தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி…]

nanjil nadan

 

நாஞ்சில் நாடன் ஒரு நிரந்தரப் பயணி. ந.முத்துசாமியின் ஒரு கதாபாத்திரம் தாசியை பார்க்க செம்பொனார்கோயில் போகவேண்டும். ஆனால் ஊஞ்சலில் இருந்து எழுந்திருக்க சோம்பல். ஊஞ்சலில் ஆடியபடியே ‘இந்த ஊஞ்சல் மட்டும் பின்னால் வராமல் முன்னாலேயே போயிருந்தால் இந்நேரம் செம்பொனார் கோயில் போயிருக்கும்’ என சிந்திக்கும். [செம்பொனார் கோயில் போவது எப்படி?] கிட்டத்தட்ட அதுதான் நாஞ்சில் நாடனின் பயணங்கள். பெண்டுலப்பயணம். பம்பாய்க்கும் திருப்பி வீரண மங்கலத்துக்கும்.

நாஞ்சில் நாடனின் பயணப்பையை நான் பீதியுடன் பார்ப்பதுண்டு. பொதுவாகவே எனக்கு கனகச்சிதம் என்றாலே என் அப்பா ஞாபகம் வந்து மனதைக் கலக்கும். கச்சிதமாக மடிக்கப்பட்ட துணிகள். நானெல்லாம் பையை திறந்தால் ஒரு ஜட்டியை எடுக்க எல்லா துணியையும் கலைக்க வேண்டியிருக்கும். நாஞ்சில் நாடன் எல்லாவற்றையும் தொகுப்பு தொகுப்பாக வைத்திருப்பார். பயணத்தில் போட்ட ஜட்டியையே மீண்டும் போட்டுவிட்டோமா என்ற ஐயத்தால் மேடையில் பேச்சுகூட சரியாக அமையாது போன சந்தர்ப்பம் எனக்கு உண்டு. முகர்ந்து பார்த்தாலும் விசேஷமாக எதும் கண்டுபிடிக்க முடிவதில்லை. நாஞ்சில் நாடன் போட்டதற்கும் கழற்றியதற்கும் தனித்தனியாக பாலிதீன் பைகள் வைத்திருப்பார். பற்பசை, ஷாம்பூ, பௌடர் எல்லாவற்றுக்கும் சாஷேக்கள். குறிப்பேடு, பாத்ரூம் சப்பல், கொசுவத்தி, தீப்பெட்டி…. சில ஓட்டல்களில் கொடி இருக்காது காயப்போட. ஆகவே சிறு நைலான் கயிறு. [சூட்கேஸைத் திறந்து அந்தக் கயிறைப் பார்த்திருந்தால் ஓட்டலில் ரூம் கொடுக்கமாட்டார்கள்] இத்தனைப் பொருட்களுடன் இவர் கிளம்புவதை வைத்துத்தான் முக்கால்நாள் ஊரில் இல்லாத இவருக்கு சின்னவீடு இருக்குமோ என்ற ஐயத்திலிருந்து ஆச்சி விடுபட்டிருக்கவேண்டும்.

அறைபோடும்போது பல நிபந்தனைகள் உண்டு. “…ரிசப்ஷனைப்பாத்து ஏமாந்திரப்பிடாது, மலையாளத்தான் சிரிப்பை நம்புற மாதிரியாக்கும் அது… ரூமுக்குப் போயி கக்கூஸை கதவைத் தெறந்து உள்ள பாக்கணும். மெத்தைமேல நல்ல வெள்ள விரிப்பா போட்டிருப்பான். தூக்கி பாக்கணும். உள்ள பழங்கால மெத்தை செல்லரிச்சு கெடக்கும். ராத்திரி செள்ளு கடிச்சு கொன்னிரும்… நேஷனல் ஹைவேயைப்பாக்க ரூம் போடப்பிடாது. ராத்திரி டைனோசர் சத்தம் மாதிரி லாரி கத்தும்…” அனுபவ வெள்ளம்!

அறையைக் காலிசெய்யும்போதும் அதற்கென்றே ஒரு வரிசை முறை உண்டு. முதலில் பாத்ரூம்பொருட்களை எடுத்து ஈரத்துணிகளை முறைப்படி பதமாக பாலிதீன் உறைகளில் வைப்பது. செருப்பை தனியாகச் சுருட்டி வைப்பது முதலிய சம்பிரமங்கள். கட்டிலுக்கு அடியில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பிளக் பாயிண்டுகளை விடக்கூடாது- செல் ·போன் சார்ஜரை விட்டுப்போவது கற்றுக்குட்டிகளின் வழக்கம். நான் ஐம்பது ரூபாய் சார்ஜர் ஒன்று தொலைப்பதற்கென்றே வைத்திருக்கிறேன்.

“நமக்கு பிரச்சினை இல்ல, ஜெயமோகன். வேற மாதிரி ஆளுகளானாக்க துணிக்குள்ள காஞ்ச மல்லியப்பூ தலமுடி ஏதாவது மாட்டியிருக்கான்ணு ஒரு முற பாத்துக்கிடணும்” என்றார் நாஞ்சில் புன்னகையுடன்.

“முடி மாட்டும் இல்ல சார்?” என்று ஆர்வமாக சண்முகம் கேட்டார்.

“…தலமுடீண்ணா என்னான்னு நெனைக்கிறீங்க? அது கன்மமலம் மாதிரில்லா? எளவு, பிடிச்சா சும்மா விடுமா?”

பயணத்தில் பெட்டியைக் கடாசிவிட்டு ஊரில் அலைந்து திரும்பிவந்து குளித்து சாயவேட்டி கட்டி சன்னமாக விபூதி பூசி காதைக்குடைந்தபடி மெத்தைமேல் ஏறி சப்பணம்போட்டு அமரும்போது நாஞ்சில் மெல்லமெல்ல  தியான நிலையை எட்டுவதை கண்கூடாகக் கானலாம். அதன் பின்னர் தான் மது. பிராண்ட் தீர்மானங்கள் உள்ள பிடிவாதக்காரர் அல்ல. எங்கும் எதிலும் சுவை உள்ளது என நம்புபவர். ரம், வோட்கா, ஜின். காசிருந்தால் சிக்னேச்சர் விஸ்கி.

“…இந்த மாய யதார்த்தம்னாக்க நம்ம ‘உள்நாட்டில் தயாரான அயல்நாட்டு மது’ மாதிரியாக்கும். சங்கதி எல்லாமே பொள்ளாச்சி மகாலிங்கத்துக்க காந்தியன் மொலாஸசுதான்…”.

மதுவை சும்மா எருமை கழனித்தண்ணி குடிப்பதுபோல குடிப்பதை நாஞ்சில் நாடன் ஏற்கமாட்டார். முதலில் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு தலையை தூக்கி கண்ணாடிக் கீழ்வட்டம் வழியாக அதன் மேல் அச்சிடப்பட்டுள்ள பொடி எழுத்துகளைக் கூர்ந்து படிப்பது தொடக்கம். அபூர்வமான ரகம் என்றால் மூடியை பெட்டிக்குள் போட்டு சேமிப்பது உண்டு. காதலியின் வளையல் துண்டுகள் போல அது ஒரு இனிய நினைவு.

பின்னர் பாட்டிலின் அடிப்பகுதியை உள்ளங்கையில் ஒரு தட்டு தட்டி [இல்லாட்டி மூடி சுத்தும். பிடிச்சா பிடி சிக்காது. ஒரு மாதிரி சீண்டிரம் பிடிச்ச பொம்பிளைங்க கிட்ட பேசுகது மாதிரி ஆயிரும். மெனக்கேடு…] அதன் பின் சட்டென்று மூடியை வசமாகப் பிடித்து ஒரு சுற்று சுற்றினால் திறக்கும். அளவாக பாட்டிலில் விட்டு அதை மின் விளக்கு ஒளியில் தூக்கி அளவைப்பார்க்க வேண்டும். பின்னர் ஒரு அரை அவுன்ஸ். மீண்டும் தூக்கிப்பார்த்து மேலும் ஒரு துளி. இந்த ஒரு துளியால் என்ன நிகழ்ந்துவிடும் புரியவில்லை. அதன் பின்னர் மினரல் வட்டரை யக்ஞ நெருப்பில் நெய்விடும் புரோகிதரின் பாவனையுடன் மெல்ல வீழ்த்தி எடுத்து மீண்டும் அளவு பார்த்தபின் நிமிர்ந்தால் முகத்தில் பரவசம். கண்ணாடியை கழற்றிவிட்டு ‘அப்றம்? ‘என்பது போல ஒரு சிரிப்பு.

‘நாடன்’ என்றால் மலையாலத்தில் ‘நாட்டுச்சாராயம்’ என்று பொருள். “நாஞ்சில்- நாடன் கழிக்குமோ?” என்று மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் கேட்டார். “அது நாஞ்சில் ‘நாடன்’ எந்நால் கழிக்கும். வேறே கழிக்கில்ல” என்றேன். நாஞ்சிலுக்கு மதுவில் சாதிப்பாகுபாடு கிடையாது. ஆனால் பாரம்பரியம் பற்றிய போதம் உண்டு.

‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதிர் என்ற கதாபாத்திரம் சொல்லும் “வேளாளப்பிள்ளைக உளுந்தங்களி சாப்பிட்டாலே போதை ஏறிடுவானுக”– நாஞ்சில் நாடனுக்குப் பிடித்த சொற்றொடர் அது. ஆனால் நாஞ்சில் நாடன் எனக்குத் தெரிந்து உளுந்தங்களி சாப்பிட்ட அளவுக்கு கூட மது சாப்பிட்டு நிதானம் இழப்பதில்லை. ‘மாங்காப்பால் உண்டு மலைமேல் இருப்பவரின்’ பாவனைதான். ஆகவேதான் நான் ஒருமுறை தமிழ்நாட்டிலேயே ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியல் ஒன்றை உயிர்மையில் வெளியிட்டபோது நாஞ்சில் நாடனுக்கு முதலிடம் அளித்தேன். இரண்டாமிடம் க.மோகனரங்கன். அதைத் தொடர்ந்து நாஞ்சில் நாடன் தன் மது அனுபவங்கள நாலைந்து கட்டுரையாக எழுதினார். [நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று]. ·பாதர் ஜெயபதி அவர்கள் மது ஒழிப்புக்காக நாகர்கோயிலில் கூட்டிய மது அடிமைகள் மறுவாழ்வு மாநாட்டில் மது அருந்தும் கலையை விதந்தோதி பேசிய பேச்சுதான் கடைசி என நினைக்கிறேன்

நாஞ்சில் நாடனின் போதை மூன்று படிகள் கொண்டது. ஆணவம் கன்மம் மாயை போல. அல்லது பசுபதிபாசம் போல. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது மது உள்ளே போனதும் நகைச்சுவை வெளியே போய்விடும் என்பது. முற்றிலும் ‘சீரியஸான’ நாஞ்சிலை நாம் இச்சந்தர்ப்பங்களில்தான் காண முடியும். மேலும் மது என்பது அவரை ஒரு அதி தீவிர இந்தியக் குடிமகனாக ஆக்கும் தேசபக்தி பானமும் கூட. சமூக அநீதிகளுக்கு எதிராக புருவம் தூக்கும் நாஞ்சில் நாடனை நாம் அப்போது காணலாம்.

முதல் தளம் பொதுவான ஆதங்கங்கள். “பாருங்க இவன்லாம் இப்டி செய்யுதான்…” என்ற மட்டில். தமிழாசிரியர்கள் வட்டிக்கு பணம் விடுதல், சொற்பொழிவுக்குப் போன அப்பாவித்தமிழ் எழுத்தாளனுக்கு [நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்] நூறு ரூபாய் கொடுத்துவிட்டு காலி வவுச்சரில் கையெழுத்துப் பெறும் அவலங்கள், மேற்படி எழுத்தாளர் பேசிக்கொண்டிருக்கும்போது நாலாந்தர மேடைப் பேச்சாளன் வந்ததுமே மொத்த நிகழ்ச்சிக் குழுவும் பாதி பங்கேற்பாளர்களும் பாய்ந்து வெளியே ஓடும் கொடுமை. உச்சகட்டமாக அவரிடம் வந்து பேச்சைக் குறைத்து உழைப்பைப் பெருக்குமாறு கூறும் அநீதி, அந்த அவலங்களுக்கு முன்னால்கூட இனிய புன்னகையை மட்டுமே அளிக்கும்படி பழகிப்போன விற்பனைப் பிரதிநிதித்தனம் என்னும் சமூகச் சீர்கேடு.

இரண்டாம் தளம் மெல்ல சூடேறுகிறது. தேசிய அவலங்கள். “எப்டீங்க உருப்படும்? இல்ல கேக்கேன்… ” என்ற அளவில். மன்மோகன் சிங்கின் நிலை கிட்டத்தட்ட இந்தியக் கணவர்களின் நிலையாக ஆகிப்போனமை, சோனியா காந்தியின் தேசபக்தி… பின்னர் உலகச் சிக்கல்கள். பாகிஸ்தானின் ஜனநாயகம் இல்லாமை, [இங்கமட்டும் இருக்கான்னு கேக்காதீக. இருக்குன்னு சொல்லுகதுக்குண்டான உரிமை மட்டுமாவது இருக்கா இல்லியா?] ஈராக்கை அமெரிக்கா அநீதியாக ஆக்ரமித்துள்ளமை. உச்சகட்டமாக ராயல்டிக்கு பதிப்பகங்கள் ஒழுங்காக கணக்கு வைத்திருக்காததன் விளைவான பொருளாதார நெருக்கடி..

மூன்றாம் தளம் ஆன்றவிந்தடங்கிய நிலை. ” என்னா சொல்லுகது போங்க..” இந்நிலையில் “சும்மாவா பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க…”, “எல்லாத்துக்கும் அதுக்குண்டான ஒரு இது இருக்குல்லா?” போன்ற தத்துவ நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. கம்பராமாயண வரிகள் “இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி மற்று ஓர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?” ண்ணுல்லா சொல்லுகான்… அந்தப்பாட்டுக்க கடசீ வரி இருக்கே ‘கைவண்ணம் அங்கு கண்டேன். கால் வண்ணம் இங்கு கண்டேன்…’ கண்ணதாசன் கூட இதை வச்சு ஒரு பாட்டு எழுதிப்போட்டான்…” அப்டியே நாஞ்சில் நாடன் சமனமடைந்து இசைக்குள் செல்வார்.

நான் பிறந்ததுமே என் மாமா என்னை எடுத்து முத்தியதாக அம்மா சொல்வர். அவர் ஒரு பெருங்குடிகாரர். ஆக பிறந்ததுமே குடிகார சகவாசம். இந்த நாற்பத்தைந்து வருடங்களில் பார்த்த மதுரசிகர்களில் போதையிலும் பிறர்க்கின்னா நினையா பெருந்தகையாளனாக நாஞ்சில் நாடன் ஒருவரை மட்டுமே பார்த்திருக்கிறேன்

நாஞ்சில் நாடன் என்றுமே தீவிரமான இசை ரசிகர். சிறுவயதில் திரையிசை நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் மேல் மோகம் அதிகம். எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களும் பிடிக்கும். அவரை திரையிசையில் இருந்து துரத்தியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. “அவங்க பாடினாலே ஆயிரம் கண்ணுடையா கொப்புடையம்மன் ஜிகினாப்பாவட கட்டிகிட்டு வந்து ஆடுகது மாதிரி ஒரு நெனைப்பு வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு..” ஒரு கல்யாண அழைப்பிதழில் பெண் பெயர் ஈஸ்வரி என்று போட்டிருந்ததைக் கண்டே நாஞ்சில் நாடன் கடுப்பானதை நினைவு கூர்கிறேன்.
“பொண்ணுக்கு குரல் நல்லாருக்காதுண்ணு நெனைக்கேன். ஒரு மாதிரி பேஸ்வாய்ஸ்ல காப்பி குடிக்கேளாண்ணு நம்ம கிட்ட கேட்டாள்னா என்ன செய்யுகது?”

அப்படியே நாஞ்சில் நாடன் கர்நாடக இசைப்பக்கம் நகர்ந்தார். சிறுவயதில் அப்பாவுடன் சுசீந்திரம் திருவிழாவுக்குப்போய் பருப்புவடையும் சுக்குக் காப்பியும் குடித்து பனியில் அமர்ந்து கேட்ட சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு, மணி அய்யர் கச்சேரிகள் அவரை இசைக்குப் பதப்படுத்தியிருந்தன. அவரது அப்பா ஒரு நல்ல இசை ரசிகர். நாஞ்சில் நாடனின் ரசனை மிக நுட்பமானது. தொடர்ந்து இசை கேட்பவர். ஏராளமான இசை சேகரிப்பு உண்டு. கோவை இசைச் சங்கத்தில் தீவிர உறுப்பினர். டிசம்பரில் சென்னைக்குப்போய் கேட்பார். எல்லாரைப் பற்றியும் கறாரான கருத்துகள் உண்டு. ஆனால் இசை ரசிகர்களுக்கு இசை பற்றி வாய் ஓயாமல் பேசுவது பொதுவாகப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் வாயே திறப்பதில்லை. கேட்டால் மட்டுமே சொல்வார்

பொதுவாக அவருக்கு புதிய பாடகர்கள் மேல் அதிகப் புகார்கள் இல்லை. சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களைப் பிடிக்கும். ஆனாலும் அவரது ரசனை சம்பிரதாயமாக பாடுபவர்கள்மேல்தான். சென்னை புத்தகக் கண்காட்சியில் மதுரை டி.என்.சேஷகோபாலன் தனியாக நிற்பதைக் கண்டு பதின்பருவத்துக்கு மட்டுமே பொருத்தமான பரவசத்துடன் பாய்ந்துசென்று அவரிடம் அளவளாவினார். திரும்பும் வழியில் கரும்பு தின்ற எருமை போல ஒரு பாவனையுடன் “என்னா ஒரு பாட்டு…இல்ல? தனியா நிக்கிறார். பாருங்க ஒருத்தர் கூட கவனிக்கல்லை” என்றார்

“அவரு ஒரு சினிமால கூட நடிச்சிருக்காரே…”என்றேன்.

“ஆமா. தோடி ராகம்னு பேரு…குன்னக்குடி பட்டைநாதன்  எடுத்த படம். அந்தப் படத்தில நளினிய கட்டிப்பிடிக்கிறப்ப அவ முலை இவர் மேல படுறப்பல்லாம் இவர் முகத்தில ஒரு மரண வேதனை தெரியும் பாருங்க…கொடுமை!”

இதுவரைக்கும் நான் நாஞ்சில் நாடனுடன் பேசியதை வைத்துப் பார்த்தால் அவரது இலட்சியப் பாடகர் மதுரை சோமுதான். “பாவம்னா சோமு பாடணும். அப்டியே மறந்து போய்டுவார். என்ன ஒரு கார்வை. என்ன ஒரு வேகம். அப்டில்லாம் பாடகர்கள் சும்மா வந்திர மாட்டாங்க. நாம காத்து இருக்கணும்…”

யுவன் சந்திரசேகர் மற்றும் அவரது நிழலாக வரும் மதுரை தண்டபாணி இருவருக்கும் மதுரை மணி அய்யர்தான் உச்சம். மறுத்துப்பேசும் வழக்கம் நாஞ்சில் நாடனிடம் இல்லை. ஆனால் “நல்லாத்தான் பாடுவாரு… அவரு பாட்டில ஒரு வரி கோயில்பட்டி கடலமிட்டாய் மாதிரி பன்னிரண்டு துண்டாட்டுல்ல இருக்கும்” தமிழறிவும் கவிதை மீதான ஈடுபாடும் நாஞ்சில் நாடனை வரிகளையும் பொருளையும் சிதைத்துப் பாடுவதை ரசிக்க அனுமதிப்பதேயில்லை. அதனாலேயே அவருக்கு அதிக ஈடுபாடு இல்லாவிட்டாலும் மகாராஜபுரம் சந்தானத்தை அவர் மதித்தார்.

ஒருபோதும் இசையைப் பற்றிய மிகைச் சித்திரங்களை நாஞ்சில் நாடன் அளிப்பதில்லை. லா.சா.ரா போல கட்டைவிரலைச் சுற்றி பாம்பு பிணைந்தேறி கால்வழியாக சிரசில் படமெடுக்கும் அனுபவமெல்லாம் அவருக்கு இல்லை. அதே சமயம் ராகம் தாளம் என்ற கணக்கு வழக்கு விவகாரமும் அவரிடம் இல்லை. அருணா சாய்ராம்  கச்சேரி கேட்டுவிட்டு என்னிடம் ·போனில் சொன்னார். “நல்ல பதமான பாட்டு. சித்திரைமாசத்திலே மணல்திட்டு நடுவிலே ஓடை மாதிரி சன்னமாட்டு தண்ணி ஓடும் பாருங்க. நல்லா தெளிஞ்சு, சத்தமே இல்லாம. அடக்கமான பொண்ணு சேலை முனிதியை கையால பிடிச்சுட்டு மெல்ல நடக்கிற மாதிரி, அந்தமாதிரிப் பாட்டு…”

முழுக்க முழுக்க ஒரு பெரும் கலைஞனின் ரசனை அது. ஒரு கலையைப் பார்த்து நாக்கை சுழட்டுவதும் தோள்தட்டி ஆர்ப்பரிப்பதும் எப்படியோ அக்கலையை இழிவுபடுத்துகிறது என்பது என் எண்ணம். கலைஞர்கள் கலையுடன் தனித்திருக்கக் கற்றவர்கள். நாஞ்சில் நாடனால் கேட்கப்படுவதென்பது அந்த பாடகனின் பெரும் வரங்களில் ஒன்று– அவர்கள் அதை அறியுமளவுக்கு நம் பண்பாடு வளரவில்லை என்றாலும்.

[தொடரும்]’

மறுபிரசுரம் முதற்பிரசுரம் : Dec 28, 2007

 

முந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70