ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் உரையாடல் இருவராலும் பதிவுசெய்யப்படவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டபின் அவர்களுக்கு அவ்வாறு பதிவுசெய்வது முக்கியம் என்றும் தோன்றவில்லை. ஆனால் நான் அவர்கள் இருவரும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நடுவே பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தேன்.

சுந்தர ராமசாமி 1988-ல் காலச்சுவடை தொடங்கும்போது புதிய இலக்கிய அலை ஒன்றை, எழுத்தாளர் அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தார். அவர் அதற்கு முன்னர்  ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற பத்திரிக்கையிலும் துக்ளக் இதழுக்கு எழுதி வெளிவராமல் போன கட்டுரைகளிலும் அந்தக் கனவைச் சொல்லியிருந்தார். புதுயுகம் பிறக்கிறது இதழில் ‘சாதனைகள் சாத்தியமா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சுந்தர ராமசாமி எழுதியிருந்தார். அதிலிருந்த கனவுதான் காலச்சுவடின் அடித்தளம்.

[‘புதுயுகம் பிறக்கிறது’ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் தமிழினி வசந்தகுமார் தொடங்கி மூன்று இதழ்கள் நடத்தப்பட்டது. அரசாங்க நடவடிக்கையால் நின்று போயிற்று. பிரதீப் குமார் என்ற பெயரில் அதை வசந்தகுமார் அன்று நடத்தினார். அவ்விதழுடன் சுகுமாரனும் பாதசாரி என்னும் நிமல.விஸ்வநாதனும் தொடர்பு கொண்டிருந்தனர்].

அன்றிருந்த சிற்றிதழ்ச்சூழலின் சோர்வுநிலையிலிருந்து பீரிட்டு ஒரு புதுமுயற்சி எழவேண்டும் என்னும் கனவு சுந்தர ராமசாமியிடம் இருந்தது. அன்று சிற்றிதழ்ச்சூழல் தேக்க நிலையை அடைந்திருந்தது. எழுபதுகள்தான் உண்மையில் சிற்றிதழ்ச்சூழலின் பொற்காலம். ஐம்பதுகளில் தமிழில் சி.சு.செல்லப்பா, க.நா.சு போன்றவர்களிடமிருந்து இலக்கியச் சிற்றிதழ் எனும் கருதுகோள் உருவாகியது. வாசகர்களையும், வெளியீட்டு எண்ணிக்கையையும் மட்டுப்படுத்திக்கொண்டு, அமைப்புவல்லமை இல்லாமல், நடத்தப்படும் இதழ் அது. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’தான் தமிழின் முதல் இலக்கியச் சிற்றிதழ்.

இலக்கிய விமர்சனத்திற்காக சி.சு.செல்லப்பா தொடங்கிய ’எழுத்து’ புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தது. ’கசடதபற’ நவீனத்துவ அழகியல் மதிப்பீடுகளை முன்வைக்கும் சிற்றிதழாக ஆகியிருந்தது. வானம்பாடி மக்களிலக்கியம் என்னும் கருதுகோளை முன்வைத்தது. தாமரை, செம்மலர் போன்ற இடதுசாரி இதழ்களும் சிற்றிதழ்களாகவே செயல்பட்டன. அவ்வப்போது தோன்றி மறையும் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

எழுபதுகளில் சிற்றிதழ்களில் சில எழுத்தாளர்களின் குரலாக மாறத்தொடங்கின. ’லயம்’ பிரமிளின் குரலாகவும் ’யாத்ரா’ வெங்கட் சாமிநாதனின் குரலாகவும் வந்தன. அவர்களுக்குள் இருக்கும் விமர்சனமோதல் ஆளுமைமோதலாக மாறியது. ஒருகட்டத்தில் சிற்றிதழ்கள் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் ஆடிகள் போல ஆகி ஒரு மாய உலகை உருவாக்கிக்கொண்டன.

எண்பதுகளில் சிற்றிதழ்களுக்கான வாசகர்கள் மிகவும் குறைந்தனர். முந்தைய தலைமுறை சிற்றிதழ் வாசகர்கள் வாசிக்காமலாயினர். அடுத்த தலைமுறையினரை உள்ளே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமலாயின. உண்மையில் அன்று சிற்றிதழ் இயக்கம் ஆங்காங்கே  தனிநபர்களை சுற்றிய சிறு வட்டங்களாகவே இயங்கியது. சுந்தர ராமசாமியைச் சுற்றி நாகர்கோவிலிலும், தி.க.சிவசங்கரனைச் சுற்றி நெல்லையிலும், தேவதச்சனைச்சுற்றி கோவில்பட்டியிலும், ஞானக்கூத்தனையும் அசோகமித்திரனையும் சுற்றி சென்னையிலும் என.

கூடவே படைப்பிலக்கியத்திலும் பெரிய தேக்க நிலை நிலவியது. அன்று ஓரளவு படைப்பூக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்த பலரும் பிரபல இதழ்களில்தான் எழுதினார்கள் என்பதை இன்று பலர் அறிந்திருக்கமாட்டார்கள். அசோகமித்திரன் சிற்றிதழ்களில் எழுதுவது என்பது மிகக்குறைவாக இருந்தது.  அவர் பல முக்கியமான கதைகளை குமுதத்திலும் சாவி பத்திரிக்கையிலும்தான் எழுதினார். தி.ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்களெல்லாம் சிற்றிதழில் எழுதியவர்களல்ல.

அன்று சுந்தர ராமசாமி பெரும்பாலும் எழுதுவதை நிறுத்திவிட்டிருந்தார். ஆ.மாதவன், நகுலன் போன்ற  பல எழுத்தாளர்கள் அரிதாக ஓரிரு கதைகளை எழுதினார்கள். பரவலாக ஒரு ஆண்டில் பத்து பன்னிரண்டு கதைகள் கூட நவீன இலக்கியத்தரப்பிலிருந்து வராமலாயிற்று ஒரு நாவலோ இரண்டு நாவலோ வரக்கூடும் என்ற நிலையே நிலவியது. தமிழ்நாட்டிலேயே ஐநூறு இலக்கியவாசகர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற சூழல்.

இச்சந்தர்ப்பத்தில்தான் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் வெளியாகியது. அவர் ஏழாண்டு இடைவெளிக்குப்பின் திரும்பி வந்து எழுதிய கதைகளின் நீட்சி அந்நாவல். [அக்கதைகள் பல்லக்குதூக்கிகள் என்னும் தொகுதியில் உள்ளன]. அதைப்பற்றி குமுதம் சற்று கவனத்தை திருப்பியதும் அந்நாவல் பேசப்படலாயிற்று. அதிலிருந்த ஒரு மீறலும் துடுக்கும் அடுத்த தலைமுறை வாசகர்களை கவர்ந்தன. ஆகவே சிற்றிதழ்ச் சூழலுக்குள் ஒரு புதுக்காற்று நுழைந்தது

அன்றைய சிற்றிதழ்சார்ந்த எழுத்தென்பது அன்றாட எதார்த்தத்தை கூடுமானவரை புறவயமாகச் சொல்வது, சாதாரணமான உலகியல் சார்ந்த கருத்துக்களையும் புழக்கச்சூழலில் இருந்து பெற்ற சில அவதானிப்புகளையும் கதைக்கட்டுமானத்துக்குள் பூடகமாக்கி மறைத்து வைப்பது, உணர்ச்சிகளை குறைவாகச் சொல்வது என்னும் விதிகளின்படி எழுதப்படும் ஒன்றாக இருந்தது. அன்றாடத்தன்மை, சாதாரணக்கருத்து,  பூடகத்தன்மை என்று அக்கதைகளின் அமைப்பை வரையறுத்துவிடலாம்

இந்த அன்றாடத்தன்மையும் சாதாரணத்தன்மையும் உருவாக்கும் வறட்சி பெரும்பாலான கதைகளில் இருந்தது. ஓர் இலக்கிய வாசகன் அவனுடைய தலைக்குள்ளிருக்கும் அன்றாட அவதானிப்புகளின் அடுக்கை சீண்டும், அவன் அகத்தை நிலைகுலையவைக்கும் ஒன்றை படைப்பில் எதிர்பார்க்கிறான். அமைதியான தேனீக்கூடொன்று கலைந்து விடுவது போன்ற அனுபவமே நல்ல கதை உருவாக்குவது. தேனீக்கூட்டம் மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ளும்.  அந்த சீண்டல் நிகழாத கதைகள், ‘நல்லது, ஏதோ ஒன்றை சொல்கிறார்’ என்றவகையில் முடிந்து போகக்கூடிய கதைகள், சர்வ சாதாரணத்தன்மையையே அடையாளமாகக் கொண்ட கதைகள் அன்று வந்துகொண்டிருந்தன.

ஒரு வகையில் அன்று அசோகமித்திரன் அதற்கு ஒரு காரணம். அசோகமித்திரனின் நல்ல கதைகள் சர்வசாதாரணத் தன்மையை மேலடுக்கிலும், சற்று கவனிப்பவர்களை ஆழமாக சீண்டும் அடிப்படை வினாக்களை அடித்தளத்திலும் கொண்டவை. ஆனால் அவர் எழுதிக் குவித்த கதைகளில் பெரும்பகுதி சர்வசாதாரணமான அன்றாடத் தன்மை மட்டுமே கொண்டவை. அவரை ஒட்டி எழுதியவர்கள் அந்த அடிப்படை வினாக்களை எழுப்ப திராணியற்றவர்களாக இருந்தனர். இன்றும் அசோகமித்திரன்பாணி எழுத்து என்பது அசோகமித்திரனின் ஆழம் அற்ற, அன்றாடயதார்த்தம் மட்டுமே கொண்ட, ஒன்றுதான்.

அவர்கள் அசோகமித்திரனின் ‘சர்வசாதாரணம்’ என்ற வடிவத்தை மட்டுமே நகலெடுத்தனர். ஆகவே நடுத்தரவர்க்க நகர்வாழ்வு, வறிய கிராமியவாழ்வு ஆகியவற்றின் அன்றாடச் சித்திரங்களை வலுவற்ற வறட்டு மொழியில் சொல்லும் கதைகளால் ஆனதாக இருந்தது சிற்றிதழ்ச்சூழல். பொதுவாக அன்று இவற்றை ‘கணையாழிக்கதைகள்’ என்று கேலியாகச் சுட்டினோம்.

அடுத்த தலைமுறையில் கோணங்கியும் நானும் எழுந்து வந்தபோது அசோகமித்திரனின் எழுத்துமுறையை நிராகரிப்பதையே முதன்மையாகச் செய்தோம். ஆனால் அது முழுமுற்றான நிராகரிப்பாக ஆகிவிடுகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. ஆகவேதான் அசோகமித்திரன் சிறப்பிதழை 1991ல் அவருடைய அறுபதாம் ஆண்டுநிறைவின்போது சுப்ரபாரதி மணியன் ஆசிரியராக இருந்த ‘கனவு’ சிற்றிதழ் சார்பில் கொண்டுவந்தேன். அசோகமித்திரன் அன்று சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில் இருந்தே மறைந்துவிட்டிருந்த படைப்பாளி. அவரை சிற்றிதழ்ச்சூழலுக்குல் மீட்டுக்கொண்டுவந்தது அந்தத் தொகைநூல்.

ஜே.ஜே. சில குறிப்புகள் அச்சூழலில் ஒரு சாட்டை வீச்சென நிகழ்ந்தது. அதிலிருந்த வெளிப்படையான கேலி, தத்துவார்த்தமான பார்வைகள், அரசியல் சீண்டல்கள், நேரடியான மொழிவிளையாட்டு, கவித்துவமான பகுதிகள் ஆகியவை சிற்றிதழ்வாசகர்களில் பலரை மீண்டும் கவனிக்க வைத்தன, அன்று உருவாகி வந்திருந்த புதிய தலைமுறை வாசகர்களை உள்ளே கொண்டுவந்தன.

இப்புதிய தலைமுறை வாசகர்கள் அன்று பலவகையிலும் சலிப்புற்றிருந்தவர்கள். ஜே.ஜேயின் பார்வையில் சொல்லவேண்டுமானால் ‘நிகிலிச’ மனநிலையை அடைந்துவிட்டிருந்தவர்கள். அன்று வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் இருந்த புரட்சிகர இயக்கங்கள் எல்லாமே அபத்தமான குறுங்குழுக்களாக மாறிவிட்டிருந்தன. நெருக்கடிநிலை இங்கிருந்த பல புரட்சிகர அமைப்புகளின் உண்மையான பலமென்ன என்பதை வெளிக்காட்டியது. அதன்பின் அவர்கள் என்ன சொன்னாலும், எப்படி மாற்றிக்கொண்டாலும் புரட்சிபற்றிய நம்பிக்கைகளை உருவாக்கவே முடியவில்லை.

திராவிடக் கட்சிகளின் ஊழலும் தேசியக்கட்சிகளின் அதிகாரவெறியும் நாள்தோறும் அப்பட்டமாக தெரிந்தன. ஆகவே அரசியல் ரீதியான நம்பிக்கையின்மை இளந்தலைமுறையினரிடம் மேலோங்கியிருந்தது. அதில் இருந்து ஒரு மெல்லிய கொள்கை சார்ந்த நம்பிக்கையைச் சிலர் கற்பனையில் உருவாக்கி நிலைநிறுத்திக்கொள்ள முயன்றனர். ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர போன்ற நாவல்களில் அந்த நம்பிக்கை உருவாக்க முயற்சியைக் காணலாம்.

இன்னொருபக்கம் காதல் போன்ற கற்பனாவாதங்கள் இளைஞர்களை ஈர்த்தன. ஆண்பெண் உறவின் கற்பனாவாதம் என்றுமே தமிழிலக்கியத்தின் முக்கியமான ஒரு பேசுபொருள். ஏனெனில் ஆண்பெண் உறவு சார்ந்த பலவிதமான பாவனைகள் மற்றும் ஒடுக்குமுறைகளாலானது தமிழ்ச் சமூகம். ஆகவே பாலுறவும் மீறலும் குறித்த கனவு இங்கு இலக்கியத்தின் நிரந்தரச் சபலம். எழுபதுகள் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவந்து வேலைக்குப் போவது சாதாரணமாக ஆன காலகட்டம். ஆணும்பெண்ணும் சுதந்திரமாகப் பழக ஆரம்பித்த சூழலில் பாலியல்கனவு மையப்பேசுபொருளாக ஆனது.

தமிழில் நவீன இலக்கியம் தொடங்கும்போதே ஆண்-பெண் உறவு குறித்த சுதந்திரக் கற்பனைகள் எழுந்தன. பாரதியாரின் ஆறிலொருபங்கு போன்ற கதைகள் உதாரணம். நள்ளிரவில் வீணைவாசிக்கும் மாமன் மகளாகிய காதலியை பூந்தோட்டத்தில் ரகசியமாக கதாநாயகன் சந்தித்து பேசுவது, தேசசேவை என்னும் இலட்சியத்தைப் பகிர்ந்துகொள்வது போன்ற கற்பனைகள். ‘ஐயரே இது எந்த ஊரிலே?’ என்று நாம் பாரதியிடம் புன்னகையுடன் கேட்டால் ‘அது வங்காளத்தின் பிரம்மசமாஜத்திலிருந்து வந்த கற்பனை’ என்று சற்று வெட்கத்துடன் அவர் கூறியிருக்கக்கூடும்.

கு.பரா.வில், ஜானகிராமனில் இந்த சபலக்கற்பனை இருந்துகொண்டிருந்தது. அது அடுத்த கட்டத்தை எட்டி, பிரபல ஊடகங்கள் வழியாக இன்னும் அதிகமான வாசகர்களை சென்றடைந்தது பாலகுமாரன் வழியாக. பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள் என்ற மூன்று நாவல்களும் அன்றைய தமிழ் இளைஞர்களிடம் உருவாக்கிய செல்வாக்கு இன்று வாசகர்களால் அத்தனை எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதல்ல, அவை அன்றைய பொதுவாசகனைக் கவரும் இரண்டு கூறுகளின் வெற்றிகரமான கலவைகள்.

ஆத்மாநாம்

உதாரணமாக மெர்க்குரிப்பூக்கள். அவற்றில் தொழிற்சங்கச்சூழல் மற்றும், மார்க்ஸியம் ஆண்பெண் உறவுடன் கலக்கப்பட்டுள்ளது. அன்றைய சாரசரி இளைஞன் சென்றுமுட்டும் இரு களங்கள் அவை. தொழிற்சங்கங்கள்- தொழிற்சூழல் வழியாகவே அவன் நவீன முதலாளித்துவ உலகை எதிர்கொள்கிறான். அதற்கேற்ப தன்னை உடைத்து உருமாற்றிக் கொள்கிறான். அது அவனுக்கு ஒரு சவால்களம். இன்னொரு பக்கம்  சுதந்திரமான பெண்ணுறவு என்பது அவனை பதற்றமடைய வைக்கும், பரவசமூட்டும் ஒரு புதிய களம்.

‘கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்

இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது

சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர்

கொள்கைகளை கோஷ வெறியேற்றி

ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்

மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று

மெல்லக் கொல்லும் நஞ்சை

உணவாய்ப் புசித்தனர்

எளிய மக்கள்

புரட்சி போராட்டம்

எனும் வார்த்தைகளினின்று

அந்நியமாயினர்

இருப்பை உணராது

இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்

என் ஸக மனிதர்கள்

இந்தத் துக்கத்திலும்

என் நம்பிக்கை

நாளை நமதே.

என்ற ஆத்மாநாமின் கவிதை அக்கால மனநிலையின் மிகச்சரியான வெளிப்பாடு.

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகளும் பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களின் ஒரே ஆண்டில் [1981] வெளிவந்தன. அந்த நம்பிக்கையிழந்த தலைமுறையில் ஒருசாராரைக் கவர்வதாக ஜே.ஜே.சிலகுறிப்புகள் அமைந்தது, பாலகுமாரன் இன்னொரு பெரும்பான்மையை கவர்ந்தார்.

மெர்க்குரிப்பூக்களும் ஜே.ஜே.சிலகுறிப்புகளும் இரண்டு வகைகளில் அன்றைய வாசகனுக்கு துடிப்புட்டும் அனுபவங்களாக அமைந்தன. மெர்க்குரிப்பூக்கள் வழியாக சுந்தர ராமசாமியை வந்தடைந்த வாசகர்களை எனக்கு தெரியும். உதாரணமாக அன்று பெங்களூரில் இருந்த எனது நண்பர் ராமச்சந்திரன், பிறகு சுந்தர ராமசாமிக்கும் பிரமிளுக்கும் மிக நெருக்கமானவரானார். காகித வியாபாரம் செய்துவந்தார். அவர் பாலகுமாரன் வழியாகவே சுந்தர ராமசாமியைக் கண்டடைந்தார்.

நம்பிக்கையின்மை எப்போதுமே ஏளனத்தை உருவாக்குகின்றது. ஆகவே கேலியே அன்றைய இளைஞனின் மொழியாக இருந்தது. மிகக் குறைந்த அளவிலேனும் அன்றைய படங்களில் அதைப்பார்க்கலாம், உதாரணமாக வறுமையின் நிறம் சிவப்பு. இளைஞர்களிடமிருந்த அந்த ஏளனமும் கசப்புக் கொண்ட மனநிலை ஜே.ஜே.சிலகுறிப்புகளை உடனே அடையாளம் கண்டுகொண்டது

ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு, அதை ஒட்டி தன்னை சூழ்ந்து உருவான இளம்வாசகர் வட்டமும் சுந்தர ராமசாமிக்கும் ஒரு தொடக்கத்தை நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது. தமிழகத்தில் இலக்கியத்தில் நிகழும் சோர்வுத்தன்மையை போக்க வேண்டுமென்று அவர் எண்ணினார்.

அந்த சோர்வுக்கான காரணங்கள் என்ன என்று அவர் சிலவற்றை அவதானித்திருந்தார். அதிலொன்று தனிநபர் வாழ்க்கை சார்ந்து மட்டுமே எழுதுவது, அன்றாடத்தை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பது, வரலாற்றுப் பார்வையோ தத்துவப்பார்வையோ இல்லாமல் எளிய பொது உண்மைகளை மட்டுமே இலக்கியப்படைப்புகள் முன்வைப்பது. சுருக்கமாகச் சொன்னால் இலக்கியப்படைப்பாளி வரலாறோ, தத்துவமோ தெரியாதவனாக இருப்பது. இலக்கியச்சூழலில் இருந்து சமகால உலக- இந்திய அறிவியக்கம் வெளியே நிறுத்தப்பட்டிருப்பது.

ஆகவே தான் உருவாக்கவிருக்கும் இலக்கிய அலையில் வரலாற்றுக்கும் தத்துவத்திற்கும் இணையான இடம் அளிக்கப்படவேண்டும் என்று சுந்தர ராமசாமி கருதினார். இதைக்குறித்து அவருடைய எண்ணங்கள் உருவாவதற்கு கோவை ஞானி மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவர் இவ்வெண்ணங்களில் உழன்று கொண்டிருக்கையில்தான் ஜே.ஜே.சில குறிப்புகளைப்பற்றி கோவை ஞானி எழுதிய ஒரு மதிப்புரையை அவர் வாசித்தார். அதற்கு முன்னரே ஞானியுடன் அவருக்கு ஓர் அறிமுகம் இருந்தது. எஸ்.வி.ராஜதுரை வழியாக அந்த அறிமுகம் நிகழ்ந்திருக்கலாமென்று நான் நினைக்கிறேன்.

ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு ஞானி எழுதிய விமர்சனம் வழக்கமான மார்க்சிய இயந்திரவியல் அணுகுமுறை இல்லாமல், அதை மார்க்சியத்தின் களத்திலேயே மிகக்கூர்மையான ஒரு பார்வையுடன் அணுகுவதாக, படைப்பூக்கத்துடன் உள்வாங்க முயல்வதாக இருந்தது ஆகவே சுந்தர ராமசாமி ஞானியுடன் தொடர்புகொள்ள, அவர்களிடையே தொடர்ச்சியான கடிதப்போக்குவரத்து இருந்தது.

ஞானியிடமிருந்து சுந்தர ராமசாமி மீண்டும் ஒருவகையான மார்க்சிய ஈர்ப்பை அடைந்தார் என்று இன்று தோன்றுகிறது. சுந்தர ராமசாமியின் இலக்கியப்பயணத்தில் மார்க்சிய ஈடுபாடுதான் முதன்மை இயக்குவிசையாக இருந்திருக்கிறது. ஜீவா தொடங்கி அன்றைய மார்க்சியர் அனைவரிடமும் அவர் உரையாடலில் இருந்திருக்கிறார். மார்க்சியம் வழியாகவே அவர் இலக்கியத்துக்குள் வந்தார். மார்க்சிய இதழான சரஸ்வதியிலும் சாந்தியிலும் அவருடைய கதைகள் வெளிவந்தன. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் மார்க்சியத்தின் இரட்டை இலக்கியவாதிகளாகவே அறியப்பட்டனர்.

பின்னர் ஸ்டாலினிசத்தின் முகம் வெளிப்பட்டபோது, அதன் இன்னொரு வடிவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் வெளிப்படுவதைக்கண்டு சலிப்புற்று,அதிலிருந்து விலகிக்கொண்டார். ஒரு புளிய மரத்தின்கதைக்கு அவர் எழுதிய முன்னுரை அவ்வாறு அவர் விலக்கம்டைந்ததற்கான ஒரு அறிக்கை போல் அமைந்தது.

மீண்டும் இருபதாண்டுகள் அவர் இலக்கியத்தில் இருந்தாலும் தீவிரமாக செயல்பட்டார் என்று சொல்ல முடியாது .பெரும்பாலும் தன் வணிகத்திற்கு திரும்பி. அதில் தீவிரமாக செயல்பட்டு வெற்றியையும் அடைந்தார். மார்க்சியத்தின்மீது ஆதாரமான நம்பிக்கையிழப்பையும் கொண்டிருந்தார். ஞானியுடனான உரையாடல் மார்க்சியத்தை ஓர் அரசியல் செயல்திட்டமாகவோ கட்சிக்கொள்கையாகவோ அன்றி, ஒரு தத்துவமாக அணுகலாம்; ஒரு வரலாற்று அணுகுமுறையாக அணுகலாம் என்ற நம்பிக்கையை சுந்தர ராமசாமிக்கு அளித்தது.

ஞானியிடமிருந்து மார்க்சியம் என்பது ஒருவகை மெய்யியல் என்ற வரியை சுந்தர ராமசாமி பெற்றுக்கொண்டார் என்று சுருக்கமாக சொல்லலாம். அதைப்பற்றி எப்போதுமே ஞானியை மேற்கோள் காட்டி சுந்தர ராமசாமி பேசியிருக்கிறார். அப்போது எஸ்.என்.நாகராஜனுடன் அவருக்கு நேரடியான உரையாடல் ஏதுமில்லை. ஆனால் பின்னர் ஒரு தீவிரமான ஆக்கபூர்வமான உரையாடல் அவர்களிடையே நிகழ்ந்தது. அதற்கும் வழிவகுத்தவர் ஞானிதான்.

ஞானி மார்க்சியம் என்பது ஒரு கட்சியின் கொள்கையாகவோ, அக்கட்சி ஆட்சியை கைப்பற்றியபின் ஆட்சியின் செயல்திட்டமாகவோ மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும்; ஒவ்வொரு தளத்திலும் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து மாற்றுநோக்கி செயல்படுபவர்களின் சிந்தனையில் செயல்படும் ஒரு தத்துவமூலமாக திகழமுடியும் என்றும் சொன்னார்.

இதை ஒருவகையில் விளக்க வேண்டுமென்றால்  ‘மேக்ரோ’ மார்க்சிஸத்துக்கு எதிராக ஒரு  ‘மைக்ரோ’ மார்க்சிஸத்தை ஞானி முன்வைத்தாரென்று கூறலாம். பேரலகு மார்க்ஸியத்துக்கு எதிராக நுண்ணலகு மார்க்சியத்தை. மையப்படுத்தப்பட்ட மார்க்ஸியத்துக்கு எதிராக பரந்துபட்ட, பன்முக மார்க்ஸியத்தை. ஒவ்வொரு சிந்தனைக்கூறிலும் நுண்வடிவாகச் செயல்படும் ஒரு மார்க்சியம் அது. அமைப்பாக திரளாவிட்டாலும்கூட தனிநபர் அளவில் சிந்தனையில் உறைந்து, அத்தனை பார்வைகளிலும் ஊடுருவி, ஒட்டு மொத்தமான அணுகுமுறை மாற்றங்களையும், அதன் விளைவான சிந்தனை மாற்றங்களையும், காலப்போக்கில் சமூகமாற்றங்களையும் உருவாக்கும் வல்லமை கொண்ட ஒன்று

இது சுந்தர ராமசாமியை பெரிதும் கவர்ந்த ஒரு கருத்தாக இருந்தது. இதை மீண்டும் மீண்டும் சுந்தர ராமசாமி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் மார்க்ஸியம் பற்றி ஏற்கனவே பன்னிப்பன்னி பேசப்பட்டுவிட்டது, ஆகவே அவை தன் இதழில் தேவையில்லை என அவர் நினைத்தார். அந்த எண்ணத்தால்தான் சுந்தர ராமசாமி புத்தார்வத்துடன் எம்.என்ராய்க்கு சென்று சேர்ந்தார்.

எம்.என்.ராய்

மார்க்சிய வரலாற்று ஆய்வாளரான டி.டி. கோசாம்பி, ரொமிலா தாப்பர் ஆகியோரில் அன்று நான் மிகத்தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தேன். அவ்வீடுபாடு ஆய்வாளர்களான பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கங்காதரன் ஆகியோரிலிருந்து எனக்கு வந்தது. கோசாம்பியைக் குறித்தும் ரொமிலா தாப்பரைக்குறித்தும் ஆர்.எஸ்.சர்மாவைக்குறித்தும் சுந்தர ராமசாமிவிடம் நான் அன்று இளமைக்குரிய மிகையுற்சாகத்துடன் மணிக்கணக்காக பேசியிருக்கிறேன். அவர் அவர்களை கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர பொருட்படுத்தியதில்லை. ஒர் இலக்கியவாதி அவர்களை பொருட்படுத்தவேண்டும் என்ற எண்ணமும் முன்பு அவருக்கு இருக்கவில்லை.

ஆனால் பின்னர் கோசாம்பி குறித்த ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. ஆங்கிலத்தில் படிப்பதை விட தன்னால் மலையாளத்தில் விரைவாக படிக்க  முடியும் என்பதனால் கோசாம்பியின் நூல்கள் மலையாளத்தில் இருக்குமென்றால் கொண்டு வரும்படி அவர் என்னிடம் சொன்னார். கோசாம்பியின் மூன்று மலையாள மொழிபெயர்ப்புகளை நான் அவரிடம்கொண்டு வந்து கொடுத்தேன்.  அதைப்பற்றி அவரிடம் விவாதித்திருக்கிறேன்.

கோசாம்பி

கோசாம்பி குறித்து நான் அவருக்கு எழுதிய நீண்ட கடிதத்தை பின்னர் கட்டுரையாக்கி சுபமங்களாவில் 1992ல் வெளியிட்டேன். தமிழில் கோஸாம்பி பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரை அது. பின்னர் எஸ்.என்.ஆர்.சத்யா கோஸாம்பி பற்றி தொடர்கட்டுரைகளை காலச்சுவட்டில் எழுதினார். கோஸாம்பியின் நூல்களை மொழியாக்கமும் செய்தார்.

ஆனால் இங்கே அந்நூல்கள் சொல்லும்படியான செல்வாக்கை உருவாக்கவில்லை. இங்கே மேலோங்கியிருந்த திராவிட இயக்கத்தின் எளிமையான, ஒற்றைப்படையான வரலாற்றுப்புரிதலுக்கு அவை உகக்காதவை. அவை மார்க்ஸிய முரணியக்க நோக்கில் வரலாற்றின் பரிணாமத்தை ஆராய்பவை, ஆகவே இங்குள்ளவர்களுக்கு அவை சிக்கலாகவே தெரிந்தன. மார்க்ஸியர்கள்கூட அந்நூல்களை வாசிக்கவோ பின்னாளில் தங்கள் எழுத்துக்களில் மேற்கோள்காட்டவோ செய்யவில்லை. ஒப்புநோக்க காலத்தால் முந்தையவையும், போதிய தரவுகளோ வரலாற்றாய்வு முறைமைகளோ இல்லாமல் செய்யப்பட்டவையும் ஆன அம்பேத்காரின் கருத்துக்களை மேற்கோள்களாக கையாள்வதையே மார்க்ஸியர்களும் செய்தனர்

புதிய வரலாற்றுப் பார்வை ஒன்று எழுத்தாளனுக்கு இருக்கவேண்டுமென்றும் , அதுவே புதிய தத்துவப் பார்வையையும் மெய்யியல் பார்வையும் ஆகும் என்றும் சுந்தர ராமசாமியும் எண்ண ஆரம்பித்தார். மெய்யியல் சார்ந்த ஈடுபாடு இல்லாதபோதுதான் எழுத்தாளன் அன்றாட உண்மையை, புழக்க உண்மையை மட்டும் தன் படைப்பில் தொடர்ந்து முன்வைக்கிறான். அது வெளிப்படையாக இருந்தால் அதற்கு கலைமதிப்பில்லாமல் ஆவதைக் கண்டு அதை கதைக்குள் பூடகமாக்கி வைக்கிறான். வாசகன் அதை கண்டுபிடிப்பதே கலையனுபவம் என்று சொல்லத்தொடங்குகிறான். தமிழ்ச் சிற்றிதழ் எழுத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி பூடகமான எளிய வாழ்வுண்மைகளைக் கண்டுபிடிப்பதே கலை என்னும் அதன் அசட்டு நம்பிக்கை என்பதை நான் சுந்தர ராமசாமிவிடம் மிக ஆவேசமாக கூறிக்கொண்டிருந்தேன். அன்று அக்கருத்தை நான் வந்தடைவதற்கு உதவியவர்கள் பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள்.

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு தொடங்கப்பட்டபோது அதற்கு இருந்த வரலாறு, தத்துவம் நோக்கியச் சாய்வுக்கு ஞானி முதன்மையான உந்துசக்தியாக இருந்தார் என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் நேரடியாக காலச்சுவடுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதில் பங்களிப்பாற்றவுமில்லை. தன் வழியை தனியாக வைத்துக்கொண்டார்.

[மேலும்]

ஞானி-5
ஞானி-4
ஞானி-3
ஞானி-2
ஞானி-1,
முந்தைய கட்டுரைபூலான்தேவி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரட்டைமுகம்