தன்மீட்சியின் நெறிகள்

தன்மீட்சி வாங்க

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

2017, செப்டம்பர் ஆறாம் தேதி திருப்பரங்குன்றம் குடைவரைக்கோவில் மலையடி நிழலில் நிகழ்ந்த குக்கூ நற்கூடுகையும், அக்கூடுகைக்கு நீங்கள் வந்திருந்து வாழ்வனுபவச் சொற்கள் பகிர்ந்ததும் என்றென்றும் எங்கள் இருதயத்தில் நிலைத்தூன்றி நிற்பவை. தன்மீட்சி தொடர்பாக நீங்களெழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் வாசித்ததினால் உண்டான விருப்பவிளைவே அந்நிகழ்வு.

அச்சந்திப்பில் வந்து கலந்துகொண்ட எல்லா நண்பர்களும் உளவியல் தெளிவிலும் வாழ்வியல் நகர்விலும் வெவ்வேறு கட்டங்களைத் தாண்டி நன்னிலையை எய்தியுள்ளனர். அவர்களின் அகத்தைத் துளைத்த எல்லா கேள்விகளுக்குமான பதிலாகவும், வாழ்வுசார்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பதிலிருந்த தயக்கத்திலிருந்து மீள்வதற்கான துணையிருப்பாகவும் அமைந்தது அந்நிகழ்வின் நினைவுகள்.

அதன்பின், அந்த அரைநாள் நிகழ்வுகுறித்து நீங்களெழுதிய ‘தன்மீட்சி’ கட்டுரை எங்களனைவரின் நெஞ்சுக்கு நெருக்கமானதாக மாறிப்போனது. அதில் வருகிற ஒவ்வொரு சொல்லுக்குமான உண்மையை வாழ்வு முழுமைக்கும் காப்பாற்றியாக வேண்டுமென்ற அகவுறுதி கொண்டோம். உங்கள் தளத்தை வாசித்துவிட்டு எங்களை அறிகிற ஒவ்வொரு தோழமையுறவும் ‘தன்மீட்சி’ கட்டுரையைக் குறிப்பிட்டு உரையாடும்போதும், அதற்கான உளநேர்மையை மேலும் மேலும் கூட்டிக்கொள்ள வேண்டுமென்ற தவிப்புதான் அகத்தில் நிறையும். தன்னறம் நூல்வெளி துவங்குவதற்கான முதல் சொல்விதையும் அந்நிகழ்வினால்தான் எங்களுக்குள் தோன்றியது.

ஸ்டாலின் திரும்பத்திரும்ப அகமீட்சி சார்ந்த உங்களுடைய கட்டுரைகளைப்பற்றி எல்லா உரையாடல்களிலும் தவறாமல் குறிப்பிட்டுக்கொண்டே இருந்தான். செயற்துணிவு தாழும்போதெல்லாம் அவனுள்ளம் தானாய்க் கண்டடைவது அக்கட்டுரைகளின் நெம்புகோல் வரிகளைத்தான். உண்மையில் சொல்லப்போனால், ஸ்டாலினின் தீராத அகவிழைவே ‘தன்மீட்சி’ ஒரு புத்தகமாக அரும்பிமலர்வதற்கான சாத்தியத்தை நிறைவேற்றியது.

இந்நிலையில், இந்த நோயச்சகாலத்தில் எங்களை வந்தடைந்த பல தகவல்களும், அழைத்துப்பேசிய பல  நண்பர்களும் மீளமீள ஒன்றைத்தான் தெரியப்படுத்தின. இந்தத் தனிமைக்காலம் புறப்பகிர்தலுக்கு அப்பாற்பட்ட நிறைய அகநெருக்கடிகளை உருவாக்கிவிட்டிருக்கிறது என்பதே அது. அத்தகைய நண்பர்கள் சிலருக்கு தன்மீட்சி புத்தகத்தை அனுப்பிவைக்கையில், அவர்களில் நிறைய நண்பர்கள் தங்கள் சூழலை நொந்துகொள்ளாத ஒரு நேர்மறைப்பேச்சை வெளிப்படுத்தி, மிச்சமிருக்கும் சாத்தியவழிகள் என்னென்ன என்பவைக் குறித்து ஆக்கப்பூர்வமாக உரையாடுவதைக் கண்டோம். அகத்திரியில் நெருப்பேற்றும் ஒரு தீர்க்கச்சொல்லை அடைந்துவிட்டதாக சில நட்புத்தோழமைகள் தன்னனுபவம் பகிர்ந்தார்கள்.

அப்பொழுது ஒரு முடிவு மனதுக்குள் தோன்றியது. உளப்பூர்வமான வாசிப்பின்வழி தங்களுடைய சுயத்தடைகளை மீறிச்செல்ல விரும்புகிற பிற நண்பர்களுக்கு, எங்கள் சக்திக்குட்பட்ட எண்ணிக்கையில் 200 ‘தன்மீட்சி’ புத்தகத்தை விலையில்லாமல் அனுப்பிவைக்கலாம் என்று முடிவுக்கு வந்தடைந்தோம். தன்னறத்தில் உடனுழைக்கும் அத்தனை நண்பர்களும் இம்முடிவுக்குச் சம்மதித்தார்கள். அதன்படி முகநூலிலும், உங்களுடைய இணையதளத்திலும் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, பொதுவெளியில் இருந்து வெவ்வேறு நண்பர்கள் தங்கள் முகவரிகளை அனுப்பத் தொடங்கினார்கள். அதிலும் குறிப்பாக, திரைப்படத்துறையில் பணியாற்றுகிற இளைஞர்கள், கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியிலாளர்கள் மட்டுமின்றி பெரியாரிய, இடதுசாரிய தோழர்கள் அத்தனைபேர் இப்புத்தகத்தைப் பெறுவதில் விருப்பமுற்று முகவரிகளை அனுப்பியிருந்தனர். அவர்களில் மறக்கமுடியாத ஒரு குரல் என்றால், எண்பது வயதுகடந்த ஒரு பாட்டியின் குரல்தான்! உங்களுடைய வாசகியாக அவர், நடுநடுங்கும் தனது முதுமைக்குரலில் எங்களுக்கு அழைத்துப்பேசி ஆசி சொன்னதை இச்செயல்முயற்சிக்கும் உங்கள் எழுத்துழைப்புக்கும் நிகழ்ந்திட்ட பிரார்த்தனையாகவே கருதுகிறோம்.

இதுவரையில் 368 நண்பர்களின் முகவரிகள் எங்களை வந்தடைந்துள்ளன. அதில், தன்மீட்சி புத்தகத்தை இதுவரைக்கும் 260 முகவரிகளுக்கு புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், இதுவரையில் புத்தகம் பெற்ற நண்பர்கள், அதை வாசித்துவிட்டு விரைவில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் பதில்தெரிவித்திருக்கிறார்கள். நிர்ணயித்த எல்லையைத் தாண்டி புத்தக வேண்டுகோள் பட்டியல் நீளுவதால் 300 என்ற எண்ணிக்கையோடு, விலையில்லாமல் புத்தகம் அனுப்புவதை நிறுத்திக்கொள்வது என்ற முடிவுக்கு மனமற்று வந்துசேர்ந்திருக்கிறோம்.

முகவரிகள் அனுப்பி புத்தகம் கிடைக்கப்பெறாத நண்பர்களுக்கு நாங்கள் இன்னொரு வாய்ப்பில் உதவக் காத்திருக்கிறோம். புத்தக முகவரி பெறுவதிலிருந்து, அதை உரியவர்களின் கரங்களுக்கு கிடைக்கச் செய்வதுவரை எல்லா உழைப்பினையும் மெனக்கெட்டு ஒருங்கிணைத்து முழுமையுறச் செய்துமுடித்தவர்கள் மூவர். ஒருவர், காந்திகிராம் நிகழ்வில் நீங்கள் பெயர்சூட்டிய ‘லிகிதனின்’ அப்பா அருண்குமார். இன்னொருவர் பேரன்புமிக்க ‘யாதும்’ பழனியப்பன் இராமநாதன். மற்றொருவர், வன்னி சபா ரத்தினம்.

அஞ்சல்சேவை முடக்கம், சேவை நேரக்குறைப்பு உள்ளிட்ட தடங்கல்களைத் தாண்டி, முகவரி அனுப்பிக் காத்திருந்த நட்புறவுகளுக்கு புத்தகம் கிடைக்கச் செய்த இவர்களுக்கு நெஞ்சின் நிறைநன்றிகள். இக்கடிதத்தோடு இணைத்துள்ள ஒளிப்படமானது, திரைக்கலைஞர் வினோ அவர்கள் புத்தகம் கிடைக்கப்பெற்ற பின் தன்னுடைய புகைப்பட நண்பரைக்கொண்டு எடுத்தனுப்பிய ஒளிப்படம்! மொழிப்படைப்பு ஒன்றிற்கு ஒளியால் நன்றியுரைத்த அவர்கள் இப்புத்தகத்தை வாசிக்கத் துவங்கியிருப்பது மகிழ்வளிக்கிறது.

ஆளுயர மரக்கன்றை தோளில் தூக்கிப்போகும் ஒரு மனிதனைப் பார்த்தால் ஏதோவொரு சிறுநம்பிக்கை மனதுள் உயிர்ப்பதைப் போல, இப்புத்தகத்தின் ஒவ்வொரு பத்தியும் அதை வாசிக்கும் மனதுக்குள் நேர்மறைச் செயலூக்கத்தை நோக்கிச் செல்வதற்கான தைரியத்தை அளிக்கிறது. அகச்சலிப்பிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்து, செயலாற்றுதல் மூலமே செயலைக் கடந்துபோகச் செய்கிற பெருங்கற்றலை உங்கள் படைப்புச்சொல் எங்களுக்கு ஈகையளிக்கிறது. பச்சையப்பசி பூமியை ஆரண்யங்களால் சூழ்வதைப்போல, செயற்பசியைத் தூண்டச்செய்கிற உங்களின் எழுத்து, தாழாக் கழுத்தாக நிமிர்ந்து நிலைக்கும்!

கரங்குவிந்த நன்றிகளுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

அன்புள்ள சிவராஜ்,

தொடர்ச்சியாக வரும் கடிதங்கள், பெரும்பாலும் தனிப்பகிர்வுக்கானவை, தன்மீட்சி எந்த அளவுக்கு வாசகர்களின் வாழ்க்கையில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதைக் காட்டுகின்ற்ன. என் புனைவுநூல்களில்  ‘அறம்’ போலவே கட்டுரைநூல்களில் ‘தன்மீட்சி’ நேர்நிலையான உணர்வுகளை உருவாக்கும் நூலாக அறியப்படுகிறது

அறம் போல நூல்வடிவில் எழுதப்பட்டது அல்ல தன்மீட்சி. வெவ்வேறு தனிக்கட்டுரைகளின் தொகுப்பு. வெவ்வேறு வாசகர்களின் வாழ்க்கை சார்ந்த வினாகளுக்கான எதிர்வினைகள்.அதன் வெற்றிக்குக் காரணமே அதுதான் என நினைக்கிறேன். ஒரு நூலாக திட்டமிட்டு எழுதும்போது அதில் ஒரு கட்டுக்கோப்பு வருகிறது, ஆனால் உரையாடல்தன்மை மறைந்து பேருரைத்தன்மை கூடிவிடுகிறது. ஒரு மையக்கொள்கையை வலியுறுத்துவதாக மாறிவிடுகிறது

தன்மீட்சி நூலின் பிரச்சினைகளும் சரி, விவாதங்களும் சரி, இயல்பாக நிகழ்ந்தவை.நான் வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருந்தமையால் உருவானவை. இந்தவகையான உரையாடல் இணையவெளி உருவானபிறகுதான் இயல்வது. ஒரு அந்தரங்கப்பரப்பில் எழுத்தாளனும் வாசகனும் பேசிக்கொண்ட சொற்கள் இவை.

இப்படி இயல்பாக எழுந்துவந்த வினாக்களும் உரையாடல்களுமாக இது அமைந்தமையால் இதற்கு மிகச்சரியான ஒரு பிரதிநிதித்துவம் அமைந்தது. மிகச்சரியாக சமூகத்தை  ‘ஃபோகஸ்’ செய்தது இந்நூல் என்று சொல்வேன். தாங்கள் கற்ற நூல்களின் அடிப்படையில் ‘மேலே’ இருந்து பேசுபவர்களின் ஆய்வுகளுக்கும் தங்கள் அந்தரங்கத்திலிருந்தும் ஆணவத்திலிருந்தும் பேசும் எழுத்தாளர்களின் வெளிப்பாடுகளில் இருந்தும் இந்நூல் வேறுபட்டு அமைந்தது

இந்நூலில் நான் பாதிப்பங்குதான் ஆசிரியர்- என்னுடன் உரையாடியவர்கள் எஞ்சியபகுதியை எழுதியவர்கள். சிலசமயம் அவர்களின் கேள்விகள் நூலில் இருக்காது, என் பதில்கள் மட்டுமே இருக்கும். சிலசமயம் அவர்கள் வெறும் தூண்டலாகவே அமைந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இந்நூலில் இருக்கிறார்கள்

இணையவெளி இல்லையேல் இந்நூல் இயன்றிருக்காது என்றேன், இந்நூலின் தேவையை உருவாக்குவதும் இணையவெளிதான். மிகச்செயற்கையான ஒரு வெளி அது. பல்லாயிரம்பேரின் உள்ளங்களை இணைத்து அது ஒரு பரப்பை உருவாக்குகிறது. ஆனால் அந்த உள்ளங்கள் தன்னிச்சையாக வெளிப்படவில்லை. அவை திட்டமிட்டு சமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டவை. காட்டவேண்டியதை மிகையாக்கிக் காட்டி ஒளிக்கவேண்டியதை ஒளித்து கட்டமைக்கப்பட்டவை. ஆகவே முழுக்கமுழுக்க பொய்களாலும் அரையுண்மைகளாலும் ஆனவை.

பொய் என வரும்போதே ஒன்றைப் பார்க்கலாம், இனியபொய்கள் மிகக்குறைவு. பொய் பெரும்பாலும் ஆணவத்தின் காழ்ப்பின் கருவி. ஆகவே பெரும்பாலும் ஆணவமும் காழ்ப்பும் மட்டுமே வெளிப்படும் ஒரு தளமாக இணையச்சூழல், சமூகவலைத்தளச்சூழல் உள்ளது. அது உருவாக்கும் எதிர்மறைச் சூழல் மிகமிகச் சோர்வளிப்பது.

நாம் அங்கே சென்று நம்முடன் ஒத்திசைபவர்களாலான வட்டத்தையே உருவாக்கிக்கொள்கிறோம். நானறிந்தவரை சமூகவலைத்தளம் என்னும் அமைப்பே உங்களுக்கு உகந்தவர்களை மட்டுமே உங்களுக்குத் தேடித்தரும் தன்மைகொண்டது. ஆகவே நாம் நம் காழ்ப்பை பகிர்ந்துகொள்பவர்களையே அங்கே காண்கிறோம். ஆனாலும் அந்தக்காழ்ப்பு நம்மை சோர்வுறச் செய்கிறது.

இன்னொருவர் மேல் வெறுப்பை, காழ்ப்பை கக்கினால் அந்த கசப்பு நம்மிலும் எஞ்சுகிறது, நம் ஆற்றலை உறிஞ்சி நம்மை சக்கையாக்குகிறது. ஓர் அறச்சீற்றத்துடன் கடுமையாக எதையாவது சொன்னால்கூட நான் மிகமிக இனிய, உயர்ந்த எதையாவது செய்து என்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைக் கண்டிருக்கிறேன்.சமீபத்தில் ஒரு நீண்ட அரசியல்சர்ச்சைக்குப்பின் W.A.Darlington எழுதிய இனியநகைச்சுவைக் கதைகளை படித்து பலநாட்களை கடந்துவரவேண்டியிருந்தது.

[இன்னும் ஆர்வமூட்டும் ஓர் உண்மை, எத்தனை நேர்நிலையம்சம் கொண்டதாக இருந்தாலும் அறிவார்ந்த தளம் மட்டுமே கொண்ட எழுத்தும் வாசிப்பும்கூட ஒரு வகை சலிப்பையும் சோர்வையும் எஞ்சவைக்கிறது.ஓர் ஆய்வுக்கட்டுரையை படித்து முடித்தால் மண்ணோடு மண்ணாக படிந்துவிடுகிறேன். எதையாவது உற்சாகமாக படித்துமட்டுமே அதிலிருந்து மீளவேண்டும்]

இன்றைய அரசியல் –சிந்தனைச் சூழலே இந்த இணையப்பரப்பால் முற்றிலும் எதிர்மறைத்தன்மை கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. ஒரு முறை இணையவெளியில் வட்டமிட்டு வாருங்கள், என்ன கண்ணுக்குப்படுகிறது? பத்துசதவீதம் பொதுவான நம்பிக்கையூட்டும் வாசகங்கள், வாழ்த்துக்கள். ஆனால் அவை பொய்யானவை. தொண்ணூறு சதவீதம் கசப்புகள், வசைகள், சாபங்கள், எள்ளிநகையாடல்கள். ஆனால் இவை உண்மையான உணர்ச்சி கொண்டவை

இந்தக்கசப்புகளுக்கும் காழ்ப்புகளுக்கும் அரசியல் சார்பை கற்பிதம் செய்துகொள்கிறார்கள். அறநிலைபாட்டைக் காரணமாகச் சொல்கிறார்கள். என்னென்ன சொல்லப்பட்டாலும் அடிப்படையான நோக்கம் காழ்ப்பைக் கக்குவதில் மனிதன் அடையும் ஆதாரமான இன்பம் மட்டுமே.யாரோ யாரையோ வசைபாடியிருந்தால்கூட நாம் நம்மையறியாமலேயே சோர்வும் கசப்பும் அடைகிறோம். அதை தவிர்க்கவே முடியாது.

இன்றைய வாழ்க்கைச்சூழல் தொடர்ச்சியாக சோர்வுக்கு தள்ளுகிறது. இயல்பாக வாழ்ந்துமறைவது இயல்வதாக இல்லை. இலட்சியங்களும் திட்டங்களும் இருந்தாகவேண்டும். ஆனால் வெற்றி என்பது கடுமையான போட்டிக்கும் முடிவில்லாத தற்செயல்களுக்கும் அப்பால் உள்ளது. அதுவும் சோர்வை அளிக்கிறது, நம்பிக்கையிழப்பு என்பது ஒவ்வொரு நாளிலும் உடனிருக்கிறது.

இச்சூழலில் சிக்கிக்கொண்டவர்களுக்குத்தான் தன்மீட்சி உதவுகிறது என நினைக்கிறேன். அதன் தலைப்பிலிருந்தே அது தொடங்குகிறது. உலகைமாற்றுவது சமூகத்தை மாற்றுவது அல்ல, தன்னை மாற்றிக்கொள்வதும் மீட்டுக்கொள்வதும்தான் இன்றையச் சூழலின் முதல்அறைகூவல். இந்நூல் அதைப்பற்றியது.

அந்நூலின் தகுதி என ஒன்றைச் சொல்லமுடியும் என்றால் இப்படிக் கூறுவேன், அதில் ஒருவரிகூட பொய்யாக எழுதப்படவில்லை. சொந்த அனுபவதளத்திலிருந்து அல்லாமல் எதுவுமே சொல்லப்படவில்லை. வெற்று இலட்சியவாதமோ பாடப்புத்தக ஞானமோ அதில் இல்லை. அதில் என்னுடைய தேடல், கண்டடைதல் சார்ந்தவை மட்டுமே உள்ளன. ஆகவே கொஞ்சம் என் தடுமாற்றங்களும் குழப்பங்களும் இருக்கக்கூடும். ஆயினும் நேர்மையே அதன் ஆற்றல்.

தன்மீட்சி ஊக்கத்தை அளிக்கக்கூடிய நூல் என எதிர்வினைகள் வழியாக உணர்கிறேன். அது வழிகாட்டுவதில்லை, அறிவுரை சொல்வதுமில்லை. அது பிரச்சினைகளை பகுத்து தெளிவாக முன்வைக்கிறது. அதிலிருந்து வாசகர் பெறும் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் அவரே கண்டடைவனதான்

ஏற்கனவே பொன்னிறப்பாதை என்னும் தலைப்பில் இதேபோன்ற ஒருநூல் வெளிவந்துள்ளது. அது என் நண்பர் கடலூர் சீனுவின் சொல்புதிது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பல திருமண நிகழ்வுகளில் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நூல் அது. தன்மீட்சி அதன் வடிவமைப்பு, குக்கூ அமைப்பின் நண்பர்களின் உழைப்பு ஆகியவற்றால்தான் இந்த அளவுக்குச் சென்றுசேர்ந்திருக்கிறது.

நண்பர்களுக்கு நன்றி. இந்நூல் மேலும் பலருக்குச் சென்றுசேரவேண்டும் என விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் இருந்தால் அவர்கள் மேலும் தேவையானவர்களுக்கு அனுப்பும் விலையையும் செலவையும் நன்கொடையாக அளிக்கலாம் என்று படுகிறது

ஜெ

தன்னறம் நூல்வெளி

புத்தகங்கள் பெற:

http://thannaram.in/buy/

[email protected]

9843870059

***

தன்மீட்சி

தன்மீட்சி நூல்

தன்மீட்சி வாசிப்பு

செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி

முந்தைய கட்டுரைதாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்
அடுத்த கட்டுரைபொழுதுபோக்கின் எல்லைகள் பற்றி…