ஞானி-9

இன்று எண்ணும்போது இந்த நீண்ட நீண்ட விவாதங்களெல்லாமே அடிப்படையில் இலக்கியம், கருத்தியல் மீதான ஆழமான நம்பிக்கையிலிருந்து உருவானவை என்று படுகிறது. ஒன்றை வெறிகொண்டு நம்பி அதற்காகவே வாழ்க்கையை அளித்துவிடும் தீவிரத்தில் இருந்து எழுபவை. ஆகவே எவரிடமும் காட்டவேண்டியதில்லை, எவருக்கும் எதிர்நிலையாகவும் செயல்படவில்லை. ஒருவகை ‘பயன்கருதா பெருஞ்செயல்’தான் அனைவரும் இயற்றியது.

அந்நம்பிக்கை சூழலில் குறைந்திருக்கிறதா இன்று? ஆம் என்றுதான் தோன்றுகிறது. உலகமெங்கும் அப்படித்தான். உலக இலக்கியத்தைப் பார்க்கையிலேயே ‘விற்காத’ ஒன்றுக்கு இன்று எந்த மதிப்பும் இன்றில்லை. விற்பனையை பற்றி கவலைப்படாமல் எவரும் தன் தேடலை மட்டும் முன்னெடுத்துக்கொண்டு எழுதுவதாகவும் தெரியவில்லை. பேரிலக்கியம் என்றெல்லாம் பதிப்பாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ஆக்கங்கள் எல்லாமே திட்டமிட்ட கூட்டான உழைப்புடன், வணிகத்தை இலக்காக்கிக்கொண்டு  வாசக ரசனையை கணக்கில்கொண்டு, உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன

இன்று ‘வெற்றியே’ இலக்காக இருக்கிறது. ‘உண்மை’ அல்ல. ஆகவே மகத்தான தோல்விகள் மீதான ஈர்ப்பு எவருக்கும் இல்லை. அன்று அப்படி இல்லை. ஞானி என்றாவது தனக்கு புகழ், மரியாதை வரும் என எண்ணியிருப்பாரா? தன் செயல்பாடுகளில் அந்த எதிர்பார்ப்புக்கு சற்றேனும் இடமளித்திருப்பாரா? அவருடைய வாழ்நாளே அறிதல் என்னும் செயலுக்கு, அறிந்ததை வெளிப்படுத்தல் என்னும் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அதன்பொருட்டு அவர் பெற்ற வசைகள், அவமதிப்புகளைக் கருத்தில் கொண்டால் அவருக்கு கடைசிக்காலத்தில் கிடைத்த சிறிய மதிப்பு பொருட்டே அல்ல, அது அவருடைய வயதுகாரணமாக கிடைத்த எளிய மரியாதை மட்டுமே.

அன்றைய விவாதங்களை எல்லாம் ஞானிக்கு விரிவாக கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தேன். ஞானியும் நீண்ட கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். இன்று எண்ணும்போது வியப்பாக தான் இருக்கும் ஒவ்வொரு வாரமும் புதன் அல்லது வியாழக்கிழமை ஞானி சொல்லி எழுதுவித்த கடிதம் எனக்கு வரும். நீலநிற இன்லெண்ட் உறையில் விளிம்புகளிலெல்லாம் எழுதப்பட்ட கடிதங்கள். எப்படியும் முன்னூறு கடிதங்களுக்கு மேல் அவர் எனக்கு எழுதியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த கடிதங்கள் எனக்கு  வந்துகொண்டிருந்தன.

நான் நீல அஞ்சலுறைகளில் பொதுவாக எழுதுவதில்லை. எனக்கு அவை  போதாது. ஆகவே வெண்ணிறத் தாள்களில் இருபுறமும் நெருக்கி ஐந்தாறு பக்கங்களுக்கு எழுதுவேன். நான் படித்த அனைத்தையுமே எழுதுவது வழக்கம். அவ்வெழுத்துகளினூடாகவே நான் என் எண்ணங்களை கோர்த்துக்கொண்டு அவற்றை ஆசிரியராக அவரிடம் முன்வைத்து அவற்றின்மீதான விவாதங்களை உருவாக்கிக்கொண்டேன்.

ஞானி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூடியவராக, தமிழ் புனைவிலக்கியம் மீதான ஆழ்ந்த சலிப்பை பதிவு செய்பவராக இருந்தார். “தொட்டுட்டு தொட்டுட்டு போகுது பல கதைகள். இந்தக்கதை அந்தக்கதை மாதிரி இருக்குன்னு மட்டும்தான் மனசிலே மிச்சமிருக்கு” என்றார். “சிலசமயம் கல்யாணவீட்டிலே அப்டி நூறுபேர் வரை வந்து தொட்டு அய்யா வணக்கம்னு சொல்லிட்டு போவாங்க. ஒருத்தர் கூட ஞாபகத்திலே நிக்கமாட்டாங்க”

ஞானிக்கு கணையாழி பாணி கதைகள், அசோகமித்திரன் பாணிக் கதைகளின் மேல் அன்று இருந்த ஒவ்வாமைக்கு அளவே இல்லை. “சில முதலாளிங்க வேணும்னே மெல்ல பேசுவாங்க. மத்தவங்க பணிவோட கூர்ந்து பாக்கணும்ங்கிறதுக்காக. அதேமாதிரியான உத்திதான் இந்த அடங்கின குரலிலே பேசுறது. நீ பேசுறதைப் பேசு. சப்டெக்ஸ்டை நீ உண்டுபண்ண வேண்டியதில்லை. நீ பேசுறது உண்மையிலேயே ஆழமானதா இருந்தா அதிலே சப்டெக்ஸ்ட் இருக்கும். சப்டெக்ஸ்ட் நாய் எலும்பை ஒளிச்சு வைக்கிறது மாதிரி நீ படைப்பிலே புதைச்சு வைக்கிறது இல்லை. அது அந்தப்படைப்பிலே இருக்கிற பண்பாட்டுக்கூறுகளாலே அதுக்குள்ளே அடுக்கடுக்கா வந்து சேருறது.”

அதன்பின் அவர் தானாகவே சிரித்துக்கொண்டார். எதையாவது எண்ணி மகிழ்கையில் கீழே பார்த்துச் சிரிப்பது அவருடைய வழக்கம். “என்ன?” என்று நான் கேட்டேன்.  “ஒண்ணுமில்லை” என்றார். “சொல்லுங்க”என்றேன். “இல்லே, நாய் எலும்பைப் புதைச்சு வைக்கிறதா இல்லை பூனை பீயை புதைச்சுவைக்கிறதா எது சரியான உவமைன்னு நினைச்சுப் பாத்தேன்” என்றார். ஞானி கோட்பாட்டாளர் என்னும் நிலையிலிருந்து மீறி எழும் தருணம் அந்தச்சிரிப்பு. அந்த ஞானிதான் கதைகளை வாசிப்பவர், பலசமயம் அவற்றைப் பற்றி எழுதுபவர் வெறும் கோட்பாட்டாளர்.

1990-ல் என்னுடைய ‘போதி’ நிகழ் இதழில் வெளியாயிற்று அதையும் சுந்தர ராமசாமிக்கு அனுப்பி அவர் தன் கையிலேயே சிலகாலம் வைத்திருந்தார். அது ஒரு வடிவ ஒருமை கொண்ட நல்ல கதை என்று சுந்தர ராமசாமி நினைத்தார். ஆனால் அந்த கதையை அவர் ஒரு மடத்திற்குள் நிகழும் அதிகாரப்போட்டியின் கதையாகவே  பார்த்தார். இருவர் நடுவே நடக்கும் ஆணவப்போட்டியும்கூட. அதில் ஒரு அழுத்தமான துயரமுடிச்சு.

அதில் கதைசொல்லிக்கும் அந்த மடாதிபதிக்கும் ஓர் உரையாடல் பகுதி உண்டு. அதில் மடாதிபதி “விவேகானந்தனா? அவன் யோகியோ ஞானியோ இல்லை. அறிவாளி, பேசத்தெரிந்தவன். விற்கத்தெரிந்தவன்…” என்று சொல்கிறார்.  “அவன் சைவத்தையும் வைணவத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறான்? இரண்டும் வெவ்வேறு வழிகள். எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறான்? அவனுக்கு மக்கள் ஆதரவு தேவை. அதற்காக அரசியல் பேசுகிறான்” என்று அவர் சொல்ல கதைசொல்லி “இரண்டும் ஹிந்து மதம்தானே ?” என்கிறான்.  “ஹிந்து மதமா? ஹெ ஹெ ஹெ ஹெ அப்படி ஒரு மதம் உண்டா ? நான் கேள்விப்பட்டதே இல்லையே ? ஹெ ஹெ ஹெஹெ! இதோபார் ஒப்பிட்டால் ஒரே மதம் தான் சரியான மதம், அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணர முடியாத வெறும் பண்டிதன்” என்று ஏளனம் செய்கிறார்.

அப்படி மேலும் சில உரையாடல் பகுதிகள்.  அந்தப் பகுதிகள் தேவையில்லை என்று சுந்தர ராமசாமி நினைத்தார். ”இதெல்லாம் வெறும் விவாதமாக இருக்கிறது, கதைக்கு வெளியே செல்கிறது” என்று அவர் சொன்னார். அந்த பகுதிகளை வெட்டிவிட்டு கதையைச் சுருக்கிக் கொடுத்தால் அதை வெளியிடுவதாக சொன்னார். அந்த பகுதிதான்  அந்தக் கதைக்கான அடிப்படையை உருவாக்குகிறது என்று நான் சொன்னேன். அது எளிமையான அதிகாரப்போட்டியின் கதை அல்ல, கால் அழுகி இறக்க காத்திருக்கும் அந்த மடாதிபதி ஓரு ‘மெட்டஃபர்’. நம் தொன்மையான மரபின் உருவகம், மரபார்ந்த அமைப்புகளின் வடிவம், அழிந்துவரும் தத்துவத்தின் குறியீடும் கூட.

அவ்வாறு கதையை விரிப்பதற்கான உட்குறிப்புகள் முழுக்க அந்த விவாதத்தில்தான் உள்ளன. ஒரு கடந்தகாலமே நஞ்சூட்டப்பட்டு அழிகிறது, கூடவே அந்த மடமும் உளுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நேர்மை, ஒரு மாபெரும் அறிவுத்தன்மை உள்ளது. கூடவே தேங்கிவிட்டதும் தன்னை குறுக்கிக்கொண்டதும் கூட. அந்த நூல்கள் ஒன்றுடனொன்று கலந்து அறியமுடியாத சிக்கலாக ஆவது எல்லாமே உருவகங்கள். நான் ஓர் அதிகாரப்போட்டியைச் சொல்ல கதை எழுதமாட்டேன், நான் உத்தேசிப்பது ஓர் யுகமாற்றத்தை என்றேன்.

“நீ உலகம் உன் காலடியில் விழவேண்டும் என நினைக்கிறாய், அந்தக் கால் இப்படி இருந்தால்?” என்று மடாதிபதி தன் காங்கரீன் வந்து அழுகிய காலை காட்டுகிறார். அது வெறும் உரையாடல் அல்ல. அந்த மெட்டஃபரின் விரிவாக்கம். அப்படி வாசிக்கும் வாசகனே எனக்குத் தேவை. ஆனால்  அந்த கொள்கை விவாதம் தமிழ்ப் புனைகதைகளுக்குள் தேவையா என்று சுந்தர ராமசாமி மறுபடியும் கேட்டார். ஒரு தமிழ்க்கதை தமிழ்ப்பண்பாட்டின் ஒரு யுகமாற்றத்தை எழுதாமல் வேறெதை எழுதவேண்டும் என்று நான் கேட்டேன்.

கடைசியாக, ‘அந்த உரையாடல்கள் நீளமாக உள்ளன’ என்று அவர் சொன்னார். அவருடைய வழக்கமான சொல்லாட்சி அது. எந்தக் கதையையும் ‘கொஞ்சம் நீளம், சுருக்கியிருக்கலாம்’ என்பார். எந்தக்கதையையும் சுருக்கலாம், சுருக்கிச் சுருக்கி ஒருவரியாகவும் ஆக்கலாம். வாசகனின் வேலை கதையை விரிவாக்குவதே. சுருக்குவது எதனடிப்படையில்? நான் ஒரு வாசிப்பை நிகழ்த்தினேன், அதனடிப்படையில் உன் கதையை நான் சுருக்குவேன் என்றுதானே அதன் மெய்யான அர்த்தம்?

எனக்கு எப்போதுமே சலிப்பூட்டுவது இந்தக்குரல்.  ஒரு படைப்பின்மேல் நான் ஒரு வாசிப்பை நிகழ்த்துவேன், அதனடிப்படையில் அப்படைப்பை நான் வெட்டிச்சுருக்கிக் கொள்வேன் என்பதே ஒரு வன்முறை. ஆசிரியனிடம் அந்தவகையில் கதையை வெட்டும்படி கோருவதென்பது  அசட்டுத்தனம். தமிழில் என்றும் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது, அது  ‘தேர்ந்த வாசகனின்’ இயல்பு என்று வேறு கருதப்படுகிறது. ’சரியான’ வடிவம் என ஒன்று இல்லை. சரியான வடிவம் என்பது பிரக்ஞைபூர்வமானது, மீறல்களிலேயே ஆசியன் அவனைக் கடந்து ஆழமாக வெளிப்படுகிறான் என்பது எப்போதும் என் எண்ணம்.

சுந்தர ராமசாமி போதி கதையை சுருக்கி அனுப்பினார். அதில் அந்த உரையாடல்கள் வெட்டப்பட்டிருந்தன. நான் சீற்றமடைந்து அதை அவர் பிரசுரிக்கவேண்டாம் என்று சொன்னேன். ’அந்தக்கதைக்கு நீங்கள் வாசகர் அல்ல’ என்று அவருக்கு எழுதினேன். ‘அதற்கான வாசகர்கள் இனி வருவார்கள், அதில் பேசப்பட்டிருப்பது வருங்காலப் பிரச்சினை’ என்றேன். அந்தக் கதையை ஞானிக்கு அனுப்பினேன். எண்ணியது போலவே ஞானி மூன்றாம்நாள் எனக்கு கடிதம் எழுதினார். அவருக்கு அந்தக் கதையில் மிக முக்கியமாக தோன்றியதே அந்த உரையாடல் பகுதிகள்தான்.

விவேகானந்தரில் தோன்றி இந்தியா முழுக்க பரவிக்கொண்டிருந்த நவீன இந்துமதம் என்ற தொகுப்படையாளத்தை முற்றிலும் ஏற்காத ஒரு மரபான மதத்தின் குரல் அந்தக் கதையில் வரும் பண்டார சன்னிதானத்துடையது. அந்தக்குரலின் அழிவு என்பது ஒரு யுகத்தின் மறைவு, அதுதான் அந்தகதையின் பேசுபொருள் என்பதை சரியாக ஞானி புரிந்துகொண்டார்.

‘இதுதான் இன்று நாம் எழுத வேண்டிய வரலாற்று நிகழ்வு. இன்றைக்கு இப்படி பேசும் பழையதலைமுறை மதத்தலைவவர்கள் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் ஒரு புல்டோசர் உருண்டு போயிட்டிருக்கு. இது இந்த காலகட்டத்தின் யுகசந்தி” என்றார் ஞானி. “இவங்க பழைமைவாதிகள். ஆனா இவங்க போனா வந்திட்டிருக்கிறது ராடிக்கலிசம். அது அரசியல் உத்தேசம் கொண்டது. ஒற்றுமையை அது முன்வைப்பது அதிகாரத்துக்காக. அதுதான் உண்மையிலேயே ஆபத்தானது. மிகக்கச்சிதமான ஒரு தீர்க்கதரிசனம் இந்தக்கதை” என்றார்.

“இந்தக்கதையை காஞ்சிமடத்தின் பின்னணியில் வைத்து பார்த்தால் கூட சந்திரசேகர சரஸ்வதிக்கும் ஜெயேந்திர சரஸ்வதிக்குமான முரண்பாடு என்று தோன்றும். ஆனால் துரதிஷ்டவசமாக பெரிய கல்வியும் நேர்மையும் கொண்டிருந்த அந்த பழமைவாதிகள் தந்திரசாலிகளான நடைமுறைவாதிகளால் தோற்கடிக்கப்படுகிறார்கள். அடுத்தகட்ட தத்துவ அலையால் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. விவேகானந்தரின் கொள்கையால் போதி கதையின் ஆதீனம் வெல்லப்பட்டிருந்தால் அது வெற்றி, ஆனால் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் இளைய ஆதீனத்தால் அவர் நஞ்சூட்டப்படுகிறார், அது ஒரு வீழ்ச்சி” என்று ஞானி எனக்கு எழுதியிருந்தார்.

அது ஓர் இளம் எழுத்தாளனாக எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. நான் எழுதிக்கொண்டிருப்பது சரியானது சரியான திசையில் சென்று அமையும் கதை என்ற உளநிறைவை அளித்தது. இன்றும் ஞானியை ஆசிரியர் என்று நினைப்பது அதனால்தான் ஒரு எழுத்தாளனை பொறுத்தவரை அவனுடைய எழுத்து உருவாகிவரும்போது அதன் தனிச்சிறப்புகளையும் மீறல்களையும் தொட்டுணர்ந்து அதற்கு ஊக்கமளிப்பவரே ஆசிரியர் எனப்படுவார்.

அடிப்படைகளை கற்றுத்தருபவரும் ஆசிரியரே, ஆனால் படைப்பாளியின் மீறல்களுக்கு முழுத்தடையாக அவர்  இருக்கும்போது ஏதோ ஒரு வகையில் அவன் அவரைக்கடந்து செல்ல வேண்டிய  கட்டாயத்துக்கு ஆளாகிறான். சுந்தர ராமசாமி நான் கடந்து வந்த ஆசிரியர் என்றால் அக்கடத்தலுக்கு உதவிய ஆசிரியர் என்று ஞானியை கூறுவேன்.

போதி கதையும் நம்ப முடியாத அளவுக்கு வரவேற்பு பெற்றது. தமிழ்ச் சூழலில் ஓர் இதழில் வெளியான ஒரு கதை எட்டுக்கும் மேற்பட்ட முறை வெவ்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து மறுபிரசுரம் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது. போதியும், படுகையும் அவ்வாறு பிரசுரமாகியிருக்கின்றன. அன்று போதியும் படுகையும் கார்பன் தாள் வைத்து பிரதி எடுக்கப்பட்டு வாசகர்களிடம் உலவியிருக்கின்றன, நானே அதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆண்டுகளில் தமிழில் அவ்விரு கதைகள் அளவுக்கு வேறெந்த இலக்கிய நிகழ்வும் பேசப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாகவே மாடன்மோட்சம் என்னும் கதை புதிய நம்பிக்கை இதழில் வெளியாகியது. அன்று முதல் இன்றுவரை அக்கதை தொடர்ச்சியாக பலகோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாடன் மோட்சம் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூழலிலும் அது மிக ஆரவாரமாக வரவேற்கப்பட்ட கதை. அதன் உள்ளடக்கத்திற்காக மட்டுமல்ல அதன் வட்டாரவழக்கு, அதன் மாயயதார்த்தக் கற்பனை ஆகியவற்றுக்காகக்கூட.

இன்று யோசிக்கையில், ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப்பின் இன்றைய அரசியல் பிரச்சினைகளை, சமூகச்சிக்கலை அக்கதைகள் பேசியிருப்பதைக் காணலாம். அக்கதைகள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின்னரே தமிழ்ச் சமூகச்சூழலிலும் அரசியல்சூழலிலும் அந்த கதைகள் முன்வைக்கும் கேள்விகள் எழுந்தன. படுகை வெளிவந்தபோது தமிழகத்தில் பொதுச்சூழலில் சூழியல் சார்ந்த அசைவுகள் ஏதும் இருக்கவில்லை. நாட்டாரியல் ஆய்வுகளெல்லாம் பொது உரையாடலுக்கு வந்தது மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். நவீன இந்துமதமும் தொன்மையான இந்துமதமும் கொள்ளும் மோதலைப் பற்றிய சிந்தனைகள் சென்ற பத்தாண்டுகளாகத்தான் பேசப்படுகின்றன

இன்று இந்து மரபுவாதிகள் இந்துமதம் என்ற கருத்துக்கு எதிராக பேசுவதை காண்கிறோம். சைவர்களும் வைணவர்களும் தங்களை இந்து அடையாளத்திலிருந்து பிரித்து தனியடையாளத்தைப் பேண முயல்கிறார்கள். இந்துமதம் என்ற தொகையடையாளத்துக்கு எதிராக ஒலிப்பவர்களின் குரல் இப்போது ஒலிப்பது போல போதிக்குள் ஒலிப்பதை பார்க்கலாம். இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் மரபுக்கும் மீட்புக்குமான மோதல்தான் போதியில் காட்டப்படுகிறது

மாடன்மோட்சம் எழுதப்பட்ட பிறகு இருபதாண்டுகள் கழித்து இந்தியாவில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களையும் அரசியல் மாற்றங்களையும் அந்தக்கதை பேசுகிறது. அக்கதை இரண்டாயிரத்துக்குப் பின் கன்னடம் தெலுங்கு வங்கம் ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளில் சென்றடைந்தபோது அது சமகாலச் சூழலைச் சொல்லும் கதையாகவே பார்க்கப்பட்டது — அது 1989-ல் எழுதப்பட்ட கதை என்பதை பலர் நம்பவேயில்லை. 2019ல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது இன்றையசூழலில் அரசியல்சார்ந்த எதிர்ப்புகளை உருவாக்கும் என்று சொல்லப்பட்டு மலையாள மனோரமா இதழால் பிரசுரிக்கப்படவில்லை.

இக்கதைகள் பலவகையிலும் காலத்தால் முன்னகர்ந்து சென்று எழுதப்பட்டவை. அது மிக இயல்பானது, கலை எப்போதுமே காலத்தில் முன்னால் செல்வதே. ஆனால் நுண்ணுணர்வுள்ள இலக்கியவாசகரான சுந்தர ராமசாமியால் அந்த முன்நகர்வை, மீறலை உய்த்துணர முடியவில்லை. அதற்குக் காரணமாக அமைந்தது அவர் ஒரு வலுவான புனைகதை எழுத்தாளர் என்பதுதான். தன்னுடைய புனைகதை குறித்து அவர் கொண்டிருந்த வடிவப்புரிதலை அவர் அனைத்து புனைகதைகளுக்கும் மாறாவிதியாகப் போட்டுப்பார்த்தார்.

மாறாக, படைப்பிலக்கியவாதி அல்ல என்றாலும் புதிய சாத்தியங்களை நோக்கி ஆவலுடன் திறந்திருந்தவராக இருந்தமையால் ஞானி அக்கதைகளை அடையாளம் கண்டார் அவற்றை முன்வைத்தார். அவற்றுக்கு இடம் உருவாக்கித் தந்தார். அதனூடாக ஒரு எழுத்தாளனாக தமிழ்சூழலுக்கு என்னை முன் நிறுத்தினார். அவ்வண்ணமே கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் கதையில் இருந்த முன்னகர்வுகளையும் அவர் அடையாளம் கண்டார். சுந்தர ராமசாமியால் அவர்களையும் உணரவும் தொடரவும் இயலவில்லை.

சுந்தர ராமசாமி காலச்சுவடில் பிரசுரிக்க ஏற்றுக்கொண்ட கதை சுந்தர ராமசாமியின் மொழி வடிவம் ஆகியவற்றைக் கொண்டிருந்த ’வலை’. அந்தக்கதையை பாராட்டி எனக்கு எழுதிய சுந்தர ராமசாமி ‘நீங்கள் எழுதியதிலேயே மிகச்சிறந்த கதை இதுதான். நீங்கள் இதேபோன்ற கதைகளை எழுதவேண்டும்’ என்றார். ஆனால் அந்தக்கதை தமிழின் பல கதைகளில் ஒன்றாகவே அமைந்தது- எனக்குத்தெரிந்து அ.முத்துலிங்கம் ஒருவர்தான் அதை நல்லகதை என்று சொல்லியிருக்கிறார். படுகை, போதி, மாடன்மோட்சம் உருவாக்கிய வாசகவிளைவை, பண்பாட்டு எதிர்வினையை அது எவ்வகையிலும் உருவாக்கவில்லை.

வியப்பு என்னவென்றால் படுகை, போதி, மாடன்மோட்சம் போன்ற கதைகள் வெளியாகி அவற்றுக்கான எதிர்வினைகளைக் கண்டபோது சுந்தர ராமசாமியின் கருத்துகளில் வலுவான மாறுதல்கள் உருவாயின என்பதுதான். அந்த மூன்று கதைகளின் போதே எழுதப்பட்டது மகாபாரத மறுஆக்கக் கதையான திசைகளின் நடுவே. சுந்தர ராமசாமி அதை இரண்டு ஆண்டுகளாக கையில் வைத்திருந்தார். புராண மறு ஆக்கங்கள் தேவையில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். அதன்பின் ‘இதிலே கதையம்சம் இருக்கு, ஆனா இந்திய நாத்திகவாதம் பற்றி ஏன் இவ்ளவு சொல்லப்பட்டிருக்கு. அதை நீக்கமுடியுமா?’ என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.

காலச்சுவடு அப்படியே நின்றுவிட்டது. கையில் தேங்கிய படைப்புகளுடன் ஒரு மலராக வெளியிடலாம் என்று சுந்தர ராமசாமி முடிவெடுத்தார். அதற்கு என் படைப்பு இருக்கவேண்டும் என்றார். நான் திசைகளின் நடுவே கதையை திரும்பக்கொடுங்கள் வேறு கதை தருகிறேன் என்று சொன்னேன். நான் காலச்சுவடு மலருக்கு அனுப்பிய கதை ‘மலம்’ ஆனால் சுந்தர ராமசாமி திசைகளின் நடுவே கதையையே வெளியிடலாமென முடிவெடுத்தார்.

அப்போது சுந்தர ராமசாமி என்னிடம் “உங்கள் கதைகள் இப்போது கூட என்னால் ஏற்கப்பட முடியாதவை. ஆனால் தமிழின் மெய்யியலில் தத்துவச்சூழலில் அது உருவாக்கக்கூடிய அதிர்வுகளைப் பார்க்கையில் நீங்கள் ஏதோ ஒரு நரம்பை தொடுகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது ஆகவே இந்தக்கதையை பிரசுரிக்கிறேன்’ என்றார். அவ்வாண்டு அதிகமாக பேசப்பட்ட கதையாக அது அமைந்தது. பின்னர் ஒருமுறை அவர் குறிப்பிடுகையில் விறுவிறுப்பான மொழியில் அழகியல் நுட்பத்துடன் ஆழமாக எழுதப்பட்ட கதை என்று ‘திசைகள் நடுவே கதையை குறிப்பிட்டார்.

இன்று பார்க்கையில் அன்றைய பொதுவான அழகியல் விவாதச் சூழலில், அச்சூழலுக்கு வெளியே இருந்தவரான ஞானி வியத்தகு முறையில் அன்றைய முன்முடிவுகள், எளிமையான நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து புதியனவற்றுக்கு இடம் கொடுத்தார் என்பதைக் காணமுடிகிறது. சுந்தர ராமசாமி அவற்றை ஏற்றுக்கொள்ள மேலும் காலமாயிற்று. ஞானி அடுத்த தலைமுறையின் முதற்குரல் எழும்போதே வந்து தொட்டறிந்து, வாழ்த்தி வழி அமைத்து கொடுத்தவர். இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பு இந்த புதுமை நாட்டம் தான் என்று நினைக்கிறேன்.

[மேலும்]

படுகை – சிறுகதை

போதி – சிறுகதை

மாடன் மோட்சம் சிறுகதை

திசைகளின் நடுவே சிறுகதை

முந்தைய கட்டுரைபாலியல் முகம் -கடிதம்
அடுத்த கட்டுரைஇருண்ட ஞாயிற்றுக்கிழமை