள்? உங்களால் எழுதமுடியாது என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

அன்புடன்,

ஆல்வின் அமல்ராஜ்

அன்புள்ள ஜெ

அபிப்பிராய சிந்தாமணிதான் என் பார்வையில் உங்கள் படைப்புகளிலேயே மனசுக்கு நெருக்கமானது. அதைத்தான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொருநாளும் கொஞ்சமாக. அது ஒரு நகைச்சுவைக் கலைக்களஞ்சியம். ஒருநாள் ஒரு கட்டுரைக்குமேல் வாசிக்கமுடியாது. சிரித்தபின் அந்தப்புன்னகையுடன் அந்த நாளைக் கடந்துசெல்லவேண்டும்.  காலையில் அதில் கைக்குவந்த ஒரு கட்டுரையைப் பிரித்து படித்துவிட்டு போகும் வழக்கம் உண்டு. ஆபீஸில் சலிப்பூட்டும் நேரத்தில் ஒரு பக்கத்தை படிப்பேன். அந்தக்கட்டுரையை ஒட்டி ஆபீசில் ஒரு ஸ்பூஃப் உருவாக்கி பரப்புவேன்.

இன்றைக்கு மாற்றுமருத்துவம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். சிரித்து விக்கிவிட்டேன். அதன்பிறகு ‘பார்க்க சாதாரணமாத்தான் சார் இருப்பார்’ என்ற வரியை டேக் பண்ணி பிரைவேட் சுற்றில் விட்டு பலரையும் கலாய்த்துக்கொண்டிருந்தேன். அதன்பின் நானே ஒரு கஸ்டமர் பற்றிச் சொன்னபோது என் கலீக் ‘பார்க்க சாதாரணமா இருப்பார் இல்ல?”என்றபோது மீண்டும் சிரிப்பு.

அபிப்பிராய சிந்தாமணி என்பதே ஒரு நல்ல ஸ்பூஃப். என் பார்வையில் சமூகவலைத்தளத்தில் எல்லாவற்றுக்கும் ’எல்லாம் எமக்குத்தெரியும்’ பாணியில் கருத்துசொல்லும் பேராசிரியர்கள், எழுத்தாளர்களுக்குரிய பெயர் அது. ராஜன் குறை, அ.ராமசாமி இருவரும் சீனியர் அபிப்பிராய சிந்தாமணிகள்.  கார்ல்மார்க்ஸ் கணபதி அவர்களுக்கு ஜூனியர் அபிப்பிராயசிந்தாமணி

ஜெ.எஸ்.குமார்

அன்புள்ள ஜெ

அபிப்பிராய சிந்தாமணி நூலை நான் கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கினேன். ஏனென்றால் அதிலுள்ள கட்டுரைகளை நான் முன்பே படித்திருந்தேன் என்று நினைத்தேன். ஒரு புத்தகமாக பார்த்தபோதுதான் பாதிக்கட்டுரைகளை விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. அதோடு புத்தகமாக கையில் இருக்கும்போது பலகட்டுரைகளை மீண்டும் படிக்கமுடிகிறது. இந்தப் பகடிக்கட்டுரைகளை மீண்டும் படித்தால்தான் உண்மையில் எவ்வளவு நகைச்சுவைக் குறிப்புகளை கவனிக்காமல் விட்டிருக்கிறோம் என்று தெரிகிறது. ஒரு நகைச்சுவைக் களஞ்சியம் இந்த புத்தகம்

வரதராஜன் எம்

அபிப்பிராயசிந்தாமணி

அபிப்பிராயசிந்தாமணி கடிதங்கள்

அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்-2

முந்தைய கட்டுரைலக்ஷ்மியும் பார்வதியும்,கைமுக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானி-3