மதம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
இன்று கூட ஒரு கிறித்துவ நண்பருடன் வாக்குவாதம் நிகழ்ந்தது. என்னுடைய பள்ளித் தோழன் அவன். மதம் மாறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதென்று சொன்னான். முதலில் அவன் தம்பி, பின் அம்மா, அப்பா, அண்ணன்கள், அவர்கள் மனைவிமார்கள் என எல்லோரும் கிறித்துவர்கள் இப்பொழுது.
வழக்கம்போல மதத்தைப் பற்றிப் பேச்சு வந்தவுடன், மிக ஆணித்தரமாக பேச ஆரம்பித்தான். நான் சொன்னேன், ’15 வருடங்களுக்கு முன்புவரை நீ ஒரு இந்துவாகக் கூட இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப் போவது, திருநீறு பூசுவது தவிர, இந்து மதம் பற்றி உனக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. அதை வேறு யாரும் உனக்கு வழிய புகுத்தியிருக்க வாய்ப்பில்லை. நாம் எல்லோரும் மதமற்றவர்கள் போலிருக்கிறோம்; ஒரு புதிய மதம் பற்றி, அதன் கடவுளின் வாசகங்களைக் கேட்கும் போது, நமது இதயத்தின் மிக அருகே அது வருகிறது.’
எனக்கென்னவோ, ஒவ்வொரு இந்துக் கோவில்களிலும் அர்ச்சனையோடு அர்ச்சனையாக பகவத் கீதையை, கடவுளின் நேரடி வாசகங்களை மக்கள் கேட்கும்படி செய்தால், நல்ல பயன் விளையும் என்று தோன்றுகிறது. அவ்வாறன சூழலில், பிற மதங்களைப் பற்றி நாம் எவ்விதச் சலனமும் அடைவதில்லை. மாறாக, பிற மதக் கடவுளின் வாசகங்கள் எத்தனை தூரம் நம்முடையதை ஒத்திருக்கிறது என்ற ஆச்சரியம் தான் ஏற்படும்.
பாலா
கோவில்பட்டி

மதமென்னும் வலை- சில எண்ணங்கள்

உளரீதியான நெருக்கிடல்களையும் மனம் சோர்ந்த பலவீன நேரம் பார்த்து கிருமியைப்போல் உள்ளே நுழையும் அநாகரீக அராஜகங்களையும் மதமாற்ற கிறித்துவத்தின் அத்தனை பிரிவுகளும் – கத்தோலிக்கம், ப்ராட்டஸ்டண்ட், எவாஞ்சலிகல், லுதிரன், பாப்டிஸ்ட் என அத்தனை பிரிவுகளும்- செய்கின்றனதாம். சிரியன் கிறித்துவர் போன்ற சில தொன்மையான கிறித்துவப்பிரிவுகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை- ஆனால் அவர்கள் விதிவிலக்குதான். அமெரிக்காவில் கிறித்துவம் என்பது அதிகாரபூர்வமாக 300-க்கும் மேற்பட்ட டினாமினேஷன்களைக் கொண்டது. ஒப்பீட்டில் தம்மளவில் குறுங்குழுவாக இவற்றில் பல தென்பட்டாலும், ஒவ்வொன்றிற்கும் உலகளாவிய அமைப்பு இருக்கிறது. மிகப்பிரம்மாண்டமான நிதி வசதி இருக்கிறது. மதமாற்றத்துக்கென்றே உருவாக்கி அனுப்பப்பட ரெடியாக உக்கிரமான விவிலிய நம்பிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கென்று ஒவ்வொரு நாட்டிலும் கவனமாய் உருவாக்கப்படும் அதிகாரக் கட்டமைப்புகள் இருக்கின்றன.

என் உறவுக்கார சுமங்கலி அம்மணியை பொட்டழிக்கச்சொன்னது, ப்ராட்டஸ்டண்டாக மதம் மாறிய அவரது மகள்தான். ’உடம்பு சரியில்லாத உன் மகன் (தன் சகோதரன்) இறந்து விடுவான்’ என்ற பயமுறுத்தல். ’இந்துக்கோவில்களுக்குப் போனால் சைத்தான் பிடிக்கும்’ என்ற மூளைச்சலவை என்று அத்தனை உள நெருக்கடிகளும் அந்த வயதான அம்மணி மீது அவரது மகளாலேயே அளிக்கப்பபட்டது. அப்படியானதொரு மன நடுக்கத்தில் கணவன் இருக்கும்போதே பொட்டழித்தார் அந்த எளிமையான தாய். விஷயம் தெரிந்து அந்த மகனே கொதித்தெழுந்து தன் சகோதரியைக் கடுமையாகத் திட்டி சண்டையிட்டு, தாயை மீண்டும் பொட்டு வைக்கச்சொல்லும் அளவுக்குச் சென்றது. இப்போதும் தன் மகள் வீட்டுக்குப்போனால் அந்தத்தாய் பொட்டழிக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. இப்படியெல்லாம் செய்வது ஒன்றும் குறுங்குழு அல்ல. எவாஞ்சலிகல் ப்ராட்டஸ்டண்ட் என்ற பெருங்குழுதான்.

பல்லாவரம் கத்தோலிக்க பள்ளியின் பாதிரியார் பள்ளி அஸெம்பிளியிலேயே வைத்து இந்துக்கடவுள் சரஸ்வதியை இழிவுபடுத்திப்பேசுகிறார். உங்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ- இதோ நானிருக்கும் கலிஃபோர்னியாவின் ஆரம்ப நிலைப்பள்ளியில் இந்து பள்ளிச்சிறுவன் ஒருவன் தாய் தந்தையரோடு நரகத்துக்குப்போவாய் என பயமுறுத்தப்பட்டு அவன் அழுது அரற்றிய கதை நீங்கள் இங்கு வந்தபோது உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இங்கே பாடப்புத்தகங்களில்கூட கிறித்துவம் உயர்வாகவும் இந்துக்கடவுள்கள் இழிவுறுத்தியும் எழுதப்படுகின்றன. விவிலிய வெள்ளத்தை அடிப்படையாக்கி இந்திய வேதங்களுக்கும் இதிகாசங்களுக்கும் காலக்கணக்கு குறிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கிறித்துவ அடிநாதக் கோட்பாடான ஆரியப் படையெடுப்பு என்கிற அப்பட்டமான இனவாதம் இன்றும் கூட உண்மை போல பாடப்புத்தகங்களில் போதிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்த ஏசு வரலாற்று உண்மையாக நிறுவப்படுகிறார். இந்திய பாடப்புத்தகங்கள் ஒன்றும் மெச்சும் வகையில் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆரிய இனவாதம் தொடங்கி அத்தனை தகிடுதத்தங்களும் இந்தியப் பாடபுத்தகங்களிலும் காணக்கிடைக்கிறது. தமிழக ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இந்திய ஞானிகளின் வரலாற்றில் ஆதி சங்கரர் பெயரே இடம் பெறவில்லை (இரண்டாண்டுக்கு முன் பார்த்தது).

———————————————————————

Gnostic என்பதற்கு Insight என்று பொருளைச் சொல்கிறார் நாஸ்டிக் கோஸ்பெல்ஸ் எழுதிய இலைன் பேகல்ஸ். நாஸ்டிக் என்றால் தானாக அறிய முடிவது. (Agnostic- தானாக அறிய முடியாதது). நாஸ்டிக் தத்துவம் பற்றி நான் படித்து அறிந்தவரை ஏசுவை உள்ளிருந்தே ஒவ்வொருவரும் அறிய முடியும் என்று சொல்லி சர்ச்சின் அவசியத்தையே கேள்விக்குள்ளாக்கியதற்காக சர்ச்சால் மிகுந்த திட்டமிடலுடன் ஒடுக்கப்பட்ட ஒரு இயக்கம் அது. நைசீன் பேரவை புதிய ஏற்பாட்டைத்தொகுக்கும் முன்பு நாஸ்டிக் தத்துவத்தின் விழிப்புணர்வு லிபியங்கள் மிகப்பிரபலமாகவும் இருந்திருக்கின்றன.

அதே சமயம் இந்த நாலு லிபியங்கள் தாண்டியும் பல லிபியங்கள் இருந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்தான். சொல்லப்போனால் லூக்கா, மாத்யு ஆகியோரின் Q மூலம் கூட நாஸ்டிக் லிபியங்களில் ஒன்றான தாமஸின் லிபியமாக (~CE50) இருக்கக்கூடும் என்ற ஒரு ஆய்வுக்கருத்தும் உள்ளது. ஏசு என்கிற கருத்தாக்கத்தை அகம் சார்ந்ததாக அல்லாமல், புறவயமாக நிறுவிய பெருமையும் சரி, உயிர்த்தெழுதலை மையமாக்கி அதன் தொடர்ச்சியாய் இறைக்கொலை (deicide) என்கிற குற்றச்சாட்டின் நிழலில் யூத வெறுப்பை கடமையாக பரப்பியதும் சரி, சர்ச் என்ற மத நிறுவனமே முன்னின்று செய்த விஷயங்கள். (மார்க்கில் காணப்படாத யூத நிந்தனை காலப்போக்கில் மாத்யூவில் அதிகரித்து ஜான் எழுதியதான லிபியத்தில் யூதக்காழ்ப்பும், யூத வசையும் பிரதான இடம் பெறுகின்றன).

ஏசு என்கிற பிம்பத்தை தமக்கு இசைவானபடி புறவயமாக மட்டுமே வெளிக்காட்டும் நான்கு லிபியங்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ”ஒன்று போல் காணும்” synoptic gospel-களாக புதிய ஏற்பாடு என்று நைசின் பேரவை கட்டமைத்தது. அதாவது ஏசுவின் உயிர்த்தெழுதலின் வழியாக யாஹ்வா கடவுள் மனித குலத்துடன் செய்து கொண்ட (யூத) பழைய ஏற்பாடு வழக்கொழிந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக யாஹ்வாவுடன் (இவர் கிறித்துவத்தில் ஜெஹோவா ஆகிறார்; இஸ்லாத்தில் அல்லா ஆகிறார்) புதிய ஏற்பாடு ஒன்று ஏசுவின் மீதான exclusive நம்பிக்கையையும் அடிபணிதலையும் அடிப்படையாக்கி செய்யப்பட்டு விட்டது என்பதாக.

ஒருங்கமைந்த (சினாப்டிக்) லிபியங்களும் விழிப்புணர்வு (நாஸ்டிக்) லிபியங்களும் விலகும் பல முக்கியப்புள்ளிகள் உண்டு: விழிப்புணர்வு லிபியங்கள் பாவத்திலிருந்து விடுதலை என்பதை அல்ல, (ஆன்மீக) அறியாமையிலிருந்து விடுதலை என்பதையே முக்கியமாக முன்வைக்கின்றன. ஏசுவின் சித்ரவதைகளோ, சிலுவையில் மரித்ததோ, உயிர்த்தெழுதலோ அல்ல, ஏசுவின் வாழ்வும், அவர் கூறிய மறைபாடங்களுமே விழிப்புணர்வு லிபியங்களில் முக்கியமாகின்றன.

புதிய ஏற்பாட்டைத் தொகுத்தளித்த நைசீன் பேரவை விழிப்புணர்வு லிபியங்களை கிறித்துவ இறையியலுக்கு மாறானவை என்று விலக்கி வைத்தது. தடை செய்தது. விரட்டி அழித்தது. ஒருங்கமைந்த லிபியங்களை ஒட்டி மூவொருமைக்கோட்பாட்டை உருவாக்கியது. இன்று இந்த மூவொருமைக்கோட்பாட்டை ஒட்டியும் வெட்டியும் பற்பல பிரிவுகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே மதமாற்றம் என்பது தம் கடமை என்று காணும் புள்ளியில் ஒன்றிணைகின்றன. அதற்கு நைசீன் பேரவை தொகுத்த புதிய ஏற்பாட்டின் ஏசுவின் உபதேசமே காரணமாகவும் அவர்களால் சுட்டப்படுகிறது. ஏனென்றால் ஜெஹோவாவின் ஒரே மகனை ஏற்பவர் மட்டுமே மீளா நரகத்திலிருந்து மீட்கப்படுவர். எனவேதான் அவர் மீட்பராகிறார். தன் ஒரே மகனை பலிக்கு ஒப்புக்கொடுத்ததன் மூலம் அழிவுச்சாபத்திலிருந்து மனித குலம் மீட்கப்பட கடவுள் வாய்ப்புத்தந்திருக்கிறார். அந்த மீட்பரை ஏற்காதவர் அனைவரும் அழிவுச்சாபத்திற்கு உள்ளாகக் கடவார்கள். இதுதான் கிறித்துவத்தின் அச்சாணி, அடிநாதம், மாறாச் சாரம். இதுதான் ஜானின் லிபியத்திலும் மாத்யுவின் லிபியத்திலும் அடிக்கோடிடப்படுவது. இதுதான் பவுல் அறிவுறுத்துவது.

உண்மையான கிறித்துவர் ஒவ்வொருவரும் மதமாற்றத்தை அவசியக் கடமையாகக் கொள்வதற்கு உள்ள நேரிடைக் காரணம் கிறித்துவர் அல்லாதவர்கள் நரகத்தின் மீளாத்தீயில் வீழ்ந்து விடக்கூடாது என்கிற “நல்லெண்ணமே”. இம்மடலின் தொடக்கத்தில் கலிஃபோர்னியாவின் ஆரம்ப நிலைப்பள்ளியில் இந்து பள்ளிச்சிறுவனை அவனது ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவ நண்பனே நரகத்திற்குப்போவாய் என சொன்னதை கிறித்துவ பெற்றோர்களிடம் சொல்லி புகார் செய்தபோது அவர்கள் சொன்னது: “உங்கள் மேலுள்ள அன்பினால்தான் அவ்வாறு சொன்னான், ஏனெனில் அதுவே கடவுளின் ஒரே மைந்தராகிய ஏசு கிறித்து வெளிப்படுத்திய விவிலிய வார்த்தை.” சொல்லப்போனால் பிற கத்தோலிக்க, சிஎஸ்ஐ பிரிவினர்கள் ஏன் பெந்தகோஸ்தே போன்றோருக்கு எளிதாக இறையாகிறார்கள் என்பதற்கும் இதில் இறையியல் ரீதியாக விடை கண்டுவிட முடியும். தனிமையிலும் எளிமையிலும் கடுமையாக உடல் வருத்திப் பயிற்சி கொள்வது ஆகியவை எஸ்ஸின்கள் என்ற யூத குறுங்குழுவுக்கே உரியவை. ஏசு இந்த எஸ்ஸின்கள் குழுவைச்சேர்ந்தவர் என்று பல ஆராய்ச்சிகள் சுட்டுகின்றன.
—————————————————————————————————-

தமக்குள்ளேயே போட்டி இருந்தாலும் இந்துக்கள் போன்ற “unreached பாவிகளை” பொறுத்தவரையில் மதமாற்றம் என்பது கிறித்துவப்பிரிவுகள் அனைத்தும் புகுந்து விளையாடும் free for all ஆடுகளம்தான்,. இந்திய அரசும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் எந்த கிறித்துவ பெரும்பான்மை நாடும் (ஏன் இந்தியாவிலேயே கூட) இந்துக்களுக்கு அளிக்கப்படாத ஒரு வசதியான களத்தை இந்த மதமாற்ற வன்முறை ஆட்டத்துக்கு அமைத்துத் தந்திருக்கின்றன.

மதப்பிரசாரத்துக்குத்தான் அரசியல் சாசன உரிமை இருக்கிறது. மதம் மாற்றுவதற்கு அரசியல் சாசன உரிமை என்று எதுவும் கிடையாது. உன் கடவுள் பொய் என் கடவுள்தான் நிஜம் என்று சொல்வது –எந்த மதமாயிருந்தாலும்- தடை செய்யப்பட வேண்டிய ஒன்றே. ’என் பெற்றோர் நல்லவர்’ என்று சொல்லத்தான் எனக்கு உரிமை உண்டு. ’உன் பெற்றோர் கெட்டவர், என் பெற்றோர் மட்டுமே நல்லவர்’ என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது. இப்படிப்பட்ட பிரசாரங்கள் நேரடியாகச் சமூகப்பூசல்களை உருவாக்குவதையே குறி வைத்து மேற்கொள்ளப்படுபவை. இந்த வகைக் கடவுள் விற்பனையாளர்கள் பலவீன நிலையில் இருப்பவர்களிடமே கடைவிரிக்க முற்படுகிறார்கள். பள்ளிச் சிறார்களிடம் சிகரெட் விளம்பரம் செய்வது எவ்வாறு தார்மீக நீதியற்றதோ அதுபோலத்தான் ஒரு பலவீன நிலையில் இருப்பவரிடம் ’உன் கடவுள் பொய் என் கடவுள் மட்டுமே உண்மை’ என்று விளம்பரம் செய்வதும்.

ஆனால், இந்த விளம்பர வேலைக்குத்தான் கோடிக்கணக்கான பணம் தென்னிந்தியாவில்- குறிப்பாக தமிழ்நாட்டில் – கொட்டப்படுகிறது. இதனால் அதிகார வட்டங்களை வளைக்க முடிகிறது. திரைப்படங்களில் விமர்சனக்கருத்துக்கள் வந்தால் சென்சாரில் தடை செய்ய முடிகிறது. தமிழக பாதிரியார்களின் குற்றச்செயல்களை ஊடகங்களில் பெரிதாய் வெளித்தெரியாமல் வெள்ளையடிக்க முடிகிறது. எந்த கிறித்துவ பாதிரியாராவது தமிழ் திரைப்படத்தில் விமர்சனம் செய்யப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நித்யானந்தர் கூத்து ஊடக வெளிச்சத்தில் அரங்கேறிய அதே கால கட்டத்தில் தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கிறிஸ்துவ பாதிரியார்கள் கடத்தி பலாத்காரம் செய்து துன்புறுத்திய செய்தி எங்கேயோ ஒரு ஊடக மூலையில் நாதியற்றுக் கிடந்தது.

இதன்பின்புலத்தில் மிகப்பெரும் அதிகார அழுத்தம் செயல்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டே தான் கூறிய கருத்தை (முதன்முறையாக?) ஸ்டெயின்ஸ் கேஸில் வாபஸ் பெறுகின்ற அளவுக்கு அது இருக்கிறது. ஊழல் அதிகாரியை ஊழலைக்கண்காணிக்க நியமித்தது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேட்டு அந்த அப்பாயிண்ட்மென்டை கேன்ஸல் செய்யும் அரசியல் சட்டபூர்வ செயலுக்கு கத்தோலிக்க சபை ஏமாற்றத்தைத் தெரிவிக்கிறது!

நிற்க.

——————————————————————-
ஏசுவை இப்படிப்பட்ட அதிகார நிறுவனங்களிலிருந்து பிரித்துப்பார்க்க முடியுமா? முடியுமென்றால், ஏசுவை முதலில் விவிலியத்தில் இருந்து பிரித்துப்பார்க்க முடிய வேண்டும். ஏனெனில் விவிலியம் மூலம்தான் ஏசுவை அறிய முடிகிறது. விவிலியத்தில் இல்லாத விழிப்புணர்வு லிபியங்கள் (க்னாஸ்டிக் கோஸ்பெல்ஸ்) இறைவாக்குக்குப்புறம்பானவை என்று சர்ச் அறிவித்து அவை விலக்கப்பட்டு விட்ட நிலையில், கிறித்துவ ஏசுவை அறிய நைசீன் பேரவை ஒருங்கிணைத்த புதிய ஏற்பாடுதான் இன்று ஒரே வழியாகிறது. மாறாக விழிப்புணர்வு லிபியங்களை ஏற்றுக்கொண்டாலோ இறைவனின் ஒரே மகன், புறவயக் கடவுள், மூவொருமைக் கோட்பாடு என்கிறபடியான கிறித்துவத்தின் ஆதார விஷயங்கள் பலவும் அடிபட்டுப்போகும்; ஏசு என்கிற கதவின் வழியாகவே கடவுளை அடைய முடியும் என்பதும் கூட இல்லையென்றாகும். (’ஏனெனில் ஒவ்வொருவரிடத்திலுமே அந்தக்கதவு உள்ளது’- Teachings of Sylvanus)).

இன்று நமக்குப் பழக்கமான ஏசு என்கிற கருத்தாக்கத்தின் ஆதாரமே விவிலியம்தான். விவிலியங்களை செலக்ட் செய்ததிலிருந்து எது இறைவனுக்கு உகந்தது எது உகந்ததில்லை (heresy) என்று கட்டம் போட்டது எல்லாமே சர்ச்தான். ஏசு என்கிற கிறித்துவின் இறையியல் மூலகர்த்தாவே சர்ச்தான் எனும்போது சர்ச் என்ற நிறுவனத்தை விலக்கி, அது கட்டமைத்த விவிலியத்தையும் அதன் இறையியலையும், அவை முன்வைக்கும் மதமாற்றக் கோட்பாட்டையும் விலக்கி விட்டால், அங்கே ஏசு என்று ஒருவரும் மிஞ்சியிருக்க மாட்டார்.

நிறுவன சர்ச்சின் விவிலிய இறையியலில் இருந்து பிரிக்கப்பட்ட ஏசு குறைந்த பட்சம் கிறித்துவ ஏசு இல்லை என்று திண்ணமாகச் சொல்லி விடலாம். அப்படி மிஞ்சும் ஏசுவுக்கு நம் இஷ்டப்படி என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டி விடலாம். ஆனால் அது விவிலியம் சொல்லும் கிறித்துவ ஏசுவாக மட்டும் இருக்காது.

நிறுவன ஏசு உண்டென்றால், அதன் மதமாற்றம் என்பது அதிகாரத்தை வளைப்பதைக் குறிவைத்து கூட்டம் சேர்க்கின்ற வேலையென்று ஆகிறது.
நிறுவன ஏசு இல்லையென்றாலோ, மதமாற்றம் என்பதே அர்த்தம் இழக்கிறது.

எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் மதமாற்றத்தின் அதர்மம் மாறிவிடுவதில்லை.

————————————————————————

அருணகிரி

மதமெனும் வலை

 

 

முந்தைய கட்டுரைதேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்
அடுத்த கட்டுரைவணங்கான்,நேசமணி – கடிதம்